Wednesday, March 30, 2016

தமிழில்லா அறமன்றம் யாருக்காக? – இலக்குவனார் திருவள்ளுவன்தலைப்பு-தமிழில்லா அறமன்றம்-இதழுரை : thalaippu_thamizhillaa_aramandram_ithazhurai

தமிழில்லா அறமன்றம் யாருக்காக?  

நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படலாமா?

  தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான நீதிமன்றங்களின் செயல்பாடுகள் தமிழில் அமைவதுதானே உண்மையான அறமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவர், எதிர்த்தரப்பார், இரு தரப்பினரின் சான்றுரைஞர்கள் எனனத் தொடர்புடையவர்கள் தங்கள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, பிற செய்திகளைப்பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ள  அவர்களுக்குப் புரியும்படித் தமிழில் அமைவதுதானே மு‌றையாகும். ஆனால், இதற்கு மாறான நிலை நம்நாட்டில் நிலவுகின்றதே!
 தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடுமொழியாக இருக்க வேண்டும் என இந்திய அரசியல்யாப்பின்படிதான் நாம் வேண்டுகிறோம். இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு  348(2) இன்படி,  ஒரு மாநிலத்தின் ஆளுநர்,  குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்று, இந்தி அல்லது பிற எந்த மொழியையும் உயர்நீதி மன்ற மொழியாக  அறிவிக்கலாம்.
  இது மட்டுமல்ல, வெவ்வேறு காலக்கட்டங்களிலும் இதே போல் மாநில மக்கள் மொழிகளில் உயர்நீதிமன்றம் அமையவேண்டியது குறித்துத் தொடர்பான குழுக்கள் கருத்து தெரிவித்துள்ளன. எனவே, தமிழ்நாட்டு நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றம் முதலான அனைத்து நிலையிலும் மக்கள் மொழியிலான தமிழ் மொழியில் தான் நடைபெற வேண்டும் என்பது நம் அடிப்படை உரிமையாகும். 
  ஆனால், நம் எண்ணம்  ஈடேறவில்லை. தமிழக அரசு இதற்கான முயற்சி எடுத்தும் பயன்கிட்டவில்லை. உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டு உயர்நீதிமன்ற வழக்குமொழியாகத் தமிழை ஏற்கவில்லை என்ற கருத்தை மத்திய அரசு தெரிவித்த பொழுது   முதலமைச்சர் செயலலிதா தன் சார்பிலான உரையை அமைச்சர்  முனுசாமி மூலம் வாசிக்கச்செய்த  முதல்வர்  முதலமைச்சர்கள் -தலைமை நீதிபதிகள்  மாநாட்டுஉரையிலும்(2013) முதல்வர் பன்னீர்செல்வம் தில்லியில் நேரடியாக ஆற்றிய  இதுபோன்ற   மாநாட்டு உரையிலும்(2014) உயர்நீதிமன்றத்தில்  தமிழே வழக்குமொழியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் இதற்காகப் போராடுபவர்களைத் தங்கள் கருத்திற்கு வலிவூட்டப் போராடுகிறார்கள் என எண்ணாமல் ஆளும்கட்சிக்கு எதிரான போராட்டமாகப் பேராயக் கட்சியாகிய காங்கிரசுபோல எண்ணி ஒடுக்குவது முறையற்றது.
  தமிழஅரசின் கருத்து குடியரசுத்தலைவர் பரிந்துரைக்காகச் சென்ற பொழுது அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மண்ணின் மகன் என்பதையும மறந்து தமிழ்நாடு  உயர்நீதிமன்றத்தலைமை நீதிபதியின் கருத்தைக்கேட்டார்; அவரோ இப்போது ஏற்ற சமயமில்லை எனத்  தெரிவித்தமையால், பரிந்துரைக்கவில்லை.  தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழக மக்களின் உணர்விற்கு எதிரான கருத்து தெரிவித்த தலைமைநீதிபதியையும் நாம் தூக்கி எறியவில்லை. தாய்மொழிக்கு எதிராகமுடிவெடுத்த அப்துல்கலாமிற்கு எதிராகவும் குரல் கொடுக்கவில்லை.
  மா.இலெ. பொ.க. – மக்கள் விடுதலை,  தமிழ்த்தேச மக்கள் கட்சி,  த.ஒ.வி.இயக்கம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு, தமிழ்நாடு வண்ணார் பேரவை, தியாகி இமானுவேல் பேரவை, பு.இ.மு, பு.மா.மு, தமிழர் தேசிய முன்னணி, தி.வி.க, த.பெ.தி.க, ஆதித் தமிழர் பேரவை, சாதி ஒழிப்பு முன்னணி, த.மு.ம.க, நாணல், அம்பேத்கர் தேசிய இயக்கம், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம், சித்திரை வீதி தானி ஓட்டுநர் சங்கம், ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி  முதலான மிகப்பல அமைப்புகள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வழக்குரைஞர்கள், தமிழமைப்பினர் எனப் பல தரப்பாரும் உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி வேண்டிப் போராடி வருகின்றனர். ஆனால், எல்லாப்போராட்டங்களிலும் தமிழன்னைக்கு நீதி வேண்டுவோர்  காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு உள்ளாகின்றனர்.
  இவற்றுள் குறிப்பிடத்தக்கவையாக இரண்டினைக் குறிப்பிடலாம். கடந்த  ஆண்டு(14.9.2015)  தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேணடி,  வழக்குரைஞர் பகத்சிங்கு தலைமையில் பல்வேறு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வாயில் கருப்புத் துணியைக் கட்டி அறவழியில் வலியுறுத்தினர். அவர்கள் அனைவரும் சிறைப்படுத்தப்பட்டனர். தமிழ்வழக்காடு உரிமைக்காகவும் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செயய்  வேண்டியும், 16.9.2015 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை  வழக்குரைஞர்மன்றதத் தலைவர் பீட்டர்  இரமேசுகுமார் தலைமையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன.  இதற்காக பீட்டர்  இரமேசுகுமார்மீது நீதிமன்றம் வழக்கு தொடுத்தது; இதில், அவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனையும் தண்டத்தொகையும்(அபராதமும்) இப்போது விதிக்கப்பட்டுள்ளன.
  தமிழில் உயர்நீதிமன்ற வழக்குகள் நடை பெற வேண்டும் என்ற கருத்துடைய தமிழக அரசு,  இதற்காகப்போராடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுப்பது ஏனென்றுதான் தெரியவில்லை. அரசின் கருத்தையே எதிரொலிக்கும் அமைப்புகள்,  வழக்கறிஞர்கள் முதலானோர் தததம் கருத்தை  வெளிப்படுத்த அமைதியான சூழலை ஏற்படுத்தித்தரலாமே! மாறாக, அவர்களை அடக்கித் துன்புறுத்துவது ஏன்?
எனவே, தமிழக அரசு
  1. தமிழுக்கு நீதி வேண்டிப் போராடுவோர் மீது உள்ள வழக்குகளைத்திரும்பப் பெறவேண்டும்.
  2. தொடர்பான வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்து அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
  3. கீழமைவு நீதிமன்றங்கள்அனைத்திலும் தமிழ் முழுமையான நீதிமன்ற மொழியாக நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  4. சட்டத்திற்குப்புறம்பாக ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்க விதிவிலக்கு அளித்த உயர்நீதிமன்றச் சுற்றறிக்கையைத் திரும்பப்பெற்று அவ்வாறு சுற்றறிக்கை அனுப்பிய நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  5. மேற்கோளாகக் காட்ட ஆங்கிலத்தீர்ப்புகளும் ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களுமே கருதிப் பார்க்கப்படவேண்டும் என்பதை மாற்றி, இவற்றின் மூலமொழிப்பதிவுகளே செல்லத்தக்கன என அறிவிக்க வேண்டும். இதன்படி மொழிபெயர்ப்புப்பிழையால் தவறான குறிப்பு இடம் பெறுவதைத் தடுக்கும் வகையில், ஆங்கிலத்தில் வெளியான சட்டங்கள் அ்ல்லது தீர்ப்புகள் எனில், அவையும் தமிழில் வெளிவந்தன எனில் தமிழ்ப்படிகளுமே செலலத்தக்கன என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பதன் மூலம், தமிழிலேயே வெளியிடப்படும் சட்டங்களும் தீர்ப்புகளும் சட்ட ஏற்பிற்கு உள்ளாகும்.
  6. முன்பு தீர்ப்புத்திரட்டு வந்ததுபோல், ஆங்கிலத்தில் உள் ள தீர்ப்புகள் தமிழில் வரவும் தமிழில் இல்லாச் சட்டங்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும் தமிழில் மிகுதியான சட்ட நூல்கள் வெளிவரவும் சட்டக்கலைச்சொற்களஞ்சியம் வெளிவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  1. இவற்றின் அடிப்படையில், தமிழ் அறிந்தவர்மட்டுமே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக அமர்த்தப்படவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
  1. உடனடியாக உயர்நீதிமன்ற வழக்குமொழியாகத்தமிழை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிக்காவிட்டால், மத்திய அரசுடன் தமிழக அரசு ஒத்துழையாமைப்போக்கைப் பின்பற்றும் எனவும் தெரிவிக்க வேண்டும்.
  இத்தகைய வேண்டுகோள்கள் மொழி வளர்ச்சிக்காக அல்ல! நம்   சட்டபூர்வமான குறைகளைக் களையவும் விரைவில் நீதிபெறவும் நமக்குள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவுமே!
அறத்தலைவர் செயத்தக்க அறமிந்நாள் தமிழ்காத்தல் அன்றோ? (பாவேந்தர் பாரதிதாசன்)
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (திருவள்ளுவர், திருக்குறள் 671)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 122, மாசி 16, 2047 / பிப்.28, 2016
Akaramuthala-Logo

