Tuesday, December 25, 2018

அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை

கட்சியினரைக் குழப்புவதற்காகவோ அப்படிப்பட்ட எண்ணத்தை விதைக்கவோ அமமுகவும் அதிமுகவும் இணைய இருப்பதாகச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் அமமுக இணைந்தால் அதிலுள்ளவர்கள் கரைந்து காணாமல் போவார்கள். அமமுகவில் அதிமுக இணைவது என்பது தாய்க்கழகத்திற்கு இழுக்கு.
  இணைந்தாலும் விரும்பா மற்றோர் அணி உருவாகலாம். ஆனால் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.
சசிகலாவையே பொதுச்செயலராக ஏற்பதாக இருந்தால் ஒரே கட்சி என்ற பெயர் கிட்டும்.
பாசகவின் அதிமுக அழிப்பு முயற்சிகள் தோல்வியுற்றதாலும் பொதுத்தேர்தல்களில் மண்ணைக் கெளவி வருவதாலும் தன் அதிகார வலிமையைக் கொண்டு அதிமுகவை இணைக்கும் நாடகத்தை அரங்கேற்ற நினைக்கிறது. அதிமுகவை அதன் போக்கிலேயே விடாமல் தன் கைப்பாவையாக ஆக்கியும் எண்ணம் ஈடேறாததால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிகரமான தோல்வியையாவது சந்திக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவின் ஈரணிகளையும் ஆட்டுவிக்க முயல்கிறது.
முந்தைய நொடி வரை எதிர்த்தவரை அடுத்த நொடியில் ஆதரிப்பதும் ஆதரித்தவரை எதிர்ப்பதும் அரசியலில் வெட்கங் கெட்ட நடைமுறை ஆகிவிட்டது. எனவே, இன்னின்னாரைத் தவிர பிறரைச் சேர்த்துக் கொள்வோம் என்பதுபோன்ற பேச்சுகள் இணைப்பின் பொழுது காணாமல் போய்விடும். ஆனால் அவ்வாறு இணைப்பது என்பது எதிர்பார்த்த பயன் தராது.
செயலலிதா மறைந்ததும் கட்சியில் இயல்பான பிளவு ஏற்படவில்லை. பாசகவின் பொம்மலாட்டத்தால்தான் பன்னீரின் ‘தருமயுத்தம்’ என்னும் கேலிக்கூத்து, சசிகலா பக்கம் இருந்த ஒவ்வொரு பதவியாளர்களும் எடப்பாடிக்கு ஆதரவாகக் கட்டாயமாகக் கொண்ட கட்டாயச் சூழல் ஏற்பட்டன. ஆனால், பாசகவின் நோக்கம் நிறைவேறாததால் தினகரன் பக்கம் மட்டும் சாய்ந்தால் தோல்வி வெளிப்படையாகத் தெரிந்து விடும் என்பதால் இணைப்பு நாடகம் நடத்த முயல்கிறது. தினகரன் திமுக உள்ள பேராயக்கட்சிக் /காங்.கட்சிக் கூட்டணியில் சேர முடியாது என்பதால் பாசக கூட்டணியில் சேர்த்து விடலாம் எனவும் பாசக எண்ணுகிறது.
தினகரன் பக்கம் அதிமுகவில் அவரது ஆதரவாளர்கள், இப்போதைய ஆளும் அமைப்பின்மேல் உள்ள மனக் குறைவர்கள், அதிமுகவை ஆட்டிவைக்கும் பாசகவை விரும்பாதவர்கள் உள்ளனர். பாசகவின் மேல் வெறுப்பு கொண்ட பொதுமக்களும் தினகரனை ஆதரிக்கின்றனர். 
கட்சி இணைந்த பின்னர் இதே ஆட்சி தொடர்ந்தது எனில், தினகரன் எதிர்த்த திட்டங்களைத் தொடருவார்களா? அப்படியாயின் இதனை எப்படி ஏற்க முடியும்? இல்லை எதிர்த்த திட்டங்கள் கைவிடப்படுமா? அப்படியானால் அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்திய அரசு எப்படி தொடரலாம்.
அதிமுக ஆட்சி மேல் மக்களில் ஒரு பகுதியினர் வெறுப்புடன் உள்ளது அனைவரும் அறிந்ததே. இத்தகையோர் தினகரன் பக்கம் உள்ளனர். ஆனால், கட்சிகள் இணைந்தால் அத்தகைய பொதுமக்களில்  பெரும் பகுதியினர் திமுக பக்கமே செல்வர்.
அதிமுகவும் அமமுகவும் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுப்பதாக அறிவித்துத் தனித்தனியே போட்டியிடுவதுதான் நல்லது. திமுக கூட்டணியில் சேராத பாசக நீங்கலான கட்சிகளை இவர்களுள் யார் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு அதுவே வலிமை தரும்.
எச்சூழலிலும் பாசக பிடியில் இவ்விரு கட்சிகளும் சேராமல் இருப்பதே இவர்களுக்கும் நல்லது! தமிழ்நாட்டிற்கும் நல்லது!
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.(திருவள்ளுவர், திருக்குறள் 508)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
(பின் குறிப்பு: சில திங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரை. இன்றைய சூழலில் பெரும் மாற்றம் இல்லை.)

Thursday, December 20, 2018

பேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


பேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை

தமிழ் நாட்டின் கடேலார மாவட்டங்களில் கசா(கஜா) புயல் கடுமையாக வீசி மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துவிட்டது. சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, பாதிப்பைக் குறைத்துள்ளதாகவும் முழு வீச்சில் மறுவாழ்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு கூறி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஓரளவு பாராட்டினாலும், உரிய மறுவாழ்வுப் பணிகள் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
பேரிடர்கள் என்பது இன்று நேற்று வருவன அல்ல. காலந்தோறும் ஏற்படும் இயற்கை நிகழ்வுகள்தான். இடர்கள் வரும்பொழுது எவ்வெவ்வாறு தடுக்க வேண்டும், அவற்றிலிருந்து எவ்வாறு மக்களைக் காக்க வேண்டும், இடர்கள் தரும் அழிவுகளிலிருந்து எவ்வாறு மீட்டு மறுவாழ்வு அளித்தல் வேண்டும் எனத் திட்டமிட்டு நிலையான நடவடிக்கைக் குறிப்புகளை வரையறுக்க வேண்டும். இதற்கெனப் பேரிடர்க் கால மறுவாழ்வு அமைப்பு என நிலையான ஓர் அமைப்பையும் அரசு உருவாக்க வேண்டும்.
புயல், வெள்ளம், நிலநடுக்கம், கடல்கோள்(சுனாமி)முதலான பேரழிவு நேர்ச்சிகளில், இயற்கையால் விளையும் கொடுமைகளில் இருந்து மீள இதுவரை என்னென்ன பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தகைய நடவடிக்கைகள் இல்லாமல் வந்த இன்னல்கள் என்னென்ன? இனி அவற்றை எவ்வாறு தடுப்பது? எவ்வாறு அவற்றிலிருந்து மீள்வது? எனக் குறிப்புகளை உருவாக்க வேண்டும். உருவாக்கப்படும் அமைப்பு கட்சி சார்பற்ற முறையில் செயல்படும் வகையில் இருக்க வேண்டும்.
உணவு, உடை, பயன்பாட்டுப் பொருள்கள் முதலியவற்றின் சேமிப்புகள், சாலை போக்குவரத்து சரிசெய்தல், மின் இணைப்புகளைச் சரி செய்தல், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் முதலான பொது அலுவல் மனைகள், உதவகங்கள் ஆகியவற்றை இடிபாடுகள், அழிவுகளிலிருந்து மீட்டெடுத்தல், அழிவிற்குள்ளாகும் தேவைப் பொருள்களை வழங்குதல், பேரிடர்க் காலங்களில் ஏற்படும் நோய், நலக்குறைவு முதலியவற்றில் இருந்து மக்களைக் காப்பதற்கான மருத்துவ வசதிகள், மருந்துகள் முதலியவை குறித்த தெளிவான திட்டமிடல் வேண்டும்.
சாலைச் சீர்குலைவு, ஊர்மக்களுடன் தொடர்புகொள்ள இயலாமை போன்ற பல்வேறு காரணங்களால், மறுவாழ்வுப் பணிகளில் தேக்கம் ஏற்படுவது இயற்கை. இத்தகைய பேரிடர்களில் உதவும் பணிகளில் ஈடுபடுபவர்களும் தத்தம் குடும்பத்தினருக்கு இடர் ஏற்பட்டுத் துன்பத்தில் உழன்று கொண்டிருப்பர். இதனை உணராமல் நாம் பொதுவாகக் குறை கூறுவதும் தவறு.
23.12.2005 அன்று, இந்திய அரசு, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை இயற்றியது. 09.01.2006-இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றது. இதன்அடிப்படையில், தலைமையமைச்சர் தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority NDMA) அமைக்கப்பட்டது; அதன் கட்டுப்பாட்டில் தேசியப் பேரழிவு மீட்புப் படையும் உள்ளது. பேரிடர்க்கால மீட்புப் படை மாநிலந்தோறும் அமைக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருப்பினும் எந்த மாநிலமும் மீட்புப் படையை அமைக்கவில்லை. அவ்வாறிருந்தால் பேரிழப்பு காலங்களில் மக்கள் தொடர்பும் உதவி வழங்கலும் எளிமையாய் இருந்திருக்கும்.
இயற்கைப் பேரழிவுகள் மட்டுமல்லாமல், உயிரியல், வேதியல், அணுக்கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளின் பொழுதும், முன் நடவடிக்கைகள், விளைவுகளை எதிர்நோக்கும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு உருவாக்கபட்டதே தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம். (அணுக்கதிரியக்கம் போன்றவற்றால் ஏற்படும் அழிவுகளுக்கு மத்திய அரசே காரணமாக இருப்பதுதான் கொடுமை.)
தமிழ்நாட்டிலும் வருவாய்-பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளது. என்றாலும் மாநிலத்தில் ஏதும் பேரழிவு ஏற்பட்டால் உடனடியாக மத்திய அரசின் துயர் கணிப்புக் குழு வருவதில்லை.
வெள்ளம் வடிந்தபின் பார்வையிடல் போன்று பேரிடர் பாதிப்புகள் மறைந்த பின்னரே மத்தியக் குழு வரும். மாநில அரசு நிதி உதவி கேட்டாலும் முதலில் பத்தில் ஒரு பங்கு போல் குறைந்த அளவுதான் நிதியை விடுவிக்கும். இத்தகைய தவறான போக்கிற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.
மறுவாழ்வுப் பணிகள் என்பன உடனடியாகவும் துயரங்களைத் தணிப்பனவாகவும் இருத்தல் வேண்டும். காலங் கடந்து தரும் உதவிகளால் உரிய பயன் கிடைக்காது. ஆதலின், உடனுக்குடன் உதவிகள் வழங்கப் பெறும் வகையில் பேரிடர் மறுவாழ்வு அமைப்பு, நிதி அதிகாரம் மிக்க தன்னிறைவான அமைப்பாக இருக்க வேண்டும்.
மத்திய அரசின் சார்பாளர்களும், தொண்டுஅமைப்பினரும் பிற கட்சிகள், இயக்கத்தினரும் இவ்வமைப்பில் இருக்க வேண்டும். துயர் துடைப்பு உதவிகள் உடனே வழங்கப்படும் வகையில் அமைப்பின் அதிகாரமும் இருக்க வேண்டும்.
பேரிடர் ஆணையம் அதற்கான சட்டப்படி மாவட்ட ஆணையம் அமைத்தல் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படவில்லை. ஆறு ஆண்டுகள் இவ்வாணையம் கூட்டப்படவேயில்லை. இந்த ஆண்டுதான்(18.10.2018) இதன்ஆறாவது கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்படியானால் இதன் செயல்பாடு எந்த அளவில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் உதவிகள் உரிய காலத்தில் மட்டுமல்ல, காலந்தாழ்ந்தும் முழுமையாகக் கிடைப்பதில்லை என்பதே நடைமுறை. அஃதாவது, மறுவாழ்வுப் பொருள்கள் தில்லியிலிருந்து வரவேண்டிய நடைமுறையால் காலத்தாழ்ச்சி ஏற்பட்டு உரிய காலத்தில் பயன் கிட்டாமல் போகிறது.
எனவேதான் மறுவாழ்விற்கெனத் தனியமைப்பு மாநில அளவிலும் அதன் சார்பில் மாவட்ட நிலைகளிலும் இருக்க வேண்டும். பேரிடர்க்கால மறுவாழ்விற்கெனத் தனி அமைப்பு இருப்பதன் மூலம் மட்டுமே உடனடி உதவிகளில் கருத்து செலுத்த முடியும்.
கசா(கஜா) புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் மக்கள் உயிரிழப்பு, உடைமைகள் அழிவு, வீடுகள் பிற கட்டட இடிபாடுகள், பயிர்கள் இழப்பு, கால்நடைகள் இழப்பு, உதவுநர் இருந்தாலும் உதவி கிடைப்பதற்குரிய போக்குவரத்து இன்மை போன்றவற்றால் பெரிதும் தரைமட்டமாகியுள்ளன; பிற மாவட்டங்களிலும் துன்பமே குடிகொண்டுள்ளது.
அரசு இயந்திரம் எப்படி முடுக்கிவிடப்பட்டாலும் மக்களுக்கு வேண்டிய இடர்தீர்வு உதவிகள் தேவையான அளவு, தேவையான நேரத்தில் முழுமையாகக் கிட்டவில்லை என்பதே உண்மை. இனியொரு நிலைமை இது போன்று ஏற்படாத வகையில் மறுவாழ்வுப் பணிகள் சீராகவும் சிறப்பாகவும் நடைபெற இப்பொழுதாவது பாடங்கற்று பேரிடர்க்கால மறுவாழ்வு அமைப்பை உருவாக்க அரசு முன் வரவேண்டும்.

. இலக்குவனார் திருவள்ளுவன்  
 நடுப்பக்கக் கட்டுரை ,
தினமணிதிசம்பர் 21, 2018

Saturday, December 1, 2018

வேலைநிறுத்தக் காலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

வேலைநிறுத்தக் காலத்தில்

புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக!

ஆசிரிய அமைப்புகள்-அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில்  04.12.2018 முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அரசுடன் நடந்த பேச்சில் முடிவு எட்டாததால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் புயல் பாதித்த பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடுமையான புயல் சேதத்தால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையால், எவ்வித வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடாமல், மக்கள்பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என வேண்டியுள்ளார்.
நாம் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் சரியா, தவறா என்று எதுவும் கூறவில்லை. ஆனால், ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்’ என்பதுபோல் நடந்து கொள்வது சரியல்ல எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தங்கள் நலனுக்காக அவர்கள் போராட உரிமையுண்டு. ஆனால் இக்கட்டான சூழலில் அரசை வழிக்குக்கொண்டுவருவதாக எண்ணி மக்களுக்கு எதிராகச் செயல்பட்டால் மக்களின் ஆதரவு அவர்களுக்கு இல்லாமல் போகும். எனவே, வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்து இயல்புநிலைக்குத் திரும்பிய பின்னர் போராடினால் மக்கள் ஆதரவும் கிட்டும்.
அலை எப்பொழுது ஓய்வது கடலில் எப்பொழுது குதிப்பது என எண்ணிப் போராட்டத்தில் உறுதியுடன் இருந்தால் மாற்று வழி ஒன்றைக் கூற விரும்புகிறோம்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள். அதே நேரம் புயல் பாதிப்புப் பகுதிகளுக்குச் சென்று அக்காலத்தில் தொண்டாற்றுங்கள். புயல் பாதித்த பகுதிகளில் உள்ளவர்கள் மாற்றுப் பகுதிகளுக்குச் சென்று தொண்டாற்றுங்கள். வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடாமல் தத்தம் பகுதிகளிலும் பணியாற்றலாம். அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுபோலும் இருக்கும். மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படாமல் உதவி புரிந்ததாகவும் இருக்கும்.
சப்பானில் வேலை நிறுத்தக்காலத்தில் உள்ளிருந்து உற்பத்தியைப் பெருக்கும் முறையில் ஈடுபடுவதாகச் செய்திகள் வந்துள்ளன. அதுபோல் தமிழ்நாட்டில்  ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தம் என்றால் இயல்பான பணியை நிறுத்திவிட்டு மாற்றுப்பணியில் ஈடுபட்டுத் தொண்டாற்றுவதன் மூலம் தங்கள் கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கலாம்.
இப்பொழுதே புயல் பாதிப்புப் பகுதிகளில் எல்லா இடங்களுக்கும் அதிகாரிகள் செல்ல இயலாமல் மக்கள் வருத்தத்தில் உள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அப்பகுதிகளுக்குச் செல்வதன் மூலம் மறுவாழ்வுப்பணிகளை விரைவில் ஆற்ற முடியும். மக்களின் துன்பத்தை விரைவில் தணிக்க இயலும்.
தமிழக அரசும் அரசிற்கு அடிப்படைத் தூண்களாக விளங்கும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை மதித்துக் குறைகளைக் கனிவுடன் கேட்டு விரைவில் நீக்க வேண்டும். அரசு முன்மாதிரியான முதலாளியாகத் திகழ வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப இவர்களின் குறைகளைப் போக்க வேண்டும்.
எனவே, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும்.
அல்லது
வேலைநிறுத்தக்காலத்தில் புயல் பாதித்த இடங்களுக்குச்சென்று தொண்டாற்ற வேண்டும்
என அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Followers

Blog Archive