Wednesday, May 31, 2017

அரசியல் தலைவர் விழாவில் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது? – இலக்குவனார் திருவள்ளுவன்



அரசியல் தலைவர் விழாவில்

அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது?

    கலைஞர்  கருணாநிதியின் 94 ஆம் பிறந்தநாள் பெருமங்கலத்துடன் சட்டமன்றப்பணிகளின் மணிவிழாவும் நடைபெற உள்ளது.(60 ஆண்டினைக் குறிக்கும் இதனை மணிவிழா என்றுதான் சொல்ல வேண்டும். வைர விழா என்பது தமிழர் மரபல்ல.) இவ்விழா அரசியல் சார்புடையது  எனப் பொன்.இராதாகிருட்டிணன், தமிழிசை முதலான பா.ச.க.தலைவர்கள் கூறுகின்றனர். தன் வாழ்வில் பெரும்பகுதியை அரசியல் உலகில் செலவிட்டவரின் பிறந்தநாளின்பொழுது அரசியல் பேசாமல் எப்படி இருக்க இயலும்?
  அரசியல் தலைவர்கள் தேநீர் அருந்தும்பொழுதும் இணைந்து உண்ணும்பொழுதும் அங்கே அரசியல் பேசப்பட்டு முதன்மையான முடிவு எடுக்கப்படுவது வழக்கமான ஒன்று. இந்திய அளவிலான தலைவர்கள் ஒன்றுகூடும்பொழுது வெறும் சந்திப்பாக அல்லது வாழ்த்திப்பேசும் நிகழ்வாக மட்டுமல்லாமல், மதவெறியும் மொழி வெறியும்   கொண்ட மத்தியஆட்சியை அகற்றுவது குறித்துப் பேச ஒரு நல்ல வாய்ப்பு அமைகின்றது அல்லவா? இதற்கெனத் தனியாகக் கூட்டம் போடத் தேவையில்லையே! இ்ங்கே மத்திய ஆட்சியை அகற்றும் திட்டம் குறித்துப்பேசி, அதன்தொடரச்சியாக வேறு கூட்டம் நிகழ்த்தலாம். ஆனால்,வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து சந்திக்கும் தலைவர்கள், இப்பொழுது அமைதி காத்துவிட்டுப் பின்னர் இது குறித்துப்பேச நாள் ஒதுக்கலாம் எனில், அதனினும் அறியாமை மிக்கதான செயல் ஒன்று இருக்குமோ! இப்படிப்பட்ட சந்திப்புகளை அரசியல் ஆய்வுக் களமாக மாற்றுவதுதானே வழக்கமான அறிவார்ந்த செயலாகும்.
  அரசியல் நடைமுறைகளைப் புரிந்துகொள்ளாமல், அரசியல் காரணமாகக் கூட்டப்படுவதாகக் கூக்குரல் இடுவது தவறு. அதனினும் பெரும் தவறு தி.மு.க.செயல்தலைவர் தாலின் அதனை மறுப்பது! ஆட்சிமாற்றத்திற்கான விதையிடும் களமாகப் பிறந்தநாள் பெருமங்கலக்கூட்டம்  அமையும் என நம்பிக்கையுடன் சொல்லவேண்டுமே தவிர, மறுத்து மழுப்பக்கூடாது.
    வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 678)
  ஒரு யானையைக் கொண்டு மற்றொரு  யானையைப் பிடிப்பதுபோன்று ஒரு செயலில் ஈடுபடுமபொழுது தொடர்புடைய மற்றொரு செயலையும் முடிக்க வேண்டும் என்கிறார் உலகப்புலவர்  திருவள்ளுவர். இதனைத் திறம்பட முடிக்கத் திட்டமிடும் தாலின் அஞ்சாமல் “அரசியல்தான் பேசுவோம்” எனச்சொல்ல வேண்டும். சொல்வதுடன் நில்லாது பாசக ஆட்சியை அகற்ற வரைவுத்திட்டம் உருவாக்க வேண்டும்.
   சமற்கிருதத் திணிப்பாலும் இந்தித்திணிப்பாலும் இத்துணைக்கண்டத்து அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் அழிவுதான் என்பதை உணரும் வகையில் அதனை முறியடிக்கத் திட்டம் தீட்டப்படவேண்டும்.
    தமிழ்நாட்டில் உண்டாக்கிய பண்பாட்டு மீறலான சல்லிக்கட்டிற்குத் தடை என்பதுபோன்று அனைத்து மாநிலங்களிலும் நிகழும் பண்பாட்டிற்கு எதிர்ப்பான செயல்களைப் பட்டியலிட வேண்டும்.
  நெடுவாசலில் நீர்மக்கரியத்திட்டத்தை நிறைவேற்ற முயல்வதுபோன்று மக்களுக்கு எதிரான மத்தியஅரசின் திட்டங்களைத் தொகுத்து அவற்றை நிறுத்தப் பொதுவான செயல்திட்டம் வகுக்கவேண்டும்.
  மாநில ஆட்சிகளில் குறுக்கீடு போன்ற மாநில உரிமைகளுக்கு எதிரான பா.ச.க.செயல்பாடுகளுக்கு எதிரான பணித்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
  இவ்வாறாக, மத்திய ஆட்சி மாற்றப் பொதுத்திட்டம் என ஒன்றை வகுத்துத் திறமாக நிறைவேற்றி மக்கள் பகை ஆட்சியை அகற்றி மக்கள் நல அரசை நிறுவவேண்டும்.
  அதே நேரம், பிற கட்சிகள் தாங்கள், மக்களுக்கு எதிராக இதற்கு முன்பு ஈடு பட்ட செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
  கலைஞர் கருணாநிதியால் தமிழுணர்வு பெற்றவர்களே இன்றைக்கு அவருக்கு எதிராக இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் அன்றாடப் பயன்பாட்டிலிருந்து தமிழ் விலகிச் செல்வதற்கு எதிரான நடிவடிக்கைகளில் ஈடுபடாமை, எங்கும் தமிழ் என்பதை வெற்று முழக்கமாக ஆக்கியமை, தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளைக் கண்டும் காணாமல் உடந்தையாக இருந்தது போன்ற அவரின் செயல்களே இதற்குக் காரணம். எனவே, இவற்றிற்காகத் தி.மு.க.வும் பேராயக்கட்சியும்(காங்கிரசு) மன்னிப்பு கேட்க வேண்டும்.
  எதிர்க்கட்சிகள் தத்தம் தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு, இன்றைய மக்கள் பகை மத்திய அரசை நீக்கத் திட்டமிட இப்பெருமங்கலவிழா பயனுள்ளதாக அமையட்டும்!
  எழுததாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், திரைப்பட ஆக்குநர், கவிஞர், கட்டுரையாளர், சட்டமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித்தலைவர், அரசின் தலைவர்,  அமைச்சர், முதலமைச்சர் எனப் படைப்பாற்றலும் பன்முகத்திறன்களும் கொண்ட கலைஞர் கருணாநிதி, இழந்த நினைவுகளைப் பெற்று நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, May 30, 2017