Tuesday, March 29, 2016

பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு
பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள

தலைப்பு-ம.ந.கூட்டணி விரிவு : thalaippu_ma.na.kuuttani_ithazhurai_thiru

ம.ந.கூட்டணி விரிவு

   விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்ற ஒவ்வொரு கட்சியும் அவர் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்ததும்   அவரையும்  வைகோவையும் தாழ்த்தியும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
  அப்படியானால்  இவர்கள் ஏன்,  விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்கப் பலவாறாக முயன்றனர். விசயகாந்துடன் இணைந்ததால் ம.ந.கூட்டணியைத் தாழ்வாகக் கூறுகின்றனரே, அப்படியானால், தங்களைவிட இக்கூட்டணி உயர்வானது, அத்தகைய உயர்வான கூட்டணி ஏன் விசயகாந்துடன் இணைந்தது என்கின்றனரா?  தேர்தலில் கூட்டணி என்பது வெற்றிக்கான தொகுதி உடன்பாடேயன்றிக் கொள்கைக் கூட்டணியன்று. எனவே, வேறுவகையில் கூறுவதற்கு  ஒன்றுமில்லை.
 விசயகாந்து எந்தக்கூட்டணியில் இணைந்தாலும் தவறெனக் கூறும் எண்ணமுடையோர் இப்பொழுதும் பழிதூற்றுகின்றனர். அவர்களைப் பொருட்படுத்த வேண்டா. ஆனால், தங்களுடன் இணையவில்லை என்பதற்காகப்   புதிய கூட்டணியைத் தரம் தாழ்த்திக் கூறுவது சரியல்ல.
  விசயகாந்தின் இந்தமுடிவு அவர் தெளிவாகத்தான் உள்ளார் என்பதைக் காட்டுகின்றது. அவரது ஒற்றைவரி இலக்கு என்பது, தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும்என்பதுதான்.
  அதிமுக, திமுகவில்  இதற்கான வாய்ப்பிலலை. பா.ச.க.வில் சேருவதால் பணமும் அதிகாரச்சுவையும் கிடைக்கலாம். ஆனால், வெற்றியைச் சுவைக்க முடியாது. மேலும்  நாடாளுமன்றத்தேர்தல் முடிந்தபின் எந்த அளவிற்கு  அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவிற்குப் பா.ச.க. அவமானப்படுத்திய பின்னரும் தன்மான உணர்வின்றி அதனுடன்இணைவது மானக்கேடே! தன்மான உணர்வுடன் பா.ச.கவைப் புறந்தள்ளியது பாராட்டிற்குரியதே!
  பா.ம.க.வில் முதல்வர் வேட்பாளர் அன்புமணி இருக்கையில் அங்கும் இணைய முடியாது.
  எனவே, தன் ஒற்றைவரி இலக்கிற்கு இணங்கிய ம.ந.கூட்டணியில் இணைந்துவிட்டார். எனவே, பணம், பிற அதிகார வாய்ப்பைப் புறந்தள்ளி  இந்த முடிவை எடுத்துள்ளார் எனலாம்.
  மக்கள்நலக்கூட்டணிக்குத் தங்கள் இருப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இலக்கு. ஆளும்கட்சியாக  வரவாய்ப்பில்லாவிட்டாலும் கணிசமான வாக்குவங்கி உள்ள கூட்டணி என்ற நிலையை உருவாக்கி அடுத்த தேர்தலில் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும். ஆட்சி மாற வேண்டும்;அதே நேரம் ஆட்சி தி.மு.க.கைக்கு மாறக்கூடாது. என்னதான் பரப்புரை மேற்கொண்டாலும் முதன்மைக்கட்சிகளாக அதிமுகவும் திமுகவும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.  எனவே, வாக்குவங்கி உள்ள தே.தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலைச்சந்திப்பது அவர்களின் நோக்கம் நிறைவேறத் துணை புரியும். எனவே விசயகாந்துடன் இணைந்தது தவறில்லை.
  இதில் வைகோதான் பெரிதும் பாராட்டிற்குரியவர். ம.ந.கூட்டணி வென்றால்  முதல்வராகும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அல்லது சுழற்சிமுறையில் முதலில் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே, அதுபற்றிக் கவலைப்படாமல், கூட்டணி வாகை சூடவேண்டும் என்பதற்காக, இதுவரை முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் இல்லை என்று சொல்லி வந்தாலும், கொள்கை, செயல்திறம், அரசியல்தலைவர்கள்  தொடர்பு, பொதுவாழ்க்கை,  சிறைவாழ்க்கை,  எனப் பலவகைகளிலும் விசயகாந்தைவிட மேலான நிலையில் இருந்தாலும், விசயாந்தை முதல்வராக   ஏற்பதாக அறிவித்துள்ளார். பிறர் எள்ளி நகையாடினாலும் உண்மையில் இது பாராட்டத்தக்கது.  இருவரும் இணைந்தால் தெலுங்கர்கள் இணைந்ததாகப் பரப்புரை மேற்கொள்வர் என்பதை அறிந்தும்,  கூட்டணியின் பொது இலக்கிற்காக அவர் இறங்கிவந்துள்ளார்.  இதனால் அவரையும்  ம.ந.கூட்டணியிலுள்ள பிற தலைவர்களையும்  விசயகாந்து அணியினர், குறிப்பாகத் தே.தி.மு.க. முன்னணித் தலைவர்கள் எப்பொழுதும் மதிக்க வேண்டும்.
  ஆனால், இந்த இணைப்பு  கண்டு நடுக்குறுவோர், முன்னிலும் உரத்த குரலில் ம.ந.கூட்டணி அதிமுகவின் ‘ஆ’ அணி என்கின்றனர்.  பொதுவாகப் பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்னை முன்னேறவிடாமல் தடுக்க, அவரது ஒழுக்கத்தைப்பற்றிக் கதைகட்டுவது வழக்கம். அதுபோல்தான் இதுவும். மக்கள் திலகம் எம்ஞ்சியார் தி.மு.க.வை உடைத்ததில்  பேராயக்கட்சியான காங்.கின் பங்கு இருந்தது என்பது பலரது நம்பிக்கை. இதனால், தி.மு.க.அவரது கட்சியை ஒட்டுக்காங்கிரசு என்றே கூறிவந்தது. காங்.கின்ஒட்டாக இருந்திருப்பினும் அதனையும் முறியடித்துத்தான் வெற்றி வாகை சூடிப்புரட்சித்தலைவரானார் எம்ஞ்சியார். என்.டி.ஆர். கட்சி தொடங்கியபோதும் முரசொலியில் ஒட்டுக் காங்கிரசு  என்றே அதனைக் குறிப்பிட்டனர். அவரும் தனித்தன்மையைக் காட்டும் வண்ணம் வெற்றி  வாகை சூடினர். எனவே, ஒரு வேளை மக்கள் நலக்கூட்டணி அ.இ.அ.தி.மு.க.வின் துணை யணியாக இருந்தாலும் அதனையும் வெல்லும் வாய்ப்பு உள்ளது. அஇ.அதிமுகவின்  எதிர்வாக்குகள்மட்டுமல்ல, தி.முக.வின் எதிர்வாக்குகளையும் இக்கூட்டணி பெறும். எனவே, அஇஅதிமுகவின் சார்பு வாக்குகளையும் பிரிக்கும் எனலாம். மேலும், அஇஅதிமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்று மட்டும் எண்ணுபவர்கள்தான் எதிர்வாக்கு சிதறுகிறதே எனக் கவலைப்படுவதுபோல் சொல்லித் தாங்கள்  பெறும் வாக்குகள் குறைவதுபற்றிக்கவலைப்படுவர். ஆனால், அஇஅதிமுக தோற்கடிக்கப்படவேண்டும்; அதே நேரத்தில் அஇஅதிமுகவும் திமுகவும் மாறிமாறி ஆட்சிக்கு வரக்கூடாது என எண்ணுபவர்கள், திமுகவும் தோற்கடிக்கப்பட வேண்டும் என விரும்புபவர்கள் இவ்வாறு கூறமாட்டார்கள்.
 அஇஅதிமுகவிற்கு எதிரான வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்கிறது தி.மு.க. அப்படியானால் தான்தனித்துப் போட்டியிடும்  வலிமையுடன்  இல்லை  என்பதை ஒத்துக் கொள்கிறதா?
  நாம்தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது என்றால்  பெறக்கூடிய வாக்குகளெல்லாம் அதற்கு நம்பிக்கை தருவனவே! அதன் வலிமையை மதிப்பிட உதவுவனவே! ஆகவே, வெற்றிபற்றிய கவலை இல்லை அதற்கு! ஆனால், பா.ம.க.தனித்துப்போட்டியிடுகின்றதே! அந்தத்தன்னம்பிக்கை ஏன் தி.மு.க.விற்கு இல்லை. கடந்த ஆட்சிகளில் செய்த  தவறுகளுக்குத் தாலின் மன்னிப்பு கேட்டது, கனிமொழி மூலம் மதுவிலக்குப்பரப்புரையை மேற்கொள்வது போன்றவற்றால், தி.மு.க.விற்கு வாக்களிக்க முன்வந்தவர்கள்கூட அது கொலைகாரக் காங்கிரசுடன் இணைந்ததால், தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். இருப்பினும் காங்கிரசின் துணை அணியாகத் தி.மு.க.நடந்து கொண்டு வெற்றி வாய்ப்பை இழப்பது ஏன்? பிற கட்சிகள் பிரிக்கும் வாக்குகள் இழப்பை ஏற்படுத்தும் என்பதுதானே!  எனவே, ம.ந.கூட்டணி  – தே.தி.மு.க. உடன்பாடு அதற்குப் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துள்ளது. எனவேதான், தவறான பரப்புரைமேற்கொள்கிறது.
  தனித்து நிற்பதாக வீரம்பேசும் அஇஅதிமுக, சரத்துகுமார், மட்டந்தட்டிப் பேசியபின்னும் அழைத்துத் தன்அணியில் சேர்த்துக் கொண்டது எனில்,  ம.ந.கூட்டணி – தே.தி.மு.க. உடன்பாடு அதற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுதானே! ஒருவேளை சரத்துகுமாரும் அக்கூட்டணியில் இணைந்துவிட்டால் என்னாவது என்ற விழிப்புணர்வும்தானே!
 எனவே ஒட்டுக்காங்கிரசு எனக் கூறப்பட்ட  கட்சிகள் வெற்றி பெற்றமைபோல், அஇஅதிமுகவின் துணையணியாகக் கூறப்படும் மக்கள்நலக்கூட்டணி – தே.தி.மு.க. அணியும்  கடுமையாகப்பரப்புரை மேற்கொண்டால் வெற்றிக்கொடி நாட்டலாம்.  மக்கள்நலக்கூட்டணியினர், தங்கள் கருத்து வேற்றுமைகளைப் பொதுவிடங்களில் கூறாமை, தமிழர்நலன் கருதி ஒத்துப்போதல், ஊழல்களை எந்தெந்த வகைககளில் குறைக்கலாம் என முன்கூட்டியே திட்டமிடல்,  தமிழ்ஈழம் நலனுக்கான கடமையை மறவாமை எனத் தங்களைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிற கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள மக்கள்நலக்கூட்டணி விரிவு,
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (திருக்குறள்:642)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறும் தமிழ்நெறியைப் பின்பற்றி நாவடக்கத்துடனும் ஒற்றுமையுடனும் உழைத்தால் வெற்றிக்கனியைப் பறிக்கலாம்.
நல்லாட்சி தரும் மாற்றாட்சி அமையட்டும்!  நற்றமிழ் நானிலமெங்கும் ஆட்சி செய்ய வழி வகுக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 126,  பங்குனி 14, 2047 / மார்ச்சு 27, 2016
Akaramuthala-Logo

