Monday, January 29, 2018

விசயேந்திரனைக் கண்டிப்பது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்

 

விசயேந்திரனைக் கண்டிப்பது ஏன்? 

காஞ்சி மாநகருக்குக் களங்கம் எற்படுத்தும் வகையில்  அமைந்ததுதான்  காமகோடி மடம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே புகழுறும் மடம் இது. எப்படி ஆரிய மொழியின் காலத்தை முன்னுக்குத்தள்ளி ஏமாற்றுகிறார்களோ – எவ்வாறு தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துவிட்டு அவற்றைத் தமிழ் இலக்கியக் காலத்திற்கு முந்தையன எனக் காட்டுகின்றார்களோ – அப்படித்தான்  இம்மடத்தின் தொன்மைக் கற்பிதமும்.
பிற மடங்களாலேயே இம்மடம் பிற்பட்டது எனவும் 1821 இல்  கும்பகோணத்தில்  தொடங்கப்பெற்ற மடமே 1842 இற்குப்பின்னர் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இதனை 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகப் பரப்பி வருகிறார்கள். இத்தகைய திட்டமிட்ட வரலாற்றுப் பொய்யர்கள் எங்ஙனம் துறவியராக இருக்க முடியும்?
இதுவரை இம்மடத்தின் தலைவர்களாக இருந்தவர்களில் பெரும்பான்மையர் கன்னடர்.  அதற்கு அடுத்த நிலையில் தெலுங்கர் இருந்துள்ளனர், இருக்கின்றனர். இவர்களிடம் தமிழ்ப்பற்றையும் எதிர்பார்க்க முடியாதுதான். எனவே, தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மட்டுமல்ல மடங்களின் தலைமையும் தமிழர்களிடம்தான் இருக்க வேண்டும் என்று குரல் எழுப்புவோம்!
தங்களைத் தெய்வங்களாகவும் தெய்வப்பிறவியாகவும் இவர்கள் கதையளப்பதை நம்பி இவர்களைப் போற்றும் முட்டாள் தமிழர்கள் வாழும் நாடு நம் நாடு.
கூடா ஒழுக்கமும் பொய்யும் களவும் கொலையும்  நிகழும்   இடத்தை விரட்டியடிக்காமல் மண்டியிடும் மானக்கேடர்களும் உள்ளமையால்தான்  அரசியலிலும் இவர்கள் ஆதிக்கம் கோலோச்சுகிறது.
உண்மையான இந்துவாக இருந்தாலோ இறையன்பராக இருந்தாலோ துறவியாக இருந்தாலோ இம்மடத்திற்கு ஆதரவாக இருக்க இயலாது.
தமிழ்ப்பகைக் குணமே இவர்களின் பரம்பரைக்குணம். உலகம்  தொழுது போற்றும் திருக்குறளைத் தீய குறள் என்று சொன்னவர்களும் தமிழ் அறநெறிக்கருத்துகளுக்கு எதிராக நச்சுப் பரப்புரை மேற்கொள்பவர்களும்  எப்படித் தமிழ்த்தாயை வணங்குவார்கள்?
நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பொழுது   எழுந்து வணங்காமல் அமர்ந்திருந்த விசயேந்திரன் என்னும் இளையதலைவருக்கு எதிராகக் கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், நிகழ்ச்சி தமிழ்நாட்டில் தமிழர்கள் முன்னிலையில்தானே நடந்தது? அங்கே தமிழர் ஒருவர்கூட இல்லையா? அப்பொழுதே ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? அவையோர் அவை மரபு கருதி அமைதி காத்ததாகக் கொள்வோம். அவர் பாதக்கமலங்களை வணங்கி உரையைத் தொடங்கியதாக்க் கூறினாரே, தமிழ் படித்துத் தமிழால் வளமடைந்து வரும் தமிழறிஞர; அவர் அருகே இருந்தாரே! அவர் அவரிடம் சொல்லியிருக்கலாம் அல்லவா?
தவறு நேரும் பொழுது தடுக்க முயலாதவர்கள், பின்னர் கூக்குரல் எழுப்புவது ஏன்? நமக்கு வினையூக்கி(catalyst) இருந்தால்தானே தமிழ் உணர்வே வருகிறது! என்செய்வது?
ஆண்டாளுக்காகப் பொங்கி எழுந்தவர்தான் இக்கூட்ட ஏற்பாட்டாளர் அ.இராசா(எச்சு.இராசா). ஆண்டாளை மதிப்பதுபோல் காட்டிக்கொண்ட அவருக்குத் தமிழ்த்தாயை மதிக்கத் தெரியாததில் வியப்பில்லைதான்!
தங்களைக் கடவுளராக அல்லது கடவுளின் பிறப்பாகக் கருதிக்கொள்ளும் மடாதிபதிகளுள் ஒருவரான (சங்கராச்சாரி)விசயேந்திரனுக்கு அவை மரபைக்காக்கும் உணர்வுகூட இல்லையே! ஆளுநர் அடங்கிய அவையே எழுந்து வணங்கும் பொழுது புறக்கணிப்பதற்குக் காரணம் தமிழுணர்வற்ற நாட்டினரைப்பற்றிய நம்பிக்கைதான்!
அவருக்குச் சப்பைக்கட்டு கட்டுவோர் கோவையில் நடைபெற்ற உலகச்செம்மொழி மாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தின் பொழுது கலைஞர் கருணாநிதி அமர்ந்திருந்த படத்தைக் காட்டுகின்றனர். தமிழ்த்தாயை வணங்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தவரே  அவர்தான்[அரசாணை பல்வகை எண் 1303 பொது(அரசியல்) நாள் 17.06.1970] நலக்குறைபாட்டால், இயலாமையால் அமர்ந்திருந்ததை ஒப்பிட்டுக் கூறுவது தவற்றை ஒப்புக் கொள்ளாமல் குழப்பும் போக்காகும்.
அமைதி வணக்கத்தில் இருந்ததாக முதலில் மழுப்பியவர்கள் எப்பொழுதுமே அவர் தமிழ்த்தாய்க்கு வணக்கம் செலுத்துவதில்லை என்பதுதான் வழக்கம் என்று  கூறுகின்றனர். இவ்விழாவில் மட்டும்தான் எதிர்பாராமல் நிகழ்ந்த நேர்வு என்றால் மன்னிக்கலாம். ஆனால், தமிழ்த்தாயை அவமதிப்பதுதான் வழக்கம் என்றால் கடுமையான குற்றம் என்பதை உணர வேண்டும்.
ஆரியமகனுக்குத் தமிழ்த்தாயை வணங்க விருப்பமில்லையேல் தன்னையும் சார்ந்தாரையும் வாழ வைக்கும் தமிழ்மக்களுக்காகவாவது தமிழ்த்தாயை மதிக்க வேண்டும். நாட்டுப்பண்ணை விரும்பாத பலரும் அவை மரபு கருதி எழுந்து நிற்பதில்லையா?, அதுபோல் இனியேனும் தமிழ்த்தாயை வணங்க வேண்டும்.என்றாலும் தன் தவற்றுக்காக மதுரையில் உள்ள தமிழன்னை சிலைமுன் எழுந்து நின்றும் மண்டியிட்டும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தவக்கோலம் கொண்டு கீழ்மையான செயல்களைச் செய்பவன் குறித்துத் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
தவமறைத்து அல்லவை செய்தல் புதல் மறைந்து 
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று (திருக்குறள் 274)
என்கிறார். மக்களே இவர்களிடம் விழிப்பாக இருங்கள்!
அரசே! போலித்துறவிகள் தண்டிக்கப்பட நடவடிக்கை எடுத்திடுக!
பிற மடங்களின்  கருத்துகள், ஆங்கிலேயர் காலக் காஞ்சிபுர ஆட்சியர் குறிப்புரை, காஞ்சிமடம்பற்றிய நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் காஞ்சிமடத்தின் உண்மை வரலாற்றை அரசே வெளியிடச் செய்ய வேண்டும்! இதற்கு எதிராகப் பொய்ப்பரப்புரை மேற்கொள்வோர் தண்டிக்கப்பட வேண்டும்.
காஞ்சிபுரக் காமகோடி மடத்தில் நடைபெற்ற குற்றச் செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
காஞ்சி மடத்திற்குரிய சொத்துகள் கைப்பற்றப்பட்டு உண்மைத் துறவியருக்கும் இறைப்பணிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் மருத்துவப் பணிக்கும் பயன்படுத்தப் பெற வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை  : அகரமுதல 223 : தை 15 – 21, 2049, சனவரி 28-பிப்.3, 2018

Wednesday, January 10, 2018

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்!

[சுற்றத்தாருடன் அன்புடன் பழகாதவன் வாழ்க்கை கரையில்லாக் குளத்தின் நீர்போன்று பயனற்றுப் போகும்.]
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. (திருவள்ளுவர்திருக்குறள் 523)
ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே
புறநானூறு கூறும் இப்பொன்னுரை உலகமக்கள் யாருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. சோழவேந்தன் நலங்கிள்ளிக்கும் சோழவேந்தன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. அப்பொழுது புலவர் கோவூர் கிழார் இருவரிடமும் ”இருவர் வெற்றி காண்பது என்பது இயலாத ஒன்று. ஒருவர் வெற்றி பெற்றாலும் மற்றவர் தோற்றவர் ஆகிறார். அதனால் சோழர் குடி தோற்றது என்னும் இழிபெயர் சோழர் குலத்திற்கு வரும்.” என அறிவுரை கூறினார்.  இதனை உணர்ந்த சோழ வேந்தர்கள்  போரினை நிறுத்தினர். அவ்வறிவுரையை இன்று தி.மு.க., அ.தி.மு.க. தலைமையைச்சேர்ந்த குடும்பத்தினர் உணர்தல் நன்று.
நம் நாடு மக்களாட்சி நாடு எனக் கூறப்பட்டாலும் கட்சியாட்சி நாடாகத்தான் விளங்குகிறது. கட்சிகள் எண்ணற்று இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று கட்சிகளே முதன்மை பெறும் வகையில் அவற்றின் ஆட்சிகளே நாட்டில் அமைகின்றன. அக்கட்சிகளிலும் தலைமைநிலையில் இருப்பவர்களின் குடும்பங்களே ஆதிக்கம்செலுத்துகின்றனகட்சித்தலைவர்களின் கொத்தடிமைகளாகஇருக்கும் மக்களால் இவை தவிர்க்க இயலாக் கேடுகளாய்மாறிவிட்டன. இவையாவது உருப்படியாக இருக்க வேண்டும் அல்லவா? தலைமையில் உள்ளவர்கள் சிதறுண்டால் கட்சியும் சிதறத்தானே செய்யும். கட்சிநலன் கருதியாவது ஒற்றுமையாக இருக்க  வேண்டும். முதன்மைக் கட்சிகள் சிதையும்பொழுது அவற்றைச் சார்ந்துள்ளஆட்சியும் சிதைவது இயற்கைதானே! எனவே நாட்டு ஒற்றுமைக்கும் இவர்களின் ஒற்றுமை தேவை! இவர்களைத் தூக்கி எறிந்துவிட்டுப் பிறரை – பிற கட்சிகளை – ஆட்சியில் அமர்த்தலாமே என எண்ணலாம். அந்த நிலைக்கு மக்கள்மாறும் வரை அல்லது நன்னெறியாளர் ஆட்சிக்குவரும்சூழல் வரும் வரைஇருக்கும் சூழலில்  முதன்மையாளர்களைமுன்னிலைப்படுத்தித்தான் சிந்திக்க வேண்டி உள்ளது.
இன்றைய எதிர்க்கட்சியாக உள்ள, ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி இருந்த, தி.மு..வின் குடும்பச் சண்டையாவரும் அறிந்ததே! அழகிரி, தாலின், மாறன்கள், கனிமொழி என்று  பல்வகையிலும் அணிகள் இவர்கள் பின் அமைந்துள்ளன. இதுவும் கலைஞரின் தந்திரம் என்று தொடக்கத்தில் எண்ணத் தோன்றியது.  ஏனெனில், கலைஞருக்குப் பின்னர் தி.மு.பிளவுபட்டாலும் இவர்கள்பின்தான் தனித்தனியாக அணிவகுப்பர். அதனால் எப்படியும் கலைஞர் கருணாநிதியின்  பரம்பரையினர்தான் தி.மு.க.வை ஆள்வர். அதன்வழி வாய்ப்புள்ளபொழுது நாட்டையும் ஆள்வர் என்ற எண்ணமே இவர்களின் பிளவு குறித்துக் கலைஞர் கருணாநிதியைக் கவலைப்படச் செய்யவில்லை எனலாம்.
