Thursday, October 31, 2019

இருப்பதைக் காப்போம்! இழந்ததை மீட்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


நவம்பர் 1 : இருப்பதைக் காப்போம்! இழந்ததை மீட்போம்!

 இந்தியாவில்  1947இல் கட்டுண்டோம்! 1953இலும் 1956இலும் மொழிவாரி மாநிலமாக வெட்டுண்டோம்! இதுவே தமிழ் நாடு மாநிலத்தின் வரலாறு.
மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி(1956)யும் இதில் மேற்கொண்ட திருத்தத்தின்படியும் ஃபசல் அலி(Fazal Ali) தலைமையில், இருதயநாத்து குஞ்சூரு(H. N. Kunzru) கா.மா.பணிக்கர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி மாநிலங்கள் மறுசீரமைப்பு நிகழ்ந்தது. இதனால் 6 ஒன்றியப் பகுதிகள் உருவாக்கப்பட்டன. சம்மு-காசுமீர், உத்தரப்பிரதேசம், ஒரிசா மாநில எல்லைகளில் எந்த மாற்றமும் இல்லை. பிற 11 மாநிலங்களில் நீக்கம், சேர்க்கை இருந்தன. ஆனால், சென்னை மாகாணமாக இருந்து, சென்னை மாநிலமாக மாற்றப்பட்ட தமிழ்நாட்டிற்குத்தான் பெரும் இழப்பு. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த நில உரிமைகளை இந்திய ஆட்சி பறித்து விட்டது.
ஆங்கில ஆட்சிக் காலத்தில் இருந்தே இந்திய நிலப்பகுதி அவ்வப்பொழுது மொழி வாரி மாநிலங்களாக அமைக்கப்பட்டு வந்தன.
இதன் தொடர்ச்சியாகச் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவைப் பிரிக்க வேண்டும் என 19.10.1952 இல் காலவரையறை அற்ற உண்ணாநோன்பு இருந்து பொட்டி சிரீராமுலு 15.12.1952 இல் மறைந்தார். இதனால், வன்முறை வெடித்தது. இதன் காரணமாக அப்போதைய தலைமையமைச்சர் சவகர்லால் நேரு 1.10.1953 இல் ஆந்திர மாநிலத்தைத் தனி மாநிலமாகப் பிரித்தார். அப்பொழுதே தமிழக வட எல்லையைப் பறிகொடுத்தோம்.
வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம் என மூவாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொல்காப்பியத்தில் குறிக்கப்பெற்றுள்ளது.
விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும் (மாமூலனார், அகநானூறு,  61/13)
ஒலி வெள் அருவி வேங்கட நாடன்  (நன்னாகனார், புறநானூறு, 381/22)
இவ்வாறு அகநானூற்றில் 10 பாடல்களிலும் புறநானூற்றில் 4 பாடல்களிலும் வேங்கடம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. தொன்றுதொட்டே தமிழ் மண்ணாக இருந்த தமிழ்மலை வேங்கடம் – திருப்பதி – தமிழர் உரிமையிலிருந்து பறிக்கப்பட்டு ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டது.
வடாற்காடு மாவட்டத்தின் பெரும்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்ட பகுதிகளில்தான் மிகுதியான எண்ணிக்கையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன; தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன.
பாலாறு உரிமை, கண்டலேறு நீர் உரிமை ஆகியன மறுக்கப்பட்டதுடன் குப்பம் – நகரி வாழ் தமிழர் உரிமைகளும் மறுக்கப்பட்டன.
1.11.1956 இல் தென்னக மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுக் கேரளம், கருநாடகம் பிரிக்கப்பட்டபொழுதும் ஆந்திராவிலும் ஐதாராபாத்து முதலான பகுதிகள் சேர்க்கப்பட்டன. எல்லைச் சீரமைப்பு என்ற ஏமாற்றம் தந்த நடவடிக்கையால் நாம் இழந்த முதன்மைப் பகுதிகள் வருமாறு:
ஆந்திராவிடம் இழந்தவை
கருநாடகாவிடம் இழந்தவை
கேரளாவிடம்  இழந்தவை
சித்தூர் வட்டம்

கொள்ளேகலம் வட்டம்
தேவிகுளம் வட்டம்

சந்திரகிரி வட்டம்

கோலார் தங்க வயல்
பீர்மேடு வட்டம்

திருக்காளத்தி வட்டம்
பெங்களுரு தண்டுப் பகுதி
 நெய்யாற்றங் கரை வட்டம்

பரமனேறு வட்டம்
கொல்லங்கோடு வனப்பகுதி
நெடுமாங்காடு கிழக்குப் பகுதி

குப்பம் சமீன் வட்டம்

மாண்டியா
செங்கோட்டை வனப்பகுதி


மொழிவாரி மாநிலங்கள் அமைப்பு என்ற பெயரில் தமிழக நிலப்பகுதிகளை இழந்தமையால், அப்பகுதிகளில் தோன்றிய ஆற்று வளங்களையும் அவற்றின் மீதான உரிமைகளையும் இழந்தோம்.
இலக்கியங்கள் போற்றிய காவிரியை இந்திய விடுதலைக்குப் பின் இழந்தோம். காவிரிபற்றிய குறிப்புகள் சங்க இலக்கியம் முதல் பல்வேறு கால இலக்கியங்களில் நூற்றுக்கணக்கில் உள்ளன.
நுண்பூண் எருமை குடநாட் டன்னஎன்
ஆய்நலம் (நக்கீரர், அகநானூறு 115.-6)
என்னும் பாடலடிகள் எருமையூரன் ஆட்சியைக் குறிக்கிறது. அவனது எருமையூர் சுருக்கமாக மையூர் என அழைக்கப்பெற்றது. அதுவே மைசூர். வியாழக்கிழமை > விசாலக்கிழமை; உயிர் > உசிர்  போல் மையூர் > மைசூரானது.
 இவ்வாறு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மன்னனின் ஆட்சியில் இருந்த நிலமும் காவிரி யாறும் மொழிவாரிப் பிரிவினையில் தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்டன.  
காவிரியாற்று நீரில் பொன்தாது கலந்து வந்தமையால் பொன்னி என்று மறுபெயர் பெற்றது இது. பொன்தாது தோன்றும் இடம்தான் இன்றைய கோலார் தங்க வயல். எனவே, பொன் விளைவிக்கும் காவிரியாற்றுப் பகுதியை இழந்ததுபோல் பொன் சுரக்கும் பொன் வயலையும் இழந்தோம்.
பழந்தமிழ் நாட்டிலிருந்த இன்றைய கோலார் மாவட்டத்தின் நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கருநாடகாவிற்கு உரியதாகிவிட்டது.
இன்றைய தமிழ் நாட்டிற்கு வரும் ஆற்று வழிகள் கருநாடகாவிற்கும் ஆந்திரத்திற்கும் உரிய நிலமாக மாற்றப்பட்டன. தமிழகத் தலைவர்கள் தமிழ்த்தேசியம் என்பதை உணராமல் இந்தியத் தேசியத்தை ஏற்றதால் அடைந்த இழப்பு இவைபோல் பலவாகும்.
இந்திய விடுதலைக்காகப் போரிட்டவர்களிலும் போராட்டங்களைச் சந்தித்தவர்களிலும் குரல் கொடுத்தவர்களிலும் யாருக்கும் தமிழர்கள் சளைத்தவர்கள் அல்லர். இந்தியாவில் தமிழ்நாடு அளிக்கும் பங்கு மிகுதியாகவும் அடையும் பயன் குறைவாகவும்தான் எப்பொழுதும் உள்ளது.
அதுபோல் உரிமைகள் இழப்பிலும் வளங்கள் பாதிக்கப்படுவதிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. எனவேதான், மொழிவாரி மாநில வரையறுக்கான குழுவில் தமிழர் யாரும் சேர்க்கப்படவில்லை. ஆனால், காவாலம் மாதவன்(Kavalam Madhava Panikkar) என்னும் மலையாளி சேர்க்கப்பட்டிருந்தார்.
இவர், தன்னுடைய நூலில்( கேரள வரலாறு /History of kerala) தமிழர்களைக் “கீழ்ப் பிறவிகளான தமிழர்கள்” என்றவர். இத்தகைய  இழி சொல்லர் எப்படி நடுவுநிலைமையுடன் நடந்து கொள்வார்? இவரது தோட்டங்கள் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் இருந்தமையாலேயே தமிழ்நாட்டுப் பகுதிகளைக் கேரளத்துடன் இணைக்கப் பரிந்துரைத்தார். அரசும் ஏற்றுக் கொண்டது.
நமக்குரிய நிலங்களைக் கேரளாவிடம் பறிகொடுத்ததால்தானே முல்லை-பெரியாறும் மூணாறும் பீர்மேடு-தேவிகுப்பமும் நமக்குச் சிக்கல்களாக்கப்பட்டன.
இந்திய விடுதலைக்கு முன்பு, தமிழ்பேசும் மக்கள் எண்ணிக்கையானது தென்னக மொழியினரில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், பின்னர் இந்த எண்ணிக்கை குறைந்தது. மாநில எல்லைகள் மாறிய பின்னர் கணக்கெடுப்பில் தமிழர்கள் பிற மொழியாளர்களாகக் காட்டப்பட்டனர் அல்லது காட்டிக் கொண்டனர். எனவே, தமிழ் பேசுவோர் எண்ணிக்கையும் குறைவாகக் காட்டப்படுகின்றது. பின்வரும் அட்டவணையைப் பார்த்தால் இது புரியும்.

மொழி விவரம்
1871 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி

1901 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி

2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி
தமிழ் பேசுவோர்
1,47,15,000
1,51,82,957

6,90,26,881      
தெலுங்கு  பேசுவோர்
1,16,10,000

1,42,76,509

8,11,27,740      
மலையாளம் பேசுவோர் 
23,24,000

28,61,297

3,48,38,819      
கன்னடம் பேசுவோர்
16,99,000

15,18,579

4,37,06,512      

இந்திய விடுதலைக்கு முன்பு, மலையாளம் பேசுநரைவிடக் கன்னடம் பேசுநர் குறைவாகத்தான் இருந்துள்ளனர். கருநாடகப் பகுதிகளான மைசூர், பெங்களூரு முதலான பலவற்றிலும் தமிழர்களே முக்கால் பகுதிக்கும் மேலாகவே இருந்தனர்.
பின்னர் இவை, கருநாடகாவில் இணைக்கப்பட்டதால், கன்னடம் பேசுநர் பகுதிகளாகக் காட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு காலம் காலமாக வாழ்ந்த தாய் மண்ணைப் பறிகொடுத்ததால் அப்பகுதித் தமிழர்கள் வாழ்வுரிமைகளை இழந்து அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டுப் பேராயக்(காங்.)கட்சியினர் இந்திய மாயையில் சிக்கியமையால் தமிழக மண்ணின் மைந்தர்களைப்பற்றி எண்ணிப் பார்க்கவில்லை.  ‘பச்சைத்தமிழன்’ எனப் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராசரே “குளமாவது மேடாவது. எல்லாம் இந்தியாவிற்குள் தான் இருக்கிறது” என்று சொன்னார் எனில், பிறர் எப்படி இருந்திருப்பார்கள் எனப் புரிந்து கொள்ளலாம்.
மாநிலம் பிரிந்த நாளைத் தொடர்புடைய பிற மாநிலங்கள் தத்தம் மாநில நாளாகக் கொண்டாடி வருகின்றன. தமிழ்நாட்டிலும் அவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் எனக் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் அமைப்புகள் வேண்டுகோள்கள் விடுத்துத் தத்தம் அளவில் கொண்டாடியும் வருகின்றன.
ஆனால், “நம் நிலப்பகுதிகள் பறிக்கப்பட்ட நாளைக் கொண்டாடுவது எப்படிச் சரியாகும்? துயர நாளை மகிழ்ச்சி நாளாகக் கொண்டாடினால் பறிக்கப்பட்ட பகுதிகளின் மக்கள் உணர்வுகளை நாம் மதிப்பதாகப் பொருளா? மிதிப்பதாகப் பொருளா?” என்ற எண்ணம் மேலாங்குகிறது.
என்றாலும் தமிழக அரசு அரசாணை (நிலை) எண் 118 த.வ.செ.துறை நாள் 21.10.2019 இல் தமிழ்நாடு அரசு தமிழ்மாநிலம் 1.11.1956 இல் அமைந்ததை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் முதல்நாள் தமிழ்நாடு நாளாகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது.
இதனை நாம் புறக்கணிப்பதைவிட ஏற்று, தமிழ்மண் காப்புப் போரில் களப்பலியானவர்களைப் போற்றி வணங்குவோம்! இருப்பதைக் காக்கவும் இழந்தவற்றை மீட்கவும் உறுதி கொள்ளும் நாளாக மாற்றுவோம்!
இருப்பதைக் காக்க வேண்டிய சூழல் என்ன எனச் சிலர் எண்ணலாம். கருநாடக எல்லையோரத் தமிழகப் பகுதிகளை அம்மாநிலத்துடன் இணைக்க அமைப்பு ஒன்று குரல் கொடுத்து வருகிறது. நாளை இந்தக் குரல் ஓங்கலாம். 
தமிழோடு பிற மொழி பேசுவோரும் வாழ்ந்து வருவதால், தமிழகம் பன்முகத்தன்மையோடு விளங்குகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வாழ்ந்து பயன்பெற்றும் தங்களைத் தெலுங்கர்களாகவே எண்ணுவோர் தமிழ்நாட்டில் தெலுங்கை ஆட்சிமொழியாக்க முயன்று வருகின்றனர். இத்தகைய போக்கைத் தடுத்து  இருக்கின்றவற்றைக் காக்க வேண்டும்.
அப்படியானால், இழந்ததை மீட்க என்ன செய்ய வேண்டும்?
தமிழர்களின் செல்வமும் செல்வாக்கும் உயர்ந்தால்தான் எண்ணிய ஆற்ற முடியும். அதிகாரப் பொறுப்புகளில் தமிழ் மக்கள் ஆட்சி செலுத்தினால்தான் உரிமையுடன் முன்னேற முடியும். எனவே, கல்வி, தொழில்களில் முதல் நிலையை அடைய வேண்டும்.
தமிழகத்தின் சிறப்பு, நிலப்பறிப்பு குறித்துப் பாடங்களில் இடம் பெற வேண்டும். உண்மை வரலாற்றைப் பிற மாநில மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
பிற மாநிலங்களில் இணைக்கப்பட்ட திருப்பதி முதலான எல்லாப் பகுதிகளையும் முதலில் தனித்தனி ஒன்றியப் பகுதிகளாகவாவது மாற்றச் செய்ய வேண்டும். எனவே, ‘தனித்துவமான தமிழ்நாடு நாள்’ எனக் கொண்டாடுவது வெற்றிக்களிப்பில் உரிமை இழப்புகளை மறப்பதற்கல்ல! அவற்றை மீட்பதற்கே என்னும் உணர்வைப் பெற வேண்டும். நவம்பர் முதல் நாளைத் தமிழ்ப்பகுதி மீட்பு உறுதியேற்பு நாளாக மாற்றுவோம்!
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை!
உணர்ந்தால் உரிமையை மீட்பது சிக்கலான ஒன்றுமில்லை!
இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, நவம்பர் 01, 2019

Saturday, October 26, 2019

திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி ! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி !
அறிவுக்குப் பொருந்தாக் கதையாக இருப்பினும் தீபாவளியைக் கொண்டாடுவோர் இருக்கின்றனர். அதே நேரம், தீபாவளியை எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துவோரும் தீபாவளியைக் கொண்டாடாதவர்களும் உள்ளனர். விசய நகரப் பேரரசான இந்துப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல்தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு பண்டிகைதான் தீபாவளி. நேரடியாகப் புகாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்துள்ளது. பரதகண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே தீபாவளியாக மாறியுள்ளது.
முதலில் நாம் தீபாவளிபற்றிய கதைகளைப் பார்ப்போம். நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் தீபாவளி என்பது ஒரு கதை. இவனது உண்மைப் பெயர் பவுமன். திருமால் பன்றித் தோற்றம் எடுத்துப் பூமியைத் துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்றாராம். அப்பொழுது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன்தான் நரகாசுரனாம். அசுரர்களை வதம் செய்தபொழுது பிறந்ததால் அசுரர்களின் குணம் வந்து விட்டதாம். எனவே, நரன்(மனிதன்)+அசுரன் நரகாசுரன் எனப்பட்டானாம். அசுரர்களை வதம் செய்த பொழுது பிறந்தவனுக்கு வதம் செய்த திருமாலின் குணம்தானே வந்து இருக்க வேண்டும்? இவன் தாயைத்தவிர வேறு யாராலும் கொல்லப்படமுடியாத வரம் பெற்றிருந்தானாம். ஆகவே, சத்தியபாமாவாக இருந்த பூமாதேவியால் கொல்லப்பட்டானாம்.
வால்மீகி இராமாயணத்தில் இராமன்  தனது வனவாசத்தை முடித்துச் சீதையுடனும் இலட்சுமணனுடனும் அயோத்திக்குத் திரும்பினான். அந்த நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றார்கள். இதுவே தீபாவளி என்பது ஒரு கதை.
கேதாரம் என்றால் பாலி மொழியில் விளைநிலம் எனப் பொருள். இமயலமலையில் இருந்த ஒரு விளைநிலம் சிவனின் தலமாகக் கருதப்பட்டதால் கேதாரம் என்றால் சிவதலம்/ சிவன் என்றானது. ஒரு நாட்டிய முடிவில் பிருங்கி முனிவர் பார்வதியை விட்டுவிட்டுச் சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். இதனால் பார்வதி 21 நாள் நோன்பு இருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் சிவன் பார்வதியை – கெளரியை –த் தன்னில் பாதியாக ஏற்று மங்கையொரு பாகன் ஆக மாறினார். இந்த நாள் இறைவனை வழிபடும் சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. நோன்பு இருந்து கேதார கெளரியாக (சிவன் பார்வதி இணைவாக) மாறிய இந்நாளே தீபாவளி என்பது மற்றுமொரு கதை.
சங்க இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்து எழுதப்பெற்ற பிற்காலத்தில் இறைவனும் இறைவியும் கலந்த உருவமாகக் கடவுளை உருவகப்படுத்தினர். இதை ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்து(அடி 1),
 “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்கிறது.
“பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்”
என்று புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து (அடி 7-8) கூறுகிறது. இவற்றுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட கதையே இக்கதை.
கிருட்டிணன், நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் நாளை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி  கொண்டாடப்படுவதாக ஒரு கதை. ஆரியக்கதைகளின்படி முறையற்ற முறையில் கொன்றவன் அருளால் கொல்லப்பட்டவன் இறந்த நாளை மக்கள் கொண்டாட வேண்டும்!  
புரட்டாசி மாதம்  எம உலகிலிருந்த வந்திருந்த முன்னோர் நினைவாக அவர்களுக்குப் படையிட்ட பின், ஐப்பசியில் அவர்கள் மீளவும் எம உலகம் செல்வர். அப்பொழுது, அப்பாதையில் வெளிச்சம் இருக்க வேண்டுமாம். வந்த பொழுது இருட்டிலேயே வந்தவர்களுக்குப் போகும்பொழுது வெளிச்சம் தேவைப்படுகிறது போலும். எனவே, வீட்டு வெளி வாசலில் தென்திசை நோக்கி முன்னோர் ஒவ்வொருவருக்கும் ஒரு விளக்கு என்ற முறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். இதுவே தீபாவளி என்பதும் ஒரு கதை.  
                பிராமணிய மதத்தின் எதிரியாகச் சமண மதம் உள்ளது. இம்மதத்தின் 24ஆவது அருகன் (தீர்த்தங்கரர்)வருத்தமான மகாவீரர் வீடு பேறடைந்த நாளில் வரிசையாக விளக்குகளை ஏற்றிக் கொண்டாடுகின்றனர். இதுவே தீபாவளி எனப்படுகிறது.
ஐப்பசி மாதம் தேய்பிறை 14ஆம் நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் நரக சதுர்த்தசி என்கின்றனர். அஃதாவது காருவாவாகிய அமாவாசை அன்று கொண்டாடாமல் அதற்கு முதல்நாளே இக்கதையின்படித் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
நீத்தார் நினைவுநாள் இறுதிச்சடங்கில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் தமிழர்களின் வழக்கம். தீபாவளியன்று தமிழ்நாட்டில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இதனைப் பின்பற்றுகின்றனர். ஆனால், வடநாட்டில் இந்தப் பழக்கம் இல்லை. எனவே, முன்னோர்களுக்காகக் கடைப்பிடிக்கப்படும் நீத்தார் நினைவு நாள்தான் தீபாவளியாக மாற்றப்பட்டதோ என்ற ஐயமும் உள்ளது.
தீர்க்கதமசு என்னும் முனிவருக்கு, உடலை வருத்திக் கொண்டு துன்புற்று நோன்பு, தவம் இருந்துதான்  நல்வழியை அடைய வேண்டுமா என்ற ஐயம் வந்தது. சனாதன முனிவர் என்பவரிடம் இது குறித்துக் கேட்டார். அவர் புத்தாடை உடுத்தி, இனிப்புப்பண்டங்கள் சாப்பிட்டு ஏழை எளியோருக்கும் அவற்றைக் கொடுத்து, ஒளி எங்கும் பரவ விளக்குகள் ஏற்றி மனம் மகிழ்ந்து கொண்டாடியும் துன்பங்களிலிருந்து விடுபடலாம் என அறிவுறுத்தினாராம். அவர் கூறியதன்படி ஐப்பசியில் எமனை வழிபட்டு விளக்கேற்றிக் கொண்டாடப்படுவதே தீபாவளி என்றும் ஒரு கதை வழங்குகிறது.
1577-இல்  பொற்கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கியதையே  தீபாவளியாகக் கொண்டாடுவதாகச் சீக்கியர்கள் கூறுகின்றனர். சிலர் ஐப்பசிக் குளிருக்கு வெப்பம் தேவைப்பட்டதால் விளக்கேற்றியதாகக் கூறுவர். ஐப்பசி அடைமழைக்காலம் எனவே, இது பொருந்தாது. கார்த்திகை அல்லது மார்கழிக்குச் சொன்னால் பொருந்தி வரலாம்.
கி.பி.1117இல் சாளுக்கிய திரும்புவன மன்னன், சாத்துயாயர் என்னும் அறிஞருக்கு ஆண்டுதோறும் தீபாவளிப்பரிசு வழங்கியதாகக் கன்னடக் கல்வெட்டு ஒன்றுகூறுகிறது. கி.பி.1250இல் மராத்தியில் எழுதப்பெற்ற நூல் (இ)லீலாவதி. இதில்எண்ணெய் தேய்த்து நீராடுது பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.
தமிழர் திருநாள் நான்கு நாள் கொண்டாடப்படுவது. இதற்குப் போட்டியாக ஐந்து நாள் விழாவாகத் தீபாவளி உருவாக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.
வடநாட்டு ஆண்டுத் தொடக்கம் சைத்திர/சித்திரை மாதம் மார்ச்சு 21 அல்லது 22 வருகிறது. எனவே, அம்முறைப்படி கார்த்திகை மாதம் அட்டோபர் 23இல் தொடங்குகிறது. நமக்கு ஏப்பிரலில் சித்திரை தொடங்குவதால் அப்பொழுது ஐப்பசிதான். எனவே, வடவர்கள் வடநாட்டில் அவர்கள் கார்த்திகைப்படி கார்த்திகை நாளைக் கொண்டாடினர். நமது விழாதான் அது என்பதை உணராத நாம்  அயலவர்கள் விழா, பழக்கவழக்கம் போன்றவற்றில் பிடிப்பு உள்ள நாம், அக்கார்த்திகையைத் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.
அயோத்திதாசப் பண்டிதர் பெளத்தர்கள் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி கார்த்திகை மாதத்து முழுநிலவு நாளிலே தீபமேற்றி, ஈகை அளித்து இறைவழிபாடு செய்தனர் என்று ஒரு கதையின் அடிப்படையில் குறிப்பிடுகிறார்.
தமிழில் உள்ள விளக்கு வரிசையே மறு பெயரில் தீபம் ஆவளியாக – வரிசையாக-க் கூறப்பட்டுத் தீபாவளி என்றானது. எனவே, தீபாவளி என்பது கார்த்திகை விளக்கு வரிசைதான்.
கார்த்திகை விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறித்த ஒரு பாடலைப் பார்ப்போம்.
நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-
தூதொடு வந்த, மழை.
என்கிறார் புலவர் கண்ணங் கூத்தனார்(கார்நாற்பது, 26); இப்பாடலில் கார்த்திகையில் விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறிப்பிட்டு, அதுபோல் எங்கும் பூக்கள் வரிசையாகப் பூத்துள்ளன என்கிறார்.
கார்த்திகை ஒளிநாள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தொன்மையான விழாவாகும். கார்த்திகை குறித்துத் தொல்காப்பியத்திற்கும் முந்தைய இலக்கியமான மலைபடுகடாம் தெரிவிக்கிறது. நற்றிணை, சீவகசிந்தாமணி, முதலான இலக்கியங்களும் கார்த்திகைபற்றிக் கூறுகின்றன. எனவேதான், ‘தொல் கார்த்திகை நாள்’ என்கிறார் திருஞானசம்பந்தர்.
 இலக்கியங்கள் கூறுவனவற்றில் இருந்து பருவநிலை மாற்றத்திற்கேற்பக் கொண்டாடிய இயற்கை விழாவாகத்தான் கார்த்திகை நாளைக் கொண்டாடினார்கள் என்பது உறுதியாகிறது. ஆனால், பின்னர் இதற்கும் கதை கட்டிவிட்டார்கள். சிவனின் அடியையும் முடியையும் தேடித் தோற்ற நான்முகனும் திருமாலும் வேண்டியதற்கிணங்க  சிவன் ஒளிப்பிழம்பாகத் தோன்றியதாகக் கூறிக் கதை பரப்பிவிட்டனர். சிவன் ‘திரிபுராசுரர்’ என்று அழைக்கப்படும் கமலாட்சன், தாரகாட்சன், வித்தியுன்மாலி ஆகிய மூவரைக் கொன்ற நாள்தான் கார்த்திகை என்றும் கதை கட்டினர்.
தமிழ் நூல்கள்போல்  கல்வெட்டுகளும், கார்த்திகைப் பெருவிழா கொண்டாடியதை எடுத்துக்கூறுகின்றன.  சான்றாக, முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சியில், கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் விளக்கெரித்ததற்குப் பதினாறு நாழி நெய்க்காகப் பதினாறு ஆடுகளைத் திருப்பாற்றுத்துறை மக்கள் கோவிலுக்குத் தானமாகக் கொடுத்துள்ளனர். இதனை அம்மன்னனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி.1021) வெட்டப்பட்ட கல்வெட்டொன்று தெரிவிக்கிறது.
`குமரி முதல் இமயம் வரை முழுமையும் தமிழ்நிலமாக இருந்த பொழுது கார்த்திகையில் கொண்டாடப்பட்ட ஒளிவிழா பின்னர் வடக்கே இவ்வாறு தீபாவளியாயிற்று. ஆவளி என்றால் வரிசை. விளக்குகளை / தீபங்களை வரிசையாக ஏற்றி வைப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் வந்தது. வடக்கே வேறு வகை மாத முறையைப் பின்பற்றியதால் வடக்கே நடைமுறையில் உள்ள கார்த்திகை மாதத்தில் – நமது ஐப்பசியில் – இவ்விழா கொண்டாடப்படுகிறது. இது தெற்கே புதிய மற்றொரு விழாவாக மாறி ஏற்கப்பட்டுள்ளது.
தீபாவளி மீதூதியத்தைப்(Bonus) பொங்கலில் வழங்குவது போன்றவற்றின் மூலம் செலவிற்கான வழியை அடைத்தால் நாளடைவில் தீபாவளிச் செலவுகள் குறையும். நமது கார்த்திகைதான் தீபாவளியாக மாறித் திரும்பி வந்துள்ளது என்பதை உணரச்செய்து இரட்டை விழாவினைக் கொண்டாடுவதைத் தவிர்க்கச் செய்யலாம்.
கார்த்திகை நம் விழா! தீபாவளி இரவல் விழா!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 27.10.2019

Saturday, October 12, 2019

ஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


ஆள்வோர் ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி
முழு வலிமை கொண்ட வலிமையான ஆட்சியாளராக இருந்தாலும் ஆன்றோர் கூறும் அறிவுரைகளை அல்லது கசப்பான இடித்துரைகளைக் கேட்டு ஆளவேண்டும் என்பதே தமிழர் நெறி.
பழந்தமிழ்நாட்டில் இருந்தது குடி தழுவிய கோனாட்சி. அஃதாவது மக்கள் நலம் நாடும் மன்னராட்சி. மன்னர் ஆட்சி புரிந்தாலும் இன்றைய மக்களாட்சியைவிடச் சிறப்பான மக்கள் நலம் நாடும் ஆட்சியே அப்பொழுது நடந்துள்ளது.
“தான் வலிமையானவன் அல்லது அதிகாரம் முழுமையும் கொண்டவன் எனக் கருதித் தனக்குக் கூறப்படும் அறிவுரைகளை ஒதுக்குபவன் நல்லாட்சி தர முடியாது. அவனது ஆட்சியும் விரைவில் அழியும்” என்பதே தமிழர் நெறி. இந்நெறி இன்றைக்கு உலகில் உள்ள எல்லா நாட்டு ஆட்சியாளரும் பின்பற்றி நடந்தால் உலகம் முழுவதும்  மக்களுக்கான ஆட்சியே திகழும் எனலாம்.
உருசியநாட்டு வல்லாட்சியைக் குறிப்பிடுகையில், மாக்கவி பாரதியார்,
இம்மென்றால் சிறைவாசம்,
ஏனென்றால்
வனவாசம், இவ்வாறங்கே
செம்மையெலாம் பாழாகிக்
கொடுமையே 
அறமாகித் தீர்ந்த
 ஆட்சி நிலவியதாகக்
குறிப்பிடுவார்.
ஆட்சிக்கு எதிரான சிறு முணுமுணுப்பைக்கூடத் தாங்கிக் கொள்ள இயலாமல் அடக்கி ஒடுக்குவோர் ஆட்சி அடக்கப்படும் என்பதே வரலாறு எனப் பாரதியார் நமக்கு உணர்த்துகிறார்.
தமிழர் அரசியல் நெறி என்பது ஆட்சியில் உள்ளோர், தம்மிடம் நேரடியாக அல்லது பொதுவெளியில் தெரிவிக்கப்படும் ஆட்சி மீதான சிறு குறையைக்கூடப் பெரிதாக எண்ணி, அவ்வாறு கூறியோர் மீது சினம் கொள்ளாமல், அவர்கள் கூறியதில் உண்மை இருப்பின் அவற்றை நீக்க வேண்டும்.
அவர்கள் யார் மீதாகிலும் குறைகள் தெரிவித்திருந்தால் நடுநிலையுடன் ஆராய்ந்து சூழ்நிலைக்கேற்பக் குற்றம் புரிந்தவர்களைத் தண்டிக்கவோ மன்னிக்கவோ வேண்டும்.
சங்க இலக்கியங்களில் பாடல்களில் சொல்லப்படும் பொருண்மைக்கேற்ப அவற்றைத் திணை என்றும் துறை என்றும் வகுத்துள்ளனர்.
அவற்றுள் சில, ஆட்சியாளருக்கு அறிவுரை கூறி, இடர்ப்பாடுகள் அல்லது துன்பப்பாடுகள் இருப்பின் அவற்றை அகற்ற வலியுறுத்துவனவாகும். இவை, வாயுறைவாழ்த்து, செவியறிவுறூஉ, குடைமங்கலம், வாள் மங்கலம், மண்ணு மங்கலம், ஓம்படை ஆகிய துறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ‘வாயுறை வாழ்த்து’ என்பது மன்னரை வாழ்த்துவதுடன் சான்றோர் கூறும் அறிவுரைகளும் அடங்கியதாகும். ஆள்வோரின் கடமைகள், நடத்தைகள், அவற்றுக்கான நெறிமுறைகளை அவர்களின் செவியில் பதியுமாறு அறிவுறுத்துவது ‘செவியறிவுறூஉ’ துறையாகும்.
பழந்தமிழர்  ஆள்வோரைவிட உயர்வாகப் புலவர்களை மதித்தனர். எனவேதான், முதலில் கூறிய மன்னனைப்பற்றி அதே புலவர் பாடியதைக் குறிப்பிடும் பொழுது “அவனை அவர் பாடியது” என்கின்றனர். அஃதாவது மன்னனை ‘ன்’ விகுதியில் அழைப்போர் புலவர்களை மதிப்புடன் ‘அர்’ விதியில் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சங்கப்புலவர்களைச் சங்கக்கால வேந்தர்களும் மன்னர்களும் மதித்துப் போற்றினர்.
அவர்களால் குறை கூறப்படுவது இழுக்கு எனக் கருதி அதற்கு இடம் தராதவகையில் நடந்து கொண்டனர். அதையும் மீறித் தவறு நடந்து அதனைப் புலவர்கள் சுட்டிக்காட்டினால் அவர்கள் மீது சட்டத்தைப் பாய்ச்சாமல், தங்களைத் திருத்திக் கொண்டனர். இவ்வாறு புலவர்களை மன்னர்கள் மதித்ததால்தான் தமிழகம் வந்த  ஆரியர், அறிவை ஆயுதமாகக் கொண்டு தங்களை முன்நிறுத்திக் கொண்டனர் என்பது வரலாறு.
கடந்த நிதி நிலையறிக்கையின் பொழுது மத்திய நிதியமைச்சர் நிருமலா சீதாராமன் மேற்கோளாகச் சொன்ன வரிவிதிப்பு குறித்த புறநானூற்றுப் பாடல் ‘செவியறிவுறூஉ’ துறையாகும். இவ்வாறு மன்னர்கள் செய்ய வேண்டியனபற்றியும் செய்யக்கூடாதனபற்றியும் ஆன்றோர்கள் இடித்துரைக்கும் அளவிற்கு அப்பொழுது கருத்துரிமை பேணப்பட்டு வந்தது.
அறிவியல் உண்மைகளைச் சொன்னதற்கே உயிரைப் பறித்த மேனாட்டு அரசியல் முறைக்கு மாறாகத், தம்மைப்பற்றித் தம்மிடமே குறை கூறினாலும் கேட்கும் மனப்பக்குவம் நிறைந்தவர்களாக அப்போதைய தமிழ் ஆட்சியாளர்கள் இருந்துள்ளனர்.
இத்தகைய தமிழர் நெறி உலகம் முழுவதும் பரவ வேண்டும். மாறாகத் தமிழ் வழங்கும் பகுதி அடங்கிய இத்திருநாட்டிலேயே முறையிடுவதற்குரிய அதிகாரத் தலைமையிடம் முறையிட்டதற்காக, கருத்துரிமையை நசுக்கும் வண்ணம் சட்டத்தைப் பாயவிடுவது பெருங்கொடுமையாகும். அவற்றைச் சிந்தித்து நடவடிக்கை எடுக்காமலும், தவறான முறைப்பாடு எனில் உரியவர்களிடம் விளக்காமலும் அல்லது குறைந்தது அவற்றைப் பொருட்படுத்தாமலும் இருக்கலாம். அவ்வாறில்லாமல் மாறான நடவடிக்கை எடுப்பது அவர்களிடம் நீதியை எதிர்பார்த்தவர்களிடம் அது தவறு எனக் காட்டுவதாக அமையாதா?
ஆட்சியின்மாட்சியைக் கூறும் திருவள்ளுவர்,
செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்:389)
என்கிறார்.
உலகம் யாருக்குக் கட்டுப்படும்? குறை கூறப்படும் கசப்பான சொற்களைக் கேட்டு அவர்களுக்கு எதிராகச் செயல்படக்கூடாது. மாறாக அவற்றைப் பொறுத்துக்கொள்ளும் பண்பு உடையவனாக இருக்க வேண்டும். அத்தகைய பண்பாளனிடம் உலகம் கட்டுப்படும் என்கிறார் திருவள்ளுவர்.
அறிவுரை என்பது யாவர்க்குமே கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், ஆட்சியாளர்கள், தம் கீழுள்ள அமைச்சர்கள் முதலானோர் இடித்துரைத்தாலும் மக்கள் வெறுப்பாகக் கூறினாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு கூறப்படும் குறைகளை நீக்க வேண்டும். அதுதான் நல்லாட்சி என்பது தமிழர் நெறி.
“பொது நன்மையின் பொருட்டும் துன்பம் தரும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பிறர் கூறுவன கடுமையாக இருந்தாலும் வெறுக்கும் படி இருந்தாலும் அவற்றைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளும் நற்பண்பாளனுக்கு உலகம் கட்டுப்படும்.” என்னும் தமிழர் நெறியை எல்லா நாட்டு அரசாளர்களும் எக்காலத்திலும் தவறாமல் உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆன்றோர்கள், அறிஞர்கள் துணையைக் கொண்டு ஆட்சி நடத்த வேண்டும் என்பதும் தமிழர் நெறி. எனவேதான், திருவள்ளுவர், ‘பெரியாரைத் துணைக்கோடல்’ எனத் தனி அதிகாரமே வைத்துள்ளார்.
தவறு செய்ய நேரும் பொழுது அல்லது தவறு செய்தால், கண்டும் காணாமல் இருக்கக் கூடாது. மாறாக இடித்துரைத்து அறிவரை கூறி, அத்தவறான செயலை நிறுத்த வேண்டும். இத்தகைய ஆன்றோரைத் துணையாகக் கொள்பவரை  யாராலும் அழிக்க முடியாது.
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
(திருவள்ளுவர், திருக்குள், அதிகாரம் பெரியாரைத் துணைக்கோடல், குறள் 447)
என்பது தமிழர் நெறி.
பழந்தமிழ் வேந்தர்கள் மக்களையும் புலவர்களையும் மதித்ததால் நல்லாட்சி வழங்கினர். சான்று ஒன்று. பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறும் பொழுது, “நான், இவ்வாறு செய்து முடிக்காவிட்டால், குடிமக்கள் என்னைக் கண்ணீருடன் கொடியவன் என இகழட்டும்! மாங்குடி மருதன் தலைமையில் இயங்கும் புலவர் குழு என்னைப்பாடாது, என் நாட்டைவிட்டு நீங்கட்டும்!” என்னும் பொருள்படப் பாடியுள்ளார்.
கொடியன்எம் இறை’ எனக் கண்ணீர் பரப்பி,
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக;
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை
(புறநானூறு, பாடல் 72, வரிகள் 11-16)
என்று சொல்லி உள்ளதன் மூலம், மக்கள் கருத்துகளையும் ஆன்றோர் கருத்துகளையும் கேட்டு ஆட்சி நடத்திய சான்றோர்களாகத் தமிழ் மன்னர்கள் திகழ்ந்துள்ளனர் எனப் புரிகிறது. கருத்துரிமையை மதிப்பது ஆட்சிக்குச் சிறப்பே தவிர இழுக்கல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகெங்கும் பரவ வேண்டிய தமிழர் நெறி குறித்த மேற்கோள்களைத் தலைமை யமைச்சர் நரேந்திரர் முதலான பல அமைச்சர்களும் பொதுவிடங்களில் கூறிப் பரப்பி வருகின்றனர். அவர்கள்,
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:448)
என்னும் தமிழர் நெறியையும் உலகெங்கும் பரப்ப வேண்டும். தாங்களும் முன்மாதிரியாக இருந்து கருத்துரிமைக் காவலர்களாகத் திகழ வேண்டும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive