Wednesday, March 27, 2019

சிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன்? யார்? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 

சிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன்? யார்?

தமிழ்நாட்டு மக்கள் சாதிப்பட்டங்ளைத் துறப்பதற்கு முன்னோடியாய் விளங்கிய சீர்திருத்தச் செம்மல் சிவகங்கை இராமச்சந்திரனார். பகுத்தறிவு இயக்கத் தலைவர், கல்விப் புரவலர், மது ஒழிப்பைப் பரப்பிய அறவாணர், தமிழ் வளர்த்த தகைமையாளர் எனப் பல சிறப்புகள் கொண்டவர் அவர். அவரது பெயர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குச் சூட்டப்பட்டது. ஆனால் அப்பெயர் தந்திரமாக  அகற்றப்பட்டுள்ளது.
அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அருந்தலைவர். 21.12.1991 இல் மதுரையில் தி.மு.க.வின் பவளவிழா மாநாட்டு அரங்கத்திற்குச் சிவகங்கை இராமச்சந்திரனார் பெயர் சூட்டப்பட்டது.
27.06.1992 இல் மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் வீரவரலாற்றின் வெற்றி மாநாட்டின் நுழைவு வாயில் பெயர் ‘சுயமரியாதைச் செம்மல் சிவகங்கை இராமச்சந்திரனார் நுழைவாயில்’ என்பதாகும்.
 1992 இல் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் இராமச்சந்திரனார் படம் திறந்து வைக்கப்பெற்றது.
27.12.1989 இல் திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் திறக்கப்பட்ட மகளிர் விடுதிக்குச் ‘சிவகங்கை இராமச்சந்திரனார் மகளிர் விடுதி’ எனப் பெயர் சூட்டப்பட்பட்டது.
இவ்வாறு காலந்தோறும் அனைத்துக் கட்சியினராலும் போற்றப்பட்டவர் சிவகங்கை இராமச்சந்திரனார்.
21.10.1992 இல் அன்றைய தமிழக முதல்வர் செயலலிதா அம்மையார், “சிவகங்கையில் இயங்கி வரும் அரசு வட்டத் தலைமை மருத்துவமனை, இனிப் பெரியவர் இராமச்சந்திரனார் அவர்களின் பெயரைத் தாங்கி இராமச்சந்திரனார் அரசு மாவட்டத் தலைமையிட மருத்துவமனை என அழைக்கப்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிவித்தார். இதற்கேற்ப அரசாணை (பல்வகை எண் 1197, நல்வாழ்வு குடும்பநலத்துறை நாள்) 30.10.1992 அன்று வெளியிடப்பட்டது.
ஆனால், முதலில் குறிப்பிட்டவாறு, சிவகங்கை அரசு மருத்துவமனைப் பெயரில்இருந்து இராமச்சந்திரனார் பெயர் அகற்றப்பட்டுள்ளது.
1925 இல் இராமச்சந்திரனார் தம் மனைவி கிருட்டிணம்மாளின் மகப்பேறு மருத்துவத்திற்கு மிகவும் அல்லல்பட்டார். உடனடி மருத்துவ உதவிக்கும் வெளியூர் செல்ல வேண்டிய நிலை. பெண் குழந்தை பிறந்தும் தாய்க்குக் கடும் வயிற்று வலி; 24 மணி நேரம் கழித்து மற்றொரு பெண் குழந்தை பிறந்ததும்தான் இரட்டைக் குழந்தை என்று தெரிந்தது. இரட்டைக் குழந்தை பிறப்பினால் வீட்டினர் மகிழ்ந்தாலும் நாட்டினர் நிலையால் இவர் உள்ளம் நைந்தார். வசதி உள்ளவர்களே, தக்க மருத்துவ உதவி உடன் கிடைக்காமல் அல்லலுறும் பொழுது ஏழை எளிய மக்களும் போதிய மருத்துவ உதவி இன்றி மிகவும் துன்புறுவார்களே எண்ணினார். அருள் உள்ளம் கொண்ட இராமச்சந்திரனார், உடனே நிலம் தந்து அரசு மகப்பேறுமருத்வதுமனை வர வழி செய்தார். என்றாலும் தன் பெயரையோ தம் குடும்பத்தவரில் ஒருவர் வெயரையோ அதற்குச் சூட்டக் கருதவில்லை. அதுபோல் அரசு பொது மருத்துவமனை அமையவும் நிலம் தந்தார். அதற்கும்  தம் பெயர் சூட்டக் கருதவில்லை.
ஆனால், இவற்றை யெல்லாம் அறிந்த அப்போதைய முதல்வர் செயலலிதா அம்மையார் அரசு மருத்துவமனைக்கு அவர் பெயரைச் சூட்டினார். அவர் படத்தையும் திறந்து வைத்தார்.
சிவகங்கைக்கு அரசு மருத்துவக்கல்லூரி வந்த பொழுது(2012)  மருத்துவக் கல்லூரியுடன் அரசு மருத்துவமனையும் வேறிடத்தில் (வாணியங்குடியில் ) கட்டப்பட்டது. பழைய இடத்தில் நல்வாழ்வுத்துறையின்  இணை இயக்குநர் அலுவலகமும் துணை இயக்குநர் அலுவலகமும் மட்டும் இயங்குகின்றன. அங்கே இப்பொழுது இராமச்சந்திரனார் பெயர் பொறித்த மருத்துவமனைக்கல்வெட்டுகள் உள்ளன. அதுபோல், இராமச்சந்திரனார் படம் மட்டும் இடிந்த கட்டடத்தில் உள்ளது. அதைப் பயன்பாட்டில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் வைக்க வேண்டும்  என்ற உணர்வு கூடத் துறை அலுவலர்களுக்கு இல்லை.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்தில் சிவகங்கையில் உள்ள அரசு தலைமையிட மருத்துவமனையின் பெயர் இராமச்சந்திரனார் அரசு தலைமயிட மருத்துவமனை எனப் பெயர் சூட்டப்படுவதாக அரசாணை தெரிவிக்கிறது. நிலம் தந்ததால் பெயர் சூட்டப்படுவதாக இல்லை.அந்த நிலப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குத்தான் இராமச்சந்திரனார் பெயர் சூட்டப்பட்டது. அந்த மருத்துவமனை எந்த இடத்திற்கு மாற்றப்பட்டாலும் அந்த மருத்துவமனையின் பெயர் அதுதான். அவ்வாறிருக்க அரசு நிலத்தில் எழுப்பப்பட்ட மருத்துவமனை எனவே, தனியா் பெயர் எடுக்கப்பட்டது என்பது பொருத்தமற்றது.
மற்றோர் மருத்துவ அலுவலர், “மருத்துவமனைக்குத்தான் இராமச்சந்திரனார் பெயர் சூட்டப்பட்டது மருத்துவக் கல்லூரிக்கான மருத்துவமனைக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்றுதான் பெயர் சூட்டப்படும். எனவே, இதன்பெயர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்பதுதான் சரி” என்றார்.
அதுவும் தவறான கருத்து. மதுரையில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. மருத்துவமனைக்கு முந்தைய பெயர் எர்சுகின்; இப்போது இராசாசி மருத்துவமனை. சென்னை மருத்துவக்கல்லூரி உள்ளது. அதற்கான மருத்துவமனையின் பெயர் மட்டும் இராசீவுகாந்தி அரசு மருத்துவமனை. அண்ணல் காந்தி மருத்துவமனை(திருச்சி),  கத்தூரிபாய் காந்தி  பெண்கள் சிறார் மருத்துவமனை (சென்னை) உள்ளன. இவைபோல் கல்லூரிக்கும் மருத்துவமனைக்கும்  தான்லி((Stanley)(சென்னை), மோகன் குமாரமங்கலம்(சேலம்) , கி.ஆ.பெ.விசுவநாதம்(திருச்சி), முதலான பெயர்கள் சூட்டப்பட்டுக் கல்லூரியும் மருத்துவமனையும் இணைந்து இயங்குகின்றன.
எனவே, நிலக் கொடையாளர் என்ற முறையிலேயே அவரது பெயர் நிலைத்திருக்க வேண்டும். எனினும்  அரசு முறையாக அவர் பெயரை மருத்துவமனைக்குச் சூட்டியுள்ளதால், அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் இராமச்சந்திரனார் பெயர்தான் தொடர்ந்து நிலைக்க வேண்டும்.
சிவகங்கையின் மூத்த தலைமுறையினர்  சிவகங்கையின் கல்வி வளர்ச்சிக்கும் தீண்டாமை ஒழிப்பிற்கும் மது ஒழிப்பிற்கும் பாடுபட்டு நாடு முழுவதும் பகுத்தறிவுப் பணிகளை ஆற்றிய செம்மல் இராமச்சந்திரனார் பெயரை எடுத்தது குறித்துப் பெரும் வருத்தத்தைத் தெரிவிக்கின்றனர். இன்றைய தலைமுறையினர் அவரை அறியாததால், பழைய மருத்துவமனையின் பெயர் இராமச்சந்திரனார், புதிய மருத்துவமனையின் பெயர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை என்கின்றனர். அனைவருக்கும் இப்பொழுது இவ்வாறுதான் அறிமுகமாகி உள்ளது. மருத்துவமனையினரும் அவ்வாறே ஆவணங்களில் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
எனவே, தமிழ்நாடு அரசு தலையிட்டு, அரசாணைக்கு இணங்க சூட்டப்பட்டஇராமச்சந்திரானர் பெயரிலேயே இனி சிவகங்கை அரசுமருத்துவக்கல்லூரியும் மருத்துவமனையும் அழைக்கப்பட வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.
சிவகங்கை இராமச்சந்திரனார் அரசு மருத்துவக்கல்லூரி – மருத்துவமனை என்ற பெயரை இனி நிலைக்கச் செய்யட்டும்!
புரட்சித்தலைவியின் வழி நடப்பதாகக் கூறும் அரசு அவரது ஆணையைப் பின்பற்ற வழி வகை காணட்டும்!
இருக்கின்ற ஆணையைச் செயல்படுத்த தேர்தலைத் தடையாகக் கருதாமல் விரைந்து செயலாற்றட்டும்!
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.(திருவள்ளுவர்திருக்குறள் 450)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல-இதழுரை சிவகங்கை இராமச்சந்திரனார் மருத்துவமனை+ பழைய கட்டடம்

சிவகங்கை இராமச்சந்திரனார் மருத்துவமனை+ பழைய கட்டடம்

Tuesday, March 26, 2019

தேர்தல் ஆணையத்தின் கொடுங்கோன்மை!- இலக்குவனார் திருவள்ளுவன்


தேர்தல் ஆணையத்தின்
கொடுங்கோன்மை!
தேர்தல் ஆணையத்தின் அறமுறையற்ற செயல்பாடுகளைக் கொடுங்கோலாட்சியின் செயல்பாடுகளுடன்தான் ஒப்பிட முடியும்.
மக்களாட்சியின் அடையாளமாகத் திகழ்வது தேர்தல். தேர்தலில்போட்டியிடுவோருக்குரிய மக்களாட்சிக் கடமைகளை ஆற்ற உதவவேண்டியது தேர்தல் ஆணையத்தின் அடிப்படைப் பணிஆனால் கட்சிகளுக்கேற்றவாறு மாறுபட்ட அளவுகோல்களைக் கொண்டு சூழ்நிலைகளை ஆராய்ந்து தனக்குரிய கடமையிலிருந்து தவறுவதே தேர்தல் ஆணையத்தின்பணியாக உள்ளது. நடுநிலையாளர் என்ன சொல்லுவார்கள் என்ற அச்சம் இன்றித் துணிந்து தவறுகளைச் செய்கிறார்கள் என்றால் இதனை எங்ஙனம் செங்கோன்மையாகக் கூற முடியும்?
ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்கு ஓர் அளவுகோலையும் எதிரணியில் உள்ள கட்சிகளுக்கு மற்றோர் அளவுகோலையும் தேர்தல் ஆணையம் பின்பற்றுவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், இது குறித்து அது கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு வேளை அவ்வாறு தெரிந்தால்தான் தங்களின் அடிமைப்பற்று ஆள்வோருக்குப் புரியும் என எண்ணுகிறதோ என்று தெரியவில்லை. அ.தி.மு.க., பா.ச.க. கூட்டணிக்கட்சிகளுக்கு அவர்கள் வேண்டும் சின்னங்களை ஒதுக்குவதற்கு மனம் இருக்கும்  தேர்தல் ஆணையத்திற்குப் பிற கட்சிகளுக்கு வேண்டியவாறு சின்னங்களை ஒதுக்க மனம் வரவில்லை.
இளைஞர்களை ஈர்த்து வளர்ந்து வரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் இக்கட்சிக்குக் கடந்த முறை பெற்றிருந்த மெழுகுவத்திச் சின்னத்தை ஒதுக்குவதே முறையாகும். ஆனால், மறுத்து விட்டது.
ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தாலும் 6 ஆண்டுகள் வரை பழைய சின்னத்தில் போட்டியிடலாம் என விதி உள்ளது. ஆனால், பரவலான செல்வாக்கு உள்ள ம.தி.மு.க.விற்கு அதன் பழைய சின்னமான பம்பரம் அல்லது அதற்கு முந்தைய சின்னமான குடை தர மறுத்து விட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெறாக் கட்சி என்றாலும் பதிவு செய்யப்பட்ட நல்ல எதிர்காலம் உள்ள கட்சி. அக்கட்சி கேட்ட நட்சத்திரச் சின்னமோ மோதிரம் சின்னமோ  தந்திருக்கலாம். ஆனால் மறுக்கப்பட்டு விட்டது.
அமமுக, பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொதுவான சின்னம் ஒன்றை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது
விதி என்பது மக்களுக்காகத்தான். இரு வேறு கட்சிகள் குறிப்பிட்ட சின்னம்தான் வேண்டும் என்று வேண்டாத பொழுது ஒரு குறிப்பிட்ட கட்சி விரும்பும் பொதுவான சின்னத்தை வழங்கலாம். அவ்வாறு விதியில்லை எனில், அதற்கேற்றப விதியை அமைத்துக் கொள்ள வேண்டும்.  இதனால் யாருக்கும் எந்தத் தீமையும் விளையப்போவதில்லை. மக்களாட்சிக்கும் கேடு இல்லை.
தேர்தல் ஆணையத்தின் பணி தேர்தலை நடத்துவது மட்டுமல்ல. போட்டியிருவோருக்குரிய சம வாய்ப்பை ஏற்படுத்துவதும் நடுவுநிலைமையுடன் செயல்படுவதும்தான். ஆனால், அவ்வாறு இந்தியத் தேர்தல் ஆணையம் செயல்படுதில்லை என்பதற்கு அடுக்கடுக்கான அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் சான்றாகின்றன.
மற்றொரு சான்று. மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் பொழுது ஐந்நூறாயிரம் மக்கள் அங்கே கூடுவர்.  எனவே, தேர்தல் நாளை மாற்றியமைக்க வேண்டினர். ஆனால், வாக்குப்பதிவு நேரத்தைக் கூட்டி விட்டு,  தேர்தல் நாளை மாற்ற மறுத்து விட்டது.
மதுரை வாக்காளர்களுக்கு வேண்டுமென்றால் வாக்குப்பதிவு நேரம் கூட்டுவது ஓரளவு உதவியாக இருக்கலாம். நாட்டின் பிற பகுதிகளிலிருந்து அங்கே வந்து கூடும் வாக்காளர்கள் எங்ஙனம் வாக்களிக்க இயலும்? குறிப்பாகப் பெரும் எண்ணிக்கையில் உள்ள மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களும் வாக்களிக்க இயலாமல் போகிறது.
தென்மாவட்ட மக்கள் மிகுதியாக வருவர்.  அவர்கள் வாக்கு ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு எதிரானது என அவர்கள் வாக்களிக்க இயலாத வண்ணம் தேர்தலை மாற்ற மறுத்துவிட்டதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால், இது குறித்துத் தேர்தல் ஆணையம் கவலைப்படவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல், ஏப்பிரல்11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  மே 5 முதல் இரம்லான் மாதம் தொடங்க உள்ளதால், நாடாளுமன்றத் தேர்தலை ஒருமாதத்திற்குத் தள்ளிவைக்க வேண்டும் என்று  மம்தா பானர்சி, கெசுரிவால்  முதலான சிலர்  தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதுபோல் ஏப்பிரல் 18இல் தூய வியாழன் வருவதால் தமிழகத்தேர்தலைத் தள்ளி வைக்கக் கிறித்துவச் சமயத்தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். இவற்றின் வேண்டுகோள்களைத் தேர்தல் ஆணையம் புறக்கணித்தது. ஆண்டுதோறும் மத நிகழ்வுகள் உள்ளமையாலும் அந்தந்தப் பகுதி சார்ந்தே இவை நிகழும் என்பதால் இதனைச் சரி எனலாம். ஆனால், சித்திரைத் திருவிழா நடப்பது மதுரை என்றாலும் நாடு முழுவதும் உள்ள இறையன்பர்கள் திரளுவதால் இதனைக் கருதிப்பார்த்திருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் கொடும் மனப்பான்மைக்கு மற்றுமொரு சான்று; மார்ச்சு 15 அன்று சின்னம் தொடர்பான வழக்கின் கேட்பு உச்சநீதிமன்றத்தில் வருவதைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தும், அடுத்து 9 நாள் விடுமுறை என்பதால் வேண்டுமென்றே ஆணைய அதிகாரிகள் உச்ச நீதி மன்றம் வரவில்லை. தேர்தல் களத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் விலைமதிப்பற்றது என்பதை அறிந்தும் தேர்தல் ஆணையம் இந்தப் புறக்கணிப்பைச் செய்துள்ளது. சீப்பை ஒளித்துவைத்தாலாவது திருமணம் நிற்காதா என்ற அற்பர்களின் ஆசை போன்று அல்லவா இஃது உள்ளது. விடுமுறை முடிந்து 25/03.09 அன்றும் கேட்பிற்கு முதன்மை அதிகாரிகள் வரவில்லை. எழுத்து வடிவிலான மறுமொழியும் தரவில்லை. இவை யாவும் தேர்தல் ஆணையத்தின் நடுவுநிலைமயற்ற தாக்குதல் என்றுதானே ஆகிறது.
நடுநிலையற்ற தேர்தல் ஆணையத்தின் போக்குகளை முன்பே சுட்டிக்காட்டியுள்ளோம். ஊடகங்களும் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதி மன்றமும் தேர்தல் ஆணையத்தின் நடுவுநிலைமையற்ற போக்கிற்குக் குட்டுகள் வைத்த பின்னும் எப்படித்தான் தங்களை மாற்றிக் கொள்ளாமல் உலா வருகிறார்களோ தெரியவில்லை. எனவே, குடியரசுத்தலைவர் நாடாளுமன்றம் இல்லாச் சூழலில் ஆட்சித்தலைமையின் கருத்திற்கு முதன்மை அளிக்க வேண்டா என்பதால் இப்போதைய தேர்தல் ஆணையர்களை நீக்க வேண்டும். கட்சித்தலைமைகளிடம் பரிந்துரை பெற்றுத் தக்கவாறான புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தை மாற்றி யமைப்பதுதான் தேர்தல்கள் நடுவுநிலைமையுடன் நடப்பதற்கு வழிகோலும். எனவே,
தேர்தல் ஆணையர்களை நீக்குக!
புதிய ஆணையர்களை நியமித்திடுக!
கெடுவல்யான் எனப(து) அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின். (திருவள்ளுவர், திருக்குறள் 116)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை

Monday, March 25, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 51-60: இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்
(குறள்நெறி)
 • 51. தவமிருப்போரின் பணியினும் சிறந்த இல்லறத்தானாக விளங்கு!
 • 52. பழிக்காகா இல்வாழ்வை மேற்கோள்!
 • 53. வானவர்க்கு ஒப்பாக, வாழ்வாங்கு வாழ்!
 • 54. மனைக்குத் தக்க மாண்பு கொண்டுவளத்திற்கேற்ப நட! .
 •  55. பிற மாட்சியைவிடச் சிறந்த மனைமாட்சியுடன் திகழ்!.
 • 56. இல்லாதது ஒன்றுமில்லை என ஆக்கும் பெருமைமிகு துணைவராக இரு!
 • 57. நின்னிலும் பெருமை யாதுமில்லை எனக் கலங்கா கற்பு நிலையில் வாழ்!
 • 58. பெய்யெனப் பெய்யும் மழை போன்று துணைவர் வழி நட!
 • 59. தன்னையும் துணையையும் காத்துக் கடமையாற்று!
 • 60. பண்பினைச்சிறந்த காவலாகக் கொள்
(தொடரும்)
இலக்குவனார்திருவள்ளுவன்

Thursday, March 21, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50: இலக்குவனார் திருள்ளுவன்

அகரமுதல


(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50

(குறள்நெறி)

 1. நாளை வீணாக்காமல் நன்றாக்கி வாணாள் காக்கும் அணையாக்கு!
 2. அற வழியில் உண்மை இன்பம் அடை!
 3. அறம் செய்! பழிச்செயல் விடு!
 4. சார்ந்தோர்க்குத் துணையாக இரு!
 5. துறந்தார், துய்க்க இயலார், காப்பிலார்க்குத் துணை நில்!
 6. பிறருடன் உன்னையும் காத்திடு!
 7. பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ்!
 8. இல்வாழ்வின் பண்பும் பயனுமான அன்பையும் அறனையும் கடைப்பிடி!
 9. இல்வாழ்வே அறவாழ்வு, பிற வாழ்வில் ஒன்றுமில்லை. என உணர்!
 10. முயற்சியுடையாருள் தலைசிறந்து விளங்கு!இலக்குவனார்திருவள்ளுவன்
(தொடரும்)
இலக்குவனார்திருவள்ளுவ

Wednesday, March 20, 2019

ஊழல் ஒழிய கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


ஊழல் ஒழிய 5 ஆண்டுகளேனும் கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்தி வைக்க வேண்டும்.

தேர்தலுக்கான செலவுப் பெருக்கமும் தேர்தலில் வழங்கப்படும் முறையற்ற அன்பளிப்புகளும் ஊழல் மிகுதிக்கு முதன்மைக் காரணங்களாகும்.
தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாகக் கூறிப் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க முன் வரும் சிறிய கட்சிகள், பெரியகட்சிகளுக்கு எங்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறதோ அதே தொகுதிகளைத்தான் கேட்கின்றனர். அது மட்டுமல்ல. தேர்தல் செலவுகளையும் பெரிய கட்சியிடமே கேட்டுப் பெறுகின்றனர். தொகுதி உடன்பாட்டையே முறையற்ற வழியில் பணத்தை அளித்தும் கொடுத்தும் மேற்கொள்ளும் இக்கட்சிகள் வெற்றிக்குப் பின் அல்லது ஆட்சி அமைத்தால் எங்ஙனம் நேர்மையாக இருப்பார்கள்?
தேர்தலில் பணத்தைக் கொட்டிச் செலவழிக்கும் வேட்பாளர்களின் இலக்கு வெற்றி மட்டுமல்ல. அதற்குப் பின்னர் அவ்வாறு கொட்டிய பணத்தை எப்படி யெல்லாம் திரும்பப் பெறுவது என்பதுதான். தேர்தலில் வென்று ஆட்சியமைத்தவர்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு உரிய வழியாகத் தேர்ந்தெடுப்பது மக்கள் பணத்தைச் சூறையாடுவதுதான்.
இத்தகைய அளவுகடந்த முறையற்ற தேர்தல் செலவினமே ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக உள்ளது.
தேர்தல் செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற கருத்துகளும் சொல்லப்படுகின்றன. வேட்பாளர் எண்ணிக்கையை வரையறுக்காமல் இவ்வாறு செயல்படுத்துவது மக்களின் வரிப்பணத்தைத்தான் வீணடிப்பதாக அமையும்.
இதற்கு மாற்றாக உள்ள ஒரே எளிய வழி, கட்சிமுறையிலான தேர்தலை 5 ஆண்டுகளுக்கேனும் ஒத்தி வைப்பதுதான். இவற்றின் அடிப்படையில் பின்வருவனவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
 1. 5 ஆண்டுகளுக்குக் கட்சிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
 2. போட்டியிடும் அனைத்து வேட்பாளருமே தற்சார்பினர்(சுயேச்சை)தான்.
 3. கட்சிகளுக்கான தேர்தல் சின்னங்கள், சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
 4. எந்த வேட்பாளரும் பிற தொகுதிக்குச் சென்று பரப்புரை மேற்கொள்ளக் கூடாது.
 5. கட்சியின் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள் யாரும், போட்டியிடும் தொகுதி தவிர, வேறு எங்கும்பரப்புரை மேற்கொள்ளக்கூடாது.
 6. வேட்பாளர்களுக்குக் குற்றப்பின்னணி இன்மை, 3 ஆண்டுகள் பொதுப்பணி ஈடுபாடு, தமிழறிவு, அரசியல் பொறுப்பு, பதவி மூலம் சொத்து சேர்த்திருக்காமை முதலான தகுதிகளை வரையறுக்க வேண்டும்.
 7. போட்டி இன்மையால், தேர்தல் பரப்புரைக்கான பொதுக் கூட்டங்களுக்குத் தேவையில்லை. இதனால் அழைத்து வரப்படுவோருக்கான வீண் செலவுகள், பின்னர் மக்கள் தலையில் வந்து விழாது.
 8. தேர்தல் ஆணையமே, தேர்தலில் போட்டியிட விரும்புநருக்குச் சம வாய்ப்பு அளித்துத் தொலைக்காட்சிகள் வழியாகத் தங்களைப்பற்றிய அறிமுகத்தையும் ஆற்ற எண்ணும் பணிகளையும் விளக்க வாய்ப்பு தர வேண்டும். அவற்றில் தேர்தலில் போட்டியிடுதற்குரிய தகுதிக்குறைவான செய்திகள் இருப்பின், தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்; தகுதிக்குறைபாடு இருப்பவர்களைக் குலுக்கலில் இருந்து எடுத்து விட வேண்டும்.
 9. வெற்றி பெற்ற உறுப்பினர்களில் இருந்து குலுக்கல் முறையில் தலைமை அமைச்சர் / முதலமைச்சர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 10. அமைச்சர்களையும் குலுக்கல் முறையில்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 11. குலுக்கல் முறையில் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால், குறுக்கு வழிகளில் அமைச்சர் பதவி பெற முயலமாட்டார்கள். எனினும்சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு ஆளுமைப் பயிற்சி அளிக்க வேண்டும்.
 12. மாநிலங்களவை, மேலவை உறுப்பினர்களையும் இவ்வாறே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 13. அமைச்சர்கள், முதலமைச்சர், தலைமையமைச்சர் முதலானோர் தவறுஇழைக்கும் போது பதவி நீக்கம் செய்வதற்கும் வழிமுறை வகுத்து அதனைப் பின்பற்ற வேண்டும்.
 14. சாதி, சமய வேறுபாடின்றி அனைவரும் குலுக்கலில் பங்கேற்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும். தனித் தொகுதிகளில் அவற்றிற்குரிய இனத்தினர் மட்டும் குலுக்கலில் இடம்பெற வேண்டும்.
 15. உள்ளாட்சித் தேர்தல்களில் அந்தந்தத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குலுக்கலில் சேர்க்கப்பட வேண்டும்.
 16. சட்டமன்றத் தேர்தல்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே குலுக்கலில் பங்கேற்கச் செய்யவேண்டும்.
 17. நாடாளுமன்றத் தேர்தல்களில் அந்தந்த மாநிலங்களில் 10 ஆண்டுகளேனும் வசிக்கிறவர்கள், அந்தந்த மாநிலங்களில் 5 ஆண்டுகளேனும் மக்கள்பணி ஆற்றுபவர்கள் மட்டுமே குலுக்கலில் இடம்பெற வேண்டும்.
 18. குலுக்கல் முறை என்றால் குடவோலை முறைபோல் சீட்டுகளைப்போட்டுத் தேர்ந்தெடுப்பது அல்ல. பரிசுச்சீட்டுகளுக்கான இயந்திர முறை எண்களைச் சுற்றி நிறுத்துவது போன்று ஒவ்வொருவருக்கும் எண்கள் கொடுத்து இயந்திரச் சுழற்சி மூலம் இக்காலத்திற்கேற்ப தேர்ந்தெடுக்க வேண்டும்.
 19. இவ்வாறு வாக்குஅளிப்பு முறையிலான தேர்தலை ஒழிப்பதன் மூலம், கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல போகும். கட்சி வேட்பாளர்களும் பிற வேட்பாளர்களும் பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பது நிற்கும். தேர்தலுக்குச் செலவழித்தவற்றைக் குறுக்கு வழிகளில் திரும்பப் பெறுவதற்காக ஊழல்களில் திளைப்பர். ஊழல்களால் மக்களின் நலன்கள்தாம் பாதிப்புறும். இம்முறையால் அவற்றிற்கு இடம் இருக்கா.

 1. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமையும் மக்களாட்சியாகவே இம்முறையையும் கருத வேண்டும். எனவே, குலுக்கலில் இடம் பெறுவதற்காக மக்கள் மன்றப் பொறுப்புகளை அல்லது அமைச்சுப் பதவிகளை ஏற்க விரும்புவோர் அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னரே மக்கள் பணிகளில் ஈடுபட்டு மக்களின் குறைகளைக் களைவர். இதனால் மக்களின் சிக்கல்கள் உடனுக்குடன் தீரும் வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு,  ஊழலை ஒழிக்க ஒரு முறையேனும் கட்சி சாராத் தேர்தலை நடத்த வேண்டும்.
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 501)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை

Followers

Blog Archive