Saturday, April 29, 2023

மாநில உரிமைகள் கூட்டமைப்பை முதல்வர் உருவாக்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




மாநில உரிமைகள் கூட்டமைப்பை முதல்வர் உருவாக்க வேண்டும்!

மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் முன்னணியிலும் வழிகாட்டியாகவும் இருப்பது தமிழ்நாடே! “மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி” எனப் பேரறிஞர் அண்ணா முதலில் குரல் கொடுத்திருந்தாலும்  மாநில உரிமைகள் தொடர்பான முழக்கங்களுக்கும் எழுத்துரைகளுக்கும் வடிவம் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியே! அவரது வழியில் அவரது திருமகனார் மு.க.தாலின் இந்தியாவிற்கு வழிகாட்டியாக மாநில உரிமைகளுக்காகச் செயல்வடிவம் தருவதில் முனைந்துள்ளார்.

அன்றைய முதல்வர் கலைஞர், 19.08.1969 அன்று அறிவித்ததற்கிணங்க 22.09.1969 இல் பி. வி. இராசமன்னார் எனச் சுருக்கமாக அறியப்படும் பகாலா வெங்கடரமண(இராவு) இராசமன்னார் (Pakala Venkataramana Rao Rajamannar, 1901–1979) தலைமையில் அதற்கான குழுவை அமைத்தார். மருத்துவர் ஆற்காடு இலட்சுமணசுவாமி (முதலியார்)(A. Lakshmanaswami Mudaliar),  நீதிபதி  பலகணி சந்திர (ரெட்டி)(P. Chandra Reddy)  ஆகியோரை உறுப்பினராகவும் நியமித்தார். இக்குழு தங்களுடைய ஆய்வறிக்கையை 10.03.1971 அன்று தமிழ்நாட்டரசிடம் அளித்தது. அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீர்மானத்தை 16.04.1974  அன்று கலைஞர் முன்மொழிந்து சட்டப் பேரவையிலும் பின்னர் மேலவையிலும் நிறைவேற்றச் செய்தார்.

இதற்கு முன்னரே இது குறித்த விவாதம் ஒன்றிய அரசு அளவில் நடந்தது. 1966-இல் மொரார்சி தேசாய் தலைமையில் பணியாண்மைச் சீர்திருத்த ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்தது. பின்னர், மொரார்சி தேசாய் துணைத் தலைமையமைச்சரான பின், அனுமந்தையா அந்த ஆணையத்தின் தலைவரானார்.  அதிகாரப் பங்கீடு குறித்த அவரது தலைமயிலான ஆணையப் பரிந்துரைகளையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்குப் பின்னரும் சருக்காரியா ஆணையம் (1983-1988), நீதிபதி மதன்மோகன் பூஞ்சி தலைமையில் மாநில உரிமைகள் ஆணையம்(2004)முதலியவை ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டன. இருந்தாலும் அவற்றிற்கெல்லாம் மூல ஆதாரமாகப் பெருமளவு கருத்துப் பரவலுக்கு வழி வகுத்த இராசமன்னார் குழு அறிக்கையே உள்ளது. இத்தகைய குழு அல்லது ஆணையம் மாநில உரிமைகளுக்கான குரலை அடக்குவதற்காக ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டவை என்னும் வகையில் இவற்றால் குறிப்பிடத்தக்கப் பயன் எதுவும் விளையவில்லை.

பலவற்றில் ஆட்சிகளுக்கேற்பக் காட்சிகள் மாறினாலும் மாநில உரிமைகளைப் பொறுத்தவரை கட்சிகளுக்கு அப்பாற்பட்டுத் தமிழ்நாடு குரல் கொடுத்து வருகின்றது. எனவேதான் சருக்காரியா ஆணையத்தின் பரிந்துரைகளைப் பற்றி விவாதிப்பதற்காக 2001-இல் புது தில்லியில் கூட்டப்பட்ட மாநிலங்களிடை மன்றக் கூட்டத்தில் அப்போதைய முதல்வர் செயலலிதா அம்மையார், எஞ்சிய அதிகாரங்களைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றலாம் என்ற சருக்காரியா ஆணையத்தின் பரிந்துரையை மறுத்துப் பேசி, அவை மாநில அரசிடமே விடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கத் தேவையில்லை, ஆளுநர் பதவியின் தேவை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பன போன்று மாநில உரிமைகளைக் காக்கும் வகையில் பேசினார்.

மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குவது நாட்டுப்பிரிவினைக்கு வழி வகுக்கும் என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். உண்மையில் மாநில அதிகாரங்களை அடக்கி வைப்பதே பிரிவினைக்கு வழிகோலும் என அரசியலறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆளுநர் அதிகார அத்து மீறல் தொடர்பில் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொணர்ந்து நிறைவேற்றச் செய்த முதல்வர் மு.க.தாலின் பிற மாநில அரசுகளையும் கவர்ந்து விட்டார். எதிர்பார்த்தவாறு வேறு சில மாநிலங்கள் இதே போல் தீர்மானம் இயற்றியும் இயற்ற இருப்பதாயும் தெரிவித்துள்ளன. மேற்கு வங்க முதல்வர்  மமுதா அம்மையார் எதிர்க்கட்சி  முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நலத்திட்டங்களிலும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மு.க.தாலின் உரைகளைப் பிற மாநிலத்தவரும் கவனமுடன் கேட்டு வருகின்றனர். இவரது வழிகாட்டுதலை ஏற்கப் பிற மாநில முதல்வர்கள் ஆயத்தமாக உள்ளனர். எனவே இவர் கூட்ட முயற்சியில் இறங்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டம் என்றில்லாமல் அனைத்து மாநிலங்களின் கூட்டமைப்பாக நிறுவிக் கூட்டங்கள் நடத்திச் செயற்பட வேண்டும்.

மாநில முதல்வர்கள் மட்டுமல்லாமல் பேரவை, மேலவைத் தலைவர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள் அமைச்சர்கள் முதலிய பிறரும் அடங்கிய மாநில உரிமைகளுக்கான கூட்டமைப்பை மு.க.தாலின் உருவாக்க வேண்டும். மேம்போக்காக இந்த இந்தத் துறை மாநிலப்பட்டியலில் இருக்க வேண்டும், இன்னின்ன பொதுப்பட்டியிலில் இருக்க வேண்டும் என்று பேசாமல் தெளிவாக மாநில அரசிற்கு இருக்க வேண்டும் அதிகாரங்களை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு விவாதிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக இதழ்/பத்திரிகை இசைவு அதிகாரத்தைப் பார்ப்போம். ஓர் இதழை/பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்றாலும் ஒன்றிய அரசிடம்தான் செல்ல வேண்டும். அது மாநிலத் தேசிய மொழிப்பெயர்களைக் குறிப்பிட்டு அனுப்பினால் சமற்கிருமயமாக்கப்பட்டப்பெ யரைத் திணிப்பதையே கடமையாகக் கொண்டுள்ளது. இந்தியச் செய்தித்தாள் பதிவாளர்(Registrar of Newspapers for India/RNI) அதிகாரத்தை மாநில அரசுகளிடம் வழங்கச்செய்யக்கூட மாநில அரசுகளால் இயலவில்லை.

இது போன்ற ஒன்றிய அதிகாரப் பிடுங்கல்களை  மக்களிடையே பரப்பி மக்களின் பேராதரவைப் பெற வேண்டும். தொடர்பான தீர்மானங்களை அனைத்து மாநிலச் சட்ட அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும்.

மாநில உரிமைகளுக்கான கூட்டமைப்பு என்பதால் ஒன்றிய அரசை நடத்தும் ஆளும் கட்சி மாநில அரசு சார்பாகவும் இருக்கலாம். அவர்கள் தத்தம் மாநிலத்திற்கேற்ப அதிகார உரிமைகளைக் கோர வேண்டும். இப்போது பா.ச.க. ஆளும் மாநில முதல்வர்கள் முதலானோர் இக்கூட்டமைப்பில் சேர வில்லையெனில், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். மாநிலத்திற்காகக் குரல் கொடுக்கையில் விலகியிருப்பின் மக்களிடம் இருந்து விலக்கி வைக்கப்படுவோம் என அஞ்சி பா.ச.க. முதல்வர்களும் சேரும் நிலை வரவேண்டும். நல்லிணக்கமாகக் கூட்டமைப்புச் செயற்படும் வகையில் எக்கட்சியையும்  தாக்காமலும் தாங்காமலும் நடுநிலையுடன் உரையாடல்களும் உரைகளும் இருக்க வேண்டும்.

இக்கூட்டமைப்பு, ஒன்றிய ஆட்சியைப் பிடிக்கும் வகையில் செயற்படாமல் மாநில அதிகார மீட்பு நோக்கை இலக்காகக் கொண்டுதான் செயற்பட வேண்டும். கூட்டமைப்பிற்கு வெளியே எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு இதனைப் பயன்படுத்தலாம். ஆனால், கூட்டமைப்பு என்பது ஒன்றிய – மாநில உறவு,அதிகாரப் பரவல் குறித்து மட்டுமே இருக்க வேண்டும்.

இத்தகைய நடுநிலையான அமைப்பை ஏற்படுத்தி மாநில அதிகாரங்களை மீட்டெடுக்குமாறு முதல்வரை வேண்டுகிறோம்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்.

(திருவள்ளுவர், திருக்குறள் 462)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

16.04.2054/29.04.2023

Sunday, April 23, 2023

அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு? முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு?

முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்!

உலகத் தமிழாராய்ச்சி மன்றம்  என்னும் ஒரே ஓர் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி இரு வேறு அணியினர் வரும் சூனிலும்சூலையிலும் உலகத்தமிழ் மாநாடுகள் நடத்துகின்றனர்ஏன் இந்த முரண்போக்கு என்பதை முன்பே கேட்டிருந்தோம்.

பொதுவாகவே உலக மாநாடுகள் என்றாலே மகிழ்ச்சி அடைவதைவிட எரிச்சல் அடைவதே மிகுதி என்பதாக மாநாடு நடத்துநர்களின் போக்கு உள்ளது. கடந்த முறை சிக்காக்கோவில் நடைபெற்ற 10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு கூடத் தமிழாராய்ச்சியாளர்களுக்குக் குறைந்த அளவு பங்களித்துத் தம் நிதிவசதியைப் பெருக்குவதற்காகத் தமிழர் மாநாடாக நடந்ததை நாமறிவோம்இப்போது இரு வேறு அணியினர் புறப்பட்டு ஆராய்ச்சியாளர்களைக் குழப்பிக் கொண்டுள்ளனர்.

“யார் வேண்டுமென்றாலும் அல்லது எந்த அமைப்பு வேண்டுமென்றாலும் உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தலாம். ஆனால், ஒரே அமைப்பின் பெயரில் ஏட்டிக்குப் போட்டியாக மாநாடுகள் நடத்துவது  இந்த அமைப்பைத் தோற்றுவித்த தனிநாயக அடிகளாருக்கும் அமைப்பில் முன்நின்ற அறிஞர்களுக்கும் இழுக்கு தேடுவதாகும். ஒரு மாநாடு முடிந்ததும் அடுத்த மாநாடு குறித்து முடிவெடுத்து முறையாக அறிவிப்பதே செல்லத்தக்கதாகும். எனவே, பத்தாவது மாநாட்டுப் பொதுக்குழு தேர்ந்தெடுத்த முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையிலான குழுவினர்தான் உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் உண்மைப் பொறுப்பாளர்கள். எனவே, இவர்கள் எடுக்கும் முடிவே சரி. மாற்றுக் கருத்து இருந்தால் இக்குழுவில் தெரிவிக்க வேண்டுமேயன்றிப் போட்டிக் குழுவை உருவாக்கக் கூடாது. “ என அகரமுதல இதழில் (06.11.2022) “திருவள்ளுவரை இழிவு படுத்தும் சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!” என்னும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். எனினும் முனைர் மு.பொன்னவைக்கோவிடம் ஒன்றுபட்டு நடத்துவதே சிறப்பு என வலியுறுத்தி வந்தோம்.

சார்சாவில் நடத்துவதாக இருந்த மாநாட்டினர் அங்கு நடத்த இயலாமல் மலேசியாவில் நடத்த உள்ளனர். சிங்கப்பூரில் நடத்துவதாக இருந்த மாநாட்டினர் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு இடம் தேடி வருகின்றனர். இப் பொழுது திடீரென்று பொன்னவைக்கோ தலைவர் என்ற முறையில் பொதுச்செயலரிடம் மட்டும் கலந்து பேசி இதுவரை செல்லாது என்ற கூறிவந்த அணியினருடன் “உங்கள் மலேசியா மாநாட்டுடன் இந்த மாநாட்டுப் பேராளர்களையும் இணைத்து நடத்துங்கள்” எனக் கேட்டுள்ளார். அதன் தலைவர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

தமிழ்நாட்டரசிடம் பொருளுதவி கேட்டதாகவும் இரு வேறு அணியாகப் பிளவு பட்டுள்ளதாலும் அரசே உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும் திட்டத்தில் இருப்பதாலும்  அதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம். பொருளன்றி ஓரணுவும் அசையாது என்பதால் தனியாக நடத்துவதைக் கைவிட்டு இணையும் முடிவிற்குத் தாமாகவே வந்துள்ளார். ஆனால், சிக்காகோ மாநாட்டின் பொழுது நம் அரசிடம் பெற்ற உரூபாய் ஒரு கோடித் தொகையை வைத்துச் சிறப்பாக மாநாட்டை நடத்தலாமே எனப் பிற உறுப்பினர்கள் கருதுகின்றனர். சென்னையில் அல்லது சென்னையருகில் உள்ள ஏதேனும் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றால் ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சான் சாமுவேல் தன் வளாகத்தை மாநாட்டிற்குத் தர இசைவதால் அங்கேயே நடத்தலாம் என்கின்றனர். இணையும் முடிவு நல்ல முடிவுதானே என்று தெரிவித்தால்,  அதை அறிவித்த முறை சரியில்லை என்றும் “நீங்களே நடத்துங்கள் என்று சொல்லாமல் இணைவோம் வாருங்கள்” என்று அழைத்திருக்கலாம் என்றும் பிறர் கருதுகின்றனர்.

இந்த இடத்தில் உலகத்தமிழராய்ச்சி மன்றம் குறித்துக் காண்போம்.

ஈழத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார் (1913-1980) உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை(International Association of Tamil Research, IATR) 1964-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் பாரிசு நகரைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கினார். அப்போது, இதன் நோக்கமாக,”உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகப் பேராசிரியர்களைத் தமிழாய்வில் ஈடுபடச் செய்தல், தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைக்கழகத் தொடர்புகளை ஏற்படுத்துதல்” எனக் கூறப்பட்டது.

இந்நோக்கத்திற்கமைவாக, இரண்டாண்டுகட்கு ஒருமுறை பல்வேறு நாடுகளில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்துவதையும் இலக்காகக் கொண்டனர். இதன்படி முதல் உலகத் தமிழ் மாநாடு 1966-இல் கோலாலம்பூரில் நடத்தப் பெற்றது.  தொடர்ந்து சென்னை (1968), பாரிசு (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987), மொரீசியசு (1989), தஞ்சாவூர் (1995), கோலாலம்பூர் (2015), சிக்காகோ (2019) ஆகிய நகரங்களில் பத்து மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

உ.த.ஆ.மன்றத்தினைப் பதிவு செய்யாமையால் வங்கிக் கணக்கு தொடங்கப்படவில்லை; இதனால் நிதி ஆதாரம் இல்லை; எனவே பிறரைச் சார்ந்தே இயங்க வேண்டி இருந்தது. இதனால், தஞ்சாவூரில் நடைபெற்ற. எட்டாவது மாநாட்டில் வெளியிட்ட  மலரின் 870 படிகள் நூலகங்களுக்கு வழங்கப்பட்டதற்குரிய தொகையாகிய உரூ. 12.18 இலட்சம் தொகை, தமிழ் நாட்டரசின் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திடம் (International Institute of Tamil Studies) ஒப்படைக்கப் பட்டது. இக்குறையைப் போக்க 2016இல் இந்தியாவில் World Tamil Research Association என்ற பெயரில் பதிவு செய்யப்பெற்றது. இதன் பின் சிக்காகோவில் நடைபெற்ற மாநாட்டில் (2019) தமிழ்நாடு அரசு உருபாய் ஒரு கோடி நன்கொடை வழங்கியது. மாநாட்டின்  இறுதி நாளன்று கொடுக்கப்பட்ட இத் தொகை கட்டுரையாளர்களின் போக்குவரத்துச்செலவு, தங்குமிடச் செலவு போன்றவற்றிற்கு உதவியாக அவர்களுக்கு உரியவாறு அளிக்கப்படவில்லை.

இப்பொழுது பதினொன்றாவது மாநாட்டில் தொடக்கத்தில் குறிப்பிட்ட முரண் நேர்ந்துள்ளது.

60 ஆண்டுகளில் 30 மாநாடுகள் நடைபெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இது வரை 10 மாநாடுகள்தான் நடைபெற்றுள்ளன என்பதே  இவ்வமைப்பின் செயற்பாட்டுக் குறைபாட்டை உணர்த்தும்.

பொதுவாகத் தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட்டாலே கட்சி வண்ணம் பூசப்பட்டுக் குறை சொல்லப்படுகிறது. யார் ஆட்சியில் நடந்தாலும் ஆளுங்கட்சி மாநாடாகவே சொல்லப்படுகின்றது.

இவ்வாறு குறைசொல்லாத அளவிற்கு அமைப்பைக் கொண்டு செல்ல வேண்டும். மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின் சந்து செய்து(இணக்குவித்து) ஒரே மாநாடாக நடத்தச் செய்து தொடக்கவுரை ஆற்ற வேண்டும். தமிழ்நாட்டரசின் தற்போதைய தமிழ், தமிழர் நலப்பணிகளையும் மேற்கொண்டு திட்டமிட்டுள்ள பணிகளையும் உலகத் தமிழாராய்ச்சியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சி யமைச்சர், தலைமைச் செயலர், செயலர் ஆகியோரும் பங்கேற்க வேண்டும். முதல்வர் தமிழார்வலரான தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு மூலம் ஒன்றுவிக்கும் பணியைச் செய்யலாம். இதெல்லாம் அரசின் வேலையா எனக் கருதாமல் தமிழால் ஒன்று படவேண்டியவர்கள் பிளவுபடக்கூடாது என்பதாலும்  தமிழன்பர்களின் நலன் கருதியும் இதில் கருத்து செலுத்த வேண்டும்.

இப்போதைய ஈரமைப்புகளின் தலைவர்களுக்கு மாற்றாகப் புதிய ஒருவரைத் தலைவராக அரசே அமர்த்தலாம். புதிய தலைவர், செயலர் பழிவராத வண்ணம் நேர்மையாகவும் ஆராய்ச்சியைப் பரப்பும் ஈடுபாட்டுடனும் தமிழ்வளர்ச்சியில் நாட்டம் கொண்ட தமிழறிஞர்களாகவும் இருக்க வேண்டும்.   இம்மன்றத்தில் உள்ள செம்மொழி விருதாளர்கள் முனைவர் ப.மருதநாயகம், முனைவர் இ.சுந்தரமூர்த்தி போன்றவர்களைத் தலைவராகத் தேரந்தெடுக்கச் செய்யலாம். செயலர்களையும் மாற்ற வேண்டும்.  மாற்றப்படுபவர்கள்  விரும்பினால் புதிய அமைப்பின் வேறு பொறுப்பிற்கு வரலாம். இவ்வாறு முதல்வர் தலையிட்டு உலகத்தமிழ் மன்றத்திற்குப் புத்துணர்ச்சி தர வேண்டும். மன்ற நிதியிலிருந்து ஒரு பங்கும் தமிழ்நாட்டரசு பொருளுதவியில் இருந்து மறு பங்கும் கொண்டு மாநாட்டைச் சிறப்பாக நடத்தச் செய்ய வேண்டும்.

ஒருவேளை அதற்கான வாய்ப்பு அமையாவிட்டால் முனைவர் மு.பொன்னவைக்கோ பொதுஅரங்க மாநாட்டைக் கைவிட்டு இணையத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட வேண்டும். இணையவழியிலும் கருத்தரங்கத்தை நடத்தலாம்.

உலகத்தமிழ் மன்றம் இனிமேல் மாநாடுகள் நடத்துவதைக் கைவிட்டு இணையவழி ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடும் பணியில் ஈடுபடவேண்டும்; இணைய வழி உரையரங்கங்களை நடத்த வேண்டும். ஈராண்டிற்கொரு முறை ஆராய்ச்சி மலரை அச்சிதழாக வெளியிடலாம்.

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு (திருவள்ளுவர், திருக்குறள் 612).

[ஒரு செயலைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணி இடையில் விட்டுவிடாதே. அவ்வாறு வினையைக் கைவிடுபவரை உலகமும் கைவிடும்.]

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

10.04.2054 +++ 23.04.2023



Wednesday, April 19, 2023

மத மாற்றங்களும் மத மாற்றச் சலுகைகளும் தடுக்கப்பட வேண்டியனவே! – இலக்குவனார் திருவள்ளுவன்



மத மாற்றங்களும் மத மாற்றச் சலுகைகளும் தடுக்கப்பட வேண்டியனவே!

பொதுவாக முற்போக்கு, சமய நல்லிணக்கம், பகுத்தறிவு என்ற கருத்தாக்கங்களில் உள்ளவர்கள், மத மாற்றத்தை ஏற்பவர்களாகவும் மதம் மாறியவர்களுக்கு மத மாற்றத்தால் சலுகை இழப்பு கூடாது என்பதில் உறுதி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வாறிருக்க கிறித்துவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்னும் முதல்வரின் தனித் தீர்மானம கொணரப்பட்டுள்ள நாளன்று அதற்கு எதிராக இந்தக் கட்டுரையா என எண்ணலாம். முதல்வரின் கருத்துக்கு எதிரான கட்டுரை என எண்ணுவதை விட, மதங்களால் பண்பாடு அழிவதைத் தடுப்பதற்கு முனையும் கட்டுரை என்ற நோக்கில் பார்க்க வேண்டும்.

     “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டமுறையிலான பாதுகாப்பு, உரிமைகள், இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனமாக வலியுறுத்துகிறது” என்று முதல்வர் மு.க.தாலின் பேசியுள்ளார். மனிதர்கள் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமையுண்டு என்றும் பேசியுள்ளார். இசுலாமிய மதம் மாறியவர்கள் குறித்து ஒன்றும் தெரிவிக்காதது ஏன் எனத் தெரியவில்லை.

தமிழர்கள் இந்துக்களாகச் சொல்லப்பட்டாலும் இந்துக்கள் அல்லர் என்பது உண்மைதான். இந்துக்கள் என்று இன்றைக்குக் கூறப்படுபவர்கள், ஆரியச் சடங்குகளையும் ஆரிய மொழிக் கலப்பையும் ஏற்றுக் கொண்டு தமிழ்ப்பண்பாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் சிதைவு ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே, மத மாற்றம் என்பது தமிழ்ப்பண்பாட்டுச் சிதைவிற்கு வழி வகுத்து வருகிறது என்பதே உண்மை.

இந்துக்கள் பல தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்களாக உள்ளனர். எனவே, அவர்களில் பெரும்பாலர் தேவாலயத்திற்கும் பள்ளி வாசலுக்கும் செல்லத் தயங்குவதில்லை. வேளாங்கண்ணி விழா, நாகூர் விழா போன்ற பிற சமய விழாக்களிலும் பங்கு கொள்ள மறுப்பதில்லை. ஆனால், பிற சமயத்தினர் தங்கள் சமயம் தவிரப் பிற சமயக் கோயில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதையோ பிற சமய விழாக்களில் பங்கு கொள்வதையோ ஏற்பதில்லை.

இது குறித்து முன்னரே எழுதியதை நினைவுபடுத்துகிறேன்:

“சமயம் மாறுபவர்கள் தமிழ் மரபில் இருந்தும் மாறுகின்ற அவலம்தானே உள்ளது. பொங்கல் வாழ்த்து தெரிவித்தால், நாங்கள் இசுலாமியர்கள் என்கிறார்கள். ‘இசுலாம் எங்கள் வழி! தமிழ் எங்கள் மொழி என்ற உணர்வு மிக்கவர்களின் வழி வந்த இன்றைய தலைமுறையினர்தாம் அவ்வாறு தெரிவிக்கின்றார்கள். “எங்கள் வீட்டுப் பொங்கல்” என்று உண்ணக் கொடுத்தால் “நீங்கள் உங்கள் கடவுளுக்குப் படைத்து இருப்பீர்கள் வேண்டா என்கின்றனர் கிறித்துவர்கள். கடவுளுக்குப் படைக்காமல் தருவதாகக் கூறினாலும், நம்முடன் நன்கு பழகும் கிறித்துவர்கள் நாம் தருவன பழங்களாக இருந்தாலும் வாங்க மறுத்துவிடுகின்றனர். இசுலாமியர்கள் வாங்கிக் கொண்டு உண்ணாமல் இருந்து விடுகின்றனர். அதே நேரம் கிறித்துவர்கள், “எங்கள் வீட்டில் குழந்தை இயேசு படம் வைத்து வணங்குகின்றோம்; வாருங்கள்.” அல்லது “தேரில் மாதா வரும்பொழுது எங்கள் வீட்டில் நாளை வழிபாடு இருக்கும்; வாருங்கள். துன்பங்கள் தீரும்; “உங்கள் மகன் அல்லது மகள் சிறப்பாகத் தேர்ச்சி பெற தேவாலயத்தில் வழிபாடு வைத்துள்ளோம்; வாருங்கள் என்பார்கள். எல்லாக் கடவுளும் ஒன்றுதானே! போவதால் என்ன என்று நாமும் செல்வோம். மெல்ல மெல்ல மூளைச் சலவை செய்வர். இதனால், சலுகை பெறுவதற்கு இந்துவாகக் காட்டிக்கொண்டு கிறித்துவர்களாக மாறி வாழ்பவர் பல்லாயிரம் உள்ளனர்.” (இலக்குவனார் திருவள்ளுவன், மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும்!, 06.09.2015).

துடியன் பாணன் பறையன் கடம்பனென்

றிந்நான் கல்லது குடியு மில்லை

என்கிறார் மாங்குடி  கிழார்(புறநானூறு 335) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு உயர்வாகச் சொல்லப்படும் மண்ணின் மக்கள்தான் இன்று ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.  இவ்வாறு சொன்னபோது இந்து மதம் என்பதில்லை. ஆனால் பின்னர் இந்துவாக்கப்பட்டு அதிலுண்டாக்கப்பட்ட சாதிப்பிரிவுகளில் சிக்குண்டு ஒடுக்கப்பட்டுத் தாழ்நிலை யடைந்தனர்.  பின்னர் இறக்குமதியான மதங்களில் சேர்ந்த பின்னரும் இழிநிலை மாறாமல்தான் உள்ளனர். இவ்விழி நிலை போக்க மக்கள் மனங்களில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் வள்ளுவத்தை ஊன்ற வேண்டும்.

சமற்கிருதம் ஈராயிரம் ஆண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்தாலும் அது மண்ணின் மொழியாகாது. அதுபோல்தான்  ஈராயிரம் ஆண்டுகளாக அல்லது ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகள் நம் நாட்டில் இருந்தாலும் கிறித்துவம் முதலிய மதங்கள் மண்ணின் மதம் ஆகாது.

மண்ணின் மதத்தைப் பின்பற்றாதவர்களை எங்ஙனம் மண்ணின் மக்களுக்கு இணையாகக் கருத இயலும்? அவர்களுக்குச் சலுகைகள் மண்ணிண் மக்களுக்குரிய ஒதுக்கீட்டில் இருந்து வழங்கினால் மண்ணின் மக்களுக்கான குமுக(சமூக) நீதி பங்கமாகாதா? சலுகைகள் ஆதித்தமிழர்களுக்கு என்றில்லாமல் ஆதித்திராவிடர்களுக் கென்றுதான் உள்ளன. எனவே, இதன் வழி மண்ணின் மக்களின் சலுகைகள் பிறருக்குப் பங்குபோடப்படும் என்பதே உண்மை.

மதச் சிறுபான்மையர் என்ற உரிமையில் கல்விநிலையங்களுக்கு அனுமதிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பொதுவான ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் தத்தம் சமயத்தைச் சார்ந்தவர்களுக்கே பணி வழங்கும் உரிமையும் அதிகாரமும் பெற்றவர்கள். தமிழ்நாட்டு மக்கள் தொகையில் பிற சமயத்தவர்  எத்தனை விழுக்காடு உள்ளனரோ அதைவிட அதிக விழுக்காட்டில் கல்வி நிலையங்களை நடத்துகின்றனர். இதன்காரணமாக மண்ணின் மைந்தர்களுக்குரிய கல்வி, வேலை வாய்ப்பு குறைக்கப்பட்டுச் சமநீதி அநீதியாகிறது. அப்படியானால், நம் நாட்டிலுள்ள பிற சமயத்தவர் மண்ணின் மக்களில்லையா என்று கேள்வி எழலாம்.  அவர்களும் மண்ணின் மக்கள் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் சமய அடிப்படையில் பார்க்கும்போது பிற மதத்தவரை மண்ணின் சமயத்தவராகக் கருத இயலாது. பிற சமயத்தவரால் தமிழ் இலக்கியம் வளர்ச்சியுற்றதும் தமிழ் மொழி பெருமையுற்றதும் என்றும் போற்றற்குரியது. அதே நேரம் சமய அடிப்படையில் உரிமைகள் வழங்கப்படும் பொழுது மண்ணின் சமயத்தவருக்கு முதலுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்து மதத்தில் சாதியின் அடிப்படையில் அநீதி இழைக்கப்படுவதால்தான் மதம் மாறுவதாகக் கூறப்படும் பொழுது அவ்வாறு மதம் மாறிய பின்னரும் அதே நிலை தொடருகின்றது என்றால் மத மாற்றம் என்பது தவறு ஆகிறது அல்லவா?

அறிஞர் போப்பு திருவாசகத்தை மொழி பெயர்த்தார். ஆனால், இந்துவாக மாறவில்லை. அதுபோல், எந்த மதத்தையும் ஒருவர் பின்பற்றலாம். எந்த மத ஆலயத்திற்கும் செல்லலாம். ஆனால் மதம் மாறவேண்டும் என்ற கட்டாயம் கூடாது. இந்துக்கோயில்களில் பிற மதத்தினர் நுழையக்கூடாது என்ற அறிவிப்புப் பலகையை அகற்ற வேண்டும். மத நம்பிக்கையுள்ள யாவரும் வரலாம் என்று அறிவிக்க வேண்டும். 

இப்பொழுதும்கூடக் கணிசமான மக்கள் இந்து மத்திலிருந்து மாறாமலேயே கிறித்துவ மதத்தைப் பின்பற்றி வருகின்றனர். கோயில்களுக்குச் செல்லாமல் தேவாலயங்களுக்குச் சென்று வருகின்றனர். இந்து வழிபாட்டைக் கைவிட்டுக் கிறித்துவ வழிபாட்டையே பின்பற்றுகின்றனர். அவர்கள் வீடுகளில் அணிசெய்வது இந்துக்கடவுளர் படங்களல்ல. கிறித்துவம் தொடர்பானவையே. எனினும் சட்டப்படி மாறினால் கல்வி, வேலை இட ஒதுக்கீடு முதலிய சலுகைகள் கிடைக்காது என்பதால் அவ்வாறு மாறாமல் உள்ளனர்.

முன்பே சில முறை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த இப்போதைய தீர்மானத்தை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டால், அவர்கள் சட்டப்படி கிறித்துவர்கள் ஆவார்கள். அவர்கள் நடத்தும் கல்விநிலையங்கள், பணியிடங்கள் முதலியவற்றில் தமிழ் மக்களின் பழக்க வழக்கம் மதச்செயலாகக் கருதப்பட்டுப் புறக்கணிக்கப்படும். எடுத்துக்காட்டாகச் சில நாள் முன்னர் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன். செவிலியர் ஒருவர் அழுதுகொண்டிருந்தார். காரணம் கேட்டதற்குத் “தமிழ்ப்புத்தாண்டு என்பதால் சாமி கும்பிட்டுவிட்டுக் குங்குமம் பூசியிருந்தேன். அதை அழிக்காமல் வந்து விட்டதால் ஒரு நாள் சம்பளத்தைப் பிடிப்பதாகக் கூறி விட்டனர்” என்றார். சில இடங்களில் ஒட்டுப்பொட்டு இருந்தால் ஒன்றும் சொல்வதில்லை என்றும் தான் படிக்கும்பொழுதும் இதே கட்டுப்பாடுதான் என்றும் கூறினார். பிற பொதுவான கல்வி நிலையங்களிலும் இதே நிலைதான். கல்வி வளர்த்த பிற சமயக் கல்வி நிலையங்கள், ஆங்கிலேயர்களாகவே மாணாக்கர்களை உருவாக்குகின்றனர். எனவேதான் தமிழில் பேசினால் தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறு பலவற்றைச் சொல்ல இயலும். கிறித்துவர்களாக மாறுவோர் பெருகி இத்தகைய அவலநிலையும் பெருகும்.

திட்டமிட்டு நற்பணி யாற்றும் முதல்வர் மத அடிப்படையிலான சிந்தனைகளைப் போக்கும் வகையில்

எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!

எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!

எனப் பாவேந்தர் கனவுகண்டதை நனவாக்கினால் இந்தச்சிக்கல்கள் எழா. இட ஒதுக்கீட்டிற்குத் தேவையற்ற் சூழல் எழும். நம் நாடும் மக்களும் நலம் உறுவர். 

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.   (திருவள்ளுவர், திருக்குறள் – 673)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

Tuesday, April 11, 2023

முதல்வருக்குப் பாராட்டும் ஆளுநருக்கு நன்றி முறையை நீக்கலும் – இலக்குவனார் திருவள்ளுவன்

      11 April 2023      அகரமுதவ


ஆளுநர் எதிர்ப்புத் தீர்மானத்திற்கு முதல்வருக்குப் பாராட்டும் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான முறையை நீக்க வேண்டலும்

நேற்று (பங்குனி 27, 2054/10.04.2023) தமிழ்நாட்டுச்சட்டமன்ற வரலாற்றில் ஒரு முதன்மையான நாள். மாநிலத் தன்னாட்சிக்குக் குரல் கொடுக்கும்  வரலாற்றிலும் சிறப்பான திருப்புமுனை நாள்மேதகு ஆளுநர் திரு இர.நா.இரவியின் அடாவடித்தனமான போக்கிற்கு எதிராக முதல்வர் மு.க.தாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் சிறப்பிற்குரியது. இத் தீர்மானம் கொண்டு வந்து அவர் ஆற்றிய உரையும் வழியுரையாக அமைச்சர் துரைமுருகன் ஆற்றிய உரையும் சிறப்பானவை. இருவரையும் சட்டமன்றப்பேரவை உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம்.

மேலிட அறிவுறுத்தலுக்கிணங்க ஆளுநர் இர.நா. இரவி பேசும், செயல்படும் வகைகள் மக்களாட்சி நலனுக்கும் மாறானவை; அரசியல் அறநெறிக்கும் மாறானவை. பெரும்பான்மை பெறாத பிற மாநிலங்களில் காணிக்கை அளித்தும் தடம் புரளச் செய்தும் பாசக ஆட்சி அமைத்துள்ளது. அம்முயற்சியிலும் இன்னும் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் அமைதியாகப் பார்வையாளராக இருக்க வேண்டிய ஆளுநரை ஆட்டுவித்துக், கருத்துக் கலகம் நடத்திப், பேரவையின் கண்ணியத்தைக் குலைத்து ஆட்சியைச் சிதைக்க முடியுமா எனப் பார்க்கிறது. தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாகக் கூறிய ஒருவர், ஆளுநருக்கு எதிராகப் பேசினால் விளைவுகளைச் ச்நதிக்க நேரும் எனக் கூறியதும் இதன் ஒரு பகுதியே! சட்ட மன்றத்தின் மாண்பை மதிக்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களால் ஏற்றுச் சட்டமன்றச் செயலகத்தால் அனுப்பப்படும் சட்ட வரையங்களுக்கு(மசோதாக்களுக்கு) ஒப்புதல் அளிக்காமல் காலங் கடத்துவதும் மிகவும் கண்டனைக்குரியதே.  பொதுவாகச் சட்ட வரையங்களை ஏற்காமல் நிலுவையில் வைத்திருந்தால், ஆளுநரின் ஆய்வில் இருப்பதாகச் சமாளிப்பர். ஆனால், நிலுவை என்பது மறுப்பே என்கிறார் இந்த ஆளுநர். வெளிப்படையாக மறுப்பதற்கு ஆண்மை – ஆளுமை இல்லாதவர் இங்ஙனம் உரையாற்றுகிறார். ஒன்றிய அரசின் ஆட்டம்தான் இதுவும் என்பதால் அதுவும் தான் ஆட்டுவிப்பதால் ஏற்படும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் சட்டம் அமைதியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலும் அரசின் சீரான செயற்பாட்டிற்கு உரிய பணிகளை ஆற்ற வேண்டிய கடமையிலும் இருக்கும் முதல்வர் மு.க.தாலின் பன்முறை தாமும் பிற அமைச்சர்களும் தலைவர்களும் ஊடகத்தினரும் எடுத்துரைத்தும் அடங்காத ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது பாராட்டிற்குரியதே. தனித்தீர்மானத்தை அறிமுகப்படுத்தும் பொழுது, “இரண்டாவது முறையாக ஆளுநர்பற்றித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய விரும்பத்தகாத ஒரு சூழலை, இந்த அரசு உருவாக்கவில்லை. ஆனால் ஆளுநர், அரசியல் சட்டத்தைக் கடந்து ஓர் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் இப்படியொரு தீர்மானத்தை இரண்டாவது முறையாக நான் முன்மொழிய வேண்டிய வலக்காரத்தை(வலுக்கட்டாயத்தை) ஏற்படுத்தியிருக்கிறார்.” எனத் தெளிவாக முதல்வர் மு.க.தாலின் பேசியுள்ளதன் மூலம், வேறுவழியின்றியே தனித்தீர்மானம் மூலம் ஆளுநரின் செயற்பாடுகளைக் குடியரசுத்தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்த்தியுள்ளார்.

ஆளுநருக்கு எதிரான முதல் தீர்மானம் இவ்வாண்டு தொடக்கத்தில் சனவரித் திங்கள், அவர் அரசின் உரையில் சிலவற்றை விடுத்தும் சிலவற்றைச் சேர்த்தும் பேசியதற்கு எதிராக நிறைவேற்றப்பட்டது. இப்பொழுது சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் வரையங்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் உரிய காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்து இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் குறித்துப் பேசக்கூடாது என்று உள்ள விதியைத் தளர்த்துவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட பிறகே முறைப்படி முதல்வரின் தனித்தீர்மானம் கொணர்ந்து ஏற்கப்பட்டுள்ளது.

இதன் உடனடி விளைவாக மேலிடம் தளர்ந்ததால் இணையவழிச் சீட்டாட்டத்திற்கான வரையத்தில் கையொப்பமிட்டு ஏற்று அனுப்பியுள்ளார். பிற நிலுவைகளையும் ஏற்று அனுப்ப வேண்டும். அவ்வாறு ஆளுநர் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் மாநில அரசுடன் மோதும் அரசியல்வாதி ஒருவரை ஆளுநராகப் பொறுப்பில் வைப்பது தவறு என்பதை உணர்ந்து அவரைக் குடியரசுத்தலைவர் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு தமிழ்நாடு விழிப்புடன் இருப்பதை உணர்ந்து அடுத்த ஆளுநரை இணக்கமாக நடக்கச் செய்யும் வகையில் வழிகாட்டி அமர்த்த வேண்டும்.

இத்தீர்மான உரையின் பொழுது முதல்வர் தெரிவித்த குறிப்பிடத்தக்க ஒன்று, குடியரசுத்தலைவர்மீது பொறுப்பு அறவுக் (impeachment) கண்டனையைக் கொணர்ந்து பணித்தள்ளலுக்கு அரசியல்யாப்பு வழி வகுத்துள்ளதுபோல் ஆளுநர் மீதும் பொறுப்பு அறவுக் கண்டனையைக் கொணர வழி வகுக்க வேண்டும் என்பதே. ஒன்றிய ஆட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மாநில உரிமைகளைக் காப்பதற்கு இது வழி வகுக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத்தலைவர் மீதே பொறுப்பு அறவுக் கண்டனை கொணர வாய்ப்பு உள்ளபோது,  அவரால் அமர்த்தப்படுபவர் மீதும் இக்கண்டனையைக் கொணருவதில் தவறில்லை. எனவே, நாடாளு மன்ற உறுப்பினர்கள் மூலமும்  அரசு நடவடிக்கை மூலமும் ஆவன செய்து விரைவில் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

இவற்றுடன் மற்றொரு தீர்மான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் சடங்கு ஒன்று உள்ளது. அதை நீக்கப் பேரவையில் தீர்மானம் கொணர்ந்து நீக்க வேண்டும். இது குறித்து, அடிமையின் அடையாளமான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தேவையில்லை! என்று முன்பே(இதழுரை, அகர முதல நாள் 16.02.2014) எழுதியுள்ளோம். ஆங்கிலேயர் ஆட்சியில் ஆளுநர், பேரவையில் திருவடி எடுத்து வைப்பதையும் திருவாய் மலர்வதையும் போற்றும் வகையில் இச்சடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. விடுதலை நாட்டில் இதற்கு  என்ன தேவை? தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்துக் கூறுகிறது. அரசியல் யாப்பு இதனை வலியுறுத்தவில்லை. ஆளுநர் உரை என்பது அரசின் உரையே. இதனை வாசிப்பதால் அல்லது வாசிப்பதாகக் கருதுவதாக அறிவிக்கப்படுவதால் அவர் உரையாகாது. அரசு உருவாக்கும் உரைக்கு ஆளுநருக்கு எதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்? எனவே, இந்த உரையை அரசின் செயற்பாட்டு உரை என்று சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் தீர்மானம் என்பதை விலக்கி விட்டு, செயற்பாட்டு அறிக்கை ஏற்புத் தீர்மானம் என மாற்ற வேண்டும்.

நிறைவாக ஓர் ஐயம். தி.மு.க. கூட்டணி உறுப்பினர்கள் எண்ணிக்கை 159. ஆனால் அவையில் தீர்மானம் நிறைவேற்றத்தின் பொழுது 144பேர்தான் இருந்துள்ளனர். காரணம் என்ன? ஒன்றிய அரசின் காதலர்கள் யாரும் உள்ளனரா? மு.க.தாலின் கூட்டணித் தலைவர் என்ற முறையில் இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துத் தமிழ்நாட்டின் நலன் தொடர்பான எல்லா நேர்வுகளிலும் ஒருமித்த கருத்திற்கு வழியேற்படுத்த வேண்டும்.

மாண்புமிகு முதல்வரையும்  அவை முன்னவரான நீர் வளத்துறை அமைச்சரையும் பேரவை உறுப்பினர்களையும் மீண்டும் பாராட்டுகிறோம். பிற நடவடிக்கைகளையும் தொடர்ந்து விரைவில் எடுக்க வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

Followers

Blog Archive