election01
  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகள் அமைகின்றன. மக்கள் மனம் கொள்ளும் வகையில் எக்கட்சியின் பணியும் அமையாததால், விருப்பமின்றி, எதிர்நிலை அணுகுமுறையில் மக்கள் வாக்களிக்கின்றனர். சிலக் கட்சிகள் மீது நாட்டம் இருப்பினும் வாக்கு சிதறக்கூடாது என்று எண்ணியும் வெற்றிபெறும் என எதிர்நோக்கும் கட்சியில் வாக்களிக்க விரும்பியும், மக்கள் அளிக்கும் வாக்குகளே ஆட்சியை முடிவு செய்கின்றன.
  இப்பொழுது நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் – தமிழ்நாட்டில்  வரும் ஏப்பிரல் 24,2014 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் – இதே போன்ற போக்குதான் முதன்மை வகிக்கும் என்பதில் ஐயமில்லை. என்றாலும் எதிர்நிலை வாக்களித்துச் சலித்துப் போன மக்கள் வேறு எவ்வாறு வாக்களிப்பது என்பதில் குழப்பநிலையில் உள்ளனர் என்பதும் உண்மைதான். எனினும் 1967  இல் விரட்டியடிக்கப்பட்ட, ஊழல் திலகம், இந்தியத் துணைக்கண்டத்துத் தேசிய இனங்களை ஒடுக்கும் அடக்குமுறை நாயகம், காங்கிரசுக் கட்சி இந்தியா, முழுவதும் விரட்டி யடிக்கப்பட வேண்டும் என்பதே உண்மை. இவற்றிற்கு அப்பால், தமிழ்நாட்டில் காவிரியாறு, பெரியாறு முதலான நீர்ச்சிக்கல்களில் காட்டும் பாகுபாடு, தமிழக மீனவர்கள் நலனில் சிறிதும் கருத்து செலுத்தாததுடன், நாளும் கொல்லும் சிங்களத்திற்குத் துணை நிற்றல், எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ் ஈழத்தில் பன்னூறாயிரத் தமிழர்களைக் கொன்றொழித்த கொடுஞ்செயல் போன்ற தமிழர் நலனுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பதால், காங்கிரசுக் கட்சி எல்லாத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதே பெரும்பாலோர் விருப்பம். எனவே, யார் வந்தாலும், காங்கிரசு அடியோடு தோற்கடிக்கப்படுவது பிறருக்கும் பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
  இனப்படுகொலைகளை இரக்கமின்றி நடத்திவிட்டு – தமிழ் நிலத்தைச் சுடுகாடாகவும் புதைகாடாகவும் ஆக்கிவிட்டு – உலக அரங்கில் நாடகமாடும் சிங்கள ஈன அரசிற்கு உதவுவதற்காக நலத்திட்ட உதவி என்ற போர்வையில் ஆட்டம் போடும் காங்கிரசு, வெட்கமும் மனச்சான்றும் இன்றி  அங்கே தமிழர்களுக்கு உதவி செய்து வருவதாகப் பொய்யுரை புகன்று வருகிறது. படுகொலையாளி களுக்கும் துணை நின்ற உடன்  கொலையாளிகளுக்கும் பாடம் புகட்ட,  காங்கிரசு அகற்றப்பட வேண்டும்! துரத்தப்படவேண்டும்! புதைக்கப்பட வேண்டும்! எனவே, தமிழ் மக்களும் தமிழ்நாட்டிலுள்ள பிற மக்களும் அக்கட்சி நீங்கலான எதற்கு வாக்களித்தாலும் பாராட்டத் தகுந்தவர்களே!
 வள்ளலார்  இராமலிங்க அடிகள் வழியில், கருணையிலா ஆட்சி கடுகி ஒழிய” வேண்டும் எனில், அவர்  அஞ்சிய
நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
 நண்ணிடார் தமையரை நாளுங்
 கெடுநிலை நினைக்குஞ் சிற்றதி காரக்
 கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
 படுநிலை யவரை”   
அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்.
  எனவே, பன்னூறாயிரவர் படுகொலைகளுக்குக் காரணமாகும் வகையில்,  நேரடியாகவும் மறைமுகமாகவும் பாராமுகமாகவும் செயல்பட்டவர் யாராயினும், வீட்டு மக்கள் நலன்களுக்காக நாட்டுமக்கள் நலன்களைக் காவு கொடுத்தவர்கள் எவராயினும் அவர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான்    மக்களுக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டு அந்த மக்களிடமே வாக்கு கேட்க இயலும் என்ற துணிவு யாருக்கும் வாராது.
 ‘பேய்’க்கு வாக்களிக்கவில்லை என்ற ஒருமித்த முடிவிற்கு வந்தாலும் வாக்குரிமையை உரியவாறு பயன்படுத்த வேண்டும் அல்லவா? அது குறித்தும் நாம் கருத வேண்டும்.
கட்சி ஈடுபாடு கொண்ட வாக்காளர்களில் பெரும்பான்மையர் தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கே வாக்களிப்பர் என்பதில் ஐயமில்லை.
  கட்சியின் செயல்பாடு பிடிக்காத நேரத்தில் வாக்களிப்பைப் புறக்கணிப்பார்களே தவிர, வேறுகட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இன்றைய கட்சிகள் என்பன, அன்றைய  சமய(மத) வடிவங்களே! எனவே, சமய வெறி இன்றைக்குக் கட்சி வெறியாக மாறி உள்ளது. (பழைய கட்சிகளான சமய வெறிகளும் இருக்கத்தான் செய்கின்றன.) தொண்டர்கள் கட்சிகளுக்குக் கொத்தடிமைகளாக உள்ளனர். (எனவேதான், ஓர் அமைப்பு பிளவுபடும்பொழுது பெரும்பான்மையர் தாய் அமைப்பிலேயே இருந்து விடுகின்றனர். மக்கள் திலகம் புரட்சித்தலைவராக மாறியதன் காரணம் அவரது நேயர்கள் திரண்டு அவருடன் இணைந்ததுதான்.) தங்களது உணர்வுகளுக்கு மாறாகத் தலைமை நடந்து கொண்டாலும் அமைதி காக்கும் இவர்களாலேயே தலைவர்கள் தம் விருப்பங்களுக்கேற்ப நடந்து கொண்டு தொண்டர்கள் விருப்பத்தின்படி நடப்பதாகக் கதை அளக்கின்றனர். பல மணி நேரம் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தும் கட்சிகளால் இனப் படுகொலைக்கு எதிராகச் சில நிமைய ஊர்வலங்கள்கூட நடத்தப்பெறாததன் காரணம் தலைமையே! எனவே, கட்சித் தொண்டர்கள்  தத்தம் உணர்வுகளைத் தலைமைக்குத் தெரிவிக்கத் தயங்கக்கூடாது. அதற்கு மாறாகச் செயல்பட்டால் எதிர்க்கத் தயங்கமாட்டோம் என்பதையும் உணர்த்த வேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தலைமைகள் மக்கள் நலனுக்காகப் பாடுபடும். மனச்சான்றின்படிச் சிந்தித்து வாக்களிக்குமாறு கட்சித் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்! ஆதலால், பிற வாக்காளர்கள்குறித்து நாம் பார்ப்போம்!
  பா.ச.க. ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சமயம்’ என அழிவுப்பாதையில் நாட்டை இழுத்துச் செல்லும் கட்சி. எனவே, அதற்கான ஆதரவு என்பது நம் தலையில் நாமே மண்ணை இட்டுக் கொள்வதை ஒக்கும். ஆனால், இந்திய அளவில் காங்.கிற்கு மாற்றாக அதுதான் நிற்கின்றது. புதிய ஏழைமக்கள் கட்சி என்று பெயர் சூட்டிக் கொள்ளும் ஆம்ஆத்மியும் தமிழர் வரலாறு அறியாமையால், நமக்கு எதிரானதாகத்தான் செயல்படும். தங்களுக்குத் தாங்களே மூன்றாம்அணி என அவ்வப்பொழுது சொல்லிக் கொள்ளும்  கட்சிகள் சில அவ்வாறு முழு மனத்துடன் செயல்படவில்லை. எனவே, பிற மாநிலங்களில் பா.ச.க. வந்து விட்டுப் போகட்டும்! அதன் மூக்கணாங் கயிறு தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்களிடம் இருக்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டில் அதற்கு இடம் தரக்கூடாது. எனினும் அதனுடன் இணைந்துள்ள கட்சிகளின் தமிழ்  நல வேட்பாளர்களை நாம் தெரிவு செய்வதே நமக்கு நன்மையாகும்.
 வைகோ தலைமையிலான ம.தி.மு.க., தமிழர் நலனுக்காகக் குரல் கொடுத்து வருவது. அது மட்டும்அல்ல, உலகத் தமிழர் நலன்களுக்காகவும், குறிப்பாக ஈழத் தமிழர் நலன்களுக்காகவும் தொடர்ந்து போராடி வருவது. அக்கட்சி பெருமளவான வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தமிழர் நலன்களில் தமிழ் மக்கள் கவனம் செலுத்தி வருவதைப்  பிற அரசியல்வாதிகள் புரிந்து கொள்வர். அக்கட்சி தோற்கடிக்கப்பட்டால், உலகெங்கும் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் அஞ்சத் தேவையில்லை என மத்திய அரசில் உள்ளோர் தமிழர் நலன்களைப் புறக்கணிக்கும் போக்கும் எதிராகச் செயல்படும் இழிசெயலும்  தொடரும். எனவே,  ஈழத்தமிழர்களின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில், அமைய உள்ள மத்திய  ஆட்சி, இனப்படுகொலை புரிந்தவர்கள் தண்டனைகளை விரைவில்பெற உலக அரங்கில் நடவடிக்கை எடுக்கவும், தமி்ழ் ஈழத்தை ஏற்று அதனை மலரச் செய்யவும் ஆவன செய்வர்.
  சிலர் வைகோவைத் தெலுங்கர் எனக் கூறி எதிராகக் கூறி வருகின்றனர். நாயுடு, நாயக்கர்,  ஆகியோர், தெலுங்கர் ஆட்சியில்  ஆட்சிப் பொறுப்பில் உடனிருந்தமையால் தெலுங்கு பேசியவர்களே! அவர்கள் தெலுங்கு தெலுங்கே அல்ல!  ஆங்கிலேய ஆட்சியால் ஆங்கிலேயம் பேசிய/பேசும் நம்மவர் ஆங்கிலயேர் ஆகிவிடுவார்களா? அதுபோல்தான் இதுவும்.   வேறொரு வகையிலும் சிந்திக்க வேண்டும். தமிழனாகப் பிறந்து தமிழர்க்கு எதிராகச் செயல்படுவோரை விட, உண்மையில் தமிழர் நலனில் கருத்து செலுத்துவோர்தானே தமிழராவர். மேலும்,   இப்பொழுது நடைபெறுவது  தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அல்ல! நாடாளுமன்றத் தேர்தல்தான்! மத்திய ஆட்சியில் தமிழர் நலன் நாடும் தலைவரும் அவரது கட்சியினரும் பங்கேற்பதுதான் தமிழர்க்கு நிலையான நன்மைகளைத் தரும்.  எனவே, அவர்  பிறப்பால் யார் என  ஆராயாமல், எண்ணத்தாலும் செயலாலும் தமிழராகச் செயல்படும் அவரைப் பெருமளவு வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்வது விருதுநகர் தொகுதி வாக்காளர்கள் கடமையாகும்.
  அஇஅதிமுக-வின் பழைய நிலைப்பாடு நமக்குத் தேவையில்லை. இன்றைக்கு ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது வரவேற்கத்தக்கது. “சிங்கள இலங்கை நம் நட்பு நாடல்ல” என முரசறைந்துள்ளதும் இனப்படு கொலைகாரர்கள் தண்டிக்கக் குரல் கொடுப்பதும், தமிழ் ஈழம் அமைக்கவும் தொடர்பானவற்றிலும் சட்ட மன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதும் இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகப் பாடுபடுவதும் தமிழர்களின் எண்ணம்தான் என்பது மெய்யெனில் அக்கட்சியும் வெற்றியைப் பெற்றாக வேண்டும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தலைமையமைச்சர் கனவைப் பரப்பியதும், சுருதி குறைந்து, வெவ்வேறுவகையாகப் பேசியதும் தலமையமைச்சர் ஆனால், பிற அமைச்சர்களும் முதலமைச்சர்களும் தூதுவர்களும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தால்தான் நல்லுறவு நிலவும் என்ற பேச்சிற்கு ஆளானதும், அக்கட்சி பெற வேண்டிய வெற்றியைச் சறுக்கச் செய்துவிட்டது. இக்கட்சி எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றால், தமிழ்வழிக்கல்விக்கு எதிரான அரசின் போக்கு, தமிழ் வழிபாட்டிற்கு எதிரான அரசின் செயல்பாடுஈழத்தமிழர்களைச் சிறைக்கொட்டடிபோன்ற முகாம்களில் அடைத்து வைத்திருப்பது முதலான  தமிழ்எதிர்ப்போக்கிற்கும் ஆதரவு தெரிவித்ததாகிவிடும். எனவே, இக்கட்சியின் தமிழ்நலச் செயல்களுக்குப் பச்சைக்கொடி காட்டவும், தமிழ்ப்பகைச் செயல்களுக்குச் செங்கொடி  காட்டவும்  பிற கட்சிகளில் தமிழ்நலவேட்பாளர்கள் போட்டியிடாத இடங்களில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.  அஇஅதிமுகவின் எதிர் வாக்கு பிரிவதால் பெருமளவு வெற்றி பெற வாய்ப்புள்ளது என ஒரு சாராரும், பன்முனைப்போட்டியால், 50%இற்கு மேல் வெற்றி பெற இயலாது என மறு சாராரும் கூறி வருகின்றனர்.  அஇஅதிமுக வெற்றி பெற்றால் மத்திய அரசில் முதன்மைப் பங்கு வகிக்கும் என எதிர்பார்ப்பது நடந்தாலும் நல்லதுதான். ஆனால், மூன்றாவது அணி வெற்றி பெற்றால்மட்டுமே அதற்கு வாய்ப்பு உள்ளது.
  பா.ச.க. போட்டியிடும் இடங்களில் அஇஅதிமுக வெற்றி வெறுவதே நல்லது. என்றாலும் தென்சென்னையில் தி.மு.க. சார்பில் தி.கே.சீ.இளங்கோவன் நிற்கிறார். ஆட்சியில் இருக்கும் பொழுது இந்தியனாகவும் இல்லாத பொழுது தமிழனாகவும் காட்டிக்கொள்ளும் தலைமையில் செயல்படுபவர்; என்றாலும் தி.கே.சீ.இளங்கோவன் முதன்முதலில்  சிங்களப் படு கொலைகளுக்கு எதிராக  நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர். இந்தியாவின் குற்றப்பங்களிப்பைச் சரியாகக் கண்டிக்கத் தவறி விட்டிருந்தாலும் இவரது உரை உலக அளவில் கவனிப்பிற்கு உள்ளானது.  இப்போதைய தேர்தலில் மு.க.தாலின் காங்.கிற்கு எதிரான விடாப்பிடியான போக்கைக் கொண்டிருப்பது பாராட்டிற்குரியது. தேர்தலுக்குப் பின்னரும் இப்போக்கு எச்சூழலிலும் மாறுதல் உறக்கூடாது.  இதனடிப்படையில் பா.ச.க.விற்கு எதிராக இங்கே மட்டும் திமுக வெற்றி பெறுவது நல்லதுதான். அந்த வகையில் அவர்  வெற்றி பெறுவது – தி.மு.க. எதிர்க்கட்சியாக அமையப்போவதால் – தமிழர் நலனுக்காக உரத்துக்  குரல் கொடுக்க உதவும்.  அதுபோல், நாகர்கோயிலில் யார் வரலாம் என்பது  குறித்துப் பின்னர் காண்போம்!
  விசயகாந்தும் இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில்  அரசின் கெடுபிடி காட்டப்படாத பொழுது அவர்களுக்கு உதவியர்தான். தம் பிள்ளைக்கு,  பிரபாகரன் எனப் பெயர் சூட்டியும் திரைப்படம் வாயிலாகவும் தன் தமிழ் உள்ளத்தை வெளிப்படுத்தியவர். இவர் கட்சியில் தமிழர் நலன் நாடுவோர் வெற்றி பெறுவது இக்கட்சியின் தமிழ்நலச்செயல்பாட்டைப் பெருக்கும். இக்கட்சி காங்.உடன்  கூட்டணி வைக்க முயன்ற கட்சி என்ற அளவில்  முழு வெற்றியைப் பெறக் கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஊடகங்களில் தமிழ் நிலவப்பாடுபடுவது பா.ம.க. மட்டும்தான். எனவே, இதற்காகவும்  மதுவிலக்கிற்கு எதிரான போராட்டத்திற்காகவும்  வெற்றிச் சுவையைப் பெற வேண்டிய கட்சியாக உள்ளது.  மூர்த்தி, அன்புமணி ஆகியோர், அமைச்சுப் பொறுப்பில் இருந்து அருந்தொண்டாற்றியவர்கள்.  எனவே,  பாமகவில் மக்கள் நலன்நாடும் தமிழன்பர்கள் வெற்றி பெறுவது நமக்கு நல்லது.
பொதுவுடைமைக் கட்சிகளும் ஓரங்கட்டப்படவேண்டியவையே. இந்தியப் பொதுவுடைமைக்கட்சி அவ்வப்பொழுது ஈழத்தமிழர் நலன்களுக்காகக் குரல் கொடுத்தாலும் மார்க்சியப் பொதுவுடைமை என்பது தமிழ்ப்பகைக்கட்சி என்பதே உலகறிந்த உண்மை. இக்கட்சிகளுக்கு உண்மையிலேயே ஈழத்தமிழர் நலனில் ஈடுபாடு இருப்பின் உலகப்பொதுவுடைமை நாடுகளைச் சிங்களத்திற்கு எதிராகத்திருப்பி விட்டிருக்கலாம் அல்லவா? அவ்வாறில்லாமல் அந்நாடுகளின் சிங்கள ஆதரவிற்கேற்ற வகையில் ஆட்டம் போடும் இவை தோல்வியுறுவதே நாட்டிற்கு நல்லது.
  பிற கட்சிகளும் வாக்குகளை அறுவடை செய்வதில் காட்டும் கவனத்தைத் தமிழர் நலனில் காட்டுவன அல்ல. வடக்கில் எந்தக் கட்சி தோன்றினாலும் அதன் கிளை முதலில் தமிழ்நாட்டில் அமையும் போக்கை நிறுத்த வேண்டும். மாறாகத் தமிழகக்  கட்சிகளின் கிளைகள்,  பிற மாநிலங்களில் வேரூன்ற வேண்டும். ஏழை மக்கள் கட்சியில் உதயகுமார் ஒருவர்தான் வெற்றிக்கனியைச் சுவைக்க வேண்டியவராக உள்ளார். வடநாட்டுக்கட்சியில் தமிழர் ஆதரவுப் போக்கை உண்டாக்குவார் என்ற நம்பிக்கையில் அவரை வெற்றி பெறச்  செய்வது அவரது இடிந்த கரைப் போராட்டங்களுக்கான பரிசாக அமையும். அவர் இன்னும் முனைப்பாகப் பாடுபட்டால்தான் வெற்றி பெறுவார்.
தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமை கிடைக்கும் வகையில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பெருகும்வரை யாருக்கேனும் நாம் வாக்களித்துத்தான் ஆக வேண்டும். தேர்தல் புறக்கணிப்பு என்பது தமிழ்ப்பகைவர் ஆட்சியேறவே உதவும். எனவே,
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (திருக்குறள் 517) என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாக்கே நமக்கு வழிகாட்டி!
  இங்குள்ள தமிழ் மக்களும் ஈழத் தமிழர்களும் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருக்கு  நயன்மை -  நீதி – கிடைக்க வேண்டுமெனில் காங்கிரசு என்னும் பேராயக் கட்சி அடியோடு மண்ணைக் கவ்வ வேண்டும்.
  திமுகவின் கடந்த காலப்பணிகள் சிறப்பாக இருந்திருப்பினும் அதன் தமிழ்ப் பணிகள்தாம் பிறரின் தமிழ்ப்பணிகளுக்கு  வழிகாட்டியாக இருந்தது உணமையாய் இருப்பினும்,  படுகொலைப் பங்களிப்புகளாலும் போராட்ட நாடகங்களாலும் அதுவும்  தோற்கடிக்கப்பட வேண்டியதே!
  செயற்கையாக உருவாக்கப்படும் அலைமாயையால்,  தமிழ் மக்களின் வரவேற்பிற்கும் ஆளானதுபோல் காட்டப்படும் பாசகவும் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்படவேண்டியதே! சிறுபான்மையர் நலன் என்ற போர்வையில் உலவும், பிற சமய–மத-க் கட்சிகளும் தோல்விப்பாதையில் ஓட்டப்படவேண்டியனவே!
  இந்திய அரசு தமிழக மீனவர் நலனினும் ஈழத்தமிழர் நலனிலும் பிற தமிழ்நாட்டு நலன்களிலும் கருத்து செலுத்த வேண்டுமெனில், மதிமுக வெற்றி பெற வேண்டும்!
அஇஅதிமுகவின் இப்போதைய தமிழர் நலச் செயல்பாடுகளுக்காக அதுவும் பாசக – வெற்றி பெற்றால், தமிழ்நாட்டு நலனில் கருத்துசெலுத்தச் செய்வதற்காக அதன்- கூட்டணியில் உள்ள கட்சிகளும் நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் தமிழ், தமிழர் நலன் நாடும் வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்!
வெல்க தமிழ்! ஓங்குக தமிழர் நலன்! மலர்க மனித நேயம்!
 -          இலக்குவனார் திருவள்ளுவன்
 இதழுரை
சித்திரை 7, 2045 / ஏப்பிரல் 20, 2014
AkaramuthalaHeader