இதழுரை
இசை என்பது அவரவர்க்கு அவரவர் தாய்மொழியிலான இசைதான். ஆகவே, நமக்கு இசை என்பது தமிழிசையையே குறிக்கும். தமிழ்நாட்டில் தமிழர்களிடையே முழங்க வேண்டியது தமிழிசைதான். திராவிடம் என்னும் சொல் தமிழைக் குறிப்பதுபோல் கருநாடக இசை என்பதும்  தமிழைத்தான் குறிக்கின்றது. ஆனால், கருநாடக இசை என்ற பெயரில் தெலுங்கு, சமற்கிருத, கன்னடப்பாடல்களைத்தான் பாடுகின்றனர்.  அவரவர் மாநிலங்களில் அவரவர் மொழியில் பாடட்டும்! ஆனால், தமிழ்நாட்டில் உலக இசைகளின் தாயாம் தமிழிசையைப் புறக்கணிக்கும் போக்கை இன்னும் எத்தனைக் காலம்தான் தொடரப் போகின்றனர்?
தமிழ்நாட்டிலும்  பிற மொழி பேசுவோர் தம் இசையை மேடையேற்றினாலோ பொதுவான இசைவிழா நடக்கும்  பொழுது தமிழிசையுடன் பிற இசைப்பாடல்களையும் பாடினாலோ நாம் மறுப்பேதும் கூறப்போவதில்லை. திசம்பர் இசைவிழாவை நாம் பொதுவான இசை விழாவாக நடத்தக்கூடாது. இசை என்றால் தமிழ்நாட்டில் தமிழிசை மட்டுமே என்ற நிலைப்பாட்டில் தமிழிசை விழாவாகத்தான் நடத்த  வேண்டும்! 
இசையில் ஏன் மொழி வேறுபாடு என்பவர்களே! நீங்கள் மிகவும் பிற்பட்ட காலத்தில் தமிழிசையில் இருந்து வந்த தெலுங்கிசை முதலான பாடல்களைப் பாடுகின்றீர்களே! அப்படியென்றால் நீங்கள்தாமே வேறுபாடு காட்டுகின்றீர்கள்! தமிழ்நாட்டில் தமிழர்கள் செல்வத்தால் செழிக்கும் நீங்கள் தமிழைப் புறக்கணிப்பது ஏன்?
கடந்த 9 ஆண்டுகளாக – சென்னையில் திருவையாறு என்ற பெயரில் – ஓர் அவலம் அரங்கேறிக் கொண்டுள்ளது. திருவையாறு என்றாலே தமிழில் பாடியதற்காக மேடையைக் கழுவிய அவலம்தான் நினைவிற்கு வருகின்றது.  எனவே, சென்யைில் திருவையாறு நிகழ்ச்சி அடுத்த ஆண்டு நடைபெறாவண்ணம், தமிழ்மக்கள் இவ்விழாவுடன் தொடர்புடைய அமைப்புகளையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும். இசைக்கலைஞர்கள் கூலிப்பட்டாளம் போல் இங்கேயும் பாடுவது, தமிழிசை என்றால் அங்கேயும் பாடுவது என்னும் போக்கில் இருக்கக்கூடாது. தமிழ்நாட்டிலும் உலகில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் தமிழிசையையே முழங்க வேண்டும்.
 சென்னையில் திருவையாறு என்ற பெயரிலே  தமிழைப் புறக்கணிக்கும் பெருமக்களே! நீங்கள், ஐதாராபாத்தில் திருவையாறு, மைசூரில் திருவையாறு எனப் பிற இடங்களுக்குச் செல்லுங்கள்! உங்களுக்குத் தமிழிசையை உலகெங்கும் பரப்பும் எண்ணம் இல்லாவிட்டாலும், பிற மொழி இசையை இங்கே திணிக்கும் பழக்கத்தையாவது கைவிடுங்கள்!
தமிழ்ப்பாட்டு பாடு!
தமிழ்ப்பாட்டிற்கு ஆடு – இல்லையேல்
தமிழ்நாட்டை விட்டு ஓடு

என மக்கள் திரளும் முன்னர், தமிழ்நாட்டைவிட்டு நீங்களே வெளியேறி விடுங்கள்!
தமிழைப் புறக்கணிப்பவர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை உணருங்கள்!

கார்த்திகை 29, தி.பி.2044
திசம்பர் 15, கி.பி. 2013
feat-default