Saturday, September 28, 2019

திருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக! இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக!
தமிழைப் போற்றாமல் திருக்குறளையோ பிற இலக்கியங்களையோ போற்றிப் பயனில்லை. இங்கே கூறப்படுவது அனைத்து விழா ஏற்பாட்டாளருக்கும் பொதுவானது. இருப்பினும் திருக்குறள் மாநாட்டை அளவீடாகக் கொண்டு பார்ப்போம்.
கருத்தரங்கத்தில் தமிழ் தொலைக்கப்படுவதைக் காணும் பொழுது இரத்தக் கொதிப்பு வருகிறதே! ஆகச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
இவ்வமைப்பினர் நடத்தும் அழைப்பிதழ் பதாகைகள் முதலான எவற்றிலும் தமிழ் இல்லை. தமிழ் நூல் குறித்த தமிழர் நடத்தும் மாநாடுகளில் அல்லது கருத்தரங்கங்களில் தமிழ் இல்லை என்பது தலைக்குனிவு அல்லவா?
   புது தில்லியில் அதே நிலைதான். எங்கும் ஆங்கிலம்! எதிலும் ஆங்கிலம்!தான். எம் மொழியில் அல்லது எந்நாட்டில் தமிழர்கள் நிகழ்ச்சி நடத்தினாலும் அழைப்பிதழ் முதலானவற்றில் தமிழ் இடம் பெற வேண்டும். தமிழை மறந்து விட்டு ஆற்றும் பணி தமிழ்த்தொண்டாகாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அடுத்தது. பொதுவாகப் பெரும்பான்மையர் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதில்லை. இவ்வமைப்புகளின் மூலம் நடைபெறுவன திருவள்ளுவரின் திருக்குறள் நூலை உலகப் பொதுநூலாக அறிவிக்க வலியுறுத்தும் மாநாடு. இதில் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்காமல் புறக்கணிக்கலாமா? அழைப்பிதழ், பதாகை, விளம்பரம், புத்தகம், என எல்லாவற்றிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறித்தால்தானே உலகத்தவர்கள் திருவள்ளுவர் ஆண்டுச் சிறப்பையும் திருவள்ளுவர் காலத்தையும் அறிவார்கள். திருவள்ளுவர் காலம்தானே திருக்குறளின் சிறப்பை மிகுதியாக்குகிறது. உலகின் பல பகுதிகளில் மொழி தோன்றாதபொழுது – மொழி தோன்றியிருந்தாலும் இலக்கியங்கள் தோன்றாத பொழுது – இலக்கியங்கள் தோன்றியிருந்தாலும் உலக ஒருமை உணர்வை வெளிப்படுத்தாத பொழுது –  தமிழ் இலக்கியங்கள் உலக ஒருமையை உணர்த்தின. அவற்றுள் தலையாய நூல் திருக்குறள் என அப்பொழுது உணர முடியும். எனவே, நாளினைக் குறிக்க நேரும் எல்லா இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதை இயல்பான கடமையாகக் கொள்ள வேண்டும்.
பொதுவாகத் தமிழ் தொடர்பான  அனைத்துக் கருததரங்கங்களிலும் ஆங்கிலம்தான் ஒலிக்கின்றது. தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்திலோ ஆங்கில (உரோமன்) எழுத்துகள் வழியோ படிப்பவர்களுக்கு முதன்மை அளித்துத் தமிழிலேயே படித்தவர்களைப் புறந்தள்ளுவதும் சரியல்ல. ஆங்கிலக் கட்டுரை அளித்தால் தமிழிலும் மொழி பெயர்பப்பு தர வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். தவிர்க்க இயலா நேர்வுகளில் ஆங்கிலக் கட்டுரைகளுக்கெனத் தனியே ஓர் அமர்வை மட்டும் ஒதுக்கினால் போதுமானது. தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள் குறித்த வெவ்வேறு மொழிக் கருத்தரங்க வரிசையில் ஆங்கிலத்தில் நடத்தினால் போதுமானது. தமிழில் நடைபெறுவது மட்டுமே தமிழ்க்கருத்தரங்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளர்களே! தமிழைப் புறக்கணிக்காதீர்கள்!
இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 29.09.2019

Friday, September 27, 2019

தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி
தமிழ் அகராதிகளில் பாராட்டுதலுக்குரிய முதன்மை அகராதி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. 12 மடலங்களாகவும் இவை 31 பிரிவுகளாகவும் வந்துள்ள மிகுதியான சொல் வளம் உடைய அகராதியாகும். இது தமிழின் சொல்வளத்தை உலகிற்கு உணர்த்தும் சிறப்பான அகராதியாகத் திகழ்கிறது.. இவ்வகராதி மேலும் சிறப்பாக அமைய, நிறைகாணும் முயற்சியில் சில கருத்துகளைக் காண்போம்.
சமசுகிருதச் சொல், மயக்கமாக உள்ளவற்றை அவை தமிழ்ச்சொற்களே என்பதை இப்பேரகரமுதலி விளக்குகிறது. எனினும் அயற்சொற் மடலத்தில் இடம் பெற்றுள்ள சொற்களுள் நூற்றுகணக்கான தமிழ்ச்சொற்களும் இடம் பெறுகின்றன.
இதேபோல்  அன்றாடப் பயன்பாட்டில் உள்ள சில தமிழ்ச்சொற்கள் இதில் இடம் பெறவில்லை. அவற்றை அயற்சொற்கள் எனக் கருதியிருந்தால் அயற்சொல் மடலத்தில் சேர்த்திருக்க வேண்டும். எம்மொழிச் சொற்கள் என ஐயம் ஏற்பட்டு விட்டு விட்டார்களா என்றும் தெரியவில்லை. ஐயம் இருந்திருப்பின் ஐயக் குறிப்புடன் வெளியிட்டு இருக்க வேண்டும்.
திராவிடச் சொற்களெல்லாம் தமிழ்ச்சொற்களின் திரிபு என்பதே இப்பேரகரமுதலியின் அடிப்படைக் கொள்கை. அவ்வாறிருக்க சில சொற்களைத் திராவிடச் சொற்களாகக் காட்டியிருக்க வேண்டா. தமிழ்க்குடும்ப மொழியில் நிலை பெற்றுள்ள சொற்கள் எனக் காட்டியிருக்கலாம்.
தமிழ், திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும் என்பதும் இப்பேரகராதியின் அடிப்பைக் கொள்கை(பக்.10). ஆனால், சில தமிழ்ச்சொற்கள் ஆரியச் சொற்களாகக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டுகளாகக் காண்போம்.
  • அகதி
கதி என்பதற்குப் புகலிடம் முதலான பல பொருள்கள் இதே அகராதியில் தரப்பட்டுள்ளன. (பேரகரமுதலி: ‘க’ மடலம் பக்கம் 316 ; மடலத்தின் பாகத்தைக் குறிக்காமல் எளிமை கருதி எழுத்தை இணைத்து மடலம் குறிக்கப்பெறுகிறது.) அப்படியானால் எதிர்மறை முன்னொட்டு  ‘அ’ சேர்ந்து புகலிடம் அற்றவன் என்னும் பொருள் தரும் அகதி என்பதும் தமிழ்ச்சொல்தானே! ஆனால் அயற்சொல் மடலத்தில் சமசுகிருதத்தில் இருந்து வந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. மயக்கத்திற்குக் காரணம்  வழக்கத்தில் (ங்)க என்னும் ஒலிப்பு உள்ளதே!  ஒலிப்பு மயக்கத்தால் தமிழ்ச்சொல்லை ஆரியச் சொல்லாகக் காட்டலாமா?
  • அகர்ணம்
காதின்மை, காதுகேளாமை எனப் பொருள் வழங்கிச் சமசுகிருத aghar > தமிழ் அகர்ணம் எனக் காட்டப்பட்டுள்ளது.
‘கன்னம்’ என்னும் தமிழ்ச்சொல்லின் ஒரு பொருள் ‘காது’ என்பதாகும். (‘க’ மடலம் பக்கம் 704 இல்) ‘துளையுள்ள காது’ எனப் பொருள் விளக்கப்பட்டுள்ளது. எதிர்ச்சொல் முன்னொட்டு ‘அ’ சேரும் பொழுது ‘அகன்னம்’ ஆகிறது.
(அ)கன்னம் சமசுகிருதத்தில் (அ)கர்ணம் என மருவியுள்ளது. இந்த உண்மையை உணராமல் நல்ல தமிழ்ச்சொல்லைச் சமற்கிருதமாகக் காட்டியது ஏனோ?
 அகர்முகம் 
அகரம் நெடுங்கணக்தில் முதலில் வருவது. எனவேதான் “அகரமுதல எழுத்தெல்லாம்” என்றார் திருவள்ளுவர். எழுத்துகளுக்கு முதலாக அமையும் அகரம் நாளடைவில் முதன்மையையும் முன்மையையும் குறித்தது. பொழுதின் முற்பொழுதாக – முதல் பொழுதாக அமையும் வைகறை இதன் அடிப்படையில் ‘அகரமுகம் >  ‘அகர்முகம்’ எனப்பட்டது. எனவே, வைகறையைக் குறிக்கும் ‘அகர்முகம்’ தமிழே!
  • அகரகாயம்
‘காயம்’ உடலைக் குறிக்கும். (“காயமே இது பொய்யடா” என்னும் சித்தர் பாடலை நாமறிவோம்.) உடலின் முன்பக்கம் ‘அகரகாயம்’ ஆயிற்று. எனவே, இது தமிழ்ச்சொல்லே!
  • அகரத் திரவம்
பால், தயிர் ஆகியவற்றில் முதலில் – மேல் பகுதியில் – முற்பகுதியில் அமையும் ஏடு அகரத்திரவம் ஆயிற்று. இதுவும் தமிழே!
  • அகரநீர்
 முத்துச்சிப்பியின் நடுவில் முதலில் சேரும் நீர் அகர நீர் எனலாயிற்று. இதுவும் தமிழே!
  • அகற்பன்
பேரகரமுதலியில்  கற்பனை, கற்பள், கற்பித்தல், கற்பிதம், (‘க’ மடலம் பக்கம் 671-673) எனக் கல் வேர்ச்சொல் அடிப்படையிலான பல சொற்களைக் காண இயலும்.
கற்பன் – கல்வியறிவுள்ளவன் எனக் குறிக்கப்பெற்றுள்ளது(பக்.671).  கற்பன் என்பது கற்பிக்கப்படுபவனையும் குறிப்பது. கற்பிக்கப்படுவது என்பது கல்வி கற்பிக்கப்படுவதை மட்டுமல்ல.
இவன் இத்தகையன், இத்தன்மைகள் அல்லது இத்தன்மையுடையோருக்கு ஒப்பானவன் எனக் கற்பிதப்படுவத்துவது. எனவே, இவ்வாறு ஒப்பு சொல்ல முடியாத – கற்பிக்கப்பட இயலாதவன் அகற்பன் எனப்படுகின்றான். எனவே, அகற்பன் தமிழ்ச்சொல்லே!
  • அகன்னம்
முதலிலேயே (அகர்ணம் விளக்கத்தில்) இது தமிழ்ச்சொல் என நிறுவப்பட்டுள்ளதைக் காண்க.
  • அகற்பித மரணம்
கற்பிதம் தமிழ்ச்சொல்லெனக் (‘க’ மடலம் பக்கம்  673 இல்) காணலாம்.
முதுமையின் காரணமாக அல்லது  நாள்பட்ட நோயின் காரணமாக என்றெல்லாம் சொல்ல முடியாதபடி / கற்பிதம் கூற முடியாதபடித் திடீரென்று நேரும் மரணம். எனவே, இதுவும் தமிழ்ச்சொல்லே!
  • அசங்கம்
சங்கு என்பதன் அடிப்படையில் பிறந்த சங்கம் தமிழ்ச்சொல்லே என்பதை அகர மடலத்தில் காணலாம். எனினும் ‘சங்க’, வடபுலத்திரிபு என மொழிஞாயிறு பாவாணர் கருதியதனால், சங்கம் என்னும் சொலலாட்சியைத் தவிர்த்துக் கழகம் என்னும் சொல்லையே வழங்கினார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. அஃதாவது பாவாணரின் கருத்திற்குக் காரணம் கூறப்பட்டுள்ளதே தவிரப் பொருள் விளக்கத்தில் சங்கம் என்பது தமிழ்ச்சொல் என்பது தெளிவாகிறது.
எனவே, அசங்கம் என்பதும் தமிழ்ச்சொல்லே!
  • அசங்கமம்
கூடுகை, சேருகை, புணர்ச்சி முதலான பொருள்கள் உடைய சங்கமம் தமிழ்ச்சொல்லே என்பதைப் பேரகரமுதலியே (ச மடலம் பக்கம் 37) விளக்குகிறது. அப்படியாயின் எதிர்மறை முன்னொட்டு ‘அ’ இணைந்த ‘அசங்கமம்’ தமிழ்தானே!
  • அசலகால்
 கால் என்பது காற்றைக் குறிக்கும். சலசலத்து வரும் வன்காற்று சலகால் எனப்படுகிறது. அவ்வாறில்லாமல் மென்காற்றாக வருவது அசலகால். எனவே, இதுவும் தமிழே!
  • அசலம்,
  • அசலன்
மேற்குறிப்பிட்ட அடிப்படையில் முறையே மலை, அசைவில்லாதவன் எனப்பொருள் உடைய அசலம், அசலன் ஆகிய இரண்டும் தமிழ்ச் சொற்களே என்பதில் ஐயமில்லை.
  • அசீர்த்தி
சீர் என்னும் சொல்லின் அடிப்படையில் பிறந்த சீரகம் தமிழ்ச்சொல்லே என நாம் சீ மடலம் பக்கம் 187இல் காணலாம்.
சீரகம் செரிமானத்திற்கு ஏற்றது. எனவே, சீர்த்தி என்பது செரித்தலையும் குறித்தது. ஆகவே அசீர்த்தி என்பது செரியாமையைக் குறிக்கும் நல்ல தமிழ்ச் சொல்லே!
  • அசீரகம்
குழந்தைகளின் உடலைச் சீராக வைக்க உதவுவதால் தாய்ப்பால் சீரகம் எனப்பெற்றது. தாய்ப்பால் சுரத்தல் குறைவான அல்லாத நிலை அசீரகம் ஆயிற்று. எனவே, அசீரகம் தமிழ்சச்சொல்லே!
  • அசீரணக் காய்ச்சல்
சீர் நிலையில் உடலை வைத்திருக்க உதவும் செரிமானம் சீரணம் எனப்பட்டது. செரிமானமின்மை அசீரணம். செரிமானமின்மையால் ஏற்படும் காய்ச்சல் அசீரணக் காய்ச்சல்.
   இவ்வாறு நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் அயற்சொற்களாக – ஆரியத்திரிபுகளாகத் தவறாகக் காட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டிற்காகச் சில மட்டுமே பார்த்துள்ளோம். இவை மட்டுமல்லாமல் ஒருசார் தனித்தமிழ் அன்பர்களால்  தமிழல்ல எனக் கருதப்படும் தமிழ்த்திங்கள் பெயர்கள், காரணம், பந்தம், சந்ததி முதலான பல சொற்கள் யாவும் தமிழே! இவற்றைத் தனியாக ஆராய்ந்துதான் தெரிவிக்க இயலும். எனவே, தமிழக அரசு சீராய்வு வல்லுநர்க் குழு ஒன்றை அமர்த்தி, இக் குறைபாடுகளைக் களைய வேண்டும்.  செ.சொ.பி.பேரகரமுதலி ஒரு சொல்லைத் தமிழ் என்றால் தமிழாகவும் இல்லை யென்றால் அவ்வாறாக அயற்சொல்திரிபாகவும் கருதும் பல கோடி மக்கள் உள்ளனர். எனவே, இதில் தவறுகளுக்கு இடமளிக்கக் கூடாது.
தமிழைத் தமிழாக ஏற்போம்!
தமிழையே எங்கும் பயன்படுத்துவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 22.09.2019

Monday, September 16, 2019

தமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்!

நாம் போற்றும் எந்தத் தலைவராயினும் அவரிடையே குறைகள் இல்லாமல் இல்லை. வாழும் தலைவர்களாயின் குறைகளைத் திருத்த முற்படலாம். ஆனால் வாழ்ந்து மறைந்த தலைவர்களிடையே  உள்ள குறைகளை மட்டும் பட்டியலிட்டுப் பயனில்லை. அவர்கள் ஆற்றிய நல்ல செயல்களைமட்டும் போற்ற வேண்டும். 
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் (திருவள்ளுவர்,திருக்குறள் 504)
என்பதற்கேற்ப, நாம் நடுநிலையுடன் ஆராய்ந்து மிகுதியான நற்குணங்கள், நற்செய்கள், நல்லுரைகள் முதலியவை அடிப்படையிலேயே போற்ற வேண்டும். இப்படிச்சொல்வதால் அவர்களது தவறுகளை ஏற்கவேண்டும் எனப் பொருள் அல்ல. குறிப்பிட்ட கருத்து தொடரபானவற்றில் சுட்டிக் காட்டினால் போதும். அவற்றைப் பொதுவில் புறந்தள்ளுவதே நன்று.
தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களுக்கும் இது பொருந்தும். தமிழர் மன்பதையில் மூடநம்பிக்கைகள் ஒழியவும் புரட்சிகரமான எண்ணங்கள் பரவவும் தன் மதிப்பு உணர்வு ஓங்கவும் பெரியார் செய்த பெருந் தொண்டுகள் உலகம் உள்ளளவும் மறக்க இயலாதவை.
பெரியார் தம் கருத்துகளுக்கு மாறானவும் முரண்பாடானவுமாக அமைந்தவற்றையும் பேசியுள்ளார், எழுதி உள்ளார். தி.மு.க.மீது உள்ள கோபத்தால் பச்சைத் தமிழர் ஆட்சி என்ற போர்வையில் பேராயக்கட்சியான காங்.ஐ ஆதரித்தார். எனவே, தன் கொள்கைக்கு முரணாக அதன் இந்தித்திணிப்பிற்கு ஆதரவாகவும் எழுதியுள்ளார்.
.பெரியார் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் குறித்துத் தவறாகவும் எழுதி உள்ளார். தமிழறிஞர்கள் சிலரும் இதுபோல் தவறாக எழுதியுள்ளனர். தேவநேயப் பாவாணர்கூடத் தொல்காப்பியத்தை ஆரியச்சொல்லாட்சி நிறைந்தது எனவும் ஆரியத்தைப் புகுத்தியுள்ளதாகவும் எழுதினார். பேராசிரியர் சி.இலக்குவனார் அவை இடைச்செருகல்கள் எனவும் தமிழரால் எழுதப்பெற்ற தமிழ் நூல் எனவும் மெய்ப்பித்ததும் தம் கருத்தை அவர் மாற்றிக் கொண்டார். தொல்காப்பியம் ஒப்பற்ற தமிழ்நூல் என்றார். எனவே, ஒரு காலத்தில் சொன்ன தவறான கருத்து அடிப்படையில் எக்காலமும் முழுமையாக மதிப்பிடக் கூடாது.
அறிஞர் சாமி சிதம்பரனார் ‘தமிழர் தலைவர்’ என்னும் தம் நூலில், “பெரியார் வீட்டு மொழி கன்னடமாயினும், தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப்பவர். அளவு கடந்த தமிழ்ப் பற்றுள்ளவர். தமிழ் மொழியைப் பேண வேண்டுமென்பதில் அவருக்கிணை எவருமிலர்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையினர், தமிழ் இலக்கிய மன்றத்தார் ஆகியோர் அளித்த வரவேற்பிதழில், “வண்டமிழ் நாட்டு வளர்ச்சி எண்ணி உடல் வாட்டமுறினும் உள்ளம் வாட்டமுறாது. உழைத்திடும் உண்மைத் தலைவர்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆதலின் அவரது தமிழ் உணர்வையும் தமிழ்பற்றையும் உணரலாம்.
பல இடங்களில் தமிழ் மாணாக்கர் அனைவரும் தமிழ் கற்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். “நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்றுச் சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய்நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.” (குடிஅரசு 18.12.1943) எனக் கூறியுள்ளார்.
தமிழ்ப் புத்தகங்கள் தூய தமிழில் எழுதப்பட வேண்டும்” என்றும் “இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுவதாலும் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதாலும் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம்” என்றும் தமிழின் தூ்ய்மையைப் பேண வலியுறுத்தி உள்ளார்.
“தமிழ், இந்நாட்டு மக்களுக்கு எல்லாத் துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், உரிமையளிக்கக் கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்கையளிக்கக் கூடியதும் ஆகும் என்பது எனது கருத்து” என்றார் பெரியார். தமிழ் வழிபாட்டிற்கும் தமிழர் கோயில்களில் தமிழர்கள் உரிமையை மீளப்பெறவும் போராடியுள்ளார்.
இசை என்றால் அது தமிழிசைதான் எனத் தமிழிசையை வலியுறுத்திய தந்தை பெரியார், “தமிழ் இசையின் பெயராலும், பிற வகையிலும், தமிழர்களையும் தமிழ் மொழியையும் குலைப்பதற்குச் செய்யப்படும் முயற்சிகளை வேருடன் களைந்து, தமிழ் உயர்வு பெறும் வகையில் வழிகாண வேண்டும். முன் வாருங்கள் தமிழர்களே! அதற்குத் தருணம் இதுதான்.” (25.12.1943 ‘குடிஅரசு’ தலையங்கம்) எனக் குரல் கொடுத்துள்ளார்.
கால்டுவெல், வின்சுலோ, சிலேட்டர், மார்டாக்கு முதலான அறிஞர்கள் தமிழின் சிறப்பைப்பற்றிச் சொன்னவற்றை எல்லாம் மக்களிடையே பரப்பி வந்தார். தமிழைப் பழிப்பவராயின் அவ்வாறு செய்திருப்பாரா?
தந்தை பெரியார் தமிழ் இலக்கியங்கள் குறித்துத் தவறான கருத்துகளையும் கூறியுள்ளார். அவர் மொழியறிஞர் அல்லர். எனவே, அவை எல்லாம் சரி என்று எண்ணத்தக்கன அல்ல. தமிழ்நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படும் நிலை மாறி இன்று பலர் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்றால், சாதிப்பாகுபாடு இன்றி அனைவர்க்கும் கல்வி கிடைக்கிறது என்றால், இந்தியா முழுமையும் சமூகநீதி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றால், அதற்குக் காரணமான பெரியாரைப் போற்ற வேண்டும்.
இன்றைக்கு அவர் கனவுகள் முழுமையாக நனவாகவில்லை. என்றாலும் இன்றைய நிலையின் சமநீதிக்கு அவர் ஆற்றிய பணிகளை மறக்கக் கூடாது.
தமிழர்களைத் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கருத்துகளையும் தொண்டுகளையும் நாம் பாராட்டுவதும் அவரால் உதிர்க்கப்பட்ட குப்பைகளுக்கு முதன்மை அளித்து அவருக்கு இழுக்கு தேடித்தருவதும் திராவிடர்கழகத்தின் கைகளில்தான் உள்ளது.
பெரியார் உண்மையிலேயே தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் பெருமை தேடித்தந்தார் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தால்  அவற்றை மட்டும் பரப்ப வேண்டும்.
இல்லையேல் தமிழுக்கும் திருக்குறள் முதலான தமிழ் இலக்கியத்திற்கும் இழுக்கு தேடித்தந்தார் எனக் கருதினால் அத்தகைய குப்பைகளைத் தாராளமாக வெளியிடலாம். தவறான கருத்துகளைப் பரப்பினால் பெரியாரின் தமிழ்ப்பணிகள் குறித்து ஒன்றும் பாராட்டிச் சொல்லக்கூடாது.
தந்தை பெரியார் ஈ.வே.இராமசாமி அவரகள் திராவிடர் கழகத்திற்கு மட்டும் உரியவர் அல்லர். எனவே, அவரால் பயனுற்ற தலைமுறையைச் சேர்ந்த நாம் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் தன்மானத்தையும் தன்மதிப்பையும் பகுத்தறிவையும்  ஊட்டிய அவரைப் போற்றுவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 17092019

Thursday, September 5, 2019

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும்
நால் வேதங்களும் தமிழே!
3/3
மேலும் அவர், மறைமலையடிகள் தமிழ் நான்மறை குறித்து விளக்கியதை, “வேதம் என்னும் சொல்லும் தமிழ்ச்சொல்லே. இதற்கு ‘வே’ என்பது முதனிலை. ‘வேய்தல்’ என்னும் சொல்போல பல சொற்கள் இம்முதனிலையில் பல்கின. ‘வேய்தல்’ என்றால் மூடிமறைத்தல் என்ற கருத்து. இது போன்றே வே+அம் இடையில் த் எழுத்துப்பேறு கொண்டு ‘வேதம்’ என்று ஆகி மறைபொருளைக் கொண்டது’ என்னும் பொருளைத் தந்தது. நன்னெறிகளை அறிவுறுத்தியதால் அஃதொரு அறிவு நூல். இருக்கு வேதத்தில் ஒரிடத்தில் மட்டும் வரும் ‘வேதம்’ என்னும் சொல்லுக்கு அறிவுநூல் என்னும் பொருளில்லை. ‘புல் கட்டு’ என்னும் பொருளிலேயே உள்ளது. பாரதத்திற்கு முற்பட்ட பாடலாகிய முரஞ்சியூர் முடிநாகராயர் பாடலில் வரும் “நால் வேதநெறி திரியினும்” என்பதில் தமிழ் நான்மறைகளே குறிக்கப்படுகின்றன. இதற்குப் பின்னரே பாரதம் பாடிய வியாசரால் நான்காக வடமொழி வேதம் வகுக்கப்பெற்றது.”   என உரைக்கிறார்.
பாவேந்தர் பாரதிதாசன் மறைமலையடிகளாரின் தமிழ் நான்மறை கருத்தை ஏற்று,
மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல்
மற்ற மறைநூல் பின்வந்த குறைநூல்
முறையாய் இவைகட்குச் சான்றுகாட்டி
முழக்கஞ்செய்த முத்தமிழ் அறிஞனை
வாழ்த்தாத நாளில்லை வையகம்…..
என வாழ்த்திப் பாடுகிறார்.
அறிஞர் கா.சு.பிள்ளை எனப் பெறும் கா.சுப்பிரமணிய(பிள்ளை) ,  “ஆரியர்கள் தமது வேதம் மூன்று என்ற கருத்தில் ‘வேதத்திரயி’ என்று வழங்குதல் காணப்படுகிறது” (திருநான்மறை விளக்கம் – ப. எண்: 42)  என்கிறார்.
இரிக்கு முதலில் உருவானது. அடுத்து யசூர், இவற்றிற்குப் பிற்பட்ட காலத்தில் சாமம், மிகவும் பிற்பட்டகாலத்தில் அதர்வணம் உருவாகியுள்ளது. இவையே வரலாற்றாசிரியர்களும் உரையாசிரியர்களும் தரும் காலவரிசைப்பட்ட நூல் முறை. எனவே, வியாசர் தொகுத்த பொழுது நான்காகத் தொகுக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தொல்காப்பியப் பெரும்புலவர் இலக்குவனார் தொல்காப்பியர் குறிப்பிடும் மறை என்பது தமிழ் மறையே எனப் பின்வருமாறு விளக்குகிறார்:
“ ‘அந்தணர்’ என்பது வட மொழியாளர்களையும் ‘மறை’ என்பது வடமொழி வேதத்தையும்தான் குறிக்கும் என்று உரையாசிரியர்களில் சிலர் கருதியது இமயம் போன்ற பெருந்தவறாகும். தமிழ்மொழிபற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டோருள் சிலரைத் தவறான முறையில் திருப்பி விட்டதும் இத்தவறான உரையேயாம். தமிழ் நூல்களின் கால வரையறையைப் பிறழ உணரச் செய்ததும் இத் தவறேயாம். ‘அந்தணர்’ என்போர் தமிழரே! ‘மறை’ என்பது தமிழ் மறையே! பின்னர் ஆரியர்கள் இந்நாட்டிற்கு வந்த பின்னர், அவருள் சிறந்தோரையும் அவர் உயர்வெனக் கருதிய நூலையும் ‘அந்தணர்’ என்றும் ‘மறை’ என்றும் அழைத்துக் கொண்டனர். மேலைநாட்டுக் கிறித்துவர்கள் ‘ஐயர்’ என்றும் ‘சாசுதிரி’ என்றும் அழைத்துக் கொண்டனர் அன்றோ? ஆகவே, தொல்காப்பியத்தில் கூறப்படும் ‘அந்தணர்’ தமிழர்க்குரியவர் ‘மறை’ தமிழர்க்குரியது எனத் தெளிதல் வேண்டும்.” (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக்கம்  190,காவியாவின் இலக்குவம் நூல்).
ஆய்வாளர் உ.சுப்பிரமணியம்,  ‘நான்மறை எனப்படுவது தமிழ்மறைதான்’ என்று  எழுதிய நூலுக்குத்  தமிழ்ப்பல்கலைக்கழகம் பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது.
“வேதியர் சொல் மெய்யென்று மேவாதே” என உமாபதி சிவாச்சாரியார் சொல்வதன் மூலம் வேதியர் கூறும் ஆரிய வேதங்களுக்கு எதிர்ப்பு இருந்ததையும் புரிந்து கொள்ளலாம்.
செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ‘தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது?’, ‘அறத்தமிழ் வேதம்’ ஆகிய இரு நூல்களில் தமிழ் மறைகளையும் ஆரிய வேதங்களையும் வேறுபடுத்தி எழுதியுள்ளார். மேலும் அவர், “நாடோடிகளான ஆரியர்க்கு வழிபாடு செய்வது எப்படி என்று தெரியாது. ஆனால் அவன் சிந்துவெளியில் சந்தித்த தமிழனோ வேள்வி செய்திருக்கிறான். இதைச் சிந்துவெளி அகழ்வாய்வில் வெளியான ஒரு முத்திரை காட்டுகிறது.” என்கிறார்.
ஆரிய வேதங்கள் பிற்காலத்தில்தான் தொகுக்கப்பட்டன என்று பேராசிரியர் நெடுஞ்செழியன் கூறுகிறார். அவர், பொதுவுடைமைச் சிந்தனையாளரும் சிறந்த வரலாற்றறிஞருமாகிய டி.டி.கோசாம்பி தந்துள்ள ஆராய்ச்சி உரையின்படி கி.மு.14ஆம் நூற்றாண்டில் தென்னாட்டில்தான் வேதப் பாசுரங்கள் முதல் முதலாகத் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவிலும்; அவற்றைக் கொண்டுவந்து, குறிப்புரைகளும் எழுதியுள்ளனர்   என்று விளக்குகிறார்.  சாயனர்(சாயனாச்சாரி) என்பவர்தான் அவ்வாறு எழுத்து வடிவில் இரிக்கு வேதத்தை எழுதி விளக்கமும் எழுதினார். கி.பி.14, 15 ஆம் நூற்றாண்டுகளில் விசயநகரப் பேரரசு காலத்தில்,  மாதவ வித்தியாரண்யர் எழுதிய ‘சருவதர்சன சங்கிரகம்’ என்னும் நூலில் உலகாய்தனின் கூற்றாக  வேதங்கள் மூன்று எனக் குறிக்கிறார்.
எனவே, 14 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் நால்வேதங்களாகக் குறிக்கப்பட்டவற்றை எங்ஙனம் அதற்கு 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்கள் கூறியிருக்கும்?
தமிழ்நாட்டிற்குத் தொடக்கத்தில் வந்த ஆரியப் புலவர்கள் தமிழை மதித்தனர் தமிழ்ப்புலவர்களைப் போற்றினர். தமிழ் நூல்களைக் கற்றுச் சிறந்தனர்.  ஆனால், பின்னர் வந்தவர்கள்  தங்கள் மொழியைத் தேவ மொழி என்றும் தமிழை இழிவு(நீச)மொழி என்றும் சொல்லினர். தமிழ் நூல்கள் ஆரிய நூல்களைப் பார்த்து எழுதியதாகவும் ஆரியநூல்களே தொன்மையானவை என்றும் பொய்யுரை பரப்பினர். தமிழில் உயர்வானவர்களைக் குறிக்கும் ஐயர்(தலைவர்), அந்தணர்(அறவோர்), பார்ப்பார்(ஆராய்ச்சியாளர்) முதலான சொற்களில் தங்களை அழைத்துக் கொண்டனர். அதுபோல் தமிழ் நூல்களைப் பார்த்துத் தங்கள் நூல்களையும் மறை என்றும் வேதம் என்றும் அழைத்தனர். ஆனால் நாளடைவில், தமிழில் பெயர்க்குழப்பம் ஏற்பட்டது. தமிழின் நிறைவுகள் ஆரியத்திற்கும் ஆரியத்தின் குறைகள் தமிழுக்கும் மாற்றப்பட்டன. தமிழ் நூல்கள் இயற்கையால் அழிந்தனபோக மடத்தனத்தினாலும் வஞ்சகத்தினாலும் அழிக்கப்பட்டமையால், வடக்கிருந்து வந்தவர்கள்(பிராமணர்) பயன்படுத்திய சொல்லாட்சிகள் அவர்களுக்கே உரியனபோல் கருதப்பட்டன.
மறை, வேதம் முதலியவற்றை ஆரியர்கள் தம் நூல்களையும் குறிக்கப் பயன்படுத்தினர். எனவே, தமிழில் இருவகையாகவும் இச்சொற்கள் உள்ளன. இவற்றின் உண்மையைப் புரிந்து கொள்ள இயலாமல் படிப்போர் குழம்பி,  இவை வரும் இடங்களில் எல்லாம் ஆரிய நூல்களைக் குறிப்பதாக எடுத்துக் கொண்டனர். அதனால்தான் திருக்குறள் நூலை உலகப்பொதுமறை, தமிழ் மறை, தமிழ் வேதம் என்றெல்லாம் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
சொற் பயன்பாட்டுக் கால அடிப்படையில்  நான்மறைகளும் நால் வேதங்களும் தமிழ்நூல்களே என உறுதியாகக் கூறலாம். இவற்றை ஆரியமாக எண்ணி மறுக்கவும் வேண்டா. இவற்றை நம்புவதால் ஆரியத்தை ஏற்கவும் வேண்டா.
 – இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 06.09.2019

Wednesday, September 4, 2019

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி


அகரமுதல

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும்

நான் மறை நூல்களும்

நால் வேதங்களும் தமிழே!

2/3

குற்றமற்ற அறவழிப்பட்டட வேதம் எனக் கூறுவது ஏன்? ஆரிய வேதம் அறிமுகமான காலக்கட்டம் அது. தமிழ் வேதங்கள் அறநெறிகளை மட்டுமே உணர்த்துவன. ஆரிய வேதங்கள் அவ்வாறல்ல. சான்றாக அதர்வண வேதம் நல்ல மந்திரங்களை உடையதாக இல்லை என்று கருதுவதைக் குறிக்கலாம்.  “அதர்வம், வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின்” என நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை யியல், நூற்பா 20, உரை) கூறியுள்ளமை இதனை உறுதி செய்கிறது. ஆரிய வேதங்கள் குற்றமுடையன. அவ்வாறு தமிழ் மறைகளை எண்ணக்கூடாது என்பதற்காகத்தான் ‘புரைதீர் நற்பனுவல்’ என்கிறார் புலவர்.
இயற்கை நெறிப்பட்ட ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே நிகழும் உறவைமட்டுமே தமிழர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் குதிரையுடன் உடலுறவு கொள்வதும் அவ்வாறு அரசிகள் உறவு கொண்டு பிள்ளைகள் பெற்றதுமான செய்திகளை ஆரிய வேதங்கள் கூறுகின்றன. இராமன் முதலானோரும் இவ்வாறு பிறந்ததாகத்தான் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. ஆடுகளுடனும் காளைமாடுகளுடனும் உடல் உறவு கொள்வதை இரிக்கு வேதம் கூறுகிறது.
உடன் பிறந்தவர்களுக்குள் – அண்ணன் தங்கை அல்லது அக்கா தம்பியர்களுக்குள் – உடல் உறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை இரிக்கு வேதம் பரிந்துரைக்கிறது. தந்தை தன் மகளுடன் உறவு கொண்டதை அதர்வ வேதம் கூறுகிறது.
கிருட்டிணன் அர்ச்சுனனின் மனைவியாகிய தன் தங்கை சுபத்திராவுடன் உறவு கொண்டதையும் அவளின் மருமகள் – அபிமன்யுவின் மனைவி – இராதையுடன் குடும்பம் நடத்தியதையும் ஆரியப்புராணங்கள் கூறுகின்றன. மற்றோர் கதைப்படி கருணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதன் மனைவியே இராதா. கிருட்டிணனுக்கு அத்தை முறை. இப்படிப் பார்த்தாலும் கிருட்டிணன், தன் அத்தை இராதாவுடன் உடலுறவு கொண்டு வாழ்ந்துள்ளான். எனவே, இத்தகைய தகாத உறவு முறைகளை ஏற்கும் ஆரிய வேதமாகத் தமிழ் மறைகளை எண்ணக் கூடாது என்பதற்காகத்தான் புலவர் நெட்டிமையார் “புரையில் நற்பனுவல நால் வேதம்” என்கிறார்.
 ஆரியர்களின் பழக்க வழக்கம், பண்பாட்டு முறைகளை அவர்கள்  அயலவர்கள் என்பதால் தமிழ்ப்புலவர்கள் குறை கூறவோ கண்டிக்கவோ இல்லை. ஆனால், அவைபோல் தமிழ்ப்பண்பாட்டை நினைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். எனவேதான் தமிழ் நால் வேதத்தைக் குற்றமற்ற நற்பனுவல் எனச் சிறப்பிக்கின்றனர்.
தமிழர் வேள்வி நடத்தியுள்ளனர். ஆனால், தமிழர் வேள்வி பூப்பலி. ஆரிய வேள்வி உயிர்ப்பலியை அடிப்படையாகக் கொண்டவை.
நெட்டிமையார் பாடலில்
யூபம் நட்ட   வியன்களம்  பலகொல்
என்னும் ஓர் அடி வருகிறது. பலரும் குறிப்பதுபோல் இது வேள்வித்தூண்களைக் குறிக்க வில்லை.
யூபம் அல்லது ஊபம் என்றால் படையணி என்றும் பொருள் உண்டு. நட்ட என்னும் சொல் நிலை நிறுத்திய என்னும் பொருளில் வரும். எனவே, படைணிகளை நிறுத்திய போரக்களங்கள் பல என்னும் குறிப்பை இவ்வடி உணர்த்துகிறது. இவற்றை ஆரிய வேள்வித் தூண்களாகத் தவறாகக் கருதிப் பொருள் விளக்குகின்றனர் சிலர்.
உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர், நான் மறை என்பதற்கு “இருக்கும் யசுரும் சமமும் அதர்வணமும் என்பாருமுளர்,  இது – பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாகச் செய்தார் ஆகலின்” என்று எழுதும் உரை மிகவும் தெளிவாகத் தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடும் நான் மறை என்பது   ஆரிய மறைகள் அல்ல என உறுதிசெய்கிறது.
 “ ‘நான்மறை முனிவர்’, ‘நால்வேத நெறி’ என வரும் சொற்றொடர்கள், பழங்காலத்திய தமிழில் தமிழ் மறைக ளிருந்தன என்பதை அறிவிப்பன. … நமது திருமுறைகளில் மறை யென்று கூறப்படுவன தமிழ் மறைகளேயாம். இது “பண்பொலி நான்மறை” என்றும் “முத்தமிழ் நான்மறை” என்றும் வரும் தமிழ் வழக்கினை ஒட்டிக் குறிப்பிடும் வகையால் அறியக் கிடக்கிறது. மாதவச் சிவஞான முனிவரும் “கொழிதமிழ் மறைப்பாடல்” என்று தமிழ் மறை உண்மையை எடுத்துக் காட்டுகின்றார். இந்தத் தமிழ் மறைகள் ஆலமர் செல்வனால் அருளிச்செய்யப் பெற்றவை என்றுதான் திருமுறைகள் பேசுகின்றன. இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் முதலிய வேதங்கள் இறைவனால் அருளிச்செய்யப் பெற்றன அல்ல. பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலங்களில் அருளிச் செய்யப் பெற்றவை.” எனக் குன்றக்குடி அடிகளார் விளக்கியுள்ளார்.
12 ஆம் நூற்றாண்டு ஔவையார்,
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். (நல்வழி 40)
எனத் தமிழ் நூல்களுடன் இணைத்துக் குறிப்பிடுவதால் புலவர்கள் போற்றுவன தமிழ் நான்மறைகளையே எனலாம்.
திருஞானசம்பந்தருக்குப் பூணூல் சடங்கு செய்த பொழுது பிராமணர்கள் நான்மறை ஓதியதாகவும் அதற்கு எதிராக சம்பந்தர் எண்ணிறந்த புனித வேதம் ஓதியதாகவும் சேக்கிழார் கூறுகிறார்(பெரியபுராணம் பாடல் 2167) .
    “வருதிறத்தன் மறைநான்கும் தந்தோம் என்று
      மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
      பொரு இறப்ப ஓதினார் புகலிவந்த
      புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்
என்பதுதான் அப்பாடல்.
ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம்.
“வைதீகப் பிராமணர்கள் நால் வேதத்திற்கு எதிரானவர்கள். எனவேதான், யசூர் வேதிகள் ஆவணி அவிட்டத்திலும், இருக்கு வேதிகள் ஆவணி அவிட்டத்திற்கு முந்தைய நாளிலும், சாம வேதிகள் விநாயகர் சதுர்த்தி நாளிலும் பூணூல் அணிகின்றனர். ஆயிரத்தில் ஒருவரே அதர்வண வேதத்தைப் பின்பற்றிப் பூணூல் அணிகின்றனர்.” என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
‘தமிழ் மாமலை’ என்னும் தலைப்பில் மறைமலையடிகள் குறித்து உரையாற்றிய கோவை இளஞ்சேரனார், “நான்மறை என்பது தமிழில் உருவான மறைகள் நான்குதான்; வேதம் எனப்பெறும் வடமொழிநூல்கள் அன்று என்பதே அடிகளாரின் ஆழ்ந்த கருத்து. . இதற்குக் காட்டிய காரணங்கள் “வடமொழி வேதங்கள் நான்கும் வேறுபட்ட சில இடங்களில் மாறுபட்ட கருத்துகளைத் தருபவை; அவை தமிழினத்திற்கு ஒவ்வாதவை; தமிழினத்தைத் தாழ்த்துபவை என்பனவற்றைத் தம் நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.” என விளக்கியுள்ளார். மேலும், இருக்குமறை தோன்றுவதற்கு முன்னரே தமிழில் நான்கு மறைகள் இருந்தன என்றும், அவற்றையே சங்க இலக்கியங்களும், தேவார திருவாசகங்களும் நான்மறை, நால்வேதம் என்றெல்லாம் குறித்தன என்றும், பின்னரே இந்நான்கைப் போன்று வடவேதமொழியில் வேதங்கள் பலரால் கூறப்பட்டுப் பின்னர் வேதவியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டன என்பதே அடிகளாரின் முடிந்த முடிபு  என்றும் சொல்லியுள்ளார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 05.09.2019

Followers

Blog Archive