Monday, September 16, 2019

தமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்!

நாம் போற்றும் எந்தத் தலைவராயினும் அவரிடையே குறைகள் இல்லாமல் இல்லை. வாழும் தலைவர்களாயின் குறைகளைத் திருத்த முற்படலாம். ஆனால் வாழ்ந்து மறைந்த தலைவர்களிடையே  உள்ள குறைகளை மட்டும் பட்டியலிட்டுப் பயனில்லை. அவர்கள் ஆற்றிய நல்ல செயல்களைமட்டும் போற்ற வேண்டும். 
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் (திருவள்ளுவர்,திருக்குறள் 504)
என்பதற்கேற்ப, நாம் நடுநிலையுடன் ஆராய்ந்து மிகுதியான நற்குணங்கள், நற்செய்கள், நல்லுரைகள் முதலியவை அடிப்படையிலேயே போற்ற வேண்டும். இப்படிச்சொல்வதால் அவர்களது தவறுகளை ஏற்கவேண்டும் எனப் பொருள் அல்ல. குறிப்பிட்ட கருத்து தொடரபானவற்றில் சுட்டிக் காட்டினால் போதும். அவற்றைப் பொதுவில் புறந்தள்ளுவதே நன்று.
தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களுக்கும் இது பொருந்தும். தமிழர் மன்பதையில் மூடநம்பிக்கைகள் ஒழியவும் புரட்சிகரமான எண்ணங்கள் பரவவும் தன் மதிப்பு உணர்வு ஓங்கவும் பெரியார் செய்த பெருந் தொண்டுகள் உலகம் உள்ளளவும் மறக்க இயலாதவை.
பெரியார் தம் கருத்துகளுக்கு மாறானவும் முரண்பாடானவுமாக அமைந்தவற்றையும் பேசியுள்ளார், எழுதி உள்ளார். தி.மு.க.மீது உள்ள கோபத்தால் பச்சைத் தமிழர் ஆட்சி என்ற போர்வையில் பேராயக்கட்சியான காங்.ஐ ஆதரித்தார். எனவே, தன் கொள்கைக்கு முரணாக அதன் இந்தித்திணிப்பிற்கு ஆதரவாகவும் எழுதியுள்ளார்.
.பெரியார் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் குறித்துத் தவறாகவும் எழுதி உள்ளார். தமிழறிஞர்கள் சிலரும் இதுபோல் தவறாக எழுதியுள்ளனர். தேவநேயப் பாவாணர்கூடத் தொல்காப்பியத்தை ஆரியச்சொல்லாட்சி நிறைந்தது எனவும் ஆரியத்தைப் புகுத்தியுள்ளதாகவும் எழுதினார். பேராசிரியர் சி.இலக்குவனார் அவை இடைச்செருகல்கள் எனவும் தமிழரால் எழுதப்பெற்ற தமிழ் நூல் எனவும் மெய்ப்பித்ததும் தம் கருத்தை அவர் மாற்றிக் கொண்டார். தொல்காப்பியம் ஒப்பற்ற தமிழ்நூல் என்றார். எனவே, ஒரு காலத்தில் சொன்ன தவறான கருத்து அடிப்படையில் எக்காலமும் முழுமையாக மதிப்பிடக் கூடாது.
அறிஞர் சாமி சிதம்பரனார் ‘தமிழர் தலைவர்’ என்னும் தம் நூலில், “பெரியார் வீட்டு மொழி கன்னடமாயினும், தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப்பவர். அளவு கடந்த தமிழ்ப் பற்றுள்ளவர். தமிழ் மொழியைப் பேண வேண்டுமென்பதில் அவருக்கிணை எவருமிலர்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையினர், தமிழ் இலக்கிய மன்றத்தார் ஆகியோர் அளித்த வரவேற்பிதழில், “வண்டமிழ் நாட்டு வளர்ச்சி எண்ணி உடல் வாட்டமுறினும் உள்ளம் வாட்டமுறாது. உழைத்திடும் உண்மைத் தலைவர்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆதலின் அவரது தமிழ் உணர்வையும் தமிழ்பற்றையும் உணரலாம்.
பல இடங்களில் தமிழ் மாணாக்கர் அனைவரும் தமிழ் கற்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். “நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்றுச் சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய்நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.” (குடிஅரசு 18.12.1943) எனக் கூறியுள்ளார்.
தமிழ்ப் புத்தகங்கள் தூய தமிழில் எழுதப்பட வேண்டும்” என்றும் “இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுவதாலும் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதாலும் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம்” என்றும் தமிழின் தூ்ய்மையைப் பேண வலியுறுத்தி உள்ளார்.
“தமிழ், இந்நாட்டு மக்களுக்கு எல்லாத் துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், உரிமையளிக்கக் கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்கையளிக்கக் கூடியதும் ஆகும் என்பது எனது கருத்து” என்றார் பெரியார். தமிழ் வழிபாட்டிற்கும் தமிழர் கோயில்களில் தமிழர்கள் உரிமையை மீளப்பெறவும் போராடியுள்ளார்.
இசை என்றால் அது தமிழிசைதான் எனத் தமிழிசையை வலியுறுத்திய தந்தை பெரியார், “தமிழ் இசையின் பெயராலும், பிற வகையிலும், தமிழர்களையும் தமிழ் மொழியையும் குலைப்பதற்குச் செய்யப்படும் முயற்சிகளை வேருடன் களைந்து, தமிழ் உயர்வு பெறும் வகையில் வழிகாண வேண்டும். முன் வாருங்கள் தமிழர்களே! அதற்குத் தருணம் இதுதான்.” (25.12.1943 ‘குடிஅரசு’ தலையங்கம்) எனக் குரல் கொடுத்துள்ளார்.
கால்டுவெல், வின்சுலோ, சிலேட்டர், மார்டாக்கு முதலான அறிஞர்கள் தமிழின் சிறப்பைப்பற்றிச் சொன்னவற்றை எல்லாம் மக்களிடையே பரப்பி வந்தார். தமிழைப் பழிப்பவராயின் அவ்வாறு செய்திருப்பாரா?
தந்தை பெரியார் தமிழ் இலக்கியங்கள் குறித்துத் தவறான கருத்துகளையும் கூறியுள்ளார். அவர் மொழியறிஞர் அல்லர். எனவே, அவை எல்லாம் சரி என்று எண்ணத்தக்கன அல்ல. தமிழ்நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படும் நிலை மாறி இன்று பலர் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்றால், சாதிப்பாகுபாடு இன்றி அனைவர்க்கும் கல்வி கிடைக்கிறது என்றால், இந்தியா முழுமையும் சமூகநீதி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றால், அதற்குக் காரணமான பெரியாரைப் போற்ற வேண்டும்.
இன்றைக்கு அவர் கனவுகள் முழுமையாக நனவாகவில்லை. என்றாலும் இன்றைய நிலையின் சமநீதிக்கு அவர் ஆற்றிய பணிகளை மறக்கக் கூடாது.
தமிழர்களைத் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கருத்துகளையும் தொண்டுகளையும் நாம் பாராட்டுவதும் அவரால் உதிர்க்கப்பட்ட குப்பைகளுக்கு முதன்மை அளித்து அவருக்கு இழுக்கு தேடித்தருவதும் திராவிடர்கழகத்தின் கைகளில்தான் உள்ளது.
பெரியார் உண்மையிலேயே தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் பெருமை தேடித்தந்தார் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தால்  அவற்றை மட்டும் பரப்ப வேண்டும்.
இல்லையேல் தமிழுக்கும் திருக்குறள் முதலான தமிழ் இலக்கியத்திற்கும் இழுக்கு தேடித்தந்தார் எனக் கருதினால் அத்தகைய குப்பைகளைத் தாராளமாக வெளியிடலாம். தவறான கருத்துகளைப் பரப்பினால் பெரியாரின் தமிழ்ப்பணிகள் குறித்து ஒன்றும் பாராட்டிச் சொல்லக்கூடாது.
தந்தை பெரியார் ஈ.வே.இராமசாமி அவரகள் திராவிடர் கழகத்திற்கு மட்டும் உரியவர் அல்லர். எனவே, அவரால் பயனுற்ற தலைமுறையைச் சேர்ந்த நாம் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் தன்மானத்தையும் தன்மதிப்பையும் பகுத்தறிவையும்  ஊட்டிய அவரைப் போற்றுவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 17092019

