Sunday, November 30, 2025

குறட் கடலிற் சில துளிகள் 36 : நல்லார் தொடர்பைக் கைவிடாதே!-இலக்குவனார்திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 35 : துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை-தொடர்ச்சி)

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல். 

 (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰ – 450)

நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பல பத்து மடங்கு தீமை ஆகும்.

பதவுரை

பல்லார் – பலர்; பகை – எதிர்ப்பு;பகைத்தல்; கொளலின் – கொள்வதைவிட ; பத்து – ஓர்எண்; அடுத்த – மேன்மேல்வருதல்;  தீமைத்தே – தீமையே; நல்லார் – நற்பண்புடைய பெரியோர்; தொடர் – தொடர்பை; கைவிடல் – கைவிடுதல் – கைவிட்டுவிடுதல்;

பத்தடுத்த என்பது பதின்மடங்கு என்பதைக் குறிக்கிறது. அடுக்கி வரும் பத்தின் எண்ணிக்கை எனக் கொள்ள வேண்டும்.

நல்லவர் தொடர்பைக் கைவிடக்கூடாது என்பதால் பல்லார் என்பதில் நல்லவர் அடக்கம் இல்லை எனலாம்.

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன்.   (திருக்குறள், ௮௱௭௰௩ – 873)

எனத் திருவள்ளுவர் பலரின் பகை கொள்பவன் பித்துப்பிடித்தவரை விட அறிவிழந்தவன் என்கிறார்.

அத்தகைய பல்லார் தீமையை விட நல்லோர் தொடர்பைக் கைவிடலைப் பதின்மடங்கு தீமை என்கிறார்.

பகை என்பது ஒருவரின் வளர்ச்சிக்கு ஆக்கத்திற்கு ஊக்கத்திற்குத் தடையாய் அமையும்; தீங்கு விளைவிக்கும்; முன்னேற்றத்தைத் தடைப்படுத்தும். முயற்சி மேற்கொண்டு பகையை வெல்லலாம்; வாகை  சூடலாம். என்றாலும் அதற்கு முன்னதாகப் பகையால் விளையும் தீமை தீமைதானே. அவ்வாறான தீமைகளை விடப் பன்மடங்கு தீமைகள் நல்லோர் தொடர்பைக் கைவிடுவதால் விளையும் என்கிறார் திருவள்ளுவர். நல்லோர் தொடர்பு ஒருவருக்குத் தீமைகளிலிருந்து காக்கும் கேடயமாக விளங்கும். அத்தகைய காப்பு கருவியைப் புறக்கணித்தால் பெருந்தீங்குகள் அல்லவா விளையும்? எனவேதான் நல்லார் தொடர்பைக் கைவிடுதலைப் பெருந்தீங்காகத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

முனைவர் சாலமன் பாப்பையா, அதிகாரம் முழுவதிலும் பெரியார்  என்பதைத் துறைப் பெரியவர் என்றே குறிப்பிடுகிறார். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அந்தந்தத் துறைப் பெரியவர் நட்பும் உறவும் தொடர்பும் தேவை என்கிறார். பெரியார் என்பதற்கு அறிவிலும் பட்டறிவிலும் பண்பிலும் பெரியார் எனப் பிறர் கூறுகையில் இவர் மாறுபடக் கூறுவதும் சரியே. என்றாலும் துறைப்பெரியவராய் இருப்பினும் பண்பிற் சிறந்தவராயும் இருத்தல் வேண்டும்.

கடுவெளிச்சித்தர்

வல்லவர் கூட்டத்திற் கூடு

என்றும்

நல்லவர் தம்மைத்தள் ளாதே

என்றும் கூறுகிறார்.

இதனையேதான் திருவள்ளுவர் நல்லார் தொடர்பைக் கைவிடுவதன் தீமையைக் கூறுவதன் மூலம் நல்லார் தொடர்புடன் இருக்க வலியுறுத்துகிறார்.

எனவே, நல்லார் தொடர்பைப் பற்றிக் கொண்டு

நல்லன அடைந்து சிறப்போம்

– 

இலக்குவனார் திருவள்ளுவன் 

Saturday, November 29, 2025

நாலடி நல்கும் நன்னெறி 19: – பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 18: – செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும்: தொடர்ச்சி)

உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி

இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; – கொடைக்கடனும்

சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்

ஆஅயக் கண்ணும் அரிது.   

(நாலடியார், 184)

மழை பெய்யாத கோடைக் காலத்திலும், நீர் சுரக்கும் கேணி தன்னிடம் உள்ள தண்ணீரைப் பிறர் இறைத்து உண்ணக் கொடுத்து ஓர் ஊரைக் காப்பாற்றும். அது போலப், பெரியோர் வறுமையில் வாடித் தளர்ந்த காலத்திலும் பிறர்க்குக் கொடுப்பர். ஆனால் பெருமையற்ற சிறியோர் செல்வம்  மிகுதியாக உள்ள காலத்திலும் பிறர்க்குத் தரமாட்டார்கள்.

பதவுரை:

உறைப்பு=மழை; அரு காலத்து=அருகிய இல்லாக் காலத்திலும்; ஊற்று நீர்=ஊற்று நீருள்ள; கேணி= கிணறானது; இறைத்து=நீரை இறைத்து; உணினும்=உண்டாலும்;ஊர் ஆற்றும்=ஊரைக் காப்பாற்றும்;  என்பர்=என்று சொல்வர்; (அதுபோல்); கொடை = பிறர்க்குக் கொடுக்கும்; கடனும்=முறைமையும்; சாயக்கண்ணும்=(வறுமையால்) தளர்ந்தவிடத்தும்; பெரியார் போல்=பெரியோர்களைப் போல்; மற்றையார்=சிறியோர்; ஆயக்கண்ணும்=செல்வம் உண்டாயினும்; அரிது= கொடுத்தல் அரிது.

ஆழிக்கிணறு, உறை கிணறு, கட்டுக்கிணறு, கூவம், கூவல், கேணி, தடம், தளிக்குளம், திருக்குளம், தொடு கிணறு, நடை கேணி, பிள்ளைக்கிணறு, பொங்கு கிணறு என நீர்நிலைகள் ஏறத்தாழ 50 உள்ளன. இவற்றுள் ஊற்றுநீர்க் கேணியைக் குறிப்பிடுவதன் காரணம், இயற்கையாக நீர் ஊறும் தன்மையுடையது. எனவே ஊற்றுக்கேணி இயல்பான கொடைத்தன்மை யுடையவர்களைக் குறிப்பதற்காக உரைக்கப்பட்டுள்ளது.

பொருள் குறைந்த காலத்திலும் பிறர்க்கு இயன்றது உதவவுவதே நற்பண்பாகும்.

வறுமையுற்ற காலத்திலும் நற்குடிப்பிறந்தோர் ஊற்று நீர் போல உதவுவர் என நாலடியார் 150 ஆம் பாடலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவரும்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்

[திருக்குறள் ௨௱௰௮ – 218)

என்கிறார்.

அஃதாவது, பிறருக்குக் கொடுக்க முடியாத வறுமைக் காலத்திலும் ஒப்புரவாளர்கள் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டு வாழ்வர் என்கிறார்.

“செல்வத்துப் பயனே ஈதல்” எனப் புறநானூற்றில்(400) புலவர் நக்கீரனார் குறிப்பிடுகிறார். கொடையைப் பிறவிக்குணமாகக் கூறுகிறார் ஒளவையார். கொடையை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தனர் தமிழ்ச்செல்வர்கள்.

செல்வம் இல்லாக் காலத்தும் உதவுவோர் பெரியோர். செல்வம் நிறைந்த காலத்தும உதவார் சிறியோர். நாம் பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டு வாழ வேண்டும்.

Thursday, November 27, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 10 : தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். – தொடர்ச்சி)

முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்

தொல்காப்பிய மொத்த நூற்பாக்கள் 1571 ஆகின்றன. இவற்றுள் எழுத்து அதிகாரத்தில் 57, சொல் அதிகாரத்தில் 72, பொருள் அதிகாரத்தில் 158, ஆக மொத்தம் 287 நூற்பாக்கள் தொல்காப்பியருக்கு முன் உள்ளவர்களின் கருத்தை மேற்கோளாகக் குறிப்பிடுவனவாகும்.” என்கிறார் பேராசிரியர் சி. இலக்குவனார்(தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம் 15). இதனையே வரலாற்று நூலாகவும் கருத வேண்டும் என அவர் வலியுறுத்தும் இடத்திலும் பின்வரும் வகையிலும் அவர் விளக்குகிறார்: 

தொல்காப்பியர் தம்முடைய சமசுகிருதப் புலமை தமிழின் அழகையும், தனித் தன்மையையும், சிதைப்பதற்கு இடம் தரவில்லை.  வடவேங்கடம் தென்குமரி இடையே உள்ள கிடைத்த தமிழ் நூல்களின் அடிப்படையிலேயே தொல்காப்பியர் தம்முடைய சிறந்த நூலை யாத்துள்ளார் எனப் பனம்பாரனார் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் ‘என்மனார்’ ‘என்ப’ ‘என்றிசினோர்‘  எனத் தம் முன்னவர்களைப் பற்றி 287 இடங்களில் குறிப்பிடுகின்றார். இத்தகைய மேற்கோள்களால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு நிலவிய தமிழ்மொழி தமிழ் இலக்கிய நிலைமை குறித்து அறிதற்கு இயலுகிறது. எனவே தொல்காப்பியத்தை விளக்க உரை நூலாக மட்டும் கருதாமல் வரலாற்று நூலாகவும் கருத வேண்டும்.” பேராசிரியர் சி. இலக்குவனார் (தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம்-20)

தொல்காப்பியர் முன்னோரைச் சுட்டும் வகைகள்

தொல்காப்பியச் சூத்திரங்களுள் ஏறத்தாழ இருநூற்று அறுபது இடங்களில் தொல்காப்பியர், தமக்கு முன்பு இருந்தவரும் தம் காலத்தவருமான இலக்கண ஆசிரியர் பலரைப் பலபடியாகக் குறிப்பிட்டுள்ளார். (முனைவர் மா. இராசமாணிக்கனார், தமிழ் மொழி-இலக்கிய வரலாறு)

(1) ‘என்ப’- ‘மொழிப’ என்னும் முறைமை தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 147 இடங்களில் வந்துள்ளன.

(2) ‘என்மனார் புலவர்’ என்பது சுமார் 88 இடங்களில் வந்துள்ளது.

(3) ‘வரையார்’ என்பது 15 இடங்களில் வந்துள்ளது. 

(4) பிற சிறப்புடன் வந்துள்ள தொடர்கள் ஏறத்தாழ முப்பதாகும்.

(குறிப்பு; அப்படியானால் 250+30=280 ஆகிறது.)

 இத்தொடர்கள் தாம் சுவையுடையவை. ஆதலின், அவற்றை அதிகார முறைப்படி ஒன்றன்பின் ஒன்றாக இங்குக் காண்போம்:

  1. நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே-நூற்பா 7.
  2. ஒத்த தென்ப உணரு மோரே- நூற்பா 193. 
  3. செவ்வி தென்ப சிறந்திசி னோரே – நூற்பா 295. 
  4. புகரின்று என்மனார் புலமை யோரே – நூற்பா 369
  1. உளவென மொழிப உணர்ந்திசி னோரே- நூற்பா 116
  2. வழுக்கின் றென்ப வயங்கி யோரே – நூற்பா 119 
  3. விளியொடு கொள்ப தெளியு மோரே – நூற்பா 153
  4. ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே – நூற்பா 158. 
  1. இயல்பென மொழிய இயல்புணர்ந் தோரே – நூற்பா 4 
  2. புலனன்குணர்ந்த புலமை யோரே – நூற்பா 14 
  3. கொள்ளும் என்ப குறியறிந் தோரே – நூற்பா 50
  4. நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
  5. வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே – நூற்பா 315 
  • இடையும் வரையார் தொடையுணர்ந் தோரே- நூற்பா 371 
  • வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர் – நூற்பா 383
  • யாப்பென மொழிப யாப்பறி புலவர் – நூற்பா 380
  • வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர்  – நூற்பா 384 

  • பொழிப்பென மொழிதல் புலவர் ஆறே – நூற்பா 403 
  • ஒன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே – நூற்பா 406 
  • தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும் – நூற்பா 407
  • நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே – நூற்பா 457
  • ஒத்தென மொழிப உயர்மொழிப் புலவர் – நூற்பா 472 
  • தோன்றுமொழிப் புலவரது பிண்டம் என்ப – நூற்பா 474
  • ஆங்கென மொழிய அறிந்திசி னோரே – நூற்பா 514 
  • தோலென மொழிப தொன்னெறிப் புலவர் – நூற்பா 539 
  • புலனென மொழிய புலனுணர்ந் தோரே – நூற்பா 542 
  • நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே – நூற்பா 571 
  • நூலென மொழிய நுணங்குமொழிப் புலவர் – நூற்பா 644
  • சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர் – நூற்பா 646

சுவை பயக்கும் இத் தொடர்களை, அவையுள்ள இயல்களையும் நூற்பாக்களையும் கொண்டு ஆராய்ந்து முடிபு கூறல் அழகிதாகும். இத் தொடர்கள் பலதுறைப் புலவர்களைச் சுட்டுதல் தெற்றென விளங்குதல் காண்க; இவற்றை நோக்கும் அறிஞர் சிறப்பாகப் பொருளதிகாரத்தில் வரும்

4, 5, 7, 8, 9, 11, 12, 14, 15, 16, 20 ஆம் எண்கள் சுட்டும் தொடர்களைக் காண்கையில், மேற் கூறப்பெற்ற உண்மையை எளிதில் உணர்வர். (முனைவர் மா. இராசமாணிக்கனார், தமிழ் மொழி-இலக்கிய வரலாறு)

(தொடரும்)

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 26: தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 25: செய்யாததைச் செய்ததாகக் கூறிப் புகழாதே! – தொடர்ச்சி)

தமக்கெனப் பொருளைப் பதுக்கி வைக்கின்ற நல்லுள்ளம் இல்லாதவரோடான நட்பைக் கைவிட்டுதளர்ச்சியில்லாத வலிமையுடையவர் நட்பை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

திணைபொதுவியல்

துறைபொருண்மொழிக் காஞ்சி

நெல் விளைச்சலின் பொழுது கதிர்களைக் கொண்டுவந்து சிறிய இடத்தில் உணவாகச் சேகரிப்பது எலியின் பழக்கம்.

எலி போன்று நன் முயற்சி இல்லாமல் பெறுகின்ற செல்வத்தையும் பிறருக்குப் பயன்படாத வகையில் இறுகப்பற்றி வைத்திருப்போருடன் நட்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

தன்னால் தாக்கப்பட்ட கொடும்பார்வையுடைய பன்றி இடப்பக்கம் விழுந்தது எனஅதை உண்ணாத புலி குகையில் தனித்திருந்து மறுநாள் முயற்சியுடன் வேட்டைக்குச் சென்று யானையைத் தாக்கி உண்ணும் புலிபோல் தளரா உள்ளமுடையவர்களோடு நட்பு கொள்க.

எனவேஎலி போன்ற தன்னலமுடையார் நட்பைக் கைவிடுக என்றும் புலிபோல் முயற்சியும் வலியமையும் உடையவர் நட்பை மேற்கொள்க என்கிறார் பாடலியற்றிய மன்னர் சோழன் நல்லுருத்திரன்.

மேற்குறித்த பாடலடிகள் இடம்பெற்ற முழுப்பாடல் வருமாறு:

விளைபதச் சீறிடம் நோக்கிவளைகதிர்

வல்சி கொண்டுஅளை மல்க வைக்கும்

எலிமுயன் றனைய ராகிஉள்ளதம்

வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு

 இயைந்த கேண்மை இல்லா கியரோ; (5)

கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,

அன்று அவண் உண்ணா தாகிவழிநாள்

பெருமலை விடரகம் புலம்பவேட்டெழுந்து

இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்

புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து (10 )

உரனுடை யாளர் கேண்மையொடு

இயைந்த வைகல் உளவா கியரோ.

பதவுரை:

விளை பதம் = விளைகின்ற பருவம்சீறிடம் = சிறிய இடம்வளைகதிர் = வளைந்த நெற்கதிர்வல்சி = உணவுஅளை = வளைமல்கல் = நிறைதல்;

எலிமுயன் றனைய ராகி = எலி போன்ற சிறு முயற்சி உடையவராகி;

உறுத்தல் = இருத்தல்கேண்மை = நட்புகேழல் = பன்றிஅவண் = அவ்விடம்அவ்விதம்வழிநாள் = மறுநாள்விடர் = குகைபுலம்பு = தனிமை;

வேட்டு = விரும்பிஇரு = பெரியகளிறு = (ஆண்யானை ; ஒருத்தல் = புலி,

உழைமரைகவரிகராம்யானைபன்றிஎருமை முதலிய ஒரு சார் ஆண் விலங்குகளுக்குப் பொதுப்பெயர்நல் வலம்படுக்கும் = நன்கு வலப்புறம் வீழும்;

புலிபசித் தன்ன = அதை உண்ணும் பசியுடைய புலிபோல்மெலிவில் = தளர்ச்சி யில்லாதஉரனுடை யாளர் = வலிமை உடையகேண்மை = நட்புவைகல் = நாள்.

தன்னால் தாக்கப்படும் விலங்கு இடப்பக்கம் வீழ்ந்தால் அதைப் புலி உண்ணாது என்னும் கருத்து சங்கக் காலத்தில் நிலவியது.

அகநானூறு 29 ஆம் பாடலிலும் இது இடம்படின்,

வீழ்களிறு மிசையாப் புலி

என்னும் பாடலடியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேண்மை என்பது உறவுபோல் அமையும் நட்புஇந்நட்பு யாருடன் இருக்க வேண்டும்யாருடன் இருக்கக் கூடாது என்று அரசர் கூறுகிறார்.

எலி போன்றோரிடம் இருக்கக் கூடாது என்றும் புலி போன்றோரிடம் இருக்க வேண்டும் என்றும் அரசர் வலியுறுத்துகிறார்.

எலி தானாக முயற்சி மேற்கொண்டு உணவை அடையாமல்உழவர்கள் உழைப்பில் விளைந்த நெற்பயிரைத் திருடிச் செல்வதால் இதனைத் தவிர்க்க வேண்டிய சிறு முயற்சியாக மன்னர் கூறுகிறார்.

இத்தகைய சிறு முயற்சி கூடாது என்றும் அறிவுரை தருகிறார்.

புலி தனக்கு உணவு கிடைத்தாலும் அவ்வுணவு இடப்பக்கம் வீழந்தமையால் பசியையும் பொருட்படுத்தாமல் அதனை உட் கொள்ளவில்லை.

மறுநாள் மீண்டும் முயற்சி மேற்கொண்டு வேட்டையாடி யானையைக் கொன்று தன் உணவைப் பெற்றுள்ளது.

இதனைச் சிறப்பான முயற்சியாக மன்னர் கூறுகிறார்.

எனவேதான்எலிபோல் சிறிய முயற்சி உடையார் நட்பைக் கைவிடுமாறும் புலிபோல் சீரிய முயற்சியுடையார் நட்பைநாளும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மன்னர் கூறுகிறார்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

மெலிவில் உள்ளத்து

உரனுடை யாளர் கேண்மையொடு

இயைந்த வைகல் உளவா கியரோ

தமக்கெனப் பொருளைப் பதுக்கி வைக்கின்ற நல்லுள்ளம் இல்லாதவரோடான நட்பைக் கைவிட்டுதளர்ச்சியில்லாத வலிமையுடையவர் நட்பை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

புறநானூறு 190 வது பாடல்

பாடியவர்சோழன் நல்லுருத்திரன்

தாய், நவம்பர் 27, 2025

Followers

Blog Archive