Tuesday, October 25, 2022

மாணவப் பருவக் காதல் கதைகளையும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் தடை செய்க!– இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




மாணவப் பருவக் காதல் கதைகளையும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் தடை செய்க!

ஒருதலைக்காதலால் அல்லது ஒருதலை விருப்பத்தால் கொலைகள் பல பெருகி வருகின்றன.  காதலுக்காக எதையும் கொடுக்கலாம். ஆனால் காதலுக்காக மற்றவரின் உயிரை எடுக்கலாமா? எனக்குக் கிடைக்காத பெண் அல்லது சிறுபான்மை ஆண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஆசைப்படும் பொருளாகக் கருதி, மறு தரப்பாரை கழுத்தை அறுத்துக் கொல்வது, எரித்துக் கொல்வது, வேறு வகையில் கொலை செய்வது, முகத்தில் அமிலம் ஊற்றிச் சிதைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது பெருகி வருகிறது. இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். இவற்றைத் தடுக்க வேண்டுமென்றால் இருபாலருக்கும் மனப் பக்குவம் அளிக்கும் வகையில் கல்வி முறை இருக்க வேண்டும்.

வீட்டிற்குள்ளேயே புகுந்து இளைஞர்களைக் கொள்ளை கொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால்  சிறுவர் சிறுமியர், இருபால் இளைஞர்கள் எளிதில் தீய பாதைக்குச் செல்கின்றனர். கல்விக்கூடம் செல்வதே மறுபாலினருடன் ‘மகிழ்ச்சி’யாக இருப்பதற்குத்தான் என்ற தவறான எண்ணத்திற்கும் வந்து விடுகின்றனர்.

கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் கடந்த வாரம் பேசும் பொழுது ஒரு கருத்தைத் தெரிவித்தார். அவர் கருத்து மட்டுமல்ல அது. பலரும் அவ்வாறுதான் கூறுகின்றனர். “சிற்றூரைச் சேர்ந்த ஏழைப்பெண் நன்கு படிப்பாள் என்ற எதிர்பார்ப்பில் இடம் கொடுத்தேன். நன்கு படிக்கும் மற்றொரு பையனைச் சுற்றிச் சுற்றி வந்து அவன் படிப்பையும் கெடுக்கிறாள். இவள் மட்டுமல்ல, படிக்கும் எல்லாப் பெண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஆண்களில் சிலர் இப்படி இருந்தாலும் பலர் பெண்களால் இப்படி மாறி விடுகிறார்கள். முன்பெல்லாம் ஆண்களைச் சமாளிப்பது எப்படி என்று கவலைப்பட்டோம். இப்பொழுது பெண்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டி யுள்ளது. இவர்களைக் கல்வியின்பால் திசை திருப்ப என்ன செய்ய வேண்டும்” என்றார். (மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் மாணாக்கர்களே பங்கேற்கும் கருத்தரங்கம், உரையரங்கம், கட்டுரை எழுதுதல், இலக்கியப்போட்டிகளில் ஈடுபடச் செய்தல், விழாக்கள், நிகழ்ச்சிகளில் பொறுப்புகள் அளித்தல் என அவர்கள் கவனத்தைத் திருப்ப வேண்டினேன்.) பெண்களைக் குறை கூறுவதாக எண்ண வேண்டா. பேருந்து நிறுத்தங்கள், பொது இடங்களில் ஆண்களைத் தொட்டுத் தொட்டுப் பேசுவது, தோளிலும் தொடையிலும் தட்டிப் பேசுவது, படங்களைப் பார்த்து உரிமையுடன் பேசுவதாகக் கருதி, வாடா, போடா என்றெல்லாம் பேசுவது போன்ற காட்சிகளை அனைவருமே காணலாம். இவ்வாறு பெண்கள் பழகும் போது, பெரும்பாலோருக்கு உள்ளெண்ணம் வேறு இல்லாமல் இருக்கலாம். உடன் பழகும் ஆண், அவள் தன்னை விழுந்து விழுந்து காதலிப்பதாக எண்ணி ஆசையை வளர்த்துக் கொள்கின்றான். அவ்வாறு இல்லை என்னும் நிலை வரும்பொழுது அவளை அடைய வேண்டும் என வெறியாக அலைகிறான். அடைந்தாள் அவளை அடைய வேண்டும்.இல்லையேல் மரணத்தை அவள் அடைய வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கேற்பச் செயல்படுகிறான்.

சில நேரங்களில் இத்தகைய காட்சிகளைப் பார்க்கும் பிறர் பழகியிராவிட்டாலும் எளிதில் பழகலாம் எனக் கருதித் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கின்றனர். ஆனால், மறு தரப்பு மறுக்கும்போது, “அவன்/அவள் மட்டும் இனிக்கிறானா/இனிக்கிறாளா? நான் என்ன குறைச்சல்” என்று கருதி, அமிலத்தை முகத்தில் ஊற்றுவது, கொலை செய்வது அல்லது இவைபோன்ற பெரும் ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகிறான்/ஈடுபடுகிறாள்.

பெண்கள்தானே அதிகம் கொலை செய்யப்படுகிறார்கள். அவ்வாறு இருக்க ஆண்களும் பாதிக்கப்படுவதுபோல் எழுதுவது ஏன் எனச் சிலர் எண்ணலாம். ஆண்களும் சில நேரங்களில் சிறுபான்மை பாதிக்கப்டுகின்றனர். ஆனால் கதைப்படங்களில், பெண் ஆணை அடைய எல்லா வகைக் குறுக்குவழிகளிலும்  ஈடுபடுவதையும் கடத்தல், மிரட்டல் போன்றவற்றில் ஈடுபட்டுக் கொலை முயற்சியிலும் இறங்குவதையும் பார்க்கிறோம் .அடுத்த நிலை இதுவே மாறி, ஆண்களும் கொல்லப்படுவது பெருகும். முன் எச்சரிக்கையாக இதனைக் கூற வேண்டியுள்ளது.

படிக்க வருவதற்கே காதலிப்பதற்குத்தான் என்று கல்வி நிலையம் வருபவர்கள் மன நிலையை மாற்ற வேண்டும். காதலித்துக் கடிமணம் புரிவதுதானே தமிழர் நெறி. அவ்வாறு இருக்கக் காதலை எதிர்ப்பானேன் என்பர் சிலர். இக்கால இளைஞர்கள் காதல் என்று எண்ணிக் கொண்டு ஆரவார ஈர்ப்பால்தான் இணைகின்றனர். எனவேதான், பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்தவர்களைவிடக் காதல் மணம் செய்கிறவர்கள் மண விலக்கு பெறுவது பெருகி வருகிறது. ஒருவரை விரும்பித் திருமணம் செய்தபின்னர் அவரிடம் குறை காண நேரிட்டால் திருத்தியும் பொறுத்தும் வாழ எண்ணுவதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும். அவ்வாறில்லாமல் விலகிச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மூழ்கினால் எப்படி அது காதலாகும். விளம்பரப் புகழ் கொண்டவர்கள் மீண்டும் மீண்டும் காதலித்து மறுமணம் புரிவதைக் கேட்கும், பார்க்கும் பிறர் இதனை எளிய வாழ்க்கை முறையாகக் கொள்கின்றனர்.

பத்தாண்டுகள் காதலித்துத் திருமணம் புரிந்தவர்கள் பத்தே நாளில்  பிரிவதையும் நாம் பார்க்கிறோம். இவர்கள் பத்தாண்டுகள் காதலில் திளைத்து என்ன பயன்? காதலால் மற்றவரைப் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்க்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.

பழந்தமிழர்கள் காதலித்தார்கள். ஆனால் காதல் கைகூடாத நேர்வு வரின் தங்களைத்தான் வருத்திக் கொண்டார்களே யன்றிப் பிறரை அல்ல. காதலுக்குப் பெற்றோர் குறுக்கே வந்தால் மடல் ஊர்வதாகக் கூறி அவர்கள் மனத்தை மாற்றினார்கள். ஆண் காதலைப் பெண் ஏற்காவிட்டால், காதலிக்குத் தீங்கு விளைவிக்க வில்லை. மாறாக மடலேறித் தன்னைத்தானே வருத்தித் தன் காதலை ஊருக்கு வெளிப்படுத்தி, அப்பெண்ணைத் திரும்ணம் செய்விக்க வேண்டினார்கள்.

மடல் என்பது பனை மடலைக் குறிக்கும். பனை மடலால் செய்த குதிரையில் பூளைப்பூ, ஆவிரம் பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலையை அணிவித்து, காதல் வயப்பட்டவன் உடம்பு முழுவதும் சாம்பல் பூசிக் கொண்டு கையில் காதலிப்பவளின் ஓவியம் வரைந்த துணிக்கொடியை வைத்துக் கொண்டு, நாற்சந்தியில் மழை வெயில் காற்றைப் பொருட்படுத்தாமல் நின்று அல்லது ஊர்ந்து தன் காதலை வெளிப்படுத்துவது. பனை மடல் உடலை வருத்தும். இவ்வாறு தன்னை வருத்திக் கொண்டு காதலிப்பவளிடம் தன் உணர்வை வெளிப்படுத்தினார்கள். ஆனால், இப்பொழுது “காதலி இல்லையேல் சாவு நீ” என்று சொல்லி மிரட்டிக் காதலைப் பெற முயலுகிறார்கள். அப்படியும் வெற்றி காணாவிட்டால் தண்டவாளத்தில் தள்ளியோ அமிலம் வீசியோ வேறுவகையிலோ காதலியைக் கொல்லவோ சிதைக்கவோ முயலுகிறார்கள். இதைப்போய்த் தமிழர் நெறி என்று சொல்வதா?

தன்னைத் துன்புறுத்திக் கொண்டு தன் காதல் உணர்வை வெளிப்படுத்தும் பண்டைய பண்பு எங்கே! காதலிக்காதவரைத் துன்புறுத்தி மிரட்டிக்காதலுக்கு அடிபணியச் செய்யும் இன்றைய மோதல் உணர்வு எங்கே? காதலுக்காகத் தன் உயிரையே கொடுக்க முன்வந்த பண்டைய பண்பு எங்கே! நிறைவேறாக்காதலுக்காக காதலித்தவரின் உயிரையே பறிக்கும் இன்றைய  கொடுஉணர்வு எங்கே? இவை ஒன்றாக முடியுமா?

திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் நாடகங்களும் மக்களுக்கு அறிவூட்டும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். இஃது எங்கள் வேலையல்ல. பொழுதுபோக்கிற்கு உதவிப் பணம் சம்பாதிப்பதுதான் எங்கள் நோக்கம்  என்பர். நாம் இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பொழுதுபோக்கு என்று சொல்லிக் காதலறத்தைச் சிதைத்து வளரும் தலைமுறையினரின் வாழ்வை அழிப்பதை ஒத்துக்கொள்ள முடியாது. உலகில் நடப்பதைத்தான் காட்டுகிறோம் திரைப்படங்களைப் பார்த்துத்தான் கெட்டுப் போகிறார்களா என்பர் சிலர். அதுவும் தவறுதான். சிறுபான்மை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திப் பெரும்பான்மையாக்குவது சிறு, பெரு திரைப்படங்கள்தாம். என்னைக் காதலிக்காவிட்டால் பழி வாங்குவேன் என்று சொல்வதோ அவ்வாறு பழி வாங்குவதோ படங்களில் இடம் பெறக்கூடாது. இத்தகைய படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். இதையெல்லாம் கருத்துரிமை என்று அனுமதிக்கக் கூடாது. தொடக்கத்தில் தொடர்புடைய உருவாக்குநர், இயக்குநர் பிற கலைஞர்களுக்கு விழிப்புணர்வை வருவிக்கும் வகையில் இத்தகைய படங்களுக்கு வரிச்சலுகையோ பரிசோ, இவற்றில் பங்கேற்கும் கலைஞர்களுக்கும் படத்திற்கும் விருதுகளோ அளிக்க முடியாது என்பதை அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும். பரவலாக இத்தகைய படங்கள் இல்லாமல் குறைந்து போகும்போது மாணவக்காதல்  கதைகளுக்கும் படங்களுக்கும் தடையும் விதிக்க வேண்டும்.

இணைய வழிச் சூதாட்டத்தைத் தடை செய்த அரசு

மாணவப்பருவக் காதல் படங்களையும் தடை செய்ய முன் வரும் என எதிர்பார்ப்போம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை ஐப்பசி 09, 2053 / 26.10.2022



Friday, October 21, 2022

முதல்வர் சாட்டையை எடுக்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல






(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 9. தமிழ் வளர்ச்சிப் பணிகளில் உரிய வளர்ச்சி தேவை.)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்:

10. முதல்வர் சாட்டையை எடுக்க வேண்டும்!

தமிழுக்குச் செய்ய வேண்டியவற்றை அரசு மட்டும் செய்தால் போதும் என மக்கள் வாளாவிருந்துவிடுகின்றனர். அரசுத் துறைகளோ தமிழ் வளர்ச்சித்துறையோ மட்டும் தமிழ் வளர்த்தால் போதும் என நாம் எண்ணுவது தவறாகும். மக்கள் குடும்பத்தில், வணிகத்தில், கல்வியில், அச்சகங்களில், அழைப்பிதழ்களில், மண்டபங்களில், கதைகளில், கவிதைகளில், கட்டுரைகளில், திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், திருமணங்களில், பிறந்தநாள் விழாக்களில், பிற விழாக்களில், இதழ்களில், காட்சி ஊடகங்களில், வழிபாடல்களில், இசை நாட்டிய நாடகங்களில், சடங்குகளில், உணவகங்களில், உறைவகங்களில்(தங்கும் விடுதிகளில்),   நூலகங்களில், மருத்துவ மனைகளில், நல வாழ்வு மையங்களில், பொது அலுவலகங்களில், தொழில்களில், அன்றாடப் பயன்பாடுகளில் என அடுக்கிக் கொண்டே போகும் வகையில் தமிழ்ப்பயன்பாட்டை நிறைவாகக் காண வேண்டியது குறித்துக் கூற வேண்டியுள்ளது. அரசு செய்ய வேண்டிய பொறுப்புகளும் மிகுதியாக உள்ளன. அவற்றைப்  பின்னர்க் கூறலாம் என எண்ணினோம். ஆனால், எதற்கும் அரசு முன்மாதிரியாக இருக்க வேண்டும் அல்லவா? அரசு அலுவலர்கள் தமிழை மறப்பதால் நாம் மீண்டும் மீண்டும் அரசைப்பற்றிக் கூற வேண்டியுள்ளது.

கோவை மாநகரக் காவல் துறை சார்பில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘போலீசு அக்கா’ திட்டத்தை மாநகரக்  காவல் ஆணையர் தொடங்கி வைத்துள்ளார்.

மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும், ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலர் என்ற முறையில் 37 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களுக்கு ஏற்படும் உளவியல் வகையிலான, பாலியல் முறையிலான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது போன்ற பணிகளை மேற்கொள்வர்.  கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்களைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பது, போதைப் பொருட்கள் விற்பனை முதலியவற்றைக் கண்காணித்து, கண்டறிந்து காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்வது போன்ற பணிகளையும் செய்வர். இத்திட்டம் அருமையான திட்டம். இதனைப் பள்ளி மாணவியருக்கும் விரிவாக்க வேண்டும். பின்னர் பிற இளம் பெண்களுக்கும் விரிவாக்கலாம்.

இத்திட்டத்தை மனமுவந்து பாராட்ட வரும் பொழுது திட்டத்தின் பெயர் குறுக்கே நிற்கிறது. ‘அக்கா’ என்னும் பொழுது உரிமையும் நெருக்கமும் வந்து விடுகிறது என்பதால் அவ்வாறே குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால், ‘போலீசு அக்கா’ என்று ஏன் சொல்ல வேண்டும்? தமிழில் முழுமையாகப் பெயர் சூட்டத் தொடர்புடையவர்களுக்குத் தெரியவில்லையா? போலீசு என்பதையும் தமிழில் குறிப்பி்டத் தெரியவில்லையா? ஆங்கிலேயர்களோ ஆங்கிலேயர்களுக்குப் பிறந்தவர்களோ ஆங்கில நாட்டிலோ ஆங்கிலத்தில் பெயர் சூட்டினால் இயல்பாகக் கருதலாம். ஆனால், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு மாணாக்கியர்களுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ஆங்கிலத்திற்குப் பெயர் எதற்கு? திருந்தவே மாட்டார்களா? முதல்வர் சாட்டை எடுத்துச் சுழற்றினால்தான் தமிழ் நினைவிற்கு வருமா?

தமிழில் ‘காவல் அக்கா’ எனக் கூறுவதற்கு என்ன சிக்கல்? ‘போலீசு’ என்னும் சொல்லின் மூல இலத்தீன் சொல்லின் பொருள் ‘அரசு’. அண்மைக்காலங்களில்தான் சட்டம் ஒழுங்கைப் பேணும் துறையைக் குறித்தது. தமிழில் காவல் என்கிறோம். இப்பணி புரிபவரைக் காவலன் என்கிறோம். காவலன் என்பது தமிழில் ஆட்சியாளரையும் குறிக்கும். ஆக உயர்வான சொல்தான் இது. எனினும் காவல் அக்கா என்று சொல்ல விரும்பவில்லையேல் ‘உங்கள் அக்கா‘ அல்லது ‘என் அக்கா‘ எனலாம். “காவல்துறையின் ‘உங்கள் அக்கா’ அல்லது ‘என் அக்கா’” என விளம்பரப்படுத்தலாம். காவல் அக்காவிற்கான முத்திரையும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. (முத்திரைப் படத்தை மாற்றினால் நன்று.) காவல் துறையின் முத்திரையே ஆங்கிலத்திலும் ஆங்கில முழக்கத்திலும்தான் உள்ளது. தலையே அவ்வாறு இருக்கும்போது வாலும் அப்படித்தானே இருக்கும்.

ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

என்றார் பாரதியார். தமிழக அதிகாரிகளோ ‘போலீசு’ என்பதுபோன்ற அயற்சொற்களை யெல்லாம் தெருவெல்லாம் முழங்கச் செய்கிறார்கள்.

“தமிழ்ப் பண்டிதர்களே! தமிழ்ச்சனங்களே சாக்கிரதை! சாக்கிரதை! உங்களுடைய மொழியைக் காப்பாற்றுங்கள். ஒரு சன சமூகத்திற்கு உயிர் அதன் மொழிதான். தமிழ் மொழி அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும், சீரும் அழிந்துவிடும். தமிழ் மொழியில் தேவையான பதங்கள் இல்லையென்று வாய் கூசாமல் கூறுகின்ற பாரதப் புத்திரர்களுக்கு அப்பதங்களை ஆராய்ந்து கண்டுபிடித்துக் கொடுங்கள். சரியான பதங்கள் இல்லையேல் தமிழ் வாணியின் கிருபை கொண்டு இன்னும் அநேக காரணப் பெயர்களையாக்கிக் கொள்ளுங்கள்.

   உங்கள் நா தமிழே பேசுக! நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக! உங்களுடைய இருதயம் தமிழையே நாடுக! உங்களையெல்லாம் தமிழ் மாது தயையுடன் இரட்சித்திடுக!” என்கிறார் சுப்பிரமணிய சிவா(ஞானபாநு, செப்டம்பர், 1915) (இதனை ஒவ்வோர் அலுவலகத்திலும் எழுதி வைக்க வேண்டும்.)

காவல் துறையில் மட்டுமல்ல. பார்க்குமிடங்களி லெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது ஆங்கிலம்தான். அரசு பலமுறை ஆணை வாயிலாகவும் அறிக்கை வாயிலாகவும் அறிவுறுத்தியும் தமிழ்நாட்டிலுள்ள பெயர்ப்பலகைகள் பலவும் ஆங்கிலத்திலேயே காட்சி அளிக்கின்றன. தமிழில் கையொப்பமும் சுருக்கொப்பமும் இடாதவர் மிகுதியாக உள்ளனர். ஆணைகள் இருந்தும் இவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்த இயலவில்லை என்றால் அதற்கான துறைகள் ஏன் தேவை?

சென்னைப் பல்கலைக்கழகம் கூட ஆங்கிலத்தில் இன்னும் மெட்ராசு யூனிவர்சிட்டிதான்(University of Madras). சென்னை யூனிவர்சிட்டி என்று குறிக்கப்பெறவில்லை. மெட்ராசு என்பதைச் சென்னை என 1996இலேயே மாற்றிவிட்டோம். பெயர்ப்பலகையிலாவது சென்னை உயர்நீதிமன்றம் எனத் தமிழில் குறிக்க இயலாதா? உலகில் பல நாடுகள், நகரங்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அங்கெல்லாம் உடனடியாக பழைய பெயர் இருந்த இடங்களில் எல்லாம் அவை நீக்கப்பட்டுப் புதிய பெயர் நடைமுறைக்கு வந்து விடுகிறது. இங்கே பெயரளவிற்குத் தமிழர் ஆட்சி நடைபெறுவதால் அரசின் அறிவிப்பை அதன் கட்டுப்பாட்டிலுள்ள துறைகள்  நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. தத்தம் செல்வாக்கால் பழைய பெயர்களையே பயன்படுத்துகின்றனர்.

தன் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களைக் கட்டுப்படுத்த இயலாத அரசுகளால், அரசின் கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலவில்லை. இதுவேதான் ஆட்சிமொழிக்கொள்கையிலும் நிகழ்ந்து கையாலாகத் தன்மை மேலோங்குகிறது

1960களில் ஒன்றியப் பொதுப்பணித் தேர்வாணையத்தில் இந்தி முதலிய மொழிகளில் தேர்வு எழுதலாம் என அறிவித்தபோது தமிழிலும் எழுத வாய்ப்பை வேண்டினார்கள். கல்லூரிகளில் தமிழைப் பாடமொழியாக ஆக்காமல் தமிழில் படிக்காமல் எவ்வாறு தமிழில் தேர்வுகள் எழுத இயலும்  எனத் தேர்வாணையம் அப்போது மறுத்து விட்டது. இப்பொழுது நாம் ஒன்றிய ஆட்சிமொழியாகத் தமிழையும் ஏற்க வேண்டுகிறோம். தமிழ்நாட்டில் ஆட்சித்தமிழ்த் திட்டத்தைக் கேலிக்கூத்தாகச் செயலாக்கிக் கொண்டிருக்கும்போது, இங்கே வந்து குரல் கொடுக்கிறார்களே என அங்கே உள்ளவர்கள் எண்ண மாட்டார்களா?

“வாய்ச்சொல்லில் வீரரடி”

எனப் பாரதியார் போல் அவர்கள் எண்ண மாட்டார்களா?

“மந்திரத் தாலேயெங்கும் – கிளியே

மாங்கனி வீழ்வதுண்டோ?”

தமிழ் தமிழ் என்று

“செப்பித் திரிவாரடி கிளியே

செய்வதறியாரடி கிளியே”

என்று பாரதியா் இன்றிருந்தால் சொல்லியிருக்க மாட்டாரா?

எனவே, தமிழ்நாட்டில் முழுமையாகத் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும். அது வரை ஒன்றியத்தில் தமிழும் ஆட்சி மொழி எனக் குரல்கொடுக்கக் கூடாது.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்

(திருவள்ளுவர், திருக்குறள் 200)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

ஐப்பசி 05, 2053/ 22.10.2022

Wednesday, October 19, 2022

இந்தி எதிர்ப்புத் தீர்மானம்: முதல்வருக்கும் பேரவையினருக்கும் பாராட்டு! எனினும் . . . .- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




முதல்வர் தலைமையில் தேசிய மொழிகள் ஆட்சிமொழிச் செயலாக்கக் குழு அமைக்க வேண்டும்!

நேற்றைய சட்டமன்ற நாள்(ஐப்பசி 01,2053/18.10.2022) மொழிப்போர் வரலாற்றில் முதன்மையான நாள்களுள் ஒன்றாகும். நேற்று சட்டப்பேரவையில் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிக்கத்தக்கதாகும்.  தீர்மானத்தை முன் மொழிந்து முதல்வர்  மு.க.தாலின், “மொழி என்பது, நமது உயிராய், உணர்வாய், விழியாய், நம் அனைவரின் எதிர்காலமாய் இருக்கிறது.  . . . ஆட்சி நிருவாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கிக், கல்வி மூலமாகத் திணிப்பது வரை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள்.  . . . . அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும், இந்திக்கு இணையான மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்கத் தயாரா?” என்றெல்லாம் மிக அருமையாக உரையாற்றியுள்ளார். அவருக்குப் பாராட்டுகள். தீர்மானத்தை நிறைவேற்றிய அனைத்துப்பேரவை உறுப்பினர்களுக்கும் நம் பாராட்டுகள்.

இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி பேரா.சி.இலக்குவனார் இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே இந்தியை எதிர்த்துப் பரப்பி வந்தவர்; இந்தி எதிர்ப்பிற்கெனவே தமிழ்க்காப்புக்கழகம் என ஓர் அமைப்பையும் குறள்நெறி என ஓர் இதழையும் நடத்தி மாணாக்கர்களையும் இளைஞர்களையும் தமிழன்பர்களையும் திரட்டி மொழிப்போரில் ஈடுபடச்செய்து இந்தியைத் திணித்த அரசை ஆட்சிப்பீடத்தில் இருந்து அகற்றியவர். “நமக்குத்தேவை மொழித்தேசிய இனங்களின் கூட்டரசே தவிர, மொழி வாரி மாநிலங்கள் அல்ல” என்று குரல் கொடுத்தவர். “எல்லா மாநிலத்தவரும் கூடி வாழ வேண்டுமென்றால் அக்கூட்டரசு மன்றில் எல்லா மாநில மொழிகட்கும் சம உரிமை அளிக்கப்படல் வேண்டும்” (குறள்நெறி 15.02.1964); “எதனை இழந்தாலும் மீண்டும் பெறலாம். மொழியை இழந்தால் மீண்டும் பெறலரிது. மொழியை இழந்தபின் வாழ்வது எற்றுக்கு?” (குறள்நெறி15.06.64); “இந்தி முதன்மை பிரிவினைக்கு வித்து” என்று முழங்கி வந்தவர். முதல்வர் மு.க.தாலின் உரை தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் உரையை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

முதல்வர், “இந்திமொழித்திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. . நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம்.” என்று கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை.  ஆனால், தவறு நம் மீது உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இடையிடையே முழங்குகிறோமே தவிர,  அதற்கேற்பப் போராட்டத்தின் மூலம் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோமே தவிர, அடியோடு இந்தித்திணிப்பை அகற்றுவதற்கு அழுத்தமான அடி கொடுக்கவில்லை. நேற்றைய தீர்மானமும் வழக்கமான ஒன்றாகத்தான் உள்ளதுஇந்திய அரசியல் யாப்பை நாம் திருத்தினாலன்றி இந்தியை விரட்ட முடியாது.

இந்திய அரசியல் சாசனப் பிரிவு 343-இன் படி “இந்தி அதன் தேவநாகரி எழுத்துவடிவத்தில் இந்தியாவின் அலுவலக மொழியாக இருக்கும்.” என்னும் தீர்மானத்தை விலக்கிக் கொண்டு அரசியல் யாப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கும் புதிய தீர்மானத்தை நாடாளுமன்றங்களில் நிறைவேற்றச் செய்து சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே, இதனை மட்டும் மறு தீர்மானமாக நிறைவேற்றிப் பிற மாநிலச் சட்ட மன்றங்களிலும் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட ஆவன செய்ய வேண்டும்.

இந்திய அரசியல் யாப்பில் ஆங்கிலத்தில் ஆட்சிமொழி என்று குறிப்பிடவில்லை. அலுவலக மொழி என்றுதான் குறிக்கப்பெற்றுள்ளது. இந்தியில் இராசபாசா என்று குறித்துள்ளனர். இக் குழப்பத்தால் தமிழில் அலுவலக மொழி என்றும் ஆட்சி மொழி என்றும் சிலர் தேசிய மொழி என்றும் கூறிவருகின்றனர். அலுவலக மொழி என்பதை அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் மொழி என்றும் பிற அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளும் மொழி என்றும் நாம் புரிந்து கொள்கிறோம்.  ஆட்சி மொழி என்பது அலுவலக மொழியாக மட்டுமல்லாமல் நாட்டில் எல்லா நிலைகளிலும் பயன்படுத்தப்படும் ஆளுமைமிக்க மொழியாகக் கருதப்படுகிறது. எனேவ, அலுவலக மொழி குறித்த வரையறையை அரசு தெரிவிக்க வேண்டும்.

நாம் முதல்வரையும் பேரவையினரையும் மனப்பூர்வமகாப் பாராட்டுகிறோம். அதே நேரம் முன்மொழிவுரையில் இடம் பெற வேண்டிய செய்திகள் எல்லாம் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நேருவின் உறுதி மொழி தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளது. இன்னும் எத்தனைக் காலம்தான் நேரு்வின் உறுதி மொழியைக் கட்டி ஆளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அஃது ஒரு செல்லாக்காசு. அதை இடம் பெறச் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்தி மொழி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் நீடிக்கும் என்பதுதான் அந்த உறுதி மொழி. நாம் வேண்டுவது தமிழ் முதலான அட்டவணை மொழிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் மொழிகளாக ஏற்கப்பட வேண்டும் என்பதுதான்.

“ஒன்றிய அரசின்‌ உள்துறை அமைச்சராகவும்‌, அலுவல்‌ மொழி தொடர்பான பாராளுமன்றக்‌ குழுத்‌ தலைவராகவும்‌ உள்ள அமித்‌து சா தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை ஏற்கக் கூடாது” என்கிறது தீர்மானம். இது மட்டும் போதுமா? வேறு என்ன செய்ய வேண்டும்? அதைக் கூறவில்லையே!

முதல்வர் தலைமையில் தேசிய மொழிகள் ஆட்சிமொழிச் செயலாக்கக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இந்தி எதிர்ப்பு உணர்வும் தமிழ்க்காப்பு உணர்வும் மிக்க அனைத்துக் கட்சியினரும் அனைத்து அமைப்பினரும் பிற மாநிலத்தவரும் இதில் இடம் பெற வேண்டும். இதன் மூலம் இந்திய அளவில் இந்தி எதிர்ப்பை வலுவாக வேரூன்ற வேண்டும். போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர், இக்குழுவே நாடு தழுவிய மக்கள் மன்றம் அமைத்துக் கூடி இந்திய அரசியல்யாப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். இதனை ஒன்றிய அரசு ஏற்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

அவ்வாறில்லாமல் இப்போதைய தீர்மானத்தால் பயனில்லை. உருப்படியான தீர்மானங்களையே ஒன்றிய அரசு மதிப்பதில்லை. இதனைக் கண்துடைப்பு தீர்மானமாகக் கருதி கண்டு கொள்ளாது.

-இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

ஐப்பசி 02, 2053 / 19.10.2022



Friday, October 14, 2022

தலைவர் தாலினுக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல




தலைவர் தாலினுக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகள்!

தி.மு.க.பொதுக்குழு கூடித், தலைவரையும் பிற பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது அல்லது நியமித்துள்ளது. திமுகக் கட்சித் தலைவராக முதலமைச்சர் மு.க.தாலின், திமுகப் பொதுச்செயலாளராகத் துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், திமுகத் துணைப் பொதுச்செயலாளர்களாகக் கனிமொழி, இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.இராசா, அந்தியூர் செல்வராசு ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு தங்கள் பொறுப்பைத் தொடர்ந்தவர்களுக்கும் புதிய பொறுப்பை ஏற்றவர்களுக்கும் பாராட்டுகள். சிறப்பாகச் செயலாற்றி நாட்டிற்கும் மக்களுக்கும் தொண்டாற்ற வாழ்த்துகள். தமிழ் வளர்ச்சி, தமிழின முன்னேற்றம் முதலியவற்றைப் பேச்சளவில் கருதாமல் உண்மையாக அவற்றின் வளர்ச்சிக்கு ஒல்லும் வகையெல்லாம் பாடுபடவும் வேண்டுகிறோம்.

தி.மு.க.பொறுப்பாளர்கள் பல்வேறு நிலைகளில் தத்தம் திறமைகளை வெளிப்படுத்தியும் அரசுப்பணியும் மக்கள்பணியும் ஆற்றியும் இப்போதைய நிலைக்கு வந்துள்ளனர்.

மேடைப்பேச்சாளரும் வழக்குரைஞரும் இலக்கியவாதியும் நீர்வளத் துறை அமைச்சருமான  துரைமுருகன்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1971 முதல் பத்துமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் தலைவராக விளங்குபவர். தி.மு.க.வின் பொருளாளர், முதன்மைச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளர் முதலான பொறுப்புகளை வகித்துத் தம் ஆளுமையைக் காட்டி வருபவர். இவர் இருக்குமிடம் கலகலப்பாக இருக்கும். மேடைப்பேச்சுகளிலும் சிரிப்பலைகளை ஏற்படுத்துவார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் மேனாள் நடுவண் ஆமைச்சருமான த.இரா.பாலு தன்னுடைய பதினாறாம்  அகவையில் தி.மு.க.வில் இணைந்தவர்.  இவர் 1982 ஆம் ஆண்டு தி.மு.க.வின் சென்னை நகர மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு திமுக சார்பில்  மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு  மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இப்போது ஆறாம் முறையாக மக்களவை உறுப்பினராக உள்ளார். எரிபொருள் துறை அமைச்சராகவும் (1996-1998), சுற்றுச்சூழல்-வனத்துறை அமைச்சராகவும் (1999-2003), கப்பல்-நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும்  (2004-2009) பணியாற்றி ஆட்சிப் பணியாண்மையிலும் பட்டறிவு பெற்றவர்.

திண்டுக்கல் இ. பெரியசாமி  வத்தலக்குண்டு ஒன்றியத் தலைவராகத் (1986 – 1991) தம் அரசியல் பொறுப்பு வாழ்வைத் தொடங்கியவர். 1989 – 1991, 1996-2001, 2006-2011, 2016-2021 என நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வேறுபாட்டில் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் வைப்புத் தொகையை இழந்தமை குறிப்பிடத்தக்கது. சிறுதொழில்-நண்பகல் உணவு அமைச்சராகவும்(1996-2021) வருவாய்-வீட்டுவசதித்துறை அமைச்சர்(2006-2011) ஆகவும் திகழ்ந்தவர், இப்போது கூட்டுறவுத் அமைச்சராகக் கடமையாற்றுகிறார்.

முனைவர் க. பொன்முடி திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக வளர்ந்து ஒருகிணைந்த விழுப்புரம் மாவட்டச் செயலாளராக உயர்ந்து இப்போது துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். சிறந்த பேச்சாளரான இவர், தி மு க வினரால் இனமான இளய பேராசிரியர் என்று அழைக்கப்படுகிறார்.  1989, 1996, 2001, 2006, 2016, 2021 ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நலவாழ்வுத்துறை அமைச்சர்(1989-1991), போக்குவரத்து அமைச்சர்(1996-2001), உயர் கல்வி அமைச்சர் (2006 – 2011) பொறுப்புகள் மூலம் மக்கள் தொண்டாற்றியவர் இப்போதைய அமைச்சரவையிலும் உயர்கல்வி அமைச்சராக உள்ளார்.

வாதாடி வாகை சூடுவதில் சிறந்த வழக்குரைஞர் ஆ. இராசா தன்னுரையால் கேட்பவரைப் பிணிக்கும் நாவன்மை மிக்கவர். 1996, 1999, 2004, 2009, 2019 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றி வருபவர். தகவல், தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகத் திகழ்ந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளவர்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக அணி செய்கிறார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராசு 1996-இல் அந்தியூர் சட்டசபைத் தொகுதியில் வெற்றிபெற்றார். கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர்(1996-2001), ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளராகவும் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும்  உள்ளார். இப்போது மாநிலத்  துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கவிஞர் கனிமொழி கருணாநிதி மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். இலக்கிய ஆர்வலரான இவர் இதழியல் துறையில் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல் வாழ்வில் வாழ்க்கையைத் தொடருகிறார். உயர்நிலைச் செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்தும் மகளிரணி மாநிலச் செயலாளராக இருந்தும் கழகத் தொண்டாற்றியவர். ‘இந்து’ இதழின் தேசிய அச்சகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார். இப்பொறுப்பில் தேர்நதெடுக்கப்பட்ட முதல் பெண்மணி இவரே ஆவார். தூத்துக்குடி மக்களவை உறுப்பினராக உள்ள இவரைத் தூத்துக்குடித் தொகுதியில் மக்களுடன் காணலாம். கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய கவிதை நூல்களைப் படைத்துள்ளார். பாம்பே செயசிரீயுடன் இணைந்து சிலப்பதிகார இசைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். காட்சிக்கெளியவர் என்பதே இவரின் தனிச்சிறப்பு.

திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார்; உயர்நிலைக் குழுவிலும் உள்ளார். 1986 ஆண்டு தி.மு.க. சார்பில் புள்ளம்பாடி ஒன்றியப் பெருந்   தலைவராக அரசுப் பொறுப்பைத் தொடங்கினார். கடந்த 1989 முதல் 1999 வரை மின்சாரத்துறை, பால்வளத்துறை, செய்தித்துறை, தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து  உணவுத் துறை-கூட்டுறவுத் துறை அமைச்சர்(1996-2001)  போக்குவரத்துத்துறை அமைச்சர்(2006-2011) வேளாண்துறை அமைச்சர்(2008-2009) என அமைச்சுப்பொறுப்புகளில் செயல்பட்டார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் போல்  திருச்சி கலைஞர் அறிவாலயத்தைச் சிறப்பாகக் கட்டியது இவரது சிறப்புகளில் ஒன்றாகும்.

மு.க.தாலின், 1967இல் தன் 14ஆம் அகவையில், தன் மாமா முரசொலி மாறனுக்காகத் தேர்தல் பரப்புரை தொடங்கியவர், இப்பொழுது நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். வட்டச் சார்பாளர், மாவட்டச் சார்பாளர், பொதுக்குழு உறுப்பினர்(1973), செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்றுக் களப்பணிகள் ஆற்றினார். நெருக்கடிக் காலத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணுகைச் சட்ட(மிசா)த்தின்படித் தளையிடப்பட்டுச் சிறைவாழ்க்கையில் தள்ளப்பட்டார். கட்சியின் பொறுப்புப் படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணி அமைப்பாளர்(1980-1984), இளைஞர் அணிச்செயலாளர்(1984-2017), பொருளாளர்(2008-2018),எதிர்க்கட்சித் தலைவர்(2016), செயல் தலைவர்(2017-2018), தலைவர்(2018 முதல்) எனப் பலநிலைகளில் கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட்டார். இப்பொழுது இரண்டாம் முறையாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாநகராட்சித்தலைவர்(1996, 2001), ஊரக வளர்ச்சி-உள்ளாட்சித் துறை அமைச்சர்(2006), துணை முதல்வர்(2009), முதலமைச்சர்(07.05.2021 முதல்) என ஆட்சிப்பொறுப்பில் இருந்து நற்பணி ஆற்றி வருகிறார். முதல்வராக இருந்து, நான் முதல்வன், பசுமைத் தமிழ்நாடு இயக்கம், புதுமைப்பெண், முதலமைச்சர் காலைஉணவுத்திட்டம் முதலான திட்டங்கள் மூலம்  மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வருகிறார். இந்தியத் தேச அளவில் பிற மாநிலத் தலைவர்களால் விரும்பப்படுபவராகவும் இந்தியக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வல்லமை மிக்கவராகவும் விளங்குகிறா்.

கட்சியின் புதிய பொறுப்பாளர்களுக்கு நாம் அறிவுரைகூற வேண்டிய தேவைஇல்லை. அவர்களின் தலைவரே நல்லறிவுரை கூறியுள்ளார். “நாம் பயன்படுத்தும் சொல் மிக மிக முக்கியமானது. மிக மிக எச்சரிக்கையாகப் பேசுங்கள்” என யாகாவாராயினும் நா காக்க என்று அவர் சொல்லியுள்ளதை யாரும் மறக்கக் கூடாது. நா காப்போர் விளையாட்டிற்காகவும் யாரையும் இகழ்ச்சியாகப் பேச மாட்டார்கள். எனவேதான் திருவள்ளுவர்.

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.(திருக்குறள் 995) என்கிறார்.

தன்னுரையில், “அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார். காலங்காலமாகத் தமிழ் இலக்கியங்கள் இதனைத் தெரிவித்து வருகின்றன. சங்கக்கால மன்னர்களும் புலவர்களும் ஆட்சிப்பொறுப்பின் சுமை குறித்துக் கூறியுள்ளனர்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம்  மழை பெய்யாவிட்டாலும் விளைச்சல் குறைந்தாலும் இயற்கைக்கு மாறானவை தோன்றினாலும் நாட்டின் காவலனான தலைவனையே இந்த அகன்ற உலகம் பழிக்கும் என்கிறார்  வெள்ளைக்குடி   நாகனார் என்னும் புலவர்

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்

இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும்

காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்

என்பன அப்பாடலடிகள்(புறநானூறு 35, 27-29).

எனவே, பொறுப்பாளர்களும் கட்சியினரும் ஆட்சிப்பொறுப்பின் நலன்களை மட்டும் எண்ணிக் கொண்டிராமல், அதன் சுமைகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சிறு பழியும் தங்களால் ஆட்சிக்கு ஏற்படா வண்ணம் மக்கள் நலனில் கருத்து செலுத்த வேண்டும்.

ஒன்றிய அரசின் இந்திததிணிப்புகள் குறித்து முதல்வரும் தலைவருமான மு.க.தாலின் ஒன்றிய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தித் திணிப்பு எதிர்ப்பை அலங்கார முழக்கமாகக் கருதாமல் உள்ளத்தின் அடியில் இருந்து உணர்வுபூர்வமாக உணர்ந்து இந்தித்திணிப்பின் தீமையை மக்களிடமும் ஒன்றிய ஆட்சியாளர்களிடமும் உணர்த்த வேண்டும். இந்தித் திணிப்பை அல்ல, இந்தியைத் தாய்மொழியாகக்  கொண்டிராத பிற மாநிலங்களில் மறைமுகமாகத் திணிக்கப்படுவதால் இந்தியையே எதிர்க்க உறுதி கொள்ள வேண்டும். அதே நேரம் தமிழ். தமிழ் மக்களின் எல்லா நிலைகளிலும் பயன்படு மொழியாகத் திகழ உழைக்க வேண்டும். தி.மு.க.வின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வண்ணம் அவரவர் நடத்தும் கல்விக்கூடங்களில் தமிழையே பயிற்று மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தியையும் சமற்கிருதத்தையும் கற்பிப்பதை நிறுத்த வேண்டும். பெயரளவிற்கு இந்தி ஒழிக எண்பதாலோ, தமிழ் வாழ்க என்பதாலோ இந்தித்திணிப்பு நிற்காது, தமிழும் வாழாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆரவார அரசியலுக்கு இடம் தராமல், ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும்.

எனவே, புதிய பொறுப்பாளர்கள் பிறருக்கு முன் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து தமிழ்நாட்டைத் தமிழ் வழங்கும் நாடாக விளங்கச்செய்யும் வகையில் ஒல்லும் வகையெல்லாம் உழைத்து மேலும் பல உயர்வுகள் எய்த வாழ்த்துகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை



Wednesday, October 12, 2022

விடுமுறை நாள்களைத் தெரிவிக்கக் கூடத் தமிழுக்குத் தகுதி இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல

விடுமுறை நாள்களைத் தெரிவிக்கக் கூடத் தமிழுக்குத் தகுதி இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்



(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 8 இன் தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்

9.  தமிழ் வளர்ச்சிப் பணிகளில் உரிய வளர்ச்சி தேவை.

வரும் 2023 ஆம் ஆண்டின் பொதுவிடுமுறை நாள்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. வழக்கம்போல் ஆங்கிலத்தில்தான் வெளியிட்டுள்ளது. நமக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. புத்தாண்டு நாள், பொங்கல், திருவள்ளுவர் நாள் முதலிய விவரங்களைத் தமிழில் தெரிவிக்க இயலவில்லையா? அல்லது கிழமைகளைத் தமிழில் குறிப்பிடத் தெரியவில்லையா? அல்லது தமிழில் கிழமைப்பெயர்கள் தெரியாதவர்கள்தான் செயலகத்தில் உள்ளனரா? அல்லது விடுமுறைப் பட்டியலில் தமிழில் கூற இயலாத அளவிற்கு அறிவியல் சொற்கள் உள்ளனவா? அல்லது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் ஆங்கிலேயர்கள்தான் பணியாற்றுகின்றனரா? ஏன் இந்த அவலம்? விடுமுறைநாள்களைக் கூடத் தெரிவிக்கத் தமிழுக்குத் தகுதி இல்லை என்று சொல்கிறார்களா? அல்லது அதற்கான வல்லமை தமிழுக்கு இல்லை என்கிறார்களா? ‘தமிழ்நாடு அரசு’ என்பது தமிழர்க்கான அரசுதானே! அல்லது ஆங்கிலேயர்க்கான அரசா? வெட்கம், மானம், சூடு, சுரணை என்றெல்லாம் சொல்கிறார்களே! இவையெல்லாம் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவோர்க்கு இல்லையா? என்று மக்கள் எண்ணமாட்டார்களா? அல்லது இவற்றைத் தாங்கிக் கொள்ளும் மக்களுக்குத்தான் இல்லையா? என்று வருங்காலத்தவர் எண்ணமாட்டார்களா?

அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஆங்கில மோகம் கொண்ட அதிகாரிகள் குறித்து முன்பே குறிப்பிட்டு இருந்தோம். “அதிகாரிகளின் ஆங்கில மோகத்தை அகற்றுங்கள்! அல்லது அவர்களை உயர் பொறுப்புகளில் இருந்து அகற்றுங்கள்!” எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 7 நாள் 23.07.2022) இவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கின்றது.

ஒருவேளை இரு மொழிகளில் வெளியிட்டு ஆங்கிலப் பட்டடியல் ஊடகத்திற்குத் தரப்பட்டது என்று சொல்வார்களோ எனப் பார்த்தால் தமிழில் வந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு இரு மொழிகளில் வந்திருந்தாலும் தவறுதான். ஏனெனில் இருமொழித்திட்டம் என்பது தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே! தமிழ்நாட்டிற்கு வெளியே ஆங்கிலமும் என்பதாகத்தான் பின்பற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பிறமொழி மாநில அலுவலகங்கள், அல்லது ஒன்றிய அரசு அலுவலகங்கள் அல்லது பன்னாட்டு அலுவலகங்கள் என எவை இருந்தாலும் அவற்றுடனான தொடர்புமொழி தமிழ் மட்டுமே என்று பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் ஆட்சிமொழித்திட்டம் என்பது முழுமையாகச் செயல்படுத்தப்படும். ஆதலின் இந்த நொண்டிச்சாக்கு ஏதும் இருப்பின் அது குறித்து நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.

1962 இல் வெளியிட்ட ‘தமிழால் முடியும்’ என்ற நூலில் பேராயக் கட்சி ஆட்சியில் நிதி யமைச்சராகவும் கல்வியமைச்சராகவும் பின்னாளில் ஒன்றிய அமைச்சராகவும் ஆளுநராகவும் இருந்த சி.சுப்பிரமணியம், “மற்றவர்களுடன் தொடர்பு இல்லாதபடி இதுவரை தமிழ் அன்னை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாள். இதுவரை தமிழர்களை மற்றவர்கள் சிறையில் அடைத்திருக்கலாம். ஆனால், நம்மை நாமே சிறையில் அடைத்துக் கொள்ளக்கூடாது. வெளியிலிருந்து மற்றொருவர் கதவைப்பூட்டினாலும்சரி ,அல்லது நாமே உள்ளே இருந்து கொண்டு கதவைப் பூட்டிச்சாவியைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டாலும்சரி இரண்டு விதத்திலும் நாம் இருக்குமிடம் சிறையாகத்தான் இருக்கும்” என்று குறிப்பிட்டிருப்பார்.

ஆனால், 60 ஆண்டுகள் கடந்தபின்னும் நாம் தமிழன்னையைப் பிறருடன் தொடர்புகொள்ள முடியாதபடிச் சிறையில்தான் அடைத்து வைத்திருக்கிறோம் என்பதற்கு விடுமுறைப் பட்டியல் ஒன்றே சான்று. ஆள்வோர்களின் சொல்லும் எழுத்தும் தமிழைப் போற்றினாலும் செயல் தமிழை ஒதுக்குவதாகத்தானே உள்ளது! திடீர் திடீரென்று நினைவிற்கு வரும் நோயாளிபோல் நாம் திடீர் திடீரென்று இந்தியை எதிர்க்கிறோம் என்று குரல் கொடுத்தால் மட்டும் தமிழ் வளர்ந்து விடுமா? அல்லது “வாழ்வும் வீழ்வும் தமிழுடன்தான்” என முழங்கினால் மட்டும் தமிழ் வளர்ந்து விடுமா? இந்த உணர்வு உள்ளத்திலிருந்து வரவேண்டும். அப்பொழுதுதான் தமிழைத் தொடர்புச் சிறையிலிருந்து மீட்க இயலும்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு. ( திருக்குறள் 1077) என்கிறார் திருவள்ளுவர்.

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, “கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்” என உரை எழுதியிருப்பார். இதனையே சற்று மாற்றி  முரட்டுத்தனமாக அரசு நடந்து கொண்டாலன்றித் தமிழ்ப் பகைவர்கள் தமிழுக்காக ஒரு துளி மையையும்கூடச் செலவிடமாட்டார் எனலாம். கலைஞரின் வழி நடக்கும் அரசு இது குறித்துச் சிந்திக்க வேண்டும். போனது போகட்டும். இனிமேல், தமிழில் வெளியிடலாம் என்று வாளாவிருக்கக் கூடாது. உடனடியாக மற்றொரு விடுமுறைப் பட்டியலைத் தமிழில் வெளியிட்டுச் சுற்றுக்கு விட வேண்டும். அத்துடன் நின்று விடாது ஆங்கிலப் பட்டியல் வெளியீட்டில் தொடர்புடைய கீழ்நிலைப் பணியாளரிலிருந்து உயர் நிலை அதிகாரி வரைக்கும் ஏதேனும் சிறு தண்டனையாவது கொடுக்க வேண்டும். அவர்களை ஒரு நாள் இடைவிலக்கம் செய்யலாம். அல்லது ஒரு நாள் ஊதியத்தை ஒறுப்புத் தொகையாகப் பிடித்தம் செய்யலாம். அல்லது வேறுவகையில் தண்டனை விதிக்கலாம். அப்பொழுதுதான் தவறு செய்தவர்களுக்கும் இனித் தமிழைப் புறக்கணிக்க எண்ணினாலே அச்சம் வரும். பிறருக்கும் பாடமாக இருக்கும்.

அரசு தமிழ் ‘ஆட்சிமொழி நிதியம்’ என்ற ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டும்.  தமிழ்ஆட்சிமொழித் திட்டத்தைச் செயல்படுத்தாதவர்களிடம் ஒறுப்புத் தொகை பெற்று இந்நிதியத்தில் சேர்க்க வேண்டும்.

பல்வேறு நிலைகளில் தமிழுக்கு எதிரான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கண்டும் காணாமல் இருக்கும் அரசு இனியும் அவ்வாறு இருக்கக் கூடாது. ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழ்நாட்டில் தமிழே எங்கும் என்னும் நிலையைத் தோற்றுவித்தால்தான் மக்களும் அரசிற்கு ஒத்துழைப்பர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, சொல்லில் தமிழ், செயலில் ஆங்கிலம் என்பதற்கு முற்றப்புள்ளி வைக்க அரசை வேண்டுகிறோம்.

தமிழே என்றும் தொடர்பு மொழி! தமிழே என்றும் ஆட்சிமொழி!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல இதழுரை

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

விடுமுறை நாள் அறிவிக்கை தலைமைச்செயலருக்கு நன்றியும் பாராட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்



விடுமுறை நாள் அறிவிக்கை தலைமைச்செயலருக்கு

நன்றியும் பாராட்டும்!

விடுமுறை நாள்களைத் தெரிவிக்கக் கூடத் தமிழுக்குத் தகுதி இல்லையா?” என நாம் கேட்டிருந்தோம். இதனை எழுப்பியதன் காரணம் காலம் காலமாக அப்படித்தான் இருக்கிறது என்பதால்தான். நான் 33 ஆண்டுகள் அரசுப்பணியில் இருந்துள்ளேன்; விடுமுறை ஆணை  ஒரு முறை கூடத் தமிழில் வந்ததில்லை. பின்னர் ஆங்கிலத்தில் ஆணை பிறப்பித்தாலும் தமிழிலும் அதனை வெளியிட வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்தது. அதன் பின் அதற்கிணங்கத் தமிழில் விடுமுறை அறிவிக்கையை வெளியிட்டாலும் உடனே  ஆங்கில அறிவிக்கை சுற்றுக்கு வந்து விடும் எனவே, தமிழ் ஆணை பிறப்பிக்கப்பட்டாலும் சுற்றுக்கு வராது. இப்பொழுது குறைபாடுகளைத் தெரிவிப்பின் உடன் நடவடிக்கை எடுப்பதால் அரசின் கவனத்திற்குக் கொண்டுவர எழுதியிருந்தோம்.

இதனைப்படித்த தலைமைச்செயலர் முனைவர் வெ. இறையன்பு தானே தொலைபேசி இணைப்பில் வந்து தமிழிலும் விடுமுறைப்பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும் தமிழ், ஆங்கிலம் இரண்டிற்கும் ஒருசேரத்தான் கையொப்பமிட்டதாகவும் கூறினார். அவ்வாறு வெளியிட்டிருக்கலாம்; ஆங்கில ஆணையைச் சுற்றுக்கு விட்டிருப்பார்கள் எனக் கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ளதைத் தெரிவித்தேன். பிற மாநிலங்களுக்கும் செல்வதால் ஆங்கிலத்திலும் வெளியிடுவதாகத் தெரிவித்தார்.

மிகுதியான பணிச்சூழல் இருப்பினும் நம் கருத்தை மதித்து  விளக்கம் தந்த “காட்சிக்கு எளியரான” தலைமைக்குரிய “செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்பும் உடை”யவரான தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு  அவர்களுக்கு நம் மனப்பூர்வமான நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்







Followers

Blog Archive