அழகிரி திறமை மிக்கவர்தான். அவரையே தாலின் ஓரங்கட்டுகிறார் என்றால் இவரும் திறமையாளர்தானே! பிறரும் ஒவ்வொருவகையில் திறமையாளர்களே! யார் வல்லவர் என்ற போட்டி ஏன் தேவை? குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தங்களின் முதன்மையை மறந்து  கட்சி இருந்தால்தான் தாங்கள் இருக்க முடியும் என்பதை நினைந்துஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை உணரவேண்டும்.கொள்கைத் தடுமாற்றங்களால் கட்சி தேய்ந்து கொண்டிருக்கும்பொழுது அவற்றைச் சரிசெய்து கொள்கை வழி நடத்திச் செல்ல வேண்டிய கடமை தலைவர்களுக்கு உள்ளது. அதிமுகவின் இன்றைய சிதைவுகளின்பொழுதுகூடத் தி.மு.க. வலுப்பெறவில்லை என்பதை உணர்ந்து யார் பெரியவர் என்று ஆராயாமல் ஒன்றுபட்டு நின்று கட்சியையும் அதன் வழி நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
இந்த அறிவுரை அதிமுகவிற்கும்தான். செயலலிதா இருந்த வரை அவருக்கு அணுக்கமாக இருந்த சசிகலாவிடமும் அவர் குடும்பத்தினரிடமும் அடிமைபோல் நடந்துகொண்டவர்கள்தாம் அடுத்த நிலையில் இருந்தவர்கள். செயலலிதா மறைந்த  பின்னும்சசிகலாவிடம் கட்டுப்பட்டுக் கிடந்தவர்கள்தான் இவர்கள்.  மத்திய ஆட்சியின் சூழ்ச்சியால் இன்றைக்கு அடுத்தடுத்து பிளவுபட்டு எதிர்நிலையில் உள்ளனர். இந்நேரத்தில் சசிகலா குடும்பத்தினரும் அதிகாரக் கைப்பற்றலுக்காகப் பிளவுபட்டு இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. முனைவர் .நடராசன் செயற்பாடுகளால்தான்செயலலிதாவே கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தும் நிலைக்குஉயர முடிந்தது. கட்சியினரும் அதிகாரத்தினரும் கொடுக்க  வேண்டியவற்றைக் கொடுத்தோ வேறு வகையிலோ பொறுப்புகளை வாங்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அவர்களுள் பலர் இவர்கள் பக்கம் இருப்பதையெ விரும்புவர் என்பதே உண்மை. சசிகலா சிறையில் இருக்கும் சூழலில், முனைவர் ம.நடராசன் நலங்குன்றி உள்ள நேர்வில், தினகரன்திவாகரன்வெங்கடேசுகிருட்டிணப்பிரியாவிவேக்கு  எனப் பலவகையிலும் அணிஅணியாகச் சிதறுவதால் அவர்கள்இலக்கை அடைய முடியுமா? தினகரன் திறனாளராக உள்ளார். அவர் தலைமையில் குடும்பத்தினர் ஒன்றுபடுவதில் தவறு எதுவும் இல்லை. ‘பொறுத்தார்  பூமி யாள்வார்’ என்பதை உணர்ந்து விட்டுக்கொடுத்துச் செயல்பட்டால் நன்றல்லவா? இவர்களை விரட்டுவதற்கென்றே காவிவலையில் ஒவ்வொருவராகச் சிக்க வைக்கப்பட்டிருக்கும் பொழுதுபிளவு படுவது குடும்பத்திற்கும் கட்சிக்கும் நல்லதல்ல
 தேர்ந்தெடுக்கப்படும் அரசு பதவிக்காலம் வரையும் ஆட்சி செய்வதே நல்லது. செயலலிதாவை மட்டும்  மக்கள் ஆட்சி செய்யத் தேர்ந்தெடுத்ததாகக் கருதுவது தவறு. அவர் தலைமையிலான அதிமுகவையும்தான் ஆள்வதற்கு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆட்சி கலைக்கப்பட்டால் பாசகவின் பிடி  மேலும் தமிழ்நாட்டிற்குக் கேடு விளையும் என்பதில் ஐயமில்லை. பன்னீர், எடப்பாடியார் முதலானார் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்திலும் ஒன்றுபடத் தயங்கலாம். அரசியலில் உறவும் பகையும் மாறிமாறி அமையும் என அறிந்தவர்கள்தாமே நாம்!
பிரிந்து போனவன் திரும்பி வந்தால், தலைவன்  பிரிந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து சரிசெய்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல். (திருவள்ளுவர், திருக்குறள் 530)
 ஆதலின் இணையுங்கள்! நாடாள எண்ணும் ஆசையைக் கருதியாவது ஒன்றுபடுங்கள்! மக்கள் உங்களைத் தூக்கி எறியும் முன்னராவது கட்சிகளைக் காப்பாற்றுங்கள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 220 மார்கழி 23- மார்கழி 29, 2048 – சனவரி 07-13, 2018

Thursday, January 4, 2018

இரசினி கட்சி தொடங்குவதை எதிர்ப்பது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்


 

இரசினி கட்சி தொடங்குவதை எதிர்ப்பது ஏன்?

“புலி வருகிறது புலி வருகிறது” எனப்  பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார் இரசினி. இப்பொழுது ”வாசலில் நிற்கிறதுநான்சொல்லும் பொழுது வரும் என்பதுபோல் கட்சி தொடக்கம் குறித்துஅறிவித்துள்ளார். இதற்கே ஆதரவு, எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.
சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலும் போட்டியிடப்போகும் அவர் கட்சியானது சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புவந்த்தும் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்ததும் முடிவெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்பு விரைவில் வந்தால்,  போதிய கால வாய்ப்பு இல்லை என்று பின்வாங்கலாம். கழுவும் மீனில் நழுவும் மீனாக உள்ள அவருடன் இணைவதற்கும் பலர் முன்வருகின்றனர். வெறுப்பில் இடம் மாறக்கூடாது என்பதற்காகத் தன் அன்பர்களைக் கட்டிப் போடுவதற்ன உத்திதான் இவ்வறிவிப்பு என்றே  தோன்றுகிறது.
ஆன்மிக அரசியலை நடத்த கட்சி தொடங்கியுள்ளேன்“ என்று இரசினி அறிவித்துள்ளார். ஆன்மிகம் என்பதை என்ன பொருளில் இவர் கையாண்டுள்ளார் எனத் தெரியவில்லை. சமயம் சார்ந்தது எனில் தமிழ்நாட்டில் இக்கருத்து எடுபடாது. இறைநெறி என்பது தனியர் சார்ந்தது. இதனைப் பொதுவில் கையாளப் பெரும்பான்மைத் தமிழக மக்கள் விரும்புவதில்லை.  எனவேதான் பெரியார்மண்ணில் இந்தப் பருப்பு வேகாது எனப் பலர் கூறுகின்றனர்.
பெரியார்மண் என்றால் இறைமறுப்பு மண் என எண்ண வேண்டா. இறை மறுப்பு என்பது பெரியார் கொள்கைதான். ஆனால் அவரின் கொள்கைகளில் அதுவும் ஒன்றே தவிர, அதுமட்டுமே அவர் கொள்கை அல்ல. பழந்தமிழ் மக்கள் நிலத்திணைகளையும் அதற்கேற்ற கடவுட் கொள்கையுடனும் வாழ்நதவர்கள். வழிவழியாக அக்கடவுட்  கொள்கையும் தமிழ் மக்களிடையே ஊறி  உள்ளது. இடையே ஆரியமாயைகள் தமிழக மக்களிடம் படிந்து விட்டன. இவற்றால், பகுத்தறிவின்மையும் மூடநம்பிக்கைகளும் பெருகிவிட்டன. திருவள்ளுவர், கபிலர், சித்தர்கள் முதலானவர்கள் ஆரிய எதிர்ப்பை வலியுறுத்திய வழியில் வள்ளலார் முதலானவர்களும் கண்ம்மூடிப்பழக்கம் மண்மூடிப் போக வேண்டினர். இவர்கள் வழியில் வந்த தன்மானம், தன்மதிப்பு முதலியனவே பெரியார் மண்ணின் அடையாளங்கள். பெரும்பான்மையர் சமயப் பொறுமையை விரும்புபவர்கள். நடிகர் இரசினிக்குத் திரையன்பர்கள் மிகுதியானவர்கள் இருப்பினும் கட்சித்தலைவர் இரசினிக்கு அத்தகைய ஆதரவு இருக்கும் என எதிர்பார்ப்பது அறியாமையாகும். அதுவும் பாசகவின் சார்பாளராக அறிமுகமாகிறார் என மக்கள் நம்புவதால் எதிர்பார்க்கும் பயன் விளையாது.
துணிவும் வலிமையும் உள்ள யாவரும் கட்சி தொடங்கலாம் என்னும் பொழுது கட்சி தொடங்குவது அவரது விருப்பம். இந்த நேரத்தில் அவரின் நடிப்பு வாழ்க்கை,  போலிச்செயல்பாடு, தமிழக மக்களின் போராட்டங்களில் பங்கேற்காமை, தமிழக மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காமை, அவரது மாநிலமாகச் சொல்லப்படும் கருநாடகம் அல்லது மராத்தியில் தமிழர்கள் துன்புறுத்தப்படும் பொழுது வாய்மூடி அமைதி காத்தல், ஈழத்தில் பன்னூறாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்பட பொழுதும் பிற நாடுகளில் தமிழர்கள் இன்னல்களுக்கு ஆளானபோதும் தனக்குத் தொடர்பு இல்லாததுபோல் நடந்துகொண்டமை என்பனபோன்றவற்றால், அவருக்கு  எதிராகப் பலரும் குரல் கொடுக்கின்றனர். இவை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க வேண்டுமே  தவிர அவரை ஏசுவானேன்?
அவரது அன்பர் மன்ற இணையத் தளத்தில் ”வாழ்க தமிழ்! வெல்க தமிழ்க்குடி!” என்னும் முழக்கம் உள்ளது. (ஒற்றுப்பிழையைத் திருத்தியமைக்குப் பாராட்டுகள். பிற எழுத்துப் பிழைகளையும் திருத்துக.) எனவே, தமிழக மக்களின் வாக்குகள் வேண்டுமென்றால் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அவர் உணர்ந்துள்ளார் எனலாம். எனவே வாக்குகளுக்காகவாவது தமிழர்நலன் குறித்து வாய்திறக்கலாம். ஆனால், உண்மையிலேயே கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிடும்பொழுதுதான் வாய்திறக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதுவரை பூச்சாண்டிதான் காட்டிக் கொண்டிருப்பார்.
தமிழ்நாட்டில் தமிழர்தாம் ஆட்சிப்பொறுப்புகளுக்கு வரவேண்டும்என்னும் தமிழ்த்  தேசிய உணர்வுள்ளோர் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதில்தான் கருத்து செலுத்த வேண்டும். அவரது அன்பர்கள் அவரைக் கட்சிக்கு அழைப்பதன் காரணம் அதன் மூலம் தங்களுக்குப் பொறுப்புகள் கிடைக்கும் என்ற ஆசைதான். பிற கட்சியின் வரவேற்பு அவருடன் கூட்டணி வைக்கலாம் என்ற கணக்கிற்காகத்தான். சில கட்சிகளின் பொறுப்பாளர்கள் அல்லது பிறர் அவருடன் இணைய விரும்புவதன் காரணம் பொறுப்புகள் கிடைக்கும் என்ற பேராசையே!
ஆசையின் காரணமாகக் கட்சிதொடங்குவதை வரவேற்பவர்களையும் ஊடகங்களையும் தவிரப் பிறர், அவரது கட்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. அவர் கட்சி தொடங்குவதற்குக் காரணங்களாகக் கூறும் தருமம், உண்மை, வெளிப்படைத்தன்மை ஆகிய பண்புகள் அவரிடம் உள்ளனவா என மக்களை எடை போடச் செய்வதில் ஈடுபடாமல் அவரைத் திட்டிப் பயனில்லை.
மொழிவாரி மாநிலப் பகுப்பின்பொழுது தமிழ்நாட்டில் தமிழர் தலைமைச்செயலாளராக இல்லாமையால்தான், தமிழ்நாட்டின் பல பகுதிகளைப் பிற மாநிலங்களிடம் பறிகொடுத்தோம். தமிழர்நலன் தொடர்பான  எந்தச் சிக்கலாக இருந்தாலும்  அது குறித்து முடிவெடுப்போர் தமிழரல்லாதவர் என்பதால்தான் தமிழர்நலன் புறக்கணிக்கப்பட்டு இன்னலுக்கு ஆளாகி வருகிறோம். மீனவர்கள் உயிர்கள், உடைமைகள் இழப்பு, ஈழத்தமிழர்க்கு உதவ இயலாமை போன்றவற்றிற்கும் முதன்மைக் காரணம் தமிழரல்லாதவர் முடிவெடுக்கும் இடங்களில் இருப்பதுதான். இவற்றை மக்களிடம் உணர்த்தித் தமிழரே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று உணர்த்த வேண்டும். மாறாக, இதுவரை பிறமொழியினர் தலைமையில் அடிமைப்பட்டுக்கிடந்துவிட்டுப் புதிதாக அடிமைப்படுத்த வருபவரைத் தூற்றிப் பயனில்லை.
ஆரவாரப் பேச்சுகளும்,  அடுத்தவர் உரைகளுக்கு வாயசைப்பதும் ஆள்வதற்குரிய தகுதிகள் அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். இரசினியின் கட்சி முயற்சிக்குத் தோல்வியைப் பரிசாகத் தந்தால்,  பிறருக்கும் பாடமாக இருக்கும் என உணர்ந்து செயல்படத் தமிழக மக்களை வேண்டுகிறோம்!
நாட்டுமக்கள்மீது அன்பும்  நாட்டுமொழி அறிவும் நாட்டையும் மொழியையும் முன்னேற்றும் திறமையும் பதவிகள் மீது பேராசையின்மையும் உடையவர்களைத் தேர்வு  செய்ய வேண்டும்.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 513)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 219, மார்கழி 16 – மார்கழி 22,  2048 /   திசம்பர் 31  – சனவரி 06, 2018

Followers

Blog Archive