Friday, June 25, 2021

தமிழைத் துரத்தும் பள்ளிக் கல்வித் துறை – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




தமிழைத் துரத்தும் பள்ளிக் கல்வித் துறை

 நாளும் நற்செயல்கள் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு நற்பணிகள் ஆற்றி நல்லரசு நடத்துகிறார் முதல்வர் மு.க.தாலின். அமைச்சர் பெருமக்களும் அவர் வழியில் நல்லரசு நிலைக்கத் துணை நிற்கின்றனர். ஆனால், அரசிற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் தமிழுக்குக் கேடு செய்யும் வகையிலும் அதிகாரிகள் சிலர் திட்டமிடுகின்றனர். அதற்கு அரசும் துணைபோகும் அவலம் நேர உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகளைக் பெருக்கும் வகையில் சட்டமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதற்கிணங்க “அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்கள் நீக்கப்படும்” என்றார். இதனால் ஆங்கிலவழிக்கல்வி பெருகித் தமிழ்வழிக்கல்வி மறையும் நிலைதான் ஏற்படுகிறது.

அரசு மாறினாலும் முந்தைய அரசின் நல்ல திட்டங்களைத் தொடர வேண்டும். என்றாலும் நடுநிலையாளர்களாகக் காட்டும் வகையில் முந்தைய அரசின் தீய செயல்களையும் தொடர வேண்டும் என்றில்லை. ஆனால், தமிழ்வழிக்கல்விக்குச்சாவு மணி அடிக்கும் முந்தைய அதிமுக அரசின் திட்டங்களைத் தொடரும் வகையில் அரசு அறிவிப்புகள் வருகின்றன.

 “தமிழ்நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானால் சகல சாத்திரங்களும் தமிழ் மொழி மூலமாகவே கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை நமக்குள்ளே அறிவுடையோர் எல்லோரும் கொண்டிருக்கிறார்கள்” என்றார் பைந்தமிழ்த்தேர்ப்பாகன் சுப்பிரமணிய பாரதியார்.

நம் நாட்டில் காந்தியடிகள் முதலான தலைவர்கள் பலரும் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தியுள்ளனர்; இப்பொழுதும் கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். பயிற்சிமொழிக் காவலர் பேரா. முனைவர் சி.இலக்குவனார், “உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை.  நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம். ஆன்ற அறிவும் ஆள்வினையும் அற்றுள்ளோம்.” எனத் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்துகிறார்.

 துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா(நாயுடு) “மொழியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பன்முக அணுகுமுறை தேவை. இது தொடக்கப்பள்ளி மட்டத்திலிருந்தே தொடங்கி உயர் கல்விக்குத் தொடரப்பட வேண்டும். குறைந்தது தாய் மொழியில் செயல்பாட்டு கல்வியறிவு உறுதி செய்யப்பட வேண்டும்.” என்றார். ‘தாய்மொழிக்கல்வி மூலம் தாய்நாட்டு வளர்ச்சி’ என்பதை இலக்காகக் கொண்டு வெங்கையா(நாயுடு) வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். நாடு முழுவதும் அந்தந்த மக்களின்தாய்மொழி வழியிலான கல்விக்கு ஒன்றிய அரசு உதவும் வகையில் அவர் செயலாற்ற வேண்டும்.

 அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்று, 22 நாடுகளில் 160 மொழிக் குழுக்களிடம்  தாய்மொழிக்கல்வி குறித்து விவரம் திரட்டியது.  பெரும்பாலான மாணக்கர்களின் பள்ளிக்கல்வி முழுமை பெறாததற்கும் பிறமொழியைக் கற்கும் திறன் இழந்ததற்கும் தாய்மொழி அல்லாத பிற மொழிக்கல்விதான் காரணம் என ஆய்வு முடிவைத் தெரிவித்தது. இதனால் 2008இல் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு  தாய்மொழிக் கல்வி, தாய் மொழிக் கல்வி வழியே பிற மொழிக் கல்வி, தாய் மொழிக் கல்வி வழியே உயர்கல்வி  என்பதையே  வலியுறுத்தத் தொடங்கியது.

இமயமலை போலுயர்ந்த

ஒருநாடும் தன்மொழியில்

தாழ்ந்தால் வீழும் (தமிழியக்கம்)

எனப் பாவேந்தர் பாரதிதாசன் இதைத்தான் வலியுறுத்துகிறார். 

 “எல்லா நாடுகளுமே தத்தம் நாட்டில் உள்ள பிற நாட்டினரின் தாய்மொழிக்கல்வியில் கருத்து செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, நார்வே, சுவீடன் முதலான ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாட்டில் வளரும் பிற மொழியினரின் குழந்தைகளுக்கும் அவரவர் தாய்மொழியைக் கற்பிக்க வழிவகை செய்துள்ளன. நார்வே நாட்டில் தமிழ்மொழிப் பாடத்தில் பெறும் மதிப்பெண், நார்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவுகிறது.

பாப்பூ நியூ கினியா  நாட்டில் கணிசமான தொகையில் மக்கள்பேசும் 450 மொழிகளைக் கல்வி மொழிகளாக அந்நாடு பின்பற்றுகிறது.

எத்தியோப்பாவில், தாய் மொழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, கற்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையானது பெருமளவில் குறைந்தது.

பிலிப்பைன்சு அரசாங்கம் 2012 இல் அனைத்துத் தொல்குடி மக்களும் அவரவர் தாய் மொழி வழியே கல்விக் கற்பதைக் கொள்கை முடிவாக எடுத்து நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

பிற மொழிக் குழந்தைகள் சுவீடனில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பெற்றோர்களின் இடப்பெயர்வின் காரணமாகச் சுவீடனில் வாழ்ந்தாலும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்தாலும் தாய்மொழிக்கல்வியை அவர்களுக்கு அளிப்பதைச் சுவீடன் கல்வித்துறை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. நம் நாட்டிலோ இங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அயல் மொழிக்கல்வியைத் திணிப்பதையே அரசுகள் கடமையாகக் கொண்டு செயல்படுகின்ற அவலம் உள்ளது.“

தாய்மொழி சார் கல்வி(mother tongue-based education) உள்ள நாடுகளில் கல்வி வளர்ச்சியும் பிற வளர்ச்சியும் சிறப்பாக உள்ளன. அயல்மொழி சார் கல்வி உள்ள நாடுகளில் இவை பின்தங்கியே காணப்படுகின்றன.

பொதுவாக அயல்மொழியினர் ஆட்சியில் கட்டுப்பட்ட நாடுகளில் எல்லாம் தாய்மொழிக்கல்வி புறக்கணிக்கப்படுகிறது. இவற்றுள் எந்தெந்த நாடுகள் விழிப்படைந்து தாய்மொழிக்கல்விக்கும் தாய்மொழிவழிக்கல்விக்கும் மாறியனவோ அங்கெல்லாம் வளர்ச்சியைக் காண முடிகிறது.

பிற நாட்டு அரசுகள் தத்தம் நாட்டில் வாழும் அயல் நாட்டார் தத்தம் தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறவேண்டும் என்பதில் முனைப்பாகக் கருத்து செலுத்திச் செயல்படுகின்றன. தமிழ் நாட்டிலோ நாட்டு மக்கள் தம் தாய்மொழியிலான தமிழில் கல்வி கற்பதற்குத் தடையாகச் சூழல்கள் உள்ளன.

நாம் எதற்கெடுத்தாலும் மேல் நாட்டைப் பாருங்கள், சப்பானைப் பாருங்கள், சீனாவைப் பாருங்கள் என்கிறோம். ஆனால் வளர்ச்சி பெற்ற அந்நாடுகள் தத்தம் தாய்மொழியில் கல்வி அளிப்பதால்தான் வளர்ந்துள்ளன என்பதை மறந்து விடுகிறோம். ஒருவர் தன் தாய்மொழி யல்லாத பிற மொழியில் படிக்கும் பொழுது பிற மொழிப்பாடமே ஒரு சுமையாக அமைகிறது. இதனால், அம்மொழியில் படிக்கும் துறைப்பாடங்களும் சுமையாக மாறிவிடுகின்றன. கல்வியாளர்களின் இக் கருத்தை உணர்ந்து எலலா நாடுகளும் தாய்மொழிக்கல்வியில் கருத்து செலுத்துகின்றன. பிற மொழிக்கல்வியால் உருப்போடும் மனனக் கல்விமுறைதான் வளர்கிறது. மாறாகத் தாய்மொழி வழிக்கல்வியானது ஆசிரியர் மாணாக்கர் உறவை மேம்படுத்தி ஐயங்களை அகற்றவும் தெளிவு பெறவும் உதவுகிறது. இதனால் மாணாக்கர்களின் சிந்தனை ஆற்றல் பெருகுகிறது.

“தாய்மொழிக் கல்வியால்தான் இன்று நான் என் கனவுகளை அடைய முடிந்தது” என்கிறார் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று விண்வெளி வீரராகப் பயிற்சி பெற்று வரும் தமிழக மாணவி உதய கீர்த்திகா

தமிழ்நாட்டைச்சேர்ந்த புள்ளி விவரங்கள் அளித்தால் திராவிட ஆட்சிகளை நஞ்சாக எண்ணுவோர், இவர்களுக்கு வேறு வேலை இல்லை என்பர். எனவே, பிற மாநில விவரங்களைப் பார்ப்போம்.

மூவாண்டிற்கு முன்னர் அண்டைய மாநிலமான கருநாடகாவில் ஆங்கிலவழித் திணிப்பு நிகழ்ந்த பொழுது எழுந்த எதிர்ப்பலையை நாம் காண்போம். அன்றைய முதல்வர் குமாரசாமி, சோதனை முயற்சி எனச் சொல்லி கருநாடகத்தில் இருக்கும் 28,847 தொடக்கப் பள்ளிகளில் ஆயிரம் பள்ளிகளில் மட்டும் ஆங்கில வழியாகக், கல்வி கற்பிக்கப்படும் என்றார்.

ஆனால், இதற்குக் கன்னட செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆங்கில வழிக் கல்விக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்றார் சாகித்திய அகாதமியின் முன்னாள் செயற் குழு உறுப்பினர் நரஃகள்ளி பாலசுப்பிரமணியா. அவர், “பொறியாளரும் அரசியல் வல்லுநருமான விசுவேசுவரையா, விண்வெளி ஆராய்ச்சியாளர் உடுப்பி இராமச்சந்திரன்(யு.ஆர்.இராவு), புகழ்பெற்ற அறிவியலாளரான சிந்தாமணி நாகேச இராமச்சந்திரன் (சி.என்.ஆர்.இராவு) முதலான சமூக முன்னோடிகள் அனைவரும் பத்தாம் வகுப்புவரை கன்னட வழிக் கல்வியில் பயின்றவர்களே” என்றார்.

“படிப்பதும், எழுதுவதும் புரிந்து கொள்ளும் மொழியில் இருந்தால், மாணவர்களுக்கு இரண்டாம் மொழி ஒன்றைக் கற்பது எளிதாக இருக்கும். மொழியைக் கற்பித்தல் குறித்த புரிதல் நம் நாட்டில் பெரிதாக இல்லை. கல்வியில் தாய் மொழி முதன்மைப் பங்கு வகிக்கிறது. இதனை நாம் புரிந்துகொள்வது இல்லை. தாய் மொழியைச் சரியாகக் கற்கும் ஒருவரால் இரண்டாவது,  மூன்றாவது மொழிகளை எளிதாகக் கற்க முடியும்” என்றார் பேராசிரியர் இராம்பால்.

“இரண்டாண்டுகளுக்கு முன் கருநாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு அரசு பள்ளிகளில் கன்னடவழிக் கற்பிப்போர் குறித்த நிலையை விளக்கியது. அஃதாவது கருநாடக அரசுப் பள்ளிகளில் கன்னட வழியில் பயிலும் மாணவர்களில் 35 விழுக்காட்டினர் பட்டியல் வகுப்பு மாணவர்கள். 60 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்டப் பிரிவைச் சேர்ந்தவர்கள், எஞ்சியுள்ளவர்கள் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் பிள்ளைகள்” என அம்மாநிலப்பள்ளிக் கல்வி அதிகாரி ஒருவர் விளக்கினார்.

உலக நாட்டு அமைப்புகளின் ஆய்வு விவரங்கள், தங்களுடைய இளமைக் காலத்தில் தாய்மொழியில் கல்வி கற்கும் குழந்தைகள், பிற மொழிகளையும், பிற பாடங்களையும், தாய்மொழியில் கல்வி கற்காத  குழந்தைகளைவிடச் சிறப்பாக கற்றுத் தேர்ச்சி பெறுகின்றனர் என்பதை உறுதியாக்குகின்றன. எனவேதான்,  கல்வியின் தரம் உயரத் தாய்மொழியிலான கல்வியை ஆதரிப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கங்களாக அவை கூறுகின்றன.

எனவே, மழலைப் பருவத்திலேயே தமிழையும் தமிழ் வழிக்கல்வியையும் அளிப்பதன் மூலம், நாம் குழந்தைகளை அறிஞர்களாகவும் வல்லவர்களாகவும் ஆக்க முடியும்.

நாம் முழுமையாகத் தாய்மொழிக்கல்வியையும் தாய்மொழி வழிக்கல்வியையும் நடைமுறைப்படுத்தாவிட்டால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாது என ஆன்றோர்கள் கூறுவதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தப் பின்வரும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

  1. கல்வித்துறையை மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். தாய்மொழி வழிக்கல்விக்கான ஒதுக்கீடுகளை மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்க வேண்டும்.
  2. பணி வாய்ப்பு இல்லாமல் தாய்மொழிக்கல்வி வெற்றி பெறாது. எனவே, எல்லாப்பணித்தேர்வுகளும் அனைத்து மாநில மொழிகளிலும் நடைபெற வேண்டும்.
  3. மத்திய அரசின் எல்லாக் கல்வி நிலையங்களும் அயலகக் கல்வி நிறுவனங்களும் பிற கல்வி நிறுவனங்களும் அவை இருக்கும் மாநில மக்களின் மொழிகளில் கல்வி கற்பிக்க வேண்டும்.
  4. அரசியல் யாப்புப் பட்டியலில் உள்ள தேசிய மொழிகள் அல்லாத பிற தாய்மொழிக் கல்வியும் அவ்வம் மொழியினரின் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்.
  5. உயர்நீதிமன்றங்கள் வரை அனைத்து நிலைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் அயல்நாட்டு நிறுவனங்களிலும்மாநில மொழிகளே ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும். இதனைத் தமிழ்நாட்டு முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.

அப்பொழுதுதான் தமிழ் வழிக் கல்விக்கு எத்தகைய இடையூறும் இருக்காது. மக்களுக்குத் தமிழ் வழிக்கல்வியில் நம்பிக்கையும் வரும்.

தனியார் பள்ளிகள் நிதிநிலை ஆதாரங்களைத்திரட்டிக் கொண்டு ஆங்கிலவழிப்பள்ளிகளை நடத்துவதற்கு இசைவு தரக் கூடாது. உடனடியாக அனைத்து ஆங்கில வழிப்பள்ளிகளையும் மூட வேண்டும். தமிழ் வழியிலான கல்வி கற்பிக்கும் பள்ளிகள் மட்டுமே இயங்க வேண்டும். அவையும் தரமான நிலைகளில் இருக்க வேண்டும். கல்விப்பணி என்பது அறப்பணி. வணிகம் அன்று! எனவே, சொந்த நிதி ஆதாரத்தில் பள்ளி நடத்த மட்டுமே இசைவு தர வேண்டும். நன்கொடை பெற்று நடத்துவதற்கு இடம் தரக் கூடாது. இதுவரை நன்கொடை பெற்று நடந்து வரும் பள்ளிகளில் நன்கொடையாளர்களைக் கொண்ட கூட்டுறவுக் கல்வியக முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு ஒத்து வராவிடில் அப்பள்ளிகளை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும். மகுடைத் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழலில் மேலும் சில திங்கள் தாய்மொழி வழிக்கல்வியை மட்டுமே நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்காக மூடி இருந்தால் ஒன்றும் குறைந்து போய் விடாது.

‘தமிழைத்துரத்தும் பள்ளிக்கல்வித்துறை’ என்னும் அவலநிலை மாற வேண்டும். இதற்குத் தமிழ் வழிக்கல்விக்கு எதிரான அதிகாரிகளைத் தூக்கி அடிக்க வேண்டும். தாய்மொழிக்கல்வியில் நம்பிக்கை உள்ளவர்களை மட்டுமே உயர் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். தேசிய அளவில் ஆங்கில மொழியில்  நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளை அவர்கள் சுலபமாக எதிர்கொள்ள ஆங்கில வழிக்கல்வி தேவை எனப் பரிந்துரைத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநரை அவரது பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழ்வழிக்கல்வியும் தரமான ஆங்கிலமொழிக் கல்வியும் தரப்படும் வகையில் நம்பிக்கை உடையவரைப் பள்ளிக் கல்வி இயக்குநராக  அமர்த்த வேண்டும்.

தமிழ்நாட்டில், ஆங்கில வழிக் கல்வியை அறவே நீக்க வேண்டும். தமிழ்வழிக் கல்வியையும் ஆங்கில மொழிக் கல்வியையும் சிறப்பாக அளித்தல் வேண்டும். முதல்வர் வழியில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி விரைவில் நடவடிக்கை எடுத்துப் பள்ளிக்கல்வியில் தமிழை வாழவைக்க வேண்டும்.

பிற மொழித் திணிப்பு எதிர்ப்பு நமது காப்புரிமை!” என்னும்  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் முழங்கிய முழக்கத்தை நாம் மறவாமல் பின்பற்ற வேண்டும்!

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

 



Wednesday, June 16, 2021

முப்பால் வழியில் முதல்வர் மு.க.தாலின் – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




முப்பால் வழியில் முதல்வர் மு.க.தாலின்

வாழ்த்து என்பது சடங்கல்ல. ஒரு மரபு. வாழ்த்திற்குரியவர்களை உள்ளன்புடன் வாழ்த்த வேண்டும். சங்க இலக்கியங்கள் இயன்மொழி வாழ்த்து, வாயுறை வாழ்த்து எனச் சில வாழ்த்து முறைகளை வகுத்து வைத்துள்ளன. அந்த வகையில்தான் தமிழக ஆன்றோர்களும் அனைத்து இந்தியத் தமிழ்ச்சங்கத்தினரும் மு.க.தாலின் அவர்களையும் அவர் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசினையும் இன்று(வைகாசி 09, 2052/23.05.2021) இணையவழியே வாழ்த்துகிறோம்.  அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கங்கள் வாழ்த்துகின்றன என்றால் அனைத்து இந்தியத்தமிழ் மக்களே வாழ்த்துவதாகத்தான் பொருள். சில உலக அமைப்புகளும் இதில் பங்கேற்றுள்ளன. எனவே உலகத்தமிழ் மக்கள் வாழ்த்துவதாகத்தான் பொருள்.

நாளும் நாளும் உயர்வுற்று

நலிவை நீக்கித் தொண்டாற்றி

பொலிவை வழங்கிப் புகழுற்று

எல்லா நாளும்மகிழ் நாளே

என மக்கள் கொண்டாடும் வகையில் சிறந்திடப் புதிய தமிழரசை நாம் வாழ்த்துகிறோம்.

ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகியவற்றைச் சிறப்பித்துப் பாடுவதை இயன்மொழி வாழ்த்து என்பர். அதே போல், இன்றைக்கு நாம் முதல்வர் மு.க.தாலின் அவர்களின் புகழ், வலிமை, கொடை, அருள் ஆகியவற்றைச் சிறப்பித்து உரைக்கின்றோம். எனவே, நாம் கூறுவது மிகையான வாழ்த்துரை அன்று. இயல்பான வாழ்த்துரையே!

நாட்டின் நான்காம் தூணாக விளங்குவன ஊடகங்களாகும். ஊடகங்கள் புதிய அரசு அமைந்ததிலிருந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பார்த்துப் பாராட்டுகின்றன. தினத்தந்தி , தினகரன் முதலான தமிழ் நாளிதழ்களும் அகரமுதல முதலான மின்னிதழ்களும் இந்தியா டு டே, பிசினசு இந்தியா  முதலான ஆங்கில இதழ்களும் உலக இதழ்களும் பாராட்டுகின்றன. குறைந்த நாளிலேயே உலகளாவிய பாராட்டு பெறும் முதல்வரையும் அவர் தலைமயிலான தமிழக அரசையும் நாமும் பாராட்டி வாழ்த்துவதுதானே முறையாகும்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

 என்கிறார் தெய்வப்புவலர் திருவள்ளுவர் (திருக்குறள் 664). ஒரு செயலை இவ்வாறு செய்து முடிப்பேன் என்று சொல்லல் மிக எளிது. ஆனால், அவ்வாறு தான் சொன்னதை நிறைவேற்றல் என்பது அரிதான செயல் என்கிறார். தேர்தலின் பொழுது வாக்குறுதிகளைத் தலைவர்கள் அள்ளி வீசுகின்றனர். ஆனால் வெற்றி பெற்றதும் மறந்து விடுகின்றனர். நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் வாக்குறுதி அளிப்போர் உள்ளனர். சான்றாகக் கடந்த ஆட்சி நிதி நிலைமை மிக மோசமாக இருந்தும் அப்போதைய ஆட்சியாளர்கள் சலவைப்பொறியை இலவசமாக வழங்குதல் போன்ற பல வாக்குறுதிகளை அளித்தனர். இறந்தவர் குடும்பங்களுக்குத் தரவேண்டிய குடும்பப் பாதுகாப்பு நிதியைக்கூடக் கடந்த ஆண்டு(2020) மே 14 இற்குப் பிறகு வழங்க இயலாமல் நிறுத்தி வைத்திருந்தனர். மே 14, 2020 என்பது அரசுப்பணியாளர்கள் இறந்த நாளன்று. அவர்கள் இறந்து அதற்கு முன்னர் ஈராண்டுகள்கூட ஆகியிருக்கும். உரிய விண்ணப்பம் ஓய்வூதிய அலுவலகம் வரும் நாளே இது. உடனடியாகத் தரவேண்டிய நிதியைக்கூட அளிக்க முடியாத சூழல் இருப்பதை அறிந்துதான் பொய்யான வாக்குறுதிகள் தந்தனர். தொடக்க நல் வாழ்வு மையங்களில் போதிய மருந்துகள் இல்லை. பல மருந்துகளைத் தர இயவில்லை. சில மருந்துகளை இரு வேளை உட்கொள்ள வேண்டும் என்றால் ஒரு வேளைக்கு மட்டும் தந்தனர். சருக்கரைமானி மூலம் இரத்தச்சருக்கரை அளவைப் பார்க்கலாம் என்றால் அதற்குரிய ஆய்வுப்பட்டை இல்லை. இவ்வாறு பலவற்றைக் கூற இயலும். ஆனால் எவற்றை எல்லாம் எவ்வாறு செய்யலாம் எனத் திட்டமிட்டு, அதற்கேற்ப நலத்திட்டங்களை அறிவித்து அதனை இன்றைய அரசு நிறைவேற்றி வருகிறது. ஆம். “சொன்னதைச்செய்வோம், செய்வதைச் சொல்வோம்” என்ற தந்தையின் வழியில் முதல்வர் மு.க.தாலின் அரிய செயல்களையும் எளிதில் முடித்துக் கொண்டு வருகிறார். எனவே, வாழ்த்துவது நம் கடமையாகிறது.

மகுடைத்தொற்றில் அல்லலுறும் மக்களுக்கு இடர் உதவித்தொகையாக உரூ.2000/ வழங்கல், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிப் பாலின் வி்லையைக் குறைத்தல், அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், 100 நாட்களுக்குள் குறைகளை நீக்க ‘உங்கள் தொகுதியில் முதலைமச்சர்’ எனத் தனித்துறையை அமைத்தல், தனியார் மருத்துவமனைகளில் சேரும் மகுடைத் தொற்றாளர்களின் மருத்துவச் செலவைக் காப்பீட்டு முறையில் ஏற்றல்  என ஐந்து ஆணைகளை முதல்வர் பதவிப் பொறுப்பேற்றதும் செயல்படுத்தினார். இதனால் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்று அவர்களின் வாழ்த்து மழையில் நனைகிறார். இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அரசின் நலத்திட்டங்களைப் பாழாக்குவதற்கென்றே இல்லாத விதிகளைக் கூறிச் சிதைக்கும் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள், பெண்கள் பேருந்தில் பயணம் செய்தால் கட்டணம் இல்லை எனவும் பொதுப்பேருந்தில் பயணம் செய்தால் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று சொல்வதாகவும் இதனால் பெண்கள் பேருந்திற்குத் தனி வண்ணம் பூசப்போவதாகவும்  நாளிதழ்ச் செய்திகள் வருகின்றன. இவ்வாறு மக்கள் பணத்தை வீணடிக்க வேண்டா. இயல்பான கட்டணம் உள்ள எந்தப் பேருந்தில் பயணம் செய்தாலும் பெண்கள், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடம் கட்டணம் வாங்கக் கூடாது என்று முதல்வர் அறிவிக்க வேண்டும். (இதன் பின்னர் முதல்வர் அறிவித்து விட்டார்.பாராட்டுகள்!)

“எதையும் ஆறப்போட வேண்டும் என்றால் –  மூடிப் புதைக்க வேண்டும் என்றால் – விசாரணை ஆணையம் வை” என்பது அரசியல் நடைமுறை மொழி. முந்தைய முதல்வர் செயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை ஆணையமே இதற்குச் சான்று. அவ்வாறு தூத்துக்குடி செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் தொடர்பான விசாரணை ஆணையைக் கிடப்பில் போடவில்லை. தாம் ஆட்சிப்பொறுப்பேற்றதும் விரைந்து இடைக்காலப் பரிந்துரைகளைப் பெற்றார் முதல்வர். அதற்கிணங்கத் தங்களுக்கும் தங்கள் தலைமுறையினருக்குமான வாழ்வுரிமைக்காகப் போராடியவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்றுள்ளார். இறந்த குடும்பத்தினருக்கும் பெருங் காயமுற்றோருக்கும் நிதி யுதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் வழங்கியுள்ளார்.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்”

 என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள்:517). இதற்கேற்பத் தக்க அதிகாரிகளை முதன்மைத் துறைகளில் அமர்த்தியுள்ளார். மக்கள் மனம் கவர்ந்த வல்லவர்களான முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. தலைமைச்செயலராகவும் உதயச்சந்திரன் இ.ஆ.ப. முதன்மைச் செயலராகவும் பி.உமாநாத்து இ.ஆ.ப., எம்.எசு.சண்முகம், அனு சியார்சு இ.ஆ.ப. ஆகியோர்  பிற செயலர்களாகவும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

“அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி “

என்கிறார் திருவள்ளுவர்(குறள்:506)

நாணயம் அற்றவரை, நேர்மை அற்றவரை, பதவிக்குரிய திறமை அற்றவரை, சுறுசுறுப்பு அற்றவரை, ஒழுக்கம் அற்றவரை, பண்பு அற்றவரை, தொண்டு உணர்வு அற்றவரை நம்பி எப்பொறுப்பையும் ஒப்படைக்கக் கூடாது. இதில் முதல்வர் கருத்துடன் இருப்பதால் வாழ்த்துகிறோம். இந்நிலை தொடர வேண்டுகிறோம்.

மு.க.தாலின் முதல்வராக மாட்டார்; அதற்கான நல்லூழ் அவருக்கு இல்லை;  என்றெல்லாம் ஒரு சாரார் ஏளனம்  செய்தும் கேலி செய்தும் வந்தனர். தன் மீது சாணியை எறிந்தாலும் உரமாக்கும் மன வலிமை மிக்கவர் இது குறித்தெல்லாம் கவலைப்படவில்லை. தன் இலக்கு மக்களுக்கான நல அரசை அமைப்பது. அவ்வாறு அமைந்ததும் என்னென்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே சிந்தித்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதைச்செய்வோம், இதைச்செய்வோம் என்று அறிவிப்பவர்கள் உண்டு. ஆனால், அமைதியாகச் சிந்தித்துத் திட்டமிட்டுச் செயல் முறைகளை வகுத்துக் கொண்டார்.

“தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்”

 என்னும் திருவள்ளுவர் வழியில் (திருக்குறள்:462) துறையறிவு அறிந்தவர்களுடன் ஆராய்ந்து எண்ணிச் செயல் முறையை வகுத்துக் கொண்டார். எனவே, ஆட்சிக்கு வந்ததும் திட்டமிடலுக்கு நேரத்தை வீணாக்காமல் அரிய செயல்களையும் எளிதில் முடித்து வருகிறார்.

அரசு என்றால் கட்சி; கட்சி என்றால் ஆரவார வரவேற்பு என்பதே இயற்கை.

“வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை”

என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள்:439). தான் செல்லுமிடங்களில் தரும் வரவேற்பு, தன்னைத்தானே வியக்கச் செய்து பணிக்குறைபாட்டினை ஏற்படுத்தும் எனக் கருதி அடக்கத்துடன் அரசுமுறைப் பயணங்களில் கட்சி வரவேற்பிற்குத் தடை விதித்துள்ளார். இதுவரை யாரும்  செய்யாத, ஆனால், இத்தகைய வரவேற்புளால் இடையூறுகளுக்கு ஆளாகும் பொதுமக்கள் இவற்றை வெறுக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த உயர்ந்த உள்ளத்தை வாழ்த்தாமல் எப்படி இருக்க இயலும்?

மகுடைத்தொற்றிலிருந்து மக்களைப்பாதுகாக்கப் பல்வேறு திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறார். தடுப்புப்பணியில்  ஈடுபடுவோருக்கு ஊக்கத்தொகை, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரூ.25 நூறாயிரம், தடுப்பூசிக்கு உலகளாவிய ஒப்பந்தம், மகுடைத்தொற்றிற்கு ஆளான பெற்றோர்களின் குழந்தைகள் பாதுகாப்பு மையம், மக்களுக்கு விரைந்து உதவக் கட்டளை மையம், உயிர்வளிப் பற்றாக்குறையைப் போக்க உயிர்வளி உற்பத்தி எனப் பல வகையிலும் செயலாற்றி வருகிறார்.

மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு மகுடைத் தொற்றாளர்களுக்கான கூடுதல் வசதிகள் உடைய மருத்துவமனைகள் அமைத்தல் முதலான பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார்.

“நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு”

 என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க(திருக்குறள்:520) நாள்தோறும் மக்களின் குறைகளை ஆராய்ந்து அவற்றைப் போக்கும் பணிகளில் அரசைச் செலுத்தி வருகிறார்.

செய்தித்தாள்களில் படிக்கும் செய்திகளுக்கேற்பவும் குறைகளைக் களைகிறார்.  அதே நேரம் பாராட்டவேண்டியவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துகிறார். அவற்றில் ஒன்றுதான் சேலத்தில் மூதாட்டிக்கு உதவிய இளையராணி என்பவரைப் பாராட்டி ஊக்கப்படுத்தியது. 

“செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு”

என்பது வள்ளுவர் வாய்மொழி (குறள்:389)

“மக்களின் குறைகளும் அமைச்சரின் அறிவுரைகளும் தன் காதுகட்கு வெறுப்பை விளைவிக்கக் கூடியனவாக இருந்தாலும் அவர்கள் நாட்டின் நலன்கருதிப் பொறுமையோடு கேட்கும் பண்பினையுடைய அரசன் ஆட்சியில் உலகம் நிலை பெற்றிருக்கும்” எனப் பேராசிரியர் சி இலக்குவனார் விளக்குகிறார். இதற்கேற்ப மு.க.தாலின் மக்கள் குறைகளைக் கேட்கும் பொழுது வெறுப்படையாமலும் சலிப்படையாமலும் பொறுமையாகக் கேட்டுக் குறைகளைப் போக்குகிறார். 

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்,

“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல் “

என்னும் திருவள்ளுவர் நெறிக்கிணங்க(குறள்:504) நன்கு ஆராய்ந்து இராசீவு கொலைவழக்கில் சிக்கியுள்ள அப்பாவிகள் எழுவர் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர், அவர்கள் விடுதலை தொடர்பில் குடியரசுத் தலைவருக்கு மடல் அனுப்பியுள்ளார். பேரறிவாளனுக்கு ஒரு மாதம் விடுப்பு வழங்கியுள்ளார். இதில் குடியரசுத்தலைவர் காலத்தாழ்ச்சி செய்தால் மாநில அரசிற்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவரையும்  நீண்டகாலம் சிறையில் உள்ள பிற சிறைவாசியரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும்.

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, தம் சொந்தச் செலவில் உரூ ஒரு கோடி வழங்கிக் கலைஞர் செம்மொழித் தமிழ் விருது வழங்க ஏற்பாடு செய்திருந்தார். விருது என்பது உரூ 10,00,000 தொகையாகும். இத்துடன் தகுதிச்சான்றிதழும் தமிழ்த்தாய்ச்சிலை நினைவளிப்பும் தங்கப்பதக்கமும் பொன்னாடையும் வழங்கப்பெறும். ஆண்டுதோறும் ஏப்பிரலில் விண்ணப்பங்கள் கேட்டு, மேத் திங்கள் முடிவெடுத்து, நன்கொடையாளரான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான சூன் 3-இல் விருது வழங்கப்பெறும்

முதல் விருது 2009இல் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அசுகோ பர்ப்போலா (Prof. ASKO PARPOLA) என்னும் அறிஞருக்கு வழங்கப் பெற்றது. பின்னர் இவ்விருது வழங்கப்பெறவே யில்லை. அதிமுக ஆட்சியின் காழ்ப்புணர்ச்சியால் விருதிற்கான பரிந்துரைக் கோப்புகளை உறங்க வைத்தனர். கலைஞருக்குச்செலுத்தும் உண்மையான அஞ்சலியே இவ்விருதினை வழங்குவதுதான் என நான் நக்கீரனில் எழுதியிருந்தேன். ஆனால் இன்றுவரை கலைஞர் செம்மொழி விருது வழங்கவே இல்லை. ஆனால், முதல்வர், இவ் விருதினை வழங்க மத்திய அரசிற்கு மடல் எழுதியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றதும் மத்தியில் உள்ள தேக்கத்தையும் போக்க நடவடிக்கை எடுத்துள்ளது பாராட்டிற்குரியது. மேலும் தூண்டுதலாக இருந்து கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்கப்பெற வேண்டும்.

 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்

என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள்:605)

இதற்கு மணக்குடவர், “விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும் கெடுந்தன்மையுடையார் காதலித்தேறும் மரக்கலம்” என்கிறார். இத்தகைய மத்திய அரசின் போக்கை எடுத்துரைத்தமை பாராட்டிற்குரியது.

ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையானது அண்ணா நூற்றாண்டு நூலகம். மேனாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி 16.05.2008 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார்;15.09.2010 இல் திறந்து வைத்தார். ஆனால் அடுத்து வந்த முதலமைச்சர் செயலலிதா இதனைக் குழந்தைகள் நல நலச் சிறப்பு மருத்துவமனையாக மாற்ற முயன்றார். இந்நூலகத்தைப் பள்ளிக்கல்வி வளாகத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுத்தார். உயர்நீதி மன்றத் தடையால் இந்நூலகம் தப்பியது. திருமண விழாக்களுக்கு வாடகைக்குக் கொடுக்கவும் முயன்றார். இதுவும்  உயர்நீதிமன்றத் தடையால் நிறுத்தப்பட்டது.

உயர்நீதிமன்றத்தால் தப்பிப் பிழைத்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குப் புத்தாக்கம் கொடுக்க முதல்வர் முயல்கிறார்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்(திருக்குறள் 466)

என்கிறார் திருவள்ளுவர். அண்ணா நூற்றாண்டு நூலகத்தின்  வளர்ச்சிக்குத் தடையானவற்றைச் செய்தும்  மேம்பாட்டிற்கு வேண்டியற்றைச் செய்யாமலும் அதை அழிக்கப் பார்த்தது அ.தி.மு.க. அரசு. அவ்வழிவிலிருந்து அதனை மீட்டு வருகிறார் முதல்வர்.

‘வெளிநாடு வாழ் இந்தியர்கள்’ என்கிற துறையை ‘வெளிநாடு வாழ் தமிழர் நலன்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளார் முதல்வர். இஃது எழுச்சி மிகு மாற்றமாகும். உலகத்தமிழர்கள் பயனுறத்தக்க ஏற்பாடாகும். அதே நேரம், இதனை ‘அயலகத் தமிழர்கள் நலத் துறை’ என மாற்றி தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள அந்தமான், இலட்சத்தீவு, உட்பட பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் நலன்களுக்கானதாகவும் மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அதே நேரம் முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நிலையில் உள்ள இரண்டினையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஒன்று இணையப் பயன்பாடு. எத்துறையிலும் இணையப் பயன்பாடு செம்மையாக இல்லை. முதல்வர் பொறுப்பேற்றதையும் அமைச்சர்கள் பெயர்ப்பட்டியலையும் கூட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவில்லை. பிற துறைகளிலும் மக்களுக்கு இணையப் பயன்பாட்டால் உரிய பயன்கிடைக்கவில்லை. எனவே, எல்லாத் துறைகளிலும் இணையப் பயன்பாடு முழுமையாகவும் நிறைவாகவும் அமைய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றொன்று தமிழ்வளர்ச்சித்துறையின் தக்க செயல்பாடின்மை. விருதுகள் வழங்கும் விழாக்களைச் சிறப்பாக நடத்தும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது. பார்க்கும் இடங்களில் எல்லாம் ஆங்கில் நீக்கமற நிறைந்திருப்பதற்கு இதன் செயல்பாடின்மையே காரணம். எனவே, தமிழ் வளர்ச்சித்துறை ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் முழுக்கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விருது வழங்கும் பணிகளை இயலிசைநாடக மன்றத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள கலை பாண்பாட்டுத்துறைக்கு மாற்றிவிடவேண்டும்.

குறை காணுமிடத்துக் களையும் போக்கு மாண்புமிகு முதல்வரிடம் இருப்பதால் இதனைக் கூறுகிறோம்.

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுடையது இல்(திருக்குறள்:1021)

 என்கிறார் திருவள்ளுவர்.

தன் நாட்டு மக்கள் உயர்வதன் பொருட்டு உரிய கடமையைச் செய்வதற்குச் சலிப்படையேன் என்னும் பெருமைபோல, ஒருவனுக்கு பெருமை தருவது வேறில்லை என்பது இதன் பொருளாகும். நேரம், காலம் பார்க்காமல், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைக்கும் முதல்வர் மு.க.தாலின் இத்திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். முப்பால் வழியில் நடக்கும் மு.க.தாலின் வாழ்க வாழ்க என நாம் வாழ்த்துவோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

thiru2050@gmail.com

(வைகாசி 09, 2052 / ஞாயிறு / 23.05.2021 / அன்று நடைபெற்ற மாண்புமிகு மு.க.தாலின் தலைமையிலான புதிய அரசினைப் பாராட்டும் வாழ்த்தரங்கத்தில் ஆற்றிய தலைமையுரையின் எடு பகுதி.)


Sunday, June 6, 2021

நிதியமைச்சர் தியாகராசனின் உரிமைக்குரலும் ‘ஒன்றியம்’ சொல்லாட்சியும்- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




நிதியமைச்சர் தியாகராசனின் உரிமைக்குரலும்

‘ஒன்றியம்’ சொல்லாட்சியும்

ஒன்றிய அரசின் 43 ஆவது சரக்கு-சேவை வரிகள்(G.S.T.) கூட்டம் 28.05.2021 இல் நடைபெற்றது. இதில் பேசிய தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுத்துச் சிறப்பாகத் தன் பங்களிப்பைச் செய்துள்ளார். “ஒரு மாநிலத்தின் வருவாய், மக்கள் தொகை, பொருளாதாரம், உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு போன்றவற்றின் அடிப்படையிலேயே வாக்குகளும் பேசும் நேரமும் அளிக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் அவர் தெரிவித்த  எச்சரிக்கை, “மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியங்கள் இல்லை” என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும் அவர், ஒன்றிய அரசுக்கென தனியான வாக்காளர்கள் இல்லை. “ஒன்றிய அரசு மனக்கசப்புடனும் வேண்டா வெறுப்புடனும் செயல்படும் நன்கொடையாளராக இருக்க முடியாது.” என்றும் துணிவுடன் பேசியுள்ளார்.

“மாநிலங்களிடம் இருந்து பெற்று மத்திய அரசு திருப்பித் தரும் நிதி தமிழகத்திற்கு 30% அளவுக்கே உள்ளது. ச.சே.வரி(G.S.T.) முறை அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஆட்டம் கண்டுள்ளது. அது முழு ஆய்வு இல்லாமல் கொண்டு வரப்பட்டது. ச.சே.வரி (G.S.T.) முறையில் மாற்றம் கொண்டு வந்தால்தான் அது நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது” என்றும் தெளிவாகப் பேசியதன் மூலம், மாநில அரசின் உரிமைகளையும் மத்திய அரசின் கடமைகளையும் தெரிவித்துள்ளார் எனலாம்.

“மாநிலத்தில் தன்னாட்சி! மத்தியில் கூட்டாட்சி!” என்னும் முழக்கம் மீண்டும் வலுப்பெற வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்தும் வகையில் பேசிய அமைச்சர் தியாகராசனுக்கும் அவரது பின்புலத்தில் உள்ள முதலமைச்சர், தமிழக அரசிற்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீதிக்கட்சித் தலைவரின் வழித்தோன்றல் மாநில நீதிக்காகக் குரல் கொடுத்ததில் வியப்பில்லை. இஃது அவரது குரல் மட்டுமல்ல. நீதிக்கட்சி வழி வந்த தி.மு.க.வின் குரலும் இதுதான் என்பது மகிழ்ச்சிக்குரியது.

அவர் உரையில் இடம் பெற்ற முதன்மையான சொல்லாட்சி ‘ஒன்றிய’ அரசு என்பதாகும். இது குறித்தே இப்போது நாம் காணப்போகிறோம்.

ஒன்றியம் என்பது இந்திய அரசியல் யாப்பு தந்துள்ள சொல்லாட்சியே! இதைப் புரியாமல் சிலர் எதிர்க்கிறார்கள். நாளிதழ் ஒன்றின் செய்தியாளர் இது குறித்துக் கட்டுரை எழுதியுள்ளார். அதில்,

“’மத்திய’ அரசு தெரியும். ‘மைய’ அரசு தெரியும். கொஞ்சம் தமிழ் கற்ற புலவர்கள் ‘நடுவண்’ அரசு என்று கூறுவர். ஆனால், ‘மத்திய’ என்ற பயன்பாட்டை மறுக்கவேண்டும் என்பதற்காக ஒன்றியம் பயன்படுத்தப்படுகிறது” என்கிறார்.

“ஒன்றியம் என்று, இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு தமிழக அமைச்சரால் பேச முடிகிறது. ‘ஒரு தேசம்’ என்ற சிந்தனையை, இளைஞர்கள் மனத்தில் இருந்து, முளையிலேயே கிள்ளியெறியவே, ‘ஒன்றியம்’ என்ற சொல், பயன்பாட்டுக்கு வந்துள்ளது”  என்கிறார் அவர்.

ஒரு கருத்து குறித்த விவாதம் எழுப்பப்பட்டதெனில் அதைப்பற்றி நன்கு ஆராய்ந்து நம் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பதே அடிப்படை ஞானம். ஆனால், ஆளாளுக்கு இது குறித்துத் தான்தோன்றித்தனமாகக் கருத்து தெரிவிக்கின்றனர். முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும் “ஒன்றியம் என்று பயன்படுத்தக்கூடாது. மத்திய அரசு என்றுதான் பயன்படுத்த வேண்டும்” என்று சொல்வதுதான் வியப்பாக உள்ளது.

இந்திய அரசியல் யாப்பு ஒன்றியம் என்றுதான் குறிக்கிறது. அவ்வாறிருக்க அச்சொல்லைப் பயன்படுத்துவதைத் தவறாகக் குறிப்பது ஏன்?

இதன் முதல் வரியே “இந்தியா, அஃதாவது பாரதம் அரசுகளின் ஒன்றியம்” என்கிறது. Union of States என ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. ‘State’ என்றால் அரசு என்றுதான் பொருள். நாம் மாநிலம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகிறோம். அரசியல் யாப்பின் படி ஒன்றிய அரசும் ‘State’  தான். இந்தியிலும் ‘இராச்சியங்களின்/அரசுகளின் ஒன்றியம்’ என்றுதான் குறிக்கப்பெற்றுள்ளது. இங்கே இராச்சியம் என்றால் அரசுதான். மாநிலம் அல்ல!

அது மட்டுமல்ல! இந்திய அரசியல் யாப்பில் மத்திய அரசாங்கம் என்பது 6 இடங்களில் மட்டுமே குறிக்கப்பெற்றுள்ளது. அதுவும் கூட்டுறவு அமைப்புபோன்ற இடங்களில்தான் குறிக்கப் பெறுகிறது. ஆனால் ஒன்றியம் என்பது 435 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது.

மேலும், ‘ஒன்றியம்’ எனத் தனி இயற்பிரிவே ஐந்தாவதாக அமைந்துள்ளது.  இதில் 52 முதல் 151 வரையிலான 100 பிரிவுகளும் ஒன்றியம் குறித்தே கூறுகிறது.

இந்திய அரசியல் யாப்பின் 300 ஆவது பிரிவில், “இந்திய அரசின் மீது வழக்கு தொடுப்போர் இந்திய ஒன்றியம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம், அரசும் இப்பெயரைக் கொண்டு வழக்கு தொடுக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் யாப்பு ஒன்றியம் என்பது குறித்து இத்தனை முதன்மையை அளித்திருக்கும் பொழுது, “அந்தச் சொல்லில் தப்பில்லை. அதன் பயன்பாட்டுக்குப் பின், பிரிவினைச் சிந்தனையும், திராவிட அரசியலும் இருக்கிறது” என எழுதுவதும் பேசுவதும் எங்ஙனம் சரியாகும்? 

ஒன்றிய அரசை மத்திய அரசு/ மைய அரசு/ நடுவண் அரசு என்று சொல்லி அதிகாரங்களைக் குவித்துக் கொண்டதனால், மாநில அரசுகள் உரிமை இழந்து வாடுகின்றன. இப்போக்கு நிறுத்தப்பட ஒன்றிய அரசு என்ற அரசியல் யாப்பின்படியான சொல்லாட்சி பயன்பாட்டில் நிலைக்க வேண்டும்!

மாநில அரசுகள் பந்தாடுப்படுவதற்கும் இந்தத் தவறான சொல்லாட்சியே காரணம். எனவே, இனி நாம், அரசியல்யாப்பின்படியான ஒன்றிய அரசு என்று சொல்லி உண்மையான ஒன்றிய அரசைப் போற்றுவோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

 



Followers

Blog Archive