Wednesday, September 28, 2016

சிறையில் தாக்குதலும் உயிர்போக்குதலும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-சிறை, தாக்குதல், உயிர்போக்குதல், திரு ;thalaippu_siraiyillthaakkuthal_uyirpoakkuthal_ila-thiruvalluvan

சிறையில் தாக்குதலும் உயிர்போக்குதலும்

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை(திருவள்ளுவர், திருக்குறள் 541).
  மணிமேகலை வகுத்தாற்போல் சிறைக்கோட்டங்களை அறக்கோட்டமாக ஆக்குவதைத் தமிழ்நாட்டு அரசாள்வோர் நெறியாகக் கொண்டனர் அன்று. சிறைக்கூடங்கைளக் கொலைக்கூடங்களாக மாற்றுகின்றனர் இன்று.
  சிறையில் தாக்குதல் அல்லது கலவரம் என்பது எல்லா நாட்டுச் சிறைச்சாலைகளிலும் அரங்கேறும் அவலம்தான். ஆனால், இவை பொதுவாக இரு குழுக்களிடையே அல்லது வெளியே உள்ள குழு ஒன்றின் தூண்டுதலால் நடைபெறுவதாகத்தான் இருக்கும். அல்லது சிறைச்சாலை அடக்கு முறைக்கு எதிராகச் சிறைவாசிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பர். ஆனால்,  தமிழ்நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தனி மனிதர் மீதான தாக்குதல்கள் நிகழ்கின்றன.
  நெருக்கடிநிலைக் காலத்தில் தி.மு..க., தி.க.சார்பாளர்களையும் தமிழன்பர்களையும் சிறைகளில் தாக்கியதும் பெரிதும்  கொடுமைப் படுத்தியதும்  வரலாற்றுக் கறை. இதன் பின்னர் இதற்கென  நீதிபதி இசுமாயில் ஆணையம் நிறுவி அவர் பரிந்துரைத்தபடி சீர்திருத்தநடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்தது. சில சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. என்றபோதும் எக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் காவல்துறையும் சிறைத்துறையும் அக் கட்சியாளர்களுக்குக் கை கட்டிப் பணிபுரிவது மட்டும் நிற்கவில்லை.  இதன் காரணமாகவே அரசிற்கு எதிரானவர்கள் எனப்படுவோர் சிறைகளில் தாக்கப்படுவது தொடர்கதையாகிறது.
  இவ்வாண்டில் சூலைத்திங்கள் பியூசு மனுசு என்னும் மக்கள் நலச் செயற்பாட்டாளர் சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்ட செய்தி வந்தது. பொதுவாக மக்களிடையே சிறைக்காவலர்க்கும் காவல்துறையினருக்கும் வேறுபாடு தெரிவதில்லை. அதுபோல் சிறைவாசிகள் அல்லது கைதிகளுக்கு வழிக்காவலாகச் செல்பவர்கள் ஆயுதப்படைக் காவலர்கள். ஆனாலும் எல்லாரும் நமக்குக் காவல்துறையினர்தாம். எனவே, பியூசு தாக்கப்பட்டது எந்தக் காவலர்களால் என்று தெரியவில்லை. எனினும் உயிரைப்பறிக்கும் வண்ணம் அவர் தாக்கப்பட்டது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
  விடுதலையை எதிர்நோக்கி மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் பேரறிவாளனைச் சிறையில் தாக்கியதும் உள்நோக்கம் கொண்டது என்ற ஐயத்தை எழுப்புகின்றது. தொடர்பே இல்லா இருவரிடம் தனி மனிதத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது எனில் வேறு பின்னணிதான் இருந்துள்ளது என்பது  தெளிவாகிறது. ஒரு முறை  ஈ.வெ.கி.ச. இளங்கோவன் எழுவர் விடுதலை தொடர்பான சார்பான நடவடிக்கையில் அரசு இயங்கிய பொழுது சிறைக்குள் சிறைவாசியாகச் சென்றேனும் அவர்களைக் கொல்லுவோம் எனப் பேசியதாகச் செய்தி  வந்தது. கடந்த முறை தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் வரை தி.மு.க.வை அவர் கடுமையாகத் தாக்கி வந்தவர்தான். (மனிதநேயமற்ற, எப்பொழுதும் தி.மு.க.வைக் கடுமையாகத் தாக்கி வந்த அவரும் தி.மு.க.வும் உறவு கொண்டாடுவது இரு தரப்பிலும்  வெட்கம் கெட்ட செயல்தான்.) எனவே, பேரறிவாளன் தாக்கப்பட்டதைக் கொலை முயற்சி வழக்காக முனைப்புடன் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் தொடர்பில் இளங்கோவனையும் அதுபோல் எழுவர் விடுதலைக்கு எதிராகப் பேசிவந்தவர்களையும் கைது செய்து விசாரணை செய்தால் உண்மை வெளியே வரும்.
  அரசிற்கு மேலும் களங்கம் ஏற்படுத்துவது அதற்கடுத்த வாரம் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராம்குமார் உயிர்பறிப்புக் கொடுமையாகும்.  இயல்பான மரணம் என்பதுபோல் முதலில் சிறைத்துறையினர் தெரிவித்த தகவலும் அடுத்து அவரின் தற்கொலை முயற்சியாகக் கூறப்பட்டதும், பின்னர், மருத்துவமனையில் உயிர் இழந்ததாகக் கூறுவதும்,  இப்போது  சிறைக்குச் செல்லும் வழியிலேயே உயிர் இழந்ததாகக் கூறுவதும் பொருந்தும்படியாக இல்லை எனத்தலைவர்களும் ஊடகத்தினரும்  வலைத்தளப் பதிவாளர்களும் கூறிவருகின்றனர். இவற்றுக்கு அரசு உரிய விளக்கத்தை அளிக்கவில்லை என்பதே உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.
  வீடுகளில்கூடச் சுவரில் புதையும் வகையில் மின் இணைப்பு இருக்கையில் புதியதாகக் கட்டப்பட்ட புழல் சிறைச்சாலையில்  மின்கம்பிகள் சுவருக்கு வெளியே தெரியும்படி இருப்பதாகக் கூறுவது பொய்யான தகவல் என மக்கள் தெரிவித்தனர். உடனே,  மின்விசைப்பெட்டியை உடைத்து மின்கம்பியைப் பல்லால் கடித்துத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகின்றது. இராம்குமார் தலையாலோ வேறுவகையிலோ விசைஇணைப்பு மூடிப்பலகையை உடைத்து மின்கம்பியைப் பல்லால் கடித்தார் என்பது உண்மையெனில், அம்மூடி தெறித்த நிலையில் உடைந்தல்லவா இருக்க  வேண்டும்.  ஏதோ திருகாணியை முறையாகக் கழற்றி மூடியைத்  திறந்ததுபோல் அல்லவா இருக்கிறது.
  கொல்லப்பட்ட பொறி.சுவாதியின் குடும்பத்தார் செல்வாக்குமிக்க சாதிக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் கொலையாளி விவரமும் மறைக்கப்படுகின்றது. இப்பொழுது சுவாதி வழக்கும் இராம்குமார் வழக்கும் புதைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு நடுநிலை நடவடிக்கை எடுத்து உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
  சிறைச்சாலைகளில் தாக்குதல்களுக்கும் உயிர் போக்குதல்களுக்கும் இடமில்லாத வகையில் செயலாற்றி அவற்றை மறுவாழ்வு இல்லங்களாக மாற்ற வேண்டும்.
  இல்லையேல் குற்றம்சாட்டப்பட்டவர்களின் உயிரைப்பறிப்பதையே வழக்கை முடிப்பதற்கு எளிய வழியாகக் கருதும் கொடுங்கோன்மை பரவும்; நீடிக்கும்.
  அறவழி நின்று இன்னாசெய்யாது ஆட்சி செய்வதே அரசிற்குப் பெருமை சேர்க்கும்; மேன்மை ஆக்கும்; நிலைத்த புகழ் தரும்.
    சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
    செய்யாமை மாசற்றார் கோள்(திருவள்ளுவர், திருக்குறள் 311).
அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 153, புரட்டாசி 09, 2047 / செப்.25, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo

Sunday, September 25, 2016

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] – இலக்குவனார் திருவள்ளுவன்


முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார்

[1.முன்னுரை  – முற்பகுதி

  நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள் உள்ளங்களில் தம் எண்ணங்களை விதைத்துப் புரட்சி ஏற்படுத்தும் போராளிகளையும்  உலகம் சந்தித்து வருகிறது. ஏட்டில் எழுத்தாலும், நாட்டில் உரையாலும் செயலாலும் களத்தில் நின்றும், மக்கள் நலனுக்காகப் போராடிய சிந்தனையாளர்கள் சிலரே உள்ளனர். அத்தகையோருள் எண்ணத்தக்க ஒருவரே தமிழ்ப்போராளிப் பேராசிரியர் சி.இலக்குவனார். தத்தம் பகுதி அளவில் சிந்தனையாளராகத் திகழ்ந்து இலக்கியவாதிகளாக மிளிர்ந்து புரட்சியாளராக ஒளிர்ந்தவர்களையும் உலக  அளவில் மதித்துப் போற்றுவதே உலக வழக்கு. தமிழ்நாட்டின் அறிஞர்களையும் புரட்சியாளர்களையும்  மன்னர்களையும் தலைவர்களையும் நாம் சுருங்கியக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம். அவ்வாறில்லாமல் உலக அளவிலேயே பார்க்க வேண்டும். அத்தகைய உலக ஆன்றோர்கள் தமிழ் நாட்டில் எண்ணற்றோர் இருந்துள்ளனர். அவர்களுள் குறிப்படத்தகுந்த கடந்த நூற்றாண்டுப் புரட்சிப் போராளியே பேராசிரியர் சி.இலக்குவனார் ஆவார்.
என் வாழ்க்கையே தமிழ்நலம் நாடிய போராட்டக் களம்தான்” எனப் பேராசிரியரே ‘என் வாழ்க்கைப்போர்’ என்னும் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பட்டுள்ளார். புகழ் வாய்ந்த தமிழறிஞர்களையும் நாட்டுத் தலைவர்களையும் கண்டுள்ள தமிழ் உலகில் மொழிகாக்கும் போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர், பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்தாம். கட்டுக்கடங்காத் தமிழார்வமும் பொங்கி எழும் பைந்தமிழ் எழுச்சியும் பேராசிரியரின் மாணவ வாழ்க்கையையே போர்க்களமாக அமைத்தது.
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பேராசிரியரைப்பற்றிப் பன்வருமாறு தெரிவித்துள்ளார் (வீ.முத்துச்சாமி : இலக்குவனார் ஆய்வுப்பண்பு):
“மொழியில் தமிழின் தூய்மையையும் தலைமையையும் கடுமையாய்ப் பேணுபவர். குலவியலில், வெளிப்படையாகவேனும் மறைவாகவேனும் வெறியற்றவர். மதவியலில் நடுநிலையானவர், சமநிலையுணர்வினர்.
அன்பு, அடக்கமுடைமை, செருக்காமை, ஆரவாரமின்மை, அழுக்காறின்மை, உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாமை, கொள்கையுறைப்பு, அஞ்சாமை, ஊக்கமுடைமை, பணத்தினும் பண்பாட்டைப் பெரிதாகக் கொள்கை, தலைசிறந்த தமிழ்ப்பற்று, ஆகியன அவரிடம் நான் கண்ட பண்புகள்.”
  தலைவனுக்கும் போராளிக்கும் இருக்கவேண்டிய இப்பண்புகள் பேராசிரியரிடம்  குடிகொண்டிருந்தமையால்  அவரால் பிறரை வழிநடத்திச் செல்லும் போராளியாகத் திகழ முடிந்தது.
  முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் மேற்குறித்த நூல் வழியாகப் பின்வருமாறு பேராசிரியரின் புலமைச் சிறப்பையும் நாடு தழுவித் தனித்தமிழ் இயக்கம் நடத்திய மேன்மையையும் குறிப்பட்டுள்ளார்:
“ஆங்கிலக்கடல் நீந்தித், தமிழ்க்கரை ஏறிய அறிஞர் பெருமக்களில் ஒருவர். தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் இலக்கண நூல்களில் நுணுகிய ஆராய்ச்சியும் உடையவர்.
உள்ளத்தில் கபடம் இன்றி, எதையும் வெளிப்படையாகவும் துணிவாகவும் கூறும் ஆற்றல் படைத்தவர்.
தமிழ் வளரவும் தமிழகம் செழிக்கவும் தமிழ்மக்கள் நல்வாழ்வு வாழவும் தம் வாழ்நாள் முழுவதும் தன்னலமின்றிப் பெரிதும் உழைத்து வந்தார்… தமிழ்க்காப்புக் கழகத்தை அவர்  தோற்றுவித்து மாவட்டங்களிலும் சிற்றூர்களிலும் அதன் கிளைகளை நிறுவிப்பெருந்தொண்டு புரிந்தவர். அவ்வியக்கத்தின் நோக்கம் பிற மொழிகள் கலப்பின்றித் தனித்தமிழ் மொழியில் எழுதவும் பேசவும் வேண்டும் என்பது. இது பெரும்பாலும் மறைமலை அடிகளின் வழியைப் பின்பற்றியது. இது தமிழகத்தில் ஓரளவு வெற்றிபெற்று வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது.”
பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்,
“ஆரவாரமும் சார்பும் அற்ற அவரது திறனாய்வுரைகள் நாம் விரும்பும் இடத்திலும் சீரியது, நாம் விரும்பாத இடத்தில்கூடச் சீரியதேயாகும். நான் அவரிடம் கருத்து வேற்றுமை அற்ற நிலையில்கூட, கருத்து வேறுபாடுடையவர்கள்  நலக்கூறுகளை அவர் உணர்ந்து பாராட்டுமிடங்களில் இவ்வுண்மை கண்டு வியந்துள்ளேன்.
 பெரியாரிடம் அசைக்கமுடியாத உறுதியான பற்றுடையவர். அவர் குறிக்கோள் வழியைத் தம் ஆராய்ச்சியால் கண்டு உறுதி கொண்டு விளக்குபவர்.
  எவ்வளவு பெரியவரையும், எவ்வளவு நண்பரையும், குற்றங்காணின் மழுப்பாது இடித்துரைத்துக் கண்டனக் குரல் எழுப்பும் நக்கீர மரபினர். இதனால் பலதடவை பதவிக்கே ஊறு நேர்ந்ததுண்டு.”   
என்று பேராசிரியரின் நடுநிலைத் திறனாய்வையும் குற்றம் கண்டவிடத்து இடித்துரைக்கும் துணிவையும் பாராட்டி உள்ளார்.
(தொடரும்) 
   இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, September 24, 2016

நீதித்துறையினருக்கு அறநெறிப் பயிற்சி தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைப்பு-அறநெறிப்பயிற்சி, இலக்குவனார் திருவள்ளுவன் ; thalippu_araneripayirchi_thevai_ilakkuvanar-thiruvalluvan

நீதித்துறையினருக்கு அறநெறிப் பயிற்சி தேவை!

 அரசின் நாற்பெரும் தூண்களுள் ஒன்றாக விளங்குவது நீதித்துறை. இந்தியாவில் மக்களாட்சி இந்த அளவிற்கேனும் இருக்கின்றது எனில், அதற்குக் காரணம் நீதித்துறைதான்.  பல்வேறு நேரங்களில் நீதிபதிகள் மக்களின் காவலர்களாக விளங்கும் வகையில் தீர்ப்பு வழங்குகின்றனர்’ இதனால் மக்கள் நம்பிக்கை மூச்சில் வாழ்கின்றனர்.  அதே நேரம் சட்டம் யாவர்க்கும் சமம் என்பது பொய்த்துப்போனதற்குக் காரணமும் நீதித்துறைதான் என்பதுதான் கொடுமையானது.   பல நேரங்களில் மக்களின் காப்புநிலையிலிருந்து நழுவித் தாக்கு நிலையில் காலூன்றுவதே இன்றைய தலையாய சிக்கலாகின்றது.
குற்றத்தின் அளவு, குற்றம் சாட்டப்பட்டவரின் சூழல், சட்டத்தின் ஆட்சி ஆகியவவற்றைக் கருத்தில் கொண்டு நடுவுநிலையாக நீதி வழங்க வேண்டியவர்கள் நீதிபதிகள். ஆனால், பதவி உயர்வு எதிர்பார்ப்பால் அரசின் அரவணைப்பு, சாதி, சமய,இன அடிப்படையில் பார்வை, வழக்குரைஞரின் செல்வாக்கு முதலியவற்றின்  அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புகளும் உள்ளன.
நிதிபதியின் தரமான தீர்ப்புகளுக்குச் சான்றாக இரு தீர்ப்புகளைச் சொல்லலாம்.
  மறுமணம் செய்ததால் காப்பீடு  தர மறுத்த  நிறுவனத்தாரிடம் மறுமணத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றுகூறி காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பது போன்ற மனித நேயம் சார்ந்தும்  சீர்திருத்தம் சார்ந்தும் தீர்ப்புகளை வழங்கி வருபவர் நீதிபதி விமலா.
  குமரி மாவட்டத்தில் காப்பியக்காடு என்னும் ஊரில் தனியார் நிலத்தில்  தொல்காப்பியர் சிலை வைப்பதற்குக் காவல்துறை எதிராக இருந்தது. இது தொடர்பான வழக்கில், நீதிபதி விமலா தொல்காப்பியத்தின் சிறப்பை உணர்த்தித் தடையை விலக்கியுள்ளார்.
  பாடங்களில் திருக்குறளைச் சேர்கக் வேண்டும் என்று தொடுத்த வழக்கில் நீதிபதி மகாதேவன் திருக்குறள் முழுமையும் படிக்கும் வகையில் திருக்குறளைக் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும் என்றார்.
  இருவருமே உலகின் மூத்த  தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தை அளித்த தொல்காப்பியருக்கும்  தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய உலகப்பொது நூலாம் திருக்குறளுக்கும் முதன்மை அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தீர்ப்பு  அளித்துள்ளனர்.
    இப்படி நல்ல தீர்ப்புகளை எலலா நீதிபதிகளும் வழங்கத்தான் செய்கின்றனர்..
  உண்மையின் பக்கம் பார்வை செலுத்தாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாக செம்மொழி தொடர்பான வழக்கின் தீர்ப்பைக் குறிப்பிடலாம். வழ.காந்தி செம்மொழி தொடர்பான மத்திய அரசின் வரையறைக்கிணங்கச் செம்மொழித்தகுதிகள் பிற மொழிகளுக்கு வழங்கப்படவில்லை என்று வழக்கு தொடர்ந்திருந்தார்., வெறும்  காலமூப்பு மட்டும் செம்மொழித் தகுதியாகாது. ஆனால், தனித்தியங்கும் ஆற்றலும் உயர்தனிச்சிறப்புமற்ற தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா  ஆகிய மொழிகளுக்குச் செம்மொழித் தகுதியேற்பு வழங்கியது முறையற்றது எனத் தெரிந்தும் மத்தியஅரசு முறைப்படி செயல்பட்டதுபோல் கருத்து தெரிவித்து மத்திய அரசிடமே முறையிடுமாறு தீர்ப்பு வழங்கியுள்ளனர். உண்மையின் பக்கம் நின்றிருந்தால் பிற மொழிகளுக்குச் செம்மொழித் தகுதியேற்பு வழங்கியது முறையற்றது எனத் தீர்ப்பு உரைத்திருக்க வேண்டும். அல்லது அவ்வாறு வழங்கியது சரியெனக்கருதினால், இன்னின்ன காரணங்களால் அவையும் செம்மொழியே எனத் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நீதிமன்றம் தலையிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை எனத் தீர்ப்பு வழங்கி மத்திய அரசின் தவறான அறிந்தேற்பு ஆணைகளை மறைமுகமாக ஏற்றுக்கொண்டு நிலைக்கச்செய்துள்ளது எந்த வகையில் அறமாகும்?
  நீதிபதிகள் அவ்வப்பொழுது செய்திகள் அடிப்படையில் தாமே வழக்கைப் பதிந்து நடவடிக்கை எடுத்து அறம் வழங்கியுள்ளனர்.
 இராசீவு கொலை வழக்கில் அப்பாவிகள் எழுவர் சிக்க  வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் சுமத்தியவர்கள், உசாவியவர்கள், தீர்ப்பாளர்கள் எனப் பல நிலைகளில் உள்ளவர்களும் இவ்வழக்கு இட்டுக்கட்டப்பட்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் வெவ்வேறு நிலைகளில் வழங்கிய தீர்ப்புகள் உண்மையின் பக்கம் நில்லாமல் போனது ஏன்? உண்மையான சாந்தனைத் தான்தான் சுட்டுக்கொன்றதாக ஒருவன் கொக்கரித்த பின்பும் அப்பாவி சாந்தனை விடுதலை செய்யாதது ஏன்?
  பொய்யான விவரங்கள் தந்தும் உண்மையை மறைத்தும் தண்டனைக்குக் காரணமானவர்கள்,  மனந்திருந்தி உண்மை கூறியுள்ளனர். இருப்பினும் இந்திய நீதி மன்றம் தூங்குகின்றது. நீதிமன்றம் தானாகவே பதிந்து வழக்கில்  எழுவருக்கும்  விடுதலை வழங்காவிடட்டாலும் இடைக்காலமாகப் பிணை வழங்கலாம் அல்லவா? பின்னர் இவ்வாறு அப்பாவிகளைத் தண்டிக்கக் காரணமானவர்களிடம் உசாவி உண்மையறிந்து அதற்கிணங்க எழுவருக்கும் விடுதலை வழங்கலாம் அல்லவா?  விடுதலைக்கு வாய்ப்புகள் இருப்பினும் அவற்றை மறுப்பது இந்திய நீதித்துறைக்குக் களங்கம் என்பது புரியவில்லையா? தனி மனிதக் குடும்பத்தைக் காரணமாகக்கூறித் தமிழின எதிர்ப்பாகச்  செயல்படும் மத்திய அரசின் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவர்கள் குடும்பம் நாளை இன்னலுறும் என்ற அச்சம் வரவில்லையா? அவர்கள் வழிமுறையினர்  துயரக்கடலுள்  மூழ்குவர் என்பது குறித்துக் கவலை யில்லையா?
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 577)
நீதிபதிகளுக்குக் கண்ணோட்டம் வேண்டுமெனில் அவர்கள் அறஉணர்வு உள்ளவர்களாக இருந்தால்தான் இயலும்.
தமிழ்நாடு அறவாணர்கள் தலைமை தாங்கி நடத்திய நாடு. தான் தவறு செய்துவிட்டோம் என்று அறிந்த அளவில் உயிர்விட்டான் பாண்டிய  வேந்தன். தன் செய்கை தவறான எண்ணத்திற்கு வித்திடுகிறது  என உணர்ந்ததும் தன் கையைத் துண்டித்துக் கொண்டான் மற்றொரு பாண்டிய வேந்தன். அறத்தைக் காப்பதற்காகத் தங்கள் உயிர்களையே விட்ட தலைவர்கள் வாழ்ந்த நாடு இந்நாடு. ஆனால், இன்று அற வுணர்வு மங்கிக் கிடக்கின்றது. நீதிபதிகள் அறவுணர்வுடன் செயல்பட்டால் அறம் மீண்டும் தழைக்கும். எனவே, அவர்களுக்கு அறநெறிப்பயிற்சி தேவை.
அண்ணல் காந்தியடிகள், இந்தியா  முழுவதும் ஒற்றுமையுடன் இருக்க  வேண்டுமெனில் அனைவரும், மிகுதியான அறக்கருத்துகள் உடைய தமிழ்மொழியைப் படிக்க வேண்டும் என்றார். எனவே, பிற மொழியாளர்கள்  அல்லது தமிழறியாத் தமிழ்நாட்டவர்கள், நீதிபதவிக்கு வர வேண்டுமெனில் தமிழ் இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என வரையறுக்க வேண்டும்.
   சிறந்த வழக்குரைஞர்கள் நீதிபதிகளாகின்றனர். அவர்கள், தங்கள் கட்சிக்காரர்களைக் காப்பதற்காக உண்மையின் பக்கமாக வாதிட்டும் இருப்பார்கள்; உண்மைக்கு மாறாகவும் வாதிட்டு இருப்பார்கள். சிறந்த வாதத்திறமை உள்ளதாலேயே அறவாணர்களாக ஆகி விட முடியாது. நேடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் பிற பதவிகளில் இருந்து பணிமாறியும் நீதிபதிகளாக வருபவர்கள், அவரவர் பட்டறிவு, கல்வியறிவு, பணியறிவு  அடிப்படையில்தான் வழக்கினை நோக்குவார்கள். ஆனால்,  எல்லாரும் அறவுணர்வுடன் திகழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, நீதிபதிகளுக்குத் தமிழ் இலக்கியங்கள் கூறும் அறநெறிகளைப் பயிற்சிவழி உணர்த்த வேண்டும். இப்பயிற்சி காலமுறை இடைவெளிகளில் பணிமுழுவதும் தொடர வேண்டும்.
தமிழ் அறக் கருத்துகளைச் சட்டப்படிப்பிலேயே பாடமாக வைக்க வேண்டும்.
நீதித்துறையினர் தாமாகவே முன்வந்து அறநெறிப்பயிற்சி அளிக்க முன்வரவேண்டும் எனவும்தமிழ்நாடு அரசு இதற்கென உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகின்றோம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 152, புரட்டாசி 02, 2047 / செப்.18, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo

Sunday, September 11, 2016

இந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா? -இலக்குவனார் திருவள்ளுவன்
தலைப்பு-பறிப்பதுதான் இந்தியமா,திரு ; thalaippu_parippathudhaan_indiyamaa_thiru

இந்தியர் என்று  உரிமைகளைப் பறிப்பதும்

தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான்

இந்தியமா?

  ஒருவன் எந்த நாட்டான் என்பது அரசியல் சூழலுக்கேற்ப மாறக்கூடியது. ஆனால், எந்த இனத்தான்என்பது பிறப்பிலேயே அமைந்து இறப்புவரை  – ஏன்,அதற்குப்பின்னரும் – நிலைப்பது. எனவே இந்தியன் என்பது நிலையற்றது. ஆனால் தமிழன் என்பது நிலையானது. தமிழ் மக்கள் இந்தியர்களாக அரசியல் அமைப்பின் கீழ் மாற்றப்பட்டதால் இழந்தவைதான் மிகுதி. இழப்பு என்பதும் ஒரு  முறை ஏற்பட்டதன்று. தொடர்ந்து இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர் தமிழ் மக்கள்.
   இன்றைய, கேரள, ஆந்திர, தெலுங்கானா, கருநாடகாப்பகுதியில் உள்ள நிலப்பகுதி பலவும்  தமிழர்கள் வாழ்ந்த தமிழர்க்கே உரியன. மொழிவாரி மாநிலம் அமைந்தபொழுது கூட பிற மாநிலங்களில் சேர்க்கப்பட்ட தமிழகப்பகுதிகளில் தமிழர்களே மிகுதியாக வாழ்ந்தனர்.  ஆங்கிலேயர் வந்தபொழுது இருந்த நிலப்பரப்பு  அடிப்படையில் மொழிவழியாகப் பகுக்கப்பட்டால் இன்னும் பல பகுதிகள் தமிழ்ப்பகுதிகளாக அமைந்திருக்கும் என உணரலாம்.
  இந்தியா என்னும் அரசியல் அடிப்படையிலான ஆட்சிப்பகுதியில் தமிழ் மக்கள் இணைந்தமையால் தமிழரின் நிலப்பகுதிகள்-எங்கிருந்தாலும் இந்தியன்தானே – எனச் சொல்லிப் – பிற மாநிலங்களில் இணைக்கப்பட்டன. அது முதலே ஆற்று நீர்  உரிமை முதற்கொண்டு பல உரிமைகளை இழந்து வருகிறோம். பிற மாநிலங்களில் தமிழர்கள் உரிமைகள் மட்டுமன்றி உயிர்களும் உடைமைகளும் பறிக்கப்பட்டாலும் ஏனென்று கேட்க யாருமில்லை. அண்மையில் ஆந்திராவில், செம்மரம் கடத்தல் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்பட்டும் உரிய நீதி கிடைக்காமையை நாமறிவோம்.
   இதுபோல், கருநாடக  மாநிலம் தமிழர்க்கே உரிய காவிரிஆற்று நீரைத் தனக்கே உரியதாக ஆக்கி, உரிமை கேட்கும் பொழுதெல்லாம் வன்முறையில் ஈடுபடுகின்றது.  இங்குள்ள கருநாடகர் தாக்கப்பட்டால் அங்குள்ள தமிழர்களுக்குப் பாதிப்பு வரும் என்றுதான் இங்குள்ள தலைவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், அங்குள்ள தமிழர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள கருநாடகரும் தாக்கப்படுவர் என்று அங்குள்ளோர்  அமைதி காப்பதில்லை.
   உச்சநீதிமன்றம் காவிரியாற்று நீர்ப் பகிர்வு குறி்த்து வழங்கிய தீர்ப்பினை நிறைவேற்ற  வேண்டிய கருநாடக அரசு, வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறது. இங்குள்ள முதல்வரின் உருவப்பொம்மைகளை எரிக்கும் பொழுது வேடிக்கை பார்க்கிறது.  அரசின்குறையைச் சுட்டிக்காட்டினால் அவதூறுவழக்கு தொடுக்கும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  கன்னடர்களின் வன்முறைகளில் ஒன்றுதான் பெங்களூரு கிரி நகரைச் சேர்ந்த சந்தோசு என்ற இளைஞரை வீட்டிலிருந்து கடத்திவந்து பொது இடத்தில் வைத்துக் கொடூரமான முறையில் தாக்கியதும் அதனைக் காணுரையாக்கிப் பரப்புவதும். அவர்செய்த குற்றம் என்ன? பேச்சுரிமை கருத்துரிமை எல்லாம் தமிழர்க்கும் உண்டு என எண்ணிக் காவிரிச்சிக்கல்பற்றி முகநூலில் கருத்து தெரிவித்ததுதான். கருநாடகாவின் பக்கம்  நயன்மை/நியாயம் இல்லாவிட்டாலும் கன்னட நடிகர் நடிகைகள் போராடுகின்றனர் ; தமிழகத்தின் பக்கம் நயன்மை இருந்தும் தமிழ் நடிகர் நடிகைகள் போராடாமல் இருக்கின்றார்களே என்ற ஆதங்கத்தைப் பதிவு செய்ததற்கு கருத்தால்  எதிர்க்காமல் வன்முறையால் எதிர்த்துள்ளனர்.
  இதற்குத்தான்  கொடூரமாகத்தாக்கி மன்னிப்பு கேட்கச்செய்து,  கருநாடகா பக்கம்தான் நயன்மை உள்ளது எனச்சொல்லச் செய்து காணுரை மூலம் பரப்பி வருகின்றனர்.
 காணுரையில் தெரியும் ஆள்களை உடனே கருநாடக அரசு கைதுசெய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எடுக்கவில்லை.
 தமிழக அரசும் கருநாடகாவில் கிளை அமைப்புகள் வைத்துள்ள தமிழகக்கட்சிகளும் உடனடியாக இது குறித்துவழக்கு தொடுத்து இளைஞர் சந்தோசத்திற்கு இழப்பீடு கிடைக்கவும் தாக்கியவர்கள் பொதுஇடத்தில் மன்னிப்பு கோரவும், தண்டிக்கப்படவும் வழிவகை காணவேண்டும்.
 தமிழ்நாட்டிலிருந்து உதவி தேவை என்றால் “நீயும் இந்தியன் நானும் இந்தியன்” என்பதுபோல்  முழங்குவதும் பிற நேர்வுகளில் தமிழர்க்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பதையும் இந்தியாவின் பல பகுதிகள் செய்து வருகின்றன. மத்திய அரசும் கூடத் தமிழர்களின் பக்கம் அறம் இருப்பினும் தமிழர்களுக்கு எதிராகவே நடந்து கொள்கிறது. எனவே, இந்தியா என்னும் செயற்கைப்பகுதிக்குள் தமிழ்நாடு நிலைத்திருக்க வேண்டுமெனில் தமிழர்கள் இந்தியாவின் எப்பகுதியில் வசித்தாலும் உரிமையுடனும் பாதுகாப்புடனும் இருக்க மத்திய அரசு நடவவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டைத் தனியரசாக ஆக்கிவிட வேண்டும்.
  எனவே நமக்குத் தேவை ஒன்றுபட்ட இந்தியாவா? பிளவுபட்ட இந்தியாவா என்பதை மத்திய அரசு நினைத்துப்பார்த்து ஆவன செய்யட்டும்!
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று (திருவள்ளுவர், திருக்குறள் 967).
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 151, ஆவணி 26, 2047 / செப்.11, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo

Followers

Blog Archive