Thursday, March 30, 2017

தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்




தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன


  1. தமிழ்ப்பயிற்றுமொழியை வலியுறுத்தும் கட்சியினரும் அமைப்பினரும் தலைவர்களும் ஆர்வலர்களும் தங்கள் குடும்பத்தினரைத் தமிழ்வழிக் கல்விக்கூடங்களிலேயே சேர்க்க வேண்டும்.
  2. தரமான தமிழ்வழிப்பள்ளிக்கூடம் இன்மையால் தமிழ்வழிக்கல்வி அளிக்க இயலவில்லை என்னும் குறைபாட்டைப் போக்கவேண்டும். எனவே, ஊராட்சி தோறும் தமிழ்வழிக்கல்விக்கூடங்களைத்தொடங்க வேண்டும்.
  3. அரசு மூடிவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தமிழ்வழிக்கல்விக்கூடங்களை எடுத்துச் சிறப்பாக நடத்த வேண்டும்.
  4. தமிழ்வழிப்பள்ளிகளைத் தத்து எடுத்துத் தரம் உயர்ந்தனவாக மாற்ற வேண்டும்.
  5. தாங்கள் நடத்தும் ஆங்கிலக் கல்வி நிலையங்களைத் தமிழ்வழிக்கல்விக்கூடங்களாக மாற்ற வேண்டும்.
  6. தமிழ்வழிக்கல்விக்கு எதிரானவர்களைப் பொறுப்புகளிலிருந்து நீக்க வேண்டும்.
  7. தாங்கள் நடத்தும் கல்விக்கூடங்களில் இந்தி, சமற்கிருதம்ஆகியன மொழிப்பாடங்களாக இருப்பின் அவற்றை நீக்க வேண்டும்.
  8. தங்களின் கல்விக்கூடங்கள், தத்து எடுக்கும் கல்விக்கூடங்கள் அனைத்திலும் தமிழ் மொழி, பாடமாக இருக்கச் செய்ய வேண்டும்.
  9. தங்களது நிறுவனங்களில் தமிழ்வழிக்கல்வி கற்றவர்களுக்கு முதலுரிமை அளிக்க வேண்டும்.
  10. இதுவரை தமிழ் எனப்பேசிக்கொண்டு, தமிழ்வழிக்கல்விக்கு எதிராக நடந்துகொண்டமைக்கு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு வேட்க வேண்டும்.
  11. தமிழ்வழிக்கல்வியில் பயின்றவர்களுக்கும் தமிழ் வழிக்கல்வியை ஊக்கப்படுத்துபவர்களுக்கும்மட்டுமே வேட்பாளர் வாய்ப்பு அளிக்க வேண்டும்.
  12. தங்களது நிறுவனங்களில் பணியாற்றுவோர் தமிழிலேயே பேசுமாறு செய்ய வேண்டும்.
  13. தங்களது நிறுவனங்கள் அனைத்திலும் பெயர்ப்பலகைகள், அலுவலகப் பதிவேடுகள், மடல் போக்குவரத்து என அனைத்து நிலைகளிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  14. அம்மன்கோயில்கள் முதலான சிற்றூர்க்கோயில்களிலும் பிராமணப் பூசாரிகள் புகுந்துகொண்டு சமற்கிருத வழிபாடு திணிக்கப்பட்டு வருகிறது. அனைத்துக்கோயில்களிலும் இவர்களை அகற்றி முன்பிருந்த தமிழ்ப்பூசாரிகளையே அமர்த்த ஆவன செய்ய வேண்டும்.
  15. தாங்கள் அல்லது தத்தம் கட்சியினர், அமைப்பினர் பொறுப்பில் உள்ள கோயில்களில் தமிழ்வழிபாடு இருப்பதை உறுதி செய்ய  வேண்டும்.,
  16. தமிழ்வழிபாடு இல்லாத கோயில்களில் உண்டியல்களிலோ, பூசாரிகளின் தட்டுகளிலோ பணம்போடக்கூடாது என்பதை நடைமுறைப்டுத்த வேண்டும்.
  17. தமிழ்வழிபாடு இல்லாக் கோயில்நிகழ்ச்சிகள், விழாக்களில் பங்கெடுப்பது, நன்கொடை அளிப்பது, உதவி செய்வது முதலானவற்றை உடனே நிறுத்த வேண்டும்.
  18. தமிழினப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் திட்டமிட்டது போன்ற தமிழ் உரிமைப்பெருநடைப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே தமிழ் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  19. தங்களைச் சார்ந்த கலைஞர்கள் எடுக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், குறும்படங்கள் என அனைத்திலும் பெயர், காட்சி அமைப்புகள், கதைக்களம் முதலிய அனைத்திலும் தமிழே,தமிழ்ப்பண்பாடே, தமிழ்க்கலையே மேலோங்கி யிருக்க வலியுறுத்த வேண்டும்.
  1. தாங்கள்நடத்தும் இதழ்கள், தொலைக்காட்சி முதலான ஊடகங்கள் வாயிலாகத் திருத்தமான தமிழுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.
  2. உயர்கல்விப் பாடநூல் வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும். அதன் மூலம் படைப்பாளர்களை ஊக்கப்படுத்தித் தமிழில் நூல்கள் உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை அச்சிட்டுக் குறைவான விலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
  3. தனியார் பள்ளியாயினும் மத்திய அரசின் பள்ளியாயினும், பன்னாட்டுப் பள்ளியாயினும் தமிழுக்கு இடம் தராத கல்விக்கூடங்களுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை உருவாக்க வேண்டும்.
  4. தங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்களும் நீதிபதிகளும் உயர் நீதிமன்றத்தில் தமிழையே பயன்படுத்துவதை நடைமுறை ஆக்க வேண்டும்.
  5. தமிழ் என வாயளவில் முழங்காமல் உண்மையிலேயே தமிழுக்காகக் குரல் கொடுப்பவர்களாயின் தமிழைப் பயன்பாட்டு மொழியாகத் தத்தமிடங்களில் இருந்து தொடங்க வேண்டும்

 பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின்
திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழைக்காக்க வழிகாண வாரீர்!
என்னும் தலைப்பிலான கலந்தாய்வுக்கூட்டம்
இன்று (பங்குனி 13 2048 /  மார்ச்சு26, 2017) நண்பகல் நடைபெற்றது.

இக்கலந்தாய்வில் மேற்குறித்த கருத்துகளை முன்வைத்தேன்.
   இந்நிகழ்வைக் கலந்தாய்வாக இல்லாமல் சொற்பொழிவு அரங்கமாக   மேடையிலிருந்த ஆன்றோர் மாற்றிவிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் தவறுதான் இது. இதனால்கலந்தாய்வில் பங்கேற்க  வந்த ஆர்வலர்கள் பிற்பகல் 2.30 மணிக்குத் தங்கள் கருத்துகளை ஒருவரியில் தெரிவிக்க இசைவளிக்கப்பட்டனர். எனவே, அடுத்து வரும் கலந்தாய்வுகளில்  பொது மக்களுக்கு முதலில் கருத்துகூற வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன்.

 – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்
ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்
  பேசி 99884481652  மனை பேசி 04422421759

Wednesday, March 29, 2017

‘கலாச்சாரம்’ தேவையா? – இலக்குவனார் திருவள்ளுவன்





கலாச்சாரம்  தேவையா?
இலக்குவனார் திருவள்ளுவன்
  ‘கலையும் கலாச்சாரமும்’, ‘கலாச்சாரமும் பண்பாடும்’, ‘கலையும் கலாச்சாரமும் பண்பாடும்’ என்றெல்லாம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கலாச்சாரம் என்பதைப் பண்பாடு என்னும் பொருளில்தான் பெரும்பாலும் கையாள்கின்றனர். சில இடங்களில் கலை என எண்ணிக் கையாள்கின்றனர். கலை – பண்பாட்டுத்துறை என்பதைக் கலை – கலாச்சாரத்துறை என்றே குறிப்பிடுகின்றனர். எனவே, கலையும் கலாச்சாரமும் என்றால்  கலையும் பண்பாடும் என்று கருதுவதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கலாச்சாரமும் பண்பாடும் என்றால் என்ன பொருள்? நாகரிகமும் பண்பாடும் என்று பொருள்  கொள்ள இயலவில்லை, இங்கே கலாச்சாரம் என்பதைக் கலை என்னும் பொருளில் வருவதாக எண்ணுகின்றர். அப்படியானால் கலை,  கலாச்சாரம், பண்பாடு என்று சொல்கிறார்களே! உண்மையில் சொல்லப்போனால், பொருள் குறித்த எண்ணமின்றி, வழிவழியாக இவ்வாறு தவறாகவே சொல்லி வருகின்றனர் என்பதே உண்மை.
  கல்ச்சர்  (‘culture’) என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பண்பாடு என்றுதான் பொருள். (அறிவியலில் கல்ச்சர் என்பது வளர்நிலையை – வளர்மத்தைக் குறிக்கிறது.)
 ‘ஆசுபிடல்’ (hospital) என்பது மக்கள் நாவில் ‘ஆசுபத்திரி’  எனத் திரிந்ததுபோல் கல்ச்சர் என்பது  கலாச்சாரமாகத் திரிந்தது.
 கலாச்சாரம் என்ற சொல் சென்னைப் பேரகராதி முதலான  அது வரை வெளிவந்த எந்த அகராதியிலும் இடம் பெறவில்லை. பின் வந்துள்ள அகராதிகளில்தான் கலாச்சாரம் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது.
  நிலத்தைப் பண்படுத்தப் பயன்படுத்த இச்சொல் பின்னர் மனத்தைப் பண்படுத்துவதையும் குறித்துள்ளது. தமிழில் மட்டுமல்ல, உரோமன், இலத்தீன், ஆங்கிலம் முதலான பிற மொழிகளிலும் பண்படுத்தப்பட்ட நிலையே பண்பாடானது.
  சில நேர்வுகளில் நாம் பழக்கவழக்கத்தையும்  ‘கலாச்சாரம்’ எனக் குறிப்பிடுகிறோம். “காலில் விழும் கலாச்சாரம் பெருகிவிட்டது” எனக் கூறுவதைச் சான்றாகச் சொல்லலாம். நல்ல பழக்க வழக்கங்களை ஒழுகலாறு எனக் குறிக்கலாம்.ஒழுகலாறு/ஒழுகல் ஆறு என்றால் ஒழுக்க நெறி எனப் பொருள். பெரியோரை வணங்குவது சிறப்பு நாள்களில் வணங்குவது முதலானவற்றை ஒழுகலாறு எனலாம். ஆனால், கால், கை பிடிப்பதுபோல் தன்னலம் கருதிக் காலில் விழுவது, வானூர்தி இறங்கும் வரை மேலேயே பார்த்துவணங்குவது ஊர்தி புறப்படும் வரை ஊர்திச்சக்கரங்களை வணங்குவது முதலானவற்றை ஒழுக்க நெறி என்றால் ஒழுக்கம் என்பதற்கே பொருள் இல்லாதுபோய்விடும். இறைவன் கோயில் உள்ள திசையைப் பார்த்து அல்லது பண்பாளர்கள் இருக்கும் திசையைப் பார்த்து ஒருவர் திசை நோக்கி வணங்கினால் அது ஒழுகலாறு. ஆனால், முற்றிலும் தன்னலம் சார்ந்து அடிமைத்தனத்தில் ஊறி வணங்குவது எப்படி ஒழுகலாறு எனப்படும்? எனவே, இப்படிப்பட்டட இடங்களில் கலாச்சாரம் என்றால் பண்பாடு எனக் கருதாமல், பழக்கம் என்றே குறிப்பிட்டால் போதும்.
  பழந்தமிழகத்தில் நாகரிகம் என்பதே  பண்பாடு என்னும் பொருளிலும் வந்துள்ளது. திருவள்ளுவர் நயத்தக்க நாகரிகம்  என்கிறார்(குறள் 580). அஃதாவது எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகம் என்கிறார் அவர். அதனால் பண்பாடு அப்பொழுது இல்லை என்று அவசரப்பட்டு முடிவிற்கு வந்துவிடாதீர்கள். பண்பு, பண்புடைமை என்பன  பழந்தமிழர்க்கே உரிய பண்புகள் அல்லவா?
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (திருவள்ளுவர், திருக்குறள் 996)
எனத் தமிழ்மறை பண்பாட்டை வலியுறுத்துகிறது அல்லவா?
சால்பு,  சான்றாண்மை முதலான பிற சொற்களாலும் பழந்தமிழர் பண்பாட்டைக் குறிப்பிட்டனர்.
  “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” எனக் கலித்தொகை (பாடல்  133) கூறுகிறது. பண்பு + பாடு என இணைத்துப் பண்பாடு எனத் தி.தீ.சிதம்பரநாதர்(டி.கே.சி.) உருவாக்கினார் என்பர்.
  பண்பு, சால்பு, சான்றாண்மை, பண்பாடு முதலான தமிழ்ச்சொற்களை விட்டுவிட்டுக் ‘கலாச்சாரம்’ என்னும் பொருளற்ற சொல்லை நாம் பிடித்துக்   கொண்டிருப்பது நம் அறியாமையே!
எனவே, கலாச்சாரத்தை அகற்றுவோம்! பண்பாட்டைப் பேணுவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, March 28, 2017

இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கையை இலங்கை என்றே தமிழில் குறிப்பிடுங்கள்!

  இலங்கையைத் தமிழில் குறிப்பிடும் நம்நாட்டுத்தமிழர்களும் இலங்கைத்தமிழர்களும் ஈழத்தமிழர்களும் உலகத்தமிழர்களும் அரசுமுறைப் பெயரைச் சரியாகக் குறிப்பிடுவதாக எண்ணிச் சிரீ இலங்கா என்றே குறிப்பிடுகின்றனர்.
  ஈழம், இலங்கை என்பன தொடர்புடைய பெயர்களே! ஈழத்துப் பூதன்தேவனா் என்னும் புலவர் சங்கக்காலத்தில் வாழ்ந்துள்ளார். ஈழத்து உணவு என்பதைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.
சங்க இலக்கியத்தில் இலங்கை என்றும் சொல்லாட்சி உள்ளது. ‘தொன்மாவிலங்கை எனச் சிறுபாணாற்றுப்படை குறிக்கிறது. ‘இலங்கை கிழவோன்’ எனப் புறநானூறு(379) குறிப்பிடுகிறது.
  ஈழம் என்றால் பொன் எனப் பொருள். பொன்வேய்ந்த மாடங்கள் இருந்தமையால் –  மிகுதியாகப்பொன் கிடைத்தமையால் – அந்நாட்டிற்கு ஈழம் என்னும் பெயர் வந்துள்ளது. பொன் என்றால் ஒளிவிடுவதுதானே! இலங்கு என்றால் ஒளிர்தல், திகழ்தல், ஒளிவிடுதல் என்பன பொருளாகும். பொற்கட்டடங்கள் ஒளியுடன் திகழ்ந்த – இலங்கிய- நாடு என்பதால்  இலங்கை என அழைத்தனர். எனவே, முதற்பெயர் ஈழம் என்பதுதான். எனினும் காலப்போக்கில் இரண்டு பெயருமே அழைக்கப்பெற்றுப் பின்னர் இலங்கை என்பது நிலைக்கத்தொடங்கியது.
  இலங்கை > இலங்கா எனச் சிங்களத்தில் மருவியது.
  திருநகர், திருநெல்வேலி, திருத்தணிகை என்றெல்லாம் நாம் அடை மொழி சேர்த்து அழைப்பதுபோல் இலங்கா என்பது சிரீ என்னும் அடைமொழியுடன் சேரத்து சிரீ இலங்கா ஆனது. இப்பழக்கம் 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில்தான் அறிமுகமானது.
  1935 இல் உருவான இலங்கை மார்க்சியக் கட்சி  – மார்க்சிய இலங்கா சமா சமாசா கட்சி – சிரீ ஒட்டினைச் சேர்த்துப் பயன்படுத்தியது.  1952இல் சிரீ இலங்கா விடுதலைக் கட்சி தோன்றியது(Sri Lanka Freedom Party ).
  எனினும் இலங்கை அரசாங்கம் 1972 இல் குடியரசை நடைமுறைப்படுத்தி  தன் அரசியல் யாப்பின் மூலம்  இலங்கை(சிரீ இலங்கா) மக்கள்நாயக, சமவுடைமை குடியரசு(இலங்கைச் சனநாயக,சோசலிசக் குடியரசு-Democratic Socialist Republic of Sri Lanka ) எனப் பெயரைக் குறிப்பிட்டது.
    இவ்வாறு ஆட்சி முறை அடிப்படையில் நாட்டைக் குறிக்கும் பொழுது தமிழில் இலங்கை என்றும்  சிங்களத்தில் சிரீலங்கா என்றும் குறித்துள்ளது.
   மக்களும் ஊடகத்தினரும் குடியேற்ற அடிமையாட்சியில் பரவிய சிலோன் என்ற பெயரையே பயன்படுத்தி வந்தனர்.
  போர்த்துகீசியர்கள் இலங்கை என்பதைச் சிய்லோ / சிய்லா (Ceilao)  என அழைத்தனர். இதனை ஆங்கிலேயர்கள் வந்தபின்னர்  சிய்லான் / சிலான் / சிலோன் என்றனர். இதனையே நாட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக 2011 இல் சிங்களத்தில் சிரீ இலங்கா என்றும் தமிழில் இலங்கை என்றும்மட்டுமே அழைக்கவேண்டும் என  அரசு அறிவித்தது. எனினும் வணிகக்குறியீட்டுப் பெயர்களில் உள்ள சிலோன் தொடர இசைவளித்தது.
  இவ்வாறு பெயர்  மாற்றத்ததை வலியுறுத்தியபோதும் சிங்களத்தில் சிரீ லங்கா என அழைக்கவேண்டும் என்ற அரசு தமிழில் இலங்கை என்ற தமிழ்ப்பெயரையே அழைக்குமாறுதான் அறிவித்துள்ளது. சிங்களப் பெயரே ஆங்கிலத்திலும் அழைக்கப் படுகிறது.
 இலங்கை விடுதலை பெற்றதிலிருந்து அந்நாட்டு அரசு அந்நாட்டின் பெயரைத் தமிழில் இலங்கை என்றுதான் குறித்து வருகிறது. இப்பொழுதும் அரசலுவலகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடரி நிலையங்கள், திட்டங்களின் பெயர்கள், கடவுச்சீட்டு போன்ற ஆவணங்கள் முதலான எல்லா இடங்களிலும் இலங்கை அரசாங்கம், இலங்கை என்ற தமிழ்ப்பெயரைத்தான் தமிழில் கையாண்டு வருகிறது. ‘(இ)லங்காசிரீ’ என்னும் எரிபொருள் நிறுவனம் ஒன்றுமட்டுமே அதன் பெயரே அவ்வாறு அமைந்துள்ளதால் அப்பெயர்ச்சொல்லையே தமிழில் குறிப்பிடுகிறது. வேறு எங்கும்  அரசின் பெயர் எந்த இடத்திலும் சிரீலங்கா எனக் குறிக்கப் பெறவில்லை.
  எனவே, இலங்கை நாட்டின் பெயரைச் சரியாகக் குறிப்பிடுவதாக எண்ணித் தமிழில் சிரீலங்காஎனக் குறிப்பதை முற்றிலும் நிறுத்துவோம்! அந்நாட்டின்அரசு முறைப்பெயரான இலங்கை என்பதையே எல்லா இடங்களிலும் குறிப்பிடுவோம்!
  இலங்கையில் தமிழர்க்குரிய நிலப்பகுதியை(த் தமிழ்) ஈழம் எனக் குறிப்பது குறித்து  இங்கே நாம் குறிக்கவில்லை.  இலங்கை எனக் குறிப்பிடும்பொழுது சிரீலங்கா என்று சொல்லாமல் இலங்கை என்றே சொல்லுங்கள் என்கிறோம்.
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர் (திருவள்ளுவர், திருக்குறள் 199)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive