Thursday, March 30, 2023

இராமதாசின் ஆங்கிலப்பெயர்களை அழிக்கும் நல்ல முயற்சியும் வணிகர் சங்கத்தின் பொல்லா அறிவிப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்

 




இராமதாசின் ஆங்கிலப்பெயர்களை அழிக்கும் நல்ல முயற்சியும்

வணிகர் சங்கத்தின் பொல்லா அறிவிப்பும்

. “ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம்” என வணிகர்களுக்குப் பாமக நிறுவனர் மரு.இராமதாசு சில நாள் முன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராட்ட வேண்டிய முயற்சி!

இதற்கு எதிர்வினையாக வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராசா,  தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைப்பாட்டை தவிர்க்க வேண்டும் எனவும்‌, இவ்விவகாரத்திற்கு ஒரு மாத அவகாசம் என்பது போதாது எனவும் கூறியுள்ளார். மேலும், தங்கள் அமைப்பு சார்பில் அனைத்து வணிகர்களுக்கும் தமிழ் மொழியில் பெயர்ப் பலகை வைக்கக்கோரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வணிகர் சங்கத் தலைவர் அறிவிப்பு வேடிக்கையாக உள்ளதுஏதோ இப்போதுதான் முதன்முறையாக ஆங்கிலப் பெயர்ப்பலகை குறித்த அறிவிப்பு வந்துள்ளதுபோல் கூறுகிறார். பல முறை – அல்ல, அல்ல மிகப்பன்முறை – தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று அரசு, அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள், தமிழ் வளர்ச்சி இயக்குநர், தொழிலாளர் துறை ஆணையர், தமிழ் வளர்ச்சிச் செயலர், அமைச்சர், முதல்வர் எனப் பல தரப்பினரும் இது குறித்து அறிக்கை அளித்துள்ளனர்; பேசியுள்ளனர். ஒவ்வொரு முறையும் இப்போதுபோல் அவகாசம் கேட்பதும் வழக்கமான ஒன்றே. பின்னர் அறிவித்தவர்களும் மறந்து விடுவார்கள்கால வாய்ப்பு கேட்டவர்களும் மறந்து விடுவார்கள்.

அரசாணை நிலை எண் 1541, தொழிலாளர்-வேலைவாய்ப்புத்துறை நாள் 29.07.1982 இல் கடைகள் நிறுவனங்கள், உணவகங்கள், ஆகியவற்றில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்கவும் வைக்கப்படாதவர்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் தொழிலாளர் துறைக்கு அரசு ஆணையிட்டுள்ளது. அதாவது கடைகள், நிறுவனங்கள் வைக்கும் பெயர்ப் பலகையில் எழுத்துகள் முதலில் தமிழில் இருக்க வேண்டும் என்றும் அதற்கு அடுத்த படியாக ஆங்கிலமும் அதற்கு அடுத்தபடியாக மற்ற மொழிகளையும் வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விகிதம் 5:3:2 ஆகும். 

இதன்  பின்னரும் கூட இவ்வாறு இதனை வலியுறுத்திப் பல சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் வந்துள்ளன. ஆம்! அவ்வப்பொழுது வெவ்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளிடமிருந்தும் கட்சித் தலைவர்களிடம் இருந்து அறிவிப்புகள் வந்து கொண்டுதான் உள்ளன. பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்பதற்குரிய அரசாணையும் இன்னும் செயற்பாட்டில்தான் உள்ளது. அதே நேரம் பெயர்ப்பலகைகளில் ஆங்கிலம் இருக்கத்தான் செய்கின்றது. இதுதான் நாட்டின்நிலை.

கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறுவதாக அறிவிப்பு வந்ததும் தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ் இல்லை என்ற அவல நிலையைப் போக்க வேண்டும் எனத் தமிழ்அமைப்புகளும் தமிழன்பர்களும் வேண்டினர்.  அப்போது சென்னை மாநகரத் தலைவராக இருந்த மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்தார். முதலில் “மே31, 2010 ஆம் நாளுக்குள் தமிழ்ப் பெயர்ப்  பலகை வைக்காத கடைகளின் பெயர்ப் பலகைகள், மாநகராட்சி மூலம் அகற்றப்படும். கேரளா, கருநாடகா, ஆந்திர மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் கடைகளில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில், கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழில் வைக்கச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலச் சந்ததியரின் நலனுக்காக நிச்சயம் கடைகளில் பெயர்ப் பலகைகள் தமிழில் இடம் பெற வேண்டும். செம்மொழி மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சென்னை வழியாகவே கோவைக்குச் செல்வர். எனவே, சென்னையில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகள் தமிழில் இடம் பெறுவது மிகவும் அவசியம்,” என்றார். பின், சூன் மாதம் 20 ஆம் நாளுக்குள்  தமிழில் பெயர்ப் பலகைகளைத் திறந்திட வேண்டும். வணிகப் பெருமக்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, இந்தக் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி இந்த மாதம் 21ஆம் நாள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்காத நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை அகற்றும் சூழ்நிலையை உருவாக்காமல் வணிகப் பெருமக்கள் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, அனைவரும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். அந்த நாளும் கடந்து சென்றது. கோவையில ்செம்மொழி மாநாடும் நடந்து முடிந்தது. 14 ஆண்டுகள் கடந்த பின்னரும் எந்த வெட்க உணர்வுமின்றிக் கால வாய்ப்பு கேட்கிறார் ஒரு பிரிவு வணிகர் சங்கததின் தலைவர்.

வணிகர் சங்கத்தினர் தங்கள் நிலைப்பாட்டிற்கு வெட்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கும் ஒவ்வோர் முறையும் கால வாய்ப்பு கேட்பது இழிவு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

இந்த நிலையே தொடரும் என்பதே நம்மருந்தமிழ் நாட்டின் இழிநிலை. இதனை மாற்றப் பின்வருவனவற்றைக் கருதிப் பார்க்க வேண்டும்.

மரு.இராமதாசு, பா.ம.க.வில் பேரளவிலான எண்ணிக்கையில் தொண்டர்கள் உள்ளதாகவும், அடுத்த ஆளுங்கட்சி என்றும் கூறி வருகிறார். எனவே, முதலில் தம் கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்கள்பொறுப்புகளில் இல்லாத தொண்டர்கள் அன்பர்கள் அனைவரையும் தங்கள் நிறுவனக் கடைப்பெயர்களைத் தமிழில் அல்லது விதிக்கிணங்க உரிய விகிதத்தில் தமிழ்ஆங்கிலம் பிற மொழிகளில் எழுத அறிவுறுத்தி வெற்றி காண வேண்டும். இதற்கு எந்த அழிப்புப் போராட்டமும்  தேவையில்லை. இதனால், இதனைப் பிற கட்சியினரும் பின்பற்றுவர். எனவே, பெரும்பான்மையர் தமிழில் பெயர்ப்பலகைகளை எழுதி வைப்பர்.

பிற மொழிகளில் கடைகளின் பெயர்களை வைத்துள்ளனர். இதனை அப்படியே எழுதலாம், கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தலாம் என அதிகாரத்தில் உள்ளவர்களும் கிரந்த அன்பர்களும் கருதுகிறார்கள். கிரந்த எழுத்துகள் இன்றி நல்ல தமிழில் முதலில் 5 பங்கு எழுத வேண்டும். இரண்டாவதாக 3பங்கு ஆங்கிலத்தில் அடுத்து மூன்றாவதாக கடைக்காரர்கள் நிறுவனத்தினர் இப்போது பெயர் வைத்துள்ளவாறு பிற மொழிப்பெயர்களைத் தமிழ் வரிவடிவில் குறிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால்தான் தமிழ்த்தெருவில் தமிழ்மணம் கமழும்.

அரசு நடவடிக்கை எடுக்காமல் இயல்பான இந்நிலையைக் கொணர வேண்டும் என்றுதான் அமைதி காக்கின்றது. எனவே, பெயர்ப்பலகைகளைத் தமிழில் பெரும்பான்மையர் எழுதி வைத்தால் சிறுபான்மையர் மீது அரசு நடவடிக்கை எடுத்து விடும். அரசு இனி, இது குறித்து எந்தவோர் அறிக்கையும் விடக்கூடாது. நடைமுறையில் உள்ள அரசாணைக்கிணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாணிகர், தம் முகவரியை வரைகின்ற பலகையில், ஆங் கிலமா வேண்டும்?

‘மாணுயர்ந்த செந்தமிழால் வரைக’ என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!

ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈறாக அனைவர் போக்கும்

நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலங்காக்கும் செய்கையாமோ?

என 1945இலேயே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கேட்டார்இன்னும் நமக்கு உணர்வு வரவில்லையே!

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை



Tuesday, March 14, 2023

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 23. ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! – தொடர்ச்சி)

ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்!

தலைப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள இந்தி மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும் என்று கருதக்கூடாது. அவர்களுக்கு இந்தியைச் செயற்படுத்துவதில் உள்ள உணர்வும் செயலும்போல் தமிழ்நாட்டு அதிகாரிகளுக்குத் தமிழ் மீது உணர்வும் செயற்பாங்கும் வேண்டும். இது குறித்துப் பின்னர்தான் வேறுவகையில் எழுத வேண்டும் என எண்ணினேன். ஆனால் கடந்த கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர்  “அரசு ஏன் பெயர்ப்பலகைகளை வைக்க வேண்டும். அவரவரை வைத்துக்கொள்ளச்சொன்னால் தமிழில் வைத்துக்கொள்ள மாட்டார்களா” என்று கேட்டார். “அப்படிச் சொன்னால்  ஏறக்குறைய எல்லாமும் ஆங்கிலத்தில்தான் இருக்கும்” என்றேன். இதற்கு முன்னர்ச்  செயலர் சிலர்  அறைகளில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை இருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளேன். அப்பொழுது அவர்கள், “நான் இங்கு பொறுப்பேற்க வரும் முன்னரே இவ்வாறு வைத்து விட்டார்கள்”, “பழைய பெயர்ப்பலகையைக் கழட்டி இங்கே கொண்டு வந்து மாட்டி விட்டார்கள்”, “என் மீது அன்பு கொண்ட ஒருவர்  அவராக ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை வைத்துவிட்டார்” என்பனே போல் சொல்லி உடன் ஆங்கிலப் பெயர்ப்பலகையைக் கழற்றச் செய்தனர்.

1990களில் ஒருநாள் புதியதாகப் பொறுப்பேற்ற தமிழ்வளர்ச்சி இயக்குநர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். இயக்குநர்,  “ஏன் வாசலிலேயே நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்” என்றார். அப்பொழுதும் நான் வாசலில் நின்று கொண்டு கதவைப்பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் “உள்ளே வாருங்கள்” என மீண்டும் சொல்லிக்கொண்டே வெளியே வந்து கதவைப்பார்த்தார்.

பெயர்ப்பலகை ஆங்கிலத்தில் உள்ளதைப் பார்க்கிறீர்களா? இப்பொழுதுதானே இயக்குநர் பொறுப்பேற்றுள்ளேன். விரைவில் தமிழில் பெயர்ப்பலகை வைத்து விடுகிறேன்” என்றார். “இதுவரை தமிழ்வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநராகவும் துணை இயக்குநராகவும் இருந்தீர்களே! அப்பொழுது தமிழ்ப்பெயர்ப்பலகை வைக்காதவர்கள் இப்பொழுது மட்டும் எப்படி வைப்பீர்கள்? எனவே இதனைக் கழற்றி விடுங்கள்.” என்றேன். “இல்லையில்லை! தமிழில் பெயர்ப்பலகை வைத்து விடுவேன். இது அரசாங்கப்பணத்தில் வைத்த பெயர்ப்பலகை யன்று. என் சொந்தப் பணத்தில் வைத்தது”  என்றார். “அஃதாவது, அரசாங்கப்பணம் என்றால் விதிப்படித் தமிழ்ப்பெயர்ப்பலகை வைத்திருப்பீர்கள். சொந்தப்பணம் என்பதால் அப்படி வைக்கவில்லை என்கிறீர்களா?” என்றேன். “இல்லையில்லை. நான் பெயர்ப்பலகையைக் கழற்றி விடுகிறேன். போதுமா” என்று உடனே கழற்றிவிட்டார்.

பொதுமக்களின் வீடுகளில் பாருங்கள். அங்கொன்றம் இங்கொன்றுமாக எங்கேயாவது தமிழ்ப்பலகையைக் காணலாம். ஆங்கிலப்பலகைதான் எங்கும் இருக்கும். வீடுகளில் முகப்பில் இல்லத்தின் பெயரையும் உரிமையாளரின் பெயரையும் பதித்து வைத்திருக்கிறார்களே! அதுவும் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு? தமிழ் உணர்வில்லா மக்களின் சிறு பகுதியினரான அரசு ஊழியர்களுக்கு மட்டும் எங்ஙனம் தமிழ் மொழி உணர்வு வரும்? கட்சித்தலைவர்களும் ஆட்சியாளர்களும் தமிழ், தமிழ் எனக் கூவிக் கொண்டிருந்தாலும் இவர்களின் உள்ளங்களில் ஆங்கிலம்தான் வீற்றிருக்கும். இந்த அடிமை நிலை போக வேண்டும். எனவேதான் ஒன்றிய அரசு ஊழியர்களைப்போல் இங்குள்ளவர்களுக்கும்  ஆட்சித் தமிழ் உணர்வு வேண்டும் என்கிறேன்.

ஒருவர், “தமிழ் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டுப் பாராட்டக் கூடாதா? எதற்கு எங்கள் குறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறீர்கள்” என்று கேட்டார். சம்பளம் பெற்றுச் செய்யும் பணிகளைப் பாராட்டுவது நம் வேலையல்ல. ஆனால், சம்பளம் பெற்றுக் கடமை தவறும் பொழுது சுட்டிக்காட்ட வேண்டுமல்லவா? நாம் பாராட்டிக் கொண்டிருந்தால் பாராட்டு மழையில் நனைந்து எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இருப்பதாக ஆள்வோரும் மக்களும் எண்ண மாட்டார்களா? சுட்டிக்காட்டினால்தானே குறைகள் களையப்படும். நாம் கடந்த கட்டுரையில் தலைமைச்செயலகத்திலிருந்து தமிழ் பரவ ஆட்சித்தமிழ் செயலாக்கக் கண்காணிப்பு குழுவினை அமைக்க வேண்டினோம். உடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், “ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் விரைந்து முனைப்போடு செயலாற்றுவதை உறுதி செய்யும் நோக்கில் ஆட்சித்தமிழ் செயலாக்கக் கண்காணிப்பு குழுவினை உடன் அமைத்திட வேண்டும் எனும் கோரிக்கையினை மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் கலந்து ஆலோசித்து விரைவில் ஆவன செய்கிறோம்” என மறுமொழி அளித்திருந்தார். அவருக்கு நம் நன்றி. 

இதற்கு முன்னரும் தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், “தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் குறித்த கட்டுரைகளை ஒரு கோப்பில் இட்டு, எதை எவ்வாறு நிறைவேற்றுவது எனத் திட்டமிட்டு வருகிறேன்” என்றார். அவருக்கும் நன்றி.

தமிழ் வளர்ச்சிச் செயலர் மரு.செல்வராசு ... அவர்களிடம் தமிழ் நல முறையீட்டை அளித்ததும் உடன் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டார்.

இத்தகைய ஆக்கச் செயல்களுக்காகக் குறைகளைச் சுட்டிக்காட்டுவது சரிதானே!

ஆட்சிமொழிச் செயலாக்கதில் யார், யார் தமிழில் வரைவுகள் மடல்கள் எழுதுகிறார்கள் என்று பார்ப்பதை விட, மக்களுக்குக் கண்களில் படும்அறிவிப்புகள்விளம்பரங்கள்செய்திகள்பெயர்ப்பலகைகள்தகவல் பலகைகள்பதாகைகள்அழைப்பிதழ்கள்  முதலிய யாவும் தமிழில் இருக்க வேண்டும் என்ற உறுதியை அரசு ஊழியர்கள் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். மக்களுக்கு அனுப்பக்கூடிய மடல்கள், மடலுறைகளில் குறிப்பிடும் முகவரிகள் என யாவும் தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்பதை இலக்காக அவர்கள் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மணத்தை மக்கள் நுகர முடியும்.

ஒன்றிய அரசின், தகவல் பலகைகள், பெயர்ப்பலகைள், அறிவிப்புகள், விளம்பரங்கள், சுற்றறிக்கைகள், ஒப்பந்த அறிவிப்புகள், பணியாணைகள், அழைப்பிதழ்கள், தகவல் கல்வெட்டுகள் என யாவும் இந்தியில் அல்லது இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் உள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகளில்கூட இந்தியும் ஆங்கிலமும்தான் உள்ளன. அஃதாவது இந்தியில்லாத எதையும் பார்க்க முடியாது. யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த நிலைதான். அதுபோன்ற உறுதிப்பாடு நம்மவர்களுக்கும் வேண்டுமல்லவா? இங்கே இவற்றுள் சில தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். அல்லது பெரும்பான்மை ஆங்கிலத்தில்மட்டும் இருக்கும்.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டு தமிழை இல்லாமல் ஆக்குகிறோமே என்ற கவலையோ வருத்தமோ இவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. இத்தகையவர்களுக்குத் தண்டனை கொடுத்தாலதானே திருந்தித் தமிழை வாழ வைப்பார்கள். எனவேதான், ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் தவறுசெய்வோருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்கிறோம்.

அரசு ஊழியர்கள் நல்ல வழிகாட்டுதல் இருப்பின் தமிழைப் பயன்படுத்துவதில் ஆர்வமாகத்தான் உள்ளார்கள். ஆனால், சில நேர்வுகளில் மேலதிகாரி  போதிய தமிழ் அறியாதவராக இருக்கும் பொழுது அவர் கேட்கிறார் என்பதற்காக ஆங்கிலத்தைப் பயன்படுத்தி விடுகிறார்கள். தமிழாணை மட்டுமே செல்லத்தக்கது என அரசு அறிவித்தால் உயர்அதிகாரிகள் ஆங்கிலத்தில் கேட்க மாட்டார்கள் அல்லவா? இவை குறித்துப் பின்னர்த் தனியாகப் பார்ப்போம். இப்போது நாம் வேண்டுவது மக்களுடன் நேரடித்தொடர்பில் உள்ளவற்றில் தமிழையே பயன்படுத்துங்கள். ஒன்றிய அரசில் பணி யாற்றுவோா்போல் தமிழ் உணர்வுடன் செயற்பட்டுத் தமிழை வாழ வையுங்கள் என்றுதான்.

தமிழ் உணர்வு கொள்வார்களா? தமிழை முழுமையாகப் பயன்படுத்துவார்களா?

தமிழ் நலத்தை வலியுறுத்தும் முதல்வரும் தமிழ் அமைச்சரும் பிற அமைச்சர் பெருமக்களும் தலைமைச் செயலரும் தமிழ் வளர்ச்சிச் செயலரும் தமிழ் வளர்ச்சி இயக்குநரும் இருக்கும்பொழுது கூடத் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்றால் எப்போதுதான் தமிழ் வாழும்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, March 10, 2023

தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 22 – இலக்குவனார் திருவள்ளுவன்

 




தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க!

(தமிழ்க்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 21 தொடர்ச்சி)

தமிழ் ஆட்சிமொழிச்செயலாக்கம் குறித்து ஆட்சியாளர்களும் அதிகாரிகள் மட்டத்தினரும் ஆர்வமுடன் பேசுவதை நாம் அறிவோம். அதே நேரம் ஆட்சிமொழிச் செயலாக்கம் என்பது வெற்றுரையாகத்தான் இன்றும் உள்ளது என்பதையும் நாம் நன்கறிவோம். இந்நிலை தொடரத் தொடரத் தமிழ் வளர்ச்சி என்பது தேய்பிறையாகத்தான் நலிகிறது.

தலைமைச் செயலகத்திலிருந்து துறைத்தலைமைக்கும் சில நேர்வுகளில் பிற சார்நிலையினருக்கும் ஆங்கிலத்தில் அனுப்பி விட்டு அங்கிருந்து அடி நிலை வரை ஒவ்வொரு நிலையிலும் “தமிழில் எழுது, தமிழில் எழுது” என்று சொல்வது முரணாகப் படவில்லையா? தோற்றுவாய் தமிழாக இருந்தால், எல்லா நிலையிலும் இயல்பாகவே தமிழ்தானே தொடரும்! நிலைக்கும்! எனவே, நாம் முதலில் செய்ய வேண்டியது தலைமைச்செயலகத்தில் முழுமையான தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்க ஆய்வை மேற்கொள்வதுதான்.

ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் தமிழைத் தவணை முறையில் பயன்படுத்தி மறந்து விடுவதையும் ஆங்கிலமாயின் எவ்வகை ஆணையுமின்றியும் ஆணைக்கு மாறாகவும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதையும் பார்க்கலாம். இதன் தொடர்பில் சில முன்நினைவுகளையும் குறிப்பிடின் தமிழ்ச்செயலாக்க நிலையைப் புரிந்து கொள்ள உதவும்.

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் தமிழ் ஆட்சிமொழி அமைச்சராக இருந்த பொழுது, தலைமைச் செயலர் அறை முகப்பில் பொன்னெழுத்துகளில் ஆங்கிலம் வீற்றிருக்கிறது. தலைமைச் செயலர்கள் பெயர்ப்பட்டியல் ஆங்கிலத்தில் உள்ளது எனக் குறிப்பிட்டு மடல் அனுப்பினேன்.  மூன்று நாளில் மதுரை வந்த அமைச்சர், “இப்பொழுது போய்ப்பாருங்கள் பொன்னெழுத்துகளில் தமிழைக் காணலாம்” என்றார்.

தலைமைச் செயலகம் வந்து பார்த்த நான், தலைமைச் செயலர் என்னும் பதவிப்பெயரை மட்டும் தமிழில் குறிக்கப்பட்டதைக் கண்டேன். ஆனால், பெயர் நிரல் ஆங்கிலத்தில்தான் இருந்தது. அதை அமைச்சரிடம் தெரிவித்தேன். பின் நடவடிக்கை எடுத்த பின், அப்போதைய தலைமைச் செயலர் பெயரை மட்டும் தமிழில் குறிப்பிட்டனர்.  பின் வலியுறுத்தியதும் இறுதிப்பலகையில் தமிழில் பெயர்களைக் குறித்தனர். அடுத்தும் தமிழில் பெயர்கள் எழுதப்பட்டன. பின்னர் எப்போதோ ஆங்கிலத்திற்கு மாறிவிட்டனர். நேற்று நான் தலைமைச் செயலர்கள் நிரல் பலகை ஆங்கிலத்தில் இருந்ததைக் கண்டு வருத்தமுற்றேன்.

அதேபோல் பத்துத் தளம் கொண்ட நாமக்கல் மாளிகைக் கட்டடத்தில் ஒவ்வொரு தளத்திலும் உள்ள துறைகளின் பட்டியல் ஆங்கிலத்தில் உள்ளதைச் செயலர் திரு வை.பழனிச்சாமி இ்.ஆ.ப. அவர்களிடம் தெரிவித்தேன். அதனால் உரியவர்கள் த.வ.துறைபெயரை மட்டும் தமிழில் குறிப்பிட்டனர். இஃதென்ன கூத்து? என்று கண்டித்த பின், த.வ.துறை இருந்த ஆறாவது தளத்தில் உள்ள தகவல் பலகையை மட்டும் தமிழில் குறிப்பிட்டனர். பிறகு செயலரிடம் தெரிவித்து அவரே நேரடியாகக் கண்டித்து அறிவுறுத்திய பின்னர், அக்கட்டடத்தின் எல்லாத் துறைத்தகவல் பலகைகளையும் தமிழில் குறித்தனர்.

இப்பொழுது அதில் மாற்றமில்லை. ஆனால், அங்கும் பழைய கட்டடத்திலும் செய்தித்துறை காட்சிக்கு வைத்துள்ள தகவல் பலகைகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. ஒன்றிய அரசு கூட்டும் கூட்டத்தில் பங்கேற்கையில் வைக்கும் துறைப்பெயர்களை ஆங்கிலத்தில்தான் வைத்துள்ளனர். இதனை இரு மொழிகளில் வைக்கலாமே!

அறைகளிலுள்ள பெயர்ப்பலகைககளில் தமிழ் முதலெழுத்துகள் இல்லாமல் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பல குறைகளைக் காணலாம்.

திரு கிறித்துதாசு காந்தி இ.ஆ.ப. தமிழ் வளர்ச்சிச் செயலராக இருக்கும்போது, நான் வேண்டியதற்கிணங்க அவர் தலைமைச்செயலகத்தில் தமிழ் ஆய்வுப்பணியை மேற்கொள்ளச் செய்தார். அதற்கு ஓரளவு பலன் இருந்தது. இது தொடர்ந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பின்னரும் இத்தகைய ஆய்வுகள் மேற்கொண்டதாகவும் ஆனால் புள்ளிவிவரம் கோரிய அத்தகைய ஆய்வுகளால் எதிர்பார்த்த பயனில்லை என்றனர்.

தமிழ் ஆட்சிமொழித்தேர் இயங்கவேண்டுமெனில், தார்க்குச்சி தேவை. ஆனால், தார்க்குச்சியைப் பயன்படுத்த அதிகாரத்தில் உள்ளவர்கள் முன்வரமாட்டார்கள்; ஆட்சித் தேரும் இயங்குவதில்லை. விரைந்தும் முழுமையாகவும் தமிழ் ஆட்சிமொழித்திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும் என்பதே நம் இலக்காக இருக்க வேண்டும். எனவே, தலைமைச்செயலர், தமிழ்வளர்ச்சித்துறைச் செயலர் தலைமையில் தமிழ் ஆய்வு- கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். தமிழார்வம் மிக்க செயலர்களை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.

செயலர் நிலையில் இல்லாத தமிழார்வம் மிக்க  பிற அதிகாரிகளையும் இக்குழுவில் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். த.வ.செயலர் மரு.செல்வராசு இ.ஆ.ப. தமிழார்வம் மிக்கவராகவும் எதுவும் முறையிட்டால் உடன் நிறைவேற்றுநராகவும் உள்ளார். புகழ்மிகு எழுத்தாளர் தமிழார்வம் மிக்க தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு அவர்களுக்குத் தமிழார்வம் மிக்க அதிகாரிகளைத்  தெரிந்தே  இருக்கும். எனவே, குழுவை அமைப்பதில் சிக்கல் இராது.  தமிழ்வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஒளவை ந.அருள், தமிழ் ஆட்சிமொழித்திட்டத்தை முழுமையாகச் செயலாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் உள்ளார். எனவே, அவர் தலைமையிலான தமிழ் வளர்ச்சித்துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்களைக் களத்தில் இறக்க வேண்டும். தமிழ் ஆணைகள் எண்ணிக்கை, ஆங்கில எண்ணிக்கை, தமிழ்ப்பதிவேடுகள் எண்ணிக்களை, ஆங்கிலப் பதிவேடுகள் எண்ணிக்கை, தமிழ்க்கையொப்பமிடுவோர் எண்ணிக்கை, ஆங்கிலக் கையொப்பமிடுவோர் எண்ணிக்கை என்ற முறையில் வெறும் புள்ளி விவரம் திரட்டுவதாக ஆய்வு அமையக் கூடாது. அரசுப்பணியாளர் நடத்தை விதிகளின் கீழ், ஆட்சித்தமிழ்ச்செயலாக்கத்தை நிறைவேற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே ஆணை உள்ளது. எனவே, பணி நீக்கம் வரை தண்டனை வழங்க வழி உள்ளது. இதனை உணர்ந்து  ஒழுங்கு நடவடிக்கை, தண்டனை வழங்கும் அதிகாரம் ஆகியவற்றை ஆட்சிமொழிச்செயலாக்க நேர்வில் மட்டும் துறைத் தலைவர்களிடமிருந்து மாற்றி ஆட்சிமொழி ஆய்வுக் கண்காணிப்புக் குழுவிற்கு வழங்க வேண்டும். இந்த ஆய்வின் மூலம் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கினால்தான் மேற்கொண்டு ஆங்கிலப் பயன்பாடு நிலைக்காது.

வழிகாட்டுதலின்றியே பலர் தமிழில் எழுதுவதில்லை. எனவே, செயலக அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் தமிழில் எழுதுவதற்குத் தக்கவர்களைக் கொண்டு தக்க வழிகாட்டுதல் வழங்க வேண்டும். 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

(திருவள்ளுவர், திருக்குறள் 648)

அத்தகைய வல்லாரைக் கொண்டு ஆட்சித்தமிழ்ச்செயலாக்க ஆய்வு-கண்காணிப்புப் குழுவை அமர்த்தி, என்றும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்வதை நனவாக்க வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive