Saturday, July 23, 2022

அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஆங்கில மோகம் கொண்ட அதிகாரிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல



(6. புதிய ஆட்சித்தமிழ்ச்சட்டம் தேவை தொடர்ச்சி)

தமிழுக்குச் 

செய்ய வேண்டிய ஆயிரம்

7. அதிகாரிகளின் ஆங்கில மோகத்தை அகற்றுங்கள்! அல்லது அவர்களை உயர் பொறுப்புகளில் இருந்து அகற்றுங்கள்!

[குறிப்பு: தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 7. திரைத்துறையின் தமிழ்க்கொலைகளைத் தடுத்திடுக ; 8. இதழியல் துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்திடுக! என்பனவற்றைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம். தேவை கருதி இப்பொழுது அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஆங்கில மோகம் கொண்ட அதிகாரிகள் குறித்து எழுதுகிறோம்.]

சதுரங்க ஞாலப் போட்டி 2022 இற்கு வாழ்த்துகள்!

44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி  ஆடி 12, 2053 / 28.07.2022 -ஆடி 25, 2053/ 10.08.2022 நாட்களில் நடைபெறுகிறது. சதுரங்க ஞாலப்போட்டிக்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது. நேப்பியர் பாலத்தைச் சதுரங்கக் கட்டங்களாக வண்ணந்தீட்டி விளம்பரப்படுத்துவதிலிருந்து எல்லா வகையிலும் முதல்வர் அவர்கள் அறிவுரைக்கிணங்க அதிகாரிகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

மாநில அளவு விளையாட்டாக இருந்தாலும் இந்திய அளவு விளையாட்டாக இருந்தாலும் உலக அளவு பன்னாட்டு விழாவாக இருந்தாலும் திட்டமிடல், விருந்தோம்பல், செயற்பாட்டுப் பாங்கு முதலிய பலவகையிலும் தொடர்பான ஆர்வலர்களையும் இணைத்துக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றவும் தொண்டாற்றவும் செய்கிறார்கள். அந்த வகையில் சதுரங்க ஞாலப்போட்டியையும் செவ்வனே நடத்தத் திட்டமிட்டுச் செயலாற்றி வருவதற்குத் தமிழக அரசிற்கும் அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்!

அதே நேரம் நம் உள்ளத்தை உறுத்தும் பெருங்குறையைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

தமிழ்நாட்டின் புதிய திட்டங்கள் அல்லது முழக்கங்கள் முதலியவற்றில் ஆங்கிலப் பயன்பாடு இருப்பது வேதனையாக உள்ளது. ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கிறது என்றால் தமிழக அரசு ஆங்கிலத்தைத் திணிக்கிறது. இந்தித் திணிப்பின் தீமைபோல் ஆங்கிலத்திணிப்பும் நமக்குத் தீமைதான். ஆனாலும் அதிகாரிகளின் ஆங்கில மோகம் ஆங்கிலத்திற்கு இடம் கொடுத்து அங்கு இருக்கும் அல்லது இருக்க வேண்டிய தமிழை அகற்றுகின்றனர். அதற்குச் சில சான்றுகளைக் கூறலாம். எனினும் இப்பொழுது நடைபெற உள்ள 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி 2022 தொடர்பானவை குறித்துக் காணலாம்.

பிற நாடுகளில் பன்னாட்டுப் போட்டிகள் நடைபெறும் பொழுது அதன் மூலம் தங்கள் மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டுப் பரவலுக்கும் வழி வகுக்கும் வகையில் விளம்பரம் செய்கிறார்கள். நம் நாட்டில் ஒன்றிய அரசாக இருந்தால் இந்தி, சமற்கிருதப் பரவலுக்கே முதன்மை அளிக்கிறார்கள். நாமோ ஆங்கிலத்திற்கு முதன்மை அளிக்கிறோம். அப்புறம் எதற்கு “எங்கும் தமிழ் எப்பொழுதும் தமிழ்” என்று சொல்ல வேண்டும்?

44th Fide Chess Olympiad 2022 chennai என நிகழ்வுப் பெயரையும் முத்திரை, சின்னம் முதலியவற்றையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். அல்லது ஆங்கிலம் கலந்து குறிப்பிட்டுள்ளார்கள். 

Fide என்பது  Fédération Internationale des Échecs என்னும் பிரெஞ்சுச் சொல்லின் தலைப்பெழுத்துச் சொல்லாகும். இதன் பொருள் பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பு(International Chess Federation) என்பதாகும். ஒலிம்பியாடு என்பதை ஞாலப்போட்டி எனலாம். எனவே, இதனைத் தமிழில் 44ஆவது ஞாலச் சதுரங்கப் போடடி 2022 எனலாம்.

“நம்ம  CHENNAI”  என எங்கும் விளம்பரம். இது “நம்ம சென்னை நம்ம செஸ் தம்பி” என்றும் விளம்பரப்பதாகைகள், சுவரொட்டிகள், செய்தி விளம்பரங்கள்.

சதுரங்கம் என்பது அனைவரும் அறிந்த சொல்தானே! “நமது சென்னை நமது சதுரங்கம்” என்று சொன்னால் குறைந்தா போய்விடும். சதுரங்கம் என்பதும் தமிழ்ச்சொல்தான். யானைக்குப்பி என்றும் சொல்வார்கள். வட்டாட்டம் இருப்பதுபோல் கட்டங்களில் ஆடும் இதனைக் கட்டாட்டம் என்றும் சொல்லலாம். எனினும் சதுரங்கம் என்றே பயன்படுத்தலாம். ஆகவே, 44ஆவது சதுரங்க ஞாலப்போட்டி 2022 என்றே குறிப்பிடலாம்.

ஆங்கில மொழிக்கலப்பை அடியோடு நீக்க வேண்டும். ஆங்கில மோகத்தில் இருந்து அதிகாரிகள் விடுபடவில்லையேல் அவர்களை உயர் பொறுப்புகளில் இருந்து அரசு விடுவிக்க வேண்டும். இவர்களின் ஆங்கில மோகத்தால் தமிழ்நாட்டரசிற்கு அவப்பெயர் என்பதை அரசு உணர வேண்டும்.

மாநிலத் தன்னாட்சி கேட்பது தமிழின் தனியாட்சிக்காகத்தான். தமிழ்நாட்டில் தமிழுக்கு இடந்தராமல் தேமதுரத்தமிழோசையை உலகெங்கும் எங்ஙனம் பரப்ப முடியும்?

சதுரங்க ஞாலப்போட்டிக்கான வரவேற்புப் பாடல் தமிழ் கலந்த ஆங்கிலமாக உள்ளது. இயக்கத்திலும் இசை ஆக்கத்திலும் மலையாளிகள் முதன்மை என்பதால், பாடல் இடையில் மலையாள வாடையும் உள்ளது.  பாடல் தமிழ் வரிகள் கலந்த ஆங்கிலப் பாடலாகத்தான் உள்ளது. கவிப்பேரரசர் வைரமுத்து, கவிஞர் பழனிபாரதி, கவிஞர் தாமரை போன்றவர்களிடம் பாடல் பொறுப்பை ஒப்படைத்திருந்தால் அழகு தமிழில் அருமையாகப் பாடல் தந்திருப்பார்கள். பாடலின் கீழே உலக மொழிகளில் உரை வரிகளைத் தந்திருக்கலாம. நம் நாடுதான் ஆங்கிலத்தை மூச்சாக உடையவர்களாயிற்றே! அப்புறம் எப்படித் தமிழ்ப்பாடலைக் கேட்டிருப்பார்கள்.

 அறிவிப்பு, முத்திரை, சின்னம், விளம்பரம், சட்டை முழக்கம், பாடல் என அனைத்திலும் தமிழை மறந்து செயல்படுவதைத் தடுக்க மாண்புமிகு முதல்வரும் மாண்புமிகு விளையாட்டு அமைச்சரும் மடிதற்று முந்துற வேண்டும். இந்தியத் துணைக் கண்டத்தைத் தேசிய மொழி இனங்களின் கூட்டரசாக மாற்றி, அதன் தலைமைப்பொறுப்பை மு.க.தாலின் ஏற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அத்தகைய எதிர்பார்ப்பிற்குரியவர் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியத்தை முன் நிறுத்த வேண்டுமல்லவா? 

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்

(திருவள்ளுவர், திருக்குறள், 954)

தமிழ்க்குடியில் பிறந்தவர்  எதைப் பெறுவதாக இருந்தாலும் தமிழைக் குன்றச்செய்யும் செயல்களிலில் ஈடுபடக் கூடாது.

– இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, July 14, 2022

அ.தி.மு.க. வழக்குகள்: நீதிபதிகளும் மனிதர்கள்தாமே!- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




அ.தி.மு.க. வழக்குகள்: நீதிபதிகளும் மனிதர்கள்தாமே!

நீதிமன்றத் தீர்ப்புகள் கருத்தாய்விற்கு உட்பட்டனவே. அவ்வாறு கூறும் பொழுது தீர்ப்புரையை அலுவல் பணியாகக் கருதவேண்டுமே தவிரத் தனிவாழ்வுடன் இணைத்துச் சொல்லக் கூடாது. அஃதாவது தீர்ப்பின் நிறைகுறைகளைக் கூறுகையில் தீர்ப்பாளருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கூறக்கூடாது. இந்த அடிப்படையில் எல்லாத் தீர்ப்புகளும் மேலாய்விற்கு உட்பட்டனவே. தீரப்புகள் சொல்லப்பட்ட சூழலில் தவறுகளுக்கு ஆளானவையாக இருக்கலாம். அதனால்தான் மேல்முறையீடுகள் வருகின்றன. மேல் முறையீட்டில் முந்தைய தீர்ப்புகள் தவறெனச் சுட்டிக்காட்டப்பட்டு மாற்றப்படுகின்றன. எனவே, தீர்ப்புகளை மறைவாக்குகளாகக் கருதி ஒன்றும் சொல்லக்கூடாது என்பதல்ல. அண்மையில் மக்களால் தவறாகக் கருதப்படுவன அதிமுக உட்கட்சிச்சிக்கல்கள் தொடர்பான தீர்ப்புகள் ஆகும்.

அதிமுக தலைவர்கள் பன்னீர்செல்வம் – பழனிச்சாமி வழக்குகளில் உட்கட்சிச்சிக்கலில் தலையிடவில்லை என்று சொல்லிக்கொண்டே உட்கட்சிச் சிக்கல்களில் ஒருதலைச்சார்பாக நீதித்துறை நடந்து கொள்வதாகப் பொதுமக்கள் கருதுகிறார்கள்.

தீர்ப்பளித்த நீதிபதி கிருட்டிணன் இராமசாமி, மக்கள்நாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமே மேலோங்கி இருக்கும் எனவும், பொதுக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள 2,665 பேரில் 2,100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பொதுக்குழுவைக் கூட்ட விருப்பம் தெரிவித்துள்ளதால் பொதுக்குழுவை கூட்டலாம் என்றும் சொல்லிப் பொதுக்குழுவிற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இந்தப் பொருண்மையில்(விவகாரத்தில்) ஏதேனும் மறுப்பு இருந்தால் ஏற்கெனவே இதை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை நாடின் தொடர்புடையவர்களின் கோரிக்கையை விசாரிப்பார் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. மறுப்பு இருப்பதால்தானே அதை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து நீதி கேட்கிறார்கள். பின் என்ன மறுப்பை உச்சநீதிமன்றம் எதிர்பார்க்கிறது என மக்கள் எண்ணுகிறார்கள்.

“அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், கட்சி விதிகளின்படியும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் எனவும், விதிமீறல்கள் இருந்தால் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டு, பன்னீர்செல்வம் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்” என்கின்றன ஊடகங்கள். ஒருங்கிணைப்பாளர் கூட்ட வேண்டிய கூட்டத்தைக் கையொப்பமில்லாமல் தலைமை நிருவாகி பெயரில் அழைப்பு சென்றது விதிமுறை மீறல் என்று நீதி மன்றத்தைத்தானே அணுகியுள்ளார்கள். கண் கெட்ட பின் சூரிய வணக்கமா? பிறகு எப்பொழுது நீதிமன்றத்தை நாடுவார்கள். இது நீதிமன்றம் இல்லையா? “விதிப்படி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில் எடுக்கும் முடிவிற்கு இருவரும் கட்டுப்பட வேண்டும்” என்று சொல்லியிருந்தால் சரியான தீர்ப்பாக இருந்திருக்கும். இரு தலைவர்களும் நல்லிணக்கத்திற்கு வந்திருக்கலாம். இத்தனைக் குளறுபடிகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் உறுப்பினர் எண்ணிக்கையை அப்படியே எடுத்தாண்டு பெரும்பான்மை ஆதரவு அவருக்கு இருப்பதாக நீதிபதி கூறுகிறார். அந்த எண்ணிக்கை பொய் என்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாதவர்களை வரவழைத்து உறுப்பினர்களாகக் காட்டுவதாகப் பன்னீர்செல்வம் தரப்பு கூறுகிறதே. அப்படியானால் அதை ஏன் கருதிப் பார்க்க வில்லை.

ஒருவேளை, பெரும்பான்மையர் விரும்பியிருக்கலாம். ஆனால், கூட்டத்தைக் கூட்ட வேண்டியவர்தானே முறைப்படிக் கூட்ட வேண்டும் என மறுதரப்பு கூறுவதை ஏன் கருதிப் பார்க்கவில்லை?

அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் சூலை 11ஆம் நாள் நடைபெற எந்தத் தடையும் இல்லை என்றும் அதிமுக பொதுக்குழுவை நடத்துவது அக்கட்சியின் உள்விவகாரம் என்றும் அதில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவிற்கு வேறு கட்சியினர் அல்லது அமைப்பினர் தடை கேட்டால் இவ்வாறு கூறுவது பொருத்தமாக இருக்கும். ஆனால், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தானே கேட்கின்றனர். அவ்வாறு கேட்கும் பன்னீர் செல்வம் மூன்று முறை(2001–2002,2014–2015,6/12.2016 – 16/02.2017) தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆக இருந்துள்ளார். ஒரு முறை துணை முதல்வராகவும் இருந்துள்ளார். இதனை எதிர்க்கும் பழனிச்சாமி ஒரு முறை முதல்வராக இருந்துள்ளார்.

கட்சிக்குள்ளேயே தகுதியானவரால் எதிர்ப்பு வரும்பொழுது அதைப் புறந்தள்ளாமல், கூட்டப்படும் கூட்டம் விதிப்படி சரியானதுதானா என்றுதானே ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். அரசின் கொள்கைகளில் தலையிடமாட்டோம் எனக் கூறும் நீதித்துறை அத்தகைய கொள்கை நிறைவேற்றத்தில் சட்ட மீறல் இருப்பின் தலையிட்டுத் தீர்ப்பு வழங்கவில்லையா? அதுபோல், உட்கட்சிப் பூசலில் தலையிட வேண்டா. கூட்டம் முறையானவரால் முறைப்படி கூட்டப்படுகிறதா இல்லையா என ஆராயாமல் ஒதுங்கிச் செல்வது அறமுறையாகாதே!

ஒருவர் அல்லது ஒரு குழு அல்லது ஓரமைப்பு அல்லது அரசு,  ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அல்லது உத்தரவு அல்லது வழிகாட்டு நெறிகளை மதிக்காது செயல்படுவதை நீதிமன்ற அவமதிப்பு என்கிறது சட்டம். சூன் 23 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் நீதிமன்ற அவமதிப்பு நிகழ்ந்ததாக ஒரு தரப்பு குற்றம் சாட்டும் பொழுது அவ்விசாரணைக்குத் தடை விதித்து  மேற்கொண்டு வழக்கினைத் தொடர விடாமல் செய்து சூலை 11 ஆம் நாள் பொதுக்குழுவிற்கு வழிவகுத்தது முறைதானா என மக்கள் எண்ணுகின்றனர். அதுவும் காலை 9.30இற்குப்பொதுக் குழு கூடும் பொழுது காலை 9.00 மணிக்குத் தீர்ப்பு சொல்வதன் மூலம் மேல்முறையீட்டு வாசலை நீதிமன்றம் அடைத்துவிட்டது ஒரு சாராருக்கு உதவுவதாக அமைகிறது என்பதை நீதிமன்றம் ஏன் உணரவில்லை என்பதும் மக்கள் எழுப்பும் வினாக்கள்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஒழித்துவிட்டு இடைக்காலப் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி அதில்தான் இருப்பதாகக் கூறும் பழனிச்சாமி உச்சநீதிமன்ற விண்ணப்பம், காவல்துறை முறையீடு போன்றவற்றில் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்றே குறித்துள்ளார். இதிலிருந்து சூலை 11 தீர்மானங்களும் பிற நடவடிக்கைகளும் சரியல்ல என அவரே உணர்ந்துள்ளார் எனத் தெரிகிறது. பழனிச்சாமியின் மனச்சான்றே ஏற்றுக்கொள்ளாத ஒன்றை நீதித்துறை ஏற்பதும் புதிராக உள்ளது.

நடுநிலை என்பது இரு தரப்பிலிருந்தும் ஒதுங்கி இருப்பதல்ல. உண்மையின் பக்கம் இருப்பது. எனேவ, நீதித்துறை நன்கு ஆய்ந்து உண்மையின் பக்கம் இருப்பதன் மூலம் அதிமுகவின் உட்கட்சிச்சிக்கல்கள் தீர வாய்ப்பு ஏற்படும்.

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை

(திருவள்ளுவர்,திருக்குறள்,541)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல-இதழுரை




Followers

Blog Archive