Sunday, March 29, 2015

எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – 2 – இலக்குவனார் திருவள்ளுவன்


  பெரும்பான்மைத் தமிழறிஞர்கள் எழுத்துச் சிதைவிற்கு எதிரான கருத்தையே தெரிவித்து வருகின்றனர். ஆனால், இவ்வாறு எதிர்ப்பவர்கள் – தம் வாதத்தை எடுத்துரைக்கும் பொழுது தெரிவிக்கும் சில கருத்துகளைக் கொண்டு அவர்களும் – எழுத்துச் சிதைவை ஆதரிப்பதாக எழுத்துச் சிதைவாளர்கள் தவறாகக் கூறுகின்றனர். சான்றாக அறிஞர் வா.செ.கு. அவர்கள், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பன்மொழியறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலிய சிலர் எழுத்துச் சிதைவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். எழுத்துச் சீரமைப்புக் குழுவில் இருந்தாலும் மீனாட்சி சுந்தரனார், எழுத்துச்சிதைவிற்கு எதிராகத், “தமிழ் மிகப் பழைய மொழி என்பதனை மறக்க முடியாது. பழமையை அழிப்பதில் ஏன் இந்த விறுவிறுப்பு? தமிழ் எழுத்து கண்ணைக் குத்துகிறதா? கொலை செய்கிறதா?” எனக் கடிந்து கூறியுள்ளார் (சித்த யோகி சாமி சுந்தரமகாலிங்கம் அவர்களின் ‘உண்மை வெளிப்படுகின்றது’ என்னும் கட்டுரை: செந்தமிழ்ச் செல்வி சனவரி, 1952: தரவு-புலவர்மணி இரா.இளங்குமரனாரின் ‘எழுத்துச் சீர்திருத்தமா? எழுத்துச் சீரழிப்பா?’ என்னும் நூல் பக்கம் 13). சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள், “எழுத்துச் சீர்திருத்தவாதிகள் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை பேசுகின்றனர். …. எழுத்துச் சீர்திருத்தவாதிகளுக்கு நானும் ஒரு பட்டம் தரலாம். அது குழப்பவாதிகள் என்பதாகும். …. உண்மை என்னவென்றால், தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்லூரிகளில் பயிற்சிமொழியாகவும் வருவதை யாரெல்லாம் விரும்பவில்லையோ, யாரெல்லாம் ஆங்கிலமே தமிழர் வாழ்வில் தலைமை பெற்றுள்ள நிலை நீடிப்பதை விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் எழுத்துச் சீர்திருத்தம் பேசுகின்றனர்” (எழுத்துச் சீர்திருத்தம் தேவையா? 1995) என எழுத்துச்சிதைவிற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்துள்ளார். கூறாததைக் கூறியதாகக் கூறும் வஞ்சனையை அன்றே சிலம்புச் செல்வர் உணர்த்தியுள்ளார். இவர்களைப் போல், கப்பலோட்டிய தமிழர் அறிஞர் வ.உ.சிதம்பரனார், செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், முனைவர் வ.சுப.மாணிக்கம், பாவலர் பெருஞ்சித்திரனார், முதுமுனைவர் இரா.இளங்குமரனார், பேராசிரியர் ம.இல.தங்கப்பா, அறிஞர் வெ.கோவலங்கண்ணன், அறிஞர் ஔவை நடராசன், கணிஞர் மு. மணிவண்ணன், பேராசிரியர் இ.மறைமலை, பேராசிரியர் பா.இறையரசன், பொறிஞர் இராமகிருட்டிணன், முனைவர் இளங்கோவன், அறிஞர் க.சி.அறிவுடைநம்பி, அறிஞர் சீனிநைனா மொகமது, பேராசிரியர் செல்வகுமார், அறிஞர் சுப.நற்குணன், அறிஞர் பெரியண்ணன் சந்திரசேகரன் முதலிய பலரும் வரிவடிவச் சிதைவு முயற்சிகளில் இருந்து தமிழைக் காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர்; மேலும் பலர் குரல் கொடுத்தும் வருகின்றனர்.
மொழிக்கு அடிப்படை ஒலியே என்றும் வரிவடிவம் மாறுவதால் மொழி அழியாது என்றும் சிலர் கூறி வரிவடிவத்தைச் சிதைப்பதற்கு ஆதரவு திரட்டுகின்றனர். எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழியாகிய உயிர் அழியும் எனப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தெளிவுபடுத்தியுள்ளார். எழுத்தாகிய உடல் சிதைந்தமையால் மொழியாகிய உயிர் தங்குவதற்கு இடமின்றி அழிந்துள்ளதை வரலாறு காட்டுகின்றது. பரதகண்டம் முழுமையும் வழங்கிவந்த தமிழ் மொழி புதிய புதிய வரிவடிவங்களுக்கு இடம் அளித்ததால்தான் பிறமொழிச் சொற்களும் உள்ளே புகுந்து இக்கண்டம் முழுவதும் புதுப்புது மொழிகள் தோன்றின. எனவே, இப்பொழுது மேற்கொள்ளும் எழுத்துச் சிதைவு முயற்சி எஞ்சியுள்ள தமிழ் நிலத்தையும் இல்லாதாக்குவதற்கான முயற்சியே அன்றி வேறு இல்லை. ஒலியே மொழி என்றும் வரிவடிவம் மொழியன்று என்றும் கூறும் தவறான வாதத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஐ என்று மட்டும் ஒலித்தால் தமிழா ஆங்கிலமா வேறு மொழியா எனத் தெரியாது. ஆனால், ஐ எனத் தமிழில் எழுதும்பொழுது, உயிரெழுத்துகளில் ஒன்றாகவும், தலைவன் என்னும் பொருள் உடைய சொல் என்றும் புரிந்து கொள்ளலாம். இதனையே ஆங்கிலத்தில் ஐ என எழுதும்பொழுது தனி எழுத்தாயின் (I) உயிரெழுத்தையும் நான் என்னும் பொருளையும் குறிப்பதாகவும் எழுத்துச் சேர்க்கையாக அமையின் (Eye) கண் என்னும் பொருள் வருவதையும் புரிந்து கொள்ளலாம். ஆக ஒலிவடிவம் பல மொழிகளில் பொதுவாக இருப்பதையும் வரிவடிவமே மொழியை வேறுபடுத்துவதையும் புரிந்துகொள்ளலாம். எனவே, வரிவடிவத்தைச் சிதைப்பது மொழியைச் சிதைப்பதாகும் என உணர்ந்து அம் முயற்சியைக் கைவிடவேண்டும்.
ஐரோப்பிய மொழிகளில் உயிர் மெய்யெழுத்தில்லை எனக் கூறி அவ்வாறு உயிர் மெய் அமைப்பிருக்கும் தமிழின் சிறப்பைக் குறையாகக் கூறுகின்றனர். ஊனமுற்றவர்களைக் காட்டி, முழு நலத்துடன் இருக்கின்றவரைக் கைகால்களை உடைத்துக் கொள்ளச் சொல்லும் அறியாமைக்கு என்னென்பது? உயிர்மெய்எழுத்துகள் இருப்பதால் நாம் ஒவ்வோர் எழுத்தாக ஒலிக்க வேண்டிய தேவையில்லை. த+மி+ழ் என்றால் தமிழ் என்றாகிறது. மாறாக உயிர் மெய் எழுத்துகள் இல்லாமல் இருந்தால் அவர் குறிப்பிடும் ஆங்கிலம் முதலான பிற மொழிகள் போல் த்+அ+ம்+இ+ழ் என எழுத்தொலிகளைக் கூட்டிச் சொல்லை உச்சரிக்க வேண்டியிருந்திருக்கும். சொல்லின் அளவும் நீளமாகும். இதேபோல்தான் சிதைவு முறைப்படி எழுதும் பொழுதும் அளவு கூடும். சான்றாகப் புது என்பதை எழுதும் பொழுது ப+உகரக்குறியீடு+த+உகரக்குறியீடு எனச் சொல்லின் அளவு நீளும். உழைப்பு, தாள், மை, தேய்மானம் ஆகியவை கூடும்: செலவு பெருகும். குறைந்த முயற்சியும் குறைந்த உழைப்பும் நிறைந்த சிக்கனமும் எளிமையும் உடைய எழுத்தமைப்பைக் குறை கூறுவதில் இருந்தே ஆழமான சிந்தனை இன்றி மேலோட்டமாகப் பார்த்து முடிவெடுப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
60க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் 26 என்ற குறைந்த எழுத்துடைய ஆங்கில மொழியினைக் கற்க முதன்மை கொடுப்பதாகவும் 247 என்னும் மிகுதியான எண்ணிக்கை உடைய தமிழைக் கற்க அஞ்சி ஓடிவிடுவதாகவும் அவ்வப்பொழுது தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. எழுத்துகளின் எண்ணிக்கையைப் பார்த்து யாரும் மொழியைக் கற்க முடிவெடுப்பதில்லை. தேவை கருதிப் பெரும்பான்மையரும் ஆர்வம் கருதி மிகச் சிறுபான்மையரும் மொழியைக் கற்கின்றனர். மேலும் ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான உள்ளன என்பதும் தவறாகும். ஆங்கில வரிவடிங்கள் தலைப்பெழுத்து, சிறிய எழுத்து, அச்சுப் பெரிய எழுத்து, அச்சுச் சிறிய எழுத்து என நால்வகையாக உள்ளன. சான்றாகப் பின்வரும் இரண்டு எழுத்துகளைப் பார்ப்போம் : F, f, g , f – G, g, g, g, என்பன வெவ்வேறு வகையாக உள்ளன அல்லவா? ஆங்கில வரிவடிவத்தில் மொத்தம் 524 வகை உள்ளதாக ஆங்கிலப் பேராசிரியர் ஐயாதுரை என்பார் கூறியுள்ளார். அவை அனைத்தையும் அறியா விட்டாலும் ஆங்கிலம் கற்க விரும்பும் ஒருவர் இந்நால்வகை வடிவமுறைகளையும் கற்றால்தான் அவரால் ஆங்கிலத்தைப் படிக்க முடியும். இல்லையேல் பயனில்லை. எதற்கெடுத்தாலும் ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான் உள்ளன என்று சொல்பவர்கள் உண்மையை மறைப்பது ஏன்?
ஆதலின், ஆங்கில வரிவடிவ எண்ணிக்கை 26 எனக் குறைவாக உள்ளதால்தான் ஆங்கிலத்தைக்கற்பதாகக் கூறுவது போன்ற கயமைத்தனம் வேறு கிடையாது. தமிழ் எழுத்துகள் என்பன உயிரெழுத்து 12 மெய்யெழுத்து 18 ஆய்த எழுத்து 1 ஆகிய 31 எழுத்துகள்தாம். தமிழில் நெடிலெழுத்துகள் உள்ளமையால் எதையும் சரியாக ஒலிக்க முடிகின்றது; எழுத்தொலியைக் கூட்டினாலே சொல் பிறப்பதால் படிப்பதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. பெரும்பாலான மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆங்கிலத்தில் ஆர்,ஏ,எம்,ஏ (R,A,M,A) என்று ஒலித்தால் ரமா என்று சொன்னால் பெண்ணாகவும் ராமா என்று சொன்னால் ஆணாகவும் மாறும் குழப்பம் தமிழில் இல்லை. என், ஓ (NO) என்றால் நோ; என், ஓ, டபுள்யூ (NOW) என்றால் நௌ; கே, என்,ஓ,டபுள்யூ (KNOW) என்றாலும் நோ என்பன போன்ற குழப்பங்கள் தமிழில் இல்லை. 26 எழுத்துகளையும் நான்கு வகையாக – ஆக 104 – எழுத வேண்டியுள்ளது போன்று தமிழில் எழுத வேண்டிய தேவையில்லை. அறிவியல் ஒலிப்பு முறையில் அமைந்த தமிழின் சிறப்பை மறைத்துவிட்டுக் குறைபாடுடைய மொழிகளின் ஒலிப்பு முறைகளைப் பாராட்டுவது அறியாமையே. (எழுத்துச் சீர்திருத்தமா? சீரழிப்பா? : இலக்குவனார் திருவள்ளுவன்)
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 6 : இலக்குவனார் திருவள்ளுவன்



[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்
“தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்”
என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்
வாசிக்கப் பெற்ற கட்டுரை.]

இந்தியா என்றால் ‘இந்தி’ யா?
            நடுவணரசின் நோக்கம் ‘இந்தியா’ என்றால் ‘இந்தி’ என்பதுதான். காற்றில் வீசும் வாள் வீச்சைப் போன்ற நம் எதிர்ப்பைக் கண்டு நடுவணரசு மிரளாது. எந்த அளவிற்கு நாம் பொங்கி எழுகிறோமோ அந்த அளவு விரைவில் நாம் அடங்கி விடுவோம். சான்றாகச் ‘சடுகுடு’ இடத்தைக்   ‘கபடி’ பிடிக்க முயன்றபொழுது எழுந்த எதிர்ப்பு சடுகுடு தொலைக்கப்பட்டது போல் தொலைந்து போயிற்று அல்லவா? எனவேதான் நடுவணரசின் திட்டங்கள் – ஊரக வளர்ச்சியாகட்டும், சிறுசேமிப்பாகட்டும், காப்பிடாகட்டும், வங்கியாகட்டும் எங்காயினும் எதுவாயினும் இந்தியே வீற்றிருக்கிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர் பயிலும் தொழிற்பயிற்சி நிலையங்களின் வினாத்தாள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் உள்ளதுபோல், ‘இந்தியா முழுமைக்குமான’ எதுவாயினும் இந்தியே இடம் பெறுகிறது. ஆங்கிலம் அயல்மொழி எனக்கூறி இடம் பெயர்க்கப்பட்டு அந்த இடத்தில் அயல்மொழியான இந்தி கால்பதித்து வருகிறது. தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம், ஓட்டுநர், நடத்துநர் பதவி உயர்வுக்கான தேர்வை ஆங்கிலத்தில்தான் நடத்துகிறது. இக்கொடுமையிலும் கொடுமையாக ‘ஒரே நாடு ஒரே முறையான பயிற்சி’ என்று நாளை இங்கு இந்திதான் வரப்போகிறது. தொழிலாளர் காப்பீடு மருத்துவமனையிருக்கான நோய்கள் பெயர்பட்டியல் குறியீட்டு எண் தொகுப்பு, சிறுதொழில், குறுந்தொழில், பெருந்தொழில்களுக்கான தொழில்வகைப் பெயர்பட்டியல் குறியீட்டு எண் தொகுப்பு போன்ற அனைத்து இந்திய அளவிளான அனைத்துத் தொகுப்புகளும் இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் உள்ளன. நடுவணரசு, நடுவணரசு சார் அமைப்புகளின் பணிகளுக்கு இந்தியில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களையும், முனைவர் பட்டம் பெற்றவர்களையும் அமர்த்தம் செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலோ தமிழ்வளர்ச்சித்துறையிலேயே தமிழ் படித்தவர்கள் துரத்தப்படுகிறார்கள். ‘பயனற்ற தமிழை’ யார் படிப்பார்கள்? ’இமயமலை போல் உயர்ந்த எந்நாடும் தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்’ என்று பாவேந்தர் பாரதிதாசன் எச்சரித்ததை மறக்கின்றோமே!
இந்தி(ய) மயம்            
            மேலும் தமிழ் உள்ள இடத்தையெல்லாம் இந்தி(ய) மயமாக்குவதே இந்திய அரசின் கொள்கை என்பதை அயலகத் தமிழர்கள் அறிவார்கள். ஏன் நம்நாட்டில் கூட தமிழ் மருத்துவம் இருக்கும் முறையின் பெயர் ‘இந்திய முறை மருத்துவம் – ஓமியோபதி மருத்துவத்துறை என்பதுதான். இவ்வாறு எங்கும் எதிலும் தமிழ் விலக்கப்படுகையில் தமிழ்நாட்டில் தமிழ் எங்கே வாழும்?
ஆங்கிலத்தின் இடத்தில் இந்தி
            அதுபோல் ஆங்கிலம் இருக்குமிடத்தில் இந்தியை அமர்த்துவதே இந்திய அரசின் கொள்கை. இதனால் உச்ச நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் ஆங்கிலம் இருக்கும் இடத்தில் மெல்ல மெல்ல இந்திதான் அமரும். உச்சநீதிமன்றத்தின் பிரிவு தமிழ்நாட்டில் அமைந்து, இங்கு முழுமையும் தமிழே ஆட்சி மொழியாக இருந்தாலன்றி, விதிவிலக்கு என்ற பெயரில், சட்டத் தொடர்புடைய அனைத்தும் ஆங்கிலத்திலும் அடுத்து இந்தியிலும்தான் அமையும்.
            இவ்வாறு கூறுவதன் காரணம் என்ன?
பெரும்பான்மை என்ற பொய்’
            இந்தி பெரும்பான்மைப்போர்வையில் நம்மைச் சுருட்டுவதை நாமறிவோம். 1951ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, பஞ்சாப்பில் பஞ்சாபி, உருது முதலான மொழியினரையும் இந்தி மொழியினராகக் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளனர். இராசசுதானில், இராசசுதானி, உருது, பிரசுபாசா, பிலி, செய்புரி, மார்வாரி, மேவாரி முதலிய பல மொழியினரையும் இந்திபேசுவோராகக் கணக்கில் எடுத்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் இந்துசுதானி, உருது, பீகாரி, மைதிலி, இராசசுதானி, மேவாரி, தேவநாகரி முதலிய 81 மொழி பேசும் மக்களையும் இந்தி பேசும் மக்களாகக் கணக்குக்காட்டியுள்ளனர். இதைபோல், பீகாரில், பீகாரி, மகதி, மைதிலி, போசுபுரி முதலிய பல மொழியினரும் இந்தி மொழியினராகக் குறிப்பிட்டுள்ளனர்.
            உத்திரப்பிரதேசத்தில் 1931இல் 100க்கு 99பேர் இந்துசுதானி பேசுபவர்கள் எனக் கணக்கெடுப்பு கூறுகிறது. ஆனால் 1951இல் 100க்கு 99பேர் இந்தி பேசுநராகக் காட்டப்பட்டுள்ளனர். இவ்வாறான பொய்யான புள்ளி விவரங்களுக்குப் பின்னரும் இந்தி பெரும்பான்மையாக இல்லை. இருப்பினும் தாம் உண்மையைக் கூறும் கருத்துப் புரட்சியைப் பரப்பத் தவறிய காரணத்தால் ‘இந்தி’ முதன்மையான, தலைமையான இடத்தைப் பிடித்துள்ளது. இச்சுழலில் செல்வாக்கிற்க்குப் பயனில்லாத தமிழைக் கற்பதைவிட இந்தியைக் கற்பது மேல் என்ற எண்ணம் பலரிடம் தோன்றியுள்ளது வியப்பில்லை. நாளை, தமிழ்நாட்டில் ‘இந்தி அறிந்தவர்கள்’ எனத் தவறான புள்ளி விவரம் காட்டப்பட்டு இந்தி ஒன்றே நின்று நிலவும். இத்தகைய புறச்சிக்கல்களைக் களையாமல் ஆட்சிமொழி சட்டத்தால் எந்த பயனும் இல்லை.
திட்ட உதவிகளும் தமிழ் விலக்கமும்
            ‘இந்தியா’ என்றால் ‘இந்தி’ எனச் செயல்படும் நடுவணசின் உதவித் திட்டங்கள் பல தமிழக அரசிற்குக் கிடைக்கின்றன. இவை தொடர்பான செயற்குறிப்புகள் அறிக்கைக்கு இந்தியும் தற்சமயத்திற்கு ஆங்கிலமுமே வலியுறுத்தப்படுகின்றன. விதிவிலக்கு என்ற பெயரில் தமிழை விலக்கிவிட்டனர். பன்னாட்டு நிறுவன உதவி பெறும் திட்டங்களிலும் ஆங்கிலமும் இந்தியுமே ஆட்சி செய்கின்றன. தற்போது உருவாகும் ‘ஊராட்சி அரசு’ முறையிலும் இந்தி காலூன்றத் தொடங்கியுள்ளது. இவ்வாறு ஆங்கிலமும் இந்தியிலும் தொடர்பு கொள்ளவேண்டிய முறையில் நலத்திட்டங்கள் அமையும் பொழுது ஆட்சி மொழித்திட்டம் எப்படி முழுமையடையும்.
இந்தி விதைப்பு
            ‘வங்காளியர்’ எனில் வங்காள மொழி பேசுநர்; ‘மலையாளியர்’ எனில் மலையாள மொழி பேசுநர்; ‘பஞ்சாபியர்’ எனில் பஞ்சாபி மொழி பேசுநர்; ‘மராத்தியர்’ எனில் மராத்தி மொழி பேசுநர்; ‘குசராத்தியர்’ எனில் குசராத்தி மொழி பேசுநர்; இவைபோல் ‘இந்தியர்’ எனில் ‘இந்தி மொழி பேசுநர்’ ; பேச வேண்டியவர்கள் என்ற தவறான எண்ணம் நாட்டில் மட்டுமல்ல; உலகெங்கும் விதைக்கப்பட்டுள்ளது. எனவேதான் தலைமையமைச்சரும் இந்தியில் பேச இயலாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறார்; இந்தியில் உரையாற்ற இயலாமையை இழுக்கு எனக்கருதி, இந்தியில் உரையாற்றுகிறார்.   ‘இந்தியா’ என்றால், இந்தி நாடு, இந்துநாடு என்ற எண்ணம் மாற முதலில் நம்நாட்டின் பெயரே மாற்றப்பட்டாக வேண்டும்.
தமிழ் இந்தியா
            உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தோன்றிய, வாழ்ந்த, வாழும் பகுதியான ஆசியாக் கண்டத்தை நாம் ‘தமிழ்க் கண்டம்’ என்றே அழைக்க வேண்டும். ‘இந்தியா’ என்பது தமிழ்த் துணைக்கண்ட கூட்டரசு நாடுகள் என அழைக்கப்பெற வேண்டும்; அல்லது குறைந்தது, ‘தமிழ் இந்தியா’ என்றாவது அழைக்கப்பட வேண்டும்.
நம் பணத்தில் கொழுக்கும் இந்தியை எதிர்ப்போம்
            ‘இந்தியை எதிர்க்கவில்லை ; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கின்றோம்’ என்று கூறுவதையும் ‘நேருவின் உறுதிமொழியைச் சட்டமாக்க வேண்டும்’ என்று கூறுவதையும் நிறுத்தவேண்டும். நேருவின் உறுதிமொழி என்பது இந்தி முழுமையும் நம்மீது ஏறுவதை ஒத்திப்போடுவதுதானே தவிர நம் மொழிக்குத் தலைமை வாய்ப்பு தருவதல்ல. அதுபோல் இந்தி மொழி இந்தியைத் தாய் மொழியாய் கொண்ட மாநிலத்தில் அவர்களின் பணத்தில் வளர்க்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நாம் யார்? ஆனால் அனைத்து மொழிபேசுவோரின் செல்வத்தைச் சுரண்டிக் ‘காட்டாயமில்லை’ என்ற பெயரில் இந்தி பரப்பப்படுவதும் வளர்க்கப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட்டாக வேண்டும். அரசு பள்ளிக்கூடங்களில் இருந்து இந்தியை விரட்டிவிட்டோம் எனக் கூறித் தனியார் பள்ளிகளிலும் தனிப்பட்ட முறையிலும் இந்தி வளர்ச்சிக்குப் பெருஞ்செலவு செய்யப்படுவது நிறுத்தப்பட்டாக வேண்டும். இந்தி வளர்ச்சிக்காக ‘தட்சிணபாரத இந்தி பிரச்சார சபை’ மூலம் நமது செல்வம் செலவிடப்படுவதையும் நிறுத்த வேண்டும். இந்தியைப் படிப்போருக்கும் படிப்பிப்போருக்கும் தரப்படும் உதவிகள் நிறுத்தப்பட வேண்டும். இவை மூலமும் நடுவணரசின் பிற துறையின் அமைப்புகள் மூலமும் இந்திக்குச் செலவழித்த தொகையை இழப்பீடுபோல் தமிழ் வளர்ச்சிக்குச் செலவழிக்க நடுவணரசு தர வேண்டும். தொலைக்காட்சி மூலம் இந்தித் திணிப்பிற்கு இதுவரை செலவழித்த தொகையும் தமிழுக்குத் தரப்பட வேண்டும். மேலும் இந்தியை மட்டும் தேசிய மொழி என்றும் பிறவற்றை வட்டார மொழிகள் என்றும் கூறுவதை எல்லா இடங்களிலும் நிறுத்த வேண்டும்; ‘தேசிய ஒளிபரப்பை ’ ‘நடுவண் ஒளிபரப்பு’ என்றும் மண்டல ஒளிபரப்பை ‘தமிழ்நாட்டு ஒளிபரப்பு’ என்றும் குறிக்க வேண்டும். நடுவன் ஒளிபரப்பில் இந்தி நிகழ்ச்சிகள் மட்டும் இடம்பெறுவது நிறுத்தப்பட வேண்டும். அனைத்து மாநில நிகழ்ச்சிகளும் இடம்பெறும் வகையில் இவை அமைய வேண்டும்.
(இனியும் காண்போம்)
இலக்குவனார் திருவள்ளுவன்
 kanavukal-aatchimozhi


Tuesday, March 24, 2015

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

 fort_st.george01_thalaimaicheyalakam01
[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்
“தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்”
என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்
வாசிக்கப் பெற்ற கட்டுரை.]
ஆகாசவாணி – வெற்றியாய்க் காட்டப்படும் தோல்வி:-
            வானொலியில் ‘ஆகாசவானி’ என்று கூறுவதற்குப் பெரும் எதிர்ப்பு கிளப்பினோம். நீறுபூத்த நெருப்பு, என நம்மை நாமே கூறிக்கொண்டாலும் உண்மையில் நாம் பெட்டைப் பனைமரங்கள்தாம். இந்த ஒலிக்கெல்லாம் நடுவனரசு அஞ்சாது. எனவேதான் குறுகிய எல்லையான தமிழ்நாட்டில் இருந்து ஒலிபரப்பாகும் செய்திகளில் மட்டும் ‘ஆகாசவாணி’ இடம்பெறவில்லை. மாறாகத் தமிழ் அல்ல – ஆங்கிலம்தான் இங்கு இடம்பெறுகிறது. ஏனெனில் நம்நோக்கம் எதையாவது எதிர்ப்பதே தவிரத் தமிழைக் காப்பதல்ல என நடுவனரசிற்குத் தெரியும். என்வேதான் இன்றுவரை உலகெங்கும் ஒலிபரப்பாகும் புதுதில்லி வானொலித் தமிழ்ச் செய்தியில் – தமிழகமெங்கும் உள்ள வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பாகும் தில்லிச் செய்தியில் – ஆகாசவாணிதான் இடம் பெறுகிறது.
           தில்லியில் யார் ஆட்சி செய்தாலும் இந்தியின் ஆட்சி என்பது மாறாது. தமிழ் நாட்டிலே ஆள்வோருக்கேற்ப மொழி உணர்வுகள் வெளிப்படுகின்றன. இல்லையென்றால் நெருக்கடிக் காலத்தில் ‘தமிழரசு’ இதழில் ‘திரு’ எனக் குறிப்பிடுவதை நிறுத்தி ‘ஸ்ரீ’ என்று குறித்திருப்பார்களா? கட்டாயப்பாடுத்தியதால் இவ்வாறு குறிப்பிட்டோம் என உரியவர்கள் கூறினார்கள் எனில் கட்டாயப்படுத்தியாவதும் தம்ழி மண்ணில் வாழ்பவன் தானே.
            நம்மைப் பொருத்தவர் ‘தினவெடுத்த தோள்களுக்கு’ வேலை கொடுத்தாயிற்று. அதுபோதும், தொடர்ச்சியான செயற்பாடு நமக்கெதற்கு? ‘ஆகாசவாணி’ என்று இன்றும் கூறப்படுவதை யார் பொருட்படுத்தப்போகிறார்கள். ஆகாசவாணியை அகற்றியதாக வீறு கொண்டு வீரம் பேசுகையில் அவை அடங்கிவிடவா?.
தலைமைச் செயலகம்:-
            தலைமைச் செயலகத்தைப் பொறுத்தவரையில் சட்டம், நிதி, சட்டமன்றத் துறைகள் நீங்களாகப் பிறவற்றில் 01.05.1966 முதல் தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்க-முதல்நிலை நிறைவேற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. 01.04.1970 முதல் நிதி, சட்டத்துறைகளிலும் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்க முதல் நிலை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. 31.10.1986 முதல் தலைமைச் செயலகத் துறைகள் அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள், அரசு கழகங்கள், கூட்டுறவு இணையங்கள் போன்ற அனைத்து நிறுவனங்களிலும் உடனடி நடைமுறைக்கு முழுமையாக நிறைவேற்றிக் கொண்டுவரப்படுவதாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.
            ஆட்சி மொழிச் சட்டம் வந்ததற்கும் செயலகத்தில் நிறைவேற்றுவதற்கும் இடையே ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்று கேட்க வேண்டாம் இவ்விடைவெளிக்குப் பின்னராவது நிறைவேற்றப்பட்டதா என்றால் அதுதான் இல்லை. ஆண்டுதோறும் பிறப்பிக்கப்படுகின்ற விடுமுறைப் பட்டியல் கூடத் தமிழில் வருவதில்லை: ஆண்டிற்கு இருமுறை பிறப்பிக்கப்படும், அகவிலைப்படி உயர்வு ஆணைகள், காலமுறையில் பிறப்பிக்கப்படுகின்ற ஊதிய ஆணைக்குழு அறிக்கைகள் என வாலாயமாக ஒரே வகையில் அமையக்கூடியவை கூடத் தமிழில் வருவதில்லை. அரசாணை நிலை எண் 182 தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை நாள் 27.06.1989 இன் படி ஆங்கிலத்தில் வெளியிடும் நேர்வுகளில் இனித் தமிழிலும் ஆணைகள் வெளியிட வேண்டும் என ஆணை பிறப்பித்தும் தமிழில் வருவதில்லை. அரசாணைகளைப் பிறப்பிப்போரே அவற்றை மீறும்பொழுது யாரை நொந்து என்ன பயன்?. ஆட்சி மொழிச் செயலாக்கம் கைக்கெட்டும் தொலைவில் உள்ளதாக எண்ணி ஏமாறுவோரைக் கண்டுதான் வருத்தப்படவேண்டியுள்ளது. இத்தகைய கற்பனை மயக்கத்தில் நாம் வாழும்போது தமிழ் எங்கே ஆளும்?.
            மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதைப் பிற மாநிலத்தவர் அனைவரும் தம் மொழிக்கிக் கிடைத்த உரிமை நாளாக மகிழ்ந்து இன்றுவரை கொண்டாடி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இந்நிலை இல்லை. ஏனென்றால், தமிழ்நாடு இன்னுமும், ‘ஆர்யத்தாக்கமுடைய திராவிட நாடாக’ உள்ளது தான். சென்னைப் பெருநிலம் சென்னை மாநிலமாகச் சுருங்கிய பொழுது தமிழ் வழங்கும் பகுதிகளை நாம் இழந்தோம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. குறைந்தது அன்றைக்கு அயல் மாநில இ.ஆ.ப., இ.கா.ப. அலுவலர்களை அவரவர் மாநிலத்திற்குத் திருப்பி அனுப்பி நம் மாநிலத்தவரைப் பிற மாநிலத்திலிருந்து வரவழைத்திருந்தோம் என்றால் தமிழ்நாட்டிலும் ஓர் எழுச்சி ஏற்பட்டிருக்கும். பரம்பரை பரம்பரையாக அயல் மொழி உயர் அலுவலர்கள் வல்லாண்மை செலுத்தும் நிலையும் ஏற்பட்டிருக்காது. ஒரு சிலரை விதிவிலக்காகக் கொண்டு பார்த்தால் தலைமைச் செயலகத்தில் இதுவரை தமிழ் இடம் பெறத் தடையாக இருந்து, இதன் மூலம் தமிழகமெங்கும் தடைக்கற்களாக விளங்கியவர்கள், விளங்குபவர்கள், தாய்மொழிப் பற்றையும் மறந்து, வாழ்வளிக்கும் தமிழையும் துறந்து ஆங்கில மக்களாகத் திகழும் இத்தகைய அலுவலர்களே என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சொல்லாமல் புரியும்
            இன்னும் கடந்த காலத்தைப் பற்றியே கூறுவானேன்! நிகழ்காலத்திற்கு வாருங்கள் என்கிறீர்களா? கடந்த கால அவலம் நாம் அறிந்த ஒன்றுதான். என்றாலும் ஏட்டுச்சுரக்காயைக் கொண்டே வெற்றி விருந்து அளித்ததாய் நம்ப வைக்கும் போக்கைப் புரிந்து கொண்டால்தான் நிகழ்கால ஏமாற்றங்களும் தொடர்கதையாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள இயலும். ஏறத்தாழ 40 ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆணைகளில் ஒரு சிலவற்றைப்பற்றித்தான் நாம் பார்த்துள்ளோம். இவை போன்றுதாம் பிறவற்றின் நிலையும் என்பது சொல்லாமலே புரிந்திருக்கும்.
தமிழைத் துரத்தும் தமிழ்வளர்ச்சித் துறை
            “ஆனால் இவற்றிற்கெல்லாம் தக்க நடவடிக்கைகளைத் தொடராத்து தமிழ் வளர்ச்சித்துறைதானே! தமிழறிவும் தமிழுணர்வும் மண்டிக் கிடக்கும் துறைதானே இத்துறை. எனவேதானே தமிழ்வளர்ச்சித்துறைக்குத் தமிழறிவு தேவையில்லை என்று வழக்காடிக்கொண்டு இருக்கிறார்கள். சம்பளம் வாங்கும் வேலைக்காக மட்டும் ஊதியும் பெறுவோர் நிறந்த துறையிது. இத்துறைக்கு வந்த பின்பும் தமிழறிவையும் தமிழுணர்வையும் வளர்த்துக்கொள்ளாதோர் உள்ளனரே! இத்துறையைக் கலைத்துவிட்டு அனைத்துத்துறைகளில் இருந்தும் தமிழறிவும் துறையறிவும் உடையவர்களைப் பொறுக்கியெடுத்துத் தமிழில் உயர்பட்டங்களைப்பெற்று வெலைநாடுவோருக்கும் வாய்ப்பளித்துத் ‘தமிழ் மேம்பாட்டு ஆணையம்’ என்ற புதிய துறையை உருவாக்கினால், தமிழ் ஆட்சிமொழித் திட்டம் நிறைவேறாதா? ”எனச் சிலர் கேட்பதும் புரிகிறது. தமிழ்வளர்ச்சித்துறைக்குப் புதிய குருதி பாய்ச்ச வேண்டும் என்பதும் செயலகத்தமிழ் வளர்ச்சித்துறையிலும் தமிழ்பட்டம் பெற்றோரையே அமர்த்த வேண்டும் என்பதும் கட்டாயத்தேவைதான். இதனால் துறைதோறும் இடர்நீக்க வழிகாட்ட இயலும். எடுத்துக்காட்டாகப் பொதுப்பணித்துறை உடன்படிக்கைகள், பொருட்பெயர்கள் ஆகியவை தமிழ்ப் படுத்தப்பட்டால், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் முதலிய அனைத்திலும் தமிழ்ப்பயன்பாடு மிகுதியாகும். இவ்வாறு துறைதோறும் புதிய கலைச் சொற்கள் பெருகவும், ஆட்சி மொழிச் செயலாக்கம் விரைவு பெறவும் வாய்ப்பு நலன்கள் ஏற்பட்டு எழுச்சி உண்டாகும். என்றாலும் நாம் எதை ஆட்சி மொழிச் செயலாக்கம் என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறோமோ அதுதான் நிறைவேறுமே தவிர, உண்மையில் புறச் சிக்கல்கள் களையப்படும்வரை ‘ தமிழ்நாட்டில் தமிழ்’ என்பது கானல் நீரே!. முதலில் தெரிவித்தவாறு கல்விமொழி, இறைமொழி, பணிமொழி, வணிகமொழி என எல்லா நிலையிலும் தமிழ் இருந்தால்தான் ஆட்சி மொழிச்செயலாக்கம் தானாகவே நிறைவேறும். இதற்கான வாய்ப்புக் கண்ணுக்கு எட்டும் தொலைவில் தென்படவில்லை. இதனை வேறு கோணத்தில் பார்ப்போம்.
(இனியும் காண்போம்)
-  இலக்குவனார் திருவள்ளுவன்
kanavukal-aatchimozhi


Followers

Blog Archive