Tuesday, August 29, 2023

இந்திச் செயற்பாடு: அமித்து சா விற்குப் பாராட்டு!- இலக்குவனார் திருவள்ளுவன்

 




இந்திச் செயற்பாடு: அமித்து சா விற்குப் பாராட்டு!

பல தேசிய மொழி இன மக்கள் வாழும் இந்தியாவில் பெரும்பான்மை இன மக்களின் தாய்மொழிகளுக்கு எதிராக நாளும் செயற்படுவதே இந்திய அரசின் செயற்பாடு. அண்மையில் சட்டப் பெயர்களை இந்தியில் மாற்றிய கொடுமைகூட அரங்கேறியது. இந்தியைப் பயன்படுத்துவோருக்கு இந்தியில் சட்டப் பெயர்கள் குறிக்கப்பெற்றுப் பயன்படுத்தி வந்துள்ளன. அவ்வாறிருக்க அனைத்து மொழியினருமே சட்டங்களின் பெயர்களை இந்தியில் பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் அண்மையில் மூன்று சட்டங்களை இந்திமயச் சமற்கிருத்தில் குறிப்பிட்டுப் பெயர் மாற்றம் செய்து சட்டமியற்றியது.

“தற்போது இந்தி மொழி ஏற்பு என்பது குறைவாக உள்ளது. இருப்பினும் எந்த எதிர்ப்பும் இன்றி இறுதியில் இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும்” என அலுவல் மொழிக்கான 38 ஆவது நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்துசா பேசியுள்ளார்.

“அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்.”  என இந்தியையே தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அமித்துசா பேசியுள்ளார்.

 கடந்த செட்டம்பர் 16ஆம் நாள் ‘இந்தி நாள்’ கடைப்பிடிக்கப்பட்டபோது அமித்து சா, இந்திதான் அலுவல் மொழி என்றார். இப்போது அவர் தலைமையிலான குழு இந்தியைப் பொதுமொழி என்றும் கல்வி நிலையங்களில் பயிற்று மொழி என்றும் கட்டாயமாகத் திணிப்பதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளது.

இவ்வாறிருக்க இந்தியைத் திணிப்பதில் முதன்மைப் பங்கு வகிக்கும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்து சா வைப் பாராட்டுவதேன் என எண்ணலாம்.

இந்தி என்பது இன்று நேற்று புகுத்தப்படுவது அல்ல! இந்திய விடுதலைக்கு முன்பும் புகுத்தப்பட்டது. அதன் பின்னும் எல்லா வகையிலும் அரசியல் யாப்பின்படி புகுத்தப்பட்டுக் கொண்டுள்ளது. இது குறித்துப் பன்முறை எழுதியுள்ளோம். அகரமுதல மின்னிதழில் வெளிவந்த பின்வரும் கட்டுரைகளில் வெவ்வேறு நிலைகளில் இந்தி புகுத்தப்படுவதும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் தலைவர்களும் வீர முழக்கமிட்டுக் குளிர் காய்வதுடன் நிறுத்திக் கொள்வதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்!(12.06.2016),  இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்?(04.12.2016), இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை! (02.04.2017),தி.மு.க.வின் இந்திப்பாசம் தவறு! தமிழுக்குத் தேவை முன்னுரிமையல்ல! முழு உரிமையே!(09.04.2017),  இந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது!(23.04.2017),இந்தித்திணிப்பு : தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்?(30.04.2017), அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி  இந்தி ஒழியாது!(07.05.2017),  ஆங்கில முத்திரையும் இந்தி முழக்கமும் ஏன்? (28.12.2022).

தலைவர்கள் தெரிந்தே செய்யும் தவறுகள் என்பதால் யாரும் திருத்திக் கொள்ளவில்லை. இபபொழுது அரசியல் யாப்பின்படி உள்துறை அமைச்சர் பேசுவதையோ ஒன்றிய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதையோ நாம் கண்டித்துக் கூக்குரலிடுவதில் பயனில்லை. உண்மையில் அரசியல் யாப்பு வரையறுத்ததன்படியும் அதனடிப்படையிலான சட்டங்களின்படியும் அவரும் ஒன்றிய அதிகாரிகளும் செயற்படுவதற்குப் பாராட்டத்தான் வேண்டும். கண்டிப்பதோ குறை சொல்வதோ தவறு.

அப்படி யென்றால் இந்தியை ஏற்க வேண்டும் என்று சொல்கிறாேமா? என்றால் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! ஆனால், தமிழ்நாட்டரசின் துறைகளின் முத்திரைகளில் இந்தியைப்பயன்படுத்தும் தமிழ்நாட்டரசிற்கும் அதை நடத்துவோருக்கும் இந்தியைத் திணிக்காதே என்று சொல்லத் தகுதியில்லை என்கிறோம். உள்ளத்திலிருந்து இந்தி எதிர்ப்பும் தமிழ்க்காப்புணர்வும் வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இந்தி திணிக்கப்படாத அளவிற்கு அரசியல் யாப்பில் தொடர்புடைய பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். “இந்திய அரசியல் யாப்பில் உள்ள பதினேழாம் இயல் அடியோடு நீக்கப்பட்டுப் புதிய விதிகளுடன் அவ்வியல் சேர்க்கப்படவேண்டும். தமிழை இந்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க  வேண்டும். இந்திய அரசியல் யாப்பில் இந்தி என முதன்மையாகக் குறிக்கப்படும் எல்லா நேர்வுகளிலும் தமிழ் என்பதும்  இடம் பெறும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.” என்பதைச் செய்து காட்டாமல் இந்தியை எதிர்ப்பதில் பயனே இல்லை.

தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு ஆங்கிலக் காதலியுடன் உலகறிய உலா வருவதிலும் இந்திக்கள்ளக்காதலியுடன் கமுக்கமாக உறவாடுவதிலும் காணும் இன்பம் தலைவியாம் தமிழைக் காக்கும் பொறுப்பில் இல்லை. எனவே தாய்த்தமிழ் மீது பற்றுடைய மக்கள், கிளர்ந்து எழுந்து தமிழைக் காக்க முன் வரவேண்டும். ஆனால் அவர்களை வழி நடத்தும் தமிழறிஞர்களோ தலைவர்களோ யாருமில்லை என்பதுதான் வருந்தத்தக்க நிலை. இந்நிலை என்று மாறுமோ?

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய்.   (திருவள்ளுவர், திருக்குறள் 848)

தமிழறிஞர்கள் தமிழுக்குச் செய்ய வேண்டியன யாவை எனச் சொன்னாலும் கேட்பதில்லை. தாமாகவும் அறிந்து செய்வதில்லை. இவ்வாறிருப்பின் தமிழுக்கு அது துன்பம்தானே.

தி.மு.க.வைப் பொறுத்தவரை ஆங்கிலம் அகன்றால் அந்த இடத்தில் இந்தி வந்து அமர்ந்து விடும் என்பது நம்பிக்கை. அதனால்தான் முன்பு ஆங்கிலப் பாதுகாப்பு மாநாடே நடத்தியுள்ளனர். ஒன்றிய அரசின் திட்டமும் ஆங்கிலத்தை அகற்றி விட்டால் அங்கே இந்தியைப் புகுத்தி இந்தியா முழுமையும் இந்தியை வீற்றிருக்கச் செய்யலாம் என்பதுதான். ஆனால் நாம் தெளிவாக இருந்தால், தமிழ் நாட்டிற்குள் அனைத்து நிலைகளிலும் தமிழ் மட்டுமே இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வெளியே தொடர்பு கொள்ள ஆங்கிலம் மட்டும் தேவை என்பதை உணர்ந்து ஆள்வோர் செயற்பட்டால், ஆங்கிலத்தினிடத்தில் இந்தி வந்து விடும் என்ற அச்சம் தேவையில்லை. தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் தமிழே இருந்தால் அங்கே இந்தி வரவே வாய்ப்பில்லை. தமிழ் இல்லா இடங்களில் ஆங்கிலம் அகன்றால் இந்தி இடம் பெயர்ந்து அமரும் என்பதில் ஐயமில்லை. இதற்குப் பேரறிஞர் அண்ணா சொன்ன இரு மொழிக் கொள்கை என்றால் தமிழ்நாட்டிற்குள் தமிழும் ஆங்கிலமும் என்ற இருமொழி என்ற அறியாமை ஆள்வோரிடமிருந்து நீங்க வேண்டும். பேரறிஞர் அண்ணா கனவு கண்டாற்போல், அக நாட்டிற்குள் அன்னைத் தமிழே திகழ வேண்டும். புற நாட்டுடன் ஆங்கிலம் வேண்டும் என்று செயற்படுத்த வேண்டும்.  எனவே, நாம் இந்தியைத் திணிக்காதே என்று சொல்லிக் கொண்டிராமல் அதற்கான வாயிலை அடைக்க வேண்டும். அரசியல் யாப்பு திருத்தம்தான் இந்தி நுழைவிற்கான கதவடைப்பு. அக்கதவை அடைக்க முயலாமல் திறந்த கதவிற்குள் நுழைவோரை ஏசிப் பயனில்லை.

“மொழிவழி மாநிலங்கள் முழுத் தன்னாட்சி பெற்று முழு உரிமையுடன் சாதி மத வருக்க வேறுபாடு அற்ற மக்களாட்சிச் சமநிலைக் குடியரசுகளாய் இணைந்து வாழும் வன்மைமிக்க பாரதக் கூட்டரசை உருவாக்கவும், அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகட்கே முதன்மை என்ற அடிப்படையில் மொழிகளின் சமஉரிமையை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை  தமிழில்தான் எல்லாம் என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்குபெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும், காலத்துக்கேற்ப, மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும் ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே வாழ்நாட் பணியாகும். (குறள்நெறி (மலர்2: இதழ் 12): காரி 16: 1.12.65)” எனத் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் கூறியதை அனைவரும் உறுதி மொழியாக ஏற்றுச் செயற்பட வேண்டும். அயற்மொழித் திணிப்புகளை அகற்றி அன்னைத் தமிழைக் காக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

Tuesday, August 15, 2023

கருத்தரங்கத்தினருக்குக் காலமறிதலும் திட்டமிடலும் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




கருத்தரங்கத்தினருக்குக் காலமறிதலும் திட்டமிடலும் தேவை!

யாராக இருந்தாலும் திட்டமிட்டுச் செயலாற்றத் தெரியவேண்டும்; காலமறிந்து பணியாற்றத் தெரிய வேண்டும். இருப்பினும் மாநாடு அல்லது கருத்தரங்கம் நடத்துநருக்கு மிகவும் இன்றியமையாதனவாக இவை உள்ளன. அவற்றில் பங்கேற்குநருக்கு அவையறிதலும் தேவை.

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர்.

என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 640)

ஆளுமையில் சிறந்து விளங்க விழைவோர் திருவள்ளுவா் கூறும் வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை, காலமறிதல் முதலியவற்றை நன்கறிந்து செயலாற்றுநராக இருக்க வேண்டும். ஆனால், நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என ஆர்வத்துடன் இருப்பவர்கள் இவற்றில் கோட்டை விட்டு விடுகின்றனர்.

திட்டமிட்டுத்தான் நிகழ்ச்சி நிரலை வகுக்கின்றனர். அதற்கேற்ப அழைப்பிதழ் அடிக்கின்றனர். ஆனால், “முதல் கோணல் முற்றும் கோணல்” என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தொடக்க நிழ்ச்சியைக் காலந் தாழ்த்தி தொடங்குவர் அல்லது காலம் நீட்டித்து முடிப்பர். பேச்சாளர்களும் ‘அவையறிதல்’ என்றால் என்ன என்பதை உணராதவர்களாக இருப்பார்கள். பேச்சாளர்களும் தாங்கள் எண்ணியவற்றை எல்லாம் கொட்டித் தீர்த்தே ஆக வேண்டும் என்ற உறுதியில், உலகமே அழிந்து விடும், அதற்கு முன்னதாகப் பேச வேண்டும் என்ற எண்ணத்தில், நிகழ்ச்சிக்குத் தொடர்பில்லாதவற்றை யெல்லாம் பேசித் தீர்ப்பவர்களாக இருப்பார்கள்.

இத்தகைய கால நீட்டிப்பால், அடுத்துப் பேச உள்ளவர்களின், அடுத்த அமர்வில் பங்கேற்பவர்களின் நேரம் குறைந்து விடுகிறது. அடுத்தவன் நேரத்தை எடுத்துக் கொள்பவன் திருடன் என்கிறார் காந்தியடிகள். எனவே, உரிய நேரத்திற்கும் மேலாகப் பேசுபவர்கள் அடுத்தவர்கள் நேரங்களைக் கொள்ளையடிக்கிறார்கள் என்பதுதானே உண்மை. இதனைக் கருத்தரங்கத்தைத் திட்டமிடாமல் நடத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக எல்லாக் கருத்தரங்கங்களிலும் சொல்லப்படும் பொன்மொழி என்ன தெரியுமா? “உங்களின் பேச்சு நேரத்தைக் குறைத்து விட்டோம் என்று எண்ணாதீர்கள். கருத்தரங்க மலரில் உங்கள் கட்டுரை அப்படியே வரும். ஒரு வரியும் குறைக்கப்படாது. எந்தச் சொல்லும் விடுபடாது. நீங்கள் அதில் பார்த்துக் கொள்ளலாம்.” என்பார்கள். அவ்வாறு கருத்தரங்க மலரில் படித்துக் கொள்ளலாம் என்றால் எதற்குப் பணத்தையும் நேரத்தையும் செலவழித்துக் கருத்தரங்க நிகழ்ச்சிக்கு  வர வைக்க வேண்டும்? தேவையில்லையே! எனவே, இத்தகைய பொன்மொழிகளை உதிர்க்காமல் பங்கேற்பாளர் அனைவருக்கும் உரிய சம வாய்ப்பு நல்குவதுதானே கருத்தரங்க நோக்கமாக இருக்க வேண்டும்? இதனை எப்பொழுது கருத்தரங்கத்தினர் உணருவார்கள்?

“தொடக்க விழாவிற்கு அழைக்கப்பெற்ற அமைச்சர் பெருமக்கள் அல்லது சிறப்பு அழைப்பாளர்கள் காலந்தாழ்த்தி வந்தமையால் நிகழ்ச்சியை உரிய நேரத்தில் தொடங்க இயலவில்லை. என் செய்வது” என்பார்கள். தொடர் நிகழ்ச்சிகள் உள்ளமையைக் குறிப்பிட்டு “உரிய நேரத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். நீங்கள் உரிய நேரத்தில் வர வேண்டும்” எனத் தெரிவித்தால் கட்டாயம் உரிய காலத்திற்கு வந்து விடுவார்கள். அரசியல் கூட்டங்கள், வேறிடங்களிலும் பங்கேற்பதற்குரிய கூட்டங்கள் உள்ள மாலை நேரங்கள், எதிர்பாராத அலுவல் பணி  போன்றவற்றால் காலத்தாழ்ச்சி ஏற்படலாமே தவிர இவ்வாறு காலந்தாழ்த்தி வரவேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கமல்ல. நான் அமைச்சர் பெருமக்களைக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடததியுள்ளேன். எந்த நிகழ்ச்சியும் காலந்தாழ்த்தி நடந்ததில்லை. கூட்டத் தொடக்கத்திற்கு முன் நினைவூட்டினால், சில நேரங்களில் “நீங்கள் நிகழ்ச்சியைத் தொடங்கிவிடுங்கள். நான் வந்து இணைந்து கொள்கிறேன்” என்பார்கள். நாமும் உரிய நேரத்தில் தொடங்கி விடலாம். அவ்வாறு இல்லாமல் வெறுமனே காத்திருந்து அவர்கள் மேல் பழியைப்போடுவதும் சரியல்ல.