நினைவேந்தலுக்குத் தடை! : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா? – இலக்குவனார் திருவள்ளுவன்


நினைவேந்தலுக்குத் தடை! :  சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா?

  இறந்தவரைப் போற்றுவது என்பது உலகம் தோன்றியது முதலே உலக மக்களிடம் இருக்கும் பழக்கம். தமிழ் மக்கள் இந்தப் பண்பாட்டில் திளைத்தவர்கள். எனவே, இறந்தவர்களைத் தெய்வமாகக் கருதி வணங்கும் பண்பாடு காலந்தோறும் நிலைத்து நிற்கிறது. இன்று நாம் வணங்கும் தெய்வம் பலவும்  வழி வழி, வழிபட்ட இறந்தவர்களே!
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
(திருவள்ளுவர், திருக்குறள் 42)
என இறந்தவரைப் போற்றல் இல்லறத்தான் கடமை என்கிறது உலகப்பொதுநூல். இறந்தபின்னர் எவ்வாறு  துணை நிற்பது என்கிறீர்களா? இறந்தவர்களின் பணிகளையும் பண்புகளையும் போற்றி  நம் நினைவில் அவர்களை நிலைக்கச்  செய்வதுதான் இறந்தவர்க்கு நாம் செய்யும் கடமை.
 அத்துடன் திருவள்ளுவர் நிறுத்திக்கொள்ளவில்லை. கடல்கோள்களால் தமிழினம் அழிந்துபோனது கண்டு மிகவும் வருந்தி அவர்களை என்றென்றும் நினைவில் வைத்துப் போற்ற வேண்டும் என்கிறார்.
  குமரிக்கடலால் கொள்ளப்பட்டுக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைத்துப்போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (திருவள்ளுவர், திருக்குறள் 43)
என்கிறார்.
  அக்காலத்தில் இயற்கையால் அழிவுற்றளவர்களை   நினைவில் கொள்ள வேண்டும் என்னும் பொழுது இக்காலத்தில்,  இனப்படுகொலையில் உயிர்பறிக்கப்பட்டவர்களின் நினைவேந்தலைக் கடைப்பிடிக்க வேண்டியது நம் கடமை அன்றோ!
  இத்தகைய நினைவேந்தலின் ஒரு பகுதியாகச் சென்னைக் கடற்கரையில் மெழுகு ஒளி ஏற்றி வணங்குவதும் கடைப்பிடிக்கப்படுகின்றது.
  தொன்றுதொட்டு வரும் நினைவேந்தல் கடமையை ஆற்றுவதற்காக மே 17 இயக்கத்தினரும்  தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் சென்னைக் கடற்கரைக்கு வந்தபொழுது தளையிடப்பட்டுள்ளனர்.
   சல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு இவ்வாறு சென்னைக் கடற்கரையில் நினைவேந்தல் கொண்டாடுவதாகப் பாசக. வினர் கூறுகின்றனர். மே 3 ஆவது  ஞாயிறு, சென்னைக் கடற்கரையில் மெழுகுஒளி ஏற்றி அஞ்சலி செலுத்துவது என்பது கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருவதுதான். இவ்வாறு ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தும் திருமுருகன் காந்தியையும் அவரது மே 17 இயக்கத்தினரையும், அதுபோல் வேல்முருகனையும் அவரது தமிழக வாழ்வுரிமைக்கட்சியினரையும் அரசு தளையிடப்பட்டுள்ளது.
  சென்னைக்கடற்கரையில் கூடுவதற்குத் தடையிருந்ததாகக் கூறுகின்றனர். தடையிருக்கும் பொழுது கூடினர் என்றால், பொதுக்கூட்டம் நடத்தாமல் நினைவேந்தல் நிகழ்ச்சிதானே எனக் கருதியிருக்கலாம். அவர்களுக்கு மாற்றுஇடத்தைக் காவல்துறை ஒதுக்கி இதனை அமைதியாக முடித்திருக்கலாம்.
  தமிழ்நாட்டில் இந்தித்திணிப்பிற்கு எதிரான தமிழ்க்காப்புப் போரில்   இறந்தவர்களையும் சிறை சென்றவர்களையும் மொழிக்காவலர் எனப் பாராட்டி, உதவித்தொகை அளிப்பதற்கு இந்திய அரசு தடைசெய்தது.  எனவே, இந்தி எதிர்ப்பு ஈகியர் எனக் குறிப்பிடாமல் தமிழக அரசு உதவி வருகிறது.