Monday, March 28, 2016

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைப்பு-இதழுரை -திராவிடக்கட்சிகள் :thalaippu_dravidakatchikal_thiru_ithazhurai

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா!

 தேர்தல் அரசியலுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்போக்கு வரலாற்றை மறைப்பதாகும்.
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் (திருக்குறள் 504)
எனத்   தெய்வப்புவலர் திருவள்ளுவர் நமக்கு வழிகாட்டியுள்ளார்.
  எதிர்க்கும் கட்சிகளின் நிறைகளைக் கூறுவதற்கு மனம் வராதுதான். அதற்காக ஆற்றிய யாவும் தீமை என்பதுபோல் பேசக்கூடாதல்லவா? குறைந்தது குறைகளைப் பட்டியலிட்டு இத்தகைய குறைகளுக்காக இவற்றை ஆட்சிக்கு மீண்டும் வரச்செய்யக்கூடாது என்று சொல்லாம் அல்லவா?
  1967 முதல் என்று காலவரையைக்கூறுகிறார்களே, அப்படியானால்  பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியையும் வைகோ குறைகூறுகிறாரா? இவர்  தி.மு.க.வில் இருந்த காலத்தையும் குறை கூறுகிறாரா? அப்படியானால் அப்பொழுதே ஏன் எதிர்க்க வில்லை என வினா எழாதா? பொதுவுடைமைக் கட்சிகள் இக்கட்சிகளுடன்தானே கூட்டணி வைத்திருந்தனர். அப்படியானால், தோழமைக் கட்சிகளாக இருக்கும் பொழுது ஏன் தட்டிக் கேட்கவில்லை?
  தமிழ்நாட்டில் இருந்து ஒழித்துக்கட்டப்பட்ட ஊழலின் தோற்றுவாயான  பேராயக்கட்சியாகன காங்கிரசும்தமிழகத்தில் வேரூன்ற இயலாமல் தவிக்கும் மதவெறி பிடித்த  பா.ச.க.வும் அவ்வப்பொழுது் இக்கட்சிகளின்மேல் ஏறி உலா வந்ததை மறந்துவிட்டு நல்லவர் வேடமிட்டு இவ்வாறு கூறுவதுதான் வேடிக்கை. பேராயக்கட்சியான காங்கிரசு இப்பொழுது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதால் தி.மு.க.வைத் தாக்காமல் இருக்கலாம். ஆனால், கூட்டணி இல்லாதபொழுது இப்படித்தான் பேசி வந்தது. இப்பொழுது ஒருவேளை கூட்டணி முறிவு ஏற்பட்டால் இப்படித்தான் பேசும். ஆனால் தமிழினப் பகை உணர்வில் ஊறியுள்ள இவ்விருகட்சிகளுக்கும் தமிழகக் கட்சிகளைப்பற்றிக் கூறுவதற்கு எவ்வுரிமையும் இல்லை.
  நாமும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மீண்டும் அரியணை ஏற்கும் வாய்ப்பை மக்கள் அளிக்க வேண்டா என்றுதான் கூறுகின்றோம்.அதே நேரம், இவ்விரு கட்சிகளும் ஆற்றிய மறுமலர்ச்சிப் பணிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும் மக்களுக்கு ஆற்றிய பிற பணிகளையும் மதிக்கிறோம். இருப்பினும் எதிர்ப்பது எதற்கு  எனலாம்.
