Wednesday, January 31, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:136-140

 




(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்-131-135 – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 136-140

136. Abort  கருச்சிதைவுறு  

கருக்குலைதல், இடைமுறி, இடையழி, கருச்சிதை, கருப்பங்கரைதல், கருச் சிதைதல், காய்விழுதல், கருச் சிதைந்துவிழுதல், சிதை, செயன்முறி, செயல்முறிப்பு .  இவற்றுள் கரு தொடர்பில்லாத சொற்கள் பொதுவான முறிவுகளைக் குறிப்பன.  

abortus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கருச்சிதைவு. இதிலிருந்து abort > abortion   உருவாயின.
137. Aborticideகருக்கொலை  
தானாகவே கருவைக் குழந்தையாக வளரவிடாமல் அழிப்பது/கொல்லுவது கருக்கொலை.
138. Abortion  கருச்சிதைவு;
கருச்சிதைப்பு
கருக்கலைப்பு   வளர்ச்சித் தடை ; வளர்ச்சி தடைப்பட்ட பொருள் ; உருக்கோணல் .          
கரு வளர்ச்சியடையும் முன்னரே இயற்கையில், முன்முதிர்வு நிலையில் குலைதல் அல்லது சிதைதலைக் கருச்சிதைவு என்கிறோம். நாமாக மேற்கொள்ளும் கருச்சிதைப்பைக் கருக்கலைப்பு என்கிறோம். ஆனால் பெரும்பாலான பிற மொழியினர் இரண்டையும் ஒன்றாகவே குறிப்பிடுகின்றனர்.  
காண்க: Aborticide- கருக்கொலை
139. abortionistகருக்கலைப்பர்  
கரு முதிர்ந்து குழந்தை பிறப்பதைத் தடுக்கும் வகையில் கருவை கருவறையிலேயே – கருப்பையிலேயே சிதைத்து அகற்றுபவர்.    

எசுப்பானிய மொழியில் abortista  என்றால் கருக்கலைப்பு ஆதரவாளர் என்று பொருள். இதிலிருந்து abortionist உருவானது.
140. Abortiveசிதைவுற்ற
நிறைவுபெறாத முற்றுப்பெறாத  
கைவிடப்பட்ட கிளர்ச்சி, முற்றுப்பெறாத திட்டம், முழுமையற்ற வளர்ச்சி போன்ற  நிறைவேறாத செயல்பாடுகளைக் குறிக்கிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, January 28, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்-131-135

 




(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 126-130 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  131-135

131. Abolition of titles  பட்டங்களை ஒழித்தல் விருதுகளை ஒழித்தல்‌   இந்திய அரசியல் யாப்பு 18 ஆம் இயல் பட்டங்கள் ஒழிப்பு (Abolition of titles)பற்றிக் கூறுகிறது.
132. Abolition of untouchabilityதீண்டாமை ஒழிப்பு   தீண்டாமை என்பது மனிதருள் இனம், பிறப்பு, குலம் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்து வேற்றுமை பாராட்டும் குமுகாயக் குற்றம்.    அரசியல் யாப்பு கூறு 17இல் தீண்டாமை ஒழிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீண்டாமையை எந்த வடிவத்திலும் நடைமுறைப்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய  குற்றமாகும்.
133. Abolition of zamindari system  நிலக்கிழார் முறை ஒழிப்பு   சமீன்தாரி முறை ஒழிப்பு என்பர். சமீன்தாரி தமிழ்ச்சொல்லல்ல.   இந்தியத்துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், நிலக்கிழார் எனக் குறிப்பிடும் முறை வந்தது. இந்தியாவின் தலைமை ஆளுநராக 1786-1793 ஆம் ஆண்டுகளில் இருந்த காரன்வாலிசு( Lord Cornwallis) நிலக்கிழார் முறையை அறிமுகப்படுத்தினார்.   இந்திய விடுதலைக்குப் பின்னர் நிலக்கிழார் முறை சடடத்தின்படி ஒழிக்கப்பட்டது.
134. Aboriginalதொல் பழங்குடி   தொன்முதுவர் தொன்முதிய   Latin ab origine என்னும் இலத்தீன் தொடரின் பொருள் தொடக்கத்திலிருந்து. தொடக்கக்காலத்திலிருந்து உள்ள குடிமக்களை/மொழியைக் குறிக்கிறது.   தொல்பழங்காலத்தில் அறியப்பட்டதைக் குறிப்பதால், தொல்முதுமொழியையும் குறிக்கும். எ.கா. தமிழ் ஒரு தொல்முதுமொழி
135. Aborignesபழங்குடியினர்   நடைமுறையில் ஆத்திரேலியப் பழங்குடியினரைக் குறிக்கின்றது. எனினும் எல்லாத் தொல்குடியையும் குறிக்கும் பொதுச்சொல்லாகவே கருத வேண்டும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, January 27, 2024

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 2/7 – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம்

சென்னை வளர்ச்சிக் கழகம்

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்

முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 3/7

Instrument – ஆவணம் / பத்திரம்

instrument – கருவி என்பதே பொதுவழக்கில் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

துணைப்பொருள், கருவியாக உதவும் சாதனம், கருவியாகப் பயன்படுபவர், கையாள், இசையொலி எழுப்பும் சாதனம், ஒப்பந்தப்பத்திரம், பதிவேடு, இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை, துணைக்கலம்; கருவியாகப் பயன்படுதல், உபகரணம்; கருவி, பத்திரம், துணைக்கலம், கருவியாகப் பயன்படுதல், முறை ஆவணம், இயற்றனம், முட்டு, வித்து, கதி, இரும்பு, துப்பு, ஆயுதம், கரணம், படை, இயற்கை, எத்தனம், உடல், கருவிக்கருத்தன், ஆய்தம், எலிவாலரம் எனப் பல பொருள்களை அகராதிகளில் காணலாம்.

சட்டப்படி செயற்படுத்துவதற்குரிய சட்டங்கள், உடன்படிக்கைகள் முதலியவற்றைப் பதிவு செய்யும் சட்டப்படியான ஆவணமே இது. இது தொடர்புடைய சட்ட உரிமைகள், கடமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கிறது.  எனவே, நேர் பொருளாகத் தெரிய வரும் கருவி என்பதற்கு மாற்றாக பயன்பாட்டிற்கேற்ப ஆவணம் அல்லது பத்திரம் எனலாம்.

Indian penal code – இந்தியத் தண்டிப்புத் தொகையம்

Indian penal code என்பதை இந்தியக் குற்றவியல் தொகுப்புச் சட்டம், இந்தியக் குற்றத் தண்டனை விதித்தொகுப்பு, இந்தியத் தண்டனைத் தொகுப்புச்சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், இந்திய ஒறுப்புமுறைச் சட்டத்தொகுப்பு என்கின்றனர்.

 criminal procedure code என்பதைக்  குற்றவியல் நடைமுறை விதித்தொகுப்பு, குற்றவியல் நடைமுறைத் தொகுப்பு என்கின்றனர்.  Indian penal code என்பதையும் இந்தியக் குற்றவியல் சட்டம் என்னும் பொழுது குழப்பம் நேர்கிறது.

 code என்றால், விதித்தொகுப்பு, குறிமுறை, ஒழுங்குமுறை, குழூஉக்குறி, நெறிமுறைத் தொகுப்பு, குறியம், குறி முறை நெறித் தொகுப்பு, குறியீடு என்கின்றனர்.  சட்டநெறி, முறைநெறி,  குறியீட்டெண், குறிப்பீடு, ஒழுங்குமுறை என இப்பொழுது குறிக்கின்றனர். மரத்தின் அடிப்பகுதி அல்லது தண்டையும் குறிக்கும். மரத்தின் அடிப்பகுதியில் மெழுகு தடவி எழுதப் பயன்படுத்தினர். எனவே, code என்பது எழுத்தையும் குறிக்கலாயிற்று. பின் எழுத்துகளின் தொகுப்பையும் குறித்தது.

ஒரு சொல்லிற்கு ஒரு பொருள்தான் வழங்க வேண்டும். ஆனால், பயன்பாட்டு அடிப்படையில் வெவ்வேறிடங்களி்ல் வெவ்வேறு பொருள் வருவதால் பல சொற்கள் அமைகின்றன. எனினும் குறிப்பிட்ட நேர்வில் குறிப்பிட்ட சொல்லிற்கு ஒரே ஒரு பொருளையே வரையறுத்துக் கொள்ள  வேண்டும்.

editing என்பதைத் தொகுப்பு என்பதால் இங்கே அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தொகுக்கப்பட்ட நூல்களை நாம் தொகை என்கிறோம். எனவே, தொகுக்கப்படும் விதிகளை அல்லது சட்டங்களை நாம் தொகை என்றே கூறலாம். இந்த இடத்தில் தொகை என்றால் பணத்தொகை (amount) எனக் கருதக்கூடாது. ஆனால் தொகை என்பதை  amount எனக் கருதலாம். எனவே, தொகையம் எனலாம்.

penal என்றாலும் punishment என்றாலும் நாம் தண்டனை என்றே குறிக்கிறோம். எனவேதான் Indian penal code   என்றால் இந்தியத் தண்டனைச் சட்டம் என்கிறோம். அகராதிகளில் penal -தண்டனைக்குரிய என்னும் பொருள் தரப்படுகிறது. punishment என்பது தண்டனையைக் குறிக்கிறது. எதற்கு எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பதை வரையறுப்பது penal ஆகும். எனவே, இதனைத் தண்டிப்பு முறை > தண்டிப்பு எனலாம்.

எனவே,  Indian penal code – இந்தியத் தண்டிப்புத் தொகையம் எனலாம்.

Act – செயன்மை

அடுத்து act  என்னும் சொல் குறித்தும் இதனடிப்பிறந்த Action சொல் குறித்தும் பார்ப்போம்.

act   என்றால் பொதுவாக நடி, என்று பார்க்கிறாம். அகராதிகளில் act   என்பதற்குக்,

காரியம், செயல்படுதல், செயல், சட்டமன்றச் சட்டம், கட்டளைக்கோல், கட்டளைச்சட்டம், நடந்துகொள், செயலாற்று, பாசாங்கு செய், நாடகத்தில் நடி, வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி, நிகழ்ச்சி, பாராளுமன்றச் சட்டம், நாடகக் காட்சி, நாடகத்தில் நடித்தல், செய்தல், பாசாங்கு செய்தல், அவிநயம், அவினயம், நடிப்பு, நாடகக் களம்,  மாற்றாள் வேலை பார்த்தல், தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல், செயல் தூண்டும் செயற்குறிப்பு, வழக்கு நடவடிக்கை, இயக்கம், செயலாற்றத் தூண்டு, செயற்படுத்தல், சுறுசுறுப்பான, செயலாற்றும் திறமையுள்ள, விரைவாகச் செல்லும் திறமையுள்ள, விழிப்பான, சுறுசுறுப்பாக, செய்வினை, கொள்கைகளைச் செயற்படுத்து, இணங்க நடந்துகொள், தாக்குதல், சட்டகை, செயலுறல், பணியாற்று, வினையாற்று, செய்கை; செயல், சட்டம் செய்சட்டம், தொழில், அமல், செய், செய்காரியம், கள்ளத்தொழில், அங்கம், செய்கை, வினை, கிரியை, கம், கிருத்தியம், செயல், சட்டம், நாடகக் களம் (வி), செய், நடி, எனப் பல  பொருள்கள் கூறப்படுகின்றன.

இவற்றுள் சட்டம் என்பதே சட்டத்துறையில் பயன்படுத்தப்படுவது.

law  என்றாலும் சட்டம் என்கிறோம். இதனால் act- செய்சட்டம் என இப்போது கூறுகின்றனர்.

Act என்பது செயலைக் குறிப்பது. செய்யவேண்டியது அதன் முறைமை முதலானவை பற்றி இயற்றப்படுவதே சட்டப்படிச் செய்ய வேண்டியதைக் குறிப்பதாகும். எழுத்துவடிவிலான சட்டம் யாவும் செய்சட்டம்தான். எனவே பொதுவான அச்சொல்லால் குறிப்பதைத் தவிர்க்கலாம். சட்டப்படிச் செய்யவேண்டிய செயலைக் குறிப்பதால் செயன்மை எனலாம்.

Tamilnadu Children Act – தமிழ்நாடு சிறார் செயன்மை

Probationers of offenders Act – குற்றவாளிகள் நன்னடத்தைச் செயன்மை

என்பனபோல் பயன்படுத்தினால் செயன்மை என்பது எளிய சொல்லாக மாறிவிடும். இரட்டைச் சொல்லைத்தவிர்கக் வேண்டும் என்பதற்காகவே இவ்வொற்றைச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)

Wednesday, January 24, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 126-130

 





(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 121-125 – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 126-130

126. Abodeஉறைவிடம்
இல்லம், இருப்பிடம், பணியிடம், தொழிலிடம்   பிணையில் விடுவிப்பதற்கு நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அல்லது பிணையாளருக்கு நிலையான அல்லது இடைக்காலமாக வசிப்பிடம் அல்லது பணியிடம் /தொழிலிடம் இருந்தால் மட்டும் கருதிப் பார்க்கும்
127. Abolish  நீக்கு
ஒதுக்கு, ஒழி ஒழித்துக்கட்டு; நீக்கு   நடைமுறையில் உள்ள ஒன்றை இல்லாதாக்குதல்.   நிறுவனங்கள்/அமைப்புகள் பழக்க வழக்கங்களை நிறுத்தி விடுதல். எ.கா.:  தீண்டாமையை ஒழித்தல், உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல்.
128. Abolition  அழிப்பு
நீக்கம், முடிப்பு, ஒழிப்பு, நிறுத்தம்.   ஒழித்துக்கட்டுகை; நீக்குதல், ஒழித்தல்.   நல்லொழுக்கங்களை நிலை நிறுத்துவதற்காக, மது, சூது, பொதுமாது முதலான தீய பழக்கங்களைச் சட்டத்தின்மூலம் இல்லாதாக்குதல்.     பிரிவு.1(1) ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குமுறை – ஒழிப்பு) சட்டம், 1970  பிரிவுரை 110(1அ) இந்திய யாப்பு
129. Abolition of inamsஇறையிலிகளை ஒழித்தல்    
தமிழ்நாடு சிறுவகை இறையிலிகள் (ஒழித்தலும் குடியானவமுறைக்கு மாற்றலும) சட்டம் 1963  [TamilNadu Minor Inams (Abolition and Conversion Into Ryotwari) Act, 1963/ Tamil Nadu Act 30 of 1963]  இது குறித்துக் கூறுகிறது.
130. Abolition of Postபணியிட நீக்கம்  
பணியிடம்/பதவியிடம் ஒன்றை நீக்குதல். குறுங்காலத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடத்தை அக்கால வரம்பு முடிவதால் அல்லது சில ஆண்டுகளாகவே பணியிடம் ஒழிவிடமாக இருந்தால் அப்பணியிடம் தேவையில்லை எனக் கருதி அல்லது வேறு காரணங்களால் பணியிடத்தை இல்லாது ஆக்குதல்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, January 21, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 121-125

 





(சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 : இலக்குவனார் திருவள்ளுவன்)

சட்டச்சொற்கள் விளக்கம் 121-125

126. Abnegationமறுதலிப்பு   பொதுநலன் கருதித் தன் நலனைக் கைவிடல்.
Abnormalஇயல்நெறி பிறழ்ந்த, இயல்பிழந்த, இயல்புமீறிய   அமைப்பு முறைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகைமையில்லாத அல்லது இயல்பற்ற நிலைமைகள்.
Abnormalityபிறழ்மை   பிறழ்வு   இயல்பு அல்லாத நிலைமையை  அல்லது இயல்பு கடந்த நிலைமையக் குறிப்பது.
Abnormality of mind     இயல்புகடந்த மனநிலை   இயல்பு திரிந்த மனநிலை இயல்பிலி மனம் மனத்திரிவு     இ.த.ச.பிரிவு 84 மனநலமற்ற ஒருவரின் செயல் குறித்துக் கூறுகிறது.   ஒரு செயலைச் செய்யும் பொழுது, மனநலமற்று இருந்தால் அல்லது செயலின் தன்மையை அறிய இயலாத நிலையில் இருந்தால் அவர்  தவறான செயல் அல்லது சட்டமுரணான செயல் செய்திருந்தால் அது குற்றமாகாது.     கருத்தரிப்பின் பின்னும் மகப்பேற்றிற்கு முன்னும் மகவு கண்டறியும் உத்தி(பாலியல் தேர்வுத் தடை)சட்டம், 1994, பிரிவு 2(ஓ)/2(ம)
Aboardஊர்தியில்    நீரில் / இருப்புப் பாதையில்/வானில் இயங்கும் ஊர்தியில்   வானூர்தியில் தொடரியில்(தொடர் ஊர்தியில்) கப்பலில்   à bord என்னும் பிரெஞ்சு தொடரிலிருந்து Aboard என்னும் சொல் பிறந்தது. ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தப்படும் பொழுது வரவேற்பதற்கும் இத்தொடர்(“Welcome aboard” ) பயன்படுகிறது. தொடரியோ கப்பலோ புறப்படும் பொழுதும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.(“All aboard!”)

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, January 20, 2024

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 2/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம்

சென்னை வளர்ச்சிக் கழகம்

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்

முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 2/7

Alimony-துணைமைப்படி/துணைமைத் தொகை

ஊட்ட உணவு, ஊட்டச்சத்து, ஊட்டமளித்தல் என்னும் பொருள் கொண்ட alimōnia  என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து alimony சொல் வந்தது.

வாழ்க்கைப்படி, பேணற்படி, ஊட்டம், வாழ்க்கைப் படி, பிரிமனைப் படி, வாழ்க்கைப்படி, வாழ்க்கைப் பொருளுதவி, வாழ்க்கைப் படி. சீவனாம்சம் எனப் பலவாறாகச் சொல்லப்படுகிறது. சீவனாம்சம் தமிழல்ல. பொதுவாகக் கணவன் பிரியும் நிலைக்கு மனைவிக்குத் தரும் வாழ்க்கைப்படியாக உள்ளது.

மணவிலக்கிற்குப் பின்னர், மனைவியின் உண்டி, உறையுள்,  உடை  பிற தேவைகளை நிறைவேற்றுவதற்காக உதவும் தொகை. மனைவியுடன் குழந்தை அல்லது குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கும் சேர்த்து வழங்கப்டுவது.

எனினும் சில நேர்வுகளில் மனைவியும் கணவனுக்குப் பேணல்படி வழங்கும் நிலையும் உள்ளது.

துணையைப் பிரிந்து வாழ்தல் அல்லது மணவிலக்கு பெற்று வாழ்தல்  என்னும் ஒப்பந்த அடிப்படையில் துணைவருக்கு அல்லது முன்னாள் துணைவருக்குக் கொடுக்கப்பட வேண்டியது என நீதிமன்றத்தால் வரையறுக்குப்படும் தொகையாகும்.

குறைந்த வருவாய் அல்லது வருமானமின்மையால் துணைவர் அல்லலுறக்கூடாது என்பதற்காக இது வழங்கப்படுகிறது.

பொதுவாக வாழ்க்கைத் துணைவர் ஒருவர் இல்லற வாழ்க்கையிலிருந்து பிரியும் பொழுது  மற்றொரு துணைவருக்கு அளிப்பது என்பதால் துணைமைப்படி எனலாம். படி என்று சொல்வதன் காரணம் திங்கள் தோறும் அளிக்கப்படுவதால். ஒட்டு மொத்தத் தொகை ஒரே தவணையில் வழங்கினால் துணைமைத் தொகை எனலாம். 

divorce என்றால் மண முறிவு அல்லது மண விலக்கு என்னும் பொருள்களிலேயே பார்க்கிறோம். 1990களில் ஒரு பையன் தன் பெற்றோரிடம் இருந்து divorce கேட்டு வழக்கு தொடுத்தான். அப்பொழுதுதான் உறவு முறிவு அல்லது உறவு விலக்கு என்பதே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. இத்தகைய நேர்வில் வழங்கப்படும் படி பேணற்படியாகும். எனினும் வாழ்க்கைக்குத் துணையாகச் செலவுத் தொகையாக அல்லது பேணல் தொகையாக வழங்கப்டுவதால் துணைமைப்படி என்பதை இதற்கும் பொருத்தமாகக் கருதலாம்.

alibi, plea of – அயலிருப்பு   முறைப்பாடு

alibī என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானது.  இதன் பொருள்கள் வேறோர் இடத்தில் அல்லது மற்றோர் இடத்தில் என்பனவாகும்.

வேற்றிட வாதம் என்கின்றனர்.  அயலிடத்தில் இருப்பதாகத் தெரிவிப்பதால் alibi – அயலிட இருப்பு > அயலிருப்பு எனலாம். குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தில் குற்றத்திற்குத் தொடர்பில்லாத அயலிடத்தில் இருந்ததாக முறையிடுவதால் அயலிருப்பு முறையீடு ஆகிறது.

வழக்குரை, வேண்டுகோள், வேண்டுதல், எதிருரை, வாதுரை, சுர, நியாயம், வழக்கு, முறையீடு, வழக்கு, இரைஞ்சல், முறையீடு, வழக்குரை, வாதம், இரைஞ்சல், பிராது, புகார் எனப் பலவும் plea  என்பதற்குத் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றுள் பிராது என்பது உருதுமொழியி்ல் இருந்து வந்த சொல்.

பிற  Plaint,  request, Rejoinder, complaint போன்ற பிற சொற்கள் வரும் இடங்களில் பயன்படுத்தப்படுவதால் முறைப்பாடு எனலாம்.

குற்றஞ் சாட்டப்படுநர், அல்லது குற்றவாளி என ஐயப்படுபவர், குற்றம் நடந்த இடத்தில், குற்றம் நிகழ்ந்த நேரத்தில் இல்லை என முறையிடுவதே அயலிட முறைப்பாடு >  அயலிருப்பு முறைப்பாடு

குற்றவழக்குச்சட்டத்தின்படிக் குற்றம் நடந்த இடத்தில்  தான் இல்லை என மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ் சாட்டப்பட்டவருடையதே.

 amicus curiae, amica curiae – ஆற்றுநர்

amicus curiae  ஆண் உதவியாளரையும்   amica curiae பெண் உதவியாளரையும் குறிக்கிறது.

amīcus, cūria, cūriae என்னும் இலத்தீன் சொற்களின் பொருள்கள் முறையே நண்பன், நீதி மன்றம், நீதிமன்றத்தின் என்பனவாகும்.

amica என்பது பெண் உதவியரைக் குறிக்கும். பால் வேறுபாடின்றி இருபாலினரையும் நீதிமன்ற உதவுநர் எனலாம். நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர் என்பர்.

 சட்ட வழக்கில் தரப்பினராக இல்லாமல், முறைமன்றத்திற்குத் தகவல், வல்லமைக் குறிப்பு அல்லது நுண்ணறிவை  வழங்கி உதவும் தனியாள் அல்லது அமைப்பு.  எனினும் மன்ற உதவுநர் கருத்தைக் கருதிப்பார்க்க வேண்டுமா இல்லையா என்பது முறைமன்றத்தின் முடிவுரிமைக்கு உட்பட்டது.

ஆனால், உதவியாளர்/ உதவுநர் என்னும் பொழுது அலுவலகப் பணிக்கான உதவியாளா் அல்லது எழுத்துப்பணிக்கான உதவியாளர் எனப்பொருள் கொள்ளவே நேரிடும். ஏனெனில் அலுவலக உதவியாளர்,இளநிலை உதவியாளர், உதவியாளர் எனப் பதவிகள் உள்ளன. எனவே, அவர்களிலிருந்து வேறுபடுத்த வேறு சொல் கையாள வேண்டும்.

ஆற்றுதல் என்பது வழிகாட்டி உதவுவதைத் குறிக்கும். எனவேதான் அவ்வாறு வழிகாட்டும் நூலை ஆற்றுப்படை என்றனர்.

    “ஒருவீ ரொருவீர்க் காற்றுதிர்”  என்கிறார் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (புறநானூறு 58, அடி 20,) இவ்வாறு உதவுதல் என்னும் பொருளில் வந்தாலும் வழிநடத்துதல் என்னும் பொருளே மிக்கிருக்கிறது.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவன் என்கிறார் திருவள்ளுவர் (திருக்குறள் 46)

அறத்தாற்றின் – அறவழியில், இல்வாழ்க்கை ஆற்றின் – இல்லறத்தை நடத்திச் சென்றால் எனப் பொருள்கள்.

ஆற்றின் – ஆற்றுதல் – வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல், உவமையாதல்; செய்தல், தேடுதல், உதவுதல், நடத்துதல், கூட்டுதல், சுமத்தல், பசி முதலியன தணித்தல்; துன்பம் முதலியன தணித்தல்; சூடு தணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல் முறுக்காற்றுதல்; நீக்குதல் எனப்பொருள்கள்.

எனவே, வழி நடத்துநரை ஆற்றுநர் எனலாம்.

எனவே, முறை மன்றத்தில் வழக்கு தொடர்பான வழி நடத்துவதற்காக ஆற்றுப்படுத்துபவரை ஆற்றுநர் எனலாம். எனவே, முறைமன்ற ஆற்றுநர் > முறை யாற்றுநர் > ஆற்றுநர் எனலாம். ஆண் பெண் இருபாலராக இருப்பினும் ஆண் உதவியாளர் பெண் உதவியாளர் என்பதுபோல் குறிக்காமல் ஆற்றுநர் என்றே குறிப்பிடலாம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)

Followers

Blog Archive