Thursday, September 5, 2019

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும்
நால் வேதங்களும் தமிழே!
3/3
மேலும் அவர், மறைமலையடிகள் தமிழ் நான்மறை குறித்து விளக்கியதை, “வேதம் என்னும் சொல்லும் தமிழ்ச்சொல்லே. இதற்கு ‘வே’ என்பது முதனிலை. ‘வேய்தல்’ என்னும் சொல்போல பல சொற்கள் இம்முதனிலையில் பல்கின. ‘வேய்தல்’ என்றால் மூடிமறைத்தல் என்ற கருத்து. இது போன்றே வே+அம் இடையில் த் எழுத்துப்பேறு கொண்டு ‘வேதம்’ என்று ஆகி மறைபொருளைக் கொண்டது’ என்னும் பொருளைத் தந்தது. நன்னெறிகளை அறிவுறுத்தியதால் அஃதொரு அறிவு நூல். இருக்கு வேதத்தில் ஒரிடத்தில் மட்டும் வரும் ‘வேதம்’ என்னும் சொல்லுக்கு அறிவுநூல் என்னும் பொருளில்லை. ‘புல் கட்டு’ என்னும் பொருளிலேயே உள்ளது. பாரதத்திற்கு முற்பட்ட பாடலாகிய முரஞ்சியூர் முடிநாகராயர் பாடலில் வரும் “நால் வேதநெறி திரியினும்” என்பதில் தமிழ் நான்மறைகளே குறிக்கப்படுகின்றன. இதற்குப் பின்னரே பாரதம் பாடிய வியாசரால் நான்காக வடமொழி வேதம் வகுக்கப்பெற்றது.”   என உரைக்கிறார்.
பாவேந்தர் பாரதிதாசன் மறைமலையடிகளாரின் தமிழ் நான்மறை கருத்தை ஏற்று,
மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல்
மற்ற மறைநூல் பின்வந்த குறைநூல்
முறையாய் இவைகட்குச் சான்றுகாட்டி
முழக்கஞ்செய்த முத்தமிழ் அறிஞனை
வாழ்த்தாத நாளில்லை வையகம்…..
என வாழ்த்திப் பாடுகிறார்.
அறிஞர் கா.சு.பிள்ளை எனப் பெறும் கா.சுப்பிரமணிய(பிள்ளை) ,  “ஆரியர்கள் தமது வேதம் மூன்று என்ற கருத்தில் ‘வேதத்திரயி’ என்று வழங்குதல் காணப்படுகிறது” (திருநான்மறை விளக்கம் – ப. எண்: 42)  என்கிறார்.
இரிக்கு முதலில் உருவானது. அடுத்து யசூர், இவற்றிற்குப் பிற்பட்ட காலத்தில் சாமம், மிகவும் பிற்பட்டகாலத்தில் அதர்வணம் உருவாகியுள்ளது. இவையே வரலாற்றாசிரியர்களும் உரையாசிரியர்களும் தரும் காலவரிசைப்பட்ட நூல் முறை. எனவே, வியாசர் தொகுத்த பொழுது நான்காகத் தொகுக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தொல்காப்பியப் பெரும்புலவர் இலக்குவனார் தொல்காப்பியர் குறிப்பிடும் மறை என்பது தமிழ் மறையே எனப் பின்வருமாறு விளக்குகிறார்:
“ ‘அந்தணர்’ என்பது வட மொழியாளர்களையும் ‘மறை’ என்பது வடமொழி வேதத்தையும்தான் குறிக்கும் என்று உரையாசிரியர்களில் சிலர் கருதியது இமயம் போன்ற பெருந்தவறாகும். தமிழ்மொழிபற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டோருள் சிலரைத் தவறான முறையில் திருப்பி விட்டதும் இத்தவறான உரையேயாம். தமிழ் நூல்களின் கால வரையறையைப் பிறழ உணரச் செய்ததும் இத் தவறேயாம். ‘அந்தணர்’ என்போர் தமிழரே! ‘மறை’ என்பது தமிழ் மறையே! பின்னர் ஆரியர்கள் இந்நாட்டிற்கு வந்த பின்னர், அவருள் சிறந்தோரையும் அவர் உயர்வெனக் கருதிய நூலையும் ‘அந்தணர்’ என்றும் ‘மறை’ என்றும் அழைத்துக் கொண்டனர். மேலைநாட்டுக் கிறித்துவர்கள் ‘ஐயர்’ என்றும் ‘சாசுதிரி’ என்றும் அழைத்துக் கொண்டனர் அன்றோ? ஆகவே, தொல்காப்பியத்தில் கூறப்படும் ‘அந்தணர்’ தமிழர்க்குரியவர் ‘மறை’ தமிழர்க்குரியது எனத் தெளிதல் வேண்டும்.” (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக்கம்  190,காவியாவின் இலக்குவம் நூல்).
ஆய்வாளர் உ.சுப்பிரமணியம்,  ‘நான்மறை எனப்படுவது தமிழ்மறைதான்’ என்று  எழுதிய நூலுக்குத்  தமிழ்ப்பல்கலைக்கழகம் பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது.
“வேதியர் சொல் மெய்யென்று மேவாதே” என உமாபதி சிவாச்சாரியார் சொல்வதன் மூலம் வேதியர் கூறும் ஆரிய வேதங்களுக்கு எதிர்ப்பு இருந்ததையும் புரிந்து கொள்ளலாம்.
செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ‘தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது?’, ‘அறத்தமிழ் வேதம்’ ஆகிய இரு நூல்களில் தமிழ் மறைகளையும் ஆரிய வேதங்களையும் வேறுபடுத்தி எழுதியுள்ளார். மேலும் அவர், “நாடோடிகளான ஆரியர்க்கு வழிபாடு செய்வது எப்படி என்று தெரியாது. ஆனால் அவன் சிந்துவெளியில் சந்தித்த தமிழனோ வேள்வி செய்திருக்கிறான். இதைச் சிந்துவெளி அகழ்வாய்வில் வெளியான ஒரு முத்திரை காட்டுகிறது.” என்கிறார்.
ஆரிய வேதங்கள் பிற்காலத்தில்தான் தொகுக்கப்பட்டன என்று பேராசிரியர் நெடுஞ்செழியன் கூறுகிறார். அவர், பொதுவுடைமைச் சிந்தனையாளரும் சிறந்த வரலாற்றறிஞருமாகிய டி.டி.கோசாம்பி தந்துள்ள ஆராய்ச்சி உரையின்படி கி.மு.14ஆம் நூற்றாண்டில் தென்னாட்டில்தான் வேதப் பாசுரங்கள் முதல் முதலாகத் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவிலும்; அவற்றைக் கொண்டுவந்து, குறிப்புரைகளும் எழுதியுள்ளனர்   என்று விளக்குகிறார்.  சாயனர்(சாயனாச்சாரி) என்பவர்தான் அவ்வாறு எழுத்து வடிவில் இரிக்கு வேதத்தை எழுதி விளக்கமும் எழுதினார். கி.பி.14, 15 ஆம் நூற்றாண்டுகளில் விசயநகரப் பேரரசு காலத்தில்,  மாதவ வித்தியாரண்யர் எழுதிய ‘சருவதர்சன சங்கிரகம்’ என்னும் நூலில் உலகாய்தனின் கூற்றாக  வேதங்கள் மூன்று எனக் குறிக்கிறார்.
எனவே, 14 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் நால்வேதங்களாகக் குறிக்கப்பட்டவற்றை எங்ஙனம் அதற்கு 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்கள் கூறியிருக்கும்?
தமிழ்நாட்டிற்குத் தொடக்கத்தில் வந்த ஆரியப் புலவர்கள் தமிழை மதித்தனர் தமிழ்ப்புலவர்களைப் போற்றினர். தமிழ் நூல்களைக் கற்றுச் சிறந்தனர்.  ஆனால், பின்னர் வந்தவர்கள்  தங்கள் மொழியைத் தேவ மொழி என்றும் தமிழை இழிவு(நீச)மொழி என்றும் சொல்லினர். தமிழ் நூல்கள் ஆரிய நூல்களைப் பார்த்து எழுதியதாகவும் ஆரியநூல்களே தொன்மையானவை என்றும் பொய்யுரை பரப்பினர். தமிழில் உயர்வானவர்களைக் குறிக்கும் ஐயர்(தலைவர்), அந்தணர்(அறவோர்), பார்ப்பார்(ஆராய்ச்சியாளர்) முதலான சொற்களில் தங்களை அழைத்துக் கொண்டனர். அதுபோல் தமிழ் நூல்களைப் பார்த்துத் தங்கள் நூல்களையும் மறை என்றும் வேதம் என்றும் அழைத்தனர். ஆனால் நாளடைவில், தமிழில் பெயர்க்குழப்பம் ஏற்பட்டது. தமிழின் நிறைவுகள் ஆரியத்திற்கும் ஆரியத்தின் குறைகள் தமிழுக்கும் மாற்றப்பட்டன. தமிழ் நூல்கள் இயற்கையால் அழிந்தனபோக மடத்தனத்தினாலும் வஞ்சகத்தினாலும் அழிக்கப்பட்டமையால், வடக்கிருந்து வந்தவர்கள்(பிராமணர்) பயன்படுத்திய சொல்லாட்சிகள் அவர்களுக்கே உரியனபோல் கருதப்பட்டன.
மறை, வேதம் முதலியவற்றை ஆரியர்கள் தம் நூல்களையும் குறிக்கப் பயன்படுத்தினர். எனவே, தமிழில் இருவகையாகவும் இச்சொற்கள் உள்ளன. இவற்றின் உண்மையைப் புரிந்து கொள்ள இயலாமல் படிப்போர் குழம்பி,  இவை வரும் இடங்களில் எல்லாம் ஆரிய நூல்களைக் குறிப்பதாக எடுத்துக் கொண்டனர். அதனால்தான் திருக்குறள் நூலை உலகப்பொதுமறை, தமிழ் மறை, தமிழ் வேதம் என்றெல்லாம் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
சொற் பயன்பாட்டுக் கால அடிப்படையில்  நான்மறைகளும் நால் வேதங்களும் தமிழ்நூல்களே என உறுதியாகக் கூறலாம். இவற்றை ஆரியமாக எண்ணி மறுக்கவும் வேண்டா. இவற்றை நம்புவதால் ஆரியத்தை ஏற்கவும் வேண்டா.
 – இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 06.09.2019

Wednesday, September 4, 2019

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி


அகரமுதல

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும்

நான் மறை நூல்களும்

நால் வேதங்களும் தமிழே!

2/3

குற்றமற்ற அறவழிப்பட்டட வேதம் எனக் கூறுவது ஏன்? ஆரிய வேதம் அறிமுகமான காலக்கட்டம் அது. தமிழ் வேதங்கள் அறநெறிகளை மட்டுமே உணர்த்துவன. ஆரிய வேதங்கள் அவ்வாறல்ல. சான்றாக அதர்வண வேதம் நல்ல மந்திரங்களை உடையதாக இல்லை என்று கருதுவதைக் குறிக்கலாம்.  “அதர்வம், வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின்” என நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை யியல், நூற்பா 20, உரை) கூறியுள்ளமை இதனை உறுதி செய்கிறது. ஆரிய வேதங்கள் குற்றமுடையன. அவ்வாறு தமிழ் மறைகளை எண்ணக்கூடாது என்பதற்காகத்தான் ‘புரைதீர் நற்பனுவல்’ என்கிறார் புலவர்.
இயற்கை நெறிப்பட்ட ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே நிகழும் உறவைமட்டுமே தமிழர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் குதிரையுடன் உடலுறவு கொள்வதும் அவ்வாறு அரசிகள் உறவு கொண்டு பிள்ளைகள் பெற்றதுமான செய்திகளை ஆரிய வேதங்கள் கூறுகின்றன. இராமன் முதலானோரும் இவ்வாறு பிறந்ததாகத்தான் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. ஆடுகளுடனும் காளைமாடுகளுடனும் உடல் உறவு கொள்வதை இரிக்கு வேதம் கூறுகிறது.
உடன் பிறந்தவர்களுக்குள் – அண்ணன் தங்கை அல்லது அக்கா தம்பியர்களுக்குள் – உடல் உறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை இரிக்கு வேதம் பரிந்துரைக்கிறது. தந்தை தன் மகளுடன் உறவு கொண்டதை அதர்வ வேதம் கூறுகிறது.
கிருட்டிணன் அர்ச்சுனனின் மனைவியாகிய தன் தங்கை சுபத்திராவுடன் உறவு கொண்டதையும் அவளின் மருமகள் – அபிமன்யுவின் மனைவி – இராதையுடன் குடும்பம் நடத்தியதையும் ஆரியப்புராணங்கள் கூறுகின்றன. மற்றோர் கதைப்படி கருணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதன் மனைவியே இராதா. கிருட்டிணனுக்கு அத்தை முறை. இப்படிப் பார்த்தாலும் கிருட்டிணன், தன் அத்தை இராதாவுடன் உடலுறவு கொண்டு வாழ்ந்துள்ளான். எனவே, இத்தகைய தகாத உறவு முறைகளை ஏற்கும் ஆரிய வேதமாகத் தமிழ் மறைகளை எண்ணக் கூடாது என்பதற்காகத்தான் புலவர் நெட்டிமையார் “புரையில் நற்பனுவல நால் வேதம்” என்கிறார்.
 ஆரியர்களின் பழக்க வழக்கம், பண்பாட்டு முறைகளை அவர்கள்  அயலவர்கள் என்பதால் தமிழ்ப்புலவர்கள் குறை கூறவோ கண்டிக்கவோ இல்லை. ஆனால், அவைபோல் தமிழ்ப்பண்பாட்டை நினைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். எனவேதான் தமிழ் நால் வேதத்தைக் குற்றமற்ற நற்பனுவல் எனச் சிறப்பிக்கின்றனர்.
தமிழர் வேள்வி நடத்தியுள்ளனர். ஆனால், தமிழர் வேள்வி பூப்பலி. ஆரிய வேள்வி உயிர்ப்பலியை அடிப்படையாகக் கொண்டவை.
நெட்டிமையார் பாடலில்
யூபம் நட்ட   வியன்களம்  பலகொல்
என்னும் ஓர் அடி வருகிறது. பலரும் குறிப்பதுபோல் இது வேள்வித்தூண்களைக் குறிக்க வில்லை.
யூபம் அல்லது ஊபம் என்றால் படையணி என்றும் பொருள் உண்டு. நட்ட என்னும் சொல் நிலை நிறுத்திய என்னும் பொருளில் வரும். எனவே, படைணிகளை நிறுத்திய போரக்களங்கள் பல என்னும் குறிப்பை இவ்வடி உணர்த்துகிறது. இவற்றை ஆரிய வேள்வித் தூண்களாகத் தவறாகக் கருதிப் பொருள் விளக்குகின்றனர் சிலர்.
உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர், நான் மறை என்பதற்கு “இருக்கும் யசுரும் சமமும் அதர்வணமும் என்பாருமுளர்,  இது – பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாகச் செய்தார் ஆகலின்” என்று எழுதும் உரை மிகவும் தெளிவாகத் தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடும் நான் மறை என்பது   ஆரிய மறைகள் அல்ல என உறுதிசெய்கிறது.
 “ ‘நான்மறை முனிவர்’, ‘நால்வேத நெறி’ என வரும் சொற்றொடர்கள், பழங்காலத்திய தமிழில் தமிழ் மறைக ளிருந்தன என்பதை அறிவிப்பன. … நமது திருமுறைகளில் மறை யென்று கூறப்படுவன தமிழ் மறைகளேயாம். இது “பண்பொலி நான்மறை” என்றும் “முத்தமிழ் நான்மறை” என்றும் வரும் தமிழ் வழக்கினை ஒட்டிக் குறிப்பிடும் வகையால் அறியக் கிடக்கிறது. மாதவச் சிவஞான முனிவரும் “கொழிதமிழ் மறைப்பாடல்” என்று தமிழ் மறை உண்மையை எடுத்துக் காட்டுகின்றார். இந்தத் தமிழ் மறைகள் ஆலமர் செல்வனால் அருளிச்செய்யப் பெற்றவை என்றுதான் திருமுறைகள் பேசுகின்றன. இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் முதலிய வேதங்கள் இறைவனால் அருளிச்செய்யப் பெற்றன அல்ல. பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலங்களில் அருளிச் செய்யப் பெற்றவை.” எனக் குன்றக்குடி அடிகளார் விளக்கியுள்ளார்.
12 ஆம் நூற்றாண்டு ஔவையார்,
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். (நல்வழி 40)
எனத் தமிழ் நூல்களுடன் இணைத்துக் குறிப்பிடுவதால் புலவர்கள் போற்றுவன தமிழ் நான்மறைகளையே எனலாம்.
திருஞானசம்பந்தருக்குப் பூணூல் சடங்கு செய்த பொழுது பிராமணர்கள் நான்மறை ஓதியதாகவும் அதற்கு எதிராக சம்பந்தர் எண்ணிறந்த புனித வேதம் ஓதியதாகவும் சேக்கிழார் கூறுகிறார்(பெரியபுராணம் பாடல் 2167) .
    “வருதிறத்தன் மறைநான்கும் தந்தோம் என்று
      மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
      பொரு இறப்ப ஓதினார் புகலிவந்த
      புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்
என்பதுதான் அப்பாடல்.
ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம்.
“வைதீகப் பிராமணர்கள் நால் வேதத்திற்கு எதிரானவர்கள். எனவேதான், யசூர் வேதிகள் ஆவணி அவிட்டத்திலும், இருக்கு வேதிகள் ஆவணி அவிட்டத்திற்கு முந்தைய நாளிலும், சாம வேதிகள் விநாயகர் சதுர்த்தி நாளிலும் பூணூல் அணிகின்றனர். ஆயிரத்தில் ஒருவரே அதர்வண வேதத்தைப் பின்பற்றிப் பூணூல் அணிகின்றனர்.” என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
‘தமிழ் மாமலை’ என்னும் தலைப்பில் மறைமலையடிகள் குறித்து உரையாற்றிய கோவை இளஞ்சேரனார், “நான்மறை என்பது தமிழில் உருவான மறைகள் நான்குதான்; வேதம் எனப்பெறும் வடமொழிநூல்கள் அன்று என்பதே அடிகளாரின் ஆழ்ந்த கருத்து. . இதற்குக் காட்டிய காரணங்கள் “வடமொழி வேதங்கள் நான்கும் வேறுபட்ட சில இடங்களில் மாறுபட்ட கருத்துகளைத் தருபவை; அவை தமிழினத்திற்கு ஒவ்வாதவை; தமிழினத்தைத் தாழ்த்துபவை என்பனவற்றைத் தம் நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.” என விளக்கியுள்ளார். மேலும், இருக்குமறை தோன்றுவதற்கு முன்னரே தமிழில் நான்கு மறைகள் இருந்தன என்றும், அவற்றையே சங்க இலக்கியங்களும், தேவார திருவாசகங்களும் நான்மறை, நால்வேதம் என்றெல்லாம் குறித்தன என்றும், பின்னரே இந்நான்கைப் போன்று வடவேதமொழியில் வேதங்கள் பலரால் கூறப்பட்டுப் பின்னர் வேதவியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டன என்பதே அடிகளாரின் முடிந்த முடிபு  என்றும் சொல்லியுள்ளார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 05.09.2019

Tuesday, September 3, 2019

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன் : தினச்செய்தி

அகரமுதல

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும்
நால் வேதங்களும் தமிழே!
1/3
தமிழில் தமிழர்களால் படைக்கப்பட்ட தமிழ் மறை நூல்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்டே இருந்துள்ளன. அதுபோல் தமிழர்களால் தமிழில் படைக்கப்பட்ட தமிழ் வேதங்களும் ஆரிய வேதங்களுக்கு முன்னரே தமிழில் இருந்துள்ளன. சங்க இலக்கியங்கள் இவற்றைக் குறிப்பிட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு வந்த ஆரியர் தமிழில் சிறப்பாக உள்ள மாந்தரையும் நூல்களையும் பிறவற்றையும் குறிக்கும் தமிழ்ச்சொற்களைத் தாங்கள் உள்வாங்கிக் கொண்டு தமதுபோல் பயன்படுத்தினர். தமிழின் முந்தைய வரலாற்று நூல்கள் கடல்கோள்பட்டும் பிற வகைகளிலும் அழிந்தமையால் தமிழ் மறைகளையும் தமிழ் வேதங்களையும் குறிப்பிடும் இடங்களை ஆரியமாக எண்ணித் தவறு செய்துவிட்டனர்.
சிலர். “அதங்கோட்டாசான் நான்கு வேதங்களும் நன்கு கற்ற பிராமணர், அவருக்குத் தமிழ் எழுத்துமுறை கற்பிக்கத் தொல்காப்பியர் நூல் வகுத்தார்” எனத் தவறாகக் கூறுகின்றனர். அவ்வாறெனில் “ஆரிய அரசன் பிரகதத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு”  என அந்நூலில் குறித்துள்ளதுபோன்று ஆரியப் புலவர் அதங்கோட்டாசானுக்குத் தமிழ் எழுத்துமுறை கற்பித்த தொல்காப்பியர் என்ற குறிப்பு இடம் பெற்றிருக்கும்.
நிலந்திரு பாண்டியன் அவையில் தமிழ்ப்புலவர்களுக்குத் தலைவராக அதங்கோட்டாசான் இருந்துள்ளார். அவர் தலைமையில் தொல்காப்பியரின் தொல்காப்பியம் அரங்கேறியுள்ளது. எனவே, தலைவரான அதங்கோட்டாசான் நூல்களில் அறிவினாவும் ஐய வினாவும் எழுப்பியுள்ளார். தொல்காப்பியர் தடை விடைகள் அளித்தபின் நூல் ஏற்கப்பட்டுள்ளது  என்றுதான் பொருள். இப்பொழுது அரங்கேற்றம் இல்லை. எனினும் முனைவர் பட்டம் முதலான ஆய்வுப்பட்டங்களுக்கு ஆய்வாசிரியர் தம் நூலை அறிமுகப்படுத்தி அவையில் தொடுக்கும் வினாக்களுக்கு விடையிறுக்கும் வாய்மொழித் தேர்வு முறை உள்ளது. இதனால் ஆய்வாளர்கள்  ஆய்வரங்கத் தலைவருக்கும் பிறருக்கும் அவர் ஆய்வுப் பொருண்மை குறித்துப் பாடம் கற்பித்தார் என்று பொருள் இல்லை அல்லவா? அதுபோல்தான் தொல்காப்பியர் அக்கால அரங்கேற்ற முறையில் நூலை அவை முன் வைத்து விளக்கியுள்ளார்.
அதங்கோடு என்பது குமரி மாவட்டத்திலுள்ள ஊர். இவ்வூர், விளவங்கோடு வட்டத்தில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது(வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்ட ஊர்தான் பின்னர் விளவங்கோடு என்றாயிற்று என்பர்). தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழரே அதங்கோட்டாசான்.
மேலும், வேதம் படிப்பவர் அருகில் உட்கார்பவரின் உட்காரும் பகுதியை அறுத்தல்,  வேதம் படிப்பதைக் கேட்பவர் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றல்  முதலான கொடுந்தண்டனைகள் வழங்கப்படும் எனக் கூறி வேதம் படிக்கத் தடை விதித்த பொழுது எங்ஙனம் ஆரியரல்லாத ஒருவர், ஆரிய வேதங்களை முழுமையாகக் கற்றிருக்க முடியும்?
“அதர்வணவேதம் ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டு நான்கு வேதங்கள் என்ற எண்ணிக்கை கொண்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார்.” எனத் தொல்காப்பியப் பெரும் புலவர் பேரா.முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சியில் கூறுகிறார்.( பக்கம் 161, இலக்குவம், காவியா பதிப்பக வெளியீடு)
மேலும் அவர், “ …. ஆதலின் நான் மறை என்பது தமிழ் நான் மறையாகத்தான்இருத்தல் கூடும் என்பதில் எட்டுணையும் ஐயமின்றுஆதலின் ஆரிய மறைகள்நான்காக வகுக்கப்பட்ட பின்னரே தொல்காப்பியர் வாழ்ந்திருத்தல் வேண்டும்எனக் கருதி அவர் கி.பிஇரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்று முடிவுகட்டுதல் தவறுடைத்தாகும்”. என்கிறார். இக்கருத்து, ஆரிய நான் மறை என்பது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என ஏற்றுக் கொண்டு ஆனால் அதற்குப் பின்னர்தான் தொல்காப்பியர் காலம் என்பாருக்கான மறுப்பு. தமிழ் நான்மறைகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே இருந்துள்ளன என்பதற்கான விளக்கமும் ஆகும்.
நான்மறை என்பது ஆரிய மறைகள் எனில் அவற்றைத் தமிழர் எங்ஙனம் முழுமையாகக் கற்றிருக்க முடியும். தமிழும் வேதங்களும்(Tamil and Vedas) என்னும் வலைப்பூ, “நான் மறை என்றால்- இந்த மந்திரங்களை மூன்று சாதியினர் மட்டுமே — அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூன்று சாதியினர் மட்டுமே – அறியலாம் பிறருக்கு அறிய முடியாதபடி– அதாவது மாக்சுமுல்லர், கால்டுவெல் போன்ற மிலேச்சர்களுக்குத் தெரிவிக்கக்கூடாததாக மறைத்து வைக்கப்பட்டது.”  என்கிறது. அண்மைக் காலத்தில் கூட அயலவருக்கு மறைக்கப்படும் ஆரிய மறைகளை ஆரியர் வருகைக் காலமான ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், முற்றுமாகத் தமிழர் ஒருவர் கற்றார் என்பது எங்ஙனம் பொருந்தும்? தொல்காப்பியர் காலத்தில் இல்லாத ஆரிய நான்மறையை இருந்ததாகக் கூறுவதும் அவற்றில் நிறை தேர்ச்சி பெற்றவராக அதங்கோட்டாசான் இருந்ததாகக் கூறுவதும் அவ்வாறு கற்றதாகத் தவறாகக் கூறி அவரைப் பிராமணர் என்பதும் மிகப் பெருந் தவறுகளாகும்.
“மறைமொழி தானே மந்திரம் என்ப” என்கிறார் தொல்காப்பியர். எனவே, தமிழ் மறை என்பது சொல்லின் ஆற்றலை மறைத்துச் சொல்வது. ஆரிய மறை என்பது பிறருக்கு மறைப்பது எனப் புரிந்து கொள்ளலாம். மேலும், தமிழில் மறை என்பது துறை நூலையும் களவொழுக்கத்தையும் குறிக்கும் பல் பொருள் தரும் சொல்லாகும்.
அரைகுறை அறிவினர் தப்பும் தவறுமான செய்திகளைப் பரப்புகின்றனர் என்பதற்கு ஒரு சான்று.
ஒருவர்,
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப
இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது.  வள்ளுவர் பல வடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.” எனத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தைத் திருக்குறள் எனத் தவறாகக் கூறும் இவரின் பிற கருத்துகளும் தவறே என்பதில் ஐயமிலலை.
கலித்தொகை கடவுள் வாழ்த்து உரையில் நச்சினார்க்கினியர், “மறையாவன : தைத்திரியமும், பெளடியமும், தலவகாரமும், சாமுவேதமுமாம். இனி, வேத வியாசர் வரையறைப்படுத்திய காலத்து ஓதுகின்ற நான்கு வேதமுமாம்” என்று விளக்குகிறார். எனவே, மறையும் வேதமும் வேறு வேறு எனலாம். மேலும்,  நான்மறை இருவகைகள் உள்ளன. முதலில் கூறப்பட்ட நால்வேதம் ஒரு வகைத்தொகுப்பு; வேத வியாசர் தொகுத்த வேதம் வேறுவகைத் தொகுப்பு என்று புரிகிறது.
வியாசர் என்ற செம்படவ முனிவர் வேதங்களை இரிக்கு, யசூர், சாமம் என்று முதன்முதலில் மூவகைகளாகப் பிரித்து வகுத்துள்ளார் என்கின்றனர். அதற்கு முன்னரே தமிழில் நால் வேதம்  இருந்தமையால் இவை ஆரிய வேதங்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. புறநானூற்றில் மிகத் தொன்மைக் காலத்துப் பாடல்களும் உள்ளன. ஆதலின் வேத வியாசர் காலத்துக்கு முற்பட்ட பாடல்களும் உள்ளன.
புரையில்
நற்பனுவல் நால் வேதம்
என்கிறார் புறநானூற்றுப் புலவர் நெட்டிமையார்(பாடல் 15). குற்றமற்ற நல்லறநெறியாகிய நால் வேதம் என உரையாளர்கள் விளக்குகின்றனர்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 04.09.2019  

Followers

Blog Archive