பங்கேற்கும் பிற உரையாளர்களிடமும் “ஒவ்வொருவருக்கும் இவ்வளவு நேரம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.  நீங்கள் அதற்குள் சிறப்பாகப் பேச வேண்டுகிறோம்” என்றால் நீண்ட நேரம் பேசக்கூடியவர்கள்கூடச் சுருக்கமாக உரையை முடித்து விடுவார்கள். ஆனால், அழைப்பிதழைக் கொடுத்து விட்டுப் பேச  வாருங்கள் என்றால் அவர்கள் அப்படித்தான் விரிவாகப் பேசுவார்கள். ஆனால், அவர்களே பேச்சு நேரத்தை வரையறுத்துத் தெரிவித்தால் அதற்குள் முடித்து விடுவார்கள். எனவே, நிகழ்ச்சி நடத்துநர் நிகழ்சசிக்கு முன்னரே திட்டமிடலைத் தொடங்கி உரியவாறு செயற்படவேண்டும்.

அண்மையில் நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவில் உரையாளர் ஒருவர், தமிழ் மருந்து ஒன்றின் சிறப்பைக் குறிப்பிட்டு அதன் செய்முறை பற்றியெல்லாம் குறிப்பிடத் தொடங்கினார். அவையோர் “மருத்துவ மாநாடுபோல் பேசி நேரத்தை வீணடிக்கிறார்களே” என்று முணுமுணுத்தனர். நான் எழுந்து, “ஐயா உங்களின் உரை எனக்கு மிகவும்  பிடிக்கும். அதுவும் திராவிட உணர்வை வெளிப்படுத்தும் கருத்துகள் சிறப்பானவை. ஆனால், இது தமிழ் ஆராய்ச்சி மாநாடு. மருத்துவ மாநாடு அல்ல. மருத்துவ அமர்வில் வேண்டுமென்றால் இவ்வாறு பேசலாம். அடுத்த அமர்வுகள் தொடர்ந்து உள்ளமையால், அதற்கேற்பப் பேசுவது நன்று” என்றேன். அஃதாவது பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொன்னேன். அவர் திகைத்து அமைதியாக நின்றார். அவையில் ஒருவர், “தலைவர் அதைச்சொல்வார். நீங்கள் ஏன் நிறுத்தச் சொல்கிறீர்கள். அவர் பேசட்டும்” என்றார். தலைவர் வாய்மூடி இருக்கும் போது, அவையில் யாரும் வாய் திறக்கலாம் என்றேன். அமைப்பாளர் ஒருவர், “அவர் விரும்பும் வரை பேசட்டும். அவருக்கு எப்படி அடுத்த நிகழ்வுகள் பற்றியெல்லாம் தெரியும். நீங்கள் யார் அவர் பேச்சை நிறுத்தச் சொல்வது” என்றார். “அழைப்பிதழில் தொடர் நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளமையால்  அதை உணர்ந்து அவையறிந்து பேச வேண்டாமா? பேச்சாளர்கள் மிகுதியாகப் பேசுவதால் பங்கேற்பாளர்கள் நேரம் குறைவதால் நான் குரல் கொடுத்ததில் தவறில்லை” என்றேன். பேச்சாளரும் பேச்சை உடன் முடித்துக் கொண்டார். அதன் பின் அந்த அமைப்புக் குழு நண்பர் , “நான்தானே இதற்குப் பொறுப்பு? நீங்கள் எப்படி இது குறித்துக் கூற முடியும்?” என்றார். “நீங்கள்தான் பொறுப்பு என்பது எனக்குத் தெரியாது. யார் பொறுப்பாக இருந்தாலும் பொறுப்பானவர் பொறுப்பாக நடக்காத பொழுது அந்தப் பொறுப்பை வேறு யாரும் எடுத்துக்கொள்ளலாம். எனவே, நான் கேட்டதில் தவறில்லை” என்றேன். உடன் அந்த நண்பர் அமைதியாக இருந்து விட்டார்.

கருத்தரங்க அமர்வுகளிலும் நேர வீணடிப்பு நடைபெறுகிறது. பார்வையாளர்கள் வினா நேரத்தில் பேசத் தொடங்கி விடுவார்கள். அவைத்தலைவர்கள் அதனைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். நான் அமர்வின் பொழுது பார்வையாளர் யாரும் வினா தொடுப்பதாக எழுந்து சொற்பொழிவாற்றத் தொடங்கினால் உடனே நிறுத்திவிடுவேன். இதனால் அவர்கள் சினந்தாலும் பொருட்படுத்துவதில்லை. ஆனால், பலர் அமைதியாக இருந்து பேச விட்டுவிடுகிறார்கள். இதனாலும் கால நீட்டிப்பு ஏற்படுகிறது.

எந்தப்பேச்சாக இருந்தாலும் அது முடிந்த பின் 5 நிமையமேனும் அது குறித்த உரையாடல் நிகழ வேண்டும் என்பார் நாவரசர் ஒளவை நடராசன். ஆனால், பேச்சிற்கே 3 அல்லது 5 நிமையம் ஒதுக்கும் பொழுது உரையாடலுக்கு எங்கே வாய்ப்பு கிடைக்கும்? இதுவும் தவறே.

