Wednesday, September 13, 2023

இந்தித்திணிப்பு : அரசு குருடாகவும் செவிடாகவும் இருக்கலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




இந்தித்திணிப்பு : அரசு குருடாகவும் செவிடாகவும் இருக்கலாமா?

நாட்டு மக்கள் குறைகளை அரசு திறந்த கண் கொண்டு பார்க்க வேண்டும்; மூடாச்செவி கொண்டு கேட்க வேண்டும். மூடிய கண்ணினராயும் காதினராயும் இருப்பின் மக்கள் துன்புறுவதை அரசு அறிந்து களைய வாய்ப்பில்லாமல் போய்விடும். அதனால் அந்த அரசு நிலைக்காமல் போய்விடும். எனவேதான்,

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.   (திருக்குறள் – 555)

என்றார் தெய்வப்புலர் திருவள்ளுவர்.

    மக்களுக்குக் கிடைக்கவேண்டியவை கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமை அல்லது காலம் கடந்தும் கிடைக்காமை, பணி உரிமைப் பயன்கள் பெறுவதில் சிக்கல், நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் இடர்ப்பாடுகள், வேலை வாய்ப்போ தொழில் வாய்ப்போ இன்றி அல்லலுறுதல் போன்று பலவகையாக மக்கள் குறைகள் உள்ளன. அவற்றில் இன்றியமையாத பொதுவான ஒன்றாகச் சேர்க்கப்பட வேண்டியது மொழிக்கு ஏற்படும் தீங்காகும்.

தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு!

தமிழர் வாழ்வே தமிழின் வாழ்வு!

என்பதே பேராசிரியர் சி.இலக்குவனார் வற்புறுத்தி- வந்த கோட்பாடு ஆகும். எனவே, நம் வாழ்வாக விளங்கும் தமிழுக்கு இன்னல் வரா வண்ணம் காக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

மாநிலங் காவலனாவான் மன்னுயிர் காக்குங்காலை

தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்

ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்

ஆனபயம் ஐந்தும்தீர்த் தரசாள்வான் அல்லனோ?’ (பெரியபுராணம்)

எனச் சேக்கிழார் கூறுகிறார். அஃதாவது, நாட்டுக்காவலில் இடையூறு ஆள்வோராலும், உடன்இருக்கும் ஏவலர், நட்புவட்டம், உறவு வட்டம் ஆகியவற்றாலும் பகைவராலும் கள்வராலும்  பிற உயிர்களாலும் தீமை வராமல் காக்க வேண்டும் என்கிறார்.

இவற்றில் சேக்கிழார் முதலிடம் தருவது ஆள்வோரால் தீங்கு ஏற்படாதிருக்க வேண்டும் என்பதையே!

ஆள்வோர் திட்டங்களில் இந்தி, சமற்கிருத, ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுகின்றனர். வலைத்தளப் பெயரிலும் சமற்கிருதப்பெயர் வைக்கின்றனர். முழக்கங்களிலும் இந்தி அல்லது சமற்கிருதம். தமிழை ஒதுக்கிவிட்டுஇந்தி முதலான பிற மொழிகளைக் கற்பிக்கும் பள்ளிகளுக்கு இசைவு தருகின்றனர்.   இவ்வாறு தமிழ்மொழிக்கு வரம் தீங்கில் முதலிடம் வகிப்பது அரசினால் வரும் தீங்குகளே!

அரசரின் ஏவலராகிய பணியாளர்களாலும் சுற்றத்தார் நடத்தும் கல்வி நிறுவனங்களாலும் தமிழுக்குத் தீங்கு நேர்ந்து கொண்டுள்ளது. தமிழ்ப்பகைவர்களாலும் தமிழுக்கு ஏற்பட்டு வரும் தீங்கு அளவிடற்கரியது.

கள்வர் என்பது, ஏய்ப்பவர், வஞ்சிப்பவன், ஏமாற்றுபவர் என யாரையும் குறிக்கும்.

நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறம் இன்றி

வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி

எனப் பாரதியார் குறிப்பிடும் வாய்ச்சொல் வீரர்களாகிய அரசியலாளர்களும் இதில் அடக்கம்.

பிற உயிர்கள் என்னுமிடத்தில் ஒன்றிய அரசு, பிற அரசு, பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் முதலியவற்றின் மூலம் இந்தி, ஆங்கிலத் திணிப்புகளுக்கு இடமளிப்பதைச் சேர்க்க வேண்டும்.

பிறமொழித் திணிப்புகளைக் களைந்தால் மட்டும் போதாது. தமிழ்பிழையின்றிக் குறிக்கப் பெற வேண்டும்; செவ்விய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். தமிழை எழுதுவோர் எந்த அளவிற்குத் தமிழைக் கொலை செய்ய முடியுமோ அந்த அளவிற்குக் கொலை செய்து வருகிறார்கள். இது குறித்து அரசு கவலைப்படுவதில்லை. மறுபுறம் கணிணி வழி மொழி மாற்றம் என்பது சித்திர வதையாக உள்ளது. எடுத்துக்காட்டிற்கு ஒரு முகவரி தமிழில் இவ்வாறு குறிக்கப்பெறுகிறது: “ தமிழ் வால்ச்சர் வீலம்தமீஸ்சேலை”. என்னவென்று புரிகிறதா? “தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை” என்பதுதான் அவ்வாறு குறிக்கப் பெற்றுள்ளது.

இந்தித் திணிப்பை எதிர்ப்பதாக ஒரு புறம் முழங்கிக் கொண்டே மறு புறம் இந்தியை அரியணையில் வீற்றிருக்கச் செய்கிறார்கள். அரசினர், காணாக் கண்ணினராகவும் கேளாக் காதினராகவும் இருப்பதால்தானே இதுபோன்ற மொழிக் கொடுமைகளை அறியாமல் இருக்கிறார்கள்.

அரசுத் திட்டங்களின் பெயர்கள் கூட இந்தியில்தான். “போஷாக் அபியான், கலா உத்ஸவ், ராஷ்ட்ரிய மத்யமிச்ஷிக்ஷா, நிபுண் பாரத் திட்டம், நிபுன் பாரத் திட்டம், ராஷ்ட்ரியஉச்சதர்சிஷா அபியான், வீர் கதா” – இவையெல்லாம் என்ன தெரியுமா? தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சில திட்டங்களின் பெயர்கள். இந்தி மாநிலத்தில் அல்ல, தமிழ் மாநிலத்தில் பயன்படுத்தப்படும் பெயர்கள். இவற்றைப் பயன்படுத்தச் சொல்லும் நிலையில உள்ளவர்களுக்கும் மானமில்லை. பயன்படுத்தும் துறையினருக்கும் மானமில்லை. (உள்ளவாறு பயன்படுத்திக் காட்ட விரும்பியமையால் கிரந்தச்சொற்கள் பயன்படுத்த நேர்ந்தன.)

இணைய தளங்களின் பெயர்களில்கூட இந்தி அல்லது சமற்கிருதத் தொடர்களைப் பயன்படுத்துகிறார்கள். அரசின் இந்தக் கொடுமைகள் பற்றி முன்னமே கூறியிருக்கிறோம். இப்போது குறிப்பிட விரும்புவது கணிணியில் புகுத்தப்படும் இந்தித் திணிப்பு குறித்தே ஆகும்.

நாம் தேடு பொறியில் நமக்கு வேண்டப்படும் விவரத்திற்கான சொல்லைக் கணியச்சிட்டால் விவரப் பக்கம் பெருமளவில் இந்தியிலேயே வருகிறது. முன்பெல்லாம் கேட்கும் மொழிக்கேற்ப விவரங்கள். செய்திகள், படங்கள், காணொளி போன்று தமிழிலோ ஆங்கிலத்திலோ காட்டப்படும். அவை யாவும் இந்தியே!  நாம் கேட்கும் விவரங்கள் குறித்த குறிப்புகளும் இந்தியே! சான்றுக்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

காலமான நடிகர்-இயக்குநர் மாரிமுத்து குறித்து அறிவதற்காக அப்பெயரை முதலில் தமிழிலும் பின்னர் ஆங்கிலத்திலும் கணியச்சிட்டு விவரம் தேடினேன்.

விவரங்கள் இந்தியில்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன.  இவ் விவரம் மட்டுமல். மாநாகராட்சிகள், அரசுத் துறைகள் எனப் பலவற்றிற்கும் விவரம் தேடினேன். இந்தி! இந்தி! இந்திதான்!  வந்த விவரத்தைத்தான் தலைப்புப் படத்தில் சேர்த்துள்ளேன்காண்க. ஆனால், மூன்று அல்லது நான்கு நாளுக்கு ஒரு முறை தமிழிலும் அளித்து நாடகமாடுகிறார்கள்.

இந்தி விவரத்தைச் சொடுக்கினால் தமிழ் அல்லது ஆங்கிலம் வரலாம். ஆனால் என்ன வந்துள்ளது என்று தெரியாமல் எவ்விவரத்தைச் சொடுக்குவது? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் விவரம் அறிய விரும்புகிறோமா? இந்தி அறிய விரும்புகிறோமா? ஒன்றிய அரசின் உந்துதலால் இ்நதித் திணிப்பு நடைபெறுகையில் தமிழக  அரசு முனைப்பாகச் செயற்பட்டு அதை அகற்ற இயலாதா?

ஒரு நாடு ஒரு மொழி என்று ஒன்றிய அரசு செயற்படுகையில் நாம் நம் நாடுநம் மொழி என்று செயற்பட வேண்டாவா? அரசு என்ன செய்யப்போகிறது? இந்திக்கு இடமளித்து இருக்கும் இடத்தை இழக்கப் போகிறார்களா? தமிழுக்கு வாழ்வளித்துத் தங்களுக்கும் வாழ்வளித்துக் கொள்ளப் போகிறார்களா? தமிழன்பர்களே நீங்கள் உறங்காமல் அரசிற்கு விழிப்பூட்டி வாருங்கள்!

தமிழா விழிதமிழே விழி!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

Sunday, September 10, 2023

மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடலாமா?

மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடக் கூடாது எனக் கூக்குரல்கள் எழும்புகின்றன. மூட நம்பிக்கைகளை அறுவடை செய்வோர், தங்கள் அறுவடைக்குக் குந்தகம் விளையுமோ என அஞ்சி இவ்வாறு எதிர்க்கின்றனர்.

உலக நாடுகள் அனைத்திலுமே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சீர்திருத்தக் கருத்துகள் அந்தந்த நாட்டு அரசுகளின் மூலம்தான் நிறைவேறியுள்ளன. சீர்திருத்தவாதிகள் தங்கள் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அவற்றிற்குச் சட்ட ஏற்பு கொடுத்து நிலையாக மாற்றுவதற்கு அரசுகளே காரணமாக அமைகின்றன. இந்தியாவிலும் அப்படித்தான்.

1829இல் இராசாராம் மோகன்ராய் துணையுடன் வில்லியம் பெண்டிங்கு, சதி என்னும் உடன்கட்டை ஏறுதலை ஒழிக்க முன்வந்தார். மூடநம்பிக்கையாலும் மதவெறியாலும் வழி வழி வழக்கத்தாலும் நிலவிய பலதார மணமுறை. குழந்தைகள் திருமணம் போன்றவற்றைத் தடை செய்யும் சட்டம் கேசவு சந்திரசென் முயற்சியால் 1872 ஆம் ஆண்டு சட்டம்இயற்றப்பட்டது. இச்சீர்திருத்தங்களுக்குக் காரணம் அரசின் குறுக்கீடுதானே.

தொடர்வண்டியில் கூடச் சாதிப் பாகுபாடு பார்க்கப்பட்டது. சென்னை- ஆற்காடு தொடரி(1856 முதல் இயங்கியது), சென்னை -அரக்கோணம் தொடரி(1871 முதல் இயங்கியது), சென்னை-மேட்டுப்பாளையம் தொடரி(1883 முதல் இயங்கியது) ஆகியவற்றில் மக்கள் அனைவரும் ஒன்றாக மதிக்கப்பட்டுச் சமமாக உட்கார்ந்து பயணம் செய்யத் தொடங்கினர்.

ஆனால், பிராமணர்கள் இதற்கு எதிர்ப்பாக இருந்தனர். அன்னி பெசண்டு அம்மையாரால் தொடங்கப்பெற்றது  புதிய இந்தியா நாளிதழ். இதன் 2.11.1914 ஆம் நாளிட்ட இதழில் முன்பதிவு செய்யப்பெற்ற “இருப்பூர்திப் பெட்டிகள் அல்லது தூய மக்கள்” என்னும் கட்டுரை(Reserved Railway Carriage or Clean Peoples, New India daily, dated 2.11.1914)  ஒன்று வெளிவந்தது. இதில் தொடரியில் அனைவரும் சமமாக அமர்ந்து செல்லும் ஏற்பாட்டிற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுதப்பெற்றது.. “பிராமணர்கள் மிகவும் தூய்மையானவர்கள்; அவர்கள் தூய்மையற்ற பிற சாதியினருடன் சமமாக அமர்ந்து பயணம் செய்ய விரும்பாமையால் அவர்களுக்கெனத் தனிப்பெட்டிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடப்பட்டது.   ஆனால், இத்தகைய குப்பை வாதங்களுக்குப் பிரித்தானிய அரசு செவி கொடுக்கவில்லை.(விடுதலை, நாள் 24.09.2022)  என்றபோதும் இந்திய விடுதலைக்குப் பின்னரும் தொடர் வண்டிகளில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதைப் பழைய திரைப்படங்களில் காணலாம். இக்கொடுமைகளை அரசு தொடராமல் உரிய நீதி வழங்கக் குறுக்கிட்டதால்தான் இப்பொழுது தொடர் வண்டிகளில் சாதிக்கொடுமைகள் அரசால் பின்பற்றப்படவில்லை. 

தீபாவளியன்று வெடி வெடிக்கும் பழக்கம் இடையில் வந்ததே. சீனர்கள் வெடி வெடித்து ஒலி எழுப்பித் தீய ஆற்றல்களை விரட்டுவதாக நம்பினர். இவர்களிடமிருந்து புத்தசமயத்தின் மூலம் 12 ஆம் நூற்றாண்டு அளவில் இந்தியாவிற்கு அறிமுகமாகியி யிருக்கலாம். ஆனால் இந்தப் பழக்கம் பெரிதாக வளர்ந்து பணம் வீணாவதுடன் காற்று மாசுபாடுகளையும் பெருக்கியது. அண்மைக்காலங்களில் அரசு காற்று மாசினைத் தவிர்ப்பதற்காக வெடிவெடிப்பதற்குப் பல கட்டுப்பாடுகளை விதித்து அதன் மூலம் அப்பழக்கத்தைப் பெருமளவு குறைத்துள்ளது. எனவே, அரசின் குறுக்கீடுகள் நாட்டுநலனிற்கே எனப் புரிந்து கொள்ளலாம்.

பயிர் வளரும் பொழுது உடன் வளரும் களைகளை அகற்றினால் அது பயிருக்கு நன்மை செய்வதா? அல்லது பயிர் வளர்ச்சியில் குறுக்கிடுவதா? அதுபோல்தான் குமுக நீதிக்குக் குறுக்கே வரும் மூட நம்பிக்கைககளையும் அநீதிகளையும் ஒழிக்க அரசு குறுக்கிடுவதுதானே முறையாகும்.

இவ்வாறு மக்களுக்கு அநீதி இழைத்த மூடநம்பிக்கைகள் எல்லாம் அரசுகளின் குறுக்கீடுகளால்தான் அகற்றப்பட்டன சமநீதி வழங்கப்பட்டது. இப்பொழுது மக்களின் நம்பிக்கை எனக் கூறப்படுவது வருணாசிரமம் குறித்துத்தான். எனவே வருணாசிரம அடிப்படையிலேயே கட்டுரையைத் தொடருவோம்.

“நீதித்தலங்களில் பிரமாணம் செய்யவேண்டிய பிராமணனைச் சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்லச் செய்யவேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்.”(மனு, அத்தியாயம் 8, சுலோகம் 113-115.) என்கிறது வருணாசிரமம். ஆனால் அரசால், நீதிமன்றங்களில் வாக்குமூலம் அளிப்பவர்கள், எவ்வகைச் சாதிப்பாகுபாடுமின்றித் தாங்கள் நம்பும் கடவுள் அல்லது அறநூல் அல்லது சமய நூல் அல்லது மனச்சான்றின்படி உறுதி தெரிவிக்கலாமே தவிர, அவரவர் சாதிக்கேற்ப வாக்குமூலம் அளிக்க வேண்டியதில்லை. அரசின் குறுக்கீடு இல்லாவிட்டால் வருணாசிரமம் சொல்லும் வன்முறையே நிலவியிருக்கும்.

 “சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.” (மனு, .8 சு.281.) என்பது வருணாசிரமம். இதனால்தான் சங்கராச்சாரியார்கள் ஆசனத்தில் அல்லது உயர் பீடத்தில் உட்கார்ந்து கொண்டு குடியரசுத்தலைவர் போன்ற உயர் பதவியில் இருந்தாலும்,  கீழான இடத்தில் உட்கார வைக்கிறார்கள். இதில் அரசு குறுக்கிடடால்தான் நீதி கிடைக்கும். ஆனால் உயர் நீதிபதிகளும் உயர் அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும் வருணாசிரம அடிமையாக இருப்பதால்தான் இதில் மாற்றமில்லா அவல நிலை நீடிக்கிறது. இந்த நிலை மாற அரசின் குறுக்கீடு தேவைதானே.

பிராமணக் குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவ னாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது. (மனு, அ. 8, சு. 20) என்கிறது வருணாசிரமம்.  சூத்திரன் என்று யாரை வருணாசிரமம் ஒடுக்கி ஒதுக்குகிறதோ  அப்படிச் சொல்லப்படுபவனைச் சட்டம் நீதிபதி பதவியில் அமர்த்தி அழகு பார்க்கிறது.  சட்டத்தின்படியும் சட்டத்தின்படியான அனைவருக்குமான கல்வியுரிமை, வேலைவாய்ப்புரிமை போன்றவற்றாலும் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீட்டாலும் தகுதியுடைய யாரும் நீதிபதியாகலாம்.

“அரசன் சூத்திரனைப் பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்குப் பணிவிடை செய்யும்படிக் கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்.”(மனு,அ.8.சு.410.) என்பது வருணாசிரமம். இப்போது அரசனோ அரசுப் பொறுப்பாளர்களோ அவ்வாறு செய்தால் அத்தகைய பாகுபாட்டளாரைத்தான் சட்டம் தண்டிக்கும்.

பிராமணன் மூடனானாலும் அவனே மேலான தெய்வம்.” (மனு- அ.9 சு. 317),  “பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூசிக்கத்தக்கவர்கள் ஆவார்கள்.” (மனு- அ. 9 சு.319.). என்பன வருணாசிரமம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் வள்ளுவத்தின்படி உயர்வு தாழ்வு கற்பிக்காமல் அனைவரையும் இணையாகக் கருதுவதே சட்டம்.

வருணாசிரமம் குறித்து சந்திரசேகரேந்திர சரசுவதி சொன்ன பொன்மொழி எனப்படும் புண்மொழிகள் எண்ணற்றன. அவற்றுள் சில .:           “மெய்யாகவே அவரவருக்கும் தங்கள் சாதியில் இருந்து கொண்டு, அதற்கான தொழிலைச் செய்து கொண்டு, அதற்கென்று ஏற்பட்டுள்ள தனிச் சடங்குகள், விதிகள், ஆசாரங்கள், தருமங்களைப் பின்பற்றிக் கொண்டிருப்பதில் சந்துசுட்டியும்(மகிழ்ச்சியும்) பெருமிதமும் (pride) இருந்தன.” ” சீர்திருத்தக் காரர்களால் நம் குறைகளுக்கெல்லாம் இருப்பிடமானது என்று நினைக்கிற வருண தருமம் என்ற தனியம்சம் இருக்கிற நம் தேசம்தான் மற்ற எல்லாத் தேசங்களையும்விட தத்துவத்தில், குணசீலத்தில், கலைகளில், அறிவில் எல்லாவற்றிலுமே நிறைந்து தலைசிறந்து நிற்கிறது.” “அதாவது, செத்தாலும் சுயதரருமத்தை விடக்கூடாது. இப்போது மட்டும் சாகாமல் இருக்கப் போகிறோமோ என்ன?” எந்தத் தொழிலையுமே அந்தப் பரம்பரையில் வந்தவன் மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்.” ” பிராமணப் பெண்கள் தட்சணை தர முடியாமல் அதற்காக இன்னொரு சாதிக்காரனைத் திருமணம் செய்து கொள்வது சரியல்ல. பெற்றோர்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் வாழை மரத்திற்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து விடுங்கள். பிறகு அந்த வாழை மரத்தை வெட்டி விடுங்கள். இப்போது அந்தப் பெண் விதவையாக ஆகி விட்டாள் என்று விதவைக் கோலம் கொடுத்து விடுங்கள். அந்த நோன்பை வாழ்நாள் முழுமையும் இருந்து கன்னியாகவே அவள் நம் தருமத்தைக் காப்பாற்ற வேண்டும்!”