  அதிமுக. தலைவியும் இன்றைய முதல்வருமான  புரட்சித்தலைவி செயலலிதா அடிமைத்தனத்தை வளர்க்கும் பண்பாடற்ற செயலினை ஊக்கப்படுத்திவருகிறார். தனக்கு இணையாகக் கருத வேண்டிய அமைச்சர் பெருமக்களையே  தன்னைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும் நெடுஞ்சாண்கிடையாக விழச் செய்வதில் பெருமகிழ்வு கொள்கிறார்.  எல்லார்க்கும் பணிதல் என்பது நன்றே. ஆனால், இது பணிவன்று; தலைகுனிவு; வரலாறு பழிக்கும் இழிவான செயல். 
 தெய்வப்புலவர் திருவள்ளுவர் வரையறுக்கும் செவி கைப்பச் சொற் பொறுக்கும் பண்பு (திருக்குறள் 389) இருப்பின், எண்ணிலடங்கா அவதூறு வழக்குகள் பெருகுமா?
தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா விடும்பை தரும். (திருக்குறள் 510)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வகுக்கும் தமிழ்நெறியை  உணராமல், துணிவு என்னும் போலிப்பெயரில் தடாலடி மாற்றங்களை நிகழ்த்துவாரா?   ஆராய்ந்து பொறுப்பை வழங்க வேண்டும். வழங்கியபின் அதற்குரியவராக ஆக்கு வேண்டும் என்னும் தமிழ்நெறியை அறியாத செயல் பெருமைக்குரியதல்லவே! இத்தகைய செயல்கள் கட்சியில் வேண்டுமானால், வீரமங்கை என்னும் பெயரைப் பெற்றுத்தரலாம்! ஆனால்,  ஆய்ந்தாய்ந்து கொள்ளாக் கேண்மையாகத்தான் மக்கள் கருதுவார்கள். நிலையிலாப்பண்புடையாரிடம் நிலையான ஆட்சியை வழங்குவது அழகல்லவே!
  தமிழ் ஈழம்பற்றி ஆதரவாளர்கள்போல் பேசும் இரு கட்சித்தலைவர்களுமே ஒரு தலைமுறைக்கும் மேலாக ஈழத்தமிழர்களைத் தமிழ்நாட்டில் தன்னுரிமையுடன் தலைநிமிர்ந்து உலாவரத் தடைசெய்து, கொத்தடிமைளினும் இழிவாக நடத்தப்படும்  கீழ்நிலைக்குப் பொறுப்பானவர்கள். மனித நேய அடிப்படையில் இதற்குத் தண்டனையாகவாவது இவர்களுக்கு ஆட்சி வாய்ப்பு மறுக்கப்படவேண்டும்.  இதற்கு முன்பும் மாறி மாறி மறுக்கப்பட்டனவே என்றால்,  “என்னை விட்டால் நீ, உன்னை விட்டால் நான்” என இருவரும் எண்ணி வந்தமையால், இது குறித்த மறுசிந்தனைக்கு ஆட்படவில்லை. இரவு பகல் பாராமல் பணியாற்றும் காவல்துறையினரின் நற்பணிகள் வெளியே வரா வண்ணம் காவல் துறை அடக்குமுறையால் ஈழத்தமிழர்கள் மட்டுமல்லர்,  போராடும் நாட்டுத்தமிழர்களும் உள்ளாகும் இன்னல்கள் சொல்லிமாளா.
  ஊழலைக்காரணம்காட்டியும் இரு கட்சிகளையும் எதிர்க்கின்றனர். இதற்கான தகுதி எக்கட்சிக்கும் இல்லை. மக்கள் ஏதேனும் ஒருவகையில் ஊழலுக்கு வாய்ப்பளிப்பவர்களாக இருப்பதால் இது குறித்துக் கவலைப்படவில்லை. ஊழலற்ற ஆட்சிதான் நமக்குத் தேவை. என்றாலும் இந்தியாவெங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அவ்வாறிருக்க இவ்விரு கட்சிகளைமட்டும் குறை கூறிப் பயனில்லை. ஊழல் வழக்குகளில் இறுதித்தண்டனை வழங்கப்படாச் சூழலில் அவ்வழக்குகளின் அடிப்படையிலும் ஒன்றும் கூற இயலவில்லை. எனினும் அனைவர்க்கும் கட்டணமில்லாக்கல்வியை வழங்கி, அனைவருக்குமான வேலைவாய்ப்பை வழங்கி, மக்களிடையே சமநிலையை ஏற்படுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அடுத்து அமையக்கூடிய ஆட்சியேனும் இதற்காக முயலட்டும்!
  தமிழின உணர்வு பரவலுக்குக் காரணமான தி.மு.க. அதன் தலைமையின் – தலைமை என்றுகூடச் சொல்ல வேண்டா – தலைவர் கருணாநிதியின் முறையற்ற செயல்களால் காங்.கின் இனப்படுகொலை  நிகழ்ந்தேறியது. ஈழத்தில் படுகொலை  நடப்பதற்குக் காரணமாக இருக்கும் காங்.கின்  துணையை வெட்கமின்றி நாடுகின்றார் அவர். அப்படியானால், தன் குடும்ப ஆட்சிதான், தான் ஊட்டி வளர்த்த இன உணர்வினும் மேலானது என எண்ணுகிறார். எனவேதான் தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிறோம்.  அதே நேரம், கலைஞர் கருணாநிதியின் கடந்தகால தொண்டுகளைப் புறந்தள்ளிப் பொதுவாக அவரைப் பழிக்கக்கூடாது.
  எனவே, குறைகூறுவோர் இன்னின்ன காரணங்களால் இக்கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடா எனத் தெளிவாகக்கூற வேண்டும். அவ்வாறு கூறுவதால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய தவறுகளைச் செய்யக்கூடாது என்ற தெளிவும் ஏற்படும்.
  மாற்றுக்கட்சி அல்லது மாற்றுக்கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழல் நிகழாதா என எண்ணலாம். அவ்வாறு மாற்றுஆட்சி அமையும் பொழுது கண்கொத்திப்பாம்பாக இருந்து தி.மு.க.வினரும் அ.இ.அ.தி.மு.க.வினரும் ஊழல் நடைபெறாவண்ணம் தடுப்பர்.
  எனவே,  தமிழ்மொழி, தமிழ்இன நலம் நாடும்  நேர்மையான செம்மையான மாற்று ஆட்சி அமைவதை வரவேற்கும் அதே நேரத்தில் தேர்தல் பரப்புரையில் ஆண்ட, ஆளும் கட்சிகளைப் பொதுவாக எல்லாமே குறு்றச் செயல்தான் என்பதுபோல் பேசவோ எழுதவோ வேண்டா என்றும் வேண்டுகின்றோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 125,  பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016
Akaramuthala-Logo

Followers

Blog Archive