Wednesday, November 29, 2023

சட்டச்சொற்கள் விளக்கம் 21-25 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச்சொற்கள் விளக்கம் 11- 20: இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  21- 25

21. A Oneமுதல் தரமான  

A என்பது ஆங்கில நெடுங்கணக்கின் முதல் எழுத்து.  நிலையில், தரத்தில் முதலிடம் என்பதைக் குறிக்க இதனைப் பயன்படுத்தி ஏ ஒன்/A One என்கின்றனர்.
மிகச்சிறந்த, நல்ல, நேர்த்தியான முதலியவற்றைக் குறிக்க  ஏ ஒன் / A One என்கின்றனர்.
22. A Personஓராள்  

ஓர் ஆள், ஆள், மாந்தன், ஒருவர், தனிப்பட்டவர், தனியாள் என்பனவும் இடத்திற்கேற்பப் பயன்படுத்தப்படுகின்றன.  
தனியர்(individual) என்பதையும் இதே பொருளில் கையாள்வோர் உள்ளனர்.

நபர் என்றும் குறிக்கின்றனர். ஆனால், இது நஃபர்(nafar) என்னும் உருதுச் சொல்லில் இருந்து வந்தது.  
  ஆள் என்பது ஆட்கள் அமைந்த அமைப்பையும் குறிப்பதுண்டு. எடுத்துக்காட்டாக நீதி முறைகளில் ஒரு கூட்டமைப்பு நிறுவனம் சட்டமுறையான ஆளாகக் கணிக்கப்பட்டுக் குறிக்கப்படும்.  

மெய்யியலிலும், மருத்துவத்திலும்  ஆளாகப் பிறந்த அனைவரும் ஆளாகக் குறிக்கப் பெறுவதில்லை. இத்துறைகளில், ஒரு குறித்த வகையில் சிந்திக்கும் வல்லமை கொண்டவரே  “ஆள்” என்னும் சொல்லால் குறிக்கப்படுவர்.       

ஒரு மனித உயிர் பிறந்ததுமே இயல்பாகவே அதற்கு “ஆள்தன்மை” வந்துவிடுவதாகக் கருதப்படுகிறது. எனினும் சிலர், தாய் வயிற்றிலுள்ள கரு, மூளைச் சிதைவு கொண்டோர், ஆழ்மயக்க நிலையில் உள்ளோர் போன்றோரை “ஆள்தன்மை” கொண்டவர்களாகக் கருதுவது சரியல்ல எனக் கருதுகின்றனர்.  

சில மக்கள் கூட்டங்களில் பெண்களை இழிவாகக் கருதிக்கொண்டு அவர்களையும் பழங்குடியினரையும் நாகரிகமற்றவர்கள் என இழிவாகக் கருதி  அவர்களையும் “ஆள்தன்மை” கொண்டோராகக் கருதுவது இல்லை. ஆனால், இது தவறு.  

விலங்கு நலன்கள், விலங்கு உரிமை போன்றவற்றில் நாட்டம் கொண்டோர் சில விலங்குகளுக்கும் “ஆள்தன்மை” கொடுக்கப்பட வேண்டும் என்கின்றனர். விலங்குகளை வணங்கும் சமயத்தவரும் இவ்வாறு கருதுகின்றனர். மனிதக் குரங்குகள், யானைகள் போன்றவை அவற்றின் அறிவுத்திறன் மிக்கவை என்பதால் இவற்றையும் ஆள்களாகக் கருதுகின்றனர்.   விலங்கு வழிபாட்டினர்,   விலங்குகளையும், தாவரங்களையும் மனிதருக்குச் சமமாகவோ அதற்கும் மேலாகவோ கருதி இவற்றை ஆள்தன்மை பெற்றதாகத் தெரிவிக்கின்றனர்.

  “மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” எனத் தொல்காப்பியர் (தொல்காப்பியம், பொருளதிகாரம் 577) மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறியது சிந்திக்கத்தக்கது.
23. A person cannot approbate and reprobateஒருவர், ஒரே நேரத்தில் ஏற்கவும் மறுக்கவும் இயலாது.  

ஒருவர் சொத்துரிமை போன்றவற்றில் ஒரு நீதிமன்றத்தில் அல்லது வழக்கில் ஏற்கும் முறையிலும் மற்றொரு நீதி மன்றத்தில் அல்லது வழக்கில் மறுக்கும் முறையிலும் தெரிவிக்க இயலாது.

ஒரு பொருண்மையில் ஒரு செய்தி அல்லது ஆவணம் குறித்து வெவ்வேறு நேரங்களில் ஏற்பளிப்பையும் மறுதலிப்பையும் வெளிப்படுத்த இயலாது.   எடுத்துக்காட்டாக ஒருவர் பணிநீக்கப்பட்டு, அதுவரையிலான காலத்திற்கான பணப்பயனைப்பெற்றுக் கொண்டால், நீக்க ஆணையை ஒப்புக்கொள்வதாக ஆகிறது. அதே நேரம், அவர், அதற்கு முரணாக,  அந்நீக்க ஆணைக்கு எதிராக முறையிடவோ வழக்கு தொடுக்கவோ கூடாது. அல்லது எதிர் முறையீட்டை நாடினால் நீக்க ஆணை தரும் பயன்களைப் பெறக் கூடாது. இவ்வாறு இரண்டில் ஒன்றைமட்டுமே தெரிவு செய்யவேண்டுமே தவிர வெவ்வேறு இடங்களில்  ஒப்புக்கொள்ளவும் மறுதலிக்கவும் கூடாது.
24. A postஇடுகை  

வழக்கு நாள் இடுகை,

இணையத் தளத்தில் கருத்து இடுகை என்பனபோன்று குறிக்கப் பெறுகின்றது.  

கேட்பு நாள் விவரம், சுற்றறிக்கை, ஏல விவரம், அறிவிப்பு முதலியவற்றை அறிவிப்புப் பலகையில் அல்லது முகப்பில் வைப்பது அல்லது ஒட்டி வைப்பது.  

பலபொருள் ஒரு சொல்லாகும். பதவி, வேலை, பதிவு, தங்குமிடம், பணியில் வை, பாடிவீடு, சுரங்க நிலைக்கால்,  படைத்துறைக் களம்,  அஞ்சல், கம்பம், தூண், சாவடி முதலிய பல்வேறு பொருள்களில் இச்சொல்(post) கையாளப்படுகிறது.
25. A posterioriகாரண அனுமானம்

  குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளிலிருந்து அல்லது முழுமையாக இல்லாத தகவல்களிலிருந்து உருவாக்கிக் கொள்ளும் கருத்தளவான(உத்தேசமான) முடிவு; ஊகம்; உய்த்துணர்தல்; கருதுகை. கூர்ந்தறிதல் அல்லது பட்டறிவிலிருந்து பெறப்படுவது.  

posteriori என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பிந்தையதிலிருந்து. இதன் எதிர்ச்சொல் முந்தையதிலிருந்து – A priori.  

நேர் பொருள் பிந்தையதிலிருந்து என்றாலும் பயன்பாட்டு நிலையில் காரண அனுமானம் / காரண ஊகம் / காரண உய்த்தறிவு எனலாம்.  

புகை இருப்பின் அதற்குக் காரணமான நெருப்பு இருக்கும் என்பதை  உணர்தல்போல் ஒன்றின் முலம்  அதனோடு சேர்ந்த மற்றொன்றை அறிதல். முடிவிற்கு வர அல்லது தீர்ப்பைத் தீர்மானிக்க உதவுவது.

கணக்குத் துறையிலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

செ.சொ.பி.பேரகரமுதலியில் குறிப்பிட்டுள்ளதுபோல் அனு என்பது தமிழ் முன்னொட்டு. எனவே, அனுமானம் தமிழ்ச்சொல்லே.   அனு என்பது பொருந்துதல் என்னும் பொருளிலும் மானம் என்பது அளவு, அளவிடு என்னும் பொருள்களிலும் இணைந்து உருவான தமிழ்ச்சொல்.  

ஊகம் என்பது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். எனவே, ஐயுறவு(doubt), அயிர்ப்பு(suspicion) என்னும் பொருள்களும் அனுமானத்திற்கு உண்டு.  

கரணியம் என்னும் சொல்லில் இருந்து திரிந்ததால் காரணமும் தமிழ்ச்சொல்லே.  

இலத்தீன் தொடர்

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, November 17, 2023

சட்டச் சொற்கள் விளக்கம் – இலக்குவனார் திருவள்ளுவன் : 1-10

 




சட்டச் சொற்கள் விளக்கம்  1- 10

1. A bill further to amend    மேலும் திருத்துவதற்குரிய வரைவம்.  
வரைவத்தில் மேலும் திருத்தங்கள் தேவை என்பதை இது குறிக்கிறது.  

Bill-சட்டமாக இயற்றப்படுவதற்காக அளிக்கப்படும் சட்ட முன்வடிவு.   சட்ட வடிவு பெறுவதற்கு ஏற்பிற்காக அளிக்கப்படும்,  சேர்க்கை, திருத்தம், மாற்றம் முதலிய திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய சட்ட வரைவு.
சட்ட வரைவு என்றால் draft என்பதற்கும்  bill என்பதற்கும் குழப்பம் வரலாம். எனவே, சட்ட வரைவம் > வரைவம் எனலாம்.   இந்திய அரசியல் யாப்பில் 104 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு நடைமுறையில் சட்டமாக ஏற்கப்பெற்றவற்றிற்கும் திருத்தங்கள் மேற்கொள்ளச் சட்ட மன்றத்தில் அல்லது நாடாளு மன்றத்தில் திருத்தம் மேற்கொள்ள கொண்டுவரப்படும் சட்ட முன்வடிவையும் இது குறிக்கும்.
2. A certainஉறுதியான
தவறாத
ஏதோ ஓர் அறியப்பெற்ற ஆனால், விவரிக்க இடரான நிலைப்பாடு.   அறியப்பெற்ற ஆனால் முழுமையாக எடுத்துக் கூற இயலாத தீர்ப்பையோ வழக்கையோ சுட்டிக்காட்டும் நிலை.
3. A certain descriptionஏதோ ஒரு விவரிப்பு  
உறுதியான ஒரு விவரிப்பு  
  விவரிப்பு என்பது, பத்திரம்  அல்லது பரிமாற்றத்திற்கான விளக்கங்கள் கூறுவது.
இஃது எழுத்து மூலமாகவோ வாய்மொழி மூலமாகவோ இருக்கலாம்.
4. A Civilianகுடிமையாளர், குடிமையாளி  
குடியாளர் அல்லது குடியாளி எனப் பொதுவாகக் குறிக்கின்றனர்.
இது குடிகாரர்களைக் குறிப்பதாக அமையும்.    
முப்படைகளிலும் இல்லாத ஆயுதம் தாங்காதவர்கள்.  
சில நேர்வுகளில் ஆயுதந் தாங்கிய காவல் துறையினரும் தீயணைப்புக் காவலர்களும் குடிமையாளர்களாகக் கருதப்படுவது இல்லை.*
5. A Colourable limitation there of

   
அதனுடைய ஒரு புனைவுத் தோற்ற வரம்பீடு.  
Colourable – புனைவுத்தோற்றம்  
சின்னங்கள் பெயர்கள் (தவறான பயன்பாட்டுத் தடுப்புச்) சட்டம், 1950 [முழுமையான சட்டம்] பிரிவு 4/ The Emblems and Names (Prevention of Improper Use) Act, 1950 , Sec. 4 அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சின்னம் அல்லது போலித் தோற்றம் குறித்த வினவலைத்   தக்க அதிகாரத்தவர்,  ஒன்றியத்திற்கு (மைய அரசிற்கு) அனுப்பலாம்   [limitation-காலவரம்பீடு
சட்டம் குறிப்பிடும் கால வரம்பிற்குள் உரிமை கோரும் வழக்கைத் தொடுக்கவேண்டும் எனவும், காலம் கடந்தபின்பு வழக்கை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் குறிப்பிடும் சட்டமுறைக் கோட்பாடு]
 6. A Court competentதக்க நீதி மன்றம் (ஒன்று)   தகுதிற நீதி மன்றம் (ஒன்று)   வழக்குப் பொருண்மைக்குரிய ஒருவர் அல்லது ஒரு பொருள் மீது அதிகார வரம்பைச் செலுத்துவதற்கான நீதி மன்றத்தின் சட்டபூர்வத் திறனைக் குறிக்கிறது.  
குற்ற வழக்கு, உரிமை வழக்கு நடைமுறைகள் இரண்டிலும், தகுதிவாய்ந்த அதிகார வரம்புடைய நீதிமன்றம் என்பது அதன் முன் உள்ள வழக்கை தீர்ப்பதற்கான அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகும்.  
நீதி மன்றம் என்பதை முறை மன்றம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். எனினும் நடைமுறை சொல்லாட்சியான நீதி மன்றம் என்பதே இங்குக் குறிக்கப்பட்டுள்ளது.
7. A Court immediately belowஅடுத்துள்ள கீழ்நிலை நீதி மன்றம்  
உயர்நீதிமன்றத்தின் சார்பில் வெவ்வேறு நிலைகளில் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. ஆனால், உயர்நீதி மன்றத்திற்கு அடுத்து அமையும் நீதிமன்றத்தை மட்டுமே இது குறிக்கிறது.   [ஏ.(அ)ரங்கசாமி ஐயங்கார் எதிர் பட்டம்மாள் (எ) இராசலட்சுமி அம்மாள், (1971)1 SCC 274:AIR 1971 SC 658: 1971UJ (SC) 175]
8. A Court subordinate to the high courtஉயர்நீதிமன்றத்தின் சார்பு நீதி மன்றம்  
உயர்நீதி மன்றத்தின் கீழாக வெவ்வேறு நிலையில் உள்ள நீதிமன்றங்களைக் குறிப்பது. உயர்நீதி மன்றத்திற்கு அடுத்துள்ள நீதிமன்றமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அடிநிலை நீதி மன்றமாகவும் இடையிலுள்ள வேறு நிலையிலுள்ள நீதிமன்றமாகவும் இருக்கலாம்.
9. A decree or another order having the force of a decreeதீர்ப்பாணை அல்லது இணை ஆணை.  
நீதித்துறையின் கட்டளையாகச் செயற்படுத்துவதற்கு உரிய தீர்ப்பாணை அல்லது தீர்ப்பாணை ஆற்றலுக்கு இணையான மற்றோர் ஆணையைக் குறிக்கிறது.
10. A dell credere agentபிணை முகவர்  
பிணைப் பொறுப்பு முகவர்
  முதன்மையருக்கும் முகவருக்கும் உள்ள உறவைக் குறிப்பது.
முகவர் விற்பனை யாளராகேவா தரகராகவோ மட்டுமல்லாமல், வாங்குநருக்கு நீட்டிக்கப்பட்ட கடனுக்கான பொறுப்புறுதியராகவும் செயல்படுவதைக் குறிப்பது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, November 7, 2023

சனாதனம்: அமைச்சர்கள்மீது நடவடிக்கை: நீதிமன்றக் கண்ணோட்டம் தவறு – இலக்குவனார் திருவள்ளுவன்

 




சனாதனம்: அமைச்சர்கள்மீது நடவடிக்கை:

நீதிமன்றக் கண்ணோட்டம் தவறு

சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி தாலின் பேசியதற்கும் அம்மாநாட்டில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றதற்கும் கண்டனம் தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். அறியாப் பிள்ளைகள் தெரியாமல் பேசுகின்றனர் என்றும் கட்சிக் கண்ணோட்டத்தில் பழி தூற்றுகிறார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தோம். நீதிபதிகள் சிலரும் இந்த எண்ணத்தை எதிரொலிக்கலாம் என்றும் ஐயம் வந்தது.  அதை உண்மை என்று மெய்ப்பிக்கும்  வண்ணம்  மாண்பமை நீதிபதி  செயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.  

திராவிடக் கருத்தியலுக்கு எதிராகத் “திராவிட ஒழிப்பு மாநாட்டை” நடத்த திருவேற்காட்டைச் சேர்ந்த மகேசு கார்த்திகேயன் என்பவர்  இசைவு கேட்ட முறையீட்டில், மாண்பமை நீதிபதி  வழக்கறவு –  தள்ளுபடி – செய்துள்ளார். இம்மாநாட்டை நடத்துவதாகக் கூறியதன் நோக்கம் சனாதன ஒழிப்பு மாநாட்டின் எதிர்ப்பே என்பதால் அம்மாநாடு குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.  எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது என்று தெரிவித்த நீதிபதி, சனாதன தரும ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறையின் தங்களுடைய கடமையைப் புறக்கணித்து போன்றது எனவும் இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும் என்றும் கருத்து உதிர்த்துள்ளார்.

மத நம்பிக்கைக்கு எதிராகப் பேசக்கூடாது என்றால் நாத்திகம் என்னும் இறை மறுப்பியத்தையும் ஒரு மதமாகக் கூறுவோர் உள்ளனர். அப்படியாயின் நாத்திகத்திற்கு எதிரான கருத்தை மத எதிர்ப்பாகக் கொள்ள இயலுமா? கடவுட் கொள்கையற்ற புத்த மதம் போன்ற சமயங்கள் உள்ளனவே. அப்படியானால் அவர்கள் நம்பிக்கைக்கு எதிராகக் கடவுட் கொள்கையைத் திணிக்கிறார்கள் எனக் கடவுள் நம்பிக்கையாளரை நீதி மன்றத்தில் எதிர்க்க இயலுமா?

சாக்ரடீசு, பிளேட்டோ, அரிசுடாட்டில் ஆகிய மெய்யியல் அறிஞர்கள் ஓர் இறைக் கொள்கையினர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரும் அவருக்கு முப்பும் பின்பும் இருந்த தமிழக ஆன்றோர்களும் அவ்வகையினரே. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது திருமூலர் நம்பிக்கை. இந்நம்பிக்கையுடையோர் அவருக்கு முன்பும் இருந்தனர். இப்போதும இருக்கின்றனர். தி.மு.க.வின் கொள்கையாக இதையே பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார்.  அப்படியானால் பல்லிறைக் கொள்கையினரை அவர்களுக்கு எதிரானவர்களாகக் கூறலாமா?

ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்

திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.(திருவாசகம்)

எனத் திருநாவுக்கரசர் கடவுளுக்குக் குறிப்பிட்ட பெயரோ உருவமோ இல்லை என்பதை உணர்த்துகிறார். அதே நேரம் அந்த உண்மையை அறிந்தாலும் வெவ்வேறு பெயராலும் உருவத்தாலும் கடவுளை வணங்குவது மரபு என்பதையும் கூறுகிறார். அவ்வாறில்லாமல் உருவமற்ற கடவுளை அருவமாகக் காண வேண்டும் என்ற நம்பிக்கை யுடையார் உள்ளனர். அருவ வழிபாட்டினர் உருவ வழிபாடு தங்களுக்கு எதிரானது என்று வழக்கு தொடுக்க இயலுமா? அதே போல் ஒளி வழிபாட்டினரும் பிற வழிபாடு குறித்த உரைகள் தங்கள் நம்பிக்கைக்கு எதிரானது எனக் கூறி வழக்காட இயலுமா?

உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், இராசசுதான்,  முதலிய இந்திய மாநிலங்களிலும் இலங்கையிலும் இராவணன் கோயில்கள் இருக்கின்றன. இராவணனை வணங்குவோருக்கு எதிராக ஆண்டுதோறும் இராவண லீலா என நடத்தி இராவணன் உருவ பொம்மையை அழிப்பதும் தலைமையமைச்சர் முதலான அமைச்சர் பெருமக்கள் பஙகேற்பதும் பெரும் அநீதி யல்லவா? 

இராவணன் மேலது நீறு” என்று திருஞான சம்பந்தர் போற்றுகிறாரே! ‘இராவண காவியம்’ என்றே புலவர் குழந்தை காப்பியம் எழுதிச் சிறப்பித்துள்ளாரே.

“இராவ ணன்தன்கீர்த்திசொல்லி

அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!”

எனப் பாவேந்தர் பாரதிதாசன் போற்றுகிறாரே.

இத்தகைய சிறப்பு மிக்கு தமிழ் வேந்தர் இராவணனுக்கு எதிரான அவதூறு நிகழ்ச்சிக்கு எப்படி இசைவு தருகிறார்கள்?

அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அதற்கு ஆதரவாகவும் பேசலாம், எதிர் நம்பிக்கைக்கு எதிராகவும் பேசலாம். ஆனால், பேச்சு அவையல் கிளவி யாக – ஓர் அவையில் சொல்லக்கூடாததாகப் பொதுவெளியில் பலர் முன்னிலையில் சொல்லத்தகாததாக இருக்கக் கூடாது.

தமிழ் மக்கள் தாங்கள் காலங்காலமாகத் தங்கள் தாய்மொழியான தமிழில்தான் கடவுளை வணங்கி வந்தனர். அதுபோல் இப்போதும் வணங்க வேண்டும் என விரும்புகின்றனர். அரசும் அதற்கு ஆதரவாகத்தான் உள்ளது. ஆனால் தமிழ் வழிபாட்டிற்கு எதிரானவர்களுக்குத்தானே நீதிமன்றங்கள் ஆதரவாக உள்ளன.

இந்து மதம் என்பது நம் மீது திணிக்கப்பட்ட பெயர். இதனால் இந்து மதம் எனப்படும் சனாதனமும் நம் மீது திணிக்கப்பட்டதாக ஆகிறது. மக்களிடையே உயர்வு தாழ்வு கற்பித்துப் பிராமணர்களை மட்டும் உயர்வாகக் கூறும் இதை நாம் ஏற்கவில்லை.  பிராமணர்களில்கூடப் பலர் இதை ஏற்கவில்லை. அவ்வாறிருக்க மக்களைப் பாழ்படுத்தும் சனாசனாதனத் தீமையை மக்களிடையே எடுத்துரைக்க வேண்டியது அரசின் கடமையல்லவா?  அதனைத் தெரிவிப்பது எங்ஙனம் தவறாகும்? சனாதனத்தின் தீமைகளைப் புரிவதற்காக ஒப்புமையாகக் கொசு போன்றவற்றைச் சொன்னது எப்படிக் குற்றமாகும்? உண்மையில் இந்துமதத்தில் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புவதாக நீதி மன்றம் அவ்வாறு சொன்ன உதயநிதி தாலினைப்பாராட்டி இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் சொன்ன அவரையும் அப்பொழுது உடன் இருந்த  அறநிலையத்துறை யமைச்சர் சேகர் பாபுவையும் காவல் துறை நடவடிக்கைக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும் எனக் கூறுவது எப்படி ஏற்புடைத்தாகும்?

பிறப்பால் மக்களைப் பிளவு படுத்துகிற, செய்யும் தொழிலால் மக்களை இழிவுபடுத்துகிற, ஒழுக்கக் கேடானவற்றையும் உயர்வாகச் சொல்கிற சனாதனத்திற்கு எதிராகக் கூறுகிறவர்கள் யாராயினும் நீதிமன்றங்கள் அவர்களைப் போற்ற வேண்டும். மக்களின் உள்ளங்களை எதிரொலிக்கும் உரையாற்றியமைக்கும் உடனிருந்தமைக்கும் நடவடிக்கை எடுத்துத் தவறு செய்யாமல் காவல்துறை தன் கடமையை ஆற்றியுள்ளமைக்கு நீதிமன்றம் பாராட்டு வழங்கட்டும்!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருக்குறள் 423)

என்னும் திருவள்ளுவர் கூறும் அறவழி நின்று சமய வாதிகள் மெய்ப்பொருள் காணட்டும்!

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.   (திருக்குறள் – 355)

என்னும் திருவள்ளுவர் வழி நின்று மக்கள் உண்மையை ஏற்கட்டும்.

சனாதனக் கொள்கை தொடர்பான ஏற்புரைகளுக்கும் மறுப்புரைகளுக்கும் யாரும் முட்டுக்கட்டை போடாமல் பகுத்தறிவிற்கும் இறைநெறிக்கும் வழிவிடட்டும்.

சனாதனத்தை எதிர்ப்போரை

எதிர்ப்பவர்களுக்குத் தடை விதிக்கட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை – 21.10.2054 / 07.11.2023




Followers

Blog Archive