Monday, July 31, 2023

மலேசிய மாநாடு: அரசின் நிலைப்பாடு சரியே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




மலேசிய மாநாடு:  அரசின் நிலைப்பாடு சரியே!

தனிநாயகம் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் 11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் இத்திங்கள் 7,8,9ஆம் நாள்கள் நடைபெற்றதை அனைவரும் அறிவோம். அதற்கடுத்த இரு வாரத்தில் மலேசியாவிலும் சட்டமுறைப்படி இல்லா அமைப்பால் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதையும் 11ஆவது மாநாடு என்றே அறிவித்துக் கொண்டனர். இம்மாநாடு குறித்துச் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பாசக ஆதரவாளரான தலைவர் ஒருவரால் நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்று வந்துள்ளது. துடிப்புடன் செயலாற்றும் மேனாள் அமைச்சர் ஒருவரும் இந்த மாநாட்டைத் தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தாராம். வாரம் இரு முறை இதழ் ஒன்று இம்மாநாட்டின் சிறப்பிதழ் போன்று வெளியிட்டது. அதில் பலரின் பேச்சுகளும் இடம் பெற்றிருந்தன. அத்துடன் “தமிழ் மணந்த மலேசியா! தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!” என அட்டைப்படக் கட்டுரை ஒன்றும் வெளிவந்துள்ளது. கட்டுரையாளர் எதையும் நன்கு ஆராய்ந்து சரி பார்த்துத் தன் மனத்தில் சரி என்றுபட்டால்தான் எழுதும் இயல்புடையவர். அத்தகையவரே தடம் புரண்டிருந்தார். ஏதேனும் அழுத்தமா எனத் தெரியவில்லை.

ஒருவேளை அவரது ஆசிரியர் பங்கேற்றதால் அம்மாநாடுதான் சரியெனக் கருதி எழுதிவிட்டாரோ என்ற ஐயத்தையும் அவரிடம் கேட்டேன். “மன்றத்தின் தலைவர் பொன்னவைக்கோ போட்டி மாநாட்டுத் தலைவரிடம் நீங்களே மாநாட்டை நடத்துங்கள்; எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கப்படவும் 200 கட்டுரையாளர்கள் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யுங்கள் என்று எழுதியுள்ளாரே. அப்படியானால் அதுதானே உண்மையான அமைப்பு” என மலேசிய மாநாட்டினர் தெரிவித்தனராம்.

தமிழால் ஒன்றுபட வேண்டுமே தவிரப் பிளவு படக்கூடாது என்பதன் அடிப்படையில் இணைந்து நடத்த இசைவு தெரிவித்ததற்கு இசையாமல் இவ்வாறான தவறான விளக்கம் தரப்படுகிறது என்றேன்.

கட்டுரையில் இடம் பெற்ற தகவல்கள் தவறு என்பதையும் சரியான தகவலையும் காண்போம்.

கட்டுரையின் தொடக்கத்தில் “மலேசியாவில் நடந்து முடிந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைக் கண்டு கொள்ளாததில் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் தமிழறிஞர்கள். அந்த மாநாட்டைச் சீர்குலைக்கப் போட்டி மாநாடு ஒன்றை நடத்தி  சர்ச்சையைச் சிலர் உருவாக்கியதாகத் தமிழறிஞர்கள் மத்தியில் குற்றச்சாடடுகளும் எழுந்துள்ளன.” எனத் தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு மாநாட்டிற்குப் போட்டி மாநாடுதான் மலேசிய மாநாடு எனப் பங்கேற்றவர்களுக்கே தெரியும். அவ்வாறிருக்க நேர்மாறாகக் கூறுவது ஏன்?

ஒன்பதாவது மாநாடு இருபது ஆண்டுகள் கழித்து 2015 ஆம் ஆண்டுசனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. ஒன்பதாவது மாநாடு முடிந்ததும் அதன் தலைவராக இருந்த சப்பானைச் சேர்ந்த நொபுரு கரோசிமா பதவி விலகினார். (கட்டுரைப்பகுதி)

நொபுரு கரோசிமா பொறுப்பாளர்களைக் கலந்து பேசாமல் உலகத்தமிழ் மாநாட்டை அறிவித்ததற்காக 2010 இலேயே பதவி விலகினார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியலறிஞர் குழந்தைத்தனமாக ‘மாிமுத்துவிடம் தலைவராக அறிவித்துக் கொண்டு மன்றத்தை நடத்துமாறு தெரிவித்தார். கேட்பாரற்றுக் கிடந்த மன்றத்தைத் தானே தலைவராக அறிவித்து ஏற்றுக் கொண்டு பிற பொறுப்பாளர்களையும் மாரிமுத்து அறிவித்துக் கொண்டார்.

“இந்த உயரிய மாநாட்டைத் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம்தான் தமிழறிஞர்களிடம் இப்போதும் மனக்கசப்பாக வெடித்துக் கொண்டிருக்கிறது.” (கட்டுரைப்பகுதி)

போட்டி அமைப்பாகத் தொடங்காமல் மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு சட்டப்படிப் புதிய அமைப்பாகப் பதிவு செய்து தமிழ்நாட்டரசிடம் பணம் கேட்டிருந்தால் அரசு தந்திருக்குமே என்றுதான் பேசிக் கொண்டார்களாம்.

மாநாட்டுக்கு எதிராக முனைவர் பொன்னவைக்கோ தலைமையிலான ஓர் அமைப்பு, உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவராக இருக்கும் பொன்னவைக்கோ தலைமையிலான அமைப்புதான் உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடத்தும் அதிகாரம் கொண்டது. வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை” எனத் தமிழக அரசுக்குப் புகார் தெரிவித்தது. (கட்டுரைப்பகுதி)

இவ்வாறு அரசிற்கு எதுவும் புகார் அனுப்பவில்லை. ஆனால், தொடக்கத்தில் அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு? (அகரமுதல, இதழுரை, 23.04.23) என்னும் கட்டுரையில், ஒரே அமைப்பின் பெயரில் ஏட்டிக்குப் போட்டியாக மாநாடுகள் நடத்துவது  இந்த அமைப்பைத் தோற்றுவித்த தனிநாயக அடிகளாருக்கும் அமைப்பில் முன்நின்ற அறிஞர்களுக்கும் இழுக்கு தேடுவதாகும். எனக் குறிப்பிட்டிருந்தோம்

 அதற்கும் முன்னதாகப் “பத்தாவது மாநாட்டுப் பொதுக்குழு தேர்ந்தெடுத்த முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையிலான குழுவினர்தான் உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் உண்மைப் பொறுப்பாளர்கள். எனவே, இவர்கள் எடுக்கும் முடிவே சரி. மாற்றுக் கருத்து இருந்தால் இக்குழுவில் தெரிவிக்க வேண்டுமேயன்றிப் போட்டிக் குழுவை உருவாக்கக் கூடாது. “ என அகரமுதல இதழில் (06.11.2022) “திருவள்ளுவரை இழிவு படுத்தும் சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!” என்னும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

மேலும் மலேசியா மாநாட்டிற்கு எதிரானதல்ல தமிழ்நாட்டுமாநாடு. தமிழ்நாட்டு மாநாட்டிற்கு எதிரானதுதான் மலேசிய மாநாடு.

“அதேபோல, மலேசிய அரசுக்கும் உலகத்தமிழராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மாரிமுத்துவுக்கும் இதே புகாரை அனுப்பிய நிலையில் மலேசிய அரசும் மாரிமுத்து உள்ளிட்ட தமிழறிஞர்களும் இதனைப் புறந்தள்ளினர்.”

புறந்தள்ளியவர்கள் என்றால் பெயரை மாற்றிக் கொண்டது ஏன்? குருவிகள் போன்றவர்களிடமும் வெவ்வேறு வங்கிக்கணக்கிலும் பணம் பெறுவது சட்டப்படியான அமைப்பாக இருக்க முடியாது என்பதை மலேசிய அரசே உணர்ந்து கடிந்ததால், உலகத்தமிழாராய்ச்சி மன்றம் என்ற பெயரைக் கைவிட்டு உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் எனச் சூட்டிக்கொண்டனர். இதுவே மலேசிய அமைப்பு முறையற்றது என்பதை உணர்த்தி விட்டது. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் என்பதுகூடத் தமிழ்நாட்டிலுள்ள அரசு நிறுவனத்தின் பெயர். இதுவும் தவறுதான்.

ஆனால், தமிழக அரசோ, எது அசல் அமைப்பு? யாருக்கு அதிகாரம் இருக்கிறது எனத் தமிழ்வளர்ச்சித்துறை அதிகாரிகள் மூலம் விசாரிக்கச் சொன்னது. விசாரித்தனர். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக ஆதாரங்களின் அடிப்படையில் தெரிய வந்தது. (கட்டுரைப்பகுதி)

அரசு விசாரித்ததில் மலேசியாவில் சட்ட முறையான அமைப்பு இல்லை; மலேசிய அமைப்பால் அமைப்பின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்க இயலவில்லை. எனவே, கலைஞன் பதிப்பகம், இராசசராசன் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் கணக்கிலும் தனிப்பட்டவர்களின் அலைபேசிக் கணக்கிலும் பணம் பெற்றுள்ளார்கள். முறையற்ற பணப் பரிமாற்றம் செய்யும் அமைப்பிற்கு அரசு எப்படி ஊக்கம் கொடுக்கும்? தமிழ் என்ற பெயரைப்பயன்படுத்தி விளம்பரம் தேடும் வேடதாரிகளையும் கபடதாரிகளையும் அரசு ஊக்குவித்தது ஆகாதா? அரசு அதற்கு எவ்வாறு ஒத்துழைப்பு தரும்? என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

இதனையடுத்து, மலேசியா மாநாட்டை அங்கீகரிக்கும் வகையில் 1 கோடி உரூபாய் நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான காசோலை வழங்கத் தமிழ் வளர்ச்சித்துறையைக் கவனிக்கும் முதல்வரின் மூன்றாவது செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எசு. ஒப்புதலும் அளித்துள்ளார். மேலும் உதயநிதி, மற்றும் மூத்த அமைச்சர்கள் இரண்டு பேரை அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. (கட்டுரைப்பகுதி)

“மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது. இவர்களாகவே கடந்த மாநாட்டில் ஒரு கோடி உரூபாய் நன்கொடை தந்ததால் இப்போதும் பணம் தருவார்கள் என எண்ணிவிட்டார்களா? அல்லது துண்டு அணிவித்துப் படம் எடுத்துக்கொண்டதால் தங்களை ஏற்றுக் கொண்டார்கள் என எண்ணி விட்டார்களா? முறையற்ற அமைப்பிற்குப் பணம் அளித்தால் ஆளாளுக்கு அமைப்பைத் தொடங்கிவிட்டுத் தமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொண்டு பணம் கேட்க மாட்டார்களா?” என்று சிரிக்கிறார்கள் செயலக அதிகாரிகள்.

ஆனால், நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரனோ நிதி உதவிக்கான ஒப்புதலைத் தரவில்லை. முதல்வரிடமுள்ள தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மாநாட்டிற்கு அமைச்சர்களை அனுப்பி வைக்கும் முடிவையும் தடுத்து விட்டார். மாநாட்டுக்கு எதிரான அமைப்பினரின் தூண்டுதல்தான் இதற்குக் காரணம்” எனக் கொதிக்கிறார்கள் தமிழறிஞர்கள். (கட்டுரைப்பகுதி)

நிதி ஒப்பளிப்பு என்ற பேச்சே எழாத போது தர வாய்ப்பில்லாத பணத்தை உதயசந்திரன் எப்படித் தடுக்க முடியும்? தொடர்பில்லாத சூழலில் அவர் மீது ஏன் வீண்பழி போடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழ்நாட்டிலிருந்து திரும்பிச் சென்று அமைச்சர் பட்டாளமே மாநாட்டிற்கு வரும், ஒரு கோடி உரூபாய் நன்கொடை தரும் என்று அளந்துவிட்டதால், அதைச் சமாளிக்கக் கதை கட்டுகிறார்களோ?

இதற்கிடையே, பொன்னவைக்கோ தலைமையிலான அமைப்பு, மலேசிய மாநாட்டிற்கு முன்னதாக அதே மாநாட்டை நடத்த திட்டமிட்டு சூலை 17,18, 19 தேதிகளில் சென்னையில் நடத்தியிருக்கிறது. (கட்டுரைப்பகுதி)

சூலை 7-9 இல் நடைபெற்றதைக்கூடத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நடத்துவதை அறிந்த பின்னரே மலேசியா மாநாட்டு நாள்களைக் குறிப்பிட்டனர் என்கின்றனர்.

மேலும், 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்ற பேரில் நடத்தக் கூடாது என்றும் மீறி நடத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாரிமுத்துவுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.  இந்தக் கடிதம் தமிழறிஞர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியது. (கட்டுரைப்பகுதி)

பொதுநல வழக்காக வழக்குரைஞர் தமிழ் இராசேந்திரன் புதிய அமைப்பின் தலைவருக்குச் சட்ட அறிவிக்கையை அனுப்பியிருந்தார். சட்டப்படியான அமைப்பான தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்ற பெயரில் மாநாடு நடத்தக்கூடாது என அனுப்பியிருந்தார். காவல் துறைத் தலைவருக்கும் தெரிவித்திருந்தார். முன்னதாக மலேசியத் தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. முறைகேடு நடக்கும் போது வாய்மூடி அமைதியாக இருக்க முடியுமா? பின் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்க மாட்டார்களா?

“அப்படி ஒரு கடிதம் எதற்காக எழுதப்பட்டது எனப் பொன்னவைக்கோ ஆதரவு தமிழறிஞர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, ” பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிகாகோ நகரில் நடந்து முடிந்தபோது, புதிய தலைவராகப் பொன்னவைக்கோ தேர்வு செய்யப்பட்டார். மாரிமுத்துவின் பதவிக்காலம்  முடிந்து விட்டது. அந்த வகையில் பொன்னவைக்கோ தலைமையிலான உலகத்தமிழராய்ச்சி மன்றத்திற்கு மட்டும்தான் 11ஆவது மாநாட்டை நடத்தஅதிகாரம் உண்டு. மாரிமுத்துவுக்கு அதிகாரம் இல்லை. அதனால்தான் எச்சரிக்கை கடிதம் அனுப்பி யிருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.” (கட்டுரைப்பகுதி)

உண்மைதானே! புதிய தலைவரும் பிற பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட  அக்குழுவினர்தானே மாநாட்டை நடத்த இயலும்?

மாநாடு முடிந்ததும் ஒரு கூட்டத்தைக் கூட்டினார் பொன்னவைக்கோ. கூட்டத்தின் முடிவில் திடீரென்று பொன்னவைக்கோ புதிய தலைவராக முன் மொழியப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்கள் சிலர் இதனைச் செய்தனர். ஆனால், புதிய தலைவர் குறித்த எந்த நிகழ்ச்சிக் குறிப்பும் (அசெண்டாவும்) இல்லாமலும் சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும இப்படி அறிவிக்கப்பட்டதைக் கூட்டத்தின் தலைவர் மாரிமுத்துவும் நிருவாகிகளும் ஏற்க மறுத்தனர். நிகழ்ச்சிப் பதிவேட்டிலும்(மினிட் புத்தகத்திலும்) கையெழுத்துப் போடவில்லை மாரிமுத்து. அதனால் பொன்னவைக்கோ தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது நீர்த்துப் போனது. தலைவராக முடியவில்லையே என்ற விரக்தியில் ‘வேர்ல்ட் தமிழ் ரிசர்ச்ச அசோசியேசன் என்ற அமைப்பைத் தனிப்பட்ட முறையில் தொடங்கி அதனைக் கம்பெனிச் சட்டவிதிகளின் கீழ்ப் பதிவு செய்துள்ளார் பொன்னவைக்கோ. அதனால் அவரது அமைப்பிற்கும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கும் சம்பந்தமில்லை..(கட்டுரைப்பகுதி)

நீங்களே சொல்லுங்கள்! 9ஆவதுமாநாட்டைச் சிறப்பாக நடத்தாமல் ஏகப்பட்ட குளறுபடி செய்த மாரிமுத்துவை மன்றத்தினர் நம்பவில்லை. எனவே, துணைத்தலைவர் பொன்னவைக்கோவை முன்னின்று நடத்தச் சொன்னார்கள். எனவேதான் அவர், சிகாகோ மாநாட்டில்  அங்குள்ள அமைப்பினர் ஆதரவைப் பெற்றார். இவரையே அடுத்த தலைவராகக் கொண்டுவரவேண்டும் என்று அமைப்பினரும் முடிவெடுத்தனர். இதை அறிந்த மாரிமுத்து தான் வெளியேற்றப்பட்டால் தனக்கு அவமானம் எனக் கருதித் தன் பதவி ஆசையை மறைத்துக் கொண்டு புதிய தலைவரை வரவேற்றார்.

தலைவர் முதலானவர்கள் தேர்தல் முறைப்படியே நடந்தது. உ.த.ம.தளத்தில் ‘செயற்குழு கூட்டங்களும் குறிப்புகளும்’ என்னும் தலைப்பில் “வரிசை எண் 11: சூலை மாதம் 5-ஆம் தேதி மாலை சிக்காகோவில் 10-ஆவது ஆராய்ச்சி மாநாட்டின் போது நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பொதுக்குழுக்குழுக் கூட்டப்பொருள்” என உள்ளது. இதைச் சொடுக்கிப் பார்த்தால் வரிசை எண் 5இல் அடுத்த இரண்டாண்டுகளுக்கான மையக்குழு உறுப்பினர் தேர்வு என இருக்கும். தலைவர் மாரிமுத்து, பொறுப்புகளுக்குப் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டார்.  முனைவர் பிரான்சிசு முத்து பொன்னவைக்கோ முதலானவர்களைத் தலைவர் முதலான பதவிகளுக்குப் பரிந்துரைத்தார். அவையும் ஏற்றுக் கொண்டு அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்விவரமும் பதிவில் இருக்கும்.

தேர்தலை நடத்தும் பொழுது தலைவராக இருந்த மாரிமுத்து புதிய தலைவருக்குக் கைகுலுக்கி வாழ்த்தைத் தெரிவித்தார்.  அப்போதைய அமைச்சர் மாஃபா.பாண்டிய ராசன் தமிழ்நாட்டு அரசின் நிதிக்கொடையான உரூ1 கோடிக்கான காசோலையைப் புதிய தலைவரான பொன்னவைக்கோவிடமே அளித்தார்.

எனவே, கூட்டத்தின் தலைவர் மாரிமுத்துவும் நிருவாகிகளும் ஏற்க மறுத்தனர் என்பது அப்பட்டமான பொய். வாதத்திற்காக அதை உண்மை என எடுத்துக் கொண்டாலோ முறைப்படி தேர்தல் முடிந்த பின் மறுத்ததாகப் புலம்புவதால் பயனில்லை.

தன் தலைமையில் புதிய பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டுத் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்னும் பொய்யரை அரசு எப்படி நம்பும் என்கின்றனர் அவர் அருகில் உள்ளோரே!

ஒரு மாநாட்டு முடிவில் அடுத்த பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் மரபைப் பின்வற்றி முறைப்படி அறிவித்து, முறைப்படித் தேர்தல் நடத்தி முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை முறையற்ற முறையில் பதவி ஆசையால் சாெந்தம் கொண்டாடும் ஒருவர் முறையற்றதாகப் புலம்புவது பொருந்துமா? என்பதே தமிழறிஞர்களின் கேள்வி.

வழக்குரைஞர் தமிழ் இராசேந்திரன் உண்மையான அமைப்பின் பெயரில் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என மாநாட்டை நடத்தக்கூடாது என அறிவிக்கை மடல் அனுப்பினார். மலேசியக் காவல்துறையும் கிடுக்கிப் போட்டது. எனவேதான் பெயரை மாற்றிக் கொண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் நடத்துவதாகத் தெரிவித்தார். அவர் அமைப்புதான் உண்மையான அமைப்பு என்றால் ஏன் பெயரை மாற்ற வேண்டும். தாங்கள்தான் உண்மையான அமைப்பு என்று பெயரை மாற்றாமல் இருந்திருக்கலாமே என மலேசிய நண்பர்களே கேட்கின்றனராம்.

மேலும், வழக்குரைஞர், தடையாணை பெற்று மாநாட்டைத் தடுத்து விடலாம் என்றிருக்கிறார். திடீர்ப் பொறுப்பாளர்கள் தோன்றித் தவறு செய்வதால் அதை நம்பி வர ஏற்பாடு செய்வோர் அல்லல் படுவா்கள். மாநாட்டை நிறுத்த வேண்டா. சட்டஅமைப்பின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தால் போதும் என்றுதான் தமிழ்நாட்டு அமைப்பினர் சொல்லியிருக்கிறார்கள்.

முறையற்ற அமைப்பு நடத்தும் மாநாடு எனக் கேள்விப்பட்ட பலர் மாநாட்டிற்குச் செல்லவில்லை. பணம் கட்டிவிட்டோமே என்று பலர் சென்றனர். சென்றவர்கள் அரசியல் மாநாடுபோல் நடத்துகிறார்களே என வருத்தப்பட்டனர். கனடாவிலிருந்து ஒருவர் நீண்ட நேரம், தமிழ்ப்பற்று மிக்க கனடா வாழ் தமிழர்கள் மலேசியா மாநாடு அறிவுப்புலமாக இல்லாமல் அரசியல் சந்தையாக இருந்ததற்கு வெட்கப்படுவதாகக் கூறியுள்ளார். ஈழப் பெண்மணி ஒருவர், “ஆராய்ச்சிக்கான மாநாட்டை அரசியலுக்கானதாக மாற்றிவிட்டார்களே! அதற்கு இனி இடம் கொடுக்காதீர்கள்” என்று சொல்லியுள்ளார். சென்னையில் ஆராய்ச்சி அறிஞர்களை அழைத்துப் பேச வைத்துள்ளீர்கள். உங்களால் அரசியல் வாதிகளை அழைக்க முடியாதா என்ன? ஆனால் ஆராய்ச்சி மாநாடு ஆராய்ச்சியாளர்களைக் கொண்டுதான்நடத்த வேண்டும் எனக் கடைப்பிடித்துள்ளீர்கள். கூட்டம் மிகுதியாக இருந்தாலும் மலேசியா மாநாடு ஏமாற்றமே.

தமிழைப் போர்வையாகக் கொண்டு செயற்படும் பாசகவின் ஆதரவாளர்கள் மாநாடுதான் இது. எனவேதான் பாசக பிரமுகர் பேசியுள்ளார். மதத் தலைவர்களைப் பேச வைத்துள்ளார்கள். “திராவிட அரசியல் குப்பை” என்று பேசியுள்ளனர். தமிழ் நாட்டில் அரசியல் கலப்பு இன்றி மாநாடு நடத்தியுள்ளீர்கள். என்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு தமிழை மதிப்பதால்தான் அயலகத் தமிழறிஞர்கள் பங்கேற்கும் மாநாட்டிற்கு வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மசுதான் தமிழ்நாட்டு அரசின் சார்பில் பங்கேற்றார். நிகழ்விடத் தொகுதி தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பின் பேரா.தமிழச்சி தங்க பாண்டியனும கலந்து கொண்டார். சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் திரு பீட்டர் அல்போன்சும் பங்கேற்று வாழ்த்தினார். முதல்வரும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார். இது அரசு தமிழை மதிப்பதற்கு எடுத்துக்காட்டு. ஒரு வேளை இவர்கள் நிதியுதவி கேட்டு முறையாக விண்ணப்பித்திருந்தால் நிதியுதவியும் அளித்திருக்கும். இவ்வாறிருக்க  முறையற்ற அமைப்பைப் பொருட்படுத்தாமையைப் பாராட்டாமல் குறை சொல்வது எங்ஙனம் முறையாகும்?

சென்னையிலும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அழைத்திருந்தால் அனைவரும் வந்திருப்பர். ஆனால், மலேசியா மாநாடு போல் அரசியல் மாநாடுபோல் மாறியிருந்திருக்கும்.

செய்தியாளருக்கு, மாநாடுகள் தொடர்பான குழப்பம் இருந்தால், அப்போதைய தலைவர் முனைவர் மு.பொன்னைக்கோ, செயலர் முனைவர் உலகநாயகி, மாநாட்டு ஏற்பாட்டாளர் முனைவர் சான் சாமுவேல் ஆகியோரிடம் வினவி உண்மையைத் தெரிந்து எழுதியிருக்கலாம் அல்லவா? தவறுகள் நிறைந்த செய்திக்கட்டுரையை வெளியிடலாமா?

பொன்னவைக்கோ மறுப்பு மடல் கொடுத்தால் வெளியிடுவதாகச் சொன்னதற்கு இதழுக்கு நன்றி. எனினும் இதழ் முழக்கங்களில் ஒன்றான உண்மையை மறந்து உண்மைக்கு மாறானவற்றை நிரப்பியே கட்டுரை வெளியிட்டு இருப்பதும் முறைதானா? நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே எனத் துள்ளி எழுந்து தவறான கட்டுரைக்கான வருத்தத்தைத் தெரிவித்து உண்மையை வெளியிடுமா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல-இதழுரை: ஆடி 15, 2054 / 31.07.2023


Wednesday, July 26, 2023

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்

 






உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக!

நடந்து முடிந்த 11ஆவது உலகத்தமிழ் மாநாட்டின்பொழுது புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பொறி.அரசர் அருளாளரையும் பேரா.முனைவர் ப.மருதநாயகத்தையும் முறையே தலைவராகவும் செயலராகவும் கொண்ட புதிய அமைப்பிற்கு வாழ்த்துகள்.

இம்மன்றம் தொய்வின்றிச் சிறப்பாகச் செயற்படவேண்டும். அதற்கு முதலில் இதன் உரிய பெயரிலேயே சங்கச் சட்டங்களின் கீழ்ப் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

7.1.1964 இல் தொடங்கப்பெற்ற இம்மன்றம் ஈராண்டுக்கொரு முறை மாநாடு நடத்துவதை இலக்காகக் கொண்டது. அப்படியானால் இதுவரை முப்பது மாநாடுகளேனும் நடந்திருக்க வேண்டும்.ஆனால் 11 மாநாடுதான் நடந்துள்ளது. இதுவே இம்மன்றத்தின் தக்கச் செயற்பாடின்மையை உணர்த்துகிறது. அவ்வாறில்லாமல் இடையீடின்றி மன்றம் இயங்கும் வகையில் செயற்பட வேண்டும்.

உலக மாநாடு நடத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளக் கூடாது. “உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களைத் தமிழாராய்ச்சியில் ஈடுபடச் செய்தல், தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைத் தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் செயல்பட இம்மன்றம் தொடங்கப்பட்டது.” என்னும் மன்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயலாற்ற வேண்டும்.

“சங்க இலக்கியங்கள் பற்றிய பயிலரங்குகள், கருத்தரங்குகளை நடத்துதல், சங்க இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழ் ஆய்வு நிறுவனங்களுடனும் தமிழ் அறிஞர்களுடனும் தொடர்பு கொண்டு மேற்கொள்ளுதல்” முதலான மன்றத்தின் செயல் திட்டங்களைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். “மன்றத்தின் நோக்கங்களை மேம்படுத்தும் வகையில் தமிழியல் ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கு விருதுகள், உதவித்தொகை, மாநாடுகளில் கலந்துகொள்ள பயணப்படி போன்றவற்றை வழங்குதல்” என்பது மன்றத்தின் செயல் திட்டத்தல் உள்ளது. அவ்வாறு விருதுகளும் உதவித்தொகைகளும் அளித்துத் தமிழ்ப்படைப்புகள் உலகளாவிய அளவில் பெருக ஆவன செய்ய வேண்டும்.

உலகத் தமிழர்களின் தமிழ்க்கல்வித் தேவையை நிறைவேற்ற உலகத்தமிழ் அமைப்புகளோடும் உலகளாவிய தமிழ்ச் சங்கங்களோடும் இணைந்து செயல்படல் என்னும் செயல் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். செயல் திட்டத்தில் உள்ளவாறு, மன்ற வெளியீடாக ‘உலகத்தமிழ் பண்பாட்டு இதழ் – International Journal of Tamil Culture’ ஒன்றைப் பன்மொழி இதழாக வெளியிட வேண்டும். கிரந்த எழுத்துகளோ அயற்சொற்களோ இல்லாத தமிழ்ப்படைப்புகளையே இவ்விதழ் வெளியிட வேண்டும்.

தமிழ் இருக்கைகள் அல்லது தமிழ்த்துறைகள் தொடங்க நல்கை அளித்த தமிழ் நாடு அரசு பின்னர்த் தொடர்ச்சியாகத் தராமல் இவை இயங்காமல் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து தொடர்ந்து நல்கை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, பிற நாட்டு அரசுகள் மூலம் உலகெங்கும் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ்த்துறைகள் தொடங்கப்படவும் தொடர்ந்து அவை செயற்படவும் தொண்டாற்ற வேண்டும்.

மாநாடுகள் நடத்தும்போது போதிய நிதியாதாரத்தை எழுப்பிய பின்பே அறிவித்து நடத்த வேண்டும். எதிர்பார்க்கும் செலவினத்தில் 60 விழுக்காட்டுத் தொகையையேனும் வங்கி வைப்பில் வைத்தே மாநாட்டை நடத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு பல பணிகள் ஆற்றுவதன் முன்னர் முதன்மையான பணி ஒன்று உள்ளது. அதுதான் போட்டி அமைப்பு ஒன்று மலேசியாவில் இருந்து செயற்படுவதைத் தடை செய்வது. இவ்வமைப்பு செல்வாக்கை வைத்துக் கொண்டு அதனையே உண்மையான அமைப்பாகக் காட்டி வருகிறது. பாசக ஆதரவாளர் ஒருவரைக் கொண்டு ‘தினமணி’யில் கட்டுரை எழுத வைத்து அதிலும் இப்போட்டி அமைப்பே உண்மையான அமைப்பு போல் தவறான தகவல்களை இடம் பெறச்செய்துள்ளது. இப்போக்கை வளர விடக் கூடாது. எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுத்து மன்றத்தின் பெயரில் வேறு யாரும் மன்றம் நடத்தாத வண்ணம் தடை விதிக்கச் செய்ய வேண்டும்.

அண்மையில் சென்னையில் நடந்த மாநாடு குறைந்த கால வாய்ப்பு, போதிய நிதியின்மை முதலிய இடர்ப்பாடுகளைக் கடந்து சிறப்பாக முடிந்துள்ளது. இம்மாநாட்டில் பணிகள் நிறைவேற்றத்தில் குறைபாடுகள் எழுந்தமையைப் பிறர் கூறியும் தாங்கள் உணர்ந்தும் அறிந்திருப்பார்கள். அவற்றைப் பட்டியிலிட்டு இனி அத்தகைய குறைகள் நேரா வண்ணம் சிறப்பாகச் செயற்பட வேண்டும். அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என்றில்லாமல் தக்கவர்களை அவர்களின் ஒப்புதல்களுடனேயே பொறுப்பாளர்களாக அமர்த்துதல் வேண்டும். அமைச்சர் பெருமக்கள், தலைவர்கள் முதலானவர்களைச் சந்திக்கும்போது குழுவாகச் சென்று சந்திக்க வேண்டும். மன்றத்தில் முனைப்புடன் செயற்படுபவர்களை மேடையில் ஏற்றிப் பலர் முன்னிலையில் பாராட்டவேண்டும். இப்பாராட்டு உரியவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுடன் பிறரையும் செயற்பாட்டில் இறங்கச் செய்யும்.

மாநாடுகளில் தமிழ்க்கட்டுரைகளை மட்டும் ஏற்க வேண்டும். அதே நேரம், பன்மொழி அமர்விற்கு வழி வகுத்துப் பிற மொழிகளில் தமிழ்குறித்த படைப்புகள் இடம் பெற வழி வகைசெய்ய வேண்டும். பிற மொழிப்படைப்புகளுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் இடம் பெறச் செய்ய வேண்டும்.

நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை வகுத்துஅதன் படி உலக நாடுகள் எங்கும் தமிழ் இலக்கியச்சிறப்பு குறித்தும் சிறந்த நூலாய்வுகள் குறித்தும் நேரிடையாகவும் இணைய வழியாகவும் கூட்டங்கள் உரையரங்கங்கள் நடத்த வேண்டும். இத்தகைய பணி மன்றம் செயற்படுவதை உலகிற்கு உணர்த்தும். உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும் உதவும்.

சிங்கப்பூர், கனடா, மலேசியா முதலிய அரசுகள் முதன்மை யிடம் வகிக்கும் வண்ணம் தமிழர்கள் வாழும் நாடுகளின் கூட்டமைப்பு ஒன்று நிறுவ முயன்று வெற்றி காண வேண்டும். பன்னாட்டுஅவைகளில் தமிழ் அலுவலக மொழியாக இலங்கப் பாடுபட வேண்டும்.

பெயளவிற்கு மன்றமாகச் செயற்படாமல்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகையில் துறைதோறும் துடித்தெழுந்து செயலாற்ற வேண்டும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.   (திருவள்ளுவர், திருக்குறள் 666)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல



Monday, July 24, 2023

சிலைகள், படங்கள் குறித்த உயர்நீதிமன்ற நடவடிக்கை சரியே! - இலக்குவனார் திருவள்ளுவன்

 




சிலைகள், படங்கள் குறித்த உயர்நீதிமன்ற நடவடிக்கை சரியே!

அம்பேத்துகார் இ்நதியாவின் மாபெரும் தேசியத்தலைவர் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.  எனினும் அவர் வகுப்பார் அவரைச் சாதித்தலைவராகக் காட்சிப்படுத்துவதால் அவர் தொடர்பில் சாதிச் சண்டைகளும் இடம் பெறுகின்றன. எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்திய அவர் வழியில் நீதிமன்றங்களில் எந்தத் தலைவரின் படமும் இடம் பெறக்கூடாது என்ற உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை சரியே. எனினும் இப்போது அரசின் வேண்டுதலை ஏற்று அதனைத் திரும்பப்பெற்றுக்கொண்டதையும் பாராட்டுகிறோம். எனினும் இது குறிததுச் சில செய்திகளை நாம்  பகிர விரும்புகிறோம்.

மகாத்மா காந்தி, திருவள்ளுவரின் படங்களை மட்டுமே நீதிமன்றங்களில் வைக்கவும் மற்ற தலைவர்களின் உருவப்படங்களை நீதிமன்ற வளாகங்களில் வைக்கக்கூடாது எனவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். இது திடீரென்று எடுத்த முடிவு அல்ல. 2008, 2010, 2011, 2013, 2019ஆம் ஆண்டுகளில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதைச்  சுற்றறிக்கையிலேயே பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களிடம் இருந்து சட்டமேதை அண்ணல் அம்பேத்துகாரின் படங்களை நீதிமன்றங்களில் வைக்கப் பலமுறை அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோள்களை உயர் நீதிமன்றம் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. அரசியல் தலைவர்களின் உருவச் சிலைகள் அல்லது படங்கள் நிறுவப்பட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்குச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு சிலைகள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் விளக்கியுள்ளது.  

இம்முறை நீதிமன்ற உத்தரவை மீறுபவர்களின் மீது தமிழ்நாடு புதுச்சேரி வழக்கர் மன்றத்தில்  முறையீடு அளிக்கவும்  அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மக்களுக்கும் வழக்கர் மன்றத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் இருக்கைக்குப் பின்புறம் மேல் பகுதியில் இருந்த அம்பேத்துகார் படம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய அறிவுறுத்தல்.

தலைவர்களின் படங்கள் அல்லது சிலைகளை வைத்துச் சாதிச்சண்டை உருவாவதைத் தவிர்ப்பதற்காக உயர் நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை சரியேபல முறை சொல்லியும் கேளாச் செவியராக சட்டத்தைக் காக்க வேண்டிய வழக்குரைஞர்களே சட்டச் சிக்கல் உண்டாகும் வகையில் போராடுவதால் பொறுத்துப்பார்த்துப் பொறுத்துப் பார்த்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இது தலைமைப் பதிவாளரின் தனிப்பட்ட கருத்து அல்ல. கடந்த ஏப்பிரலில் அனைத்து உயர்மன்ற நீதிபதிகள்அடங்கிய அமர்வுதான் இத்தீர்மானத்தை எடுத்தது. இம் முடிவைத்தான் தலைமைப் பதிவாளர்(பொ),  சோதிராமன் தெரிவிக்கிறார். எனவே, இதுவும் நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணையான மதிப்பிற்குரியது. இதனை மீறுவதும் நீதி மன்ற ஆணையை மீறுவதற்கும் நீதிமன்ற அவமதிப்பிற்கும் ஒப்பானதே.

இதனை அனைவரும் வரவேற்றிருக்க வேண்டும்சாதி அரசியலாக்கியிருக்கக் கூடாது. நடுநிலையாளர்களைப் போல், வடநாட்டுத்தலைவர்களுக்குத் தமிழ்நாட்டில் ஏன் முதன்மை அளிக்க வேண்டும் என்போரும்  வரவேற்கின்றனர்.

ஆனால், தமிழ்நாடு அரசு சாதி அரசியல் அடிப்படையில் இதனை , அஃதாவது படங்கள், சிலைகள் நீக்க ஆணையை, நீக்க வேண்டியது. உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும் அரசின் வேண்டுகோளை ஏற்றுப் “பழைய நடைமுறையே தொடரும். எனவே, அம்பேத்துகர் படத்தையோ சிலையையோ அகற்றத் தேவையில்லை” என அறிவித்து விட்டார்.

சாதிச் சிக்கலுக்குத் தீர்வு கண்டமுதல்வருக்கும் சட்ட அமைச்சருக்கும் தலைமை நீதிபதிக்கும் பாராட்டு.

இச்சசூழலில் முன் நிகழ்வொன்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது, சாதி மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரத் தலைவர்களின் பெயர்களைத் தமிழகம் கைவிடுவதாக அறிவித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திய பின்பே அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து இந்த முடிவை அறிவித்தார்.

இதன்படிச் சாதி மோதல்களைத் தவிர்க்கும் முயற்சியில், தமிழக அரசு அனைத்து மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து அரசியல், சமூகத் தலைவர்களின் பெயர்களை நீக்கினார்.

இதற்கு மாற்றாகச் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 15 மாநிலப் பல்கலைக்கழகங்களில் இந்தத் தலைவர்களின் பெயரில் 28 அறக்கட்டளைகள் அமைக்கப்படும் என்றார்.

19 மாவட்டங்களின் பெயர்களாக இருந்த தலைவர்கள் பெயர்களை நீக்கி அந்தந்த மாவட்டத் தலைநகர் பெயர்களிலேயே மாவட்டங்களை அழைக்கச் செய்தார்.

எவ்வகை வேறுபாடின்றி ஆணையைச் செயற்படுத்தித் தமிழ்ப் புலவர்கள், கவிஞர்களான திருவள்ளுவர், சுப்பிரமணிய பாரதி. தமிழ்ச்செம்மல் விடுதலைப் போராளி வ.உ.சிதம்பரனார். பெரியார் ஈ.வெ.இராமசாமி, மூதறிஞர் சி.இராசகோபாலாச்சாரி, பெருந்தலைவர் கு.காமராசு. பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை, சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கர், , தலைவர் நேசமணி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், புரட்சித்தலைவர் எம்ஞ்சி.இராமச்சந்திரன், இராசீவு காந்தி,  முதலியவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வீரபாண்டியக் கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், புலித்தேவர் போன்ற விடுதலைக்குப் பாடுபட்ட மன்னர், தலைவர்கள் பெயர்களும் நீக்கப்பட்டன.

நீக்கப்பட்ட சேரன், சோழன், பாண்டியன் பெயர்கள் தமிழ் வீரத்திற்கும் தமிழ் மானத்திற்கும் அடையாளம். இப்பெயர்களை ஏன் சாதி வலையத்திற்குள் அடைக்க வேண்டும்? உலகப்பெரும் புலவர் திருவள்ளுவரைச் சாதிப்பின்னலில் சிக்க வைப்பது ஏன்? என்றெல்லாம் தமிழன்பர்கள் கேள்வி கேட்டனர். விலக்கு ஏதும் அளித்தால் தொடர்ந்து அனைத்திற்கும் விலக்கு அளிப்பதுபோல் வரும் எனக் கலைஞர் கருணாநிதித் தான் அறிவிதத அறிவிப்பில் உடும்புப்பிடியாக இருந்தார். பின்னர் ஆண்டுகள் சில கழிந்த பின், வன்னியர் அரசியலுக்காகச் சென்னை அரசு தோட்டத்திற்கு ஓமந்தூரார் பெயரைச் சூட்டினார். எனினும் தான் அறிவித்த பொழுது உறுதியாக நடந்து சாதிப் போராட்டங்களை எதிர் கொண்டார்.

தந்தையாருக்கு இருக்கும் துணிவு மகனாருக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது? உயர்நீதி மன்றத்தினர். விடுமுறைநாள் ஆணையாக இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு ஆணையாக இருந்தாலும் வேறு எந்த ஆணையாக இருந்தாலும் அதனை அப்படியே நடைமுறைப்படுத்த மாட்டார்கள். மீண்டும் ஓர் ஆணை பிறப்பித்து அதற்கிணங்கத்தான் நடைமுறைப்படுத்துவார்கள். தமிழ்நாட்டரசின் நிதியுதவியுடனும் பணியமைப்புச் செயற்பாடுகளின் கீழும் உள்ள உயர்நீதி மன்றம் தனித்தீவாகத்தான் செயற்படுகிறது. எனவே, உயர்நீதிமன்ற ஆணை எனக்கூறி ஒதுங்கியிருக்கலாம். எனினும் போராட்டங்கள் வலுவாகும் முன்னரே அடக்குவதற்காக உயர்நீதிமன்ற ஆணையைத் திரும்பப்பெற வைத்துள்ளனர். பாராடடுகள்.

தேர்தல் அரசியலுக்காக முடிவெடுப்பதை அரசும் கட்சிகளும் கைவிட்டால்தான் நாடும் நலம் பெறும்! மக்களும வளம் பெறுவர்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல




Thursday, July 20, 2023

பெயரை மாற்றிக் கொண்ட மலேசிய (உலகத் தமிழ்) மாநாட்டினருக்குப் பாராட்டு. – இலக்குவனார் திருவள்ளுவன்

 




பெயரை மாற்றிக் கொண்ட மலேசிய (உலகத் தமிழ்)

மாநாட்டினருக்குப் பாராட்டு.

மலேசியாவில் இவ்வாரம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற இருப்பதை அறிவீர்கள். இது குறித்து முன்னரே “போட்டிக் குழுவை உருவாக்கக் கூடாது. “ என அகரமுதல இதழில் (06.11.2022) “திருவள்ளுவரை இழிவு படுத்தும் சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!” என்னும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். எனினும் மன்றத் தலைவர் முனைவர் மு.பொன்னவைக்கோவிடமும் பிற பொறுப்பாளர்களிடமும் ஒன்றுபட்டு நடத்துவதே சிறப்பு என வலியுறுத்தி வந்தோம்.

“அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு? முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்!” (அகரமுதல – ஏப்பிரல் 23,2023)   என்றும் குறிப்பிட்டிருந்தோம்.  

“11ஆவது உலகத்தமிழ் மாநாடு முடிந்தது. மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன?” என்னும் கட்டுரையில் (சூலை 12, 2023)  “மலேசிய மாநாட்டினரும் தவற்றினை உணர்ந்து புதிய அமைப்பின் பெயரில் முதல் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும். அத்தகைய மாநாட்டிற்கு நம் பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக!” எனக் குறிப்பிட்டிருந்தோம்.

நம் சார்பில் பொதுநல வழக்குரைஞர் தமிழ் இராசேந்திரன் அமைப்பினருக்கு மடல் அறிவிக்கை அனுப்பியிருந்தார். அதில் மன்றத்தை வேறு பெயரில் நடத்தத் தடையில்லை என்றும் புதிய அமைப்பு என்னும் பொழுது முதல் மாநாடாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  மன்றத்தின் பெயரில் முறையான வங்கிக்கணக்கு இருக்கையில் அலைபேசி வழியாகப் பணம் பெறுவது குருவிகள் மூலம் பெறுவதற்கு ஒப்பாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மலேசியக் காவல் துறைத் தலைவருக்கும் இது குறித்து முறையீடு அனுப்பியிருந்தார்.

இவற்றின் தொடர்ச்சியாக நம் தரப்பு உண்மையை உணர்ந்து பெயரை மாற்றிக் கொண்ட மாநாட்டினரை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்.

மலேசிய மாநாடடினர் அமைப்பின் பெயரை மாற்றிக் கொண்டதாகச் செய்தி வெளியிடாவிட்டாலும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பெயரில் மாநாடு நடைபெறுவதாகச் செய்தியறிக்கை அளித்துள்ளனர். இவ்வாறே செய்திகளும் வருகின்றன. எனவே நம் வேண்டுகோளை ஏற்று இருக்கின்ற அமைப்பின் பெயரைப் பயன்படுத்தாமல் புதிய பெயர் சூட்டிக் கொண்டமைக்காக மாநாடடினரைப் பாராட்டுகிறோம். அதே நேரம் தமிழ்நாட்டில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் என அரசு நிறுவனம் உள்ளமையால் பெயர்க்குழப்பம் வரலாம். எனவே, ஞாலத்தமிழ் நிறுவனம் அல்லது பன்னாட்டுத் தமிழ் நிறுவனம் என்னும் பெயர்போல் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.(இது குறித்தும் முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.)

உண்மையை உணர்ந்து பெயரை மாற்றிக் கொண்டவர்கள் தாங்கள்தான் உண்மையான அமைப்பு என்ற எண்ணத்தை விதைக்கும் வகையில் 11ஆவது மாநாடு எனக் குறிப்பிடுவது சரியல்ல. முறையான அமைப்பின் பெயரில் 11ஆவது உலகத்தமிழ்மாநாடு  தமிழ் நாட்டில் (சென்னையில்) நடந்து முடிந்து விட்டது. எனவே அவ்வாறு குறிப்பது சரியல்ல. அ்தே நேரம் 12ஆவதுமாநாடு என்று குறிப்பதற்கும் தகுதியில்லை. எனவே, வீம்பாக எண்ணாமல் தங்கள் நிறுவனத்தின் முதல் மாநாடு என்று குறிப்பதே சிறப்பு என்பதை உணர்த்த விரும்புகிறோம்.

இச்சூழலில் மற்றொன்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஓர் அமைப்பிலிருந்து சிலர் விலகிப் போட்டி அமைப்பை உருவாக்கினால் பிரிவு என்றோ பிளவு என்றோ சொல்லலாம். அப்பொழுது எது உண்மையான அமைப்பு என்ற வினா எழும். இப்பொழுது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றப் பொறுப்பாளர்கள் யாரும் விலகவில்லை. இதன் முன்னாள் தலைவர் தன்னைத் தலைவராகக் கொண்டு ஓர் அமைப்பை உருவாக்கிக் கொண்டார். எனவே, இது புதிய அமைப்புதான். இப்போதைய பெயர் மாற்றமும் புதிய அமைப்பு என்பதை உறுதி செய்துள்ளது. எனவே, முதல் மாநாடாகச் சிறப்பாக நடத்த வேண்டி வாழ்த்துகிறோம்!

வாழ்க உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்!

வெல்க உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்!

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின். (திருவள்ளுவர்,திருக்குறள் 111)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல



Wednesday, July 19, 2023

இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 26 – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 25 – ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! – தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள்

தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.தாலின், “தமிழ்நாடு சொல் அல்ல! தமிழரின் உயிர்!” என அருமையாகக் கூறியுள்ளார். பாராட்டுகள்! ஆனால் அந்த உயிர் குற்றுயிரும் குறையுயிருமாக உள்ள வேதனையை யாரும் உணரவில்லை.

தமிழரின் வாழ்க்கை மொழியாகத் தமிழில்லை. கல்வி மொழியாகவோ வழிபாட்டு மொழியாகவோ சடங்கு மொழியாகவோ வேலை வாய்ப்பு மொழியாகவோ ஆராய்ச்சி மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ அன்றாடப் பயன்பாட்டு மொழியாகவோ இல்லாத போது, தமிழைத் தமிழரின் உயிராகத் தமிழரோ அரசோ கருதிச் செயற்படவில்லை என்பது மறுக்கவியலாத உண்மை.

ஒன்றிய அரசால் இந்தி, சமற்கிருதத் திணிப்புகளும் தமிழ்நாட்டு அரசால் ஆங்கிலத் திணிப்பும் நாளும் அரங்கேறிக் கொண்டுள்ளன. இப்பொழுது நாம் இந்தித்திணிப்பு குறித்துப் பார்க்கப் போகிறோம்.  

அவ்வப்பொழுது ஆளுங்கட்சித் தலைவர்களும் பிற கட்சித் தலைவர்களும் இயக்கங்களின் தலைவர்களும் “இந்தியை உள்ளே விட மாட்டோம்!”,  “இந்தியை இறுதி வரை எதிர்ப்போம்!”, “இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!”,”இந்தியைத் திணித்தால் கட்டாயம் எதிர்ப்போம். அதில் சமரசமே கிடையாது”,”இந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்!”,”எந்த எல்லைக்கும் சென்று இந்தித் திணிப்பை எதிர்ப்போம்!”, “தமிழைக் காக்க இந்தியை எதிர்த்து உயிரையும் கொடுப்போம்!”, “1000 பேர் உயிரைக் கொடுத்தாவது இந்தியை எதிர்ப்போம்!”, “கல்வி முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசு இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியைத் திணிப்பது நியாயமற்றது!”, “இந்தித் திணிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்ப்போம்”, “ஒட்டுமொத்த இந்தியாவும் இந்தியை ஏற்றாலும் தமிழர்கள் எதிர்த்து நிற்போம்””இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தினால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும்”,”இந்தி மட்டுமே இந்திய அரசின் அலுவல் மொழி என்பதை எல்லாத் தமிழரும் எதிர்ப்போம்”,”நாம் வாழ, நம் இனம் நிலைக்க, இந்தியை எதிர்ப்போம்!” என்று பலவாக அவ்வப்பொழுது இந்தி எதிர்ப்பு வீர உரைகளை உதிர்ப்பது  நம் தலைவர்களின் பொழுதுபோக்கு.

ஆனால் இந்தித் திணிப்பு என்பது எல்லா வகையிலும் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றது. இது குறித்துக் கவலைப்பட்டதாகவோ அறிந்ததாகவோ தெரியவில்லை. அறிந்திருந்தால் அல்லது உணர்ந்திருந்தால், வாழும் தமிழ் மாளும் நிலைக்குத் தள்ளப்படுவதை எதிர்க்காமல் இருப்பார்களா?

பல்வேறு நிலைகளில் இந்தித் திணிக்கப்பட்டாலும்   மழலைக் கல்வியிலேயே இந்தித் திணிக்கப்படுவது குறித்தே நாம் பெருங்கவலைப்பட வேண்டியுள்ளது. பதின்நிலைப்பள்ளிகளிலும் மத்தியக் கல்வி வாரியப் பள்ளிகளிலும் இள மழலை (L.K.G.) வகுப்பிலிருந்தே இந்தி கற்பிக்கப்படுகிறது. பள்ளிகளில் பாடமாக இந்தியைத் திணித்து விட்டு, அதனைக் கட்டாயமாகப் படிப்போர் பயில வேண்டும் என்று செய்துவிட்டு, உளவியல் அறிஞர்கள் கூறுவதற்கு எதிராகக் குழந்தைகளிடம் இந்தியைத் திணிப்பது எவ்வளவு கொடுமை! இத்தகைய இந்திக் கல்வியைக் கட்டாயத் திணிப்பாகத் தலைவர்கள் கருதவில்லையா? அல்லது அவர்கள் நடத்தும் பள்ளிகளிலேயே இந்தித் திணிக்கப்படுவதால் அமைதி காக்கிறார்களா? பத்து அகவை வரை தாய்மொழி மட்டுமே – தமிழ் மட்டுமே குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். ஆனால் ஆங்கிலத்தையும் இந்தியையும் திணிக்கிறார்கள். இந்தியைத் திணிக்கவில்லை என்போர் கண்களில் இவை படவில்லையா? இந்தியைத் திணிக்க விட மாட்டோம் என்று சொல்லும் ஆட்சியாளர்கள் ஆட்சியதிகாரததைப் பயன்படுத்தி இந்திக் கல்வியை நிறுத்த இயலாதா? ஆனால், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்தியைத் திணிக்கவிடமாட்டோம் என்பது நாடகமல்லவா?

 “எதனை இழப்பினும் மீண்டும் பெறலாம்! மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது என்பதனைத் தெளிதல் வேண்டும். தெளிந்து செந்தமிழை அழிக்க வரும் இந்தி மொழிச் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். உண்ணும் உணவினும் உரைக்கும் மொழியைப் பெறலே மானமுள்ள மக்களுக்குரிய மாண்புறு கடமையாகும்.” என்றார் தமிழ்ப்போராளி முனைவர் சி. இலக்குவனார் [குறள்நெறி (மலர்1, இதழ்15): ஆடி 31, 1995:15.8.1964] என்றைக்கு நாம் இதை உணர்ந்து இந்தியை எந்த வடிவத்திலும் நுழைய விடாமல் தடுப்போம் என்று தெரியவில்லை.

“வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தமிழ்நாடு நாளில், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம். தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும். தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க” என்றும் முதல்வர் மு.க.தாலின் உறுதியேற்கக் கூறி வாழ்த்தியுள்ளார். தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான தமிழ் குறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகையில் இஃது எங்ஙனம் நிறைவேறும்? தமிழ்நாடு என்பதைச் சொல்லாகக் கருதாமல் உயிராக எண்ணுவதற்கு நாம் தமிழை எல்லா இடங்களிலும் பேண வேண்டும். அதற்கு இந்தித் திணிப்பை அடியோடு நிறுத்த வேண்டும். ஆதலின் பின்வருமாறு வேண்டுகிறோம்:

இந்தி எதிர்ப்புப் போலி நாடகங்களை அடியோடு நிறுத்துங்கள். கல்விக்கூடம் வழியாகவோ இந்திப் பரப்புரை அவை வாயிலாகவோ அஞ்சல் வழியாகவோ இணைய வழியாகவோ வேறு வழியாகவோ இந்தித் திணிக்கப்படுவதை அடியோடு நிறுத்துங்கள்.

எனவே, “வளர்ந்து வரும் இந்தி முதன்மை வளரும் நம் செந்தமிழை அழித்தே தீரும்விழிமின்! எழுமின்! வேற்றுமையை மறந்து விழியினும் மேலான மொழியைக் காக்கப் புறப்படுமின்.[இந்தி எதிர்ப்புக்காவலர் முனைவர் சி.இலக்குவனார், குறள்நெறி (மலர்1, இதழ்15): ஆடி 31, 1995:15.8.1964] என்னும் எச்சரிக்கைக்கட்டளையைப் பின்பற்றுவோம்! ஆருயிரைனய அருந்தமிழைக் காப்போம்!

இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துவோம்!

தமிழ்க்காப்புப் பணிகளில் ஈடுபடுவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive