Monday, October 31, 2016

பருமாப்பயணம் உணர்த்தும் கசப்பான உண்மைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு, பருமா உண்மைகள் - திரு. ; thalaippu_burmapayana-unmaikal_thiru

பருமாப்பயணம் உணர்த்தும் கசப்பான உண்மைகள்

 பருமா நாடானது, மியன்மா என இப்பொழுது அழைக்கப்பெறும். (சங்கக்காலத்தில் காழகம் என அழைக்கப்பெற்றது.) இங்குள்ள தமிழ்க்கல்வி வளர்ச்சி  மையத்துடன் இணைந்து நந்தனம் அமைவம் இணைந்து இலக்கியப் பெருவிழா விழாவை நடத்தியது. அமைப்பாளர் சந்திரசேகர் தமிழ்நாட்டிலிருந்தும்  ஈழத்திலிருந்தும் தமிழன்பர்களை  அழைத்துச் சென்றார். இந்நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் இருந்து இலக்கியக் குழு பங்கேற்ற முதல் இலக்கிய விழாவாகும். (இவ்விழாவில் சிறப்புரையாற்ற நான் சென்றிருந்தேன். இவ்வுரையைப் பின்னர்த் தனியே அளிக்கின்றேன்.)
 இவ்விழாவில் மேனாள் அமைச்சர் நல்லுச்சாமி, நீதியாளர் வள்ளிநாயகம், மரு. இராமேசுவரி நல்லுச்சாமி, மூத்த வழக்குரைஞர் அப்துல்கனி, கவிஞர் கீரைத்தமிழன், காஞ்சிப்பட்டு  அரிமா சங்க ஆளுநர் குமணன், ஓய்வுபெற்ற முதல்வர் சரோசினிதேவி கனகரத்தினம்(ஈழம்) முதலான பலரும் பங்கேற்றனர். மியன்மாவைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பலரும் தமிழ்க்கல்வி ஆசிரியர்களும் தமிழன்பர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.  நாங்கள் ஆங்கிலச் செல்வாக்கு அங்கே இல்லை என்பதைக் கண்டோம். நல்ல தமிழில் பருமியத் தமிழர்கள் பேசினர்.
 பருமியர்கள் பண்பாட்டுடன் நடந்து கொள்கின்றனர். போக்குவரத்துக் காவலர் ஒருவரைக்கூட நாங்கள் பார்க்கவில்லை. பாதுகாப்பு இடங்கள் தவிர, வேறு எங்கும் காவலர்களை நாங்கள் பார்க்கவில்லை. எண்ணற்ற தமிழ்க்கோயில்கள் உள்ளன. தமிழ் வழிபாடு உள்ள இசுலாமிய, கிறித்துவத் தலங்களும் தமிழ்ப்பணி யாற்றுகின்றன. இவற்றின் மூலம் உணவுக்கொடையுடன்  தமிழ் விழிப்புணர்வையும் உண்டாக்கி வருகின்றனர்.
  இவை  போன்ற பல செய்திகள் மகிழ்ச்சியை அளித்தாலும் வருத்தமான உண்மைகளையும் உணர்ந்தோம்.
  பருமிய இளைஞர்கள் தமிழில் நன்கு பேசினாலும் அவர்களுக்கிடையே பருமிய மொழியில்தான் பேசிக் கொள்கின்றனர். சிறுவர் சிறுமியருக்குத் தமிழ் தெரியவில்லை. அவர்கள் பருமியவழிக்கல்வியில் படித்து வருவதாலும் வீட்டில் பருமிய மொழியே பேசப்படுவதாலும் தமிழை அயல்மொழியாகக் கருதுகின்றனர். பருமிய ஆட்சி முறையால் தமிழ், பள்ளிகளில் இருந்து நீக்கப்பட்டமையால், தமிழ் கற்க வழியின்றிப்பருமிய மொழியைப் படித்து அதையே தாய்மொழி போல் எண்ணுகின்றனர்.
  தேமதுரத்தமிழோசையை உலகமெலாம் பரப்பாவிட்டாலும் அது வாழ்ந்த பகுதியிலாவது நிலைக்கச்செய்ய வேண்டுமல்லவா? தமிழ்நாட்டிலேயே தமிழ் மறைய இடம் கொடுக்கும் நாம் அங்கே  தமிழ் மீட்சி பெற என்ன செய்யப்போகிறோம் எனச் சிந்திக்க வேண்டும்.
  எனினும் தமிழன்பர்கள், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்க்கல்விப் பள்ளிகளை நடத்தித் தமிழுணர்வை இளந்தலைமுறையினருக்கு உணரத்தி வருகின்றனர். ‘இளந்தமிழர் இயக்கம்’ நடத்தி இளம்பெண்களும் இளைஞர்களும் பொதுப்பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றிவருவது மகிழ்ச்சியாக உள்ளது.  என்றாலும் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படாதவரை  தமிழ் உரிய வளர்ச்சியைப் பெற இயலாது.
  தமிழ்தான் நம் அடையாளம் எனத் தமிழமைப்பினர் உணர்த்தி வருகின்றனர். ஆனால் அந்த அடையாளம் அரசால் பறிக்கப்பட்டுள்ள சூழலில் அடையாளத்தை எளிதில் மீட்க இயலாது அல்லவா?
  ஏறத்தாழ 15 நூறாயிரம் தமிழர்கள் அங்கு வாழ்கின்றனர். யாரும் எக்கட்சியிலும் ஈடுபடுவதில்லை. பிற இனத்தவருடன் தோழமையுடனே வாழ்கின்றனர். எனினும் 1962 இல் அரசுப்ணிகளில் இருந்து தமிழர்கள் நீக்கப்பட்டனர். இப்பொழுது வரை அரசுப்பணிகளில் தமிழர்கள் இல்லை. அரசுப்பணிகளில் தமிழர் பணியாற்றுவது தமிழர் நலன் மேம்பட உதவும்.
 பாலைவனத்தில் சோலை அமைப்பதுபோல் தமிழ் வழக்கற்றுப்போன சூழலில் பருமியத்தமிழர்கள் தமிழ்ப்பற்றுடன் “தமிழே நம் விழி” என்பதை உணர்த்தி வருகின்றனர். எனவே,   செல்வமுள்ள தமிழர்கள் அறவாணர்களாக விளங்கி  இவற்றுக்கு உதவி வருகின்றனர்.
  ஆனால், இவர்களிடம் எப்படி யெல்லாம் தமிழை வளர்க்கலாம் எனச் சொல்லும் உரிமை நமக்கில்லை. சிறுபான்மையரிடம் தமிழ்உணர்வு இருப்பினும் கல்வியில், வணிகத்தில், கோயிலில். கலையில், ஊடகத்தில் என எல்லா இடங்களிலும் தமிழைத் துரத்திக் கொண்டிருப்பதை நாம்  அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறோம். நம்மோடு ஒப்பிடுகையில் பருமியத்தமிழர்களின் தமிழ்த்தொண்டு பாராட்டும்படியாக உள்ளது.
  எனினும் நாம், ஒரு புறம் தமிழ்நாட்டில் தமிழ்நிலைக்கப் பாடுபட வேண்டும். மறுபுறம் தமிழ் வாழாவிட்டால் தமிழரும் வாழ இயலாது என்பதை உணர்ந்து பருமாவில் தமிழை வாழச்செய்ய  வேண்டும்.
  ஆரவாரச்செயல்களை அருஞ்செயல்களாக  எண்ணாமல்,  தமிழ்நூல்கள் அளித்தல்,  தமிழாசிரியருக்குப் பயிற்சி அளித்தல் முதலான உதவிகளுடன் பருமா எனப்பட்ட மியன்மியா நாட்டில்தமிழ் மக்களுக்குத் தமிழ் ஒரு பாடமொழியாகக் கற்பிக்கப்பட உரிய வழிவகைகளை ஆராய்ந்து ஆவன செய்ய வேண்டும்.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
       பெருமை முயற்சி தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 611)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 157, ஐப்பசி 07, 2047 / அட்டோபர் 23, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo

Thursday, October 27, 2016

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70 – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைப்பு-இலக்கியம் கூறும் காவிரி, திரு ; thalaippu_thamizharkkaana-kaviri_ilakkuvanar-thiruvalluvan

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70

 51.காவிரி படப்பை பட்டினம்-தன்னுள் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் 5.151தோட்டச்சிறப்பு மிக்க காவிரி பாயும் பட்டினத்துள்
  52.கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 2.120கங்கைப் பேராற்றிலும் காவிரி நீரிலும்
53.முது நீர் காவிரி முன் துறை படுத்தல் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 25.123பழமைச்சிறப்பு மிக்க காவிரியின்துறைக்கண் நீர்ப்படுத்தல்
 54.காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 27.171(பஞ்சக்காலத்திலும்) பேணும்  காவிரிக்குரிய சோழனுக்கு
 55.காவிரி நாடனை பாடுதும் பாடுதும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 29.131 காவிரிக்குரிய சோழ நாட்டானைப் புகழ்ந்து பாடுவோம்
56.கரகம் கவிழ்த்த காவிரி பாவை – மணிமேகலை 0/12கமண்டலத்தைக் கவிழ்த்து நீர்எடுத்த காவிரிப்பாவை
 57.தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணிமேகலை 3/55குறையாத நீர்ப்பெருக்கினையுடைய காவிரியின் தந்தை போன்ற தோற்றுவாயும்
58.கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய – மணிமேகலை 5/39காவிரி கடலிற் கலக்கும்இடமாகிய பெரிய சங்க முகத்துறையில் நீராடுவதற்கு
59.சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணிமேகலை 15/48காவிரியில் நீர் சுரந்து பெருகி உயிர்களைக் காத்துப் பரந்து செல்லவும்
60.தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் – மணிமேகலை 22/40தெளிந்த நீரையுடைய காவிரியாற்றில் நீராடி வருகின்றவள்
61.காவிரி வாயிலில் சுகந்தன் சிறுவன் – மணிமேகலை 22/43 காவிரியாற்றின் கரையில் இருக்கும் பொழுது, சுகந்தன் மகன் நீ என்று சொல்ல
62.காவிரி படப்பை நல் நகர் புக்கேன் – மணிமேகலை 25/16காவிரியாற்றங்கரையின் பக்கத்தே உள்ள  நல்ல நகராகிய புகாரை யடைந்தேன்
63.காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற – மணிமேகலை 28/135
காவிரிப்பட்டின நகர் கடலால் கொள்ளப்படும் என்ற(தைக் கேட்டமையால் அங்கே போகாதிருந்தான்)
  64.    வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன் – பொய்கையார், களவழி நாற்பது, 7.3(சிவந்த கண்களையும்) வரிகளை(யும்) உடைய வரால் மீன் விளையாடும் காவிரிநாட்டிற்கு உரியவன்(செங்கட்சோழன்)
 65.    காவிரி நாடன்  – பொய்கையார், களவழி நாற்பது, 12.4காவிரிபாயும் நாட்டை உடையவன்
66.    கண் ஆர் கமழ் தெரியல் காவிரி நீர் நாடன் – பொய்கையார், களவழி நாற்பது, 24.4 கண்ணிற்கு நிறைவாகக் காட்சியளிக்கும் மாலையணிந்த காவிரி நீர் பாயும் நாட்டிற்கு உரியவன்
 67.    கரை கொன்று இழிதரும் காவிரி நாடன் – பொய்கையார், களவழி நாற்பது, 35.3 கரைகளை அழித்துச் செல்லும் காவிரி நாட்டை உடையவன்
68.    காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள் – பொய்கையார், களவழி நாற்பது, 36.2காவிரிநாட்டையுடைய செங்கட்சோழன் கழுமலம் என்னும் ஊரினைக் கைக்கொண்ட நாள்
69.    காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ – கம்பர், இராமகாதை, அயோத்தியா காண்டம், 13.1.2 காவிரிவாயும் தமிழகத்துச் சோழநாட்டைப்போல் உயர்ந்த, கழனிகள் கொண்ட அயோத்திநாட்டை நீங்கி
 70.    குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான் – கம்பர், இராமகாதை, ஆரண்ய காண்டம், 3. 46.4
(தொடரும்)
–  இலக்குவனார் திருவள்ளுவன்

முற்றுப்புள்ளி இடவேண்டிய இடங்களில் மீண்டும் புள்ளிகள் வைக்காதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு- முற்றுப்புள்ளி, தொடர்புள்ளி, இலக்குவனார் திருவள்ளுவன் ;thalaippu_mutruppulli-thodarpulli-thiru

முற்றுப்புள்ளி இடவேண்டிய இடங்களில் மீண்டும் புள்ளிகள் வைக்காதீர்!


  “இதற்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைப்போம். இனி வேறு பேசுவோம்” என்றால் இதுவரை பேசிய செய்தி்யை இனித் தொடர வேண்டா எனப் பொருள். இவ்வாறு நாம் பேச்சு வழக்கில் ஒன்றை முடிக்கக் கருதும் பொழுது முற்றுப்புள்ளி என்பதைக் கையாள்வோம். ஆனால், இப்பொழுது கூறப்போவது இதுபற்றியல்ல.
  செய்தி எழுதுநர், அழைப்பிதழ் எழுதுநர், கட்டுரையாளர், கவிஞர் என யாவரும் அழகு என்று தவறாக எண்ணியோ, இதுதான் சரி என்று பிழைபட எண்ணியோ முற்றுப்புள்ளி இட வேண்டிய இடங்களில் மேலும் இரு  புள்ளிகள் அல்லது மிகுதியான புள்ளிகள் இடுவதை வழக்கமாக வைத்துக் கொள்கின்றனர்..  (இவற்றைத் திருத்தும்பொழுது எரிச்சல் ஏற்பட்டு இரத்தக் கொதிப்பே வந்துவிடுகிறது.)
சான்றாக
அன்புடையீர்
வணக்கம்
வரும் சனிக்கிழமை
என்பதுபோல் எழுதுகின்றனர்.
  உரை நடையை மடக்கி எழுதினால் கவிதை என எண்ணும் ‘படைப்பாளிகள்' பலர் உள்ளனர். அதுபோல்,  உரை நடையை மடக்கி ஒவ்வொரு வரியிலும் புள்ளிகள் இட்டால் கவிதை என எண்ணும் ‘படைப்பாளிகள்’ பெருகிவிட்டனர். ஒவ்வொரு வரியிலும் புள்ளிகள் இடும் பழக்கம் இப்பொழுது ஒவ்வொரு சொல்லிலும் புள்ளிகள் இடும் பழக்கத்தில் விட்டுள்ளது.
  இந்தஅவலத்திற்கு முற்றுப்புள்ளி இடுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
போக்குவரவுக்குச் சாலையில் உள்ள குறியீடுகள்போலக், கற்பார்க்கு நல்ல வழிகாட்டியாக அமைவன நிறுத்தக்குறிகள் ஆகும்.
உலகுக்கெல்லாம் பொதுவாக விளங்கும் கைச்செய்கை, முகக்குறிப்பு என்பவைபோல, மொழியுணர்வுக்கு வாய்த்த அருமையன நிறுத்தற்குறிகள் என்கிறார் புலவர்மணி இரா. இளங்குமரன் (நிறுத்தற்குறி்களும் பயிற்சியும்-முன்னுரை).
  நிறுத்தற்குறிகள் குறித்த நூலையோ இணையத்தளங்களில் காணப்படும் பக்கங்களையோ படித்து இவை குறித்துத் தெரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். இங்கே நாம் முற்றுப்புள்ளி மட்டும் பார்ப்போம்.
முற்றுப்புள்ளியை,
ஒவ்வொரு சொற்றொடர் இறுதியிலும் குறிக்க வேண்டும். மேலும்,
‘17.11.1909.’ என்பதுபோல் நாளைக் குறிப்பிடுகையில் நாளின் இறுதி்யில்
 திருவள்ளுவருக்குப் பின் என்பதை நாம் ‘தி.பி’ .என்பதுபோல் குறுக்கி எழுதும்பொழுது
 ‘சி.இலக்குவனார்’ என்பதுபோல் தலைப்பெழுத்தை எழுதும் பொழுது
மு.வரதராசனார் என்பதை ‘மு.வ.’  எனப் பெயர்க்குறுக்கமாக எழுதுவது போன்ற நேர்வுகளில்
தொல்காப்பியம் என்பதை நாம் ‘தொல்.’ எனக் குறுக்கி எழுதுவதுபோல் சொற்குறுக்கத்தின் பொழுது
‘திருநகர், மதுரை மாவட்டம். என்பதுபோல் முகவரியின் இறுதியில்
‘இப்பொழுது மணி காலை 8.30’ என்பதுபோல் நேரத்தைக் குறிப்பிடுகையில் முற்றுப்புள்ளியைப் பயன்படுத்த வேண்டும்.
 முற்றுப்புள்ளி அருகே மீண்டும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தால், சொல்ல வருவது முற்றுப்பெறவில்லை, தொடர்கிறது என்பதைக் குறிக்கும்.
முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவுகள் என்றும் ஆரம்பமே”
என  ஒரு திரைப்பாடலில் வரும். (படம்: ‘சத்தம்போடாதே’. தொடர்பான தேடல்களில் வரும் பக்கங்களில் இசையமைப்பாளர் பெயர் உள்ளதே தவிரப் பாடலாசிரியர் பெயர் குறிக்கப்பெறவில்லை.)
  எனவே, முற்றுப்புள்ளி என்பது ஒரு புள்ளிதான் என்பதையும் மீண்டும் புள்ளி வைக்கும் பொழுது தொடராவதையும் புரிந்து கொள்ளலாம்.
  தொடர்ச்சியாகப் புள்ளிகள் இட்டால் அவை விடுபாட்டுக் குறிகள் ஆகும். அஃதாவது  இடையில் சொல்லோ தொடரோ விடுபட்டுள்ளதைக் குறிக்கும். முழுமையாக எழுதிவிட்டு, ஏதோ விடுபட்டதுபோலத்  தொடர்புள்ளிகள் குறிக்கத் தேவையில்லை யல்லவா?
  முற்றுப்புள்ளி அருகில் மீண்டும் புள்ளி வைக்கும்பொழுது அது முற்றுப்பெறாமல் தொடர்வதைக் குறிப்பதை உணர்ந்து இனிமேலும் முற்றுப்புள்ளியை முற்றுப்புள்ளியாகவே கையாள்க! பல புள்ளிகள் இட்டுத் தொடர்புள்ளிகளாக்கும் சிதைவுச் செயல் வேண்டா!
ilakkuvanar_thiruvalluvan+10
– இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive