Wednesday, August 31, 2022

ஆகமவிதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குப்பொருந்தா!– இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




வழிபாட்டு முறையில் ஆகமம்

ஆகமவிதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குப்பொருந்தா!

 தமிழர்களுக்காகத் தமிழர்களால், தமிழர்களின் கடவுள்களை வழிபடுவதற்குக் கட்டப்பட்ட கோயில்களே தமிழகக் கோயில்கள். இக்கோயில்களில் மண்ணின் மக்களுக்கும் மக்களின் மொழியாகிய தமிழுக்கும் இடமில்லை என்பவர்கள் அயல்மண்ணைச் சேர்ந்தவர்களும் அயல் இனத்தைச் சேர்ந்தவர்களுமே.

தமிழர்களால் கட்டப்பட்ட கோயில்களுக்கு உரிய விதிமுறைகளையும் வழிபாட்டு முறைகளையும் அயலார் எப்படி இயற்ற இயலும்? அவ்வாறு இயற்றப்பட்டதாகக் கூறும் விதிகள் தமிழ்மக்களை எங்ஙனம் கட்டுப்படுத்தும்? பொதுவாக ஆகமவிதிகள் சைவ சமயக்கோயில்களுக்கே உள்ளன.

சைவ ஆகமங்களாகத்  திருவடிகள் முதல் 22 உடலுறுப்புகளையும் குண்டலம், முதலிய 6 அணிமணிகளையுமே குறிக்கின்றனர். இதனை,“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்னும் திருமூலர் பாடலடியும் மெய்ப்பிக்கின்றது. அவ்வாறிருக்க, இவை எங்ஙனம், கோயில் கட்டுமான முறைகள், சிலை அமைப்பு முறைகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றைக் கூறும் விதிகளாகும்?

கட்டடக்கலையிலும் சிற்பக் கலையிலும் தெரிவித்துள்ள, தெரிவிக்க வேண்டிய கருத்துகளையெல்லாம் ஆகம வதிகள் கூறுவதாகச் சொல்வதை எங்ஙனம் ஏற்க இயலும்? காலங்காலமாகச் சமற்கிருத வழிபாடே இருந்ததாகக் கூறுவதும் நாம் நம்பிக்கொண்டிருக்கும் பொய்யான வாதமாகும்.

 திருநாவுக்கரசர் திருஅடைவு திருத்தாண்டத்தில் கோயில் வகைகளைக் குறிப்பிடுகையில்,

இருக்குஓதி மறையவர்கள் வழிபட் டேத்தும்

இளங்கோயில்

என ஒரு வகையைக் குறிப்பிடுகிறார்.

 இதில் இருக்கு வேதம் ஓதுவோருக்கு என ஓர் இளங்கோயில் கட்டித் தரப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் அதுவரை தமிழ் வழிபாட்டுக் கோயில்களே இருந்துள்ளன என அறியலாம்.  அவ்வாறு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் காலத்தில்தான் சமற்கிருத வழிபாட்டுக் கோயில் முதலில் கட்டப்பட்டுள்ளது. ஆக அதுவரை அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிபாடே இருந்தது என உணரலாம்.

பின்னரும் படிப்படியாக முதன்மைக்கோயில்களில் சமற்கிருத வழிபாடு புகுத்தப்பட்டாலும். தனி அம்மன் கோயில்களிலும் சிறுதெய்வ வழிபாட்டுக்கோயில்களிலும் தமிழ் வழிபாடே இருந்தது, இருக்கின்றது. பெண்கள் இறைவர்களாக இருந்தாலும் இழிவானவர்கள் என்பதே வேதங்கள் வலியுறுத்தும் கருத்து. எனவே, இறைவர்களாக இருந்தாலும் பெண்கள் அல்லவா? எனவே, சமற்கிருதம் பேசக்கூடாது. ஆதலின், அக்கோயில்களில் சமற்கிருத வழிபாடுகள் கிடையா.

எனவே, ஆகமவிதிகள் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கு எதிரான கருத்துகளை அகற்ற நீதிமன்றங்கள் துணை புரிய வேண்டும். தமிழ் வழிபாடும் அனைத்துப் பிரிவுத் தமிழர்களும் பூசாரியாக இருக்கும் நிலையும் என்றென்றும் இருக்க வேண்டும். அரசின் கொள்கைக்கு உண்மையான இறைநெறியன்பர்கள் துணை நிற்க வேண்டும்.

– தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்,

தலைவர், இறைநெறி மன்றம்

– இரியாசு அகமது, குமுதம் ரிப்போர்ட்டர், 02.09.2022



Thursday, August 18, 2022

பாராட்டு பெறும் காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்

8. காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லையே!

பழந்தமிழ்நாட்டில் காவலுக்கு முதன்மை அளித்தனர். எனவே, நாடு காவலில் சிறந்து இருந்தது. நாட்டு மன்னனையே காவலன் என்று மக்களும் புலவர்களும் கூறினர். மன்னர்கள் தாங்களும் மாறுவேடமிட்டும் இரவுக் காவல் புரிந்தும் காவலில் பங்கேற்றனர்.

இல்லற வாழ்க்கையிலும் காவலுக்கு முதன்மை அளித்தனர். தலைவன் தலைவியைவிட்டுப் பிரிவதை ஆறுவகையாகக் கூறியுள்ளனர். அவற்றுள் ஒன்று காவலின் பொருட்டுப் பிரிவதாகும். எனவே, இதனைக் காவற் பிரிவு என்கின்றனர்.

பதிற்றுப்பத்து முதலான சங்க இலக்கியங்களிலிருந்து காலந்தோறும் இலக்கியங்கள் தமிழ்நாட்டுக் காவல் சிறப்பைக் கூறுகின்றன. தொல்காப்பியத்திற்கு விளக்கவுரையாக அமைந்த அகப்பொருள் விளக்கத்தில் நாற்கவிராச நம்பி,

அறப்புறம் காவல் நாடு காவல்எனச்

சிறப்புஉறு காவல் திறம்இரு வகைத்தே

எனக் காவலை இருவகை உள்ளமையைக் குறிப்பிடுகிறார். முதலாவது, அறமன்றங்கள் முதலான இடங்களைப் பாதுகாப்பதற்காகத் தலைவன் மேற்கொள்ளும் பிரிவு. இரண்டாவது பகைவர்களிடமிருந்து தன் நாட்டைக் காப்பதற்காக மேற்கொள்ளும் பிரிவு என்கின்றனர். இதனை நாம் உள்நாட்டுக்காவல் என்றும் எல்லைக்காவல் என்றும் கூறலாம்.

பழந்தமிழ்நாட்டு நிலை போல் இப்போதும் தமிழ்நாட்டுக் காவல்துறை சிறப்பான நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர். உலக அளவில் தமிழ்நாட்டுக் காவல்துறை சுகாத்துலாந்து காவல்துறைக்கு இணையானது, அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். ஆனால், 2022 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 சிறந்த காவல்துறைகளில் தமிழ்நாடு காவல்துறை இல்லை. இந்திய அளவிலும் தமிழ்நாட்டுக் காவல்துறை 2019 இல் முதலிடத்தில் இருந்தது, 2020இல் ஐந்தாம் இடத்திற்குச் சறுக்கியுள்ளது.

தேசியக் குற்ற ஆவணக் கழகத்தின்(NCRB) புள்ளிவிவரப்படி 2020 இல் 430 விழுக்காடு உயர்ந்துள்ளது என்கின்றனர். தமிழ்நாட்டில் குற்ற எண்ணிக்கை மிகுதியாக இருப்பதற்கான காரணம், தலைக்கவசம் அணியாமை வழக்குகள், மகுடை(கொரானா)தொற்று விதி மீறல் வழக்குகள் என விதி மீறல் வழக்குகள் தமிழ்நாட்டில் மிகுதியாக உள்ளதே காரணம் எனத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டு முதல்வர் தமிழ்நாட்டில்  குற்ற எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இனியும் குறையும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

புள்ளிவிவரங்களை ஒதுக்கி வைத்துப் பார்த்தால் 2020இல் இந்தியாவில் காவல்துறை, பாதுகாப்பு படைகளின் பிரிவுகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய அறிந்தேற்பான ‘குடியரசுத் தலைவர் கொடி’ 2020 ஆம் ஆண்டிற்கானது தமிழ்நாடு காவல்துறைக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இதுவரை 10 ஆண்டுகள் வழங்கினாலும் தென்னிந்தியாவில் முதன்முறையாகத் தமிழ்நாடுதான் இக்கொடி ஏற்பைப் பெற்றுள்ளது. அதிலும் முன்னரே இந்திய அளவில் ஐந்தாவது வரிசையில் 2009 இல் தமிழ்நாடு பெற்றுள்ளது. (தமிழகக் காவல்துறையின் 150ஆம் ஆண்டை முன்னிட்டு இது வழங்கப்பட்டது.) அஃதாவது 13 ஆண்டுகளுக்குப் பிறகு இஃது இரண்டாம் முறையாகும்.

இத்தகைய சிறப்பைப் பெற்ற தமிழ்நாட்டரசின் காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லை என்பதே பேரவலமாகும்.

காவல்துறையின் முத்திரையில் தமிழ் இல்லை; கொடியில் தமிழ் இல்லை; குடியரசுத்தலைவர் கொடியில் தமிழக அரசின் காவல்துறையின் கொடியும் இடம் பெறுவதால் ஆங்கிலத்தில் உள்ள அக்கொடியே இதிலும் இடம் பெற்றுள்ளது; ஊர்திகளில், காவல்துறை, உலா ஊர்தி, காவல் ஊர்தி  எனக் குறிப்பது எவற்றிலும் தமிழ் இல்லை. சாலை நடுவில் வைக்கும் தடுப்புப் பலகைகள், அறிவிப்புப் பலகைகள், சாலை வழிகாட்டிகள், காவல்துறை அறிவிப்புகள் முதலியவற்றில் தமிழை இல்லாமல் ஆக்குவது ஏன்?

மேலே உள்ள படங்கள் மூலம் தமிழ்நாட்டுக் காவல்துறை ஆங்கிலத்திற்கு அடிமையாக உள்ளதையும் பிற மாநிலங்களில் தத்தம் மொழியைப் பயன்படுத்துவதையும் அறியலாம். அவர்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை உள்ளவர்கள், உப்புபோட்டு உண்பவர்கள்.

காவலர்கள் தோளில் அணியும் பதவிக் குறியீட்டில் (இரு நிலை நீங்கலாகத்) தமிழ் இல்லை; காவலர்களின் வருகைப் பதிவின் பொழுதும் அணிவகுப்பின் பொழுதும் ஆங்கிலம் மூலமே ஏவுகின்றனர். அரசு விருதுகளில் தமிழ் இல்லை.

பதவி மாறுதல் ஆணைகளில் தமிழ் இல்லை. தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் ஆங்கிலேய அதிகாரிகள்(?) உள்ளனர் போலும்! அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு(?)த்தான் ஆணை பிறப்பிக்கின்றனர் போலும்! எனவே, அவர்களுக்காக – ஆங்கிலேயர்களால்(?) ஆங்கிலேயருக்கு(?) – ஆங்கிலத்தில்  ஆணை பிறப்பிக்கின்றார்கள் என்பது தெரியாமல், நாம்தான் தமிழில் ஆணைகள் இல்லை எனச் சொல்லி வருகிறோமோ? முன் ஏர் செல்லும் வழிதானே பின்னேரும் செல்லும். எனவே, துறைத் தலைமையினரும் ஆங்கிலேயர்களுக்காகப்(!) பணியாற்றுவதால், மாறுதல் ஆணை என்று இல்லை,  பொதுவான ஆணைகள் பலவற்றிலும் தமிழைத் தேட வேண்டி உள்ளது.

தமிழ்நாட்டுக் காவல்துறையில், கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், தமிழார்வலர்கள் உள்ளனர். தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தைச், சொல்லும் படிச் செயலாற்றுவதற்கு அதிகாரிகளும் ஊழியர்களும் உள்ளனர். இருப்பினும் தமிழகக் காவல்துறையில் தமிழுக்கு இடமில்லாதது ஏன்? என்றுதான் புரியவில்லை.

இப்பொழுது முன்நிகழ்வு ஒன்று நினைவிற்கு வருகிறது. மதுரையில் சித்திரைப் பொருட்காட்சி அரங்கங்கள் ஆங்கில மயமாகக் காட்சி யளித்தன. 1991 இல் நான் மதுரை தமிழ் வள்ச்சித் துறை உதவி இயக்குநராக இருந்த பொழுது இவற்றை மாற்றுவதற்காகத் தமிழில் எழுதும் துறைகளுக்கு நால்வகையில் மும்மூன்று பரிசகளாக 12 பரிசுகள் அறிவித்தேன். சிறப்பாக எழுத வழிகாட்டவும் செய்ததால் அரங்கங்கள் முழுமையும் தமிழாயின. அவ்வாறுதான் முழுமையும் ஆங்கிலமாக இருந்த காவல் துறை அறிவிப்பிற்குப் பின்னர், முழுமையும் தமிழாக மாறியது. காவல்துறைக்கு முதல் பரிசும் கிடைத்தது. நினைத்தால் அருவினை ஆற்றும் காவல்துறை, எண்ணினால் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில்  முதலிடம் பெறலாம் அல்லவா?

எங்கெங்குக் காணினும் ஆங்கிலமடா – தமிழா

ஆங்கிலம் ஒன்றே  எண்ணமடா – எங்கும்

தவறியும் தமிழைக் காணோமடா – அந்த

ஆங்கிலம்தான் அன்னை மொழியோடா!

என்று உள்ள நிலையை மாற்றி மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின் தனிக் கருத்து செலுத்தி தமிழ்நாடு எங்கும் தமிழ்மணம் கமழச் செய்வார் என எதிர்பார்க்கலாமா?

– இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, August 9, 2022

தமிழக அரசிற்குப் பாராட்டும் சீராட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல



தமிழக அரசிற்குப் பாராட்டும் சீராட்டும்

தமிழ்நாட்டில் – மாமல்லபுரத்தில் – 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டியை அரசு சிறப்பாக நிகழ்த்தி இன்று(09/08/22) நிறைவு விழாவும் நிகழ்கிறது. போட்டியில் வாகை சூடிய அனைவருக்கும் பாராட்டுகள். பங்கேற்ற பிற போட்டியாளர்களுக்கு அடுத்து வெற்றியைச் சுவைக்க வாழ்த்துகள். சிறப்பாக நடத்திய தமிழக அரசிற்கும் வழி நடத்திச் செல்லும் மாண்புமிகு முதல்வர் மு.க.தாலினுக்கும் பாராட்டுகள்.

  ஆடி 12, 2053 / 28.07.2022  முதல் நடைபெறும் சதுரங்க விழாவிற்கு வந்துள்ள 186 நாடுகளிலிருந்து  பங்கேற்ற 1,736 பன்னாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தமிழக அரசின் விருந்தோம்பலையும் பல்வகை ஏற்பாடுகளையும் மிகவும் மகிழ்வுடன் பாராட்டி வருகின்றனர். போட்டியாளர்கள் மட்டுமல்லாமல், ஆர்க்குடே துவார்க்கோவிச்சு (Arkady Dvorkovich) தலைமையில் உள்ள பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பின்(International Chess Federation/Fide) பொறுப்பாளர்களும், இலாரண்டு பிரெயிடு(Laurent Freyd) தலைமையிலான நடுவர்களும் பிற விருந்தினர்களும் மனமாரப் பாராட்டி மகிழ்கின்றனர்.

பொதுவாக ஈராண்டு அல்லது குறைந்தது ஓராண்டு கால வாய்ப்பு எடுத்துக் கொண்டு பன்னாட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்து முடிப்பர். ஆனால் நான்கு திங்கள் கால வாய்ப்பில் அனைத்து நிலை அதிகாரிகளும் அமைப்பினரும் சிறப்பாகப் பணியாற்றிச் செம்மையாக சதுரங்க ஞாலப்போட்டியை நிகழ்த்தி வருகின்றனர்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

(திருவள்ளுவர், திருக்குறள் 517)

என்னும் தமிழ் மறைக்கேற்ப முதல்வர் மு.க.தாலின்  பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்து அவரவர்கள் தத்தம் கீழ் உள்ளவர்களில் தக்கவர்களைக் கொண்டு சிறப்பாக நடத்தி வருவதற்கு வழிகாட்டும் அவருக்கும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன், உணவு அமைச்சர், தகவல் தொழில் நுட்ப அமைச்சர் முதலான பிற அமைச்சர் பெருமக்களுக்கும் தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. தலைமையில் செயல்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்களுக்கும் தொண்டாற்றியவர்களுக்கும் அன்பு கலந்த பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.

பாராட்டும் பொழுது சீராட்டையும் தெரிவிக்க விரும்புகிறோம்.  சீராட்டு என்பது சிறு சண்டை என்னும் பொருளில் இங்கே கையாளப்பட்டுள்ளது. சிறு சண்டை என்று குறிப்பிடுவதன் காரணம், அரசின் தமிழ்ப்பணியிலுள்ள குறைபாடுகளே. இவை குறித்து “சதுரங்கப் பெருவிழாவில் வெட்டப்படும் தமிழ்!” என்னும் கட்டுரையில் தெரிவித்துள்ளோம்.

நாம் குறிப்பிட்ட பின்னர் விளம்பரங்களில் ‘சதுரங்கம்’ இடம் பெற்றது மகிழ்ச்சிதான். எனினும் அடையாள அட்டை, பதாகை, மேடை, சான்றிதழ், நினைவளிப்பு, என ஒவ்வொன்றிலுமே தமிழ் இடம் பெற்றிருக்க வேண்டும். சுற்றுலா வருவோர்க்கு வழிகாட்டுவதுபோல் விளையாட்டரங்கும் குறித்த வழிகாட்டுக் குறிப்புகளையும் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டுச் சிறப்புகளையும் தமிழிலும் ஆங்கிலம், செருமனி, பிரெஞ்சு, உருசியன் முதலான உலக மொழிகளிலும் இடம் பெறும் வகையிலும் கையேட்டை அனைவருக்கும் கொடுத்திருக்க வேண்டும். இதைக் குறிப்பதன் காரணம் அடுத்து வரும் விழாக்களிலாவது இவற்றைக் கடைப்பிடிப்பார்கள் என்ற நப்பாசையில்தான்.

இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டரசின் தமிழ்க்கடமையை மறக்கும் அவலத்தை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். முன்பே இதனைச் சுட்டிக்காட்டியிருந்தாலும் தொடர்ந்து குறிப்பிடும் வண்ணம் தொடர்ந்து ஆங்கிலமே எங்கும் கண்களில் படுவதால் நாமும் மீண்டும் சொல்ல விரும்புகிறோம்.

மேலே படம் 1 இல் உள்ளது முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கல்வெட்டு ஆங்கிலத்தில் இருப்பது. படம் 2 இல் மேடை விளம்பரம் ஆங்கிலத்தில் இருப்பது. இந்த நேரம் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது நிகழ்ந்த ஒரு செயல் நினைவிற்கு வருகிறது. விழா ஒன்றின் பொழுது ஏற்பாட்டைப் பார்வையிட வந்த கலைஞர் அவர்கள், தம் அருகில் இருந்த தமிழ்வளர்சசி பண்பாட்டுத்துறைச் செயலர் அறிஞர் ஒளவை நடராசனிடம் எதையோ சுட்டிக்காட்டி ஏதோ கூறினார். முதல்வர் கலைஞர் புறப்பட்டுச் சென்றதும் உயரதிகாரிகள் ஒளவையிடம் வந்து “முதல்வர் ஐயா என்ன சொன்னார்” என்றார்கள். “அங்கே மட்டும் ஏன் ஆங்கிலம் இருக்கிறது என்றார். அதனை மாற்றி விடுங்கள், அப்பொழுதுதான் முதல்வர் வருவார்” என்றார். உடன் அவ்வாறு செய்துவிட்டு இனி எல்லா நிகழ்ச்சிகளிலும் தமிழ்ப்பதாகைகள், தமிழ் விளம்பரங்களையே வைப்பதாகக் கூறி அவ்வாறே செய்தனர். தந்தை எட்டடி பாய்ந்தால் தான் பதினெட்டடி பாயும் முதல்வர் முனைப்புடன் செயல்பட்டால் தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் இருக்கும் அல்லவா? அழைப்பிதழ், கல்வெட்டு, மேடைப்பின்னணி, விளம்பரம் யாவும் தமிழில் இருந்தால்தான் பங்கேற்பேன் என்றால் அனைவரும் உடன் ஆவன செய்வார்கள் அல்லவா? இதனைப் பிற அமைச்சர்களும் அதிகாரிகளும் பின்பற்றித் தமிழை நிலைக்கச் செய்வார்கள் அ்ல்லவா?

“தமிழ் தமிழ்” என்று முழங்கிக் கொண்டு, தமிழை மறந்து வாழும் ஆட்சிப் பொறுப்பினர் பிற மாநிலங்களைப் பார்த்தாவது திருந்த வேண்டும் அல்லவா? இன்றைக்கு உலகமே கையில் – கைப்பேசியில் – வந்து விட்டது. அதில் பார்க்கும் செய்திகளில் பிற மாநிலங்கள், பிற நாடுகள் எங்கும் அவரவர் தாய்மொழி வீற்றிருக்கத் தமிழ்நாட்டில் ஆங்கிலம் அரசோச்சும் வேதனையான சூழலைப் பார்க்க முடிகிறது. சான்றுக்குச் சில படங்களை மேலே பார்க்கலாம்.

படம் 3. அண்மையில் மராட்டிய அரசு பதவியேற்றபொழுது அமச்சரவை பதவியேற்பு விழா என மராட்டியத்தில் அறிவிப்பு இருப்பதைப் பார்க்கலாம். இந்தி வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒன்றியப் பொறுப்பாளர்களின் மாநிலமான குசராத்தில், குசராத்தி மொழியிலேயே அறிவிப்பு, விளம்பரம் முதலானவை இருப்பதைப் படம் 4,5,6 இல் காணலாம். படம் 7 இல் கருநாடக மாநிலம் பெங்களூரில் பிற்பட்டோர் ஆணையப் பொன்விழா நிகழ்ச்சியில் கன்னடம் மட்டும் மேடைப்பின்னணியில் அழகு செய்வதைப் பார்க்கலாம். அவர்களெல்லாம் உணர்வால் தத்தம் மொழியன்பர்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுத் தொடர்புடையோர் வெட்கமும் வேதனையும் அடைய வேண்டாவா? அங்கெல்லாம் மாநில மொழி மட்டுமே வீற்றிருக்க இங்கோ ஆங்கிலம் மடடுமே அல்லது ஆங்கிலமும் இணைந்து இருக்கும்  சீரற்ற நிலை ஏன்? இதன் உச்சக் கட்டம்தான் இது தமிழ்நாட்டவருக்கான அரசு அல்ல என்று கூறுவதன் மூலம் அரசு முத்திரையை ஆங்கிலத்தில் பயன்படுத்தியிருப்பது(படம் 8).

தெய்வப்புலவர் திருவள்ளுவர், மகிழ்ச்சியால் சோர்ந்து கடமை தவறியவர்க்குப் புகழில்லை என உலகின் எப்படிப்பட்ட நூலறிஞர்களும் கூறுவதாகக் கூறுகிறார்.

எப்பால்நூ லோர்க்கும் துணிவு
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
(திருவள்ளுவர், திருக்குறள், குறள் 533)

என்கிறார் அவர்.

இதையே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்

என்கிறார்(நாடோடி மன்னன் திரைப் பாட்டு).

பல திசைகளிலிருந்தும் பல நாட்டவரிடமிருந்தும் வரும் புகழுரைகளில் மயங்கித் தமிழ்க்கடமைகளை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் இதனைக் கூறுகிறோம். தமிழக ஆட்சியில் அமரத் துடிக்கும் ஓநாய்க்கூட்டத்திலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற இவ்வாட்சி நிலைத்திருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் அன்பின் காரணமாக இதைக் கூறுகிறோம். எனவே, தமிழ் மட்டும் அறிந்தவர்கள் போல் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செயல்பட வேண்டும். தமிழ்த்தாயை மறப்பவர்கள் தத்தம் பெற்ற தாய்மார்களுக்கு இரண்டகம் செய்பவர்கள் என எண்ண வேண்டும்.

தாயை மறப்பவன் ஈனப்பிறவி

தமிழ்த்தாயை மறப்பவன் மனிதனே அல்லன்

 “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத்

தொழுது படித்திடடி பாப்பா” – பாரதியார்

நாம்தமிழைத் தொழ வேண்டா

பயன்படுத்தினால் போதும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல ஆடி 24,2053 /  09.08.2022  

Followers

Blog Archive