Thursday, February 29, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 176-180

 





(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 171-175 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 176-180

176. Absconding personதலைமறைவாயிருப்பவர்  

காண்க: Absconder — தலைமறைவானவர்
177. absconding to avoid summonsஅழைப்பாணை தவிர்ப்புத் தலைமறைவு  
அழைப்பாணையைத் தவிர்க்க தலைமறைவாகுதல் எனப் பொருள்.   இ.த.ச. பிரிவு 172, அழைப்பாணை அல்லது பிற வழக்கு நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காகத் தலைமறைவாக இருத்தலைப்பற்றிக் கூறுகிறது.
178. Absence    வராமை  
வாராதிருத்தல்  

ஆவணங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றின் இருப்பு குறித்த தகவலில் இன்மை என்னும் பொருளில் வரும். எ.கா. absence of record – ஆவணமின்மை, பதிவுரு இன்மை
  எதிர்பார்க்கப்படும் அல்லது வேண்டப்படும் அல்லது பார்க்கப்படும் ஒன்று இல்லாத நிலை அல்லது இருப்பில்லாத நிலை.  

வழக்கமாக வரக்கூடிய அல்லது எதிர்பார்க்கக்கூடிய இடத்தில் அல்லது உறைவிடத்தில் இல்லாமல் இருப்பது.  

வேலையில் விளக்க முடியாத இல்லா நிலை  

பொருள் வேண்டப்படும் அளவு இல்லாத பற்றாக்குறையையும் குறிக்கும்.  
இல்லாதிருத்தல் (இருப்புப்பாதை சொத்து(சட்ட எதிர் உடைமை) சட்டம் 1966, பிரிவு 3. அ./S. 3(a) RP(UP)A, 1966)

இருத்தலின்மை

இருப்புப் பாதை என்பது இருப்பூர்தித்துறையைக் குறிக்கிறது.  

ஆசரின்மை எனச் சிலர் குறிக்கின்றனர். Hāzir என்னும் உருதுச்சொல்லின் தமிழ்வடிவமே ஆசர் என்பது. இசுலாமியர் ஆட்சியில் இச்சொல் செல்வாக்கு பெற்றிருந்தது. இப்பொழுது மறைந்து வருகிறது. எனவே, இச்சொல்லைப் பயன்படுத்த வேண்டா.
179. Absence from duty  வேலைக்கு வராமை  
விடுப்பு இசைவு எதுவும் பெறாமல் பணிக்குத் தொடர்ந்து வராதிருத்தல்.  
ஒருவேளை எதிர்பாரா நலக்குறைவு, நேர்ச்சிக்கு ஆளாதல், தவிர்க்க இயலாச் சூழல் போன்ற காரங்களால் பணிக்கு வரஇயலாமையைக் கூடிய விரைவில் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு தெரிவிக்காமல் அலுவலுக்கு வராதிருத்தல் சட்ட நடவடிக்கைக்குட்பட்ட வராமையே ஆகும்.

இசைவின்றிப் பணிக்கு வராமை  வேலைநிறுத்தமாகவும் கருதப்படும்.
180. Absence of any specific provision to the contrary, in theமாறாகக், குறிப்பிட்டவகைக்கூறு இல்லாத நிலையில்  

கு.ந.தொ.பிரிவு 5:  காப்புரை: இத்தொகுப்பில் உள்ள எதுவும் குறிப்பிட்டவகைக்கூறு இல்லாத நிலையில் நடைமுறையில் உள்ள எந்தச்சிறப்பு விதியை அல்லது உள்ளூர் விதியை அல்லது வழங்கப்பட்டுள்ள எந்தச் சிறப்பு அதிகார வரம்பையோ அதிகாரத்தையோ அல்லது வழங்கப்பட்டுள்ள எந்த நடைமுறையையோ பாதிக்காது.( Section 5 in The Code Of Criminal Procedure, 1973)

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, February 25, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 171-175

 





(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 166-170 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 171-175

171. Abscondenceதலைமறைவு
அஞ்சியொளிதல்    
ஒருவர் தமது உறைவிடத்திலோ வெளியிடத்திலோ பதுங்கியிருத்தல் அல்லது சட்டத்திற்கஞ்சி ஓடி ஒளிந்திருத்தல்
175. Absconderதலைமறைவானவர்
பதுங்கியவர்
அஞ்சியொளியுநர்  
நீதிமன்றப் பிடியாணையின் செயல்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு மறைந்து வாழ்பவர்.   (அஞ்சியொளியுநர் பற்றிய வெளிப்படை அறிவிப்பு குறித்து, கு.ந.ச.தொகுப்பு, பி. 82 கூறுகிறது.)
173. Abscondingதலைமறைவாகுதல்

அஞ்சியொளிதல்    அல்லது அழைப்பாணை பெறுவதில் இருந்து தப்பித்தல் போன்ற வழக்கு நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக ஒருவர் தமது உறைவிடத்திலோ வெளியிடத்திலோ தொடர்பிற்கு உரியவர் அறியாமல் பதுங்கியிருத்தல்.
174. Absconding debtorதலைமறைவுக் கடனாளர்
தலைமறைவுக் கடனாளி  

கடனை அல்லது கடன்களைத் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டுள்ள கடன்வாங்கிய கடனாளி, கடன்தந்தவர் அல்லது கடன்தந்தவர்கள் பார்வையிலிருந்து அவர் இருப்பிடம் தெரிய இயலா அளவிற்கு வேறிடம் செல்லுதல்.  

கடனாளர்களிடமிருந்து வேண்டுமென்றே தன்னை மறைத்துக் கொள்ளும் கடனாளி.  

கடனைத் திருப்பச் செலுத்துவதற்காகக் கடன்தந்தவர்களிடமிருந்து தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்பவர்.
175. Absconding offenderதலைமறைவுக் குற்றவாளி,   
தலைமறைவாகப் பதுங்கி இருப்பவர் குற்றவாளி என்றால், தலைமறைவுக் குற்றவாளி ஆகிறார்.  
தலைமறைவானவர். சட்டத்தின் பார்வையில் “தலைமறைவாக” இருக்க, ஒருவர் தனது வீட்டை விட்டு ஓடியிருப்பது இன்றியமையாதது. என்றாலும் மறைவான இடம் அவரது சொந்த வீடாக இருந்தாலும், சட்டத்தின் செயல்முறையைத் தவிர்க்க அவர் தன்னை மறைத்துக்கொண்டால் தலைமறைவானவர் எனக் குறிப்பிடப் போதுமானது

. – கருதாரே எதிர் உ.பி் அரசு   [ Kartarey v. State of U.P., 1976 Cri.L.J. 13 (SC)= (1976) 1 SCC 172, (1975) SCC (Cri.) 803, (1975) Cri.L.R. (SC) 690.]   இப்போது “தலைமறைவு” என்பதன் பொருளுக்கு வருவோம். உச்ச நீதிமன்றம் செயேந்திர விட்ணு தாக்கூர் எதிர் மகாராட்டிரா மற்றும் மற்றொரு மாநிலம், [(2009) 7 SCC 104=(2010) 2 SCC (Cri) 500= (2008)108 CLT 761.] அந்தத் தீர்ப்பின் 40 மற்றும் 41 ஆம் பத்திகளில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-   “தலைமறைவு” என்ற சொல் பல அகராதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை நாம் குறிப்பிடலாம்: பிளாக்கின் சட்ட அகராதி, கைது, வழக்கு அல்லது சட்டச் செயல்முறை சேவையைத் தவிர்க்க. மறைவாகவோ  திடீரெனவோ வெளியேறுதல் என்கிறது.  


தலைமறைவு”, “தலைமறைவர்”, “தலைமறைவாக இருத்தல்” என்ற சொற்களின்  நியாயமான முடிவு என்னவென்றால், ஒருவர் தனது வீட்டை விட்டு ஓடியிருக்க வேண்டிய தேவையில்லை;  சட்டப்பூர்வ நடைமுறையைத் தவிர்க்கும் நோக்கில் மறைந்திருந்தால் போதுமானது.  மறைந்திருக்கும் இடம் சொந்த வீடாக இருந்தாலும், சட்டத்தின் நடைமுறையிலிருந்து தப்பிக்க தன்னை மறைத்துக் கொண்டால் போதும்.
தற்போதைய சூழலில் மேற்கூறிய வார்த்தைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள பொருளைப் பயன்படுத்தினால், மனுதாரர் “தலைமறைவானவர்” என்று கருத முடியாது, அதனால் அவர் மீது குற்றச்சாட்டிதழ் பதியப்ப்டு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. – சந்தோசு குமார் மோகரனா எதிர் அறியப்படாதவர் (20.09.2013)Santosh Kumar Moharana @ vs Unknown on 20 September, 2013, ஒரிசா உயர்நீதிமன்றம், கட்டாக்கு(CRLMC No. 2609 of 2013)  
ஒருவர் தன் வீட்டில் மறைந்திருந்தாலும் மக்கள் மத்தியில் வீட்டை விட்டு ஓடிப்போனதாக ஒரு மாயையை உருவாக்குவதால், ஓடிப்போனவராகக் கருதலாம்.  
தலைமறைவுக் குற்றவாளியே குற்றத்தின் தன்மையைப் பொறுத்து குற்றநடைமுறைத் தொகுப்பு, பிரிவு 82 இன் கீழ்  அறிவிக்கப்படும் குற்றவாளி(proclaimed offender) யாகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, February 21, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 166-170

 





(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 161-165- தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 166-170

166. Abrogate (வினைச்சொல்)  வழக்கொழியச் செய்
 வழக்கறு; 
அழி ; நீக்கு ; திரும்பப்பெறு முடிவு கட்டு  

நடைமுறையிலுள்ள விதியையோ சட்டத்தையோ பயன்முறையையோ செயல்பாட்டிலுள்ள எதையோ வழக்கொழியச் செய் அல்லது அதற்கு முடிவு கட்டு          
167. Abrogation (பெயர்ச்சொல்)தவிர்த்தல்
வழக்கொழித்தல்
சட்ட நீக்கம்
சட்டத்திருத்தம்  
அதிகார பூர்வமாக இரத்து செய்(தல்) என்பர். இரத்து தமிழ்ச்சொல்லல்ல. இரத்து செய் என்னும் இரு கலப்புச் சொற்களுக்கு மாற்றாக நீக்கு என ஒற்றைத் தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துவதே சிறப்பு.  

முன் இயற்றப்பட்ட சட்டம் ஒன்றை நீக்குதல்
168. Abruptதிடீரென
எதிர்பாராமல்  
எதிர்பாராததும் திடீரென நிகழ்வதுமான செயல்.
169. Abruptly(வினையடை)  திடீரென்று
தொடர்ச்சியற்ற
செங்குத்துச் செறிவு
170. Abscond  தலைமறைவாதல்  

குற்றச் செயல் புரிந்தமைக்காக அல்லது சட்ட மீறலுக்காகப் பிடிபடுவதிலிருந்தோ, தளையிடப்படுதிலிருந்தோ சட்ட நடவடிக்கையிலிருந்தோ தப்பிப்பதற்காக நீதிமன்ற எல்லைக்கு அப்பால் செல்லுதல் அல்லது இயல்பான உருவிலோ மாற்றுருவிலோ தன்னை மறைத்துக்கொள்ளுதல் அல்லது ஒளிந்து கொள்ளுதல்.  

குற்றம் புரிந்த இடத்திலிருந்தும் வசிப்பிடத்திலிருந்தும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக உள்ளூர் நீதிமன்ற வரம்பிற்கு அப்பால் விரைந்து கமுக்கமாக வெளியேறுதல்.  
கடனைத் திருப்பச் செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காகக், கடனாளியின் வழக்கு தொடுப்பு,
நீதிமன்ற அழைப்பாணை பெறுதல்,
தளையிடப்படல் முதலான சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக இருப்பிடத்தை விட்டு அகன்று வேறிடத்தில் மறைந்து வாழ்தல்.
மற்றவருடைய/மற்றவர்களுடைய / பொது நிறுவனத்துடைய / அலுவலகத்துடைய/ தனக்குரியதல்லாத பணத்தையோ சொத்தையோ  உரியவர் அல்லது உரிய முறையான இசைவின்றி எடுத்துக்கொண்டு அவர்/அவர்கள் அறியா வேறிடத்திற்குச் சென்று மறைந்து இருத்தல்.

நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர், நீதிமன்றம் குறித்த நாளில் அல்லது வழக்கு நாளில் வரத்தவறினால் அதுவும் தலைமறைவேயாகும்.  

உசாவல் மடல் ( inquiry letter) பெற்ற பின்னர் தொடர்பினைத் துண்டிக்கும் வகையில் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் இருப்பதும் இந்தியச் சான்றுச் சட்டம் பிரிவு 8, விளக்கம் எச்./ Indian Evidence Act. Sec.8, illustration (h) இன்படித் தலைமறைவே.  

கருப்புச்சந்தை தடுப்பு, இன்றியமையாப் பொருள்கள் வழங்கல் சட்டம் 1980 பிரிவு 7, சிறை/காவல் வைப்பு ஆணையிலிருந்து தப்பிப்பவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்குகிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, February 20, 2024

தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பாராட்டு – இலக்குவனார் திருவள்ளுவன்

 


 



தமிழக வெற்றிக் கழகத்திற்குப்

பாராட்டு

நடிகர் விசய் அரசியலில் முழுமையாக ஈடுபட முடிவெடுத்துத் தனக்கான கட்சியைத் தொடங்கி  அறிவிப்பையும் வெளியிட்டார். அவர் தொடங்கியுள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்தையும் “தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள்” என ‘அகரமுதல’ இதழுரை வாயிலாகத் தெரிவித்து இருந்தோம். அதில், “தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் வெற்றி, கழகம் ஆகிய சொற்கள் இடையே ஒற்று மிகுந்து வர வேண்டும். முதல் கோணல் முற்றும் கோணல் ஆகிவிடக்கூடாது. எனவே, தொடக்கத்திலேயே இதனைத் திருத்திப் பயன்படுத்த வேண்டுகிறோம்.  முகவரியைத் தமிழிலேயே குறித்துக் கட்சியினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தோம். தமிழ் ஆர்வலர்கள் பிறரும் இங்ஙனம் குறிப்பிட்டிருந்தனர். கட்சித் தலைவர் விசய் எந்தவகை யான்மையும் (யான் என்னும் அகங்காரம்/ஆணவம்/அகம்பாவம்) இன்றித் தன் கட்சிப் பெயரைக் குறிப்பிடுவதில் திருத்தம் மேற்கொண்டு உரியவாறு ‘க்’ சேர்த்துக் கட்சிப்பெயரைத் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனக் குறிப்பிடத் தொடங்கியுள்ளார்.

(நிரம்ப  அழகிய தேசிகர் என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘சேது புராணம்’ என்னும் நூலில் ‘யான்மை’ இடம் பெற்றுள்ளது. மிகப் பொருத்தமாக நம் முன்னோர் ‘ஈகோ/ego’ என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.)

எண் ஆரூடம் அடிப்படையில் கட்சிப்பெயர் குறிக்கப்பட்டுள்ளதாகச் சிலர் கூறினர். எண் ஆரூட அடிப்படையில் தமிழைச் சிதைக்கக் கூடாது என முடிவெடுத்தமைக்குப் பாராட்டுகள். சிலர், “விசய் தன் பெயரைத் தமிழில் வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார். பெயர்ச்சொல்லடுத்து வல்லினம் மிகாது என்பதால் ஒற்றெழுத்து சேர்க்கப்படவில்லை “ என்றனர்.

அதற்கேற்ப, தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருள் ஒருவரான விக்குனேசுவரன், “பெயர்ச்சொல் அடிப்படையில் ‘க்’ இல்லாமல் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்துப் பல்வேறு குறையாய்வுகள்(விமரிசனங்கள்) எழுந்தன. இதையடுத்து நேர்மையான குறையாய்வுகளை(விமரிசனங்களை) ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து தமிழறிஞர்களுடன் விசய் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்று திருத்தம் செய்யப்பட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு எல்லாம் தெரியும். தெரிந்துதான் வைத்தோம்” அல்லது “ஏதோ அறிவித்து விட்டோம். இனி மாற்ற முடியாது” என்றெல்லாம் வீண் பிடிவாதம் பிடிக்காமல் தவற்றினை உணர்ந்து திருத்தும் நல்ல மனம் பாராட்டிற்குரியது. அதேபோல் முகவரியைத் தமிழில் எழுத வேண்டியிருந்தோம். ஆங்கில முகவரியை நீக்கியமையும் பாராட்டிற்குரியது. ஆனால், தமிழில் குறிப்பிடாமல், தமிழ் ஒலிபெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். மனை எண் 275, கடற்கரை நகர், 6 ஆவது நிழற்சாலை என இனிமேல் குறிப்பிட வேண்டுகிறோம். மக்களுக்குப் புரியாது என்று சொல்லக்கூடாது. புரியாவிட்டாலும் புரிய வைக்க வேண்டிய கடமை இவர்களுக்கு உள்ளது. அயற் சொற்களையே மக்கள் உள்ளத்தில் பதித்துப் பயன்படுத்துகையில் தாய்மொழிச்சொற்களையா புரிந்து கொள்ளாமல் போவர்? 20 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இயலும் என்ற நம்பிக்கை கொண்ட கட்சித் தலைமை, தமிழையே எங்கும் எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் இயலாதா என்ன? எனவே,தமிழ் உணர்வை முழக்கத்திலும உறுதி மொழியிலும் காட்டும் எல்லா இடங்களிலும் தமிழையே பயன்படுத்த வேண்டும்.

“தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்” எனத் தமிழ் மண்ணை அடித்தளமாகக் கொண்டுதான் உறுதி மொழி எடுக்கச் சொல்கின்றனர். இரண்டாவது உறுதி மொழி “மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.” என உள்ளது. இப்பொழுது வீர வணக்க நாள் என்பது வெற்றுச்சடங்காக நிகழ்த்தப்படுகிறது. அவ்வாறில்லாமல் மொழிப்போர் ஈகியரின் இலக்கு நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவதற்கு உறுதி மொழி எடுப்பது போற்றுதற்குரியது. மொழிப்போரில் உயிர் நீத்தவர்களின் குடும்ப வழியினரைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, கல்வி வாய்ப்பு முதலியவற்றை ஏற்படுத்திக் கொடுக்கத் த.வெ.க. பாடுபட வேண்டும். அடுத்த உறுதி மொழி குமுக நீதி(சமூகநீதி)ப்பாதையில் பயணித்துக் கடமை யாற்றுவதைக் குறிப்பிடுகிறது. அதற்கடுத்தது, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவதைக் குறிக்கிறது. திராவிட இயக்கங்கள் சொல்லி வருவதையே சொன்னாலும் இவற்றை வாயளவிலோ எழுத்தளவிலோ சொல்வதாக இல்லாமல் செயலளவில் முடித்துக் காட்ட வேண்டும்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.

(திருவள்ளுவர், திருக்குறள்)

ஆதலின் சொல்லிய வண்ணம் செய்து காட்ட வேண்டும்.

மொழி அளவிலும் இன அளவிலும் திராவிடம் என்று கையாளக் கூடாது. தமிழ்க் குடும்ப மொழி என்றும் தமிழ் எனக் குடும்பம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், தன்மானம், தன்மதிப்பு ஆகியவற்றின் குறியீடாகத் திராவிடம் வழங்குகிறது. என்றபோதும் தமிழகம், தமிழ் மண், தமிழ் மொழி என் தமிழையே முதன்மைப்படுத்துவது வரவேற்கத்தக்கது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து இருந்தாலும் தேர்தல் அறிக்கையாக அல்லது செயற்படுத்தும் இலக்காகப் பின்வருவனவற்றை அறிவிக்க வேண்டும்.

1. தமிழ்நாட்டின் ஆட்சிமொழி, அலுவலக மொழி, தொடர்பு மொழி, கல்விமொழி, இசைமொழி, பண்பாட்டு மொழி, வழிபாட்டு மொழி, அறிவியல் மொழி, வணிக மொழி, முறைமன்ற மொழி, சட்டமொழி என எல்லாத் துறைகளிலும் தமிழே திகழச் செய்வோம்.

2. தமிழர்களின் தேசிய மொழி தமிழே என்பதைப் பாடநூல்களில் இடம் பெறச் செய்வோம்.

3. தமிழ்க்காப்புப்போர், இந்தி எதிர்ப்புப் போர் முதலியவற்றையும் மொழிப்போராளிகள் குறித்தும் பாடநூல்களில் இடம் பெறச் செய்வோம்.

4. தமிழ்நாட்டில் விற்பனையாகும் அனைத்துப் பொருள்களிலும் பெயர், உட்பொருள்கள், எச்சரிக்கை, கெடுநாள் முதலியன தமிழிலேயே இருக்கச் செய்வோம்.

5. தமிழ்நாட்டில் வெளியாகும் திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், இணைத்தளப் படங்கள் முதலிய அனைத்தின் பெயர்கள், அவற்றில் இடம் பெறும் பெயர்கள் பிற விவரங்கள், தமிழிதழ்களில் இடம் பெறும் ஊடகச் செய்திகள் என மக்கள் காட்சிக்கும் கருத்திற்கும் இடம் பெறுவன யாவும் தமிழிலேயே இருக்கச் செய்வோம். 

6. அரசாணைகள், அரசு அறிவிப்புகள், அரசு செய்தியறிக்கைகள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், பட்டியல்கள், காசோலைகள், வரைவோலைகள் என யாவும் தமிழிலேயே இருக்கச் செய்வோம்.

7. இந்தியைத் திணிக்கவில்லை எனக் கூறிக்கொண்டே இந்தியையும் பிற மொழிகளையும் திணிக்கும் போக்கை நிறுத்தச் செய்வோம்.

8. தமிழ்நாட்டிலுள்ள தமிழக அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல், பிற மாநில அரசு அலுவலகங்கள், ஒன்றிய அரசு அலுவலகங்கள், பிற நாட்டு அலுவலகங்கள் என அனைத்தின் அலுவலக மொழியும் தமிழாகவே இருக்கச் செய்வோம்.

9. தமிழ்நாட்டில் பெயர்ப்பலகைகள், விளம்பரப் பலகைகள், அறிவிப்புப் பலகைகள் அனைத்தும் தமிழிலேயே இருக்கச் செய்வோம்.

10. இவற்றுக்கெல்லாம் முன்னோடியாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் யாவரும் தமிழையே முழுமையான பயன்பாட்டு மொழியாகப் பின்பற்றச் செய்வோம்.

11. தமிழ் ஈழ அறிந்தேற்பிற்கு இயன்றதைச் செய்வோம்.

12. உலகெங்கும் தமிழர்கள் வாழும் நிலப்பகுதிகளில் தமிழையும் தமிழரையும் சிறப்புற்றிருக்கச் செய்வோம்.

இவ்வாறு அறிவித்து இவற்றை நன்கு பின்பற்ற வேண்டும்.

“தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு” எனப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் கூறுவதை உறுதியாகப் பின்பற்றித் தமிழையும் தமிழரையும் வாழச் செய்ய வேண்டும்.

இவற்றைக் கட்சித் தலைமையும் கட்சியினரும் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

Sunday, February 18, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 161-165

 




(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 156-160 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 161-165

161. Abridged editionசுருக்கப் பதிப்பு  
புத்தகத்தின் சுருக்கப்பட்ட பதிப்பாகும். இது முழுமையான நூலல்ல. எனினும் படிக்க நேரமில்லாவிட்டாலும் புத்தகத்தைப் படிக்க ஆர்வம்
 உள்ளவர்களுக்குச் சுருக்கப்பட்ட பதிப்பு உதவியாக இருக்கும். கதையோ புதினமோ கட்டுரையோ நாடகமோ நூலின் சுருக்கமாக இருப்பினும் நூலின் அடிப்படைக் கருத்துகள் வெட்டப்படாமலும் நூலோட்டம் சிதையாமலும் இருக்கும். ( அல்லது இருக்க வேண்டும்.)
162. Abridged formசுருங்கிய வடிவம்  
சில சொற்கள், சில தொடர்கள், சில பத்திகளைத் தவிர்த்துச் சுருக்கிச் செறிவாகத் தருவது சுருங்கிய வடிவம் ஆகும்.  
காண்க: Abridged edition
163. abridged reportசுருக்க அறிக்கை  
திட்ட அறிக்கை அல்லது ஆண்டறிக்கை அல்லது முன்னேற்ற அறிக்கை போன்ற அறிக்கைகளின் சுருக்கிய அறிக்கை.
164. Abridgment        சுருக்கம்
அருக்கம்  
Abbreviation என்பது சொல் அல்லது தொடரின் சுருக்கக் குறியீடே. ஆனால் Abridgment என்பது நூல் அல்லது ஆவணத்தின் சுருக்கப்பகுதி. எனவே Abbreviation என்பதைச் சுருக்கம் என்று சொல்லலாகாது ஆனால், சுருக்கக் குறியீடு எனலாம்.
அருகுதல் = குறைதல், சுருங்குதல் முதலான பொருள்கள் உள்ளன. “அருக்கமாய்ப் பெருக்க மாகி” என்கிறது தேவாரம்.(4.32;7)

மூலப்பொருண்மை மாறாமல் ஒன்றன் பகுதிகள் சிலவற்றை – சொற்கள் அல்லது பத்திகளை நீக்கிவிட்டு அதனைச் சுருக்குதல்.
நூலின் சில பகுதிகளை நீக்கிச் சுருக்கிப் பதித்தல் .   எடுத்துக்காட்டாக,  சுருக்கப்பட்ட அகராதி, சுருக்கப்பட்ட நூலின் பதிப்பு .  

முறை மன்றத்தில் உறுதிமொழி அல்லது சாற்றுரையைச் சுருக்குதல். ஆயத்தர் (Jury) மொழிவுரை(verdict)க்குப் பின்னும் தீர்ப்புரைக்கு முன்னும் வாதுரையைச் சுருக்கி அளிக்க இசைவளிக்கப்படுகிறது.   ஆயர்களின் கருத்துரையையும் இறுதியாக நீதிபதி அல்லது நடுவர் அளிக்கும் முடிபுரையையும் தீர்ப்பு என்றே சொல்வது வழக்கமாக உள்ளது. எனினும் இதனால் குழப்பம்தான் நேருகிறது.  எனவே, ஆயத்தார் தங்கள் கருத்தாக மொழிவதை மொழிவுரை எனலாம். நீதிபதி அல்லது நடுவர் அளிப்பது தீர்ப்புரை.   காண்க : Abridged edition
165. Abroadதொலைவில்,
வெளிநாட்டிற்கு,
வெளியே
பரந்த   ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பால் எனப் பொருள்.
எனவே, வெளிநாடு என்றாகிறது. அகன்ற பரப்பையும் குறிக்கும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 6/7 – – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 5/7 – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம்

சென்னை வளர்ச்சிக் கழகம்

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்

முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு

பயன்பாட்டு அடிப்படையில்

கலைச்சொற்கள்

6/7

Act Of Legislature – சட்டமன்றச் செயன்மை

மாநிலங்களின் சட்டப் பேரவைகளால்(சட்டமன்றக்கீழவை, மேலவைகளால்) இயற்றி ஏற்கப்பெறும் செயன்மைகளைக் குறிக்கும்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயன்மை என்பதாகும்.

Act of misconduct – தீய நடத்தை

தனித்தோ பிறருடன் சேர்ந்தோ உயர் அதிகாரியின் சட்டபூர்வமான முறையான ஆணைக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமை அல்லது பணியாமை. முதலாளியின் வணிகம் அல்லது சொத்து தொடர்பில் இரண்டகம், நேர்மையின்மை, நம்பிக்கையின்மை, நாணயமின்மை, திருட்டு, மோசடி யுடன் செயற்படல்.

வெறுப்பு நடத்தை, சேதம், திருட்டு, பாதுகாப்பற்ற நடத்தை, பொதுக்கொள்கை மீறல்கள் ஆகியன முதன்மையான தீய நடத்தைகளாகும்.

சட்டத்தொழிலில், அதில் ஈடுபடுவோரால் வேண்டுமென்றே தவறான நோக்கத்தில் செயற்படல். அஃதாவது, தன்னல நோக்கங்களுக்காகத் தொழில் நெறிகளை மீறும் செயல்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் நடத்தை என்பதாகும்.

Act of parliament – நாடாளுமன்றச் செயன்மை

நாடாளுமன்றச் சட்டங்கள், சட்ட அதிகாரத்தின் சட்டவாக்க அவையால் (மக்களவை, மாநிலங்களைவயால்/ நாடாளுமன்றத்தால்) நிறைவேற்றப்படும் சட்ட வரைவுகளைக் குறிக்கும்.

சில சமயங்களில் முதன்மைச் சட்டம் (primary legislation) என்றும் குறிப்பிடப்படுகின்றன.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயன்மை என்பதாகும்.

Act Of Parties –     தரப்பினரின் செயல்

எந்த ஒரு செயல், நிகழ்ப்பாடு(விவகாரம்), ஒப்பந்தம், வணிகப் பரிமாற்றம் அல்லது சட்ட நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபாடுள்ள அல்லது ஆர்வமுள்ளவர்கள் தரப்பினர் எனப்படுகின்றனர்.

வழக்காடியின் எதிர்நிலையில் உள்ளவரும் தரப்பார் எனப்படுகின்றனர்.

 சிலர் குறிப்பதுபோல் கட்சியினர் என்றால் அரசியல் கட்சியைச் சார்ந்தவர் எனப் பொருள் வரும் . எனவே, அச்சொல்லைப் பயன்படுத்த வேண்டா.

ஒப்பந்தம் அ்ல்லது வணிகப் பரிமாற்றத்தில் ஈடுபடுநர் உடன்படிக்கையின் தரப்பாராகக் கருதப்படுவர். பூசல் அல்லது தகராறு,  வழக்காக மாறும் பொழுது வழக்காடிகள் வழக்கின் தரப்பினர் என அழைக்கப் படுகின்றனர்.

 வழக்கு தொடுக்கப்பட்ட பின்பு கூடுதல் தரப்பினர் சேர்க்கப் படலாம்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் வழக்கு தரப்பினர் பொதுவான சொற்களால் அழைக்கப் படுகின்றனர். உரிமை வழக்கில், வழக்கு தொடுப்பவர் வாதி என்றும் வழக்கிற்கு ஆளாகிறவர் எதிர்வாதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

குற்ற வழக்குகளில் அரசாங்கத் தரப்பு அரசு என்றும் எதிர்த்தரப்பு எதிரர்/எதிர்வாதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

மேல்முறையீடு செய்பவர் மேல் முறையீட்டாளர் என்றும் அதற்கு உள்ளாகிறவர் மேல்முறை யீட்டு எதிரர் எனவும் அழைக்கப் படுகின்றனர்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act of public enemy  – பொது எதிரியின்  செயல்

குமுகாயத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள ஆளின் செயல்.

“பொது எதிரி” என்பது 1930 களில் அமெரிக்காவில் முதன்முதலில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்.

குமுகாயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும், குற்றச் செயல்கள் புரிவோரையும் சட்ட முரண் செயல்களைச் செய்வோரையும் குறிப்பது.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act Of State –    அரசுச் செயல்

கொள்கை அல்லது அரசின் தேவைக்காக இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. எனவே, இறையாண்மை சார் செயல் என்றும் கூறுகின்றனர்.

இறையாண்மை சார் செயல் அல்லது இறைமை நிலைச் செயல் என்பதன் மூலம், ஒரு நாடு தன்னுடைய இறைமை நிலையில் மற்றோர் இறையாண்மை நாட்டுடன் அல்லது அம்மக்களுடன் மேற்கொள்ளும் செயலைக் குறிக்கின்றனர். இச்செயல் அந்நாட்டின் செயலாண்மைப் பணியிலிருந்து – நிருவாகச் செயலிலிருந்து – வேறுபட்டது. இது குறித்து எந்த நீதிமன்றத்திலும் வழக்கிட முடியாது.

அரசுச்செயலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அச்செயலைச் செய்தவர் பொறுப்பாக மாட்டார். சான்றாகப் பொதுநலன் கருதி சாலையை அகலப்படுத்துதல், பாலம் அமைத்தல், போன்ற நலப்பணிகளைப் புரிய நிலத்தைக் கையகப்படுத்தும் அரசின் செயலைப் புரியும் சட்ட முறைமையான அதிகாரி குற்றவாளியாக மாட்டார்.

அஃதாவது, இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்துகையில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய சட்டப்படியான அதிகாரி பொறுப்பாக மாட்டார். ஆனால், உரிய சட்டத்தில் இழப்பீடு குறிக்கப்பட்டிருந்தால் மட்டும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படும்.

அரசின் அனைத்துச் செயல்களையும் குறிப்பிடாமல், சட்டத்தால் உருவாக்கப்பட்ட தனி விலக்குரிமைகள், தடைகள், வழக்காய்வு செய்யலாகாது என நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுறை விளம்புரைகள் ஆகிய சிலவற்றைச் சுட்டும் செய்கை. (சவுராட்டிர அரசு எதிர் ஃகாசி இசுமாயில் 1960 உ.நீ.அ.(SCR) 537).

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act of terrorism – வன் செயல்

பயங்க வாதம் என்கிறோம். வாதம் என்றால் ஒன்றிற்காக வாதிடுவதைத்தான் குறிக்கிறது. வன்முறைப் போக்கிற்காகப் பேசுவதுடன் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதையும் குறிக்கிறது. எனவே, வன்முறைச் செயல் > வன் செயல் என்றே சொல்லலாம்.

இதனைத் தன்னாட்டு வன்முறை என்றும் பன்னாட்டு வன்முறை என்றும் கூறலாம்.

தன்னாட்டு வன்முறை அல்லது உள்நாட்டு வன்முறை என்பது அரசியல், சமயம், குமுகம், இனம் அல்லது சுற்றுச்சூழல் இயல்பு போன்ற உள்நாட்டுத் தாக்கங்களிலிருந்து மேலும் கருத்தியல் இலக்குகளுக்காக தனியர்கள்,  குழுக்களால் செய்யப்படும் வன்முறை, குற்றச் செயல்கள்.

பன்னாட்டு வன்முறை என்பது வெளிநாட்டு வன்முறைக் குழுக்களால் அல்லது வன்செயல் ஆதரவு நாடுகளால், ஈர்க்கப்பட்ட அல்லது அவற்றுடன் தொடர்புடைய தனியர் அலலது குழுக்களால் மேற்கொள்ளப்படும் வன்செயல்கள்; பிற நாட்டு வன்முறைக் குழுக்களுடன் தொடர்புடையவர்களின் வன் செயல்கள்.

வன்செயல்களுக்கான திட்டமிடல், பரப்புரையும் குண்டு வெடிப்பு, கொலை, கொள்ளை, தொடரிகளைக் கவிழ்த்தல் போன்ற வன்முறைகளை விளைவிப்பதால் வன் செயலே.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)

Followers

Blog Archive