Saturday, April 30, 2016

தி.மு.க.வின்மீதான கசப்பு குறையவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-திமுக-கசப்பு, திரு :thalaippu, thimuka,kasappu,thiru

திமுகவின்மீதான கசப்பு குறையவில்லை!

  மிகுதியான மன்பதை நலன் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்திய முதல்வர்களில் முதலாமவர் என்றால் கலைஞர் கருணாநிதிதான் இடம் பிடிப்பார். கடந்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர் எவரேனும் தமிழ்ப்பற்றுடன் எந்தக் கட்சியிலேனும் இருந்தார் எனில் அவர் கலைஞர் கருணாநிதியின் பேச்சாலோ எழுத்தாலோ கவரப்பட்டிருப்பார்.  கட்டியணைக்க வேண்டிய நேரத்தில் கட்டியணைத்தும் அணைத்து வெட்டிவிட வேண்டிய நேரத்தில் வெட்டியணைத்தும்(அழித்தும்)விடும் வல்லமையும் அவருக்கு மிகுதியாகவே உண்டு. உலக அளவில் மிகுதியான படைப்புகளை வழங்கியுள்ள முதல் அரசியல் தலைவரும் அவர்தான். என்றாலும் மக்கள்திலகம் ம.கோ.இரா எனப்படும் எம்ஞ்சியார் உருவாக்கிய அவர்மீதான வெறுப்பு என்பது இன்றளவும் நீடித்து வருகிறது. இந்த வெறுப்பலையைத் தாண்டித்தான் அவர் வெற்றியும் பெற்று வருகிறார். ஆனால் அதற்குக் காரணம் அவரது கட்சியினரல்லர். தி.முக.கவிற்கான வாக்கு வங்கி என்பது 15% இலிருந்து 20% வரை இருக்கலாம். ஆனால்  கட்சிக்கு அப்பாற்பட்டு, அவர்தான் தமிழ்நலன், சமயச்சார்பின்மை முதலானவற்றிற்கு ஏற்ற தலைவர் என்ற நம்பிக்கை கொண்ட, வேறு கட்சிகளுக்கு வாக்களிக்காத 15%இற்கு மேலுள்ள இன நல ஆர்வலர்களால்தான் திமுகவின் வெற்றி அமைந்துள்ளது.
  திமுகவினருக்குத் தங்கள் கட்சியின் மீது வருத்தம்  ஏற்படும் பொழுதெல்லாம், வாக்களிப்பைப் புறக்கணிப்பார்களே தவிர,  பிற கட்சி எதற்கும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால், அவ்வாறு தொடக்கத்தில் இருந்த  திமுகவின்பால் பற்றுக்கொண்ட தமிழ் நல ஆர்வலர்கள் தாங்கள் விரும்பும் கட்சியின் பக்கம் சாய்வதையே திமுகவைப்  புறக்கணிப்பதாக அமையும் என்ற முடிவில் உள்ளவர்கள்.
  திமுகவின் மீதான கசப்பு அவர்களுக்கு மிக, மிக, திமுகவால் ஊட்டி வளர்க்கப்பட்ட தமிழுணர்வு வீணாகக்கூடாது எனத் தமிழ்நலக்கட்சிகள் அல்லது அமைப்புகள் எனக்கருதும் ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி அல்லது தமிழ்த்தேசிய அமைப்புகளின்பால் நேரடி ஈடுபாடுகாட்டும் நிலைக்கு மாறிவிட்டனர்.
 பொதுவாக எல்லாத் தலைவர்களிடமும் நிறைகளும் குறைகளும் உள்ளன. ஆனால், கலைஞர் கருணாநிதியின் மீதுள்ள குறைகள்மட்டும் பெரிதுபடுத்தப்படுவதன் காரணம் என்ன? “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என்பதில் இவர் பேச்சில் காட்டிய வேகம் “எங்கும் தமிழ்இல்லை! எதிலும் தமிழ்இல்லை!” என்ற செயலிலும் இல்லாததுதான். ஒருவேளை அறிஞர் அண்ணா இவரைப் பொதுப்பணித்துறை யமைச்சராக ஆக்காமல் கல்வி அமைச்சராக ஆக்கியிருந்தால், தமிழ்சார்ந்த கல்வியில் புரட்சியை உருவாக்கியிருப்பார். ஆனால், இவருக்குக்கிடைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி தமிழ்ச்சுவையிலிருந்து செல்வச்சுவையின் பக்கம் திருப்பிவிட்டது. இவரது ஆட்சிக்காலத்தல்தான் ஆங்கில வழிக்கல்விநிலையங்கள் பெருகின. இவரது ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்வழிக்கல்விக்கான மூடுவிழாவிற்கு அடிக்கல்நாட்டப்பட்டன.  கல்வி வணிகமானதும் இவரது ஆட்சியில்தான் தொடங்கியது.  அதிமுகவும் அதைத்தான் பின்பற்றியது என்றாலும் தொடக்கமும் தொடர்ச்சியும் இவரால்தானே விளைந்தன!
  கல்வித்துறையிலிருந்து தமிழ் விரட்டப்படும்பொழுது தமிழ்நல ஆர்வலர்கள் எங்ஙனம் இவர் பக்கம் இருப்பர்?
  கலைஞர் கருணாநிதியின் மீது சாட்டப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, குடும்ப அரசியல். இந்தியாவில் குடும்ப அரசியல் என்பது மிகுதியாகவே உள்ளது. இதற்கு வித்திட்டவர் சவகர்லால் நேருதான். என்றாலும் இவரை மட்டும் குற்றம் சுமத்துவது தவறு. என்றாலும், யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பதிலிருந்து முதன்மையான முடிவுகள்  இவரின் மனைவி, துணைவி, மகன், மகள், மருமகன், பேரன் எனக் குடும்பத்தினரால் மட்டும் எடுக்கப்படும் முடிவுகளாக இருக்கும் பொழுது, மக்கள்நாயக உணர்வில் வளர்க்கப்பட்ட திமுகவினருக்கே வெறுப்புணர்வு வந்ததில் வியப்பில்லை.
  முதுமை வர வர முதிர்ச்சியும் வரும் என்கிறார்கள். பற்றற்றதன்மையும் முதிர்ச்சியின் பகுதிதான். ஆனால், கலைஞர் கருணாநிதிக்கு முதுமைவரவர, தம் குடும்பமக்கள்மீதான பாசம் பெருகிப் பொங்குகின்றது. இதன் விளைவு நாட்டுமக்கள்நலன், வீட்டுமக்கள் நலனுக்காகத் தாரை வார்க்கப்படுகிறது. இதன் மோசமான பகுதிதான் ஈழத்தமிழர்கள் ஏறத்தாழ இருநூறாயிரவர் இனப்படுகொலைக்கு ஆளான பெருந்துயரம்! இதற்குமுன்பு வரை கூட, நம் குடும்பத்தில் மூத்த உறுப்பினர் செய்யும் தவறுகளுக்குப் பொறுமை காப்பதுபோல் பொறுத்திருந்தவர்கள் இனப்படுகொலையில் கலைஞர் கருணாநிதியின்  துணைமை அல்லது பொருட்படுத்தாமை அல்லது அமைதி அறிந்ததும் எப்படி அமைதி காப்பார்கள்?
  இனப்படுகொலை நிறுத்த வேண்டி கலைஞர் கருணாநிதியின் உண்ணாநோன்பு, தொடங்கும்பொழுதே நாடகமாடலாம் என்ற நோக்கில் தொடங்கப்பட்டதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதை மத்திய அரசு எப்படி முடிவிற்குக் கொண்டுவந்தது? அதற்கு இவர் உடன்படவேண்டிய அச்சத்திற்கு அல்லது கட்டாயத்திற்கு உள்ளானமை எதனால்? அத்தகைய மிரட்டலுக்கு ஆளாகும் நிலைக்கு இவரது குடும்பத்தினர் அரசியல் வாழ்க்கை இருப்பதே தவறுதானே!
  ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைகளுக்கு ஆளாகும் மீக் கொடுஞ்செயல்பாடுகளின் வித்தும் உரமும்  பேராயக்கட்சியாகிய காங்கிரசுதான். ஒருவேளை அக்கட்சியுடன்  கூட்டணி வைக்காமல் இருந்தால், வேறுவழயில்லை என எண்ணி ஆதரிக்க  இருந்தவர்களும் விலகக்காரணமே படுகொலைாயாளிகளுடனான கூட்டணிதான். அதுவும் இக்கூட்டணி  கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டது என்று பெருமையாகச்சொல்லிக்கொள்ளும்பொழுது – அதிமுக மீளவும் ஆளக்கூடாது என்பதற்காகத் – திமுகவிற்கு ஆட்சியுரிமை வழங்குவது என்பது வாணலியிலிருந்து அடுப்பில் குதிப்பதுபோல்தானே!
  கொள்கைக் கூட்டடணி என்றெல்லாம் உண்மை விளம்பிகளாக இல்லாமல்,  காங்.தலைவர்களை மிகுதியும் மேடையேற்றாமல், அக்கட்சியினரை வீதிப்பரப்புரைகளுக்கு மட்டும் பயன்படுத்தினால் திமுகமீதான கசப்பு அமிழ்ந்துவிட வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லாதபடி திமுக நடந்துகொள்ளும் பொழுது என் செய்வது?
 ‘நமக்கு நாமே நாடகத்தை வெற்றியாகப் பரப்புவதும் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் செயல்தான். தலைவராகச் செயல்படும் பொருளாளரைச் சந்திக்கும் ஆர்வத்தில் திமுகவினரில் ஒரு பகுதியினரும் நாடகப்பாத்திரங்களாக அழைத்துவரப்பட்டவர்களில் ஒரு பகுதியினரும் நிறைந்ததுதான் ‘நமக்கு நாமே’ அவைக்களம். இதனால், மதில்மேல் பூனையாக இருந்த திமுகவினரை ஈர்த்தலில் தாலினுக்கு வெற்றி எனலாம். நாடக அரங்கேற்றங்களில் தாலின் மேற்கொண்ட கடுமையான உழைப்பு என்பது பொதுமக்களை ஈர்க்கவில்லை என்பதே உண்மை.  மதுவிலக்கு நாடகங்களும் ஆழ்நிலவளி(மீத்தேன்வாயு) திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு அறியாமையால் நிகழந்தது எனப்போடும் வேடமும் மக்களைக்கவரவில்லை. நடந்துவிட்ட தவறுகளுக்கு   மன்னிப்பு கேட்கும் தாலின், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பிலும் மன்னிப்பு கேட்டிருக்கலாமே! ஏன், அதற்கு மனம் வரவில்லை?
  அதிமுகவிற்கு எதிராக உருகிவரும் எதிர்ப்பு உணர்வுகளை எளிதில் அறுவடை செய்யாமல், அதற்கு எதிரான வலுவான கூட்டணி வேண்டும் எனக் கூறித் தன் வலிவின்மையை ஒத்துக்கொள்ளுதல்; ம.ந.கூட்டணியை அதிமுகவின் ‘ஆ’ அணி  எனச்சொல்வதன் மூலம், அதிமுகவிற்கும் திமுகவிற்கும் எதிர்ப்பான வாக்குகளை அக்கூட்டணி பெறும் என்பதை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை திமுகவின் தேர்தல் கள அச்சத்தின் வெளிப்பாடுகளாகத்தான் தோன்றுகின்றன.
  அதிமுகவின் எதிர்ப்பு உணர்வுகளை ஒருமுகப்படுத்தித் திமுகவின் பக்கம் திருப்பிவிட இன்னும் வாய்ப்பு உள்ளது. அதற்குப் பிற கட்சிகளைப்பற்றித் தவறாகக்கூறி அதிமுகவின் வலிமையைப் பெரிதாகக் காட்டும் முயற்சியைக் கைவிட வேண்டும். தமிழ்நலன், தமிழர் நலன் தொடர்பில் திமுக ஆட்சியில் செய்யத் தவறியவற்றைப் பட்டியலிட்டு ஒப்புக்கொண்டு, இனி அத்தவறுகள் நேரா என உறுதி அளிக்க வேண்டும்.  நீண்ட காலம் நிலைத்திருந்து மக்கள்நலத்திட்டங்களையும் தமிழர் நலச் செயல்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டிய திமுக வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீள இதுவே உதவும்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.(திருவள்ளுவர், திருக்குறள் 505)

– இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, April 27, 2016

அதிமுகவின் செல்வாக்கு சரியவில்லை! ஆனால், . . . – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைப்பு-அதிமுக,செல்வாக்கு, திரு :thalaippu_athimuka_selvakku_sariyavillai_thiru

 

அதிமுகவின் செல்வாக்கு சரியவில்லை!


  சென்னை முதலான மூன்று மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின்பொழுது “எல்லாம் நானே” எனச்  சொல்லும் முதல்வர் செயலலிதாவின் செயல்பாடின்மை குறித்த சினம்  அப்பகுதி மக்களிடம் இன்னும் உள்ளது; மதுவிலக்கு குறித்து நாடகம் ஆடினாலும் மது எதிர்ப்புப் பாடல்களைப் பாடியதற்காகச் சிறுமியர் மீதும் தேசப்பாதுகாப்பு எதிர்ப்பு  என்னும் வகையில் கடுங்குற்ற வழக்குகள் தொடுத்தமையால், மதுவால் துன்புறும் குடும்பத்தினரிடையே வளர்ந்து வரும்   வெறுப்பு;  தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராகத் தீர்மானங்கள் இயற்றிக் கொண்டே, அடைக்கலமாக வந்த ஈழத்மிழர்களை அடக்கியும் ஒடுக்கியும் துன்புறுத்தும் வதைமுகாம்களைத் தொடருவதால் மனித நேயர்களிடையே தோன்றியுள்ள வெறுப்பு;  தமிழ் நலத்திட்டங்களை அறிவிக்துக்கொண்டே மறுபுறம் தமிழ்க்கல்விக்கும் தமிழ்வழிக்கல்விக்கும் மூடுவிழா நடத்துவதால் தமிழ் ஆர்வலர்களிடையே வெறுப்பு;  சில இடங்களில் மட்டும் அம்மா காய்கறிக்கடை, அம்மா உணவகம், அம்மா மருந்தகம் போன்றவற்றைத் தொடங்கிவிட்டு நாடு முழுவதும் நாளும் உயரும் விலைவாசியைக் கட்டுப்படுத்தாததால் துன்புறும் குடும்பத்தினரிடையே வளர்ந்து வரும் வெறுப்பு;  வேட்பாளர்களை ஒண்டாமை என்னும் புதுவகைத் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதால் சீர்திருத்தவாதிகளிடம் பெருகிவரும் வெறுப்பு; காதல்திருமணங்களால் ஏற்படும் ஆணவக்கொலைகளை நிறுத்த தக்க நடவடிக்கை எடுக்காமையால்,  சாதி மறுப்போரிடையே பெருகும் எதிர்ப்பு; இவற்றையெல்லாம் படம்பிடித்துக் காட்டும் வகையில் இணையத்தளங்களில் நாளும் பெருகி வரும் எதிர்நிலைப்  பதிவுகள்;   இவ்வாறு பலதரப்பிலும் முதல்வர் செயலலிதாவிற்கு எதிரான வெறுப்பு கூடி வரும் பொழுது அதிமுகவின் செல்வாக்கு சரியவில்லை என்று சொல்வது எப்படி என வினவலாம்.

  பொதுவாக அதிமுகவிற்கு வாக்கு வங்கி என்பது 20 % இலிருந்து 30% வரைதான். தேர்தலில் பெறும் வாக்குகள் எல்லாம்  கூட்டணி வலிமையாலும் கடைசிநேரத் தேர்தல் சூழலாலும் கிடைப்பனதான். கடந்த 2011 சட்ட மன்றத்தேர்தலில் அதிமுக பெற்ற மொத்த வாக்குகள் 38.40%.  அதிமுகவால் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை,  கூட்டணி அமைந்திராவிட்டால் 50 தொகுதிகளிலாவது அதிமுக மண்ணைக் கெளவியிருக்கும் என்பது. ஆனால், இங்கே கூற விரும்புவது அதிமுக தனக்கே உரிய வாக்கு வங்கியில் சரிவுகாணவில்லை என்பதுதான். ஆனால், இது வெற்றியைத் தராது. தனித்துநிற்கும் தன்னம்பிக்கையால் தன்னை நம்பிய கட்சிகளை நட்டாற்றில் விட்டமை போன்ற கூட்டணி வலுவைத் தானாகவே சிதைத்ததுபோன்ற காரணிகள் முதன்மைப்படுத்தும்பொழுது தனிப்பட்ட வாக்கு வங்கியால் எப்பயனும் இல்லாமல் போகும்.
  தேர்தல் பரப்புரையின்பொழுது உயிருக்குத் துடிப்போர்அருகே உள்ள  கூட்டத்தினர் அது குறித்துக் கவலைப்படாமல்,  இருவிரலைக் காட்டிக் கொண்டும்  குதியாட்டம் போட்டுக்கொண்டும் இருக்கிறார்கள் என்றால்,  கட்சிக் கொத்தடிமைகள் உணர்வற்ற பிண்டங்களாக இருக்கின்றார்கள் என்று வருந்த வேண்டி உள்ளது. காலையிலேயே அழைத்துவந்து அடைத்து  வைத்துக் கட்டுப்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும்  பரப்புரை கூட்டங்களுக்கு மக்கள் வருகிறார்கள் என்றால், வருபவர்களும் மேடைக்கு முதல்வர் செயலலிதா வந்ததும் முகத்தில் பூரிப்புடன் அவரைக்கண்டு கைகளை ஆட்டி வரவேற்கிறார்கள் என்றால் யாரும் மாயையிலிருந்து விடுபடவில்லை என்றுதானே பொருள்.

  இணையப்பதிவுகள் அதிமுக ஆதரவாளர்களில் மாற்றம் பெற்றவர்களிடமிருந்து மேற்கொள்ளப்படவில்லை; அவரது எதிர் முகாம்களிலிருந்துதான் வருகின்றன. இவர்களில் வாக்களிக்க ஈடுபாடின்றிப் பொழுதுபோக்காகப் பதிபவர்களும் இருக்கின்றனர். அதிமுக ஆதரவு ஊடகங்கள்  தவிர குறிப்பிட்ட சில இதழ்கள்(பத்திரிகைகள்), அதிமுகவிற்கு எதிரான செய்திகளைப் பரப்பி வருகின்றன. முன்னரே எதிர்த்தவர்கள் இப்பொழுதும் எதிர்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆதரவாளர்களில் போதிய மாற்றமில்லை. கருப்பையாக்கள் அதிமுகவிலிருந்து விலகுகின்றனர் என்றால் செல்வராசுகள் திமுகவிலிருந்து விலகுகின்றனர். வேட்பாளர்களை விரட்டியடிப்பது, அவர்களுக்கு எதிரான உட்பூசல் முதலியன எல்லாத் தேர்தல்களிலும் ஏற்படும் சலசலப்புதான். இவற்றைத்தாண்டித்தான் இதுவரை வேட்பாளர்கள் பலரும் வெற்றி கண்டுள்ளனர். இவற்றால் அதிமுக வீழ்ந்துவிட்டது என்று கருதினால்  மக்கள் ஆதரவை மதிப்பிடத் தெரியவில்லை என்றுதான் பொருள்.
  எனவேதான், குறைபாடுகள் பல இருப்பினும், அதிமுகவிற்கு உள்ள  செல்வாக்கு சரியவில்லை எனலாம். ஆனால் எந்தக்கட்சியும் தன் கட்சிச் செல்வாக்கினால் மட்டும் வெற்றி வெறுவது என்பது இப்போது இயலாத ஒன்று. அதிமுகவின் வெற்றிக்கு உதவும் காரணிகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆகவேதான், பணம் கொடுத்து அழைத்து வந்தாலும் முதல்வர் செயலலிதாவின் கூட்டங்களில் காலி நாற்காலிகளைக்காண முடிகிறது. கூட்டத்தில் அவர் மேடையேறிப் பேசத் தொடங்கியதும் திடலைவிட்டு வெளியேறும் மனநிலைக்கு மக்கள் வந்து விடுகிறார்கள்.
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.  (திருக்குறள் 509)
என்னும் தெய்வப்புலவர் உரைக்கும் தமிழ்நெறியைக் கடைப்பிடிக்காமையால் வேட்பாளர் தெரிவுக் குழப்பம். பிற கட்சிகளிலும் இக்குழப்பம் இருப்பினும் அதிமுகவில் மிகுதி. இவையெல்லாம்  வெற்றிக்காரணிகளை அதிமுக இழந்து வருகின்றது என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
 எனவே வெற்றி பெற விரும்பும் கட்சிகள், அதிமுகவிற்கே உள்ள வாக்கு வங்கி மாறாமையை உணர்ந்து, அதனை வெற்றி பெறச் செய்யும் காரணிகளைத் தம் பக்கம் இழுக்கும் வகையில் தங்களின் பரப்புரை உத்தியை மாற்றினால் வெற்றி காணலாம்.
இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, April 26, 2016

பெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் – குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!
பெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல்

–  குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!

  அறிவுப் போராட்டத்துக்கான படைக்கலன்கள் செய்யும் படைவீடு நூலகம்(இங்கர்சால்). நூலகம் இருக்குமிடத்தின் ஒளிவிளக்கு. உலகில் வலிமையான ஆயுதம் எழுதுகோல்; அத்தகைய எழுதுகோலைப் பயன்படுத்துவோரைப் பட்டை தீட்டுவன நூலகங்களே!. எல்லா நிலையினருக்கும் அறிவுச் செல்வங்களை வாரி வழங்கும் வாயில்களாக விளங்குவனவும் நூலகங்கேள! நாட்டின்மீது போர்தொடுத்தாலும் நூலகங்கள்மீது கைவைக்காதவனே சிறந்த தலைவன்.
   வைகாசி 18, 2012 / மே 31, 1981 அன்று யாழ்நூலகம் எரிக்கப்பட்டது!  கிடைத்தற்கரிய நூல்கள் அடங்கிய ஏறத்தாழ நூறாயிரம் நூல்கள் அழிக்கப்பட்டன. சிங்களக் காடையர்களால் நடத்தப்படும் இனப்படுகொலையின் ஒரு பகுதி. இத் துன்பத்தை நினைவுபடுத்தும் வகையில், 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட, பெங்களூரு திருக்குறள் மன்றத்தின்  நூலகம் சிதைக்கப்பட்டுள்ளது. வெறும் நூலகமாக மட்டுமல்லாமல் திருக்குறளின் கன்னட மொழிபெயர்ப்பு முதலான பல் வேறு நூல்களை வெளியிட்டும் வருகிறது இந்நூலகம்.  கடந்த வியாழன்று(சித்திரை 08, 20147 / 21.0402016 ) சூறையாடப்பட்டுள்ளது; அறைகலன்கள் தூக்கிஎறியப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளன; பாதுகாக்கப்பட்டுவந்த காலமுறை இதழ்கள், ஆவணங்கள் ஏறத்தாழ 20,000 நூல்கள் தெருவில் வீசப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
  இதற்குக் காரணம் பலரும்  கருதுவதுபோல், பொதுவான கன்னட வெறியன்று.  நூலகக் கட்டடத்தின் கீழே ‘சரசுவதி சபா’ என்னும் மன்றத்தை நடத்திக் கொண்டு திருவள்ளுவர் மன்ற நூலகத்தைக் கவர்ந்துகொண்டு நிலத்தைக் கைப்பற்ற எண்ணும் பிரபு என்பவரின் பேராசையே எனத் தெரிய வந்துள்ளது.
  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மதுரையில் இருந்து ‘குறள்நெறி’ என்னும் இதழ் நடத்திய  1960-65 காலக்கட்டத்தில் பல்வேறு நகர்களில் ‘குறள்நெறி மன்றங்கள்’ தொடங்கப்பட்டன. அவற்றுள் ஒன்றாகப் பெங்களூரில்  குறள்நெறி ஆர்வலர் சண்முகம், முன்னெடுப்பால் 1963-64இல் தொடங்கப்பெற்ற குறள்நெறிமன்றத்தின் வளர்ச்சிநிலையே திருவள்ளுவர் மன்றம்.(இதுபோல் சிறப்பாகச் செயல்பட்டுவந்த இராசபாளையம் குறள்நெறி மன்றம், இந்தி எதிர்ப்புப்போரின்போது அரசின் அடக்குமுறைக்கு அஞ்சித் திருவள்ளுவர் நூலகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பெற்று இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.)
 திருவள்ளுவர் மன்ற நூலகம் பெங்களூரில் தமிழர்கள்  மிகுதியாக வசித்துவரும் அல்சூர் பகுதியில் உள்ள தாமோதர் (முதலியார்) தெருவில் 1976 ஆம் ஆண்டுமுதல் தமிழ் ஆர்வலர் நல்ல பெருமாள் முயற்சியால் இயங்கி வருகிறது.  சோழரின் ஆட்சியில் இத்தமிழ்ப்பகுதி இருந்த பொழுது இதன் பெயர் பழுவூர் என்பதாகும்.   சோழர் படைத்தலைவன் பழுவேட்டரையர் ஆண்ட பகுதி இது.
 அரிய நூல்கள் திரட்டுபோன்ற நூலகப்பணிகளில் திருக்குறள் மன்ற நிறுவனரும், நூலகப் பொறுப்பாளருமான நல்லபெருமாள் பெரும் உழைப்பு உள்ளது. நூலகத்திற்கு இழைக்கப்பட்ட கேடு குறித்து தகவலறிந்து நூலகத்துக்கு விரைந்த  இவர், 40 ஆண்டு காலமாக சேகரித்த நூல்கள் வீதியில் வீசப்பட்டிருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார்.  இக்கொடுமை குறித்து அவரும் தமிழர் முழக்கம் இதழின் ஆசிரியர் வேதகுமாரும் அல்சூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமையே  முறையீடு அளித்துள்ளனர்.
 பின்னர்,  இதன்தொடர்பில் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், கருநாடகத் தமிழ்-கன்னட கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் மணிவண்ணன், கன்னடர்-தமிழர் நல்லிணக்கம் – சமூக நற்பணி அறக்கட்டளைத் தலைவர் இராமச்சந்திரன், கருநாடகத் திராவிடர் கழக தலைவர்  சானகிராமன் முதலான பலரும் காவல் உயர் அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்டுள்ளனர்.
  காவல்துறை  துணை ஆணையர் சதீசு குமார் விரைந்து நடவடிக்கை எடுத்துக் குற்றவாளி பிரபுவைக் கைது செய்துள்ளார். மீட்டுருவாக்தக்திற்கு முழு உதவி புரிவதாகக்  கூறி உடனடிச் செயல்பாடுகளுக்காகத் தன் பங்கு ஆயிரத்து ஐந்நூறு உரூபாயைத் தாமாகவே முன்வந்து முதலில் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிறரும் நன்கொடை அளித்துள்ளனர். காவல்துறையினர், மாமன்றத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் என அதிகாரிகளும் மக்கள் சார்பாளர்களும்  தங்களுக்கு ஏற்பட்ட இழப்பாகக் கருதி உதவி வருகின்றனர்
 தனிப்பட்ட கயமையால் ஏற்பட்ட தீங்கினை இனப் பகையாகத்திரிக்க இடம் கொடுக்காமல் கருநாடக அரசு விரைந்து செயல்படவேண்டும். புதிய நூலகக் கட்டடம் உருவாகவும் சிநதைந்த நூல்களைச் சரி செய்யவும் புதிய நூல்கள் வாங்கவும் கருநாடக அரசும் தமிழக அரசும் மத்திய அரசும் தாராள உதவி புரியும் என எதிர்நோக்குகிறோம். தமிழகப் படைப்பாளிகளும் தங்கள் நூல்களை இந்நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கலாம்.
 ஆனால், நாம் முதலில் செய்ய வேண்டியன, அ.இ,த.ச.தலைவர் மீனாட்சி சுந்தரம் வேண்டுகோளை ஏற்றுத் தேவையற்ற செய்திகளைப் பரப்பாமையே; செய்தக்க அல்ல செயக்கெடும்  (திருவள்ளுவர், திருக்குறள் 466)என்பதை உணர்ந்து இச்செய்தியை இன மோதலாகக் கருததும் வகையில் கருத்து தெரிவிக்காமையே  ஆகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 130, சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24, 2016
feat-default
படங்கள் : முத்துச்செல்வன் முகநூல்

Followers

Blog Archive