வருணாசிரமத்தை விளக்கும் செயேந்திர சரசுவதி,” நால் வருணப்பிரிவுகளில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் சமைத்ததை மற்றொரு பிரிவினர் சாப்பிடக்கூடாது. ஒருத்தரோடு ஒருத்தர் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது. ஒருவர் செய்யும் காரியத்தை மற்றொருவர் செய்யக்கூடாது” என்று இப்படி எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன. என்று கூறியுள்ளார். “தலித்து மக்களெல்லாம் குளித்து விட்டுக் கோயிலுக்குப் போகவேண்டும்” “தலித்துகள் அனைவரும் குளித்திருந்தால் அங்கே சாமி ஊர்வலம் செல்லலாம்.””வேலைக்குச் செல்கிற பெண்கள் எல்லாம் விபச்சாரிகள்” “விதவைப் பெண்கள் தரிசு நிலங்கள்” என்றெல்லாம் செயேந்திரர் சொன்னது வருணாசிரமத்தை நிலை நாட்டவே.

பிராமணர்கள் உணவுவிடுதி, பிராமணர்கள் சாப்பிடுமிடம் என்றெல்லாம் மறைந்த காரணம் அரசின் குறுக்கீட்டால்தான். தெருக்களில் உள்ள சாதிப்பெயர்கள் அகற்றப்பட்டதன் காரணமும் அரசின் குறுக்கீடுகளே.

இவ்வாறெல்லாம் மக்களிடையே நச்சு விதைக்கப்படுவதால்தான்  குலக்கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நல்ல வேளையாக அது விரட்டப்பட்டது.  இப்பொழுது வேறு முறைகளில் புதிய கல்விக்கொள்கை மூலம் நுழைய பார்க்கிறது. இவற்றை யெல்லாம் புரியாமல் ஆட்டு நாயகர்கள்உளறுவது அவர்களுக்கும் வரும் தலைமுறையினக்கும் பெருங்கேடு என்பதை உணர வேண்டும்.

இன்றும் கல்விநிலையங்களில் அலுவலகங்களில் பொது இடங்களில் பேருந்துகளில் தொடர் வண்டிகளில் தீண்டாமை இருப்பதன் காரணம் வருணாசிரமப் பாதிப்பே. அரசு தீண்டாமை உறுதி மொழி எடுததால் மட்டும் போதாது. குறுக்கிட்டுக் கடுமையான நடவடிக்கையைத் துணிவுடன் எடுத்து அவற்றை நிறுத்த வேண்டும். வருணாசிரமம் குறித்த பரப்புரைகளும் செயல் திட்டங்களும் இருக்கும் வரை அதற்கான எதிர்க்குரல்களும் எழுப்பப்படத்தான செய்ய வேண்டும். அரசுகளும் குறுக்கிடத்தான்  வேண்டும். மக்கள் நீதிக்கு எதிரானவை முற்றிலும் அகற்றப்பட்டால்தான் நாடு நலம் பெறும் மக்கள் வளம் உறுவர்

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய் (திருவள்ளுவர், திருக்குறள் 848)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

Thursday, September 7, 2023

சனாதனம்: உதயநிதிக்கு நன்றி!- இலக்குவனார் திருவள்ளுவன்

 




சனாதனம்: உதயநிதிக்கு நன்றி!

உதயநிதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது பா.ச.க.தானே! செல்லாக்காசாகப் போகும் பாசகவைச் செல்லுபடியாக்க வழி வகுத்ததால் பா.ச.க.தானே நன்றி சொல்ல வேண்டும் என்கிறீர்களா? மறுபுறம், இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகத் தமிழ்நாட்டில் இருந்த உதயநிதி தாலின் இன்றைக்கு இந்தியாவில் பேசு பொருளாக ஆகி உள்ளார். அதற்காகப் பா.ச.க.விற்கு உதயநிதிதானே நன்றி சொல்ல வேண்டும் என எண்ணுகிறீர்களா? இரண்டும் உண்மைதான். ஆனால், சனாதனம் என்பது குறித்து இந்தியா முழுவதும் பேசும்படிச் செய்ததற்கும் உலகின் கவனத்தைத் திருப்பியதற்கும் தமிழுலகும் அறவாணர்களும் உதயநிதிக்கு நன்றி சொல்லித்தானே ஆக வேண்டும்.

சனாதனத்தை எதிர்ப்பவர்கள் அதுகுறித்துப் படித்தவர்களே. அதனை ஆதரிப்பவர்கள் சனாதனம் குறித்துப் படிக்காதவர்களும்  அது குறித்துத் தவறாக எழுதப்பெற்ற புகழுரைகளைப் படித்து அறியாமையில் மூழ்கியவர்களும்தான்.

சனாதனத்திற்கு எதிரான பேச்சு இதற்கு முன்பும் பலமுறை பலராலும் பேசப்பட்டுள்ளது.  விழுப்புரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய தொல்.திருமாவளவன் (26, மார்ச்சு,2021, செய்தியிதழ்கள்) “சனாதனத்தை வேரறுப்போம், சனநாயகத்தைப் பாதுகாப்போம்!’  எனப் பேசியுள்ளார். இவ்வாறு அவ்வப்பொழுது அனைவரும் பேசி வரும் செய்திதான். ஆனால், இப்போது உதயநதி நல்ல உவமையுடன் மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.

உவமையை உவமையாகத்தான் பார்க்க வேண்டும். பசுபோல் சாதுவானவன் என்றால் எத்தனைப்படி பால் கறக்கலாம் என்று கேட்கக் கூடாது.

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.(திருக்குறள் 624)

என்கிறார் திருவள்ளுவர். கரடுமுரடான பாதையாக இருந்தாலும் கடந்து சென்று பாரத்தை இழுத்துச் செல்லும் எருதினைப்போன்ற விடாமுயற்சி உடையவனுக்கு வரும் துன்பமே துன்பப்படும் என்கிறா் அவர். இதனால் விடா முயற்சி உடையவனை எருது என ஏசுகிறார் திருவள்ளுவர் என்று சொல்லக் கூடாது.

இவைபோன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடததிய மாநாட்டில் “சனாதன எதிர்ப்பு” என்று குறிப்பிடாமல் “சனாதன ஒழிப்பு மாநாடு” என்று குறிப்பிட்டதை அவர் பாராட்டியுள்ளார். அப்பொழுதுதான் , “சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, முடக்குக் காய்ச்சல்(Dengue fever),  முறைக் காய்ச்சல்(Malaria), மகுடை(Corona), இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் சனாதனமும்,” என்று மக்களுக்கு மரணப்பரிசு தரும் நச்சு நோய்களைப் பூண்டோடு ஒழிப்பதுபோல் சனாதன முறையை ஒழிக்க வேண்டும் என்று சொல்ல வந்தவர் நச்சு நோய்களைக் குறிப்பிட்டு உவமையாகச் சொல்லியுள்ளார்.

சனாதனம் என்பதை உயர்வாகவும் உலகிற்கே பொதுவானதாகவும் கூறுகிறார்களே. அவ்வாறல்ல என்பதைச் சனாதனவாதிகளே கூறுகின்றனர். அதற்கு ஒரு சான்று: காஞ்சி காமகோடி மடத்தின் 68ஆவது ஆச்சாரியரான சந்திரசேகர சரசுவதி, “வருண தருமமே சனாதன தருமம்” எனப் பல முறை குறிப்பிட்டுள்ளார். இவரது பேச்சுகள் ‘தெய்வத்தின் குரல்’  தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. வருண தருமம் அல்லது வருணாசிரமம் என்றால் என்ன? அவரவர் சாதிப்பிரிவிற்கேற்ற தொழில் புரிவது. இதுவே அவரவருக்கு விதித்த கடமையாகும்.  சாதிக்கொரு கடமையை வலியுறுத்துவதுதான் சனாதனம் என்பது தெளிவாகிறது. மக்களில் ஆண் பிராமணர்களை மட்டும் உயர்த்தியும் பிற வகுப்பாரையும் பெண்களையும் இழிவுபடுத்தியும் வரையறுக்கும் வருணாசிரமத்தின் மறு வடிவமான சனாதனம்  அனைவரும் சமம் என்பதற்கு எதிராக உள்ளமையால் ஒழிக்கப்பட வேண்டியதுதானே! இதில் என்ன ஐயம் இருக்கிறது?

சனாதனம் சொல்வன என்ன? “யமி தன் உடன்பிறந்தவனான யமனை  உடலுறவுக்கு அழைக்கிறாள்” என்று கூறுவது இரிக்குவேதத்தின் சனாதனம். “வேதங்களிலும் உடநிடதங்களிலும் மனுசுமிருதியிலும் கீதையிலும் சனாதனம் குறித்துக் கூறப்படுகின்றன. நீண்ட தொலைவு பயணம் மேற்கொண்ட ஒருவரின் மனைவி அவனுடைய உறவினர் அல்லது பணியாளரிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்பது அருத்த சாத்திரம் கூறும் சனாதனம்.” “ அருத்தசாத்திரத்தைப் பொறுத்தரை சனாதனமாகிய குலத் தருமமே நீதியாகும். பிராமணன் எந்த வகைக் குற்றத்திற்காகவும் தண்டிக்கத்தக்கவன் அல்லன் என்கிறது அது. அரச தருமம் நால்வகைப்பட்ட வருணாசிரமத் தருமத்தைப் போற்ற வேண்டும் என்கிறது. ஒருவன் பல மகளிரை மணந்து கொள்ளலாம் என்றும் தன் மனைவியிடத்து வேறு ஒருவன் மூலம் புதல்வனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது.” “வேதம் ஓதுகிறவர்களைக் கடவுள் எனச் சொல்வதன் மூலம் வேதம் ஓதும் பிராமணர்களைக் கடவுளாகத் திரிக்கிறது (அருத்தசாத்திரம்) சனாதனம்.” “பெண்கள் இழிவானவர்கள்(மனுநீதி, தரும சூத்திரங்கள், அருத்த சாத்திரம், காமசூத்திரம், பகவத்துகீதை முதலியன) என்பது சனாதனம்.”

 “புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக் குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்”(மனு 2.214) எனப் பெண்களைக் காமப்பித்தர்களாகக் காட்டுவது சனாதனம். “பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றைக் கேட்பீராக” (மனு9.19) எனப் பெண்களை ஒழுக்கங்கெட்டவர்களாகக் கூறுவதும் சனாதனம்தான்.”

“மக்களிடையே மாறுபாட்டையும் வேறுபாட்டையும் விதைத்து அல்லொழுக்கத்தைப் பரப்பும் சனாதனம் எவ்வாறு நம் மண்ணிற்கு ஏற்ற பண்பாடாகத் திகழ முடியும்? நம் மண்ணிற்கு என்றில்லை, உலகில் உள்ள யாவர்க்குமே மக்களில் ஒரு பகுதியினரைக் கடவுள் நிலையில் உயர்த்தியும்  பிற பகுதியினரையும் பெண்களையும் இழிபிறப்பாகக் கூறும் சனாதனம் என்றுமே ஏற்றதாக அமையாது.” (வேற்றுமையின் வித்தே சனாதனம்!- இலக்குவனார் திருவள்ளுவன், அகரமுதல, 16.06.22)

சைவப் பேரவைத் தலைவர் கலையரசி நடராசன், “சனாதனம் முழுக்கமுழுக்க ஆரியர்களின் வாழ்வியல் முறை. சனாதனத்திற்கும் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்திய ஒன்றியத்தில் உள்ள மக்களுக்கே எந்தத் தொடர்பும் இல்லை.” “சனாதனதருமம், வருணாசிரம தருமம், மனுதருமம் என எந்த வகையில் கூறினாலும், அது மனித குலத்திற்கு எதிரானது தான்,” “ஆரியர்கள் மட்டும் பின்பற்றிய ஒரு முறையை தற்போது அனைவர் மீதும் திணித்திருக்கிறார்கள். அதனை ஒழிப்பது தான் தீர்வு,” என்று பலவாறகச் சொல்வதுதான் உண்மை.

சனாதனம் என்றால் நிலையான, நிலையான கடமை, நிலையான தருமம் என்றெல்லாம் விளக்கம் தருகின்றனர். சமற்கிருத வேர்ச்சொல் அகராதி சம என்றால் பழையை என்றும் ஆதன என்றால் கடந்து செல்வது என்றும் விளக்குகிறது.  தமிழில் ஆதனம் என்பதற்குரிய பொருள்களில் ஒன்று, நீண்ட பாதை.செ.சொ.பி.அகராதி, அதர் = வழி, நீண்ட பாதை, அதர் → அதரம் → அதனம் → ஆதனம் என்கிறது. ஆதலின் நீண்ட பாதையைக் கடத்தல். இச் சொல்லைத்தமிழில் இருந்துதான் சமற்கிருதம் கடன் வாங்கியுள்ளது. எனவே, பழையனவற்றைக் கடந்து செல்வதைக் குறிக்கும் பொழுது, பழையன கழிந்து புதியன புகுவதை ஏற்கும் பொழுது சனாதனம் என்றால் நிலையானது என்று விளக்குவது எப்படி ஏற்புடைத்தாகும்? தருமம் என்றால் கடமை, மதம், மதக்கடமை, விதிமுறை என்று விளக்கம் தருகின்றனர். தமிழில் நாம் கருதும் அறம் என்ற பொருள் இந்தத் தருமத்திற்கு இல்லை என்பதை உணர்ந்தாலே பாதிக் குழப்பம் தீரும். ஏனெனில் நாம் அறம் என்று பொருள்படுத்திக் கொண்டுதான் சனாதன தருமத்தை உயர்ந்ததாகக் கருதுகிறோம்.

பொதுவாகவே சமற்கிருத நூல்கள் குறித்து அவற்றில் இல்லாதன வெல்லாம் இருப்பதாகக் கூறுவதே சமற்கிருத நூலார் வழக்கம். அதிலுள்ள தவறான கருத்துகளை மறைத்து விட்டுத் தமிழ் முதலான பிற மொழி நூல்களில் உள்ள நல்ல கருத்துகளைச் சேர்த்துக் கொள்வார்கள். இந்த இடைச் செருகல்களைக் கொண்டே சமற்கிருத நூல்களைப்பற்றி உயர்வாகப் பேசவும் எழுதவும் செய்வார்கள். தகுதியற்ற சமற்கிருத நூல்களைப் பற்றிச்சிறப்பாக எழுதி வெளிநாட்டினரிடம் அளித்து அவர்கள் வாயிலாக அறிவிக்கச் செய்வார்கள். அவர்களும் நூலைப் படித்துப் பார்க்காமலேயே எழுதிவிடுவார்கள். அதை மேற்கோளாகக் காட்டி அந்தத் தவறான செய்திகளையே பெரிதுபடுத்துவார்கள். இவ்வாறுதான் ஒழிக்கப்பட வேண்டிய சனாதனம்பற்றி இல்லாத சிறப்புகளைப் பற்றியெல்லாம் கற்பித்து நம்புவோரை மடையர்களாக்குகின்றனர்.

சனாதனதருமம் என்பதை உயிருள்ளன உயிரல்லன என எல்லாவற்றிற்குமானதாகக் கூறுகின்றனர். சீனியின் தருமம் இனித்தல், நெருப்பின் தருமம் சுடுதல் என்றெல்லாம் விளக்குகின்றனர். இவ்வாறு பொருள்களின் தன்மைகளையும் இயல்புகளையும் தருமமாகக் கூறுகின்றனர். இத்தகைய தருமம் என்ற சொல்லைத்தான் நாம் தவறாக உயர்வாகக் கருதி சனாதனதருமத்தைச் சிறப்பாகக் கருதுகிறோம்.

சனாதனத்தைப்பற்றித் தெரியாமலேயே, “சனாதனம் என்பது அனைத்து மதங்களிலும் உள்ளது. அந்தந்த காலத்திற்கு ஏற்ப அதில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன.” எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் சனாதனவாதிகள் அதை இந்துமதக்கோட்பாடாகக் கூறுவதை அவர்கள் அறியவில்லை.

சனாதனம் என்பதற்கும் இறை ஏற்பு அல்லது இறை மறுப்பு என்பனவற்றிற்கும் தொடர்பில்லை. அதனை இறைநெறிக்கு ஒப்பாகக் கருதி உயர்த்துவது தவறு. சனாதனத்தை எதிர்ப்பவர்களை இறை மறுப்பாளர்களாகக் கருதக் கூடாது. இறை ஏற்பாளர்களாக இருந்தாலும் இறை மறுப்பாளர்களாக இருந்தாலும் அவர்கள் தன்மானம் மிக்கவர்கள், மனித நேயம் மிக்கவர்கள்.சனாதனம் என்பது மனிதர்களிடையே பிளவு ஏற்படுத்தும் வழி முறை. எனவே அதனை எதிரப்பவர்கள் அனைவரும் சமம் என்று நிலைநாட்ட விரும்புபவர்கள்.

வேதங்களை உயர்வாகக் கருதிக் கொண்டு, வேதங்களால் சிறப்பிக்கப்படுவது சனாதனம் என்று சொல்லி அதை ஏற்க வேண்டுமென்கின்றனர் சிலர். “வேதங்களில் வன்முறையும் அதிகார வெறியும் போற்றப்படுகின்றன” என்கிறார் அறிஞர்  வெண்டி தோனிகர்(Wendy Doniger).  “வேதங்களின் அடிப்படை இலட்சியம் விலங்குத்தனமானது” என்கிறார் அறிஞர் சில்வியன் இலவி (Sylvian Levi). “சனாதனத் தருமம் என்றால் அவரவர் சாதி என்ன என்ன கடமையைச் செய்ய வேண்டும் என்றுசமற்கிருத வேர்ச்சொல் அகராதி சம என்றால் பழைய என்றும் ஆதன என்றால் கடந்து செல்வது என்றும் விளக்குகிறது.  எனவே, பழையனவற்றைக் கடந்து செல்வதைக் குறிக்கும் பொழுது, பழையன கழிந்து புதியன புகுவதை ஏற்கும் பொழுது சனாதனம் என்றால் நிலையானது என்று விளக்குவது எப்படி ஏற்புடைத்தாகும்? வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளதோ அவற்றை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள்.” இவ்வாறு மக்கள் சமன்மைக்கு எதிரான அறநெறிக்கு மாறான வேதங்களின் வடிவான சனாதனத்தை எவ்வாறு ஏற்க முடியும்?

சனாதனத்தைப்பற்றித் தெரியாமலேயே, “சனாதனம் என்பது அனைத்து மதங்களிலும் உள்ளது. அந்தந்த காலத்திற்கு ஏற்ப அதில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன.” எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் சனாதனவாதிகள் அதை இந்துமதக்கோட்பாடாகக் கூறுவதை அவர்கள் அறியவில்லை. சனாதன தருமம்தான் இந்து மதம் அல்லது வேத மதம் என்று அழைக்கப்படுவது;  சனாதனம் என்றால்  இந்துவியத்தைக் கூறுதற்கு இந்துக்களால் பயன்படுத்தப்படும் சொல் என்று சனாதனவாதிகள் கூறுகின்றனர். அவ்வாறிருக்க இதனை எப்படி அனைத்து மதங்களுக்கும் பொதுவானது என்கின்றனர். அவ்வாறு கற்பனையாகக் கருதிக்கொண்டோ அதுபோன்ற பொய்யுரைகளை மெய்யுரையாகக் கருதியோதான் இவ்வாறு கூறி வருகின்றனர்.

சனாதனத்தை எதிர்ப்பவர்கள் சனாதனிகளை எதிர்க்கவில்லை. அவ்வாறு இருக்க உதயநிதியின் பேச்சு எங்ஙனம் கொலைசெய்யத் தூண்டுவதாகும்? “உதயநிதியின் பேச்சு இனப்படுகொலையைத் தூண்டும் பேச்சுதான்” எனப் பாசகவின் செய்தித் தொடர்பாளர் செசாத்து  பூனாவாலா என்பவரும் பிறரும் கூறுவது எங்ஙனம் ஏற்புடைத்தாகும்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை

Followers

Blog Archive