  இலங்கையில் இந்தியத்தின் வழியில், சிங்கள அரசு சிங்கள வன்முறைப்படைகளால் உயிர் நீத்தவர்களைப் போற்றத் தடை விதிக்கிறது; நினைவேந்தல் இல்லங்களை உடைத்தெறிந்துள்ளது;  இனப்படுகொலையில் உயிர் பறிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் கல்லறைகளைச் சிதைத்துள்ளது; ஆண்டுதோறும் மே 17 அன்று கடைப்பிடிக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து வருகிறது. இதனை மீறித்தான் ஈழத்தமிழர்கள் உயிர் ஈகியரைப் போற்றி வருகின்றனர்.
  தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி இருக்கும் பொழுது தமிழ்மக்கள்இறந்த தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் நிகழ்த்தத் தடை என்பது அறமற்ற செயல் அல்லவா? தமிழ்நாடு சட்ட மன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் ஈழத்திற்கும் ஆதரவாகத் தீர்மானம் இயற்றிய அ.தி.மு.க.கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுதே இந்த இழிநிலை ஏன்?
  “எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை” என்பதுபோல் தமிழக அமைச்சர்கள், மத்திய (பா.ச.க.) அரசின் தலையீடு இல்லை என்று சொன்னாலும்,  உண்மை அதுதான் என்பதற்கு இதுவும் சான்று. தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகக் காவல்துறைக்கு  முதலாளி மத்தியஅரசுதான்..
   சல்லிக்கட்டிற்காக மக்கள் திரண்ட பொழுது, மாநில அரசிற்கு எதிரானது எனக் கருதி மத்திய அரசு அமைதிகாத்தது. ஆனால், அங்கே நரேந்திரருக்கு(மோடிக்கு) எதிராக முழக்கம் எழுந்ததும், தங்கள் ஆட்சிக்கும் எதிரானது எனப் புரிந்து கொண்டனர். எனவேதான் சல்லிக்கட்டு போராட்டத்தை அடக்குமுறையுடன் முடித்து வைத்தது,
 அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேயல்லவா? எனவே சென்னைக் கடற்கரையில், நினைவேந்தலுக்கான நிகழ்வு என்றதும் கூடப்போகும் மக்கள்   திரள் கண்டு மத்தியஅரசிற்கு அச்சம் வந்துவிட்டது. அதனால்தான் தடை என மக்கள் கருதுகின்றனர்.
  ஆளுங்கட்சியின் நிலை  நமக்குப் புரிகின்றது. சிறு  குழுவாக இருக்கும் ஒன்றைப் பெரும் பிளவாக மத்திய அரசு அச்சுறுத்திக் காட்ட முயன்றாலும் வெற்றி காண இயலவில்லை. இருப்பினும் தொடர்ந்து வரும் மத்திய அரசின் அச்சுறுத்தல்களால்இது போன்ற செயல்களுக்கு மாநில அரசு இடங்கொடுக்கக்கூடாது. எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசிற்கு எதிராக அணிவகுப்பதாக அதனை அச்சுறுத்தியேனும் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. எனவே,
தளையிடப்பட்ட அனைவரையும் உடனே அரசு விடுதலை செய்ய வேண்டும்!
தமிழக உரிமைகளைக் காவு கொடுக்காமல் மத்திய அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும்!
 தமிழர் நலன்களுக்குக் கேடு வரும் எனில் மத்திய  ஆட்சிக்கு எதிராகச் செயல்பட வேண்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை  : அகரமுதல 188, வைகாசி 14, 2048 / மே 28, 2017

Saturday, May 27, 2017

இரசினி கட்சி அரசியலில் இறங்கினால் என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்


இரசினி கட்சி அரசியலில் இறங்கினால் என்ன?

  சிவாசி (இராவு) கயக்குவாடு(Shivaji Rao Gaekwad) என்னும் இயற்பெயர் கொண்ட நடிகர் இரசினிகாந்து அல்லது இரசினிகாந்தன், 160 திரைப்படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த நடிகர்.  திரைத்துறையில் காலடி எடுத்து வைத்ததுமே அரசியல் உலகில் காலடி எடுத்து வைக்க ஆசைப்படும் இன்றைய சூழலில் அவருக்கும் அரசியல் உலகில் அரங்கேற்றம் காண ஆசைவருவதில் வியப்பில்லை. ஆனால், ஒரு புறம் ஆசையும் மறுபுறம் அச்சமுமாக இருதலைக் கொள்ளி எறும்பாக அவர் இருப்பதால் அரசியல் பூச்சாண்டி காட்டுவதுபோல் நடந்துகொள்கிறார். மக்கள்திலகம் எம்ஞ்சியார்  தவிர, நடிகர்திலகம் சிவாசிகணேசன் முதலான நடிகர்களின் அரசியல் வாழ்வு எதிர்பார்த்த அளவு ஒளிவிடவில்லை: சேர்த்துவைத்த செல்வம் கரைந்ததுதான் கண்ட  பலன். எனவேதான், இரசினிகாந்தும் தயங்குகிறார்.
  அண்மையில் இரசினிகாந்து தன் நேயர்களுடன் கட்சி அரசியலில் ஈடுபடஉள்ளதுபோல் பேசிய பேச்சால் பல எதிர்வலைகள் எழுந்துள்ளன. அவருடைய குடி முதலான தீய பழக்கங்கள், தமிழர் துன்புறும்போது அமைதி காத்தல்போன்ற பலவற்றைச் சுட்டிக்காட்டி அவரது அரசியல் நுழைவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவ்வாறு கூறப்படுவன எல்லாம் இதற்கு முன்னரே திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த பிறருக்கும் பொருந்தும். அவ்வாறிருக்க இவரிடம் மட்டும் வினா எழுப்பிப் பயனிலலை.
 மன்பதை நோக்கில் எந்தப்படததில் நடித்துள்ளார் என்கின்றனர். திரைப்படம் கதையாசிரியர், இயக்குநர் சார்ந்தே உருவாகிறது. அந்த நிலைகளில் அவர் இல்லை. படம் எடுப்பவராகவும் அவர் இல்லை.  எனவே, வாங்கும் ஊதியத்திற்கேற்ப நடிப்பதைக் கொண்டு அவரைக் குறைகூறக்கூடாது.
  திடீரென்று தன்னைப் பச்சைத் தமிழன் என்பது, அப்படிச் சொன்னால்தான் தமிழ்நாட்டில் அரசியல் பருப்பு வேகும் என்ற நிலையை உணர்த்துகிறதே தவிர, அவரைத் தமிழனாகக் காட்டவில்லை. நடிகர் என்ற முறையில்  சிறப்பாகத் தன் பொறுப்புகளை ஆற்றியவரிடம் வேறுவகையில் எதிர்நோக்குவதும் நம் தவறு. எனவே, அவருக்கு எதிரான போராட்டங்கள் அவரை உயர்த்த வழிவகுக்குமே தவிர அவரது குறைகளை வெளிப்படுத்த உதவாது. அவரது அரசியல் நுழைவை விரும்பாதவர்கள், அதனைப் புறக்கணிக்க வேண்டுமே தவிர எதிர்ப்பதில் பயனில்லை. அதுபோல், இரசினிகாந்தின் நேயர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர,  அவரிடம் சண்டையிட்டுப் பயனில்லை.
  தமிழ்வழிக்கல்வி, தமிழ்வழி வழிபாடு, முழுமையான தமிழ்ஆட்சிமொழிச் செயலாக்கம், இந்தித்திணிப்பு எதிர்ப்பு, சமற்கிருதத்திணிப்பு எதிர்ப்பு, மத்தியில் தமிழ் ஆட்சிமொழி,  சல்லிக்கட்டு முதலான பண்பாட்டு தொடர்பான சிக்கல்கள், கூடங்குளம், நெடுவாசல் முதலான மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கைவிடல்  முதலான பல்வேறு பொருண்மை சார்ந்த கருத்தோட்டமும் செயல்திட்டமும் என்ன வைத்துள்ளார்? ஈழத்தமிழர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வாங்கித்தரல், எஞ்சியுள்ள ஈழத்தமிழர்கள் நல வாழ்விற்கும் நில மீட்பிற்கும் உடைமைகள் காப்பிற்கும் வழி காணல், தமிழ் ஈழம் மலர வழி வகுத்தல்,  உலகத் தமிழர்களிடையே தமிழ் கற்பிக்கப்படவும் தமிழர் மேம்படவும் என்ன திட்டம் வைத்துள்ளார்? பாசகவின் கையாளாகச் செயல்படுவார் என்ற அச்சம் போக்க என்ன உறுதி தருகிறார்? என்பன போன்று அவர் விளக்கவேண்டியன ஏராளம்! ஏராளம்! ஆனால், இவற்றிலுள்ள  தெளிவின்மைகளுக்காக அவரை, அரசியலில் நுழையக்கூடாது எனச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை  இல்லை! இவர்களைக்கேட்டுத்தான் கட்சி தொடங்க வேண்டும்என்பதும் அவருக்கும் தேவையில்லை.
  ஆனால், “கட்சிதொடங்கினால் கெட்டவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ள மாட்டேன்” என்கிறார் அல்லவா? அதனை இப்பொழுதே நிறைவேற்றச் சொல்லலாம்! கொலை, மோசடி முதலான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அவரது மனைவி நடத்தும் பள்ளியை மக்கள் நலம் நாடும் தமிழ்வழிப் பள்ளியாக நடத்தச் சொல்லலாம். கருப்புப்பண நிறவனங்களிடம் நன்கொடைகள் வாங்காமல் எப்படிக் கட்சியை நடத்துவார் என விளக்கச்சொல்லலாம். இவற்றிற்கான விளக்கங்கள் தருவதும் அவரது கடமை என்பதை அவரும் உணர வேண்டும்.
தமிழ் ஏங்கே! தமிழன் நிலை
என்ன எனத் தாமறியாத்
தமிழர் ஏன்பார்
தமிழர் நலம் காப்பவராய்
அரசியலின் சார்பாக
வர முயன்றால்

இமைப்போதும் தாழ்க்காமல்
எவ்வகையும் கிளர்ந்தெழுதல்
வேண்டும்!  (பாரதிதாசன், தமிழியக்கம்)
  என ஆர்ப்பரிப்போரைப் பாராட்டுகிறோம். என்றாலும் இந்தத் தகுதியில்லாதவர்கள்தான் நாட்டை ஆளத் துடிக்கிறார்கள். ஆதலின், மக்களைப் பக்குவப்படுத்தாமல் தனியரை எதிர்த்துப் பயனில்லை என்பதை உணர வேண்டும்.
தமிழாய்ந்த தமிழன்தான்
தமிழ்நாட்டில் முதலமைச்சாய்
வருதல் வேண்டும்

தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த்
தமிழ்நாட்டில் வாராது
தடுத்தல் வேண்டும்.

நமை வளர்ப்பான் நந்தமிழை
வளர்ப்பவனாம்! தமிழ் அல்லால்
நம்முன்னேற்றம்
 அமையாது. சிறிதும் இதில்
ஐயமில்லை, ஐயமில்லை! (பாரதிதாசன், தமிழியக்கம்)
 என்பதையும்
தமிழறியான் தமிழர் நிலை
தமிழர்நெறி தமிழர்களின்
தேவை, வாழ்வு

தமையறிதல் உண்டோ எந்
நாளுமில்லை! (பாரதிதாசன், தமிழியக்கம்)
என்பதையும் இரசினி நேயர்களுக்கு உணர்த்த வேண்டும்.
நடிப்பைப் பார்த்து மகிழ்! நடிகனாகப் போற்று!
ஆனால், அடிமையாக மாறி ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க எண்ணாதே!
என நாம் இரசினி அன்பர்களுக்கு உணர்த்த வேண்டும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்  (திருவள்ளுவர், திருக்குறள் 517)
என, நம் நாட்டிற்கும் மக்களுக்கும் உலகத்தமிழ் இனத்திற்கும் நேரிட்டுள்ள இன்னல்களைக் களையவும் நலமான பாதையில் இட்டுச்செல்லவும் தக்கவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவுறுத்த  வேண்டும்.
தமிழ்நலம்நாடும் தமிழர்கள் தமிழக அரசியலை அணி செய்வார்களாக!
இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive