Tuesday, February 28, 2023

தமிழ்க்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 21 – இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழ்க்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 21

(திரைத்துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 20 -இன் தொடர்ச்சி)

மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின் பிறந்த நாளில் அவர் எல்லா நாளும் நலமும் வளமும் மகிழ்ச்சியும் நிறைந்து மக்கள் மகிழ நல்லாட்சி வழங்கி நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம். இந்தியத் துணைக்கண்டத்திற்கு வழிகாட்டியாகவும் அதன் தலைமையை நோக்கியும் பீடு நடை போடுவது மகிழ்ச்சி யளிக்கிறது. உலகத் தமிழர்களும் தலைவர்களும் வாழ்த்துவதுபோல் தமிழன்னையும் மனங்குளிர்ந்து வாழ்த்த வேண்டுமல்லவா? அதற்கான வாய்ப்பை நல்க வேண்டுமல்லவா? ஆனால், தமிழ்த்தாய்க்கு நாளும் கொடுமை இழைக்கப்படும் பொழுது அதற்கான வாய்ப்பு எங்ஙனம் கிட்டும்?

இன்றைக்கு ஆவின் செய்யும் கொடுமையை அறிந்தபொழுது உள்ளம் பதைக்கிறது. நற்பெருமகனார் ஒருவர் ‘ஆவின் பால்’ எனத் தமிழில் பெயர் சூட்டியிருந்தார். ஆனால், பால் பொதிவுகளுக்கு ‘நைசு, மேசிக்கு, பிரிமியம், டயட்டு’ என்பன போன்ற ஆங்கிலப் பெயர்கள்தான். விலைப்பட்டியல்கள், பொருள் விவரங்கள், பால் பொள்கள் தொட்பான அறிவிப்புகள், செய்திகள் என எல்லாம் ஆங்கிலம்தான். இது குறித்து எழுத எண்ணிக் கொண்டிருந்த பொழுது இப்பொழுதே எழுத வேண்டிய தேவை வந்து விட்டது. ஆவின் நிறுவனம் புதிய பாலை அறிமுகப்படுத்துகிறார்களாம்; செய்தி வருகின்றது. “பால் தட்டுப்பாட்டைப்  போக்க மார்ச்சு 1 ஆம் நாள் முதல் Cow Milk என்ற பெயரில் புதிய பால் வகையை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது” என்பதே அச்செய்தி. பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ‘கவ் மில்க்’ என வழங்க உள்ளார்களாம். பால் தட்டுப்பாடுதானே! தமிழுக்குத் தட்டுப்பாடு இல்லையே!  ஏனிந்தக் கொடுமை?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!

செயலினை மூச்சினை உனக்களித் தேனே!

நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வு!

நன்மை உனக்கெனில் எனக்குந் தானே?

எனப் பாவேந்தர் பாரதிதாசன் உள்ளம் நைந்தாரே! தமிழை மறந்து நாம் வாழ்ந்து என்ன பயன்? தமிழ் அழிந்து நாம் இருந்து என்ன பயன்?  அந்த உணர்வு நம் எல்லார்க்கும் வர வேண்டுமல்லவா?குறிப்பாக ஆள்வோர்க்கு வரவேண்டுமல்லவா? நாட்டில் அடிநிலையில் உள்ளவர்கள் தவறு செய்தாலும் முடிநிலையில் உள்ள ஆட்சியாளரைத்தான் வையகம் ஏசும் என்பதே தமிழ்நாட்டு அரசியல் நெறி. எனவே, தமிழுக்குக் கொடுமை எங்கு இழைக்கப்பட்டாலும் அவப்பெயர் அரசிற்குத்தான். அரசிற்கு அவப்பெயா் எனில், அஃது ஆள்வோருக்குத்தானே! ஆள்வோர் என்றால் அதன் தலைமையில் உள்ள முதல்வரைத்தானே அவப்பெயர் சாரும்!. முதல்வர் விழிப்பாக இருக்க வேண்டாவா? அவரன்றி ஓரணுவும் அசையாது என்ற நிலை வேண்டாவோ?

எனவே, இப்பிறந்த நாளில் முதல்வர் மு.க.தாலின் உறுதியாக ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஒரு மொழிக்கொள்கையே தமிழ் நாட்டின் கொள்கை. ஆட்சிமொழி, கல்வி மொழி, கலை மொழி, வழிபாட்டு மொழி என எதுவாக இருப்பினும் அங்கெல்லாம் தமிழ் மட்டுமே இருக்க வேண்டும். தமிழ் நாட்டுக்கு வெளியே தொடர்பு கொள்ள மட்டுமே ஆங்கிலம். ஆனால், அதனைத் தமிழ் நாட்டுக்குள் பயன்படுத்தினால் தண்டனைதான் வழங்க வேண்டும். இரு மொழிக் கொள்கை என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்குள் ஆங்கிலத்தைத் திணிப்பவர்கள் யாராய் இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். முன்னரே கூறியபடி எச்சரிக்கை, சுற்றறிக்கை, ஆணை என்பன போன்று போலிச் சமாளிப்புகளை நிறுத்த வேண்டும். மாறாக உடனடியாக ஆங்கிலத் திணிப்பாளர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் ஆங்கிலத் திணிப்புகள் நிறுத்தப்படும்.

ஆவின் பால் மூலம் ஆங்கிலப்பால் ஊட்டுவதை உடன் நிறுத்த வேண்டும். தமிழ்ப்பால் ஊட்டுவதையே கடமையாகக் கொள்ளச் செய்ய வேண்டும்.

தமிழ் எழுதத் தெரியாதவனே! தமிழ் நாட்டை விட்டு ஓடு!

அயல்மொழியைத் திணிப்பவனே! அயல்நாட்டுக்கு ஓடு!

தமிழைப் பயன்படுத்துபவனே! தமிழ் நாட்டை ஆளு!

என்னும் நிலை வர வேண்டும்.

“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்!” என முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநதியின் அருந்தவப்புதல்வர் அதை நினைவில் கொள்ள வேண்டுமல்லவா? முதல்வர் மு.க.தாலின் தமிழ்ப்பகை வென்று தமிழுடன் நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

Sunday, February 26, 2023

திரைத்துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 20 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

திரைத்துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 20 : இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, February 14, 2023

ஈ. வெ. கி. ச. இளங்கோவன் மன்னிப்பு கேட்பாரா? வாகை சூடுவாரா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஈ. வெ. கி. ச. இளங்கோவன் மன்னிப்பு கேட்பாரா? வாகை சூடுவாரா?

ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27.02.2023 அன்று நடைபெற உள்ளது. தற்சார்பு வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும் தி.மு.க.வின் கூட்டணியில் பேராயக்கட்சி சார்பில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் போட்டியிடுகிறார். எதிர் நிலையில் அஇஅதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்து, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா முதலிய பலரும் நின்றாலும் இவர்களுள் போட்டி பேராயக்கட்சிக்கும் அதிமுகவிற்கும் தான். பாசகவின் சதியால் பன்னீர்செல்வம் அணி அதிமுக உண்மையான செல்வாக்கை மறைப்பதற்கு அதையே நல்வாய்ப்பாகக் கருதி போட்டியிடவில்லை. தேர்தல் ஆணையத்தின் அறமற்ற முறையால் உரிய சின்னம் கிடைக்கவில்லை என்பதால் இதேபோல் அமமுகவும் போட்டியிடவில்லை. ம.நீ.மையம் பேராயக்கட்சிக்கு ஆதரவு அளித்துப் போட்டியிலிருந்து விலகியுள்ளது.

பேராயக்கட்சி போட்டியிட்டாலும்  வெற்றி தோல்வி திமுகவையே சாரும். தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்தி வரும் முதல்வர் மு.க.தாலின் நிறைவேற்ற வேண்டியன உள்ளன. இருப்பினும் பொதுமக்களின் ஆதரவுடன் உள்ளார். பேராயக் கட்சி வெற்றி பெற்றால், ஆளுங்கட்சிக் கூட்டணியின் வலிமையை ஒப்புக்கொள்ளாமல் வேண்டுமென்றே திமுகவின் குறுக்கு வழி, கள்ள வாக்குகள், அதிகார வன்முறை, பணமும் பரிசுகளும் தானமாக வழங்கியமை போன்றவற்றால் அவ்வெற்றி கிடைத்ததாக அதிமுக கூறும். ஒருவேளை, அதிமுக வெற்றி பெற்றால் இவற்றை யெல்லாம் மீறி மக்கள் செல்வாக்கால் வெற்றி பெற்றதாகக் கூறும்.

பாசக, ஒரு தேர்தல் வருவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்னரே அதற்கான ஆயத்த வேலையில் இறங்கி விடும் திட்டமிடலையும் ஆளுமையையும் வஞ்சகத்தையும் கொண்டுள்ளது. எனவே, ஈரோடு இடைத்தேர்தல் குறித்த திட்டமிடலை பொதுத்தேர்தலுக்கான திட்டமிடலில் இருந்து எடுத்துக் கொள்ளும். இப்போது மேலும் பல சதிச் செயல்களிலும் ஈடுபடும். அவற்றில் ஒன்றாகத்தான் பழ.நெடுமாறனின் பிராபகரன் குறிதத அறிவிப்பையும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். போர்க்களத்தலிருந்து அஞ்சி ஓடும் இயல்பினரல்லர் தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன். எனினும் கொத்துக் குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் மிகக் கொடுமையான முறையற்ற போர் முறைகளாலும் துணை நிற்கும் நாடுகளுடன் இணைந்து செயற்படுத்திய வஞ்சக முறைகளாலும் தாய்நாட்டின் ஈழத்தமிழர்கள் திரள் திரளாகக் கொல்லப்பட்டது கண்டு மனம் பொறாமல் ஆயுதங்களை அமைதிப்படுத்தியவர். அக்கொடுஞ்சூழலில் தான் மட்டும் தப்பிக்கும் எண்ணம் கொண்டிருக்க மாட்டார். தலைவர் பிரபாகரனுக்கு மயக்கம் ஏற்பட்டு, மெய்க்காவல் படையினரால்  போர்க்களத்தை விட்டு வேறு எங்கும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம். அங்கே நலமாக வாழலாம். என்றபோதும் இப்போது பிரபாகரன் உயிருடன் இருப்பதாகச் செய்தியைச் சொன்ன சூழல் பல ஐயங்களையே வெளிப்படுத்துகிறது. அதுவும் இதுவரை இல்லாத வகையில் பிரபாகரன் ஒப்புதலுடன் வெளியிடுவதாகத் தெரிவித்தது மேலும் ஐயத்தையே கிளப்புகிறது. அண்ணாமலை அண்மையில் முள்ளிவாய்க்கால் முற்றம் சென்று அவரைச் சந்தித்தது, அவரும் பாசக அமைச்சரும் இலங்கை சென்றுள்ளது, முன்னரே பழ.நெடுமாறனும் காசி ஆனந்தனும் பாசகவின்பக்கம் சாய்ந்தமை முதலிய சூழல் இவ்வறிவிப்பும் தேர்தலைப் பேராயக்கட்சியான காங்கிரசைத் தோற்கடிப்பதற்கான முயற்சியோ என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இளங்கோவன் குறைந்த வாக்கில் வெற்றி பெற்றாலும் அதைத் தோல்வியாகவே கருதுவார்கள். எனவே, பெரும்பான்மை வாக்குகள் பெற்றே வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும்.

இந்த நேரம் இளங்கோவனின் கடந்த கால உளறல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

“திமுக ஆட்சி சரியில்லை”(2009)

“ஈரோட்டில் பெரியாருடன் பிரபாகரன் இருக்கும் சுவரொட்டியை அகற்ற வேண்டும்”(2009)

“திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரசு தோற்றுவிடும்” (2010)

“மொழி என்பது என்ன? வெறுஞ் சத்தந்தானே! எவனாவது ஒருவன் எங்களுடைய சத்தந்தான் உலகிலேயே சிறந்தது என்று சொன்னால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது”(2010)

“திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட்டால் காங்கிரசு தோற்கும். தை பிறந்தால் வலி பிறக்கும். பொறுத்திருந்து பாருங்கள்; அதற்கு வலி நிவாரணி எல்லாம் இல்லை. நேரடியாக அறுவைச் சிகிச்சைதான்”(2010)

“இராசீவுவ் காந்தி கொலையாளிகளைச் சிறைக்குள் கொன்றிருக்க வேண்டும்.(2011)

“கூட்டணித் தருமத்தால் காங்கிரசு கட்சிக்குச் சங்கடம்”(2020)

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது அறிந்த உலகமே கண்ணீர் வடித்தது. ஆனால், இளங்கோவன், “ஒரு சிறுவன் இறந்ததாகச் செய்தி வந்தது. அது பிரபாகரன் மகன் என்று அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்” என்று அ்ப்பாவிச்சிறுவன் கொல்லப்பட்டதற்கு மகிழ்ந்தவர். தமிழர் அல்லர் என்பதால் தமிழின உணர்விற்கு வாய்ப்பில்லை. ஆனால் கொலைகார உள்ளம் கொண்ட இவருக்கு, மனித நேயமும் கூடவா இல்லாமல் போனது.

இவை போன்ற பொன்மொழிகளை(?) நாளும் உதிர்த்து வந்தவர் இளங்கோவன். எப்பொழுதும் திமுகவையும் அதன் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியையும் தாக்குவதே தன் வாணாள் இலக்கு என்று கொண்டவர்.

அவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருக்கக்கூடாது.  ஆனால் அவரது மகன் கட்சிக்குப் புதியவர் என்பதால் உட்கட்சிச் சிக்கல் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கக்கூடாது எனக் கருதிய மு.க.தாலின் அவரைப் போட்டியிட வைத்துள்ளார்.

இந்த நன்றிக்காகவாவது இளங்கோவன் தி.மு.க.வினரிடமும் தமிழ் மக்களிடமும் தன் கடந்த காலப் பேச்சுகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

கூடுதல் வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெற வேண்டியது இளங்கோவனுக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், தி.மு.க.விற்குத் தேவை. எனவே, இளங்கோவன் மன்னிப்பு கேட்பதே அவருக்கும் கூட்டணிக்கும் நல்லது. மன்னிப்பு கேட்பாரா? வாகை சூடுவாரா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல


Sunday, February 12, 2023

மும்மொழித் திணிப்புகளையும் எதிர்ப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 

மும்மொழித் திணிப்புகளையும்

 எதிர்ப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்


























இந்தி எதிர்ப்புப் போராட்டம்போல் நாம் ஆங்கிலத்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளோம். இந்தி, சமற்கிருதத் திணிப்புகள் தமிழைக் குற்றுயிரும் குறையுயிருமாகச் சிதைத்து வருகின்றன. அவற்றிற்குச் சிறிதும் குறைவி்லாத வகையில் ஆங்கிலத் திணிப்பு நம் தமிழை அழித்துக் கொண்டு வருகிறது. தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் பிற மொழிச்சொல் இடம் பெற்றது என்றால், அந்தத் தமிழ்ச்சொல் வாழ்விழந்து விடுகிறது.

மு.க.தாலின் அரசு, அரசுப் பணியிடங்களில் தமிழ் தகுதித்தேர்வு கட்டாயம், அயலகத் தமிழர் நலன் – மறுவாழ்வுத் துறை ஆணையரகம், புலம்பெயர் தமிழர் நலவாரியம் எனத் தமிழர் நலன்களுக்கான தனித்துறை, தனி வாரியம் அமைத்தல், அயலகத்தமிழர் நாள் கொண்டாடுதல், தமிழ் எழுத்தாளர்களை இலக்கிய மாமணி விருது கொடுத்துப் பாராட்டுதல், தகைசால் தமிழர் விருது அளித்தல், விருது பெற்ற படைப்பாளர்களுக்குக் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் வழங்கல், என்றெல்லாம் தமிழர் நலன்களைச் சிந்தித்துத் திட்டங்களைச் செயற்படுத்தி வருவது பாராட்டிற்குரியது. ஆனால், தமிழைத் துரத்தும் பணிகளிலும் அரசு ஈடுபட்டுவருவது வருத்தத்திற்கும் கண்டனைக்கும் உரியன அல்லவா?

“திராவிடம் என்பது மொழிப்பற்று. திராவிடம் என்பது இன உரிமை.” என்கிறார் முதல்வர். ஆனால் தாய்க்கழகம் போல், பிற சேய்க்கழகங்கள் போல், இன உரிமைக்குக் குரல் கொடுக்கும் அளவிற்குத் தமிழ்ப்பற்றில் கருத்து செலுத்துவதில்லை. எனவேதான், திராவிட மாடல், போலீசு அக்கா, நம்ம செசு, நம்ம இசுகூல் பவுண்டேசன் எனத் திட்டங்களில் தமிழை இடம் பெயரச் செய்யும் ஆங்கிலப்பெயர்கள் கோலோச்சுகின்றன.

“தமிழால் இணைவோம்” என்பது அரசின் முழக்கமாகவும் “தமிழை மறப்போம்” என்பது அதிகாரிகளின் செயற்பாடுகளாகவும் உள்ளன. இந்நிலை என்று மாறுமோ? “ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உதட்டளவில் தமிழைத் தாய் என்கிறார்கள். ஆனால், ஆங்கிலத்தின் அருந்தவப்பிள்ளைகளாகச் செயல்படுகிறார்கள். இந்தியை எதிர்ப்பதுபோல் நாடகமாவது ஆடுகிறார்கள். ஆனால், ஆங்கிலத்திற்குக் காவடி தூக்குகிறார்கள்.”(ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக!, மின்னம்பலம்)

 “2012-13 இல் செயலலிதா அரசு, அரசின் தொடக்க – நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைத் திணித்தது. 320 பள்ளிகளில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 2013-14 கல்வியாண்டில் மேலும் 3200 பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு ஆண்டுதோறும் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டதால், 4,84,498 பேர் தமிழ்வழிக் கல்வியை இழந்தனர். இதைத் தொடர்ந்து 2017-2018 இல் ஆங்கிலவழிக் கல்வித் திணிப்பு அரங்கேறியுள்ள அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை 3,916.”  இவ்வாறு தமிழ்வழிப்பள்ளிகளாக இருந்த அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியைத் திணித்துள்ளது காலந்தோறும் அழிவை ஏற்படுத்தும் அடாத செயலல்லவா? இன்றைய அரசாவது இதற்கு முற்றுப்புள்ளி வைத்து நிலை பெயர் பெற வேண்டாவா?

“சொல்லாதையும் செய்வோம்-சொல்லாமலும் செய்வோம்” என்பது முதல்வரின் முத்தான முழக்கங்களில் ஒன்று.  தமிழைப் பொறுத்தவரை நாங்கள் சொல்வதையாவது செய்யுங்கள். “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என்பதைச் செயலில் காட்டுங்கள். “எண்ணுக தமிழில்! எழுதுக தமிழில்!”  என்பதை நடைமுறைப்படுத்துங்கள். ஆங்கில முத்திரைகளையும் ஆங்கிலப் பெயர்களையும் அடியோடு அகற்றுங்கள்! தமிழ்த்திட்ட விளம்பரங்களில் ஆங்கில விளக்கங்களும் ஆங்கில முத்திரைகளும் தேவையில்லை என்பதை உணருங்கள்!

உங்களின் தமிழ்ச்செயலாண்மையைக் காட்டும் வகையில், நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் இந்நாள் வரை தமிழ்ஆட்சிமொழித்திட்டத்தைச் செயற்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒரு நாள் ஊதியப்பிடிப்பாவது தண்டைனயாகச் செய்யுங்கள். எச்சரிக்கையோ சுற்றறிக்கையோ ஆணையோ தேவையில்லை. இவை வேண்டிய அளவிற்கு மேலேயே விடப்பட்டுள்ளன. இப்பொழுது தேவை, நடவடிக்கையே! இதன்மூலம் உங்களின் தமிழ்ச்செயற்பாட்டு எண்ணத்தைப் புரிந்து கொண்டஅதிகாரிகள் தமிழுக்கு வாழ்வளிப்பார்கள்.

எனவேதான், நாம் ஆங்கிலத் திணிப்பு எதிர்ப்பிற்கு முதற்கட்டமாக, ‘மாநில அரசே! ஆங்கிலத்தைத் திணிக்காதே!’ என வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்தியையும் சமற்கிருதத்தையும் ஒன்றிய அரசு திணிப்பதை நிறுத்தவில்லை. எனவே, மற்றொரு மொழிப்போராட்டம் தேவைப்படுகிறது. அதைக் குறிப்பிடவே, ஒன்றிய அரசிற்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அரசின் செயற்பாடுகளுக்கும் செயற்பாடின்மைகளுக்கும் மக்களும் காரணம், எனவேதான், அவர்களுக்கும் “தமிழைச்சிதைக்காதே!” என வேண்டுகோள் விடுக்கின்றோம். தமிழா என்பது தமிழச்சியையும் குறிக்கும் தமிழால் வாழும் பிற மொழியினரையும் குறிக்கும். ஊடகத்தினரையும் குறிக்கும். ஊடக மக்கள் பயன்படுத்தும் ஐந்து சொற்களில் நான்கு ஆங்கிலம் என்ற நிலை மாறி, இப்பொழுது அந்த இடத்தில் இந்தி புகுத்தப்படுகின்றது. தமிழறியா ஊடகத்தினர் ஊடகத்தை விட்டு வெளியேறுவதே நன்று.

நண்பர்களே! தமிழ் அன்பர்களே! நீங்கள் எக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எக்கட்சி சார்புடைய அமைப்பில் இருந்தாலும் பொதுவான அமைப்பில் இருந்தாலும் பின்வருமாறு வேண்டுகோள்களை முதல்வருக்கும் தலைமையருக்கும் விடுக்க வேண்டுகிறோம். இம் முழக்கத்தில் உங்கள் அமைப்பின் பெயரை அல்லது உங்கள் பெயரைக் குறிப்பிட்டு உரியவர்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

தமிழே விழி!                                                                                   தமிழா விழி!

மாநில அரசே! ஆங்கிலத்தைத் திணிக்காதே!

ஒன்றிய அரசே! இந்தி, சமற்கிருதங்களைத் திணிக்காதே!

தமிழா!  தமிழைச் சிதைக்காதே!

தமிழ்க்காப்புக் கழகம்

தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள்

என நாம் மும்மொழித்திணிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தமிழ்நாட்டு முதல்வருக்கும் இந்தியத் தலைமையமைச்சருக்கும் மின்னஞ்சல்கள் அனுப்புவோம்! மின் வரிகள் அனுப்ப இயலாதவர்கள் அடுத்தவர் மின்னஞ்சல்கள் மூலம் அனுப்புவோம்! அஃதாவது ஒரே மின்வரியிலிருந்தே தனித்தனியே அவரவரவர் பெயரைக் குறிப்பிட்டு மின்னஞ்சல்கள் அனுப்புவோம்! அல்லது பிற தளங்களில் பதிவோம்!  அதற்கும் வாய்ப்பிலலாதவர்கள், அல்லது கூடுதலாக அஞ்சலட்டையில் இவ்வேண்டுகோளை அனுப்புவோம்!

முதல்வர் இணையவரிகள்:  

cmo@tn.gov.in

cmcell@tn.gov.in

mkstalinoffice@gmail.com

facebook.com/MKStalin

twitter.com/mkstalin

instagram.com/mkstalin/

தலைமையமைச்சர் இணையவரிகள்:  

narendramodi1234@gmail.com

 connect@mygov.nic.in

https://www.facebook.com/narendramodi
https://twitter.com/narendramodi

முதலமைச்சர் முகவரி:

மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாடு அரசு

25/9, சித்தரஞ்சன் சாலை,

நிலவறை (செனடோப்பு) 2ஆவது தெரு,

சென்னை 600 018

தலைமையர் முகவரி:

மாண்புமிகு இந்தியத்தலைமையமைச்சர்

Honourable Prime minister of India

 7, Race Course Road/Lok Kalyan Marg

New Delhi 110011

உலகத்தாய்மொழி நாளுக்கு முந்தைய வரும் ஞாயிறன்று தமிழ்க்காப்புகழகம் சார்பில் மும்மொழித்திணிப்பு எதிர்ப்பு அரங்கத்தை இணைய வழியில் நடத்துகிறோம்.  இனி ஒவ்வோர் ஆண்டும் மாசி முதல் ஞாயிறு / பிப்பிரவரி மூன்றாவது ஞாயிறன்று நாம் மும்மொழித்திணிப்பு எதிர்ப்பு நாளை நிகழ்த்துவோம்.  வாய்ப்புள்ளவர்களும் அவ்வாறு நடத்த வேண்டுகிறோம்.

நன்றி.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive