Wednesday, May 29, 2019

அ.ம.மு.க.வினர் தளர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


அ.ம.மு.க.வினர் தளர வேண்டா!


பதவி பறிக்கப்பட்டவர்களில் சிலராவது வெற்றி காண்பர். கணிசமான வாக்குகளைப் பெற்று  கருதத்தக்க இடத்தைப் பெறலாம் என எண்ணியதினகரனின் அ.ம.மு.க. பாதாளத்தில் விழுந்துள்ளது. ஒரு தொகுதியில்கூடப் பிணைத்தொகையைத் திரும்பப் பெறும் வகையில் வாக்குகளைப் பெறவில்லை. சில இடங்களில் நான்காவது இடமும் ஐந்தாவது இடமும் பெற்றுள்ளது.
இந்தத் தோல்வி அடுத்தடுத்த சூழ்ச்சி வலைகளால் உருவானது. என்றாலும் சூழ்ச்சியையும் வெல்வதுதானே திறமை. இனி, சூழ்ச்சிகளை வெல்லும் வகையில் திறமாகச் செயல்பட்டால் கட்சி வளரும். “வீழ்வது இயற்கை. எழுவதே வாழ்க்கை” என்று தன்னம்பிக்கை கொண்டால் வெற்றி மாலை தானாகத் தேடி வரும்.
அதிமுகவை அசைக்கும் அளவில் அ.ம.மு.க.வின் பிம்பம் காட்டப்பட்டாலும், தேர்தல் கணிப்புகளில் ஒரு தொகுதியில் வெற்றிக்கும் 4 அல்லது 5 தொகுதிகளில் வெற்றியை நெருங்கும் வகையிலும்தான் அதன் நிலை கணிக்கப்பட்டது. இடைத்தேர்தல் நடத்தினால் தினகரன் கட்சி வெற்றி பெறும் என்று சொல்லப்பட்ட சூழலில் பொதுத்தேர்தலும் இணைந்த பொழுது மாறியதன் காரணங்கள் என்னென்ன?
அடிமேல் அடி விழுந்தால் இமயமலையும் நொறுங்கும்அவ்வாறுதான் தேர்தல் ஆணையத்தின் மூலம் தொடர்ந்து சம்மட்டி அடி விழுந்ததில் அ.ம.மு.க. நொறுங்கிப் போயுள்ளது.
கட்சி பிரியும் பொழுது பிரிகின்றவர் பக்கம் பரிவு இருந்தாலும் அமைப்பு சிதறக் கூடாது என அதன்மீது பற்று வைப்போரே மிகுதி. அ.ம.மு.க.வின் பக்கம் பரிவாக இருந்தவர்கள் தேர்தல் என வந்ததும் வாக்குகள் சிதறி அதன் மூலம் பா.ச.க.வின் பிடி இறுகக்கூடாது என்று வாக்களித்துள்ளனர்.
அஃதாவது, பா.ச.க.விற்கு இடம் தரக்கூடாது என மக்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். எனவே, அ.ம.மு.க மூலம் வாக்குகள் பிரியக்கூடாது என்ற எண்ணமும் மக்களிடம் இருந்தது.
வேறுவகையில் சொல்வதானால், பா.ச.க.வின் எதிர்ப்புணர்வால் அ.ம.மு.க.வை ஆதரித்தவர்கள்  வாக்குகள் சிதறிப் பா.ச.க வந்துவிடக் கூடாது எனத் தெளிவாக இருந்தனர். எனவே, அவர்கள் தி.மு.க.கூட்டணிக்கு வாக்களித்து விட்டனர்.
தி.மு.க. அல்லது அ.ம.மு.க. வெற்றிகளால் அ.தி.மு.க. கவிழும் சூழல் வந்தால் அடுத்து தினகரன் மூலமாகவோ தி.மு.க.வோ ஆட்சி அமைத்தால் வரவேற்கலாம். ஆனால், பா.ச.க. அதற்குஇடம் தராமல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் மக்களிடம் இருந்தது. மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு அல்லது அதன் செயல்பாட்டை நிறுத்தி விட்டுப் பா.ச.க.தன் மறைமுக ஆட்சியை அரங்கேற்றினால் தமிழ்நாடு என்னாவது என்ற பேரச்சம் பலருக்கு இருந்தது. அதற்கு இடம் தரக்கூடாது என்பதனால்தான் அ.தி.மு.க.வின் பெரும்பான்மைக்குக் குந்தகம் வராத அளவில் அதற்கு வெற்றி அளித்தனர்.   
சார்பு வாக்குகளைவிட எதிர்ப்பு வாக்குகளாலேயே வெற்றியை வரையறுப்பது தமிழக வாக்காளர்களின் வழக்கம். அதை உணர்த்துவதுதான் மேற்குறித்த மக்களின் கண்ணோட்டம். இது தவறு என்றால் தோல்விக்குக் காரணங்கள் வேறு யாவை?
இவை மட்டும் காரணமல்ல என்றால், தேர்தல் ஆணையத்தின் குளறுபடி குறிதது அ.ம.மு.க. கூறுவதும் ஆராய்விற்குரியது.
பொதுச்சின்னத்தை முதலிலேயே தேர்தல் ஆணையம் அளித்திருந்தால் வாக்குப்பொறிகளில் தொடக்கத்திலேயே வேட்பாளர்கள் பெயர் வந்திருக்கும். பல வாக்கு மையங்களில் வேட்பாளர் பெயர்கள் உள்ள சுவரொட்டி ஒட்டப்படவில்லை. அதனால் முன்னதாக அறியவும் வாய்ப்பில்லை. தற்சார்பர்(சுயேச்சை) என்ற முறையில் போட்டியிட்டதால் தற்சார்பர்கள் பலருள் பெயரைத் தேடுவதும் அரிதாக இருந்தது. கட்சி முறையில் போட்டியிடும் வாய்ப்பைப் பறித்தவர்கள் தாங்கள் எண்ணியதை அடைந்துவிட்டனர்.
 ஒரு  நாடாளுமன்றத் தொகுதியின் கிளைக்கழகம் முதல் மாவட்டக் கழகம் முடிய உள்ள மொத்த அமமுகப் பொறுப்பாளர்கள் 1,24,476இவர்கள் “பணத்தை அங்கே வாங்குவோம். வேலை இங்கே பார்ப்போம். வாக்கை அங்கே அளிப்போம்”  என வாக்களிதது விட்டார்களா? ஒரு சில இடங்களில் அவ்வாறு நடக்கலாம். ஆனால், ஒட்டு மொத்தமாக இவ்வாறு நடக்காது. எனவே, வாக்குப்பதிவுப் பொறி மூலம் அ.ம.மு.க.சின்னத்தில் வாக்குகள் பதிவாவது தடுக்கப்பட்டுள்ளது என அக்கட்சியினர் கருதுகின்றனர்.
ஒரு வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவுப் பொறியில் அ.ம.மு.க. வின் வேட்பாளர் பெயரும் கட்சிச்சின்னமும் இடம் பெறாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி இதைப்போன்ற பல முறைகேடுகளால் தோல்வி உருவாக்கப்பட்டுள்ளதுஎன்கின்றனர். 300 மையங்களில் ஒரு வாக்குகூடப் பதிவாகாததுபோல் காட்டப்பட்டுள்ளது. கட்சியின் பக்கம் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தவர்களால் வாக்களிக்காமல் இருக்க முடியாது. அவர்களின் குடும்பத்தினர் மாறி வாக்களித்திருந்தாலும் இவர்கள்  மாறி வாக்களித்திருக்க முடியாது என்கின்றனர்.
கூட்டணிக்கட்சிகள் பலவற்றின் வாக்குகளைப் பெற்றுப் பா.ம.க. 5.42% வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒரு கட்சிக் கூட்டணியுடன் அ.ம.மு.க. 5.38% வாக்குகளைப் பெற்றுள்ளது. எனவே, மொத்தத் தேர்தல் களத்தில் கட்சி வரிசையில் பார்த்தால்  அ.ம.மு.க. 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளால் பேராயக்(காங்.)கட்சியின் வாக்குகள் 12.76% பெற்றதைப் புறக்கணித்தால் 3ஆவது இடமாக உள்ளது. ஒரு வேளை நா.த.க., ம.நீ.மை,ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் 13.31% வாக்குகள் பெற்று இருக்கும். என்றாலும் தனித்து நின்று உண்மையான வலிமையை உணர்ந்ததுதான் நன்று.
இவை குறித்து ஆராய்வது ஒரு புறம் இருந்தாலும். மறுபுறம் “தோல்வி நிலையானது அல்ல” என்ற உணர்வுடன் அ.ம.மு.க.வினர் செயல்படத் தொடங்கி விட்டனர். தோல்வித் தடைக்கற்களை வெற்றியின்படிக்கட்டுகளாக மாற்றும் வகையில் செயல்பட்டால் இனி வெற்றி காணலாம். 
தோல்விக்கான காரணங்களை ஆராயும் அதே நேரம், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். தங்களுக்குச் சார்பாக மக்கள் நிற்கும் வகையில் இனிச் செயல்பட வேண்டும். இவர்களின் செயல்பாடு அ.தி.மு.க.வைப் பா.ச.க. வலையில் இருந்து மீட்பதாக வும் அமைய வேண்டும்.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியிலும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் தங்கள வலிமையைக் காட்டும் அளவில் அ.ம.மு.க. இப்பொழுதிருந்தே பாடுபட வேண்டும். சூழ்ச்சியால் வெற்றிமாலை பறிக்கப்பட்டதால் விழிப்புடன் உடன் செயல்பட வேண்டும்!
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்(திருவள்ளுவர், திருக்குறள் 620)
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Monday, May 27, 2019

தேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல

தேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும்

தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த பொழுது நான் புறநகர் ஒன்றில் இருந்தேன். என் அலைபேசியில் இணைய இணைப்பு சரியாகக் கிடைக்கவில்லை. எனவே, முடிவுகளைப் பார்க்க இயலவில்லை. ஆனால், அன்பர்கள் சிலர் அடுத்தடுத்து ஒரே மாதிரி பேசினர். நான் அவர்களுக்கு ஒரே மாதிரிதான் மறுமொழி உரைத்தேன். அவர்கள், “நீங்கள் தேர்தல்பற்றியும் “பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம்வெளுத்து விட்டது!” என்றும் எழுதியவை மிகச் சரி. ஆனால், பா.ச.க. அல்லவா பெரும்பான்மை பெற்று வருகிறது” என்றனர். நான் அதற்குப் “பா.ச.க. கட்சி அளவில் பெரும்பான்மை பெறும். இப்பொழுது சிவசேனா முதலான கூட்டணிக் கட்சிகளின் வெற்றியையும் சேர்த்துப் பா.ச.க. வெற்றி எண்ணிக்கையில் சேர்க்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் பா.ச.க. முழுத் தோல்வியைச் சந்திக்கும். கருநாடகாவில் ஒரு பாதி வெற்றி பெறும். ஒரிசா, மே.வங்கம், வட கிழக்கு மாநிலங்களில் வெற்றி காணாது. சிக்கிம், வடகிழக்கு மாநிலங்களில் பா.ச.க. வெற்றி பெறாதுகுறுக்கு வழியில் ஈடுபட்டிருந்தாலன்றிஆட்சி அமைக்கும் எண்ணிக்கை அதற்குக் கிடைக்காது” என்றேன்.
ஆனால், நேரம் செல்லச் செல்ல பா.ச.க. அறுதிப்பெரும்பான்மையை நோக்கிச் சென்று விட்டது. முடிவுகளை நம்பத்தான் முடியவில்லை. தமிழகக் கண்ணாடிகொண்டு வட இற்தியாவைப் பார்த்ததால் கணிப்பு தவறாகிவிட்டது என நண்பர்களிடம் சொன்னேன். ஆனால், அதற்கு அவர்கள், அப்படியில்லை.வாக்கு மையங்களில் பா.ச.க மிரட்டுவதையும்  “மையிட்டது வாக்காளர்கள் விரல்களில்!உள்ளே விசையை; அழுத்தியது பணியாளர் விரல்கள்!” என்னும் காட்சிகளையும் காணொளிகளில் கண்டோம். எனவே, பா...வின் இவ்வெற்றிஇயல்பானதல்லபறிக்கப்பட்ட வெற்றி” என்றனர்.
எனினும் பிற நம் கருத்துகள் சரியாக அமைந்தனவா எனப் பார்க்கலாம்.
.தி.மு.ஆட்சியைக் கலைக்க வேண்டா! (16 ஏப்பிரல் 2019 )  எனஎழுதியவாறே இடைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
“தி.மு.க.வின் எதிர்பார்ப்பு பொய்த்து அ.தி.மு.க. இடைத்தேர்தல்களில் வேண்டிய எண்ணிக்கையிலான தொகுதிகளில்  வெற்றி பெறலாம்.”
“சிறப்பான பின்புலம் இல்லாமல் முதல்வர் பதவியில் அமர்ந்து காட்சிக்கு எளியராக விளங்கித் திறமையாகச் செயல்படும் வல்லவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அரசியல்வாதிகளுக்குரிய ஊழல் இலக்கணத்தைப் புறந்தள்ளிப் பார்த்தால் அவரை ஆட்சிக் கட்டிலில் இருந்து முறையற்ற முறையில் தள்ள வேண்டிய தேவை இல்லை.”
“தேர்ந்தெடுக்கப்படும் அரசு பதவிக்காலம் வரையும் ஆட்சி செய்வதே நல்லது. செயலலிதாவை மட்டும்  மக்கள் ஆட்சி செய்யத் தேர்ந்தெடுத்ததாகக் கருதுவது தவறு. அவர் தலைமையிலான அதிமுகவையும்தான் ஆள்வதற்கு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.”
இவை யெல்லாம் நம் கருத்துகள். இவற்றின்படித்தான் இப்பொழுது தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
 “பா.. மத்திய ஆட்சியைக் கைப்பற்றி இங்கே தி.மு..விற்குப்பெரும்பான்மை கிடைக்கலாம்” எனக் குறிப்பிட்டிருந்தோம். அதுபோல் மத்தியில் பா.ச.க. ஆட்சி அமைக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிதான் ஒன்று நீங்கலான முழு வெற்றி கண்டுள்ளது.
இடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்!(17 மார்ச்சு 2019) என வேண்டுகோள் விடுத்திருந்தோம். உண்மையில் யார் பக்கம் இருக்க வேண்டுமோ அவர்கள் பக்கம் நீதித்துறை இல்லை. இடைத்தேர்தல்களில் மக்கள் வேறு கண்ணோட்டங்களில் வாக்களிக்காமல் இவர்களே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் இப்படிப்பட்ட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி இடமுடியும் என்பதை எண்ணிப்பார்த்து இவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். என்றும் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால், இது நிகழவில்லை. அதே நேரம்,
“சட்டமன்றத் தொகுதிகளில் பதவி பறிக்கப்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வாக்களித்தாலும் அத்தொகுதி அடங்கிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கட்டும்.”
எனக் குறிப்பிட்டிருந்தோம். இதன்படி 9 தொகுதிகளில் ஆளுங்கட்சிக்கு வாக்களித்த மக்கள் நாடாளுமன்றத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.
 தினகரனின் அ.ம.மு.க., பல்வேறு முறையற்ற தாக்குதல்களுக்கு உள்ளாவதால் முதன்மைப் பங்கைப் பெறும் வகையில் வாக்குகளைப் பெறும் என முதலில் கருதியவாறு நடைபெறவில்லை. தேர்தல் கணிப்புகளைப் பார்த்துச் சில ஊடக நண்பர்களிடம் பேசியபொழுது தினகரன் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது என்றனர். அப்படியானால், கட்சி அமைப்பிற்கு எதிராக வாக்களிக்க விரும்பாதவர்களாலும் தற்சார்பரகளாக(சுயேச்சைகளாக)ப் போட்டியிடுவதாலும் அவருக்குச் சரிவுதான் என்றேன். அஃதாவது, வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளைப் பெறுவார் என்ற கணிப்பு பொய்யாகும். ஒன்று அவர் வெற்றி பெறும் வகையில் வாக்குகள் அமையும் இல்லையேல் புறக்கணிக்கப்படுவார் என்ற கருத்தைத் தெரிவித்தேன். அவ்வாறுதான நடந்துள்ளது. என்றாலும் அ.ம.மு.க.வினர் தளரத் தேவையில்லை.
     பேராயக்(காங்.)கட்சி  மாநிலக்கட்சி என்ற முறையில் உ.பி.யில் வெற்றி பெற்று மாநிலக் கட்சிகள் அமைக்கும் கூட்டாட்சியில் இடம் பெறட்டும். பிற மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் தமிழ் நாட்டில் பேராயக்(காங்.)கட்சி தோற்றால்தான் தமிழக மக்களின் ஆறா மனவலியை அக்கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள். பேராயக்(காங்.)கட்சி உ.பி.யில் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிட்ட  இடங்களில் ஒன்று தவிர பிற இடங்களில் வெற்றி பெற்றள்ளது. கூட்டணி அறம் கருதியும் பா...வுடன் கூட்டணி வைத்துள்ளதமிழக ஆளுங்கட்சிக் கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவும்பேராயக்(காங்.)கட்சியை வெற்றி பெற வைத்துள்ளனர். எனினும் நாம் விழைந்தவாறு இந்திய அளவில் மாநிலக்கட்சிகளின் கூட்டாட்சி அமையவில்லை.
இராகுல்பிற மாநிலம் எதிலும் போட்டியிட்டு வெற்றி பெற வாழ்த்தினோம்கேரளாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இளங்கோவன் என்னும் தமிழினப்பகையாளி தோற்கடிக்கப்படவேண்டும் எனக் கருதினோம். அதற்கேற்ப தி.மு.க. கூடடணியில் தமிழினப் பகையாளியான அவர் மட்டுமே தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
தாலின் தமிழக அரசியலோடு நின்றுவிடாமல் இந்திய அரசியலிலும் கால்பதித்துத் தமிழ்நாட்டின் உயர்விற்குப் பாடுபடவேண்டும். (26 பிப்பிரவரி 2017) எனவும்
பொதுத் தேர்தல்களில் திமுக கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசியலில் தாலின்  முனைப்புடன் ஈடுபட வேண்டும். 15.10.2018) எனவும் குறிப்பிட்டிருந்தோம். நினைத்தன நிறைவேறும வண்ணம் தேர்தல் முடிவுகள்அமைந்துள்ளன.
சீமானின் நா..எவ்வளவு வாக்குகள் பெற்றாலும் அதற்குவளர்ச்சியேநாளைக்கு இந்த வளர்ச்சி அக்கட்சியை நிலை நிறுத்திக் கொள்ள உதவும் (15 ஏப்பிரல் 2019). நா.த.க. சில இடங்களில் 3ஆவது இடத்திலும் சில இடங்களில் நான்காவது இடத்திலும் வந்து தன் வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
 கமலின் ம.நீ.மையத்திற்குக் கிடைக்கும் வாக்குகள் அடுத்து வரும் தேர்தலில் அவருக்கு உதவும். இவர் யாருடைய ஆதரவு வாக்குகளை அல்லது எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவுகளில் மாற்றம் வரலாம். எந்தத் தொகுதியிலும் பிணைத் தொகையை மீளப் பெற முடியாத அளவு குறைவான வாக்குகள் பெற்றால் கட்சியை மேம்படுத்துவதற்கான சிந்தனை உருவாகி அடுத்தத் தேர்தலுக்கு உதவும். எனக் குறிப்பிட்டிருந்தோம். தன்னம்பிக்கையுள்ள கமல் என எழுதியதற்கு எதிராகப் பேசிய நண்பர்களிடம், சென்னையில் புதிய வாக்காளர்களிலும் படித்த வாக்களாரகளிலும் பலர் கமலை ஆதரிக்கின்றனர். எனவே, அவர் கட்சிக்கு 10 இற்குக் குறையாமல் வாக்குகள் கிடைக்கும். வேட்பாளர் எவர் எனத் தெரியாமல் கமலின் கை விளக்குச் சின்னத்திற்குப் பல தொகுதிகளில் வாக்களிப்பர் என்றேன். இதுதான் நிறைவேறியுள்ளது.
நாம் கருதியன பெரும்பாலும் நிகழ்ந்துள்ளன. ஆனால்,  தமிழ்நாட்டிற்கு நன்மைகள் ஏற்படும்வகையில் முடிவுகள் இல்லை. எனவே, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாதாடியும் போராடியும் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் இடையூறுகள் வராமலும் தமிழகத்திற்கு நன்மைகள் கிடைக்கும் வகையிலும் செயல்பட வேண்டுகிறோம்.
மக்கள் சார்பில் வினையாற்ற வேண்டியவர்களை நாம் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுத்துள்ளோம். இனி அவர்கள் உண்மையான சார்பாளர்களாகத் திகழும் வகையில் செயலாற்றச் செய்வோம்.
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.(திருவள்ளுவர், திருக்குறள் 518)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல


Sunday, May 26, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130

(குறள்நெறி) 

  1. நடுவுநிலை தவறிக் கேடு அடையாதே!
  2. நடுவுநிலையாளர் தாழ்வை இழிவாக எண்ணாதே!
  3. (சமன்கோல் போல்) ஒரு பக்கம் சாயாமையை அணியாகக் கொள்!
  4. சொல்தவறாமையை மனம் கோணாமையுடன் இணை!
  5.  நடுவுநிலைமை வாணிகமே மேற்கொள்!
  6. அடக்கத்தால் உயர்வு கொள்!
  7. அடங்காது சிறுமை கொள்ளாதே!
  8. அடக்கத்தைக் காத்திடுக.
  9. நல்வழியிலான அடக்கம்  கொள்!
  10. மலையிலும் உயர்வான அடக்கம்  கொண்டு வாழ்!
    (தொடரும்)
    இலக்குவனார் திருவள்ளுவன்
    [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140]

Saturday, May 25, 2019

மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்! மாநிலக்கட்சிகள் கூட்டைமப்பு அமைத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்!

  மாநிலக்கட்சிகள் கூட்டைமப்பு அமைத்திடுக!

தமிழ்நாடு-புதுவையில் ஓரு தொகுதி நீங்கலாக அனைத்திலும் தி.மு.க. கூட்டணியை வாகை சூட வைத்துள்ளார் மு.க.தாலின்.  அவரது தனித்தன்மையை ஏற்க வேண்டுமே தவிர, அவரின் தந்தை கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிட்ப் பேசக்கூடாது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். எனினும் அவ்வாறு ஒப்பிட்டுப் பேசுநருக்கும் விடையிறுக்கும் முகமாக வெற்றிக் கனிகளைப் பறித்துள்ளார். சிறப்பான வெற்றிக்கு அடிததளமாகவும் அரணாகவும் இருந்த மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்.
 தலைமைய(மைச்ச)ர் பதவி ஆசையில் கூட்டணிக்கு உடன்படாத மே.வங்க, உ.பி.  முதலான வட மாநிலத் தலைவர்கள் மு.க.தாலின் வழியைப் பின்பற்றி இருந்தால் இன்றைக்கு மீண்டும் பா.ச.க. அரியணையில் ஏறியிருக்க முடியாது. எனவே, பிற மாநிலத்தலைவரகளையும் இணைக்கும் பொறுப்பை ஏற்று மு.க.தாலின் செயல்படவேண்டும்.
தமிழ், தமிழக நலன் கருதி முதலில் அவர் செயல் பட வேண்டும்.
தில்லியில் தமிழக அரசின்சிறப்புச்சார்பாளர் என ஒருவர் உள்ளார். இப்பொறுப்பில் இருந்தவர்கள் தமிழக நலன் கருதி என்ன செய்தார்கள் அல்லது இருப்பவர் என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. எனவே, தமிழ்நாட்டின் சார்பாக மத்தியத் தொடர்புக் குழு ஒன்றை மத்தியில் அமைக்க வேண்டும். அனைத்துக்கட்சியின் சார்பாண்மையும் இதில் இருக்க வேண்டும். இதன் மூலம் எல்லாத் தொகுதிகளிலும் உள்ள குறைகளை நீக்கவும் மத்தியில் நிலுவையாக உள்ள திட்டங்களை நிறைவேற்றவும் கட்சிச்சார்பின்றிப் பாடுபட வேண்டும். இதன் மூலமாக ஒவ்வொரு தொகுதியும் தனிக்கவனம் பெற்று மக்களின் குறைகள் களையப்படும்.
“பிற கட்சித் தலைவர்களிடம் உயர்தனிச்செம்மொழியான   தமிழின் பெருமையையும் உலக மொழிகளின் தாயானஅதனை இந்திய மக்கள் படிப்பது என்பது மூதாதையருக்குச்செலுத்தும் மதிப்பு என்பதையும் புரியச் செய்து தமிழின்சிறப்புகளை அவரவர் பகுதிகளில் பரப்ப நற்றொண்டாற்றவலியுறுத்தி வெற்றி காண வேண்டும்” என முன்பு குறிப்பிட்டாற்போல், தமிழைப்பற்றிய அறியாமையில் உள்ள பிற மாநிலத்தவருக்கு உணர்த்தும் வண்ணம் தமிழின் சிறப்பை உணர்த்தும் பரப்புரையை மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.
நாம் முன்பு குறிப்பிட்ட சிலவற்றை மீள நினைத்துப் பார்க்கிறோம்.
இடைத் தேர்தல்கள் நடந்ததெனில் இன்றைய சூழலில்திமுகவிற்கு அவற்றில் வெற்றி பெற வாய்ப்பில்லை. எனவேபொதுத் தேர்தல்களில் திமுக கவனத்தைச் செலுத்தவேண்டும். அதற்கு இந்திய அரசியலில் தாலின் முனைப்புடன் ஈடுபட வேண்டும். (இந்திய அரசியலில்தாலின் கவனம் செலுத்த வேண்டும்,15.10.2018)
தாலின் தமிழக அரசியலோடு நின்றுவிடாமல் இந்தியஅரசியலிலும் கால்பதித்துத் தமிழ்நாட்டின் உயர்விற்குப்பாடுபடவேண்டும். (செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே! 26 பிப்பிரவரி 2017)
நாம் குறிப்பிட்டபடி இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி முழு வெற்றி பெறவில்லை. ஆனால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் முழு வெற்றி பெற்றுள்ளது. எனவே, தமிழ்நாட்டு நலன் கருதியும, இந்திய அரசியல் நலன் கருதியும் முனைப்புடன் இந்திய அரசியலில் ஈடுபடவேண்டும்.
இந்தியக்கட்சிகளை வழிநடத்தும் திசைகாட்டியாகத் தாலின்மாற வேண்டும்  ……. எப்பொழுதும் பிற கட்சித் தலைவர்கள், இவர் கருத்திற்கு மதிப்பு கொடுக்கும் அளவில் தாலின்தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டுத் தன்னைஉயர்த்திக்கொள்ள வேண்டும்.(மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக! –  25 சூன் 2017 )
மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியாமாறத் தாலின் இராகுலுடன் இணைந்து செயல்பட்டு வலிவும்பொலிவும் மிக்க நாடாக நம் நாட்டை மாற்ற வேண்டும்.
“தன்னாட்சி மாநிலங்களின் கூட்டாட்சி குறித்து வலியுறுத்தவேண்டும்.  …..சம உரிமையுடைய கூட்டாட்சியாக இந்தியஒன்றியத்தை மாற்றப் பாடுபட வேண்டும்”  என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
இக்கருத்துகளுக்கு இணக்கமாக, “மாநில நலன்களும்உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும், பறிபோனவற்றைமீட்டெடுக்கவும் சனநாயகம் காக்கவும் அமைதியானஅறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும்” என மு.க.தாலின் தொண்டர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்தவற்றைச் செயல்படுத்த மாநிலக் கட்சிகளின்கூட்டமைப்பு அல்லது மாநில நலன்களுக்கானகூட்டமைப்பை அமைத்து இந்திய அரசியலைத் தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும்.
பா.ச.க. வெற்றி குறுக்கு வழியிலான வெற்றி, மோசடியிலான வெற்றி  என வாக்கெடுப்பிற்குப் பிந்தைய செய்திகள் உணர்த்துகின்றன. எதிர்க்கட்சிகள் அமைதியாக இருந்து ஆக்கப்பணிகளையும் விழிப்புணர்வுப் பணிகளையும் மேற்கொண்டால் இந்த ஆட்சி நிலைக்காது. ஒரு வேளை அவ்வாறு நடைபெறாவிடிலும் அடுத்த பொதுத்தேர்தலில் பா.ச.க.வை வெல்ல வேண்டுமென்றால் இப்பொழுதிருந்தே செயலாற்ற வேண்டும். எனவே, மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பு மூலம் அனைத்துக் கட்சிகளின் கருத்து ஒற்றுமையையும் செயல் ஒற்றுமையையும் உருவாக்க வேண்டும்.
இன்றைய சூழலில் இதைத் தொடங்கினால் பிற மாநிலக்கட்சிகள் இவரின் கீழ் இணையும். காலங்கடந்து முயன்றால் அவரவர் தங்களைத் தலைவராக எண்ணி ஒதுங்குவர். பயன் இராது. “காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்”வதுதான் நல்லது.
அனைத்துக் கட்சியினரும் பகையாகக் கருதுபவரையும் நட்பாகக் கருதி இணைந்து செயல்பட்டால் அவர்களுக்கும் நல்லது என உணர வேண்டும். எனவே, தற்செருக்கு எதுவுமின்றி மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பின் மூலம் மாநிலக்கட்சித்தலைவர்களின் மாநிலங்களின் உரிமையை மீட்கவும் காக்கவும் வேண்டும்.
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல் (திருவள்ளுவர், திருக்குறள் 679)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Followers

Blog Archive