Wednesday, January 18, 2023

இதழ்கள் மூலமான தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! -தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 19- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


இதழ்கள் மூலமான தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! –

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  19

(ஆங்கில முத்திரையும் இந்தி முழக்கமும் ஏன்? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  18: தொடர்ச்சி)

இதழ்கள் மக்கள் மீது ஆளுமையைச் செலுத்துவதால் தமிழ்க்காப்புப்பணியில் ஈடுபட்டுப் பிற மொழிக்கலப்பிற்கு இடங்கொடாது இதழ்கள் நடத்த வேண்டும். “தமிழே எழுதுக! தமிழையே நாடுக!” என 1915 இலேயே தாம் நடத்திய ‘ஞானபாநு’ இதழில் சுப்பிரமணிய சிவா வலியுறுத்தியுள்ளார். அவர்,

தமிழ்ப் பண்டிதர்களே! தமிழ்சனங்களே சாக்கிரதை! சாக்கிரதை! உங்களுடைய மொழியைக் காப்பாற்றுங்கள். ஒரு சன சமூகத்திற்கு உயிர் அதன் மொழிதாள். தமிழ் மொழி அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும், சீரும் அழிந்துவிடும்.” “ உங்கள் நா தமிழே பேசுக! நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக! உங்களுடைய இருதயம் தமிழையே நாடுக!” என வேண்டுகிறார்.

சமற்கிருதக் கலப்பிற்கு எதிராகப் பரிதிமாற்கலைஞர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்த்தென்றல் திருவிக,  தேசபக்தன், திராவிடன், நவசக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்து நல்ல தமிழ்நடைக்கு வழிகாட்டியாக இருந்தார். தமிழ்க்கடல் மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்ததே அயல்மொழிக் கலப்பிற்கு எதிராகத்தான். இவ்வாறு அறிஞர்கள் பலரும் மொழிக்கலப்பிற்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் இதழ்களில் மொழிக்கலப்பு கூடாது என்பதை வலியுறுத்தித் தானே முன்னெடுத்துக் காட்டாகச் ‘சங்க இலக்கியம்’, ‘இலக்கியம்’, ‘குறள்நெறி’ முதலிய இதழ்களை நடத்தினார்.

திராவிட இயக்க எழுச்சியால், தமிழ்ப்புலவர்கள் பலரும் பிறமொழிக் கலப்பில்லாத இதழ்களை நடத்தினர். ஆனால், இவை பெரும்பாலும் திங்கள், திங்களிருமுறை, வார இலக்கிய இதழ்களாகத்தான் இருந்தன. தமிழ்ப்போராளி பேரா.சி. இலக்குவனார்தான் ‘குறள்நெறி’ என்னும் நாளிதழையும் நடத்தினார். இதழ்களில் இடம் பெறும் ஆங்கிலக்கலப்பைச் சுட்டிக்காட்டிக் கலப்பற்ற நடையை வலியுறுத்தித் “தமிழிலே பேசுக! தமிழிலே எழுதுக!” என வேண்டினார். 

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத்

தொழுது படித்திடடி பாப்பா’

எனப் பன்மொழி யறிந்த பாரதியார் கூறினார். ஆனால் அதை நாம் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. குறிப்பாக இதழ்களில் பணியாற்றுவோர்,  உயர்ந்த தமிழ்ச்சொற்களைத் துறந்து அயற்சொற்களைக் கலந்து எழுதுகின்றனர்.

“இமயமலைபோல் உயர்ந்த

ஒரு நாடும் தன்

மொழியில் தாழ்ந்தால் வீழும்”

என்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். நாம் நம் தாய்மொழியாம் தமிழ் மொழியைப் பயன்பாட்டுத் தளங்களில் இருந்து விரட்டி அடிப்பதால் நாமும் தாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

“மொழி அழிந்தால் இனமும் அழியும்” எனத் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் தந்த எச்சரிக்கைக்குச் செவி மடுக்காததால் நம் இனத்தை அழித்துக் கொண்டுள்ளோம்.  இன்றைய இந்தியப் பரப்பு முழுவதும் ஒரு காலத்தில் தமிழ் இருந்தது என வரலாறு சொல்கிறதென்றால், அங்கெல்லாம் தமிழ் அழிந்ததால் தமிழினமும் இல்லாமல் போய்விட்டதுதானே வரலாறு காட்டும் உண்மை.

தமிழர் நிலமாக இருந்த இலங்கையில் பெரும்பகுதிச் சிங்களர் நிலமாக மாறிய காரணம், அப்பகுதிகளில் தமிழ் மறைந்து போனதுதானே! இந்த வரலாற்று உண்மைகளை யறிந்தும் நாம் இன்னும் தமிழ்க்கொலையில் ஈடுபட்டு வருகிறாமே!

தமிழ்க்கொலைச் செயல்களில் பெரும்பங்கு ஊடகங்களுக்கு உள்ளது. இவை விரைவாகத் தமிழை அழித்து வருகின்றன. ஊடகங்களிலும் இதழ்கள் புரியும் தமிழ்க்கொலை அளவில.

மொழிகளின் இறப்பு குறித்துக் கட்டுரை எழுதியவர்கள், ஒரு மொழியைக் கடைசியாகப் பேசியவரின் மறைவுடன் அந்த மொழியும் அழிந்துள்ளது என்றும் இத்தகைய போக்கு தொடர்வதாகவும் குறிப்பிடுகிறார்கள். ஒரு மொழியைப் பேசக்கூடியவர் யாருமில்லாதபோது அந்த மொழியும் அந்த மொழி பேசும் இனமும் அழிகின்றன. எனவேதான் ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியைப் பேணும் வகையில் நாளும் பயன்படுத்த வேண்டும். மொழியைப் பயன்படுத்துவது என்றால் பேச்சிலும் எழுத்திலும் கல்வியிலும் கலைகளிலும் வழிபாட்டிலும் என எல்லா இடங்களிலும் தம் தாய்மொழியையே பயன்படுத்துவது ஆகும். அவ்வாறான நிலை இல்லாத மொழிகள் அழிந்து வருகின்றன.

க.சுப்பிரமணி(ஐயர்) 1891 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இதழைத் தொடங்கியதன் நோக்கம் தமிழ் மக்களுடன் தொடர்பு கொள்வதே. “சுதேசபாசையில் தெள்ளத் தெளியத் தெரிவித்தாலன்றி இந்நாட்டாருக்கு பொதுநல அறிவு விருத்தியாகாது.” எனவே, நாட்டுமொழியில் பத்திரிகை இருக்க வேண்டும் என்றார். இன்றைக்குப் பணமே இலக்கு என்றாகிப் போனதால், மக்களைப்பற்றியோ மக்கள் பேசும் மொழியைப் பற்றியோஇதழ்கள் நடத்துவோர் கவலைப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் முழுவதும் தமிழ் நடையை விட்டு விட்டு இங்கிலீசு நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம். நம் பத்திராதிபார்களிடம் காணப்படுகிறது” என்று பாரதியார் அன்று வருந்தினார். இந்த அவலம் நாளும் பெருகி இன்றைக்கு ஆங்கிலம்,இந்தி, சமற்கிருதச் சொற்கலப்பாக இதழ் நடை இருந்துவருகிறது.

இணைய வழியில் கிடைக்கும் இதழியல் தொடர்பான பல கட்டுரைகளையும் சில நூல்களையும் படித்துப்பார்த்தேன். இதழ்களின் தோற்றம், வளர்ச்சி முதலிய தகவல்கள் உள்ளனவே தவிர இதழ்களின் நடைகளைப்பற்றிய குறிப்புகள் இல்லை. இதழ்களின் பணிகள், இதழ்களின் கடமைகள் என்னும் தலைப்பிலான பகுதிகளில் கூட, இதழ்களின் நடை கலப்பற்ற தூய நடையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. (‘அகரமுதல’ இதழில் மட்டுமே இது குறித்த கடடுரைகள் வந்துள்ளன.) கவிஞர்களின் பாடல் வரிகளிலும் தமிங்கிலமாகக் கூறப்படும் இன்றைய நடை குறித்த கட்டுரைகளிலும் கலப்பற்ற நடை வலியுறுத்தப்படுகின்றதே தவிர இதழியல் கட்டுரைகளில் அவ்வாறு இடம் பெறாமை வியப்பாக உள்ளது.

இன்றைய நடையில் எத்தகைய கலப்பு இடம் பெறுகின்றது என்பதற்காகச் சில இதழ்களில் இடம்பற்ற சொற்களைப் பின்வருமாறு  காணலாம்:-

bபேச்சுலர், ஃபிரையிங், ஃபேமிலி, ஃபோர்க், அசால்ட், ஆக்டிவ், ஆடியன்ஸ், ஆர்டர், ஆனியன், இட்லி, டிக்கா. ப்ராசஸ்டு சீஸ், எசன்ஸ், எந்திரி, எலக்டிரிக், கட் செய்து, கப், கமிட், கரம் மசாலா, கஸ்ட்டர்ட், காஸ்ட்லி, கிச்சன், கிரிப், கிரியேட்டிவ், கிளாமர், குக்கர், கேப், கேரியர், க்ளிக் செய்யவும், சங்க்ஸ், சாஸ், சிசன், சில்லி, சினிமா, சீசன், சீரியல், சீஸ், சுகியன், சூப்பர், சூப்பர் ஆ, சூப்பர் மார்க்கெட், சூப்பர் ஹிட், செட் செய்யவும், சென்டிமென்ட், சேட், சோசியல் மீடியா, சைடிஷ், சைஸ், டம்ளர், டாக்டர், டாப், டார்க் பிரெளன், டி.வி. டிரீட், டிரெண்ட், டீ ஸ்பூன், டூத் பிக், டேஸ்ட், ட்ரே, ட்ரை பண்ணலாம், தியேட்டர், திருநீர் (திருநீறு), தீம், தோல்(தோள்), நட்ஸ், நிம்கி, நியூட்ரிஷியஸ், நினைவிக்கு, பரீட்சையம், பவுடர், பவுல், பனிர், பார்த்தால் (பார்த்தாள்), பால்ஸ், பிரீ ஹீட், பிரைடே, பிளேட், புடிங், புராஜக்ட், பூகார்(புகார்). சண்டே ஸ்பெஷல், பேக், பேக்கிங், பேச்சுலர்,  போட்டோ ஷூட், போட்டோசூட், போஸ், மண்டே,மதுர் தட்டை, மஷ்ரூம், மாடலிங், மாடல், மில்க், மிஸ் செய்ய, மூணே விசில், மோல்ட், யூ டியூப்,ரெசிப்பி, ரோஸ்ட், ரைஸ், லாக் டெளன், லீடு ரோல், லைக்குகள், வார் ரூம், வால் வீச்சு, வெரைட்டி, வெஜ், வைரல், ஜாலி சமையல், ஜோடி, ஸ்கிரீன் ஷாக், ஸ்டைல், ஸ்நாக்ஸ், ஷாக், ஷாக்கிங், ஷாட், ஷேர்கள், ஹாட், ஹோட்டல்….. …..

(இதழ்களில் உள்ளவாறே குறிப்பிட வேண்டி வந்தமையால் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்த நேர்ந்ததற்கு வருந்துகிறேன்.)

இவை சில இதழ்களில் இடம்பெற்றவைதாம். அனைத்து இதழ்களிலும் அனைத்துச் செய்திகளிலும் இடம் பெறும் மொழிக்கொலையைப் பார்ப்பின் பேரளவாக இருக்கும்.

மொழிக்கொலை என்பது இனக்கொலையில் முடிவதால் இத்தகைய மொழிக்கொலைகளுக்குத் தண்டனைகள் வழங்க வேண்டும். மின்னல்போல் செய்தியைப் பரப்பும் மின்னிதழ் ஒன்றின் சமையல் பகுதியைப் பெண் பெயரில் ஒளிந்து கொண்டு ஆடவர் ஒருவர் எழுதி வருகிறார். தலைப்பிலும் தமிழ் இல்லை. உள்ளடக்கத்திலும் மொழிக்கொலையே யன்றி வேறில்லை. இவருக்கு அதிக அளவு கடுங்காவல் தண்டனை வழங்கினால் பிறருக்கு எச்சரிக்கையாக இருக்கும் எனக் கருதுகிறோம். தூய நடையைப் புறக்கணித்து மொழியைச் சிதைத்துக் கொலைபுரியும் ஒவ்வொருவருக்கும் தண்டனை தருவது இத்தகைய மொழிக்கொலைகளைத் தடுத்து நிறுத்தும்.    

தமிழர் நலன்களில் கருத்து செலுத்தும் தமிழ்நாட்டின் அரசு தமிழ்மொழி நலன்களிலும் கருத்து செலுத்தித் தமிழையும் தமிழரையும் காத்திட வேண்டுகிறோம்!

 இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, January 12, 2023

கைப்பாவை ஆளுநரின் அடாத செயலும் தன்மான முதல்வரின் ஆளுமைச் சிறப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்

 





கைப்பாவை ஆளுநரின் அடாத செயலும்

தன்மான முதல்வரின் ஆளுமைச் சிறப்பும்

இந்த ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த மார்கழி 25, 2053/09.01.2023 அன்று கூடியது. மரபிற்கிணங்க ஆளுநர் உரையும் இக்கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால், ஒன்றிய ஆள்வோரின் கைப்பாவையாகச் செயற்படும் ஆளுநரால் இந்நாள் கறுப்பு நாளாக மாறிவிட்டது.

பா.ச.க.ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் அத்து மீறல் நடப்பது வழக்கமாகி விட்டது. அதுபோல் இங்கும் ஆளுநரின் அத்துமீறல் நடந்து உள்ளது. கூட்டத் தொடரின் முதல் நாள் ஆளுநர் அரசின் உரையை வாசிப்பது மரபு. இது முழுக்க முழுக்க அரசு தரும் உரைதான். இதில் எதையும் சேர்க்கவோ நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.  ஆனால், தமிழ்நாட்டு ஆளுநர் இந்த உண்மையை அறிந்தும் சில பகுதிகளை வாசிக்கவில்லை தானாகச் சிலவற்றைச் சேர்த்து வாசித்துள்ளார்.

கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு ஆளுநர் இர.நா.இரவி பேசுகையில் ஆளுநர் ஒன்றும் தொய்வ முத்திரை(Rubber Stamp)  அல்ல என்று பேசியுள்ளார். உண்மையிலேயே சட்டப்பேரவையில் ஆளுநர் ஒரு வாயில்லாப் பூச்சிதான். அரசு சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளைதான். எனவே, ஆளுநர் என்பவர் அதிகாரமற்ற மாநிலத் தலைமை அதிகாரி.

அரசியல் யாப்பு விதிகள் 160, 356, 357 ஆகியவற்றின்படிக் குடியரசுத்தலைவர் இசைந்தால் அன்றிச் சிக்கலான சூழல்களில் கூட ஆளுநருக்கு என எந்தவகையான அதிகாரமும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் இருக்கும் பொழுது அமைச்சுக் குழுவின் அறிவுரையின்றி எந்த முடிவும் எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அரசியல் யாப்பில் ஆளுநருக்குச் சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அமைச்சுக் குழுவின் அறிவுரைப்படியே செயற்பட வேண்டும் என்ற விதி எல்லா அதிகாரங்களையும் செல்லாததாக்குகிறது. சட்டப்பேரவையைக் கூட்டும் அதிகாரமும் முடித்து வைக்கும் அதிகாரமும்கூட அவரால் தன்னியல்பில் செய்ய முடியாது. அரசின்/பேரவைத்தலைவரின் நெறியுரைக்கிணங்கவே செயற்படுத்த இயலும்.

அரசியல் யாப்பு இவற்றைத் தெளிவாக வரையறுத்திருக்கும் பொழுது, ஆளுநர் தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதும் தன் விருப்பில் உரையாற்றுவதும் கண்டனைக்குரியதே யன்றி வேறில்லை. ஆனால் தமிழ்நாட்டு ஆளுநர் தன்னால் ஒப்புதலளிக்கப்பட்ட அரசு உரையில் சில பகுதிகளை வேண்டுமென்றே அறிந்து வாசிக்காமல் ஒதுக்கியுள்ளார். சிலவற்றைச் ,Jசேர்த்து வாசித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்துகார், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாதிரி ஆட்சி, தமிழ்நாடு அமைதிப்பூங்கா, சமூக நீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை, பெரியார்,  மத நல்லிணக்கம், சமத்துவம் போன்ற சொற்களைச் சொல்லாமல் தவிர்த்து விட்டார். இதன் மூலம் பா.ச.க. மதநல்லிணக்கம், சமத்துவம், பெண்ணுரிமை, சமூகநீதி முதலியவற்றிற்கு எல்லாம் எதிரானது என்பதை ஒப்புக்கொண்டார்.

இது போல் பிற மாநிலங்களில்  ஒன்றிய அரசின் கைப்பாவையாகச் செயற்படும் வேறு சில ஆளுநர்களும் நடந்துள்ளனர். கேரளாவில் 1969, 2001, 2018 ஆம் ஆண்டுகளிலும் மேற்கு வங்காளத்தில் 1969 ஆம் ஆண்டிலும் திரிபுராவில் 2017 இலிலும் இதுபோல் ஆளுநர்கள் அவைமரபை மீறியும் அரசியல் யாப்பிற்கு மதிப்பளிக்காமலும் ஏற்கப்பெற்ற உரைப்பகுதியை வாசிக்காமலும்  தன் விருப்பிலான பகுதியைச் சேர்த்தும் வாசித்துள்ளனர். அப்பொழுது முதல்வர்கள் அவ்வாறு உரையில் இல்லாததைப் பேசும் பொழுதே அப்பகுதி உரையில் இல்லை என்பதைத் தெரிவித்துள்ளனர். அல்லது கடுமையாக எதிர்த்துள்ளனர். ஆனால், நம் முதல்வர் மு.க.தாலின் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அதே நேரம் சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் காத்துள்ளார். ஆளுநர் உரையாற்றும் வரை காத்திருந்து அதன் பின்னரே ஆளுநர் தானாகக் கூறிய உரைகளை நீக்கிவிட்டு ஒப்புதல் பெற்ற உரையையே சட்டப்பேரவைக் குறிப்பில் சேர்க்கத் தீர்மானம் கொணர்ந்து நிறைவேற்றியுள்ளார்.

அவ்வாறு முதல்வர் தீர்மானத்தை வாசிக்கும் பொழுதே ஆளுநர் வெளிநடப்பு செய்துள்ளார். சட்டப்படி அரசின் தலைவர் ஆளுநர்தான். அவர்தான் சட்டப்பேரவையையும் கூட்டியுள்ளார்.அவ்வாறிருக்க எதிர்க்கட்சியாள்போல் வெளிநடப்பு செய்தது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையை அவமதிப்பதாகும்.

இந்த அவமதிப்புச் செயல்  குறித்துச் சட்டப் பேரைவத்தலைவர் மாண்புமிகு அப்பாவு அவர்களும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் சிறப்பாகப் பேசியுள்ளனர். பாசக, அக்கட்சியின் தோழமைத் தலைவர்கள் சிலர் தவிர அனைவரும் ஆளுநரின் இப்போக்குகளைக் கண்டித்து வருகின்றனர். ஆளுநரைத் திரும்ப அழைக்க வேண்டும் என்றும்  ஆளுநரே வெளியே போ என்றும் முழங்கி வருகின்றனர்.

பா.ச.கவின் கைப்பாவையாக உச்சத்தலைவர்கள் அறிவுரைகளுக்கிணங்கவேவ ஆளுநர்கள் செயற்படுவதால் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும எடுக்காது. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ்நாட்டுத்தலைவர்கள் பெயரைக்கூட உச்சரிக்க மறுக்கும் ஆளுநர் தானாகவே தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதுதான் அவருக்கு மரியாதையாகும்.

முதல்வரின் தீர்மானத்தை ஒன்றிய ஆட்கள் தவறாகச் சித்திரிக்கின்றனர். பொதுவாக ஆளுநர் உரையை வாசிக்காமல் அவ்வுரை ஆளுநரால் வாசிக்கப்பட்டதாகப் பேரவைத்தலைவர் அறிவிப்பதே பெரும்பாலும் மரபாக உள்ளது. தமிழ்உரையைமட்டும் பேரவைத் தலைவர் வாசிப்பார். முழு உரையையே வாசித;ததாகக் கருதும்  மரபு இருக்கும் பொழுது ஆளுநரால் விடுபட்ட,சேர்க்கப்பட்டவற்றைப் புறந்தள்ளி ஆளுநரால் ஏற்கப்பெற்ற உரையை வாசித்ததாகக் கருதிச் சட்டப்பேரவை ஏற்பது மிகச்சரியே ஆகும். எனவே, முதல்வரின் செயற்பாடு மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி விரைந்து எடுத்த சிறந்த முடிவாகும். இதன் மூலம் முதல்வர் மு.க.தாலின் ஆளுமை மிக்கவராக ஒளி விடுவார்.

இங்கே மற்றொன்றையும் நினைவில் காெள்ள வேண்டும். பதவி யேற்புநிகழ்வுகளின்பொழுது ஆளுநர் முழுமையாக வாசிக்க மாட்டார் . ஐ / ‘I’ என்பதுடன் நிறுத்திக் கொள்வார். பதவி யேற்பவர் ஆளுநர் முழுமையாகச் சென்னதாகக் கருதித் தானாகவே உறுதிமொழியை வாசிப்பார். எனவே,  ஆளுநர் உரையின் சிலப் பகுதிகளை வாசிக்காத பொழுதும்  ஏற்கப்பெற்ற முழு உரையையும வாசித்ததாகக் கருதிச் சட்டப்பேரவைக் குறிப்பில் இடம் பெறுவதும் மரபாகக் கொள்ளலாம்.

ஆளுநருக்குக் கட்சி உணர்வும் இரா.சே.ச.பற்றும் இருப்பின் மிக்கிருப்பின் மாநிலத்தின் தலைமைப் பதவியை அதற்குப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அல்லது பதவியைத் துறந்து முழுநேர இரா.சே.ச. ஊழியராகச் செயற்பட வேண்டும்மனச் சான்றுக்கு விடை கொடுக்காமல் பதவிக்கு விடை கொடுத்துத் தானாகவே தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இதுவே தமிழ்நாட்டு மக்களின் விழைவாகும்.

விரைந்து வெளியேறுவாரா?

பயனற்ற சொற்களை விரித்துப் பேசுவது பேசுவோன் நன்மை செய்பவன் இல்லை என்பதை  உணர்த்தி விடும் என்பதை நாம் பின்வரும் குறட்பா மூலம் அறியலாம்.

நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.

(திருவள்ளுவர்,திருக்குறள் 193)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை



Monday, January 9, 2023

போகிக்கு விடுமுறை விடுக!- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




போகிக்கு விடுமுறை விடுக!

பொங்கல் விழா என்பது பொங்கல் நாளை மட்டும் குறிப்பதில்லை. பொங்கலுக்கு முதல்நாளான போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்து வரும் 4 நாள் தொகுப்பாகும்.

போகி என்பதும் தமிழர்க்குரிய சிறப்பான பண்டிகை நாளாகும். சுற்றுப்புறத் தூய்மைக்கும் மனைத் தூய்மைக்கும் நல வாழ்விற்கும் அடிப்படையான பண்டிகையாகும். பண்டுதொட்டு (முற்காலம் முதல்) – கொண்டாடப்படுவது பண்டிகை எனப்பட்டது.

பழையனவற்றைக் கழித்துப் புதியனவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நாளே போகியாகும். வீட்டிலிருந்து குப்பைக் கூளங்களையும் பயனற்றுப் போனவற்றையும் நைந்த கிழிந்த சிதைந்த துணிகள், பாய்கள் முதலானவற்றையும் போக்கும் நாளாகும். பழையனவற்றைப் போக்கும் நாள் போக்கி எனப்பட்டது.  ‘போக்கி’ என்பது பழக்கத்தில் ‘போகி’ என மாறி நிலைத்து விட்டது.

ஆண்டின் கடைசிநாளான மார்கழித் திங்கள் இறுதிநாள் போகியாகும். மறுநாள் புத்தாண்டின் தொடக்கமாகத் தைப்பொங்கல் வருகிறது. 

‘பொங்கல்’ என்பது ஒருவகையில் நன்றி கூறும் விழா. தைப் பொங்கல் இயற்கைக்கு- சூரியனுக்கு – நன்றி கூறும் நாள். மறுநாள் கால்நடைகளுக்கு நன்றி கூறும் நாள்.  அதற்கடுத்த நாள் ஆள்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் நன்றி கூறி வாழ்த்து பெறும் நாள். அதுபோல் போகி என்பதை, ஆண்டின் கடைசிநாள் என்ற முறையில் அவ்வாண்டின் நல்ல நிகழ்வுகளுக்காக நன்றி கூறுவதாகக் கூறுவோரும் உள்ளனர்.

போகிநாளை நிலைப்பொங்கல் என்றும் கூறுவர். வீடடின் தலை வாயிலில் உள்ள நிலைக்கு மஞ்சள் பூசி, அதில் குங்குமப் பொட்டிட்டு, இல்லுறை தெய்வத்தை வணங்குவர். நிலையில் கரும்பைச் சாத்தி நிற்கச் செய்து, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்துத் தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டி தெய்வ வணத்தை மேற்கொள்வர். வீட்டின் பிற நிலைகளிலும் மஞ்கள் பூசிக் குங்குமப் பொட்டிடும் வழக்கமும் பின்னர் ஏற்பட்டது.

ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை” என நெடுநல்வாடை(அடி 86) கூறுகிறது. வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலை எனப் பொருள். நெடுநிலையில் தெய்வம் தங்கியிருப்பதாக நம்புவதால் செய்யப்படும் வழிபாடு. இதையேதான் மதுரைக்காஞ்சியும் (அடி 353) ‘அணங்குடை நெடுநிலை’ என்றும்  ‘அணங்குடை நல்லில்’ (மதுரைக்காஞ்சி, 578) என்றும் கூறுகிறது. இவ்வாறு நிலையை – நிலையிலுள்ள தெய்வத்தைச் சிறப்பாக வணங்கும் நாளே போகி நாளாகும்.

போகிநாளன்று பழங்குப்பைக் கூளங்கள் முதலியவற்றை எரித்து அழிக்கும் பழக்கம் உள்ளது. இவ்வாறு எரிப்பதன் மூலம், மக்கள் தங்களிடையே உள்ள மனக்கசப்புகள், ஒழுக்கக் கேடுகள், தீய பழக்க வழக்கங்கள், விரும்பத்தகாத எண்ணங்கள் ஆகியவற்றையும் அழிப்பதாகக் கருதுவர். சிறுவர் சிறுமியரும் வீட்டைத் தூய்மை செய்து குப்பைகளை எரிப்பதுடன் போகி மேளம் எனப்படும் கொட்டு என்பதைச்  கொட்டுவித்தும்  போகிப்பண்டிகையில் பங்கேற்பார்கள்.

உலக நாடுகள் பலவற்றில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால் எந்த நாட்டிலும் தூய்மையை வலியுறுத்தும் பண்பாட்டுத்திருநாளாக முதல் நாளைக் கொண்டாடுவதில்லை. போகிப் பண்டிகை என்பதன் சிறப்பைப் பலரும் உணரவில்லை. இன்றைக்குச் சுற்றுப்புறத் தூய்மைக்கு எடுத்துக்காட்டான போகிநாளில் தூய்மைக்கேட்டை விளைவிக்கும் வண்ணம் எரிக்கக்கூடாதவற்றை எரித்து வருகின்றனர். அரசும் சுற்றுப்புற ஆர்வலர்களும் வேண்டுவதுபோல் இவற்றை எல்லாம் தவிர்த்துச் சுற்றுப்புறத் தூய்மை நாளாக மாற்ற வேண்டும்.

பொங்கலுக்கு முன் வீட்டிற்கு வெள்ளையடித்தும் புது வண்ணம் பூசியும்  வீட்டை அழகுபடுத்துகிறார்கள். போகியன்று வீட்டைமுழுத் தூய்மையாக ஆக்குகிறார்கள். அன்றும்  சிறு தவசங்கள்(தானியங்கள்), பருப்பு வகைகள், இனிப்பு, கார வகைகள் போன்றவற்றை இறைவனுக்குப் படைத்து வணங்குவர்.

இவ்வாறு பொங்கல் திருநாள் என்பது போகியன்றே தொடங்கி விடுகிறது. எனவே போகி என்பதும் தமிழர்க்கு மிகவும் சிறப்பு மிக்க நாளாகும்.

ஆனால் மக்கள்திலகம் ம.கோ.இராமச்சந்திரன் முதல்வராக இருந்த பொழுது சிலர் பொங்கலை முன்னிட்டு 4 நாள் விடுமுறை தேவையில்லை எனக் கூறித் தவறாக வழிகாட்டி, போகிக்குரிய விடுமுறை நாளை இல்லாமல் ஆக்கினர்.  இதனால் மற்றுமொரு தீங்கும் நேர்கிறது. போகியன்று விடுமுறை யில்லை என்பதால் அன்றுதான் மக்கள் ஊருக்குப் புறப்பட்டுச் செல்ல நேரிடுகிறது. இதனால், பொங்கல் அன்றுதான் வீட்டுக்குச் செல்ல நேருகிறது. கதிரவன் தோன்றும் நேரம் பொங்கல் வைத்துப் படைப்பவர்களுக்கு  அநத நேரத்திற்குள் வீடுகளுக்குச் செல்ல முடிவதில்லை. நான் மதுரையிலிருந்து சென்னைக்குப் பதவி உயர்வில் வந்த முதலாண்டில் போகியன்றுதான் வீட்டிற்குப் புறப்பட முடிந்தது. ஆனால், மறுநாள், பொங்கலன்று நண்பகல் 12,00 மணிக்குத்தான் மதுரை செல்ல முடிந்தது. பெரும்பாலோர்க்கு இதுதான் நிலை. போகியன்று வரையறை விடுப்பு உண்டு. விரும்புவோர் எடுத்துக் கொள்ளலாமே என்பார்கள். ஆனால், பெரும்பாலும் பலருக்கு அன்றைக்கு வரையறை விடுப்பைப் பயன்படுத்தும் வாய்ப்பு கி்டைக்காது.  அரசு ஊழியர்களுக்குத்தான் வரையறை விடுப்பு. தனியார் எங்ஙனம் அவ்வாறு விடுப்பு எடுத்துச் செல்ல இயலும்? எனவே, பொங்கலன்று சிறப்பாக அந்நாளைக் கொண்டாடு வதற்காகவும் முதல்நாள் வீட்டைத் தூய்மைப்படுத்து வதற்காகவும்  போகிப் பண்டிகையையும் கொண்டாடு வதற்காகவும் போகியன்று விடுமுறை தேவை.

தமிழக முதல்வர் மு.க.தாலின் இதில் கருத்து செலுத்திப் போகிநாளன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம், தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் வங்கி முதலிய நிறுவனங்களும் போகிக்கு விடுமுறைவிட ஆவன செய்ய வேண்டும்.

‘தமிழ்நாடு’ அரசு தமிழர் திருநாளைச் சிறப்பிக்கும் வகையில் போகியன்றும் விடுமுறை அளிக்க அன்புடன் வேண்டுகிறோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை




Friday, January 6, 2023

ஆளுநராயினும் நா காக்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




ஆளுநராயினும் நா காக்க!

வரலாற்றை அறியாமலும் அறிந்தும் வரலாற்றை மறைத்தும் யாராக இருந்தாலும் உளறக்கூடாது என்பதை உணர்ந்து உண்மையைக் கூற வேண்டிய உயர்ந்த பொறுப்பில் உள்ள ஆளுநர், தமிழ்நாடு என்னும் பெயரை அகற்றும் வகையில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(திருவள்ளுவர், திருக்குறள் 355)

என்பதை உணர்ந்து பேச வேண்டியவர், தமிழ்நாடு என்னும் பெயரின் உண்மை வரலாறு அறியாமல் இப்பெயரை மாற்ற வேண்டும் என்று பேசியிருக்க மாட்டார்.

“தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்” எனப் பேசியுள்ளார்.

பா.ச.க. ஆட்சியில் ஆளுநர்கள், பாசக மாநிலத் தலைவர்களாகச் செயற்பட்டு ஆளுநர் மாளிகையைப் பா.ச.க. அலுவலகமாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

அதன் விளைவுதான் இதில் பேசியுள்ள இரு தொடர்களும். கட்சித் தலைவர்போல் திராவிட ஆட்சி என்றெல்லாம் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதற்குத் தமிழ்நாட்டுக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழ்நாடு என்பதைச் சரியல்ல என்னும் தொனியில் பேசியதைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டுக் கட்சிகளும் தமிழார்வர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுபோல் நாமும் எதிர்ப்பைத் தெரிவிப்பதே முறையாகும்.

திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனப் பேசியுள்ள மேதகு மேதைக்கு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் எனப் பெயர் மாற்றுவதற்கான சட்ட வரைவைக் கொண்டுவந்த பூபேசு குபுதா திராவிடக் கட்சித் தலைவர் அல்லர்.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர். அதுபோல் தமிழ்நாடு சட்டமன்றத்தில், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் கோரித் தீர்மானத்தைக் கொண்டுவந்த பி.எசு.சின்னதுரை திராவிடக்கட்சியைச் சேர்ந்தவர் அல்லர்.

மக்கள் சமவுடைமைக் கட்சியின் (பிரசா சோசலிசுட்டுக்கட்சியின்) சட்ட மன்ற உறுப்பினர்.

தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரும் திராவிடக் கட்சியினர் அல்லர்; பேராயக்கட்சியான காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.

இந்திய விடுதலைக்கு முன்னரும் இம்மாநிலத்தைச் சென்னை மாகாணம் என்றும் சென்னை மாநிலம் என்றும் அழைத்தாலும் 1969-ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படுவதற்கு முன்னரும் பொதுமக்களும் பெரும்பாலான கட்சியினரும் தமிழ் அமைப்பினரும் தமிழ்நாடு என்றுதான் குறிப்பிட்டு வந்தனர்.

இதிலிருந்தே தமிழ்நாடு என்பதுதான் அனைத்துத் தரப்பாரின் விருப்பம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (1949), தமிழ் நாடு மின்சார வாரியம் (1957), தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம்(1955) முதலான அரசு நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் பலவற்றின் பெயர்களும் தமிழ்நாடு என்றே குறிக்கப்பட்டன.

தமிழ்நாடு என்பது இன்று நேற்று வந்த பெயரன்று. காலங்காலமாகத் தமிழ்நாடு என்று அழைத்து வந்தமையை இலக்கியங்கள் கூறுகின்றன.

சேர சோழ பாண்டிய மூவேந்தர்கள் ஆண்ட பொழுதிலும் தமிழ்நாடு என்று குறிப்பிட்டு மகிழ்ந்து வந்தனர்.

“இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய” எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார்.

“தண் தமிழ் வேலி தமிழ்நாட்டு அகம் எல்லாம்’ எனப் பரிபாடல் கூறுகிறது.

சேக்கிழார் தம்முடைய காப்பியமான பெரிய புராணத்தில் பின்வருமாறு 12 அடிகளில் தமிழ்நாடு/தமிழ்நாட்டு எனக் குறித்துள்ளார்.

1. “சந்த பொதியில் தமிழ்நாடு உடை மன்னன் வீரம்”

2. “வல்லாண்மையின் வண் தமிழ்நாடு வளம் படுத்து”

3. “ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ்நாடு உற்ற”

4. “பானல் வயல் தமிழ்நாடு பழி நாடும்படி பரந்த”

5. “தென் தமிழ்நாடு செய்த செய் தவ கொழுந்து போல்வார்”

6. எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இரும் தமிழ்நாடு”

7. “பூழியர் தமிழ்நாட்டு உள்ள பொருவு_இல் சீர் பதிகள் எல்லாம்”

8. “நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி”

9. “புரசை வய கட களிற்று பூழியர் வண் தமிழ்நாட்டு”

10. “தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ்நாட்டு மன்னன்”

11. “தெருள் பொழி வண் தமிழ்நாட்டு செங்காட்டங்குடி சேர்ந்தார்”

12. “செய்வார் கன்னி தமிழ்நாட்டு திரு மா மதுரை முதலான”

இவ்வாறு காலந்தோறும் இலக்கியங்களில் புலவர்களும் வழி வழி மக்களும் நம் நாட்டைத் தமிழ்நாடு என்றே அழைத்துவந்துள்ளனர்.

இப்பொழுதும் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல உலக அளவிலும் தமிழ்நாடு என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, கட்சிப்பணிகளை ஆளுநர் போர்வையில் ஆற்றி வரும் மேதகு மேதை இனிமேலாவது தம் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவர் போல் வேறு சில எழுத்தாளர்களும் கட்சியினரும் தமிழ்நாடு என்று குறிப்பதை மாற்றித் தமிழகம் எனக் குறிக்க வேண்டும் எனப் பேசி வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அல்லது தமிழ்நாட்டு மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள்.

நம் முன்னைப் புலவர்கள் வழி நாமும்,

நம் நாடு தமிழ் நாடு நாமெல்லாம் தமிழ் மக்கள்

இந்நிலத்தில் வாழ்வதெனில் மூச்சாலே

அம்மூச்சும் தமிழே!

என முழங்குவோம்.

இலக்குவனார் திருவள்ளுவன்

நன்றி: தாய், 06.06.2023

++++

Followers

Blog Archive