கருத்தரங்கம் நடத்துவோர் சுருக்கக்கட்டுரை அனுப்பும் அனைவரிடமும் விரிவுக்கட்டுரை கேட்டுப்,  பின் வடிகட்டுவதாலும் குழப்பங்கள் எதிர்ப்புகள் வருகின்றன. சிலர் மேலும் மேலும் கட்டுரைகளை அனுப்புமாறு அறிக்கை விட்டு, இறுதியில் முதலில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் குறைவான எண்ணிக்கை யினரையே பங்கேற்க அழைக்கின்றனர். இவ்வாறெல்லாம் இல்லாமல், எத்தனை அமர்வுகள் நடத்த வாய்ப்புகள் உள்ளன? ஒவ்வோர் அமர்விலும் எத்தனைபேரைப் பேச அழைக்க இயலும்? என்றெல்லாம் திட்டமிட்டு அதற்கேற்ப எண்ணிக்கையை வரையறை செய்து கட்டுரையாளர்களை அழைக்க வேண்டும். அவ்வாறெல்லாம் இல்லாமல் பேச வைக்க இடமில்லை, நேரமில்லை என்று சொல்லிக் குளறுபடி செய்வது ஏற்புடைத்து அல்லவே!

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.   (திருவள்ளுவர், திருக்குறள் 673)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல-இதழுரை



Monday, August 7, 2023

புதிய கல்வித்திட்டத்தில் மொழிக் கொள்கை : அரசு தடம் புரள்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 








புதிய கல்வித்திட்டத்தில் மொழிக் கொள்கை :

அரசு தடம் புரள்கிறதா? 

பொதுவாகத் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் எதிர் நிலையில் செயற்பட்டாலும் இந்தி எதிர்ப்பு, மும்மொழித்திட்ட எதிர்ப்பு, தமிழ் முழக்கம், தமிழ் நலத்திட்டங்கள், ஆட்சித்தமிழை வலியுறுத்தல் போன்றவற்றில் செய்வனவற்றிலும் செய்யத் தவறுவனவற்றிலும் ஒற்றுமை உண்டு. ஆட்சி மாறினாலும் அரசு மாறாது என்பதற்கு இவர்களின் இவை தொடர்பான கொள்கைகளே சான்றாகும். இரு கட்சிகளின் அரசுகளுமே  அனைத்து வகுப்புகளிலும் தமிழ் கற்பிக்கப்பட வெவ்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளன, இப்போதும் ஆளும் அரசு எடுத்து வருகிறது.

தமிழ் மக்கள் உணர்ச்சிகரமாகப் போராடினாலும் வெற்று அறிவிப்பில் மயங்கும் அளவிற்குத்தான் அறிவுடையவர்கள். அவர்களை வழி நடத்தும் கட்சிகள் பொங்கி எழுந்து அடங்கி விடுவதுதான் காரணமாக இருக்கும்.

கல்லூரிகளில் முன்பு முதல் பிரிவு ஆங்கிலம் மட்டும், இரண்டாம் பிரவு தமிழும் பிற மொழிகளும் என இருந்தன. முதல் பிரிவிற்குத் தமிழை மாற்ற வேண்டும் எனப் போராடினார்கள். அரசும் செவிமடுப்பதுபோல் முதல் பிரிவிற்குத் தமிழை மாற்றியது. முன்பு முதல் பிரிவு ஆங்கிலம் மட்டும் இருந்தது என்பதுபோல் தமிழ் மட்டும் என்னும் நிலைக்குத்தான் போராடினார்கள். ஆனால், முதல் பிரிவு தமிழும் பிற மொழிகளும் என மாற்றியது. அஃதாவது பெயரை மட்டும் மாற்றி விட்டு முந்தைய நிலையையே தொடர விட்டனர். மக்கள் உண்மையை உணர்ந்தும் உணராமல் அமைதியாயினர்.

மற்றொரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது. சனதாக்கட்சியைந் சேர்ந்த மது தண்டவதே(Madhu Dandawate) தொடரித்துறையில் பல முன்னேற்றங்கள் நிகழக் காரணமாக இருந்தவர். அவர் தொடக்கி வைத்ததில் இருந்துதான் பிற ஏந்து/வசதி ஏற்பாடுகள் பெருகின. அவர் தொடரியில் 1978இல் மூன்றாம் வகுப்பை ஒழித்தார் எனப் பெருமை பேசுவர். உண்மையில் அவர் தொடரியில் இருந்த இரண்டாம் வகுப்பை எடுத்தார். எனவே, நடைமுறையில் இருந்த மூன்றாம் வகுப்பு, (இருந்த இரண்டாம் வகுப்பு ஒழிக்கப்பட்டதால் இயல்பாக) இரண்டாம் வகுப்பு எனப் பெயர் பெற்றது. மூன்றாம் வகுப்பு என்னும் பெயர் இல்லாமல் போனது. ஆனால், நடைமுறையில் அஃது இண்டாம் வகுப்பு என்ற பெயரில் பயன்பாட்டில் இருந்தது. இத்தகைய பெயர் மாற்றம்போல்தான் மொழிப்பிரிவுகளின் பெயர் மாற்றமும் இருப்பதாக மக்கள் பேசினர்.   

15.08.2003 இல் அப்போதைய முதல்வர் செயலலிதா, 2003-2004 ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் அறிவியல் தமிழ் பாடமாக இருக்கும் எனக் கூறி நடைமுறைப்படுத்தினார். ஆனால், இதற்கு எந்தத் தேர்வும் கிடையாது. எனவே, அரசின் விலையில்லாப் புத்தகங்களைப் பெற்றதுடன்  ஆசிரியர்கள் அதைப் பாடமாக நடத்தாததால் மறந்து விட்டனர். பெயரளவு அறிவிப்பாகப் பயனின்றிப் போனது.

2006 ஆம் ஆண்டு தமிழ் கற்பிப்பதற்கான சட்டம் (Tamil Nadu Tamil Learning Act, 2006) இயற்றப்பட்டது. சட்டம் வெளிவந்தபோது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதிதான் இதன் பெருமைக்கு உரியவராக இன்று வரை பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்தச்சட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் 03.02.2006 அன்று ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றிருந்தது. அப்படியானால் அந்த அரசின் நடவடிக்கையால்தான் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. எனினும் கலைஞர் முதல்வராக இருந்தபோது 12.06.2006 இல் வெளியானது.

இதன்படி ஆண்டுதோறும் ஒவ்வோர் வகுப்பாகத் தமிழ் அறிமுகப்படுத்தும் நிலையில்தான் சட்டம் இருந்தது. என்றாலும் நடைமுறையில் பயனில்லை. இருப்பினும் அரசாணை பல்வகை எண் 145, பள்ளிக் கல்வித் துறை நாள்  18.09.2014 இல் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன் மூலமே இவ்வாணை நடைமுறைப்படுத்தப்பட்டது.

சரிதானே! அதற்கு என்ன இப்பொழுது என்கிறீர்களா? அரசு புதிய கல்விக்கொள்கைக்கான வரைவை அறிவித்துள்ளது. அதில் முதல் பாடம் என்பது தமிழ் முதலான பிற மொழிகள், இரண்டாம் பாடம் ஆங்கிலம் மட்டும் என உள்ளது.

பள்ளிக்கல்வியில் தமிழைக் கட்டாயப்பாடமாக ஆக்கிய அரசு, கல்லூரியிலும் அதைத்தானே தொடர வேண்டும். மாறாகத் தமிழை ஏன் விருப்பப் பாடப் பிரிவில் சேர்த்தது. ஏன் இந்தத் தடுமாற்றம்? அல்லது தடம் புரண்டிருப்பதுதான் அரசின் மொழிக் கொள்கையா?

பள்ளிகளில் உள்ளமைபோல் கல்லூரிகளிலும் தமிழ் பாடமொழியாகவும் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் எனப் போராடினார் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார். அதில் ஓரளவு வெற்றி கண்ட பொழுது தி.மு.க. ஆட்சியில் பெரும்பாலும் பள்ளிகளில் ஆங்கிலம் கட்டாயமாகக் குடிபுகுந்தது.

இதற்குக் காரணம் பெருந்தலைவர் காமராசர் – ஆம் பெருந்தலைவரேதான். அவர் தூண்டுதலால் ஆங்கிலவழி பயில்வோர் போராடி அதன் காரணமாகக் கலைஞருக்கு மாணவர் உலகமே எதிர்ப்பதுபோன்ற அச்சத்தை உண்டாக்கினர். அவரும் வாணாள் முழுவதும்  தமிழ்க்கல்விக்கும் தமிழ் வழிக் கல்விக்கும் எதிராக வாதிட்டவரான ஏ.இலக்குமணசாமி(முதலியார்) தலைமையில் ஓராள் குழு அமைத்தது. அவரே உறுப்பினர்! அவரே தலைவர்! அவரது அறிக்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட இருந்த தமிழ் வழிக்கல்வி நின்று போனது. அன்று நடைமுறைக்கு வந்திருந்தால் தமிழ்நாட்டில் எல்லா நிலைகளிலும் தமிழ் என்றோ மாறியிருக்கும்.

கட்டாயத் தமிழ்க்கல்விக்காகத் தமிழன்பர்கள் போராடியதால் 2006 சட்டம் மூலம்  பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகக் கல்லூரிகளிலும் கட்டாயத் தமிழைக் கொண்டு வராமல், இப்பொழுது கல்லூரிகளில் தமிழ் விருப்பப்பாடம் என்றால் அதனை நீக்க நாம் எத்தனை ஆண்டுகள் போராட வேண்டுமோ? தெரியவில்லையே!

இதற்குக் காரணம் அரசு இதற்கான மாநில கல்விக்கொள்கை குழுவில் தமிழறிஞர் யாரையும் சேர்க்காமைதான். உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக, சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். சவகர்நேசன் (இவர் பின்னர் விலகி விட்டார்), தேசியக் கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுசம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இசுமாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், பன்னாட்டுச் சிறார் நிதிய(யுனிசெப்) முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா இரத்தினம், எழுத்தாளர் எசு. இராமகிருட்டிணன், சதுரங்க வாகையர் விசுவநாதன் ஆனந்து, இசைக் கலைஞர் டி.எம். கிருட்டிணா, கல்வியாளர் துளசிதாசு, கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த செயசிரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரும் தமிழறிஞர் அல்லர். கணிணிக்கும் இசைக்கும் விளையாட்டுக்கும் முதன்மை அளித்ததுபோல் கல்விக்கு அடிப்படையான தாய்மொழிக்கும் முதன்மை அளிததுத் தமிழ்ப்பற்றுள்ள தமிழ்ப்பேராசிரியர்கள் இருவரைக் குழுவில் சேர்த்திருக்க வேண்டுமல்லவா?

மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில்  தமிழறிஞர்களுக்கு இடந் தருக! (அகரமுதல நாள் 24.04.2022 ; அங்குசம் நாள் 06.05.2022) என நாம் வேண்டியிருந்தோம்.

மேத் திங்களில் உறுப்பினர் எல். சவகர்நேசன் விலகியதால் புதிய உறுப்பினர்கள் அமர்த்தத்தில் நம் வேண்டுகோளை அரசு ஏற்றது. அதன்படி, 20.05.2023 இல் காயிதே மில்லத்து அரசு பெண்கள் கல்லூரி, முதல்வர் (ஓய்வு) டி. ஃப்ரீடா ஞானராணி, சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்- தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் பேரா.பழனி  ஆகியோர் புதிய  உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். குழுவின் காலம் முடிவடையும் பொழுது இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் செட்டம்பர் 2023 இறுதிவரை குழுவின் பணிக்காலத்தை அரசு நீடித்துள்ளது. ஆய்வுஅறிக்கை முடிவடைந்த பின்னர் அமர்த்தப்பட்ட பேராசிரியர் என்ன செய்தார் என்று தெரியவில்லை.

தேசியக்கல்விக்கொள்கையை ஏற்காமல் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ், கட்டாயப்பாடமாக இருக்கும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, கல்லூரிகளிலும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளியைத் தொடர்ந்து கல்லூரிகளிலும் தமிழ், கட்டாயக் கல்வியாக இருக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை எனத் தெரிவித்து அதற்கேற்ப எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்துக் குழுவின் அறிக்கை வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்

என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்

துன்பங்கள் நீங்கும்! – பாவேந்தர் பாரதிதாசன்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை





Saturday, August 5, 2023

முதல்வர் தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  26 தொடர்ச்சி)

முதல்வர் தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  27

மாண்புமிகு முதல்வர் அவர்களே! நீங்கள், தமிழ், தமிழர் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொழுது “இது தமிழை, தமிழினத்தைக் காக்கும் ஆட்சி” என்று பேசுகிறீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது.

சான்றாக, வடஅமெரிக்கத் தமிழர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றியபொழுது (சூலை 2022)

“தமிழ் மொழிக்கு முதன்மைத்துவம் தருவதோடு, தமிழினத்தைக் காக்கும் ஆட்சியாகவும் நடந்து வருகிறது. தமிழகத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் நலனிலும் அக்கறை கொண்ட ஆட்சியாகத், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்திருக்கிறது. உலகளாவிய தமிழாட்சியை இங்கிருந்து நடத்தி வருகிறோம்.” எனப் பேசியுள்ளீர்கள்.

மேலும், ” நம்மை நாடுகள் பிரிக்கலாம்! நிலங்கள் பிரிக்கலாம்! ஆனாலும், மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு. அந்த மொழியை வளர்ப்போம்! தமிழினத்தைக் காப்போம்! ” என்றும் பேசியுள்ளீர்கள்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் பரப்புரைக் கழகத்தைத் தொடக்கி வைத்த பொழுது (செட்.2022) “”தமிழ் வெறும் மொழியல்ல.. நம் உயிர்” என்று பேசியுள்ளீர்கள். இவ்வாறு பலவற்றைக் கூறலாம்.

ஆனால், தமிழ் இருக்கும் இடத்திலும் இருக்க வேண்டிய இடத்திலும் ஆங்கிலத்தைத் திணித்தால் தமிழ் எங்ஙனம் வாழும்? அதனை எவ்வாறு வளர்க்க இயலும்? எவ்வாறு காக்க முடியும்? நீங்கள் அறிந்த ஒன்றுதானே இது. அவ்வாறிருக்க ஆங்கிலக் காதலராக ஆட்சி செய்தால் தமிழ் விரட்டப்படத்தானே செய்யும்?

பலமுறை ஆட்சியின் உச்ச நிலையிலுள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம். மாறுதல் ஆணைகளைக்கூடத் தமிழில் வழங்க இயலவில்லை என்றால் அப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டு ஏன் ஆட்சி நடத்த வேண்டும்? அப்படிப்பட்ட ஆட்சி தேவைதானா என மக்கள் எண்ண மாட்டார்களா?

பலமுறை மாறுதல் ஆணைகளைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். இப்பொழுது(05.08.2023) உள்துறையில் இ.கா.ப. அலுவலர்கள் குறித்த மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் பெயர்கள், இப்போதைய பணியிடங்கள், மாற்றப்படும் இடம் ஆகிய விவரங்கள்தான் இடம் பெறுகின்றன. இவற்றைக்கூடத் தமிழில் குறிக்கத் தெரியாதவர்களைக் கொண்டு நீங்கள் எங்ஙனம் தமிழைக் காக்கப் போகிறீர்கள்? பொதுவாகப் பொதுத்துறை, உள்துறை முதன்மைப் பணியிடங்களுக்கான ஆணைகளை வழங்குகின்றன. இப்போதைய பணியிடங்களில் அதிகாரிகளை இல்லாமல் ஆக்குவதுபோல், தமிழையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறார்கள்.

இப்போதைய முதன்மைச் செயலர் அமுதா இ.ஆ.ப., தமிழிசை ஆர்வலர். பல்வேறு சிறப்பான பணிகளை ஆற்றிப் பாராட்டு பெற்று வருபவர். அவரால் தமிழில் ஆணை வழங்கச் செய்ய இயலாதா? ஆனால் ஆணையில் தமிழ் இல்லையே! ஏன்? இது தமிழருக்கான ஆட்சியாக, தமிழர் நலனுக்கான ஆட்சியாக உள்ளத்தில் பதியவில்லை. அதுதான்.

இவற்றுக்கெல்லாம் முதல்வரைக் குறைகூற வேண்டுமா என்றால் தமிழ்நாட்டின் ஆட்சித்தலைவர் அவர்தானே! அவரைத்தானே சுட்டிக்காட்ட இயலும். நல்லன நடக்கும் பொழுது என்னுடைய ஆட்சி எனப் பெருமைப்படும் பொழுது அல்லன நடக்கும் பொழுதும் பொறுப்பேற்க வேண்டுமல்லவா? நிறைகளாயினும் குறைகளாயினும் அவற்றிற்குப் பொறுப்பு முதல்வர்தானே!

ஓரிடத்தில் தீநேர்ச்சி(விபத்து) நிகழ்கிறது எனில் அவ்விடத்தின் உரிமையாளர் வேறு ஏதோ ஒரு நாட்டில் இருந்தாலும் இதனை அறியாதவராக இருந்தாலும் அவர் மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடுக்கிறார்கள் அல்லவா? அப்படியானால் முதல்வர் அன்றாடம் வந்து செல்லும் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் தமிழ் எனதிர் செயல்களுக்கும் அவர்தானே பொறுப்பு?

ஒரு முறையாவது – ஒரே ஒரு முறையாவது – முதல்வர் தாலின் எதற்கு ஆங்கிலம் எனக் கேள்வி கேட்டுத் தமிழில் ஆணை பிறப்பிக்கச் சொன்னால் – கடுமையாகக்கூட அல்ல மென்மையாகச் சொன்னால் – தானாகவே அனைத்தும் தமிழாகிவிடும். வாதத்திற்காக அப்படி எதுவும் நடக்காது என்றால் முதல்வர் பொறுப்பில் இருப்பது பயனற்றது என்றாகி விடும்.

கண்ணசைவிலேயே தமிழைக்காக்கக்கூடிய இடங்களில்கூடப் பாராமுகமாக இருந்து கொண்டு தமிழை வாழ வைப்போம் எனப் பேசினால் வெற்றுப் பேச்சாக மக்கள் கருத மாட்டார்களா?

இப்பொழுதுகூட அமித்துசாவின் இந்திப்பேச்சிற்குக் கிளர்ந்து எழுந்துள்ளீர்கள்.( அமித்துசாவின் பேச்சு சரியே என அடுத்துக்கட்டுரை எழுத உள்ளேன்.) உள்ளத்தில் இருந்து வந்த கிளர்ச்சிதான், வேறு அரசியல் நோக்கு இல்லை என்றால் முதலில் தமிழ்நாட்டில் முழுமையாகத் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும். அதைச் செய்வதற்கான வாய்ப்பும் அதிகாரமும் இருந்தும் வாளாவிருந்துவிட்டுத் தமிழைக் காப்போம்! தமிழினத்தைக் காப்போம்! என்று பேசிப்பயனில்லை.

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் தெரிவித்ததுபோன்று தலைமைச்செயலகத்தில் தமிழ்வழி படித்தவர்களையும் தமிழில் பட்டம் பெற்றவர்களையும் இனிமேல் அமர்த்தல் வேண்டும். இப்பொழுது பணியாற்றுபவர்களில் தமிழில் வரைவு எழுதத் தெரியாதவர்களை எல்லாம் பிற துறைகளுக்கு அனுப்பி விட வேண்டும். அங்குள்ள தமிழ் வரைவு எழுதுவதில் வல்லவர்களைத் தலைமைச்செயலகத்திற்கு மாற்றி அமர்த்திக் கொள்ள வேண்டும். சட்டத்துறையில் சட்டத்தேர்ச்சியாளர்களை அமர்த்துவதுபோல்  தமிழ் படித்தவர்களை அமர்த்தும் முடிவு சரியாக இருக்கும்.

மு.க.தாலின் அவர்களே! உங்களின் தன்மான, தமிழ்மான உரைகளைக் கேட்பவர்கள் எல்லாம் உங்கள் மீது பெரும நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆரியத்திலிருந்து விடுதலை பெற்றுத் தர வந்த திராவிடத் தலைவன் என உங்களை நம்புகிறார்கள். ஆனால், அந்தப் பிம்பத்தை உடைக்கும் வகையில் உங்களின் ஆங்கிலக் காதல் உங்களைத் தமிழுக்கு எதிரானவராகக் காட்டுவதை உணரவில்லையா?

ஆங்கிலக் காதலர்கள் தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை என மக்கள் கிளர்ந்து எழுந்து போராடும் முன்னர், அந்த நிலையைத் தடுப்பதற்காகவாவது தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.   (திருவள்ளுவர், திருக்குறள், 448)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive