(சட்டச் சொற்கள் விளக்கம் 941 – 945 -தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 946-950
946 Astute | நுண்புலம் வாய்ந்த கூர்மதியுடைய; சூழ்ச்சித்திறமுடைய; தந்திர நுட்பமுடைய வலக்காரம் நுண்சூழ்ச்சித்திறம் கரவடம் (தந்திரம்) சட்டத் துறையில், “நுண்புலம் வாய்ந்து” இருப்பது என்பது சட்டக் கோட்பாடுகள், ஒழுங்குமுறைகள், அவற்றின் நடைமுறை தாக்கங்கள் பற்றிய கூர்மையான நுண்ணறிவையும் புரிதலையும் கொண்டிருப்ப தாகும். இது முன்கூட்டியே சிக்கல் தீர்க்கும், பயனுள்ள முடிவெடுப்பதை அனுமதிக்கிறது. சூழ்ச்சித் திறம் என்பது நல்லவகையிலான கலந்தாய்வையே குறிப்பிடடது. ஆனால் ஆரியக் கதைகளின் அடிப்படையில் பின்னர் வஞ்சகத் தந்திரத்தைக் குறித்தது. ஆரியக் கதையின் அடிப்படையில் சாணக்கியன் செயல் அடிப்படையில் சாணக்கியம் எனப்படுகிறது. “அவன் சாணக்கியமெல்லாம் பலிக்கவில்லை” என்பது மக்கள் வழக்கில் உள்ள தொடர். எமனுக்கே எமனாகத் தந்திரம் புரிபவன் என்ற பொருளில் அவன் எமகாதகன் என்று சொல்வதுமுண்டு. சட்டத் துறையில் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர் சட்டக் கருத்துகள், சட்டங்கள், வழக்குச் சட்டம், சட்ட நடைமுறைகள் ஆகியவற்றில் வலுவான புரிதலை வெளிப்படுத்துவார். சாத்தியமான சட்ட இடர்கள் பொறுப்புகளை அடையாளம் காண்பதிலும், அவற்றைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே செயல்படுத்துவதிலும் அவர்கள் திறமையானவர்கள் ஆக இருப்பார்கள். சிக்கலான சட்டச் சிக்கல்களை அவர்கள் பகுப்பாய்வு செய்யலாம், மூல காரணங்களை அடையாளம் காணலாம் பயனுள்ள தீர்வுகளை உருவாக்கலாம். சட்ட மற்றும் சட்டப்பூர்வமற்ற பார்வையாளர்களுக்குச் சட்டத் தகவல்களை அவர்கள் தெளிவாகவும் சுருக்கமாகவும் தெரிவிக்க முடியும். சிக்கல்கள் எழும் வரை காத்திருக்காமல் சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிந்து அவை மோசமடைவதற்கு முன்பு அவற்றைத் தீர்க்க முன்னெச்சரிக்கை அணுகுமுறையை எடுப்பார்கள். |
947 Astuteness | மதிநுட்பம் சூழ்ச்சித்திறன் கூர்மதி நுழைபுலம் சூழ்ச்சித்திறம் காண்க : Astute |
948. Asylee | புக்கிலி சரணன் புகல்நன் அகதி ஏதிலி புகலிடம் கோருபவர் அகதி என்பது தமிழ்ச்சொல்லே. “கதி என்பதற்குப் புகலிடம் முதலான பல பொருள்கள் செ.சொ.பி. அகமுதலியில் தரப்பட்டுள்ளன. (பேரகரமுதலி: ‘க’ மடலம் பக்கம் 316) அப்படியானால் எதிர்மறை முன்னொட்டு ‘அ’ சேர்ந்து புகலிடம் அற்றவன் என்னும் பொருள் தரும் அகதி என்பதும் தமிழ்ச்சொல்தானே! ஆனால் அயற்சொல் மடலத்தில் சமசுகிருதத்தில் இருந்து வந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. மயக்கத்திற்குக் காரணம் வழக்கத்தில் (ங்)க என்னும் ஒலிப்பு உள்ளதே! ஒலிப்பு மயக்கத்தால் தமிழ்ச்சொல்லை ஆரியச் சொல்லாகக் காட்டலாமா? (தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 22.09.2010)” புக்கிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR-United Nations High Commissioner for Refugees) என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பு புக்கிலி என்பதற்கான வரையறை அளித்துள்ளது. அது வருமாறு: “புக்கிலி(அகதி) என்பவர் துன்புறுத்தல், போர் அல்லது வன்முறை காரணமாகத் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர். இனம், மதம், தேசியம், அரசியல் கருத்து அல்லது ஒரு குறிப்பிட்ட குமுகக் குழுவில் உறுப்பினர் ஆகிய காரணங்களுக்காக ஒரு புக்கிலி துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற நியாயமான அச்சத்தைக் கொண்டுள்ளவர். பெரும்பாலும், அவர்கள் வீடு திரும்ப முடியாது அல்லது அவ்வாறு செய்ய அஞ்சுவார்கள். போர், இன, பழங்குடி மத வன்முறை ஆகியவை புக்கிலிகள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறுவதற்கான முதன்மைக் காரணங்களாகும். “ ஐ என்றால் நெருங்குதல், ஒத்தல் என்றும் பொருள்கள். பலர் நெருங்கி இணைந்து ஒத்துச் செயற்படுவதால் ஐக்கியம் எனப்பட்டது. இது தமிழ்ச் சொல்லே! அயல் நாடுகளிலிருந்து அரசியலிலும் அரசிலும் பொறுப்பில் உள்ளவர்கள், படைப்பாளிகள் அந்நாட்டின் தாக்குதல் குறித்த அச்சம் கொண்டு பிற நாட்டு அரசில், நாட்டில் தஞ்சம் புகுந்து அடைக்கலமாகிச் சரணடைகின்றனர். இவர்களைச் சரணர் எனலாம். இந்தியாவில் புக்கிலிகளைப் பாதுகாப்பதற்கான உள்நாட்டுச் சட்டம் ஒன்றும் இல்லை, மேலும் இந்தியா 1951 ஐ.நா. புக்கிலிகள் மாநாட்டில் கையெழுத்திடவில்லை. புக்கிலிகள், இந்திய அரசியலமைப்பின் கீழ் அடிப்படை உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர்கள், குறிப்பாகச் சமத்துவத்திற்கான உரிமை (பிரிவு 14), குற்றங்களைத் தண்டிப்பதைப் பற்றிய பாதுகாப்பு (பிரிவு 20) மற்றும் வாழ்வுரிமை (பிரிவு 21). புக்கிலிகளாக வந்துள்ள திபேத்தியர்களுக்கும் பிற நாடுகளில் இருந்து வந்துள்ள வட மாநிலங்களைச் சேர்ந்த புக்கிலிகளுக்கும் மிகுதியான முழு உரிமைகள் அளித்துள்ள இந்திய ஒன்றிய அரசு, பருமாவிலிருந்து வந்த தமிழர்களுக்கும் இலங்கை அல்லது ஈாத்திலிருந்து வந்து கொண்டுள்ள புக்கிலிகளுக்கும் உதவுவதுபோல் உதவி நான்காம்தர மக்களாக நடத்துவதாக மனித நேய ஆர்வலர்கள் கவலைப் படுகின்றனர். அண்டை நாடான இலங்கைியலிருந்து தமிழர்கள் வருவார்கள் என்ற எதிர்காலக் கணிப்பின் அடிப்படையிலேயே இந்தியா புக்கிலிகள் தொடர்பான பன்னாட்டுத் தீர்மானத்தில் கையொப்பமிடவில்லை என மனித நேயர்கள் வருந்துகின்றனர். |
949. Asylum | புகலிடம் காப்பிடம் காப்பகம் அடைக்கலம் தஞ்சம் பித்தர் காப்புமனை மனநோயர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கான மருத்துவ இல்லம் மன நல மனை என்றும் மனநோயர் காப்பு மனை என்றும் மனவளமனை என்றும் அழைக்கப்படுகின்றது. பித்தர் காப்புமனை என்பதுபோல் பித்தர் என்ற சொல்லாட்சியைக் கைவிட வேண்டும். பேரிடரில் இருப்பவர் அல்லது ஆதரவு அற்றவர் நாடும் (பாதுகாப்பான) இடம் அல்லது இல்லம் . அரசியல் குற்றவாளிகளைச் சிறை செய்தல், அவர்கள் மீது வழக்குத் தொடர்தல் ஆகியவற்றிலிருந்து காக்கும் பொருட்டு அளிக்கப்படும் மறைவிடம். வெளிநாட்டவர்களுக்குச் சில நாடுகளே அடைக்கலம் தருகின்றன. சட்டத் துறைச் சூழலில், “தஞ்சம் அல்லது அடைக்கலம்” என்பது துன்புறுத்தல், போர் அல்லது பிற கடுமையான அச்சுறுத்தல்கள் காரணமாகத் தங்கள் சொந்த நாடுகளை விட்டு வெளியேறிய வெளிநாட்டினருக்கு ஓர் அரசு வழங்கும் சட்டப் பாதுகாப்பைக் குறிக்கிறது. இஃது அவர்களுக்குப் பாதுகாப்பான புகலிடத்தையும் பிற நாடுகளில் புகலிடம் தேடித் துய்க்கும் உரிமையையும் வழங்குகிறது. இந்தியாவும் பல அயல்நாட்டுத் தலைவர்களுக்கும் அறிஞர்களுக்கும் அடைக்கலம் அளித்துவருகிறது. ஆனால் மருத்துவத்திற்காக வந்த ஈழத் தமிழர்கள் பலருக்கும் ஈழத்தேசியத் தலைவர் பிரபாகரனின்தாய்க்கும் அடைக்கலம் தரவில்லை. வங்கத் தேசப் பத்தாவது தலைமையராக(P.M.) இருந்த சேக்கு அசீனா வாசித்து (Sheikh Hasina Wazed) இப்போது இந்தியாவில் அடைக்கலமாகி உள்ளார். |
950. At all times of the year | ஆண்டின் எல்லாக் காலங்களிலும் பிணை வழங்குவதற்குரியவர் ஆண்டில் எல்லாக் காலங்களிலும் நிலையான இருப்பிடம் கொண்டவராக இருக்க வேண்டும். ஆண்டின் எலலாக்காலங்ஙகளிலும் குற்றச் செயலில் ஈடுபடுபவராக இல்லாமல் இருந்தாலே பிணை வழங்கக் கருதிப் பார்க்கப்படும். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்