Friday, August 31, 2012

Science in Proverbs 26-30 : பழமொழிகளில் அறிவியல் செய்திகள் 26-30


பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு - பதிவு செய்த நாள் : 31/08/2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முந்தையப் பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்
26. காலத்தோடு களை எடு; நேரத்தோடு உரமிடு.
27. காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
28. கீரைக்குப் புழு வேரில்.
29. குறிஞ்சி அழிந்து நெருஞ்சி ஆயிற்று.
30. கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்.

வாயும் பற்களும் நாக்கும் , mouth,teeth and tongue

வாயும் பற்களும் நாக்கும்    
- இலக்குவனார் திருவள்ளுவன்

வாய், உடல் நலம் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. உடல் நலம் குன்றினால் மருத்துவர்கள்நாக்கைத்தான் முதலில் நீட்டச் சொல்லி ஆய்கிறார்கள். நாக்கின் நிறம், உமிழ்நீரின் தன்மை, உமிழ்நீர் சுரக்கும்அளவு, வாய்ப்புண், ஈறுகளின் நிலை, பற்களின் நிலை ஆகியவற்றின் மூலம் நோயைப் பற்றிய தன்மைகளைக்கண்டறிய இயலும்.

உணவுச் செரிமானம் தொடங்கும் இடம் வாய்தான். உட்கொள்ளுவனவற்றை அல்லது உணவுப் பொருள்களைமீச்சிறு துண்டாக்கி மென்று கூழாக்கிக் குருதியில் கலப்பதற்கு ஏற்றவாறு உள்ளே அனுப்புவது அல்லதுவிழுங்குவது வாய்தான்.
விரிவிற்கு

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி


                                                    குமரித்தமிழ் வானம்
தமிழ்ப்பேரறிஞர்
பேராசிரியர் சி.இலக்குவனார்
நினைவுச் சொற்பொழிவு
நாள்:  ஆவணி 6, 2043   * ஆக 22, 2012 * புதன் கிழமை மாலை 6.30 மணி
இடம்:  தமிழ்வானம் அரங்கம்,  50/22,கணபதிநகர்,செட்டிக்குளம் சந்திப்பு, நாகர்கோயில் 629 002
வாழ்த்துரை
-       இலக்குவனார் திருவள்ளுவன்
பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி
குமரித் தமிழ் வானம் திங்கள் தோறும் அறிஞர்கள் நினைவாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி வருவது பாராட்டிற்குரியது. இவ்வமைப்பின் இயக்குநர் திரு சுரேசு ஆற்றும் அரும்பணியால் ஆன்றோர்கள் பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பாகிறது. வானம் உள்ளளவும் தமிழ் வானத்தின் பணியும் தொடரட்டும்!
தமிழ்வானத்தின் திங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சியில் இத்திங்கள்  தமிழ்ப்பேரறிஞர் சி.இலக்குவனார் நினைவுச் சொற்பொழிவு அமைந்துள்ளது அறிந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் உணர்வாளர் கவிஞர் நா.முத்திலவேனார் தலைமையில் குறள்நெறி ஆய்வறிஞரும் இதழாளரும் ஆன முனைவர் சிவ.பத்மநாபன் அவர்கள் பேராசிரியரின் திருஉருவப்படத்தைத் திறந்து வைப்பது பொருத்தமானதே!
தண்டமிழ்த் தொண்டர் தமிழ்வானம் செ.சுரேசு அவர்கள் தொடக்கவுரை யாற்ற, தமிழ்த்தேசியப்பேரவையாளர் ந.மணிமாறன் அவர்கள் இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பணி என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவது பேராசிரியரின் தமிழ்ப்பணியை நினைவுகூரவும் அவர் வழி நாம் நடைபோடவும் பெரிதும் உதவியாக அமையும் என்பதில் ஐயமிலலை.
இந்நிகழ்வில் என் வாழ்த்துரையும் இடம பெறச் செய்தமைக்கு முதலிலேயே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் மொழிக்காகச் சிறை சென்ற ஒரே பேராசிரியர் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்மட்டும்தான். தமிழர் தளபதி எனத் தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட பேராசிரியர் அவர்களைத் தமிழ்ப்பகைஅரசின் காவல்துறை இந்திஎதிர்ப்புத் தளபதி எனக் குற்றம் சுமத்தி இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்ச் சிறையில் அடைத்ததில் வியப்பொன்றும் இல்லை. அத்தகைய பெருமைக்கும் போற்றுதலுக்கும்  உரிய பேராசிரியச் செம்மலுக்கு விழா எடுப்பவர்களைப் பாராட்டுகின்றேன்.
இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியரான பேராசிரியர் அவர்கள், தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் அறிஞரல்லாத மக்களுக்கு அறிமுகப்படுத்தியதால்தான் இன்றைக்கும் அவை வாழ்கின்றன. வாழ்வியல் அறிவியல் நூலான தொல்காப்பியத்தை உலக மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் பேராசிரியர். அபபணியின் பெரும்பகுதி நடைபெற்றது இம்மாவட்டத்தில் அப்பெருந்தகை பணியாற்றிய பொழுதுதான்.
தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பையும் உயர்தனிச் செம்மொழியாகத் திகழும் சீர்மையையும் அயலவர் அறிய ஆங்கிலத்தில் தமிழ்மொழி குறித்து < Semantemes and Morphemes in Tamil Language, Tamil Language- Introduction, Tamil Language – Phonetics,Tamil Language, Tamil Language – Semantics,Tamil Language Syntax ஆகிய > நூல்கள் எழுதி வெளியிட்டு அருந் தொண்டாற்றியதும் இம்மண்ணில்தான்.
குமரிமண்ணிலுள்ள தெ.தி.இந்துக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்த பொழுதுதான் அணிவணக்கத்தைத் திருவள்ளுவர் படத்திற்கு வழங்கச் செய்து உலகப்பெரும்புலவரைப் போற்றினார் பேராசிரியர். இதுவரை யாரும் நிகழ்த்தியிராத அளவிற்குத் திருவள்ளுவருக்கு – மாபெரும் ஊர்வலத்துடனும் கலை நிகழ்ச்சிகளுடனும் மாணாக்கர்கள், இளைஞர்கள், அறிஞர்கள், தமிழன்பர்கள், பொதுமக்கள் சூழத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவப்படத்தை யானைமீது வைத்து – மிகச்சிறப்பான விழா எடுத்ததும் இம்மண்ணில்தான்!
தனியார்கல்லூரி ஆசிரியர்கள் நிலைமை இன்றைக்கும் மோசமாகத்தான் இருக்கின்றது. வீரர்களை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பது தனியார் கல்லூரிகளில்தான். அவர்களின் உரிமைக்காகப் பலவழிகளிலும் போராடிப் பெரும்பாலான உரிமைகளை மீட்டுத்தந்தவர் பேராசிரியர். இங்குதான் நேர்மைக்கு இடமில்லை எனச் சாதிப் போர்வையில் பேராசிரியர் விரட்டி யடிக்கப்பட்டார். விரட்டியடித்த கல்லூரியினரேபேராசிரியர் பணிக்காலம்தான் கல்லூரியின் பொற்காலம் எனக் கூறி அவரை மீண்டும் முதல்வராகப் பணியமர்த்தியதும் இம்மண்ணில்தான்.
சாதிவெறியினரால் 1952 இல் விருதுநகரில் இருந்து  துரத்தப்பட்டார்   மன்பதை காக்கும் தமிழ்ப் போ்ராளிபேராசிரியர் சி.இலக்குவனார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் காமராசை எதிர்த்து நின்ற அறிவியல் அறிஞர் சி.டி.நாயுடு எனப்பெறும் கோ.துரைசாமி அவர்களின் வெற்றிக்காகப் பாடுபட்டார் பேராசிரியர். இதனால் நாடார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு நாடாரை எதிர்ப்பதா என்று விரட்டப்பட்டபொழுது தலைவரும் அமைதி காத்தார். அத்தேர்தலில் பேராசிரியர் அவர்கள் தலைவர் காமராசரை எதிர்த்துத் தவறாக ஒன்றும் பேசவில்லை. அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக நாட்டிற்குத்  தொணடாற்ற வேண்டும் என்றும் அறிவியல் அறிஞர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம்  நம் நாடு அறிவியல் உலகில்  பல புதுமைகளைக் காண வேண்டும் என்றும் பேசினார்.
தாம் நடுநிலையாளர் என்பதை உலகிற்கு உணர்த்த  கருமவீரர் காமராசர் எனப் பேராசிரியர் நூல் எழுதி வெளியிட்டதும் இம்மண்ணில்தான். பேராசிரியர் கருதியவாறே முதல்வரான பெருந்தலைவர் பேராசிரியரின் தமிழ்ச்சார்பினையும் தன்னலம் கருதாத்  தொண்டுகளையும் புரிந்து கொண்டு அவரைச் சிறப்பு செய்யஎண்ணியதும் இம் மண்ணில் பேராசிரியர் இருந்தபொழுதுதான். பொதுக்கூட்டம் ஒன்றில் தலையில் துண்டு கட்டிக் கொண்டு பார்வையாளராக அமர்ந்திருந்த பேராசிரியரை அடையாளம் கண்டு கொண்டு அருகில் வந்து நலம் உசாவிப் பெருந்தலைவர் காமராசர் எளிமையில் உயர்ந்தவராகத் தம்மை உலகிற்கு  உணர்த்திய நிகழ்வு நடந்ததும் இம்மண்ணிலதான. பேராசிரியர் தமிழ்நாட்டின் தலைநகரில்தான் பணியாற்ற வேண்டும்; அவரது தொண்டு சுருங்காமல் விரிய வேண்டும் என அப்போது முதல்வராக இருந்த பெருந்தலைவர் தலைநகருக்கு அழைத்ததும் இம்மண்ணில்தான்.
இன்றைக்கு அரசால்  ஏற்கப்பபெற்று தமிழ்த்தாய் வாழ்த்தாக மனோண்மணியம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடல் பாடப்படுவதை அனைவரும் அறிவர். பேராசிரியர் அவர்கள், இப்பாடலை முதலில் தமிழ்வாழ்த்தாக மேடைநிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடச் செய்து அறிமுகப்படுத்தியதும் இதே மண்ணில்தான்.
தமிழ் உரிமைப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின்  போர்க்குணங்களையும் தமிழுக்குக் கேடயமாக விளங்கிக் காத்த உரிமைப் போராட்டங்களையும் நாம் நினைவுபடுத்திக் கொள்வது அப்போர்க்குணம் அழியாமல் நம்மிடம் பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். கல்வி, ஆட்சி, கலை, வழிபாடு என எல்லா நிலைகளிலும் தமிழே இருக்கப் போராடியவர் பேராசிரியர் அவர்கள். தமிழின் பேரால் போராட்டங்கள் நடத்தி ஆட்சியில் அமர்ந்தவர்களே  நேற்றைக்கும் இன்றைக்கும் எனத்  தமிழ்ப்பகைச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.  தமிழ்ப்பகையை எதிர் கொண்டவர்களே இன்றைக்குத் தமிழ்ப்பகைக்கு நட்பாகப் போனதால் தமிழன்பர்கள் கையறு நிலையில் இருக்கின்றனர். இந்நிலையை மாற்றித் தமிழுக்கு அன்பரெனில் நமக்கும் அன்பரே! தமிழுக்குப் பகை எனில் நமக்கும் பகைவரே! என நாம் உறுதியுடன் தமிழ்க்காப்புப் போரில் ஈடுபட  அவரது நினைவு நமக்குத் துணை நிற்கட்டும்!
தம்வாழ்வையே தமிழ்நலம்  நாடிய பேராட்டக்களமாக அமைத்துக் கொண்டவர் பேராசிரியர்.   அவர் வழியில் வாழ அவரது குறிக்கோளை  நினைவு கொள்வோம்!
அவரது  குறிக்கோளின்படி . . . . மொழிகளின் சமஉரிமையை நிலைநாட்டவும் தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை, தமிழில்தான் எல்லாம் என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்கு பெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும் காலத்துக்கேற்ப மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும், ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே இனி நம் வாழ்நாட்பணி எனக் கொள்வோம்.
இலக்குவனார் வழி நின்று இன்தமி்ழ் காப்போம்!

http://thiru-science.blogspot.in/

உடலின் பணி மண்டிலங்கள்



- இலக்குவனார் திருவள்ளுவன்

ஆகத்து 31, 2012    11:18  இந்தியத் திட்ட நேரம்
உடலின் பணியடிப்படையில் பத்து மண்டிலங்களாகப் பிரிக்கலாம்.

மண்டுதல் என்பது சேர்ந்து அல்லது குவிந்து அல்லது திரண்டு இருப்பதைக் குறிக்கும். பலர் சேர்ந்து இருக்க அமைக்கும் கட்டடம் மண்டபம் எனப்படுகிறது. பொருள்கள் குவித்து வைக்கப்படும் இடம் மண்டி எனப்படுகிறது. எ.கா. :பழ மண்டி. இவைபோல் இயற்கையாக விண்ணிலும் உடலிலும்சேர்ந்துள்ள அமைப்பு மண்டிலம் எனப்பெறும்.(எனினும் வழக்கத்தின் காரணமாகச்செயற்கையாக நாம் சேர்த்து அமைக்கும் பிரிவை மண்டலம் எனலாம் . எ.கா.: மண்டல நன்னடத்தை அலுவலகம்)

உடல் பணி மண்டிலம் வருமாறு:-

1. உணவு மண்டிலம்
2. மூச்சு மண்டிலம்
3. சிறுநீர் மண்டிலம்
4. குருதி ஓட்ட மண்டிலம்
5. நரம்பு மண்டிலம்
6. இன வளர்ச்சி மண்டிலம்
7. ஐம்புலன் மண்டிலம்
8. நாளமில்லாச் சுரப்பி மண்டிலம்
9. எலும்பு மண்டிலம
10. தசை மண்டிலம்

உணவுப்பாதை மண்டிலம்

1. வாய்க்குழி
1.01. நாக்கு
1.02. வல் அண்ணம்
1.03. மெல் அண்ணம்
1.04. உள்நாக்கு
1.05. பற்கள்

2.உமிழ்நீர்ச்சுரப்பிகள்
2.01. காதுஅண்மைச் சுரப்பிகள்
2.02. கீழ்த்தாடைச் சுரப்பிகள்
2.03. நாடிச்சுரப்பிகள்

3. தொண்டை
3.01. மூக்குத் தொண்டை
3.02. வாய்க்குழித் தொண்டை
3.03. குரல்வளைத் தொண்டை

4. உணவுக்குழல்
4.01. உணவுக்குழல் சுரிதசை
4.02. அடுக்கு மெய்ம்மி
4.03.திடநீர்ச்சுரப்பி

5. இரைப்பை
5.01. உணவுப்பாதையின் அகன்ற பகுதி

6. குடல்
6.01. சிறுகுடல்
6.02. பெருங்குடல்

7. கல்லீரல்
7.01. வலக்கதுப்பு
7.02. இடக்கதுப்பு
7.03. செவ்வக மடல்
7.04. வால்மடல்

8.பித்தநீர்ப்பை
8.01. வளைமுகடு
8.02. நடுப்பகுதி
8.03. கழுத்து

9. கணையம்
9.01. தலைப்பகுதி
9.02. கழுத்துப்பகுதி
9.03. உடல் பகுதி
9.04. வால்பகுதி
 நன்றி :  புதிய அறிவியல்

Thursday, August 30, 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
  நட்பு பதிவு செய்த நாள் : 30/08/2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முந்தையப் பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்
21. களர் முறிக்க வேப்பந்தழை.
22. களரை ஒழிக்கக் காணம் விதை.
23. களர்  கெடப் பிரண்டை இடு.
24. களர்  உழுது கடலை விதை.
25. களை பிடுங்காப் பயிர் கால் பயிர்.


குருதி (Blood)

குருதி (Blood)



- இலக்குவனார் திருவள்ளுவன்

ஆகத்து 30, 2012    13:40  இந்தியத் திட்ட நேரம்


குருதி (blood) உடலில் ஓடும் செந்நிற நீர்மம். எனவே, செந்நீர் என்றும் சொல்லப்பெறும். சிவப்புநிறத்தைக் குறிக்கும் அரத்தம் என்னும் சொல்லும் இதனடிப்படையில் இரத்தம் என்னும் சொல்லும் குருதியைக் குறித்து வழங்கப்படுகின்றன.

உணவுப்பொருள்கள், மூச்சு வளிகள், உரனிகள்(vitamin) ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லக் குருதியோட்டம் பயன்படுகின்றது. நுரையீரலில் இருந்து அனைத்து மெய்ம்மிகளுக்கும் உயிர்வளியை எடுத்துச் செல்வதும் திரும்புகையில் மெய்ம்மிகளில் இருந்து கரிவளியை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் குருதிதான். குருதி ஓட்டத்தின் துணை இன்றி உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயக்கம் நின்று விடும்.

நெஞ்சமும் குருதிக் குழாய்களும் கொண்ட மண்டலம் சுழல் மண்டலம் எனப்பெறும். ஒரு சுழற்சியில் குருதியின் பயணத் தொலைவு நூற்றுப் பத்தொன்பதாயிரம் அயிரைக்கல்(கிலோமீட்டர்). குருதிக் குழாய்களுக்குள் செல்கையில் அதன் வேகம் மணிக்கு 65 அயிரைக்கல்.

மனித உடலில் ஓடும் நீர்மத்தில் நீர் 79% கண்ணறைகள் 12% புரதம் 7%, ஏனைய கெட்டிப் பொருள்கள் 2% அடங்கியுள்ளன. குருதி நீர்மமாக இருந்தாலும் மிகமிக நுண் திடப்பொருள்கள் பல இதில் கலந்துள்ளன. இவை செவ்வுயிர்மிகள், வௌ்ளுயிர்மிகள், குருதித்துணுக்கிகள்(plate-lets) ஆகும். எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி என்பகி (Bone Marrow) இருக்கும். என்பின் (எலும்பின்) அகத்தில் (உள்ளே)உள்ளதால் இதனை என்பகி என்று சொல்லலாம். என்பகியில் செவ்வுயிர்மிகள், வெள்ளுயிர்மிகள்,குருதித்துணுக்கிகள் உற்பத்தியாகின்றன.

ஒரு துளிக் குருதியில் பலகோடி செவ்வுயிர்மிகள் உள்ளன. செவ்வுயிர்மிகள் வட்டமாகவும் சுற்றித் தடித்தும் நடுவே மெலிந்தும் காணப்படும். வௌ்ளுயிர்மிகள் செவ்வுயிர்மிகளைவிடப் பெரியவை. 500 முதல் 1000 செவ்வுயிர்மிகளுக்கு 1 வௌ்ளுயிர்மி என்னும் விகிதத்தில் இவை குருதியில் கலந்துள்ளன. வௌ்ளுயிர்மிகள் மாறிக்கொண்டே இருக்கும் உருவத்தை உடையன. உடலில் காயம் ஏற்பட்டால் வெளியேறும் குருதியை உறையச் செய்து நிறுத்த உதவுவனவே குருதித் துணுக்கிகள் ஆகும்.

செவ்வுயிர்மிகளின் நிலைப்புத்தன்மை ஏறத்தாழ மூன்று திங்கள் மட்டுமே. எனவேதான், நல்வாழ்வுநிலையில் உள்ளவர் மூன்று திங்களுக்கொருமுறை குருதிக் கொடை வழங்கலாம் என்கின்றனர். உடலுக்குள் நுழையும் நோயுயிரிகளை எதிர்த்துப் போராடும் படை வீரர்களாகத் திகழ்பவை வெள்ளுயிர்மிகளே! உடலில் காயம் ஏற்பட்டவுடன் குருதிக்கசிவைத் தடுப்பன குருதித்துணுக்கிகள்.

குருதியில் உள்ள செவ்வுயிர்மியில் காவுநீரி (ஈமோகுளோபின்/haemoglobin)உள்ளது. இவ்வேதிப்பொருளே குருதிக்குச் செந்நிறத்தை அளிக்கிறது. காவுநீரி உயிர்வளியைச் சுமந்து செல்கிறது. காவுதல் என்றால் சுமத்தல் எனப் பொருள். காவினெம் கலனே என்பார் புலவர் ஔவையார்(புறநானூறு 206: 10). தோளில் சுமந்து செல்வதற்குப் பயன்படும் கம்பு அல்லது தடிக்குக் காவடி எனப் பெயர். இதனடிப்படையில்தான் காவடியும் வந்தது. காவுதல் அடிப்படையில் காவி எனக் குறிப்பிட்டால் காவி நிறம் எனத் தவறாகப் பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே காவும் பணிபுரியும் நீர்மஉட்பொருளைக் காவுநீரி எனலாம். குருதியில் இதன் எண்ணிக்கை குறைந்தால் குருதிச் சோ‌கை ஏற்படும்(anemia). குருதியில் காவுநீரி ஆண்களுக்கு 14-18கா(கிராம் ) அளவிலும், பெண்களுக்கு 12-16கா (கிராம் ) அளவிலும் இருக்கவேண்டும்.

குருதியில் செவ்வுயிர்மிகள்,வெள்ளுயிர்மிகள், குருதித்துணுக்கிகள்(Platelets) ஆகியவற்றுடன் நீர்ம நிலையில் வைக்கோல் நிறத்தில் குருதிநீரம்(plasma) உள்ளது. குருதிநீரம் நீர்ம இயல்பில் இருப்பினும் புரதப்பொருட்கள், தாதுப்பொருட்கள், செரித்த உணவுப்பொருட்கள், கழிவுப்பொருட்கள் முதலான நூற்றுக்கணக்கிலான வேறுபொருட்களும் உள்ளன.

1900 ஆம் ஆண்டில் அறிஞர் இலான்சுடைனர் என்பவர் குருதிப் பிரிவுகளைக் கண்டு பிடித்தார். குருதி பொதுவாக நான்கு வகைப்படும். அவை ஏ, பி(B), ஓ, ஏபி ஆகிய ஆங்கில எழுத்துகளில் குறிக்கப்படுகின்றன. நாம் தமிழ் நெடில் எழுத்துகளைக் கொண்டு ஆ, ஈ, ஊ, ஆஈ என நால்வகையாகக் குறிக்கலாம். ஒருவருக்குக் குருதிப் பற்றாக்குறை ஏற்படும் பொழுது பிறரின் உடலிலிருந்து குருதியைப் பெற்று ஏற்றலாம். என்றாலும் எல்லாருக்கும் எல்லாவகைக் குருதிகளும் ஒத்தப்போகா. எவ்வகைக் குருதி உடையவருக்கு எவ்வகைக் குருதி செலுத்தப்படலாம் என்ற விவரம் வருமாறு:

உடலில் உள்ள குருதி வகை - ஒத்திணையும் குருதி வகை

ஆ - ஆ அல்லது ஊ

ஈ - ஈ அல்லது ஊ

ஊ - ஊ மட்டும்

ஆஈ - ஆஈ, ஆ, ஈ, ஊ

அந்தந்தக் குருதி வகை அந்தந்தக் குருதிக்கு ஒத்துப்போகும்; ஊ வகைக் குருதி எல்லா வகைக் குருதிகளுக்கும் ஒத்துப் போகும்; அதனால் இவ்வகைக் குருதியினரைப் பொதுநிலைக் கொடைஞர் எனலாம். எல்லா வகைக் குருதிகளும் ஆஈ வகைக் குருதிக்கு ஒத்துச் சேரும்; எனவே இவ்வகையினரைப் பொதுநிலை ஏற்குநர் எனலாம்.ஊ வகைக் குருதிக்கு ஊ வகைக் குருதி மட்டுமே ஏற்கும். பிற வகைக் குருதி ஒத்துப் போகாது.

குருதிவகைப்படி ஆ வகையினர் 42%ம் ஈ வகையினர் 8%ம், ஆஈ வகையினர் 3%ம், ஓ வகையினர் 47%ம் அமைந்துள்ளனர். இவை தவிர ஆ1, ஆ 2 என ஆவகைக் குருதித் துணைவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

குறுவால் குரங்கினத்தின் (Rhesus) செவ்வுயிர்மிகளில் உள்ள புரதம் போன்ற காரணி இருந்தால், கு.கு.நேர்மம் (Rh positive) என்றும் இல்லாவிட்டால் கு.கு. எதிர்மம் (Rh negative) என்றும் சொல்வர். கு.கு. காரணிகளில் 50 வகைக் குழுமுறையைக் கண்டறிந்துள்ளனர்.

நெஞ்சிலிருந்து குருதிக் குழாய்கள் வழியாகக் குருதி பாய்ந்து செல்கிறது. இதனால் குருதிக்குழாய்ச் சுவர்களில் ஓர் அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே குருதி அழுத்தம் ஆகும். குருதியால் நாடிச் சுவர்களில் உண்டாகும் ஓசை மூலம் குருதி அழுத்தத்தை உணரலாம். இயல்பாக 120 க்கும் 80க்கும் இடைப்பட்டுக் குருதி அழுத்த அளவு இருக்க வேண்டும். குருதி அழுத்தத்தை அளக்கும் கருவி குருதி அழுத்தமானி. குருதி அழுத்தம் மிகுதியானால் நெஞ்சமும் மிக விரைவாக வேலை செய்யும். இதனால் இதயத்துடிப்பு சட்டென்று நிற்கக்கூடும். இதுவே மாரடைப்பு எனப்படுகிறது.

குருதி அழுத்தம் குறைவானால் மிகுதியான களைப்பும் தளர்ச்சியும் ஏற்படுகிறது. மனக்கவலை, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் குருதி அழுத்தம் மிகுதியாகும். இதனால் நுரையீரல்கள்,சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளுக்கு ஊறு நேரலாம். எதைக் கண்டும் தளராத மன உறுதியும் அமைதியாய் எதையும் எதிர்கொள்ளும் மெல்லுணர்வும் இருப்பின் குருதி அழுத்தம் சீராகவே இருக்கும்.

மனநலம் நம்முயிர் காக்கும்!
 
நன்றி : புத்தறிவியல்

Wednesday, August 29, 2012

மெய்ம்மிகள் (திசுக்கள்) / tissues

மெய்ம்மிகள் (திசுக்கள்) / tissues

மெய்ம்மிகள் (திசுக்கள்)  (Tissues)

- இலக்குவனார் திருவள்ளுவன்

ஆகத்து 29, 2012    12:03  இந்தியத் திட்ட நேரம்
உடல் என்றும் கூறப்பெறும் மெய்அமைய ஏதுவாக ஓரே திறனும் ஒத்த பண்பும் கொண்ட உயிர்மிகள்(cells) இணைவதற்கு மெய்ம்மிகள் என்று பெயர். திசு எனத் திஃச்யூ (tissue) என்னும் சொல்லின் தமிழ் ஒலிவடிவமாகக் கூறப்படுவது இதுவே ஆகும். நெய்வு என்னும் பொருளுடைய இலத்தீன் சொல், பழைய பிரெஞ்சில் இடம் பெற்று, . அதிலிருந்து இடைக்கால ஆங்கிலத்தில் உயர்வகைத் துணியைக்குறிக்கும் (tissu என்னும்) சொல்லில் இருந்து பிறந்ததே திஃச்யூ(tissue) என்னும் சொல். இவ்வாறே நெய்வு அல்லது இழைமம் என நெசவுடன் தொடர்பு படுத்திக் கூறுவதைவிட மெய்யுடன் தொடர்புபடுத்தி மெய்ம்மி என்னும் பொழுது மிகப் பொருத்தமாக அமைகின்றது.
இவ்வாறு உயிர்மிகளின் இணைப்பால் உருவாகும் மெய்ம்மி பலவகைப்படும். இவற்றுள் முதன்மையானவை வருமாறு:- 
1. பரப்பு மெய்ம்மி (Epithelial tissue)

2. இணைப்பு மெய்ம்மி (Connective tissue)

3. தசை மெய்ம்மி (Muscle tissue)

4. நரம்பு மெய்ம்மி (Nervous tissue)

உடலின் ஆழத்தில் உள்ள பகுதிகளைப் பாதுகாக்கும் மெய்ம்மி பரப்பு மெய்ம்மி ஆகும். இது பெரும்பான்மை உயிர்மிகளையும் மிகச்சிறுபான்மை உயிர்ம இடைப் பொருள்களையும் கொண்டது. சுரத்தல், உறிதல், நகர்த்தல். சேமித்தல் தன்மை உடையது.

எ.கா.:-

புறத்தோல் உணவுக்குழாய் மெய்ம்மி - காக்கும் தன்மை

இரைப்பையின் உட்பரப்பு மெய்ம்மி - சுரக்கும் தன்மை

குடலின் உட்பரப்பு மெய்ம்மி - உறிஞ்சும் தன்மை

மூச்சுக்குழாய் உட்பரப்பு மெய்ம்மி - நகர்த்தும் தன்மை

கல்லீரல் மெய்ம்மி - சேமிக்கும் தன்மை
உறுப்புகளுக்கு உறுதியும் வலிமையும் அளிக்கும் மெய்ம்மி இணைப்பு மெய்ம்மி. இணைப்பு மெய்ம்மியில் உயிர்மி எண்ணிக்கை குறைவு; இடைப்பொருள் மிகுதி. சவ்வுமெய்ம்மி,கொழுப்புமெய்ம்மி, நார்மெய்ம்மி, குருத்தெலும்பு மெய்ம்மி, எலும்பு மெய்ம்மி, குருதி மெய்ம்மி, ஊனீர் சவ்வு மெய்ம்மி என இது பிரிக்கப்பட்டுள்ளது. குருதி மெய்ம்மியின் உயிர்ம இடைப்பொருள் குருதம்.
உடலின் அசைவிற்கும் நடமாட்டத்திற்கும், உடலில்அமைந்துள்ள பல்வேறு பாதைகளில் உள்ள பொருள்களை நகர்த்துவதற்கும் உதவுவது தசை மெய்ம்மி. தசை மெய்ம்மியில் உள்ள உயிர்மிகள் சுருங்கும் தன்மை உடையன. ஆதலால் உடல் அசைவிற்கும் நடமாட்டத்திற்கும் உடல் பாதைகளில் அமைந்துள்ள பொருள்களின் நடமாட்டத்திற்கும் உதவுகின்றன.
நரம்புமெய்ம்மியால் ஆன மிகப் பெரிய உறுப்பு மூளை நரம்பு. மெய்ம்மியின் உயிர்மிகள் நரம்பன்கள் எனப் பெறும்.
மெய்ம்மிகளைப் பற்றி ஆராயும் துறை மெய்ம்மியல் (histology) ஆகும். நோயறிதலுக்காக மெய்ம்மிகளை ஆராயும் துறை மெய்ம்மிநோயியல் (histopathology)ஆகும்.

(பயிர்மெய்ம்மிகள்பற்றித் தனியே பார்க்கலாம்.)
நன்றி : 
 

Followers

Blog Archive