சசிகலா குடும்பத்தினரின் ஆளுமையைக் கண்டுஅஞ்சும் பா.ச.க.


 நாயகன் இல்லா நாவாய் (தலைவன் இல்லாத கப்பல்)போல ஆளுங்கட்சி தடுமாறித் தத்தளித்துக் கொண்டுள்ளது- மேனாள் முதல்வர் செயலலிதா நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் படுத்திருந்த பொழுதே ஆட்சிச் சக்கரம் சுற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. அவர் மறைந்த பின்னர் ஆளுங்கட்சியின் பிளவால் குளிர் காயலாம் எனச் சிலர் எண்ணினர்.  ஒற்றைஇலக்க எண்ணிக்கையைத் தாண்டாச் சிலர் தனி அணி கண்டாலும், கட்சியில் பிளவு இல்லை என்றுதான்சொல்ல வேண்டும். இந்தச்சூழலில் எந்தக் கட்சியிலும் ஏற்படும் பிணக்குதான் இது. ஆனால், மேலே உள்ள ஒருவன், தமிழக ஆட்சியைத்தன் வயப்படுத்துவதற்காக வழக்கத்திற்கு மாறான வரன்முறைகளைப் புகுத்தி, ஆட்சியைத் தள்ளாட வைத்துக்கொண்டுள்ளான்.
  பா.ச.க. நேரடியாகத் தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர இயலாது என்பதை அக்கட்சித்தலைவர்கள் நன்கறிவர். எனவே, தங்களின் மறைமுக ஆட்சிக்குவழி வகுக்க, “அடிமையாயிருந்தால் ஆட்சியும் செல்வமும்! இல்லையேல் ஆட்சியைவிட்டு ஓடு! நலன்களையும் வளங்களையும் இழந்து ஒழிந்து போ!” என்பதே பா.ச.க.வின் மந்திரமாக உள்ளது.
  ஒதுங்கிப்போக எண்ணிய பன்னீரைத் தூண்டிவிட்டு, உட்கட்சிப் பூசலை உருவாக்க முயன்று தோற்றனர். பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபொழுது அடிமைவாழ்விற்கு ஒப்புக்கொண்டதால் அவரையே நீடிக்கச் செய்ய வேண்டும் எனப் பா.ச.க. முயல்கிறது. சசிகலாவோ அவர் குடும்பத்தினரோ, சிலவற்றில் ஒத்துப்போனாலும், பொதுவில்,  தனி ஆளுமையை இழந்து அடிமையாக ஆள விரும்பவில்லை.  பா.ச.க. என்ன முயன்றும் ஆளுங்கட்சியில் பெரும்பிளவை உண்டுபண்ண முடியவில்லை. அதனால் ஆட்சியைக்கவிழ்த்து முடிசூட்டிக்கொள்ளவும் இயலவில்லை.
  ஊழல் முதலான காரணங்களால்தான் சசிஅணியைப் பா.ச.க. எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டாலும் எவரும் அதை நம்பப்போவதில்லை. நாட்டில் எந்தக் கட்சியும் நேர்மையாக ஆளவில்லை! ஆண்ட கட்சிகளும் ஆளும் கட்சிகளும் நேர்மையின்மையின் உறைவிடங்களாகத்தான் உள்ளன.  மத்திய ஆட்சியாளர்களின் ஊழல்களுடன் ஒப்பிடும்பொழுது தமிழக அரசியல்வாதிகளின் ஊழல் குறைவுதான்.
  நேர்மையும் நாணயமும் மக்கள் நலனில் முழு ஈடுபாடும் செலுத்தும் கட்சிகள் அரசை அணி செய்ய வாப்பின்மையால் ஊழல் குறைந்த ஆட்சியைத்தான் நாம் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறோம். எனவேதான், அதிகமுக ஆட்சி  தொடர வேண்டும்;  அதற்கான வாய்ப்பு பறிபோகும்பொழுது அடுத்த கட்சியான  தி.மு.க.தான் ஆட்சியில் அமர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். எனவே, தனக்கு வாய்ப்பே இல்லாததை உணர்ந்த பா.ச.க. அதிமுக உட்கட்சி நடவடிக்கைகளில் தலையிடவில்லை என்று ஒப்புக்குக் கூறிக்கொண்டே எந்த வழியில் எல்லாம் அரசு அதிகாரங்களைப் பயன்படுத்தி அதனைக் குலைக்க முடியுமோ அதனைச் செய்து வருகிறது.
   சசிகலா சிறையில் இருந்தாலும்,  அவருக்குக் கட்டுப்படுபவர்கள் உள்ளனர் என்பதை உணர்கிறது பா.ச.க.  தினகரன் உட்கட்சிப் பூசல்களை ஒழித்துவிட்டு அதிமுக ஆட்சி  தொடர வழிவகுப்பார் என்பதைப் புரிந்து கொண்டது. எத்தனையோ வழிகளில் அ.தி.மு.க.வை முடிக்க எண்ணினாலும் தினகரன் சமாளிப்பதைப் புரிந்து கொண்ட பாசக தினகரன் ஆளுமை  நீங்க  வேண்டுமெனில் அ.தி.மு.க. வை விட்டு  அவர் நீக்கப்பட வேண்டும் எனப் புரிந்து கொண்டது. எனவேதான்,  உ.பி்.நிலைப்பாட்டிற்கு மாறாக இங்கே அதிமுகவிற்குப் பெயர் சூட்டிப் புதிய சின்னம் அளித்து, புதிய கட்சிபோல் தோற்றமளிக்கச்  செய்கிறது. தன் ஏவலாட்கள் மூலம்  சசிலா, தினகரன் இல்லா அதிமுக என முழங்க வைக்கிறது.
   கட்சிப்பணிகளிலிருந்து ஒதுங்கினாலும் பின்னர், அவரது ஆளுமைக்குள் அதிமுக சென்று விடும் என்ற பேரச்சம் பா.ச.க. தலைவர்களுக்கு உள்ளது.  செயலலிதா இல்லா அதிமுக என்பதைப் பாசகவின் நிழலாக மாற்ற அத்தலைவர்களுக்குச் சசிகலா, தினகரன் ஆளுமை பிடிக்க வில்லை. எனவேதான், தொடர்ந்து மறைமுக மிரட்டல்கள். “தினகரனுக்கு ஆதரவு என்றால் உனக்கு வரும்  வருமான வரித்துறை, புலனாய்வுத்துறை பிற துறைகள் யாவும் சூறைத்தாக்குதல்களை மேற்கொண்டு சின்னாபின்னமாக்கிவிடும்” என்ற அச்சுறுத்தல்கள் மூலம் அடிபணிய வைக்கிறது.
  யார், யார் தினகரனுக்கு ஆதரவாக மேலே உள்ளவர்களைச் ந்தித்தார்க்ளோ அவர்களையே மிரட்டித் தினகரனுக்கு எதிராகப் பேச வைக்கிறது.
  “இன்றைய நண்பன், நாளைய பகைவன்; இன்றைய பகைவன் நாளைய நண்பன்” என்பது அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். ஆனால் ஆதரவாக உதிர்க்கும் சொற்கள் காற்றில் கரையும் முன்னரே எதிர்ப்பாகச் சொல்வது இத்தகைய அச்சுறுத்தல்களால்தான்.
  தினகரனை ஒதுக்கச்சொல்வதன் மூலம் அவர் தன் ஆதரவாளர்கள் மூலம் கிளர்ந்து எழுவார்; கட்சியில் பெரும் பிளவு ஏற்படும் என்று பா.ச.க. தலைவர்கள் போட்ட கணக்கு பொய்த்துப்போனது. இதுவரை எந்தத் தலைவர்களும் நடந்துகொள்ளாத முறையில் பொறுமையாயும்  பெருந்தன்மையாகவும் நடந்துகொள்வதாக அவரை எதிர்த்தவர்களே அவரைப் பாராட்டுகின்றனர். அவர் பின்னால் உள்ளவர்கள் எத்தனைபேராக இருந்தாலும், அவர்கள் மூலமே  ஆட்சிக்கு  எதிராகக் கலகக்குரல் எழுப்ப முடியுமே! ஆனால், பா.ச.க.வின் சதியைப் புரிந்துகொண்ட தினகரன் தன் செயல்மூலம் உயர்ந்து விட்டார்.
  “இது நாடகம். அவர்தான் இவ்வாறு செய்யச்சொல்கிறார்” என்பதெல்லாம் பா.ச.க.வின் உண்மை முகத்தை மறைக்கும் செயல்களே! ஏனெனில், அவ்வாறு  ஒதுக்கும் குரலை முழங்குபவர்வகளில் ஒரு சாரார், கடுமையாக எதிர்ப்புக்குரல்களை எழுப்புகின்றனர். தினகரன் தனக்கு ஆதரவாக உள்ளவர்களையும் கலகக்குரலுடன் இணைந்து நேரம் வரும்பொழுது ஆக வேண்டியதைச்செய்யலாம் என அமைதி காக்கச் சொல்வதை வேண்டுமானால் நாடகமாகக் கூறலாம். எப்படிப் பார்த்தாலும் தினகரன் ஆளுமை மிக்கவர் என்பதும் அதனாலேயே அவரை விரட்டப் பா.ச.க. துடிக்கிறது என்பதும் நன்றாகத் தெரிகின்றது. புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்பதைப் பா.ச.க. புரிந்து கொண்டதால்தான், சசிகலா குடும்பமே விரட்டப்பட வேண்டும் என்று சொல்ல வைக்கிறது.
  நாட்டிற்குத்தேவை நல்ல ஆளுங்கட்சியும் நல்ல எதிர்க்கட்சியும்தான்.  நல்ல ஆளுங்கட்சியை இழக்க நேர்ந்தால் பா.ச.க. விற்கு அடிமையாவதை விட அடுத்தவர்க்கு வழி விடலாம். நல்ல எதிர்க்கட்சியாகத் திகழலாம். ஆனால், மடியில் கனமுள்ளவர்களால் அவ்வாறு  அச்சமின்றி  இருக்க முடியவில்லை.   மேலும் செல்வம் சேர்க்க வழியில்லாவிடடாலும் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்கவேண்டுமே என்ற கவலையாலும் பா.ச.க.வின்  வலையில் சிக்குவோர் உள்ளனர். ஆனால், நீண்ட கால நலனுக்கு அதிமுக காக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
 எதிரி ஒருவரைக்கண்டு அஞ்சுகிறான் என்றால்எதிரிக்கு அச்சமூட்டுபவன் நம் நண்பராகத்தானே இருக்க முடியும்! அதனால், கட்சி நலன் கருதியும் ஆட்சி நலன் கருதியும் தந்நலம் கருதியும் தினகரன்பக்கம் அதிமுக நிற்பதில் தவறில்லை.
  வழக்குகள் இல்லா அரசியல் வாதிகள் இல்லை. பா.ச.க.மீது இல்லா வழக்குகளா! இரட்டை இலை பெறப் பணம் கொடுப்பதாக வழக்கு உள்ளதே என்றால்,  நாம் அதற்குள்ளே செல்ல வேண்டா! அஃது உண்மையாயின்,  கட்சியின் நலனுக்காக இரட்டை இலையைக் காக்கவும் அதன் மூலம் கட்சியினர் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடரும் தேர்தல்களிலும் வெற்றி காணத்தானே தவறிழைத்துள்ளார். அப்படியானால், இந்த ஒன்றிற்காகவேனும்,  இந்த நேரம் கட்சி அவர் பக்கம்தானே இருக்க வேண்டும்! எனவே, மத வெறியிலும் மொழி வெறியிலும் உள்ள பாசக- விற்கு இரையானால் பாதிப்பு அவர்களுக்கு மட்டமல்ல! தமிழ்நாட்டையும்   துன்பக்குழியில் தள்ளிவிடும் என்பதைப் புரிந்துகொண்டு ஒற்றுமை காத்து, இருக்கின்ற கட்சி அமைப்பிற்குக் கட்டுப்பட வேண்டும். மாற்றம் தேவை எனில், மக்களாட்சி முறைப்படி  அதனை நிறைவேற்றிக் கொள்ள  வேண்டும். பா.ச.க. மேற்கொள்ளும் குறுக்கு வழிகள் மூலம்   நிறைவேற்ற எண்ணக் கூடாது.
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.(திருவள்ளுவர், திருக்குறள் 486)
[கொடுமைகளைக் கண்டும்கூட ஊக்கம் மிகுந்தவர்கள்,  மன உறுதியுடன் அமைதிகாப்பது, அச்சத்தால் அல்ல.  பகையைத தாக்குவதற்காக, ஆட்டுக்கடா, தன் கால்களைப் பின்வாங்குவது போன்றதாகும்.]
இலக்குவனார் திருவள்ளுவன்