Wednesday, April 30, 2014

அகரமுதல 24 இதழுரை - akaramuthala 24 editorial - பைந்தமிழ் காப்போம்!


பாவேந்தர் பாரதிதாசன் புகழ்பாடி, பைந்தமிழ் காப்போம்!

  bharathidasan01
  உலகின் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் போற்றப்பட வேண்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், தமிழ்நாட்டில்கூட  அவரின் தகைமை பெரும்பான்மையரால் அறியப்படவில்லை. பாரதிதாசன் என்றால் தமிழுணர்வு என அவரை அறிந்தவர்கள் அடையாளம் காண்கின்றனர். ஆனால், அரசியல் அறம், அறிவியல், இசைத்தமிழ்,  இயற்கை போற்றல், சிறுவர் இலக்கியம்,  தொழிலாளர் நலம், பகுத்தறிவு, பெண்ணுரிமை, பொதுவுடைமை, மண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு , எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர் பாரதிதாசன். இவரைப்பற்றித் தமிழ்ப்பாட நூல்களிலேயே போதிய கட்டுரைகள் இடம் பெறவில்லை. இவரைப்பற்றி  இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாடநூல்களிலும் படைப்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும். பிற  மொழியினரும் இவரது பாடல்களை அறியச் செய்திருக்க வேண்டும்.அப்பொழுதுதான் இந்தியத்துணைக் கண்டத்தில் உள்ளவர்களாவது அவரது சிறப்பைப் புரிந்திருப்பார்கள். தமிழர் வாழும் நிலப்பகுதி எங்கும் பாவேந்தர் போற்றப்பட்டால், உலகப் படைப்பாளிகள் அவரைப்பற்றி அறிந்திருப்பர்.  பாரதிதாசன் பரம்பரை என நூற்றுக்கணக்கில் பாவலர் கூட்டம் பெருகியுள்ளமைபோல், உலகில் எந்தக் கவிஞனுக்கும் கவிதைப் பரம்பரை உருவாகவில்லை என்பதை உலகம் உணர்ந்திருக்கும்.

உலகக் கவிஞரான பாவநே்தர் பாரதிதாசன் புகழ் போற்றல் என்பது பரப்புப்பணி மட்டுமல்ல. அவரது பாடல்களைப்  படித்து நாம் அவ்வழியில் இயங்குவதுமாகும். தமிழ் மக்கள் தன்னுரிமை பெற்ற தன்மான மக்களாகச் சிறந்து விளங்க நாம் அவரது பாடல்கள்  வழி நிற்றல் வேண்டும். அங்கும் இங்குமாக அவரின் பாடல் வரிகளை எடுத்தாண்டு பேசுவதோ, பாடுவதோ மட்டும் போதாது.

எப்பக்கம் வந்து புகுந்துவிடும் — இந்தி
   எத்தனை பட்டாளம் கூட்டிவரும்?
அற்பமென்போம் அந்த இந்திதனை — அதன்
   ஆதிக்கந் தன்னைப் புதைத்திடுவோம்.”

என்றார்  பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், இன்றைக்கு மெல்ல மெல்ல இந்திமொழியானது தன்னுடைய அரக்கக் கைகளால் நம்மைக் கட்டிப்போட்டுக் கொண்டுதான் உள்ளது. முன்பை விட இந்திமொழியானது, திட்டங்களின் பெயர்கள், துறைகளின் முத்திரை முழக்கங்கள், விழா அழைப்பிதழ்கள், பதாகைகள், அரசு விளம்பரங்கள், தனியார் விளம்பரங்கள், பணித்தேர்வு, கல்வியக நுழைவுத்தேர்வு, பாட மொழி, ஊடகங்களில் இந்திச் சொற்களைத் திணிப்பது, பதவிப் பெயர்கள்,  செய்மதிகள், புயல்கள் முதலானவற்றின் பெயர் சூட்டல் முதலான முறைகளில் எல்லா மொழிகளையும் விட மிகவும் ஒதுக்கீடு பெற்று, நாட்டின் பிற மொழிகளை அழித்து வரும் வகைகளில், இன்னும் அடுக்கிக் கொண்டே போகும் வகைகளில் ஒவ்வொரு செயலிலும் இந்தி மேலோங்கி நிற்கும்  நிலைகளில் திணிப்பு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
இனத்தைக் கொல்வ தெதற்கெனில், தமிழர்
நிலத்தைச் சுரண்டித் தமது நிலையினை
உயர்த்த, வடவரின் உள்ளம் இதுதான்

என்றார் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், தந்தை பெரியாரைப் பிற வகைகளில் எதிர்த்துக்கொண்டு அவர்வழியில் இயங்குவதாகக்  கூறியும்  சமயப் பரப்புரை என்ற போர்வையிலும்,   அறிவியலுக்கு ஏற்றது என்ற ஏமாற்று முக்காட்டை அணிந்துகொண்டும் வரி வடிவச் சிதைவுகள் மேற்கொள்ளப்பட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. உரோமன் எழுத்துகளைப் பயன்படுத்துவது, கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவது,  புதிய  சிதைவு வடிவங்களைப்பயன்படுத்துவது என்று தனித்தனிக் கூட்டங்கள், தமிழ் வரிவடிவச் சிதைப்புகளில்  ஈடுபட்டு வருகின்றன. அரசு நிறுவனமான தமிழ்இணையக் கல்விக்கழக இணையத் தளத்திலேயே தமிழ்வரிவச் சிதைவு இடம் பெறும் அளவில் தமிழ்ப்பகைவர்கள் செல்வாக்காக உள்ளனர். நாம் கடுமையாக முயன்று நெடுங்கணக்குக் கொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

செந்தமிழைச், செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில், வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே.

எனக் கனவு கண்டார் பாவேந்தர் பாரதிதாசன். தமிழ் உணர்வாளர்கள் உள்ளங்களில் வளரும் தணலை அழிப்பதே ஆட்சியாளர்களின்  பணியாக அமைந்து விடுகின்றது.

சிங்களவர்க்கு உள்ள இலங்கையின் உரிமை
செந் தமிழர்க்கும் உண்டு; திருமிகு
சட்ட மன்றிலும் பைந் தமிழர்க்கு
நூற்றுக்கு ஐம்பது விழுக்காடு நோக்கிப்
படிமை ஒதுக்கப் படுதல் வேண்டும்
செந்தமிழ் மக்கள் சிறுபான்மை யோரெனச்
சிங்களவர் பெரும்பான்மை யோரெனச் செப்பித்
தமிழர் உரிமையைத் தலை கவிழ்க்க
எண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள்
எவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும்
மானங் காப்பதில் தமிழ் மக்கள்
சாதல் நேரினும் தாழக் கூடாது
இவைகள் இலங்கை தமிழர் கொள்கைகள்!
யாவர் இவற்றை எதிர்ப்பினும் விடற்க!
வெல்க இலங்கைத் தமிழர்!
வெல்க தமிழே! மேவுக புகழே!”
என்றார் 1959 இல்  பாரதிதாசன்.
இலங்கையில் தமிழர்கள் கொடுமைகளுக்கு ஆளாகி, சம உரிமை கிடைக்காமல் தனிஉரிமை பெற்றிட
ஒட்டார் பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று (திருக்குறள் 967)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருவாக்கினை உணர்ந்து தமிழ் ஈழம் அமைத்தனர்; தனி அரசு நடத்தினர். ஆனால், உலக நாடுகளும் இந்தியாவும் இணைந்து சிங்களத்திற்கு உதவியதால் அங்கே இனப்படுகொலை நடந்தது.
ஆழிநிகர் படைசேர்ப்பாய்!
என்ற பாவேந்தரின் கட்டளையை ஏற்று விடுதலைப்புலிகள் படைஅமைத்துத் தம் மக்களைக் காப்பாற்றி வந்ததற்கு முற்றுப்புள்ளி இடச் செய்து விட்டோம்!  இறையாண்மை மிக்கத் தமிழ் ஈழ அரசு சிதைக்கப்பட்டது.  இன்றைக்குத் தமிழ்நிலம் பறிபோய்க் கொண்டு உள்ளது. ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகிக் கொண்டுள்ளனர். இருப்பினும் நாம், அமைதிகாத்துக் கொண்டிருக்கிறோம். இவற்றுக்குக் காரணமானவர்களுடன் கொஞ்சிக் குலவிக் கொண்டிருக்கின்றோம்!
நமக்கு ஏற்பட்டுள்ள இழிநிலைகளைப் போக்கிடப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்கு அளித்த கைவிளக்குதான் தமிழியக்கம் நூல். இதனையாவது நம் வழிகாட்டியாகக் கொண்டு நாம் செயல்படலாம் அல்லவா?
நம் பெயர்களும் வணிக நிறுவனங்களின் பெயர்களும்  தமிழில் அமைய,
தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழே திகழ
செத்த சமசுகிருதத்தின் ஆதிக்கத்தை விரட்ட,
தமிழாய்ந்த தமிழர்களே  ஆட்சித்துறைகளில் தலைமைப் பொறுப்பு வகிக்க,
வேற்றுவரின் ஆரியத்தைக் கோயிலிலே வேரறுக்க,
மணமக்கள் இல்லறத்தை மாத்தமிழால் தொடங்கிட,
தமிழ்பாடித் தன்மானம் காத்திட,
கல்விநிலையங்களில் தமிழ் வாழ்ந்திட
துறைதோறும் தமிழுக்குத் தொண்டு செய்து தமிழன்னையைக் காத்திட
நாம் கடமைஆற்றலாம் அல்லவா?

மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ் நாடு-தாய்
முலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு

என்பதை உணர்ந்து தமிழ்நாட்டைத் தமிழர் நாடாக்கி உலகெங்கும் தமிழர்கள் உரிமையுடன் வாழப்  பணிஆற்றிடலாம் அல்லவா?
இனியேனும் நாம் தமிழ் காக்கும் தமிழராய் வாழ்வோம்!பாவேந்தர் பிறந்த நாளிலும் நினைவுநாளிலும் மட்டும் அவரை  நினைக்காமல்,  “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்னும் அவர் முழக்கத்தை உணர்ந்து எந்நாளும் தொண்டாற்றிடுவோம்!

“கொலைவாளினை எடடா! – மிகு
கொடியோர் செயல் அறவே”
என்னும் அவர் கட்டளையை ஏற்று உலகத் தமிழர்களைக் காத்திடுவோம்!

இறந்தொழிந்த பண்டை நலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நாம் படைப்போம்!

 தமிழ் எங்கள் உயிர் என்பதாலே — வெல்லுந்
 தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே
 தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்
 தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்
 தமிழுண்டு தமிழ் மக்களுண்டு — இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
 தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
 தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு!  
(-பாவேந்தர் பாரதிதாசன்) 
 என்பதை உணர்ந்து நாளும் தமிழ்த் தொண்டாற்றிடுவோம்!
பாவேந்தர் பாரதிதாசன் புகழ்பாடி, பைந்தமிழ் காப்போம்!

இதழுரை http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png
சித்திரை 14, 2045
ஏப்பிரல் 27, 2014 

Sunday, April 20, 2014

வாக்கு யாருக்கு? akaramuthala.in editorial


வாக்கு யாருக்கு?

election01
  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகள் அமைகின்றன. மக்கள் மனம் கொள்ளும் வகையில் எக்கட்சியின் பணியும் அமையாததால், விருப்பமின்றி, எதிர்நிலை அணுகுமுறையில் மக்கள் வாக்களிக்கின்றனர். சிலக் கட்சிகள் மீது நாட்டம் இருப்பினும் வாக்கு சிதறக்கூடாது என்று எண்ணியும் வெற்றிபெறும் என எதிர்நோக்கும் கட்சியில் வாக்களிக்க விரும்பியும், மக்கள் அளிக்கும் வாக்குகளே ஆட்சியை முடிவு செய்கின்றன.
  இப்பொழுது நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் – தமிழ்நாட்டில்  வரும் ஏப்பிரல் 24,2014 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் – இதே போன்ற போக்குதான் முதன்மை வகிக்கும் என்பதில் ஐயமில்லை. என்றாலும் எதிர்நிலை வாக்களித்துச் சலித்துப் போன மக்கள் வேறு எவ்வாறு வாக்களிப்பது என்பதில் குழப்பநிலையில் உள்ளனர் என்பதும் உண்மைதான். எனினும் 1967  இல் விரட்டியடிக்கப்பட்ட, ஊழல் திலகம், இந்தியத் துணைக்கண்டத்துத் தேசிய இனங்களை ஒடுக்கும் அடக்குமுறை நாயகம், காங்கிரசுக் கட்சி இந்தியா, முழுவதும் விரட்டி யடிக்கப்பட வேண்டும் என்பதே உண்மை. இவற்றிற்கு அப்பால், தமிழ்நாட்டில் காவிரியாறு, பெரியாறு முதலான நீர்ச்சிக்கல்களில் காட்டும் பாகுபாடு, தமிழக மீனவர்கள் நலனில் சிறிதும் கருத்து செலுத்தாததுடன், நாளும் கொல்லும் சிங்களத்திற்குத் துணை நிற்றல், எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ் ஈழத்தில் பன்னூறாயிரத் தமிழர்களைக் கொன்றொழித்த கொடுஞ்செயல் போன்ற தமிழர் நலனுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பதால், காங்கிரசுக் கட்சி எல்லாத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதே பெரும்பாலோர் விருப்பம். எனவே, யார் வந்தாலும், காங்கிரசு அடியோடு தோற்கடிக்கப்படுவது பிறருக்கும் பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
  இனப்படுகொலைகளை இரக்கமின்றி நடத்திவிட்டு – தமிழ் நிலத்தைச் சுடுகாடாகவும் புதைகாடாகவும் ஆக்கிவிட்டு – உலக அரங்கில் நாடகமாடும் சிங்கள ஈன அரசிற்கு உதவுவதற்காக நலத்திட்ட உதவி என்ற போர்வையில் ஆட்டம் போடும் காங்கிரசு, வெட்கமும் மனச்சான்றும் இன்றி  அங்கே தமிழர்களுக்கு உதவி செய்து வருவதாகப் பொய்யுரை புகன்று வருகிறது. படுகொலையாளி களுக்கும் துணை நின்ற உடன்  கொலையாளிகளுக்கும் பாடம் புகட்ட,  காங்கிரசு அகற்றப்பட வேண்டும்! துரத்தப்படவேண்டும்! புதைக்கப்பட வேண்டும்! எனவே, தமிழ் மக்களும் தமிழ்நாட்டிலுள்ள பிற மக்களும் அக்கட்சி நீங்கலான எதற்கு வாக்களித்தாலும் பாராட்டத் தகுந்தவர்களே!
 வள்ளலார்  இராமலிங்க அடிகள் வழியில், கருணையிலா ஆட்சி கடுகி ஒழிய” வேண்டும் எனில், அவர்  அஞ்சிய
நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
 நண்ணிடார் தமையரை நாளுங்
 கெடுநிலை நினைக்குஞ் சிற்றதி காரக்
 கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
 படுநிலை யவரை”   
அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்.
  எனவே, பன்னூறாயிரவர் படுகொலைகளுக்குக் காரணமாகும் வகையில்,  நேரடியாகவும் மறைமுகமாகவும் பாராமுகமாகவும் செயல்பட்டவர் யாராயினும், வீட்டு மக்கள் நலன்களுக்காக நாட்டுமக்கள் நலன்களைக் காவு கொடுத்தவர்கள் எவராயினும் அவர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான்    மக்களுக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டு அந்த மக்களிடமே வாக்கு கேட்க இயலும் என்ற துணிவு யாருக்கும் வாராது.
 ‘பேய்’க்கு வாக்களிக்கவில்லை என்ற ஒருமித்த முடிவிற்கு வந்தாலும் வாக்குரிமையை உரியவாறு பயன்படுத்த வேண்டும் அல்லவா? அது குறித்தும் நாம் கருத வேண்டும்.
கட்சி ஈடுபாடு கொண்ட வாக்காளர்களில் பெரும்பான்மையர் தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கே வாக்களிப்பர் என்பதில் ஐயமில்லை.
  கட்சியின் செயல்பாடு பிடிக்காத நேரத்தில் வாக்களிப்பைப் புறக்கணிப்பார்களே தவிர, வேறுகட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இன்றைய கட்சிகள் என்பன, அன்றைய  சமய(மத) வடிவங்களே! எனவே, சமய வெறி இன்றைக்குக் கட்சி வெறியாக மாறி உள்ளது. (பழைய கட்சிகளான சமய வெறிகளும் இருக்கத்தான் செய்கின்றன.) தொண்டர்கள் கட்சிகளுக்குக் கொத்தடிமைகளாக உள்ளனர். (எனவேதான், ஓர் அமைப்பு பிளவுபடும்பொழுது பெரும்பான்மையர் தாய் அமைப்பிலேயே இருந்து விடுகின்றனர். மக்கள் திலகம் புரட்சித்தலைவராக மாறியதன் காரணம் அவரது நேயர்கள் திரண்டு அவருடன் இணைந்ததுதான்.) தங்களது உணர்வுகளுக்கு மாறாகத் தலைமை நடந்து கொண்டாலும் அமைதி காக்கும் இவர்களாலேயே தலைவர்கள் தம் விருப்பங்களுக்கேற்ப நடந்து கொண்டு தொண்டர்கள் விருப்பத்தின்படி நடப்பதாகக் கதை அளக்கின்றனர். பல மணி நேரம் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தும் கட்சிகளால் இனப் படுகொலைக்கு எதிராகச் சில நிமைய ஊர்வலங்கள்கூட நடத்தப்பெறாததன் காரணம் தலைமையே! எனவே, கட்சித் தொண்டர்கள்  தத்தம் உணர்வுகளைத் தலைமைக்குத் தெரிவிக்கத் தயங்கக்கூடாது. அதற்கு மாறாகச் செயல்பட்டால் எதிர்க்கத் தயங்கமாட்டோம் என்பதையும் உணர்த்த வேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தலைமைகள் மக்கள் நலனுக்காகப் பாடுபடும். மனச்சான்றின்படிச் சிந்தித்து வாக்களிக்குமாறு கட்சித் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்! ஆதலால், பிற வாக்காளர்கள்குறித்து நாம் பார்ப்போம்!
  பா.ச.க. ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சமயம்’ என அழிவுப்பாதையில் நாட்டை இழுத்துச் செல்லும் கட்சி. எனவே, அதற்கான ஆதரவு என்பது நம் தலையில் நாமே மண்ணை இட்டுக் கொள்வதை ஒக்கும். ஆனால், இந்திய அளவில் காங்.கிற்கு மாற்றாக அதுதான் நிற்கின்றது. புதிய ஏழைமக்கள் கட்சி என்று பெயர் சூட்டிக் கொள்ளும் ஆம்ஆத்மியும் தமிழர் வரலாறு அறியாமையால், நமக்கு எதிரானதாகத்தான் செயல்படும். தங்களுக்குத் தாங்களே மூன்றாம்அணி என அவ்வப்பொழுது சொல்லிக் கொள்ளும்  கட்சிகள் சில அவ்வாறு முழு மனத்துடன் செயல்படவில்லை. எனவே, பிற மாநிலங்களில் பா.ச.க. வந்து விட்டுப் போகட்டும்! அதன் மூக்கணாங் கயிறு தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்களிடம் இருக்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டில் அதற்கு இடம் தரக்கூடாது. எனினும் அதனுடன் இணைந்துள்ள கட்சிகளின் தமிழ்  நல வேட்பாளர்களை நாம் தெரிவு செய்வதே நமக்கு நன்மையாகும்.
 வைகோ தலைமையிலான ம.தி.மு.க., தமிழர் நலனுக்காகக் குரல் கொடுத்து வருவது. அது மட்டும்அல்ல, உலகத் தமிழர் நலன்களுக்காகவும், குறிப்பாக ஈழத் தமிழர் நலன்களுக்காகவும் தொடர்ந்து போராடி வருவது. அக்கட்சி பெருமளவான வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தமிழர் நலன்களில் தமிழ் மக்கள் கவனம் செலுத்தி வருவதைப்  பிற அரசியல்வாதிகள் புரிந்து கொள்வர். அக்கட்சி தோற்கடிக்கப்பட்டால், உலகெங்கும் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் அஞ்சத் தேவையில்லை என மத்திய அரசில் உள்ளோர் தமிழர் நலன்களைப் புறக்கணிக்கும் போக்கும் எதிராகச் செயல்படும் இழிசெயலும்  தொடரும். எனவே,  ஈழத்தமிழர்களின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில், அமைய உள்ள மத்திய  ஆட்சி, இனப்படுகொலை புரிந்தவர்கள் தண்டனைகளை விரைவில்பெற உலக அரங்கில் நடவடிக்கை எடுக்கவும், தமி்ழ் ஈழத்தை ஏற்று அதனை மலரச் செய்யவும் ஆவன செய்வர்.
  சிலர் வைகோவைத் தெலுங்கர் எனக் கூறி எதிராகக் கூறி வருகின்றனர். நாயுடு, நாயக்கர்,  ஆகியோர், தெலுங்கர் ஆட்சியில்  ஆட்சிப் பொறுப்பில் உடனிருந்தமையால் தெலுங்கு பேசியவர்களே! அவர்கள் தெலுங்கு தெலுங்கே அல்ல!  ஆங்கிலேய ஆட்சியால் ஆங்கிலேயம் பேசிய/பேசும் நம்மவர் ஆங்கிலயேர் ஆகிவிடுவார்களா? அதுபோல்தான் இதுவும்.   வேறொரு வகையிலும் சிந்திக்க வேண்டும். தமிழனாகப் பிறந்து தமிழர்க்கு எதிராகச் செயல்படுவோரை விட, உண்மையில் தமிழர் நலனில் கருத்து செலுத்துவோர்தானே தமிழராவர். மேலும்,   இப்பொழுது நடைபெறுவது  தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அல்ல! நாடாளுமன்றத் தேர்தல்தான்! மத்திய ஆட்சியில் தமிழர் நலன் நாடும் தலைவரும் அவரது கட்சியினரும் பங்கேற்பதுதான் தமிழர்க்கு நிலையான நன்மைகளைத் தரும்.  எனவே, அவர்  பிறப்பால் யார் என  ஆராயாமல், எண்ணத்தாலும் செயலாலும் தமிழராகச் செயல்படும் அவரைப் பெருமளவு வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்வது விருதுநகர் தொகுதி வாக்காளர்கள் கடமையாகும்.
  அஇஅதிமுக-வின் பழைய நிலைப்பாடு நமக்குத் தேவையில்லை. இன்றைக்கு ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது வரவேற்கத்தக்கது. “சிங்கள இலங்கை நம் நட்பு நாடல்ல” என முரசறைந்துள்ளதும் இனப்படு கொலைகாரர்கள் தண்டிக்கக் குரல் கொடுப்பதும், தமிழ் ஈழம் அமைக்கவும் தொடர்பானவற்றிலும் சட்ட மன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதும் இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகப் பாடுபடுவதும் தமிழர்களின் எண்ணம்தான் என்பது மெய்யெனில் அக்கட்சியும் வெற்றியைப் பெற்றாக வேண்டும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தலைமையமைச்சர் கனவைப் பரப்பியதும், சுருதி குறைந்து, வெவ்வேறுவகையாகப் பேசியதும் தலமையமைச்சர் ஆனால், பிற அமைச்சர்களும் முதலமைச்சர்களும் தூதுவர்களும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தால்தான் நல்லுறவு நிலவும் என்ற பேச்சிற்கு ஆளானதும், அக்கட்சி பெற வேண்டிய வெற்றியைச் சறுக்கச் செய்துவிட்டது. இக்கட்சி எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றால், தமிழ்வழிக்கல்விக்கு எதிரான அரசின் போக்கு, தமிழ் வழிபாட்டிற்கு எதிரான அரசின் செயல்பாடுஈழத்தமிழர்களைச் சிறைக்கொட்டடிபோன்ற முகாம்களில் அடைத்து வைத்திருப்பது முதலான  தமிழ்எதிர்ப்போக்கிற்கும் ஆதரவு தெரிவித்ததாகிவிடும். எனவே, இக்கட்சியின் தமிழ்நலச் செயல்களுக்குப் பச்சைக்கொடி காட்டவும், தமிழ்ப்பகைச் செயல்களுக்குச் செங்கொடி  காட்டவும்  பிற கட்சிகளில் தமிழ்நலவேட்பாளர்கள் போட்டியிடாத இடங்களில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.  அஇஅதிமுகவின் எதிர் வாக்கு பிரிவதால் பெருமளவு வெற்றி பெற வாய்ப்புள்ளது என ஒரு சாராரும், பன்முனைப்போட்டியால், 50%இற்கு மேல் வெற்றி பெற இயலாது என மறு சாராரும் கூறி வருகின்றனர்.  அஇஅதிமுக வெற்றி பெற்றால் மத்திய அரசில் முதன்மைப் பங்கு வகிக்கும் என எதிர்பார்ப்பது நடந்தாலும் நல்லதுதான். ஆனால், மூன்றாவது அணி வெற்றி பெற்றால்மட்டுமே அதற்கு வாய்ப்பு உள்ளது.
  பா.ச.க. போட்டியிடும் இடங்களில் அஇஅதிமுக வெற்றி வெறுவதே நல்லது. என்றாலும் தென்சென்னையில் தி.மு.க. சார்பில் தி.கே.சீ.இளங்கோவன் நிற்கிறார். ஆட்சியில் இருக்கும் பொழுது இந்தியனாகவும் இல்லாத பொழுது தமிழனாகவும் காட்டிக்கொள்ளும் தலைமையில் செயல்படுபவர்; என்றாலும் தி.கே.சீ.இளங்கோவன் முதன்முதலில்  சிங்களப் படு கொலைகளுக்கு எதிராக  நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர். இந்தியாவின் குற்றப்பங்களிப்பைச் சரியாகக் கண்டிக்கத் தவறி விட்டிருந்தாலும் இவரது உரை உலக அளவில் கவனிப்பிற்கு உள்ளானது.  இப்போதைய தேர்தலில் மு.க.தாலின் காங்.கிற்கு எதிரான விடாப்பிடியான போக்கைக் கொண்டிருப்பது பாராட்டிற்குரியது. தேர்தலுக்குப் பின்னரும் இப்போக்கு எச்சூழலிலும் மாறுதல் உறக்கூடாது.  இதனடிப்படையில் பா.ச.க.விற்கு எதிராக இங்கே மட்டும் திமுக வெற்றி பெறுவது நல்லதுதான். அந்த வகையில் அவர்  வெற்றி பெறுவது – தி.மு.க. எதிர்க்கட்சியாக அமையப்போவதால் – தமிழர் நலனுக்காக உரத்துக்  குரல் கொடுக்க உதவும்.  அதுபோல், நாகர்கோயிலில் யார் வரலாம் என்பது  குறித்துப் பின்னர் காண்போம்!
  விசயகாந்தும் இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில்  அரசின் கெடுபிடி காட்டப்படாத பொழுது அவர்களுக்கு உதவியர்தான். தம் பிள்ளைக்கு,  பிரபாகரன் எனப் பெயர் சூட்டியும் திரைப்படம் வாயிலாகவும் தன் தமிழ் உள்ளத்தை வெளிப்படுத்தியவர். இவர் கட்சியில் தமிழர் நலன் நாடுவோர் வெற்றி பெறுவது இக்கட்சியின் தமிழ்நலச்செயல்பாட்டைப் பெருக்கும். இக்கட்சி காங்.உடன்  கூட்டணி வைக்க முயன்ற கட்சி என்ற அளவில்  முழு வெற்றியைப் பெறக் கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஊடகங்களில் தமிழ் நிலவப்பாடுபடுவது பா.ம.க. மட்டும்தான். எனவே, இதற்காகவும்  மதுவிலக்கிற்கு எதிரான போராட்டத்திற்காகவும்  வெற்றிச் சுவையைப் பெற வேண்டிய கட்சியாக உள்ளது.  மூர்த்தி, அன்புமணி ஆகியோர், அமைச்சுப் பொறுப்பில் இருந்து அருந்தொண்டாற்றியவர்கள்.  எனவே,  பாமகவில் மக்கள் நலன்நாடும் தமிழன்பர்கள் வெற்றி பெறுவது நமக்கு நல்லது.
பொதுவுடைமைக் கட்சிகளும் ஓரங்கட்டப்படவேண்டியவையே. இந்தியப் பொதுவுடைமைக்கட்சி அவ்வப்பொழுது ஈழத்தமிழர் நலன்களுக்காகக் குரல் கொடுத்தாலும் மார்க்சியப் பொதுவுடைமை என்பது தமிழ்ப்பகைக்கட்சி என்பதே உலகறிந்த உண்மை. இக்கட்சிகளுக்கு உண்மையிலேயே ஈழத்தமிழர் நலனில் ஈடுபாடு இருப்பின் உலகப்பொதுவுடைமை நாடுகளைச் சிங்களத்திற்கு எதிராகத்திருப்பி விட்டிருக்கலாம் அல்லவா? அவ்வாறில்லாமல் அந்நாடுகளின் சிங்கள ஆதரவிற்கேற்ற வகையில் ஆட்டம் போடும் இவை தோல்வியுறுவதே நாட்டிற்கு நல்லது.
  பிற கட்சிகளும் வாக்குகளை அறுவடை செய்வதில் காட்டும் கவனத்தைத் தமிழர் நலனில் காட்டுவன அல்ல. வடக்கில் எந்தக் கட்சி தோன்றினாலும் அதன் கிளை முதலில் தமிழ்நாட்டில் அமையும் போக்கை நிறுத்த வேண்டும். மாறாகத் தமிழகக்  கட்சிகளின் கிளைகள்,  பிற மாநிலங்களில் வேரூன்ற வேண்டும். ஏழை மக்கள் கட்சியில் உதயகுமார் ஒருவர்தான் வெற்றிக்கனியைச் சுவைக்க வேண்டியவராக உள்ளார். வடநாட்டுக்கட்சியில் தமிழர் ஆதரவுப் போக்கை உண்டாக்குவார் என்ற நம்பிக்கையில் அவரை வெற்றி பெறச்  செய்வது அவரது இடிந்த கரைப் போராட்டங்களுக்கான பரிசாக அமையும். அவர் இன்னும் முனைப்பாகப் பாடுபட்டால்தான் வெற்றி பெறுவார்.
தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமை கிடைக்கும் வகையில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பெருகும்வரை யாருக்கேனும் நாம் வாக்களித்துத்தான் ஆக வேண்டும். தேர்தல் புறக்கணிப்பு என்பது தமிழ்ப்பகைவர் ஆட்சியேறவே உதவும். எனவே,
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (திருக்குறள் 517) என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாக்கே நமக்கு வழிகாட்டி!
  இங்குள்ள தமிழ் மக்களும் ஈழத் தமிழர்களும் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருக்கு  நயன்மை -  நீதி – கிடைக்க வேண்டுமெனில் காங்கிரசு என்னும் பேராயக் கட்சி அடியோடு மண்ணைக் கவ்வ வேண்டும்.
  திமுகவின் கடந்த காலப்பணிகள் சிறப்பாக இருந்திருப்பினும் அதன் தமிழ்ப் பணிகள்தாம் பிறரின் தமிழ்ப்பணிகளுக்கு  வழிகாட்டியாக இருந்தது உணமையாய் இருப்பினும்,  படுகொலைப் பங்களிப்புகளாலும் போராட்ட நாடகங்களாலும் அதுவும்  தோற்கடிக்கப்பட வேண்டியதே!
  செயற்கையாக உருவாக்கப்படும் அலைமாயையால்,  தமிழ் மக்களின் வரவேற்பிற்கும் ஆளானதுபோல் காட்டப்படும் பாசகவும் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்படவேண்டியதே! சிறுபான்மையர் நலன் என்ற போர்வையில் உலவும், பிற சமய–மத-க் கட்சிகளும் தோல்விப்பாதையில் ஓட்டப்படவேண்டியனவே!
  இந்திய அரசு தமிழக மீனவர் நலனினும் ஈழத்தமிழர் நலனிலும் பிற தமிழ்நாட்டு நலன்களிலும் கருத்து செலுத்த வேண்டுமெனில், மதிமுக வெற்றி பெற வேண்டும்!
அஇஅதிமுகவின் இப்போதைய தமிழர் நலச் செயல்பாடுகளுக்காக அதுவும் பாசக – வெற்றி பெற்றால், தமிழ்நாட்டு நலனில் கருத்துசெலுத்தச் செய்வதற்காக அதன்- கூட்டணியில் உள்ள கட்சிகளும் நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் தமிழ், தமிழர் நலன் நாடும் வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்!
வெல்க தமிழ்! ஓங்குக தமிழர் நலன்! மலர்க மனித நேயம்!
 -          இலக்குவனார் திருவள்ளுவன்
 இதழுரை
சித்திரை 7, 2045 / ஏப்பிரல் 20, 2014
AkaramuthalaHeader

Monday, April 7, 2014

இருபால் இளைஞர்களே! களம் புகுவீர்!

இருபால் இளைஞர்களே! களம் புகுவீர்!

election01
  நிகழும் சித்திரை 11, ஏப்பிரல் 24 அன்று நாடாளுமன்றத்தேர்தலுக்கான வாக்குப் பதவி நடைபெறுகிறது. தமி்ழ் மக்களுக்கு எதிரானவர்களுக்குப் பாடம் புகட்டவும், தமிழ்நாட்டிலாவது தமிழ் வாழ வகை செய்வோருக்கு வாக்களிக்கவும் உரிய களமாக இதைக் கருத வேண்டும்.  அரசியல் ஊழல் கறை படியாத இருபால் இளைஞர்களும் மாணாக்கர்களும் தேர்தலில் முதல்முறை வாக்களிப்பவர்களும்  முயன்றால்  தவறான  பாதையில் செல்லும் நாட்டின் போக்கைத் திருப்ப இயலும். அதற்காக அவர்கள் முன் இரு  வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைச் செயல்படுத்தினால் போதும்.

முதல் வழி தேர்தல் பரப்புரை
பின்வரும் பொருண்மைகளில் உறுதி மொழி அளிப்பவருக்கே வாக்களிக்க வேண்டும் எனத் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு பகுதியிலும் உள்ளவர்கள் தத்தம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டாலே போதுமானது.
 election07
1)      தொடக்கநிலையில் இருந்து ஆய்வு நிலை வரையிலும் மருத்துவக்கல்வி, பொறியியல் கல்வி முதலான தொழிற்கல்வி முழுமையும் எவ்வகைக் கட்டணமின்றியே அளிக்கப்பட வேண்டும்.

2)      அனைத்து நிலைக் கல்வியகங்களிலும் தமிழ் மட்டுமே கல்வி மொழியாக நடைமுறைப்டுத்தப்பட வேண்டும். இதற்கு உடன்படாவிடில் மத்திய அரசின் அல்லது இதன் சார்பிலான கல்வியகங்கள் இயங்கத் தடை செய்ய்ப்பட வேண்டும்.

3)      அனைத்துப்பள்ளிகளிலும் தமிழ்ப்பாடம் கட்டாய முதல் நிலையில் இருத்தல் வேண்டும்.thamizhmozhi_thulanguka

4)      குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் பிறகு  பிற மொழிப்பாடங்களை எடுத்துத் தேர்ச்சி பெறும்  வாய்ப்பு தடை செய்யப்பட வேண்டும்.

5)      ஆங்கிலம் 6 ஆம் வகுப்பிலிருந்து கற்பிக்கப்பட்டால் போதுமானது. 

6)      9 ஆம் வகுப்பில் இருந்து பிற மொழிகளை விரும்புவோர் கற்க வாய்ப்பளித்தால் போதுமானது.
 election-education09
7)      பன்னாட்டுப் பள்ளியாக இருந்தாலும் படைத்துறைப்பள்ளியாக இருந்தாலும் தமிழ்வழிக் கல்வியை அளித்தல் வேண்டும்.


8)      மொழிச்சிறுபான்மையர் தங்கள் மொழியைக் கற்க விரும்பினால், தாய்மொழிக்கான சான்றினை அளிக்க வேண்டும்.

9)      மொழிச்சிறுபான்மையர் எத்தனை விழுக்காட்டில் உள்ளனரோ அந்த எண்ணிக்கைக்கு உட்பட்டுத்தான் மொழிச் சிறுபான்மை யருக்கான கல்வியகங்கள் இருக்க வேண்டும்.
 election-education08

10)   இட ஒதுக்கீட்டுச் சலுகை, தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும். பிற மொழியினர் பயன்படுத்த வாய்ப்பளிக்கக் கூடாது. பிற மொழியினர் தத்தம் அமைப்புகள் மூலம் இவர்களுக்கு உதவிகள் அளிக்கலாம்.

11)   இப்போதைய தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணமில்லாக் கல்வி அளிக்க முன்வரவேண்டும்.  அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

12)   மாணாக்கர்களுக்குக் கல்வி உதவித் தொகைகள் உரிய காலங்களில் தரப்படுவதில்லை. முழுமையாகவும் அளிக்கப்படுவதில்லை. அனைவருக்கும்  கட்டாயக் கட்டணமில்லாக் கல்வி என்பது நடைமுறைக்கு வந்தவிட்டால் இது தேவையிருக்காது.  இருப்பினும் இத்தகைய தேவை உள்ள சூழல்களில் பள்ளியில் சேரும்பொழுதே தகுதி உள்ளவர்களுக்கு  உதவித்தொகை வழங்கப்படுவதை உறுதி செய்து விட்டு எவ்வகைக் கட்டணமும்  பெறாமல், உரிய தொகையை  கல்வி நிறுவனமே பெற ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
 election-education11
13)   கல்விக்கடனுக்கும் தேவையில்லாச் சூழல் வர வேண்டும். இருப்பினும் அத்தகைய நேர்வுகள் இருப்பின், ஆண்டுத் தொடக்கத்தில் முதலில் பணம் கட்ட வேண்டும் என்ற கடும் நடைமுறையை நிறுத்தி விட்டு, மாணாக்கருக்குத் தகுதி இருப்பின் நிறுவனமே கடனை எதிர்நோக்கி மாணாக்கரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 14)   துறைதோறும் தமிழில் நூல்கள் பெருக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 15)   தமிழக அரசு அலுவலகம்,பிற மாநில அலுவலகம், மத்திய அரசு அலுவலகம், தனியார்அலுவலகம், பன்னாட்டு நிறுவன அலுவலகம், அயலக அலுவலகம் என்ற பாகுபாடின்றித் தமிழ்நாட்டில் உள்ள  எல்லா அலுவலகங்களிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்.
 16)   இப்போது பணியாற்றுவர்களுக்குக்  குறைந்த கால  அளவு வாய்ப்பளித்துத் தமிழில் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும். இனிமேல் தமிழறிந்தவர்களை மட்டுமே யாராயினும் தமிழ்நாட்டில் பணியமர்த்த வேண்டும். எனினும் மாறுதல் போன்ற காரணங்களால் தமிழ்நாட்டிற்குப் பணியாற்ற வருபவர்களுக்கு ஈராண்டு வாய்ப்பு அளித்து உரிய தமிழ்த் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
 17)   தமிழக அரசின் தலைமைப் பதவிகளிலும் அடுத்த நிலைப் பதவிகளிலும் தமிழறிந்த தமிழரையே அமர்த்த வேண்டும்.

18)   தமிழ்நாட்டிலுள்ள  தனியார் நிறுவனங்களிலும் பிற நிறுவனங்களிலும் 75% இற்குக்  குறையாமல்  தமிழ் மக்கள் பணியாற்றும் வகையில் பணியமர்த்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

19)   தமிழ்க்கொலை புரியும், திரைப்பட நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், இதழ்கள், இணையத் தளங்கள் முதலான அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும். மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
 20)   தமிழில் அயலெழுத்துகளையும் அயற் சொற்களையும் புகுத்துவோர் தண்டிக்கப்பட வேண்டும்.
 21)   மத்திய அரசு திட்டங்கள் என்ற பெயரில் இந்தி அல்லது சமசுகிருதப் பெயர்களில்  உள்ள வற்றின் பெயர்களைத் தமிழில் அறிவிக்க வேண்டும். இனி இங்கு பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் யாவும் தமிழ்ப் பெயர்களில்தான் இருக்க வேண்டும்.
 22)   தமிழின் செம்மொழித் தன்மையை ஏற்பதுபோல் ஏற்று விட்டு  மளிகைக்கடைப் பட்டியல்போல்பிற மொழிகளைச் சேர்க்கும் அவலம் உள்ளது. எனவே, காலத்தால் மூத்த தமிழின் சிறப்பை உலக மக்கள் அறியும் வகையில் எல்லா நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
 23)   மது விலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.  திரைப்படங்கள் முதலானவற்றில்election06 மது தொடர்பான காட்சிகள் இடம் பெறுவதற்கும் தடை செய்ய வேண்டும்.
 24)   கடலோரக் காவல் அணியைத் தமிழக அரசே அமை்த்து நம் நாட்டு மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும். சிங்களப்படை முதலான பிற படையினர்  நம் நாட்டு மீனவர்களைத் தாக்கினால், அவர்களுக்கு எதிராகக் கடலோரக் காவல் அணியினர்  எதிர்த்தாக்குதல் மேற்கொள்ள வேண்டும். மீனவர்களைத் தாக்கியோரைத் தளையிட்டு இழுத்து வந்து நீதி மன்றம் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்.
  election-fishermen0125)   கச்சத்தீவை அறமுறையில்  மீட்க இயலாவிட்டால் படைமுறையில் மீட்க வேண்டும்.
 26)   ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம் என்ற பெயரிலான கொட்டடிகளில் அடைத்து வைப்பதற்கு முற்றுப்புள்ளி இட்டு, அவர்களைப் பிறர்போல் இயலபாக வாழ வகை செய்ய வேண்டும்.
 27)   உலக நாடுகள் தமிழ் ஈழத்திற்கு ஏற்பு அளிக்கவும் இனப்படுகொலையாளிகளைத் தண்டிக்கவும் பரப்புரை குழு ஒன்றை அமைத்து உலகெங்கும் சென்று இக்குழுவினர் தனி உரிமையுடைய தமிழ் ஈழ அரசு அமைக்க ஆதரவைப் பெற வேண்டும்.
 28)   இதன் தொடர்ச்சியாக உலக நாடுகளின் ஏற்புடன் 01.01.1600 இல் தமிழர் வாழ்ந்த பகுதிகள்  தமிழ் ஈழம் என அறிவிக்கப்பட வேண்டும்.
 29)   தமிழீழப்படுகொலைக்குக் காரணமான இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலான படைத்துறையினர் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றில் இருந்து தமிழக மீனவர் குடும்பத்தினருக்கும் தமிழ் ஈழ அரசிற்கும் இழப்பீடு தர வேண்டும்.
 30)   சாலைகள்அரசின் கட்டடங்கள், முதலான யாவற்றிற்கும் காப்புறுதிக் காலம் அறிவிக்கப்பட வேண்டும். அதற்குள் இவை சீர்கேடடைந்தால் பொறுப்பில் இருந்த அதிகாரிகள், ஒப்பந்தர்கள், துறை அமைச்சர்களின் சொந்தச் செலவில்  சீர் செய்யப்பட வகை செய்ய வேண்டும். தொடர்பானவர்கள் இறந்திருந்தால், அவர்களின் மரபுரிமையரிடம் இருந்து செலவுத் தொகையைப் பெற வேண்டும்.
 31)   தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் மரபுரிமையருக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
 Muthukumaran03chinnasami01
32)   உணவுமருந்து முதலானவற்றில் கலப்படம் இருப்பின் இவற்றைத் தடுக்கும் பொறுப்பை மக்களிடம் சுமத்திக் கலப்படம் இருக்க வழிவகை செய்யக்கூடாது. விற்பனையாளர்கள், முகவர்கள், உற்பத்தியாளர்கள் தண்டிக்கப்படும் வகையில் சட்டம் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.

33)   உணவுக்கடைகள், மருந்துக்கடைகள், துணிக்கடைகள் முதலான வற்றில்  விலைக்கட்டுப்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும்.

34)   அந்தந்தப் பகுதி சார்ந்த மின் நிறுவனங்கள் அமைத்து மின் சேமிப்பைப் பெருக்க வேண்டும்.

35)  கதிரொளி மின்சாரம் வீடுகள், அலுவலகங்கள் முதலான கட்டடங்கள், ஊர்திகள்  முதலானவற்றில்   பயன்படுத்தும் வகையில்  அவற்றின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

36)   ஊர்ப்பகுதி, ஊராட்சி ஒன்றியப்  பகுதி ஆகியவற்றில் அந்தந்தச் சூழலுக்கேற்ற தொழிலகங்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும்.

37) அனைவருக்கும் கட்டாய இலவசக் கட்டணமில்லா மருத்துவம் அளிக்க வேண்டும். செல்வர்களிடமிருந்து நன்கொடை பெற்றுக் கொள்ளலாம்.

38)   வருமான வரியை மத்திய அரசு நீக்க ஆவன செய்ய வேண்டும். இல்லையேல்இங்குள்ள வருமான வரி அலுவலகங்களை மூடச்செய்துஅத்துறை மூலம் சம்பளம், முதலான அனைத்துச் செலவினங்களையும் தமிழ்நாட்டில் இருந்து பெறும் வரிவருவாயில் கழித்து எஞ்சிய தொகையை அரசே செலுத்த வேண்டும். வருமான வரிக்கு மாற்றாகத் தமிழக அரசு அவரவர் செல்வ நிலைக்கேற்ற வகையில் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள் முதலான மக்களுக்குத் தேவையானவற்றை அமைத்துத் தர அல்லது இருப்பனவற்றின் புரவலராகச் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.

39)   இணைய வழிச் சான்றிதழ்கள் வழங்கும் பொழுது ஊழல் குறைகிறது. எனவே, அனைத்துவகைச் சான்றிதழ்களையும் இணைய  வழியில் எளிதில் வழங்கவும்அவற்றின் அச்சிட்ட படிகளை அஞ்சலில் உரியவருக்குக் கிடைக்கவும் வழி செய்ய வேண்டும்.

40)   அரசின் நலத்திட்ட உதவிகள் காலங்கடந்து வழங்கப்படுவதும் பல நேரங்களில் பெறும் உதவியை விட அளிக்கும் கையூட்டுகள் சேர்ந்து மிகுதியாக இருப்பதையும் காண முடிகிறது. எனவே, மிகக் குறைந்த கால இடைவெளிகளில் நலத்திட்ட உதவிகள் ஏற்கப்படவும் வழங்கப்படவும் ஆவன செய்ய வேண்டும்.

41)   நூலக வரி வீணாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.  மூன்று திங்களுக்கு ஒரு முறை தரமான நூல்கள் ஊழலின்றி வாங்கப்பட வேண்டும். நூலகங்கள் கணிணி மயமாக்கப்பட வேண்டும்.

42)   ஊர்கள் தோறும் மின்னூலகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
43)   தொகுதி நிதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் தொகுதியின் பெயர்தான் இருக்க வேண்டுமே தவிரதனியர் பெயர்கள் இருக்கக்கூடாது.

44)   அரசின் திட்டங்கள், வாழ்வோரின் பெயர்களில் அறிமுகப்படுத்தக்கூடாது. ஆள்வோர் பெயர்களில் அறிவித்து அவர்களின் படங்களை அரசின் செலவு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தில் விளம்பரப்படுத்தி விட்டுத் தேர்தல் காலத்தில் அவற்றை அழிக்கும் வகையில் மக்கள் வரிப்பணம் வீணாவது நிறுத்தப்பட வேண்டும். இது போன்ற சூழல் நேர்ந்தால் செலவினம் உரிய கட்சியிடமிருந்துபெறப்பபட  வேண்டும்.

45)   இடைத் தேர்தல் நடைபெறும்பொழுது உரிய தொகுதியின் மாவட்ட அமைச்சர் அல்லது அமைச்சர்கள் மட்டும் பங்கேற்கலாம்பிற அமைச்சரோ, முதலமைச்சரோ பங்பேற்பது தடை செய்யப்பட வேண்டும்.

46)   ஊழல் வழக்குகளும் தேர்தல் வழக்குகளும் ஓராண்டிற்குள் முடிக்கப்பட வேண்டும்.

   இவை போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உறுதி அளிப்போருக்கே வாக்களிக்கும்படி மக்களிடம் வலியுறுத்த வேண்டும். கட்சி வேட்பாளர்களாக இருந்தால், அத்தகைய உறுதியை அவர்கள் கட்சித் தலைமையிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்றும் வற்புறுத்த வேண்டும்.

  ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இயல்பாகவே திட்டங்கள் சிலவற்றை நிறைவேற்றத்தான் செய்வார்கள். அவற்றை அரும் பெருஞ்செயல்களாகக் கூறிக் கொண்டிராமல், எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கக் கூடிய, கல்வியிலும் நலவாழ்விலும் வேலை வாய்ப்புகளிலும் தொழில் துறைகளிலும்  சிறந்து விளங்கக்கூடிய நாட்டாகத் தமிழ்நாட்டை மாற்ற முயல்வோருக்கே வாக்களிக்க வேண்டும்.

  பொதுவான பரப்புரையை மேற்கொள்ளும் பொழுதே ஈழத்தில் தமிழின மக்களைப் படுகொலை செய்யச் சிங்கள நாட்டிற்கு உதவிய காங்கிரசு என்னும் பேராயக் கட்சிக்கு வாக்களிக்காமல் இருக்க மக்களிடம் வலியுறுத்த வேண்டும்.   நாம் அளிக்கும் வாக்கு அவர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும் என்பதை மனத்தில் நினைத்து அவர்களைத் தேர்தல் மூலம் தண்டிக்க வேண்டும்.

  தொகுதியில் போட்டியிடுவோரில் உண்மையான மக்கள் பற்றாளராகவும் மொழி, இனப் பற்றாளராகவும் நேர்மையாளராகவும்  இருக்கக்கூடியவர்களைக் கண்டறிந்து அவர்களை அடையாளம் காட்டலாம். எனினும் வாய்ப்பேச்சில் மயங்கிக் கொலைகாரருக்கும் கொள்ளைக்காரருக்கும் வாக்களிக்குமாறு செய்யக் கூடாது.

இரண்டாம் வழி நேரடியாகத் தேர்தலில் பங்கேற்பு

   இளைஞர்களே நேரடியாகத் தேர்தலில் பங்கேற்கலாம்.அனைத்துத் தொகுதிகளில் இயலாது என்றாலும் சில தொகுதிகளிலாவது போட்டியிட்டு விழிப்புணர்வை  உண்டாக்கலாம். சோனியா, இராகுல், அவர்களின் குடும்பத்தினர், அக்கட்சியில் மேல் மட்டத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிட்டு மனித நேயத்திற்கு எதிரான அவர்களின் படுகொலைச் செயல்களை மக்களிடம் அம்பலப்படுத்தலாம். அல்லது இவர்களின்  தொகுதிகளில் போட்டியிடச் சூழல் இடந் தரவில்லை யெனில், அங்கே போட்டியிடும் தனி வேட்பாளர்களில் மனித நேயம் மிக்க ஒருவரை  அடையாளம் கண்டு அவருக்கு ஆதரவாக  வாக்கு கேட்டுஇனப்படுகொலைகாரர்களைத் தோற்கடிக்கலாம். தேர்த்லில் வெற்றி கிடைக்காவிட்டாலும் இதனால் ஏற்படும் விழிப்புணர்வும் பெறப்போகும் வாக்குகளும் வெற்றிக்கு அடையாளமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைfeat-default

Sunday, March 9, 2014

ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும் -கருதத்தக்கன


ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும் -கருதத்தக்கன

தமிழ் இணையக் கல்விக்கழகம்
‘ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும்‘ – ஒருநாள் கருத்தரங்கம்
21.02.2045 / 05.03.2014
  சென்னை
கருத்தாளர் : இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்
  tnvirtualuniversity02
  மேற்குறித்த தலைப்பிலான த.இ.க. கருத்தரங்கத்திற்குக் கட்டுரை அளிப்பது தொடர்பாக இயக்குநருடன் தொடர்பு கொண்ட பொழுது யாரிடமும் கட்டுரை வாங்கவில்லை என்றும் உத்தமம், கணித்தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள், என்றும் பார்வையாளர்கள் அவற்றின் அடிப்படையில் கருத்துகளை வழங்கலாம் என்றும் தெரிவித்தார். அவ்வாறாயின் இந்நிகழ்வு சொற்பொழிவுக்கூட்டம் என்றுதான் கருதப்பட வேண்டும். அனைவரிடமும் கட்டுரை கேட்டு இதனைக் கருத்தரங்கமாகவே அமைத்திருக்கலாமே என்றதற்கு இதில் தொழில் நுட்ப வல்லுநர்கள் பேசுவார்கள் என்றார். தவறான கருத்துகள் இடம் பெறுவதால் அது குறித்து நானும் கருத்து தெரிவிக்க எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றேன். முனைவர் ப.அர.நக்கீரன், இரு பக்க அளவில் எழுதிக் கொண்டு வருமாறும்   மேடையில் அதைத் தெரிவிக்குமாறும் கூறினார்.  இந்த வாய்ப்பை அளித்த அவருக்கு நன்றி.
  இத்தகைய கருத்தரங்கம்  தேவையான ஒன்று என்பதாலும் த.இ.க. முயற்சி உரிய பயன் அளிக்க வேண்டும் என்பதாலும் நிகழ்ச்சி விவரத்தை நான் நடத்தும் இணைய இதழிலும் வலைப்பூக்களிலும் உறுப்பாக உள்ள குழுக்களிலும் பகிர்ந்தேன்.

  எனினும், நான்  பேசினால் மட்டும் போதாது; தமிழறிஞர்கள் கலந்து கொண்டால்தான் கருத்தரங்கம் முழுமையுறும் என்பதால் த.இ.க.தலைவருக்கு இது குறித்து மடல் அனுப்பினேன்.

   ஒருங்குறி நுட்பக்குழு தமிழ் வல்லுநர்களைக் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டியதன் அடிப்படையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. எனினும்  தமிழ் வல்லுநர்களைச் சிறப்பாக அழைக்காமல், உத்தமம் என்னும் தொழில்நுட்ப அமைப்பின் பொறுப்பாளர்களை அழைத்து நடத்தும் வகையில் இக்கூட்டம் அமைக்கப் பெற்றுள்ளது. பங்கேற்கும் தமிழார்வலர்கள் அல்லது தமிழறிஞர்கள் கருத்து தெரிவிக்கலாம் எனினும், முதன்மைப் பங்களிப்பு உத்தமப் பொறுப்பாளர்களுக்கே உரியது. உத்தமத்தைச்  சேர்ந்தவர்கள் வணிக நோக்கில் செயல்படுவதாகக் கருத்து நிலவுகிறது. எனினும்  அவர்கள் தமிழார்வத்துடன் அரும்பணி ஆற்றி வருபவர்களே! என்றாலும் சிறந்த பல் மருத்துவர்கள் என்பதற்காக அவர்களிடம் நாம் நம் கண்களை ஒப்படைக்க முடியாதல்லவா? எனவே, தமிழறிஞர்களைக்  கொண்டே குழு அமைத்துக்  கணிணி வல்லுநர்களும் கலந்து பேசி முடிவெடுப்பதே சாலவும்  நன்றாக அமையும்.

தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் வரிவடிவச் சிதைவில் நாட்டம் கொண்டது. எனவேதான் அரசின் கொள்கைக்கு மாறாக வரிவடிவச் சிதைவுபற்றிய காணொளியைப் பரப்பி வருகின்றனர்; கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தித் தமிழ் வரிவடிவத் தூய்மைக்கு எதிராகவும் செயல்படுகின்றனர். இத்தகைய அமைப்பு இது போன்ற குழுவை அமைத்து முடிவெடுப்பது என்பது தமிழ்நலத்திற்கு எதிராகவே அமையும் எனத் தமிழறிஞர்கள் அஞ்சுகின்றனர்.
எனக் குறிப்பிட்டு,
 தமிழ்ப்பல்கலைக்கழகம் மூலம் குழுவை அமைத்து தமிழ் இணையக்கல்விக் கழகம் இணைந்து செயல்படுமாறு கூட்டம் அமைக்க வேண்டியிருந்தேன்.
  த.இ.க. தலைவரான தகவல்தொழில்நுட்பச் செயலர் உடன் இயக்குநரை வரவழைத்துப் பேசியுள்ளார். தொழில்நுட்பம் சார்ந்த கூட்டம் எனத் தெரிவிக்கப்பட்டதால், ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை நிறுத்த வேண்டா என்றும் அதில் பங்கேற்று தேவைப்படும் மாற்றங்கள் குறித்த கருத்தைத் தெரிவிப்பின் அரசு தொடர் நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிய வந்தேன்.
  உரிய நாளில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்று இதன் பொருண்மை தொடர்பான என் கருத்துகளை த.இ.க.  தலைவரிடமும் இயக்குநரிடமும் அளித்தேன்.  கட்டுரையைப் பெற்ற இயக்குநர் முனைவர் ப.அர.நக்கீரன், முகம் மலர்ந்து எப்பொழுது வாசிக்கின்றீர்கள் என்றார். அமர்வுகளின் பொழுது என்  கருத்துகளைத் தெரிவிக்கின்றேன் என்றும் அமைதி ஆனந்தம்  பங்கேற்கும் அமர்வில் மட்டும் அப்பொருண்மை குறித்து வாசிப்பதாகவும் தெரிவித்தேன். அவரும் உடன்பட்டார்.
 thamizhinaiyakarutharangam01
முதல் அமர்வு:   ‘தமிழ் பின்னம் – பெயரிடல் மற்றும் வரிவடிவம்’ தொடர்பாக.ஒருங்கிணைப்பாளர் மணி மு.மணிவண்ணன் பேராளர்களின் கருத்துகளைச் சிறப்பாக விளக்கினார்;  பேராளர் முனைவர் சிரீஇரமணன் கட்டுரையை வாசித்து விளக்கியபின்பு, ஒருங்கிணைப்பாளர் தொலைபேசி வழியாக முனைவர் கணேசன் கருத்தையும் அவையில் அறியச் செய்தார்.
 முதலில் அமர்வுத்தலைப்பு  ‘தமிழ் பின்னம் – பெயரிடல்’  எனத் தெரிவித்து இருந்ததால், இதில் எவ்வகை மாற்றமும் செய்தல் கூடாது எனக்  குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் நிகழ்நிரல் தலைப்பில்  தமிழ்ப் பின்னத்தை ஒருங்குகுறி முறையில் ஆங்கில ஒலிபெயர்ப்பு, வரிவடிவம் தொடர்பாக என்று இருந்து அவ்வாறு பேச்சு அமைந்தது.  அத்துடன் பற்று, செலவு முதலான சொற்களின்  குறியீடுகளை ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டிய ஒலி பெயர்ப்பு வடிவமும் பேசப்பட்டது.
  இது குறித்து நான் கருத்து தெரிவிக்க எழுந்த போது, கணிணி நிரலர்கள்தாம்(Programmers) கருத்து  தெரிவிக்க வேண்டும் என்று மறுக்கப்பட்டேன். நிகழ்ச்சி தொடக்கத்திலேயே (என் மடலுக்கு மறுமொழி அளிப்பதுபோல்) இது தொழில்நுட்பம் தொடர்புடையது, அவர்கள்தான் உரையாற்ற கருத்து தெரிவிக்க இயலும் என்று தெரிவித்திருந்ததால், அதன் அடிப்படையில் மறுத்தார்.
  பங்கேற்பாளன் என்ற முறையில் கருத்து தெரிவிப்பது என் உரிமை, நான் என் கருத்தைத் தெரிவிக்கப் போகின்றேன் என்றதும் பெயரை எழுதித்தருமாறு வேண்டப்பட்டேன். அவ்வாறு எழுதித் தந்ததும் பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், த.இ.க. காணொளியில் நான் எழுந்து நிற்பதும், துண்டுச் சீ்ட்டில் பெயர் எழுதிக்கொண்டு இருப்பதும் உள்ளது. என் பேச்சு  வெட்டப்பட்டுள்ளது.
 tamil fractions

 
  தமிழ்ச் சொற்களை எவ்வாறு எழுத வேண்டும் என்பது குறித்து  கணிணி வல்லுநர்களும் விற்பனையாளர்களும் முடிவெடுக்க இயலாது; தமிழறிஞர்களின் கருத்துகளை அறிந்தே முடிவெடுக்க வேண்டும்  என்பதை வலியுறுத்தினேன். ஆங்கில ஒலி பெயர்ப்பு தமிழின் மரபிற்கேற்பவே அமைய வேண்டும் என்று தெரிவித்ததும் பிறரும் இதற்கேற்பவே கருத்துகளைத் தெரிவித்தனர். ஆங்கில ‘டி’ (t)  எழுத்தின்கீழ்ப் புள்ளி இட்டுக் குறிக்கப்படுவதில் அடிப்புள்ளியை எடுத்து விடலாம், சிறப்பு ழகரத்திற்குப் பயன்படுத்தும் ஆங்கில இசட் எச்  (zh)  எழுத்துகளை நீக்கி விடலாம் என்பன போன்ற சமசுகிருதரின் கருத்தை வலியுறுத்தும் தொழில் நுட்பரின் கருத்து ஏற்புடைத்தல்ல. எனவே, எதிர்ப்பு வந்தது. ஒருங்கிணைப்பாளரே எதிர்பார்க்காத அளவு கருத்தாடல் நீண்டது. முனைவர் மு.பொன்னவைக்கோ ஒலி பெயர்ப்பில் சீர்மையை அறிமுகப்படுத்தி அதன்பின்பு இதனைக் கருதலாம் என்னும் நல்ல முடிவைத் தெரிவித்தார்.
  இப்பொருண்மையிலான மாலை நேர நிறைவுக் கலந்துரையாடலும் சூடாகவே அமைந்தது.
‘ஆழாக்கு’ என்பதை ‘அளக்கு’ எனப் படிப்பதுபோல் (alakku) குறிப்பிடல் போன்று பல ஒலிபெயர்ப்புகளும் தமிழுக்கு முரணாக அமைந்தன.  பொருந்தாமையைக் குறிப்பிட்டு எதிர்த்தேன். தமிழன்பர்கள் கருத்து ஒத்ததாகத்தானே இருக்கும்! காந்தளகம் சச்சிதானந்தம், முனைவர் மா.பூங்குன்றன், முனைவர் கண்ணன் முதலானோர் கடுமையாகத்  தொடர்ந்து எதிர்த்தனர். உச்சரிப்பு முதன்மை அல்ல; தமிழ் மரபே முதன்மையானது என்றனர். பேரகராதித்துறை பற்றி மேடையில் தெரிவித்ததால், தாங்களும் அகராதித்துறையினர் என்பதால்தான் மறுப்பு தெரிவிப்பதாகத் தெரிவித்தனர். “எழுத்தொலிபெயர்ப்பிற்குக் குழு அமைக்கலாம் என்று காலையில் கூறிவிட்டு மாலையில் சீரற்ற ஒலிபெயர்ப்பை வலியுறுத்துவது ஏன்” என்றேன். உடன் முனைவர் மு.பொன்னவைக்கோ அவ்வாறு குழு அமைத்துவிட்டு  இது குறித்து முடிவெடுக்கலாம் என்றார்.  பொறி. மணி மு.மணிவண்ணனும்  ஏற்றார்.  அப்பொழுதே குழு முடிவெடுக்கப்படவேண்டும் என முனைவர் பொன்னவைக்கோ வலியுறுத்தி அதற்கேற்ப குழுவை அமைத்தனர்.  முனைவர் மு.பொன்னவைக்கோ, மணி மு. மணிவண்ணன், முனைவர் இரமணன்  ஆகியோருடன் முனைவர் மா. பூங்குன்றனும் காந்தளகம் சச்சிதானந்தன்  தெரிவித்ததற்கிணங்க, புனல் க.முருகையனும் முனைவர் செயதேவனும் குழுவில் சேர்க்கப்பட்டனர்.
 Ponnavaikko01
  மதுரைத்திட்டம் அமைப்பாளர் நூ.த.(உ)லோகசுந்தரம் “இப்போதைய பயன்பாட்டில் இல்லாத  எண் குறியீடுகளுக்காகத் தனி இடம் ஒதுக்கவேண்டியது தேவைதானா” என்ற வினாவை எழுப்பினார்.  பொறி மணி மு. மணிவண்ணன், முனைவர் இரமணன் தெரிவிப்பது போன்று  மீட்டுருவாக்கம் செய்வது தமிழுக்கு வளம் சேர்க்கும். எனவே,  கணிணிப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதே நன்று. ஆனால், பைசா, (இ)ராச, கெசம், சிரஞ்சீவி முதலிய அயற்சொற்களை நீக்கிவிட  வேண்டும். பிள்ளை என்பதற்கான குறியீடு தேவையில்லை. அதனை நீக்க வேண்டும். அட்டவணையில் ‘பௌர்ணமி’, ‘அமாவாசை’ என்பனவற்றை முறையே, வெள்ளுவா/முழு நிலவு, காருவா/இருள்நிலவு என ஏதேனும் தமிழ்ச்சொற்களால்தான் குறிக்க வேண்டும்.

  குறியீடுகளும் கூட்டெழுத்துகளும் இடம் பெறுவதாயின் முழுமையாக இடம் பெற வேண்டும்.
  முந்திரியின்  கீழ்வாயிலக்கங்களுக்கும் [முந்திரிக்குக் கீழ்முக்கால் (3/1,280), முந்திரிக்குக் கீழ் அரை (1/640), முந்திரிக்குக் கீழ் கால் (1 / 1280), முந்திரிக்குக் கீழ  அரைக்கால் (1/2,560), முந்திரிக்குக் கீழ  மாகாணி (1/5,120), முந்திரிக்குக்  கீழ் முந்திரி (1/1,02,400)]  இடம் பெற வேண்டும்.  தவறான ஒலி பெயர்ப்பால் வேலி என்னும் நீட்டல் அளவை (26,000 சதுரக்கோல்) வெளி எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இதுவே தொழில்நுட்பர் தாமே பின்பற்றும் ஒலி  பெயர்ப்பு முறையற்றது என்பதற்குச் சான்றாகும்.
  முகத்தல் அளவையில் செவிடு, உழக்கு, நாழி, மரக்கால், கலம் முதலான பிற அளவைகளும்  நிறுத்தல் அளவையில்  பணவெடை, கழஞ்சு, பலம் முதலான பிற அளவைகளும்,  அறியவரும் பிற அளவைக் குறியீடுகளும் குறிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அளவைக் குறியீடுகள் முழுமையடையும்.
  நிகழ்ச்சி முடிந்த பின்னர்ப் பலரும் உரையாடியபொழுது தெரிவித்ததுபோல், தமிழ்மொழிசார்ந்த முடிவிற்குத் தொழில்நுட்பர்கள் தேவையில்லை. தமிழின் தேவையை நிறைவேற்ற  வேண்டியதுதான் வல்லுநர்களான அவர்களின் கடமை.  தொழில் நுட்ப வாய்ப்பிற்கேற்ப தமிழ் தொடர்பான முடிவுகளை அமைத்திட இயலாது. எனவே, தமிழக அரசே, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில்தமிழறிஞர்கள் கொண்ட தமிழ் எழுத்துகளுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்புக்  குழு ஒன்றை அமர்த்தி அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும். இதுவே சாலச்சிறந்ததும் சரியான முறையுமாகும்.
 mani_mu_manivannan01
இரண்டாம், நான்காம் அமர்வுகள்
 தமிழ்அனைத்து வரிவடிவக் குறியமைப்பு – 16 ஓர்மி (TACE16) – செயல் திட்டம்: இப்பொருண்மையிலான இரண்டாம் அமர்வு முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையில் திரு அ.இளங்கோவன்  பேராளராகப் பங்கேற்க நடைபெற்றது. இருவரும் இது குறித்து விரிவாக விளக்கினர்.
 ஒருங்குகுறி எழுத்துருக்களும், விசைப்பலகையும் – பயன்பாடு  என்னும் தலைப்பிலான நான்கா்ம்அமர்வு பேரா.கிருட்டிணமூர்த்தி தலைமையில்  திரு இனியநேரு, திரு செயபாலன் பேராளர்களாகப் பங்கேற்க நடைபெற்றது.   பேரா. கிருட்டிணமூர்த்தி பயன்பாட்டுச் சிக்கல் குறித்து விளக்கி, இச்சிக்கல் இந்திய மொழிகளுக்குப்  பொதுவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். பின்னிருவர்  தேசியத்தகவல் மையத்தின் பணிகள் அடிப்படையில் பயன்பாட்டு நோக்கில் பேசினர்.

ஒத்த பொருள்கொண்ட இத்தலைப்புகள் பற்றிய கருத்துகள் வருமாறு :-

 எழுத்துரு தொடர்பான அட்டவணையில் உகர, ஊகாரக் குறியீடுகள் கிரந்த வடிவில் உள்ளன. தமிழ் உகரக் குறியீடு என்பது சிறு நெடுக்கைக் கோடும்,  ஊகாரக் குறியீடு என்பது சுழிக்கப்பட்ட சிறு நெடுக்கைக் கோடுமாகும். இக்கோடு எழுதும் வாகிற்கேற்ப  வெவ்வேறு வடிவமாகத் தோற்றமளிக்கின்றது. இதனைக் கீழே காட்டப்படும் படம் தெளிவுறுத்தும்.
.ukarakuriyeetu
எனவே, தமிழ்க் குறியீடுகளையே அட்டவணையில் சேர்க்க வேண்டும்.
 thamizh ezhuththu cheermai 1
 முனைவர் மு.பொன்னவைக்கோ அவ்வாறு இப்பட்டியலில்  உகரக்குறியீடு எதுவும் இல்லை என்றும் கிரந்த எழுத்திற்காகப் போடப்பட்டது என்றும்  தெரிவித்தார். தமிழ் உகர, ஊகாரம் போல் கிரந்தத்தைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ள பொழுது அதற்கு ஏன் தனிக் குறியீடு தேவை.
  அதே நேரம், கிரந்தக் குறியீடு குறிக்கப்பட்டுள்ளது உண்மை.
  தகவல்தொழில்நுட்பத்துறை அரசாணை எண் 29 நாள் 23.06.2010 இல் உள்ள அட்டவணைகள் கிரந்தக் குறியீட்டைக் காட்டுகின்றன. இணைப்பு ஆ.4 கு.1ஊ.5, கு1.ஊ6 (Appendix B 4 : E1F5 E1F6)  வரிசைகளிலும் உகரக்குறியீடு, ஊகாரக்குறியீடு ஆகியனக் கிரந்தக்  குறியீடுகளாகவே உள்ளன.  பல்வேறு விசைப்பலகை அட்டவணையிலும் இவ்வாறே  தமிழ்க்குறியீடு அறியாமல் கிரந்தக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இவற்றுக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில் மேலே தெரிவித்தவாறான தமிழ் உகர, ஊகாரக் குறியீடுகளே குறிக்கப் பெற வேண்டும்.
  மேலும், தமிழ்க்கணியச்சுப் பலகை அல்லது விசைப்பலகையில் கிரந்த எழுத்துகள் தேவையற்றவை.
  மேற்குறித்த அராசணை இணைப்பு ஆ.2. கு1 ஊ (Appendix B 2:E1F),  இணைப்பு ஆ.1 இல் கு.34 இல் (Appendix B1-E 34) இல் குறிக்கப்பெற்ற ‘சமசுகிருத ச’ (sh) ஒலிப்பு வரிசைகள் தமிழுக்குத் தேவையற்றவை. இவையே பின்னரும் விரிவாக  இணைப்பு  ஆ.3  இல் கு 340-349, கு 34 அ- 34இ (Appendix B 3 : E 340 – 349 ; E34A – E34C) வரிசையில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. தமிழில் பழக்கத்தில் இல்லாத இவ் வெழுத்துகள் சமசுகிருதச் சொற்களைத் தமிழில்  புகுத்தும் நோக்கிலேயே சேர்க்கப்படுகின்றன. பிற கிரந்த எழுத்துகளும் தேவையற்றவை. இவற்றில் பெரும்பாலான நடைமுறையில் இல்லை. நடைமுறையில் உள்ள சில எழுத்துகளே தமிழில் பிற மொழிக் கலப்பதற்குக் காரணமாக அமைகின்றன. தமிழில் ஆங்கிலம் இடையில்  கணியச்சிட வேண்டிய தேவையிருப்பின் எவ்வாறு ஆங்கில வரிவடிவ அமைப்பிலிருந்து பயன்படுத்துகின்றோமோ அவ்வாறே கிரந்தம் தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய வரிவடிவங்களுக்குத் தாயாகவும் உலக வரிவடிவங்களுக்கு முதன்மையாகவும் உள்ள தமிழைத் தாழ்த்தும் வண்ணம் தமிழ் வரிவடிவில் அயலெழுத்து ஒலி வடிவங்களுக்கான வரி வடிவம் சேர்ப்பது என்பது தீங்கானது! தமிழில் ஏற்பட்ட கலப்பு போதும்! இனியேனும் அதன் தூய்மையைக் காக்க வேண்டும்! எனவே, அனைத்துக் கிரந்த எழுத்துகளையும் தமிழ்வரி வடிவ அட்டவணையில் இருந்து  அறவே நீக்கி விட வேண்டும்.
  தமிழ்-99 விசைப்பலகையை வலியுறுத்தக்கூடாது. புதுப்புது வகை விசைப்பலகைகளை உருவாக்கிக் கொண்டே போகக்கூடாது.
  வழக்கத்தில் உள்ள விசைப்பலகை முறை எழுத்துகளின் பயன்பாட்டு அடிப்படையில் தட்டச்சிற்காக உருவாக்கப்பட்டது. இதில் தேவைக்கேற்ப மிகச் சில மாற்றங்களை  ஏற்படுத்தலாம். மாறாக முற்றிலும் மாற்றுவது உளவியலுக்கு எதிரானது. தமிழ் தட்டச்சை அறியாதவர்களால் உருவாக்கப்பட்டதுதான் தமிழ் 99 விசைப்பலகை. தமிழ்த்தட்டச்சினைப் பயின்று வருபவர்கள் அதற்கு மாறான விசைப்பலகை முறையை உருவாக்கினால் சிக்கல்தானே வரும். எனவே, புதிய தமிழ்த்தட்டச்சு முறையிலான விசைப்பலகையையே பயன்படுத்த வேண்டும்.
 chellappan,annakannan plus01
  ஒருங்குகுறி என்பது எல்லாத் தளத்திலும் பயன்படுத்தக்கூடியதல்ல. எனவே, பெரும்பான்மைப் பயன்பாட்டிலுள்ள தமிழ் எழுத்துருக்களின் சில வகைகளைஅனைவரும் எளிதில் பயன்படுத்தும் முறையில்  சீருரு அல்லது ஒருங்குகுறி இன்றி அனைத்துக் கணிணிகளிலும் பயன்படும் வண்ணம்  கணிணி வல்லுநர்கள் நன்முறையை உருவாக்க வேண்டும்.
மூன்றாம் அமர்வு :  “ஓர் இந்தியா -ஓர் எழுத்துரு” – திரு. அமைதி ஆனந்தம் அவர்களின் கருத்துரு
  தமிழ், ஒரு காலத்தில் தான் ஆட்சி செய்த  இன்றைய இந்திய நிலப்பரப்பு  முழுமையும் மீண்டும் பயன்படுத்தப்படும் நிலை வந்தால் மகிழ்ச்சிதான். ஆனால், வெறும் தமிழ் எழுத்துகளால்  அயல்மொழி குறிக்கப்  பெற்றால் தமிழுக்குப் பெருமை யல்ல. தமிழ்க்குடும்ப மொழிகளில் உள்ள சிதைந்த வடிவங்கள்  தமிழில் கலப்பது எளிதாகும். இதனால்பிற மொழிகளின் வாழ்வும்  தாழும்.
  அத்தகைய நிலைப்பாடு வரவேண்டுமென்றாலும், பொதுமை எழுத்து வடிவம் குறித்துத் தமிழறிஞர்கள் மட்டுமல்லாமல், பிற மொழியாளர்களும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். அவ்வாறிருக்க தமிழ் மொழியினர் மட்டும் இது குறித்துப் பேசி முடிவெடுக்கலாம் என எண்ணுவது  தவறாகும்.  ஆனால்,  பொது எழுத்து குறித்த எண்ண ஓட்டமே  அறமற்றது என்பதை உணர வேண்டும்.
 ஒரு நாடு – ஒரு மொழி என்பதும், ‘ஒருநாடு – ஒரே எழுத்து வடிவம் என்பதும் பல்வேறு தேசிய இனங்களின் அழிப்பிற்கும் நாட்டின் சிதைவிற்கும் வழி வகுக்கும். ‘தமிழ் வரிவடிவங்கள் இந்திய வரிவடிவங்களின் தாய்’ என்பது உண்மை. ஆனால்,  பிறமொழிகள் உருவான பின் மூல மொழியின் வரிவடிவங்களைப் புகுத்துவது அம்மொழிகளுக்கு அழிவே ஆகும். மாறாக, அம்மொழியினரிடம் மூல மொழியான தமிழ் மொழியின் வரலாற்றை உணர்த்தித் தமிழ் மொழியைப் படிக்கச் செய்விக்கலாம்.
 பொது எழுத்து குறித்துத் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் கூறியதை எண்ணிப்பார்க்க வேண்டு்ம். அவர், பின்வருமாறு தெரிவிக்கிறார்:-
பொது எழுத்து, பொருந்துமா?
இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஒரே வரிவடிவம்(எழுத்து) அமைதல் வேண்டும் என்ற கருத்தைக் கூட்டரசுக் கல்வியமைச்சர் அடிக்கடி ஆங்காங்கு கூறி வருகின்றார். எல்லா  மொழிகளுக்கும் ஒரே எழுத்து என்பது முற்றிலும் பொருந்தாது. இத்திட்டமும் இந்தி மொழி ஒன்றையே நிலைக்கச் செய்யவும் ஏனைய மொழிகளை அழிக்கச் செய்யவும் உதவுவதற்கே கொண்டு வரப்படுகின்றது போலும். தேவநாகரி எழுத்துத் தமிழுக்கும் ஏனைய திராவிட மொழிகட்கும் சற்றும் பொருந்தாது. எ, ஒ, ற, ன, ழ போன்றவற்றைத் தேவநாகரியில் எழுதுதல் இயலாது. எழுத முயன்றாலும் ஒரு மொழிக்குரிய ஒலிகளை இன்னொரு மொழிக்குரிய எழுத்தால் எழுத  முயல்வது கூடுவிட்டுக் கூடு பாய்வதை ஒக்கும். ‘மொழியின் உடல்போன்றது எழுத்து’.  எழுத்தாம் உடல் அழிந்த பின்னர், மொழியாம் உயிர்வாழ்வது எங்ஙனம்? ஆகவே, எல்லா மொழிகளுக்கும் ஒரே எழுத்து என்னும் கொள்கையை இன்றே இன்னே தடுத்தல் வேண்டும். ஒரு மொழியை அழித்து அதன் மக்களைப் பிறமொழியாளர்க்கு அடிமையாக்குவதற்கு இதனினும் கொடிய திட்டம் கிடையாது. ஆகவே ஒரே எழுத்து என்ற கொள்கையை உடனே மடியச் செய்ய வேண்டும். . . . .(குறள்நெறி ஆனி18,1995 / 01.07.1964)
  பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் ஏன், தேவநாகரி பொது எழுத்தாகக் கூடாது என்கின்றாரோ அதே காரணங்கள், தமிழ் வரிவடிங்கள் பொது எழுத்தாக அமையக் கூடாது என்பதற்கும் பொருந்தும்.
  மத்திய அரசு இப்பொழுது தேவநாகரியை மறைந்து வரும் மொழிகள் மீதும் சிறுபான்மை மொழிகள் மீதும் திணித்து வருகின்றது. அதனை எதிர்க்க வேண்டிய நாம் தமிழ் வரிவடிவப் பொதுமையைத் தெரிவித்தால்,  ஒரே எழுத்துவடிவம் தேவை என்பதை ஏற்பதாகக்கூறித் தேவநாகரியைப் புகுத்தி நம் மொழியை அழிக்கவே உதவும்.
  திரு அமைதி ஆனந்தம் தொல்காப்பியர் காலத்தில் தமிழ், புலவர்  மொழியாக இருந்தது. 1300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுத்து வடிவம் பெற்றது என்ற தவறான தகவலைத் தெரிவித்தார். இது குறித்து நானும் செங்கைப் பொதுவன் அடிகளும் மறுத்தபின்பும் மாலை, கலந்துரையாடலில் இதே கருத்தைத் தெரிவித்தார். தமிழறிஞர்களால் கூட்டப் பெறாத தமிழ் தொடர்பான  கூட்டம் திசைமாறிப்போய்த் தீங்கிழைக்கும் என்பதற்கு இதுவே சான்றாகும்.
  என் கருத்துரையைத் தொடர்ந்து  பொறி மணி மு. மணிவண்ணன், அதனை வரிக்கு வரி வழி மொழிவதாகத்  தெரிவித்து, இது தேவையற்ற ஒன்று என்றும் ஒரு வேளை தேவை என அனைத்து மொழி யறிஞர்களும் முடிவெடுத்தால் அதற்கேற்ப தொழில்நுட்பர்கள் ஆவன செய்ய இயலும் என்றும் அவையோர் உவகையுறும் வண்ணம் தெரிவித்தார். முனைவர் மு.பொன்னவைக்கோவும் இது குறித்து கலந்துரையாடலே தேவையில்லை என்றார். இருப்பினும் மாலை, கலந்துரையாடலில் இப்பொருண்மை மீண்டும் இடம்பெற்றது பலருக்கு மன நிறைவின்மையை அளித்தது.
   இணையக்கல்விக்கழகம், உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம், ஒருங்குகுறி கூட்டாயம் ஆகியவை  எழுத்து வடிவங்கள் குறித்து ஆராய்வதற்கு ஏற்ற அமைப்புகளல்ல! எனவே, இனி எப்பொழுது்ம் இதுபோன்ற தலைப்புகள் குறித்து ஆராய்வதையும் முடிவெடுப்பதையும் நிறுத்த வேண்டும்.
  இது தொடர்பில் நெறியுரை தேவையெனில், தக்க தமிழறிஞர்களின் கருத்துகளை அறிய வேண்டுமே யன்றித் தாமே முடிவெடுக்கும் முயற்சிகளில் இறங்கக்கூடாது.
   tkramachanthiranias01
ஐந்தாம் அமர்வு : புதிய கருவிகளில் தமிழ் – சிக்கல்களும் தீர்வும்
 இதன் ஒருங்கிணைப்பாளரான திரு பத்ரி , தமிழன்பர்கள் உள்ளம் குளிரும் வகையில் எழுத்தொலி தமிழ் மரபிற்கேற்பவே அமைய வேண்டும் என்றார்.
 இப்பொருண்மையில் சிக்கல்களுக்கான தீர்வுகளைக் காண்பதற்குக் கணிணி வல்லுநர்களே தகுதியானவர்கள். எனினும் தமிழின் தேவையை அறிந்து அதற்கேற்ப அவர்கள் செயலாற்ற வேண்டும். எனவே, எவ்வகைக்  கைப்பேசியாக இருந்தாலும் கணிணி வகையாக இருந்தாலும் தமிழ்நாட்டில் விற்கப்படுவதாயின் தமிழ்ப்பயன்பாடு இருக்கும்  வகையில் உரிய உற்பத்திக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நான் தெரிவித்து இருந்தேன்.

அனைவரின் கருத்தும் இதற்கு மாறுபட்டதில்லை. எனவே, தமிழ்நாட்டில் விற்கப்படும் கணிணி தொடர்பான அனைத்திலும்  தமிழ் இருக்கும் வகையில் அரசு ஆவன செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி அரசிற்குத் தொடர்நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
நிறைவுரையாகப் பின்வரும் கருத்துகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  தமிழை வளரும் மன்பதைக்கேற்றவகையில் புத்துணர்ச்சியுடன் கொண்டு செல்லக் கணிணி வல்லுநர்கள் உழைத்துவருவது பாராட்டிற்கும் போற்றுதலுக்கும் உரியது. ஆனால், அதற்காக அவர்கள், தம் தமிழ்ப்பற்றையும் தமிழ்த் தொண்டையும் தமிழ்ப்புலமைக்கு ஈடாக எண்ணித் தமிழறிஞர்களைப்   புறக்கணிப்பது தவறாகும். இரு தரப்பாரும் இணைந்தால்தான் தமிழை வாழ  வைக்க முடியும். ஒருவரை ஒருவர் புறக்கணிப்பின் வீழ்ச்சி இரு தரப்பாருக்கு மட்டுமல்ல! தமிழுக்கும்தான்!
  பொதுவாகச் சொல்வதானால், இக்கருத்தரங்கம் பயனுள்ள கருத்தாடலுக்கு வழி வகுத்தது. தொழில்நுட்பர்களைவிடத் தமிழறிஞர்கள் வருகை மிகுதியாக இருந்ததாக முகநூலில் குறிப்பு இருந்ததாக ஒருவர் கூறினார். அவ்வாறாயின் தமிழறிஞர்கள் தொழில்நுட்பம்  குறித்து ஆர்வம் காட்டுவது வளர்ச்சிக்கான போக்கு என மகிழ வேண்டும். அதே நேரம், இக்கருத்தரங்கத்தை உரையரங்கமாக   அமைத்துள்ளார்கள். ஆனால், தமிழறிஞர்களை அழைக்க வில்லை.  ஆட்சிக்  குழு உறுப்பினர் என்ற வகையில்தான் தமிழ்வளர்ச்சி இயக்குநரும் பதவி வழி  அழைக்கப்பட்டுள்ளார். அவரும் வரவில்லை. தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் கலந்துபேசி, உரிய தமிழறிஞர்களை வரவழைத்து அவர்களின் கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்நிகழ்ச்சியை ஒளிவுமறைவின்றி நடத்தி யிருக்க வேண்டும்.  பொருண்மை தொடர்பாக உள்ள குறிப்புகளை முன்னரே வருகையாளருக்குத் தெரிவித்திருப்பின் அவர்கள் அதற்கேற்ற ஆயத்தத்துடன் வந்திருக்க இயலும். இல்லையேல் ‘ஆமாம் சாமி’ போடும் நிலைதான் ஏற்படுகிறது.
  நிகழ்ச்சி நேரத்தை இறுதி வரை  தெரிவிக்காமல், இறுதியில் நிகழ்ச்சி நிரலைத் தெரிவிப்பதே,  பிறர் வருகையை விரும்பாமையைக் காட்டுகின்றது. அடையாள அட்டை கேட்டுக் கட்டுப்படுத்துவதும் புதிராக உள்ளது.   இருப்பினும் அடையாள அட்டையை வலியுறுத்தவில்லை. எதற்கு இந்த மூடு மந்திரம்?
  ஆராயப்படும் பொருண்மைகள் குறித்துத் தெளிவாக அனைவருக்கும் தெரிவிப்பின் இணைய வழிக் கருத்துரைகள் பெறலாமே! தமிழ்,தமிழ்நாட்டு மொழி மட்டும் அல்லவே! பிற நாடுகளில்  வாழும் தமிழறிஞர்களின், தமிழார்வலர்களின் கருத்துகள் தேவையில்லையா?
  எனவே, இக்கூட்டத்தை முதல்நிலைக்  கூட்டமாகக் கருதி  தமிழறிஞர்கள் பங்கேற்கும்  மற்றொரு கூட்டத்தை நிகழ்த்த வேண்டும்.  எக்காரணம் கொண்டும் வரி வடிவம் அல்லது எழுத்தமைப்பு குறித்து ஆராய்வதற்கு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலே தெரிவித்தபடி, தமிழறிஞர்கள் கொண்ட தமிழ் எழுத்துகளுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்புக்  குழு ஒன்றை அமைக்க வேண்டும். தமிழறிஞர்களும் கணிணி வல்லுநர்களும் இணைந்து எடுக்கும் முடிவையே தமிழக அரசு வழி, ஒருங்குகுறி கூட்டாயத்திற்கு அனுப்ப வேண்டும்.

கணிணிநுட்பரும் தமிழ்அறிஞரும் ஒருமித்துச் செயல்படட்டும்!
தமிழ்த்தேவைக்கேற்ப கணிணிப்பயன்பாடு அமையட்டும்!
நற்றமிழ் எளிதில் பரவுவதற்கு கணிணிநுட்பம் துணைநிற்கட்டும்!
Ilakkuvanar Thiruvalluvan-

Sunday, December 15, 2013

தமிழிசை வாழ்கிறதா?

தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? 1

                 தமிழிசை வேண்டும் என அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ஈராக்கிலோ உகாண்டாவிலோ கேட்கவில்லை. மொழிகளுக்கு எல்லாம் தாயான முத்தமிழ் வழங்கும் நம் நாட்டில்தான் போராட வேண்டியுள்ளது. எந்த ஒரு நாட்டிலாவது அந்த நாட்டு மொழியில்தான் இசை இருக்க வேண்டும் எனப் பன்னூறு ஆண்டுகளாகப் போராடுகிறார்களா? என்றால் அந்த இழிநிலை நம் அருமைத் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. பிற நாடுகளில் சிற்சில காலங்களில் அயல் இசை ஆதிக்கப் போக்கு இருந்திருந்தாலும் தாய் இசையின் உரிமையை மீட்டெடுத்துப் போற்றிவருகிறார்கள். இங்கிலாந்தில்கூட 200 ஆண்டுகள் செருமானிய இசை மேலோங்கிய பொழுது அறிஞர் கார்லைல் போன்றோர் போராடித் தாய்நாட்டு இசையை மீட்டனர். ஆனால், தமிழ் நாட்டிலோ உண்மைத் தமிழ் மக்களின் விருப்பம் தமிழிசையாகவே இருப்பினும், தமிழிசைக்காகப் போராடும் சூழலே இன்னும் உள்ளது. இப்போக்கு மாறுமோ?அயலிசை தலை சாயுமாறு தமிழிசை மறைப்பு ஓயுமா? தமிழிசை ஓங்குமா? என்பதையே கடந்துவந்த பாதையுடன் ஒப்பிட்டு இன்றைய போக்கில் பார்க்க வேண்டும்.
thamizhisaikaruvi5
            தமிழிசை என்பது மட்டுமல்ல, கருநாடக இசை தென்னிந்திய இசை என்பனவெல்லாம் தமிழிசையையே குறிக்கின்றன. அவ்வாறாயின் கருநாடக இசையை ஏன் வேண்டாம் எனக் கூற வேண்டும் என்கிறீர்களா? கருநாடக இசை என்ற பெயரில் தமிழிசைத் தழுவலான தெலுங்குப் பாடலையும் சமசுகிருதப் பாடல்களையும் கன்னடப் பாடல்களையும் தமிழ்நாட்;டின் அவைகளில் – சபைகளில் – பாடித் தமிழிசையை ஓரங்கட்டுவதைத்தான் கூடாது என்கிறோம். செல்வாக்குள்ள தமிழ் மக்களுக்கு எப்பொழுதும் பிறமொழிப் பெயர்களில்தான் ஈடுபாடு உள்ளது. அது போல் வட நாட்டாரால் தமிழிசையானது கருநாடக சங்கீதம் எனக் குறிக்கப்பட்டதும் அப்பெயரே நிலைத்து விட்டது. அப்பெயர் பிறமொழிகளிலும் நுழைவதும் எளிதாகி விட்டது. தமிழ்நாட்டு மேடைகளில் தமிழ்நாட்டுப் பாடகர்கள் தமக்கும் கேட்போருக்கும் தெரியாத மொழிகளில் புரியாத பாடல்களைப் பாடுவதும் மேலோங்கி விட்டது.
                ‘கர்ணம்’  என்றால் காது. செவிக்கு இன்பம் தரக்கூடிய இசை என்ற பொருளில் கருநாடக இசை என்னும் பெயர் வந்தது என்பார்கள் சிலர். ‘கருநாடகம்;’  என்றால் பழமை. எனவே, பழைய இசை என்னும் பொருளில் கருநாடக இசை என்னும் பெயர் வந்தது என்பர் வேறு சிலர். இவ்வாறு சொல்லப் படுவதெல்லாம் வரலாறு தழுவாக் கதைகளாகும். 12 ஆம் நூற்றாண்டில் (கி.பி.1116-1127) வாழ்ந்த சோமேசுவர புல்லோகமால் என்னும் மராத்தியக் குறுநில மன்னன் தமிழிசையில் பெரிதும் ஈடுபாடு கொண்டு இசை நூலும் எழுதியவன். இவனது நாட்டிற்கு அடுத்துக் கருநாடகம் இருந்ததால், தென்னகமெங்கும் பரவி இருந்த தமிழிசையைக் கருநாடக சங்கீதம் என்றே குறிப்பிட்டான். இப்பொழுதும் கூடத் தெற்கே உள்ள மலையாளிகள் உள்ளிட்டோரையும் ‘மதராசி’  என்றே குறிப்பிடும் வழக்கம் வடநாட்டில் உள்ளது. இது போல், துங்கபத்திரை ஆற்றுக்குத் தெற்கே இருந்த பகுதிகள் அனைத்தையும் ‘கருநாடகம்;’  என்றே குறிப்பிட்டனர். எனவேதான் ஆற்காட்டு நவாப்பையும் கருநாடக நவாப் என்றே குறிப்பிட்டனர். எனவே, விந்திய மலைக்குத் தெற்கே வேரூன்றியிருந்த தமிழிசையைக் கருநாடக இசை என்றே குறிப்பிட்டனர் என்பது ஆராய்ச்சி அறிஞர்களின் தெளிவான முடிவாகும்.
                தமிழிசைதான் கருநாடக இசை என்னும் பொழுது என்ன பெயரிட்டு அழைத்தால் என்ன என்கிறீர்களா? இது வேறு, அது வேறு என்ற எண்ணத்தில் அயல்மொழிப் பாடல்கள் மேலோங்கி வருவதுடன் இசைத் தமிழ்ச் சொற்கள் வழக்கு இழந்தும் மறைந்தும் அயல் மொழிச் சொற்கள் மேலோங்குகின்றன. ச,ரி,க,ம,ப,த,நி என இப்பொழுது சுர ஒலியைக் குறிக்கிறோம் அல்லவா? இச் சுரஒலிகள் ஆ,ஈ.ஊ,ஏ,ஐ,ஓ,ஒள என்றுதான் இருந்தன.
                ‘குரலே துத்தம் கைக்கிளை உழையே
                  இளியே விளரி தாரம் என்றிவை
                 ஏழும் யாழிசைக்கு எழு நரம்பே”  (பிங்கல நிகண்டு 1402)
என்ற நூற்பா தமிழின் ஏழு சுரங்களைக் குறிக்கின்றது.
                ‘ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்று
                  ஏழும் ஏழிசைக்குஎய்தும் அக்கரங்கள்” (பிங்கல நிகண்டு  1415)
என்ற நூற்பா  அவற்றின் குறியீடுகளைக் குறிக்கின்றது.
                இடைக்காலத்தில்தான்  சரிகமபதநி என்னும் சுரக் குறியீடுகள் தோன்றலாயின. பின்பு ‘ச” என்றால் ‘சட்சம்”, ‘ரி” என்றால் ‘ரிசபம்”, என்ற அடிப்படையில் காந்தாரம், மத்திமம். பஞ்சமம், தைவதம், நிசாதம் என்பனபோல், தவறான விளக்கம் கொடுக்கப்பட்டு துரல் துத்தம் கை;கிளை, உழை, இளி, விளரி, தாரம் முதலிய தமிழ்ச் சுரங்கள் வழக்கு இழந்து ஆ முதலிய சுரக் குறியீடுகள் மறைந்தன. இந்திய விடுதலைக் காலமான 1947 இல்கூட, ஆ,ஈ,  என்னும் தமிழ்ப்பண் முறையில் பாடல் கற்பித்தோர் உண்டு. இப்பொழுதும் தமிழின் சேய் மொழிகளில் ஒன்றான படகு மொழியில் அவ்வாறுதான் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் நாம் இப்பொழுது இதை வலியுறுத்தினால் ஏதோ வேடிக்கையாகத்தான் பலரும் நினைப்பர். மேலும், பாடத் தெரிந்தவர்களைப் பாடுமாறு கூறினால் கருநாடகப் பாட்டுபாடவா எனக் கேட்டுத், தெலுங்கு முதலிய பிற மொழிப் பாடல்டகள்தான் பாடுவரேயன்றித் தமிழ்ப் பாடல்கள் பாட மாட்டார்கள். இந்தியாவிலேயே பிற  மாநிலங்களில் அவர் அவர் மொழிப் பாடல்களைத்தான் பாடுகின்றனர். சான்றாக மேற்கு வங்காளத்தில்; அனைவரும் தாகூர் பாடலைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, தாகூர் பல்கலைக் கழகத்தில் படிக்கும அனைவருக்கும் தாகூர் வரலாறும் படல்களும் நன்கு தெரியும். நம் நாட்டில் பாரதியார் பல்கலைக் கழகத்திலும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலும படிப்போர், இவர்களின் பாடல்களை மட்டுமல்ல இவர்கள் யார் என்றே தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.இவ்வாறு, இக்காலத் தமிழிசைப் பாடல்களையும் தொன்மையான தமிழிசைப் பாடல்களையும் அறியாதவர்களாக பொது மக்கள் மட்டுமல்ல, இசை மாணாக்கர்களும்  இசை ஆசிரியர்களும் இருக்கின்றனர். நம் மண்ணோடு கலந்த தமிழிசையை நம் ஊனோடு கலந்து உயிர்ப்போடு இருக்கச் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
              thamizhisaikaruvi4  தமிழிசை என்பது உலகின் பல பகுதிகளில் மனித இனமே தோன்றாத பொழுது தோன்றியதாகும். சில பகுதிகளில் மொழிகள் வளர்ச்சி அடையாத பொழுது இங்கே சிறப்பான நிலையில் இருந்ததாகும். கடைச் சங்கக் காலத்தில் மட்டுமல்ல இடைச் சங்கக் காலத்திலும் அதற்கு முன்பு முதற் சங்கக் காலத்திலும் தமிழிசை மிகச் சிறப்பாக இருந்ததையும் இசைநூல்கள் எண்ணற்றன இருந்தமையையும் இறையனார் களவியல் உரை மூலம் அறியலாம். உலகின் முதல் இலக்கண நூலாம் தொல்காப்பியத்தில் தமிழிசை பற்றிய எண்ணற்ற குறிப்புகள் உள்ளன. அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் மறைந்து போன இசை நூல்களைக் குறிப்பிடுவதுடன் 11,191 ஆதி இசை இருந்தவற்றையும் குறிப்பிடுகிறார். இத்தகைய தொன்மை சிறப்புடைய தமிழிசையின் இன்றைய நிலை என்ன?
                தமிழ்நாட்டை விட்டு எங்கும் போகாத தியாகய்யர், முத்துச்சாமி தீட்சிதர், சியாமா சாசுதிரி ஆகிய மூவரும் தேவாரம் முதலிய தமிழ் இசைகளைக் கேட்டுக் கேட்டு அவற்றை உள்வாங்கித் தெலுங்கு, சமசுகிருதம் முதலிய மொழிகளில் பாடல்கள் எழுதியுள்ளனர். அக்கால நாயக்கர் ஆட்சியில் அவை செல்வாக்கு பெற, நாமோ அவற்றையே ஆதி இசை எனத் தவறாகக் கூறிவருகிறோம். இவர்களை இசை மூவர் எனக் குறிப்பிட்டதால், தமிழிசை மூவர், ஆதி இசை மூவர் என்று முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகிய மூவரைக் குறிப்பிடும் நிலையும் தோன்றியுள்ளது. தியாகையர் முதலிய மூவருக்கு முந்தையவர்கள் இவர்கள் என்பதுடன் கீர்த்தனைப் பாடல்களைப் பரப்புவதில் இசைக்கடன் வாங்கிய தியாகய்யர் முதலிய மூவருக்கும் முன்னோடி என்பதில் ஐயமில்லை. ஆனால், இவர்கள்தாம் இசை முன்னோடி என்பதும் வரலாற்றுப் பிழையாகும். இவர்கள் காலத்திலும் இவர்களுக்கு முன்பும் ஆயிரக்கணக்கான தமிழிசைவாணர் இருந்துள்ளார்கள். இன்னும் சிலர் கடந்த உலகத் தமிழ் மாநாட்டின் பொழுது காரைக்காலம்மையாரைத் தமிழிசைத்தாய் என அறிவிக்கச் செய்தனர். இதுவும் தவறாகும். ஏனென்றால் சிலப்பதிகாரம், சங்கப் பாடல்கள் அனைத்துமே இசை நுணுக்கங்களுடன் பாடப்பட்டவையாகும்.
                தமிழிசையை மூலமாகக் கொண்டே பிற இசைப் பாடல்கள் தோன்றின என்பது வரலாறு காட்டும் உண்மை. ‘வடமொழியில் சங்கீத நூல்கள் எழுதப் பட்டிருப்பதாலேயே அவை தமிழ்நாட்டு இசையல்ல என்று கருதுவது தவறு. இப்போதுள்ள வடமொழி இசை நூல்கள் பலவும் தமிழ்நாட்டு இசையைத்தான் கூறுகின்றன” என்கிறார் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி.   சுந்தரமூர்த்தி ஓதுவார் என்னும் இசைவாணர், ‘தமிழரே சங்கீதப் பிச்சையைப் பலர்க்கும் அளித்தனர். இவர்கள் இசையை அவரவரும் தங்கள் மொழிக்குத் தக்கபடி சொற்களை அமைத்து இசைநூல்களை எழுதிக் கொண்டனர்” என்கிறார்.
(தொடரும்)

தமிழ்ப்பாட்டு பாடு


தமிழ்ப்பாட்டு பாடு – 

இல்லையேல் ஓடு!

இதழுரை
இசை என்பது அவரவர்க்கு அவரவர் தாய்மொழியிலான இசைதான். ஆகவே, நமக்கு இசை என்பது தமிழிசையையே குறிக்கும். தமிழ்நாட்டில் தமிழர்களிடையே முழங்க வேண்டியது தமிழிசைதான். திராவிடம் என்னும் சொல் தமிழைக் குறிப்பதுபோல் கருநாடக இசை என்பதும்  தமிழைத்தான் குறிக்கின்றது. ஆனால், கருநாடக இசை என்ற பெயரில் தெலுங்கு, சமற்கிருத, கன்னடப்பாடல்களைத்தான் பாடுகின்றனர்.  அவரவர் மாநிலங்களில் அவரவர் மொழியில் பாடட்டும்! ஆனால், தமிழ்நாட்டில் உலக இசைகளின் தாயாம் தமிழிசையைப் புறக்கணிக்கும் போக்கை இன்னும் எத்தனைக் காலம்தான் தொடரப் போகின்றனர்?
தமிழ்நாட்டிலும்  பிற மொழி பேசுவோர் தம் இசையை மேடையேற்றினாலோ பொதுவான இசைவிழா நடக்கும்  பொழுது தமிழிசையுடன் பிற இசைப்பாடல்களையும் பாடினாலோ நாம் மறுப்பேதும் கூறப்போவதில்லை. திசம்பர் இசைவிழாவை நாம் பொதுவான இசை விழாவாக நடத்தக்கூடாது. இசை என்றால் தமிழ்நாட்டில் தமிழிசை மட்டுமே என்ற நிலைப்பாட்டில் தமிழிசை விழாவாகத்தான் நடத்த  வேண்டும்! 
இசையில் ஏன் மொழி வேறுபாடு என்பவர்களே! நீங்கள் மிகவும் பிற்பட்ட காலத்தில் தமிழிசையில் இருந்து வந்த தெலுங்கிசை முதலான பாடல்களைப் பாடுகின்றீர்களே! அப்படியென்றால் நீங்கள்தாமே வேறுபாடு காட்டுகின்றீர்கள்! தமிழ்நாட்டில் தமிழர்கள் செல்வத்தால் செழிக்கும் நீங்கள் தமிழைப் புறக்கணிப்பது ஏன்?
கடந்த 9 ஆண்டுகளாக – சென்னையில் திருவையாறு என்ற பெயரில் – ஓர் அவலம் அரங்கேறிக் கொண்டுள்ளது. திருவையாறு என்றாலே தமிழில் பாடியதற்காக மேடையைக் கழுவிய அவலம்தான் நினைவிற்கு வருகின்றது.  எனவே, சென்யைில் திருவையாறு நிகழ்ச்சி அடுத்த ஆண்டு நடைபெறாவண்ணம், தமிழ்மக்கள் இவ்விழாவுடன் தொடர்புடைய அமைப்புகளையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும். இசைக்கலைஞர்கள் கூலிப்பட்டாளம் போல் இங்கேயும் பாடுவது, தமிழிசை என்றால் அங்கேயும் பாடுவது என்னும் போக்கில் இருக்கக்கூடாது. தமிழ்நாட்டிலும் உலகில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் தமிழிசையையே முழங்க வேண்டும்.
 சென்னையில் திருவையாறு என்ற பெயரிலே  தமிழைப் புறக்கணிக்கும் பெருமக்களே! நீங்கள், ஐதாராபாத்தில் திருவையாறு, மைசூரில் திருவையாறு எனப் பிற இடங்களுக்குச் செல்லுங்கள்! உங்களுக்குத் தமிழிசையை உலகெங்கும் பரப்பும் எண்ணம் இல்லாவிட்டாலும், பிற மொழி இசையை இங்கே திணிக்கும் பழக்கத்தையாவது கைவிடுங்கள்!
தமிழ்ப்பாட்டு பாடு!
தமிழ்ப்பாட்டிற்கு ஆடு – இல்லையேல்
தமிழ்நாட்டை விட்டு ஓடு

என மக்கள் திரளும் முன்னர், தமிழ்நாட்டைவிட்டு நீங்களே வெளியேறி விடுங்கள்!
தமிழைப் புறக்கணிப்பவர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை உணருங்கள்!

கார்த்திகை 29, தி.பி.2044
திசம்பர் 15, கி.பி. 2013
feat-default

Monday, December 9, 2013

மண்டேலாவைப் போற்றுபவர்களே! தமிழீழத்தையும் போற்றுங்கள்!


மண்டேலாவைப் போற்றுபவர்களே! தமிழீழத்தையும் போற்றுங்கள்!


nelson mandela 4
  முதுமையில் இறந்திருந்தாலும்  நலங் குன்றி யிருந்து இறப்பை எதிர்நோக்கியவர் என அறிந்திருந்தும்  ஆன்றோர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு உலகெங்கும் துயர அலையை எழுப்பி யுள்ளது.
  எதனால் அவர் நலங்குன்றிப் போனார்? இன மக்களுக்காக ஏற்ற  சிறைவாழ்க்கைதானே காரணம்சிறையில் சுண்ணாம்புக்கல் உடைக்கும் வேலை பார்த்ததால் அல்லவா நுரையீரல் தொற்று நோய்க்கு ஆளானார், அல்லறுற்றார், நலமிழந்தார்! இல்லையேல் நலத்துடன் மேலும் வாழ்ந்திருப்பார் அல்லவா? எனவே, நோய்வாய்ப்பட்டு மறைந்தாலும் மக்கள் பணியினால்  பிணிக்காளாகி மறைந்த மாமனிதர், மண்டேலா அவர்கள்  எனலாம்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. (குறள் 1025)
என்னும்  தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவாக்கிற்கேற்ப வாழ்ந்த ஆன்றோர் மண்டேலா அவர்கள். இன நலனுக்காக இன்னல்களை இனிமையாக எதிர்நோக்கி மக்கள் உள்ளங்களில் குடிகொண்ட இனநலத்தலைவர் மண்டேலா அவர்கள்.

  மண்டேலாவைப் போற்றுநர் அவரது எண்ணத்திற்கும் செயலுக்கும் மாறாக இருந்து கொண்டு அவரை வாழ்த்துவதில் பயனில்லை. உண்மையிலேயே அவரைப் பாராட்டுவதாக இருந்தால் அவர் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தாரோ அந்தக்  கொள்கையை ஏற்பதாகத்தான் பொருள். அவரது கொள்கைக்கு உடன்பாடில்லை; ஆனால், அந்தக் கொள்கைக்காக வாழ்ந்தமையால் பாராட்டுகிறோம் என்பது போலியான செயல்பாடே!
  மண்டேலா நிற வெறிக்கு எதிராகப் போராடினார் என்றால் அந்த  நிறத்தை உடைய தம் இனத்திற்காகப் போராடினார் என்றுதானே பொருள்! இன நலனுக்காகப் போராடிய தலைவரைப் போற்றுபவர்கள், இன நலனுக்காகப் போராடும் பிறரையும் போற்றத்தானே செய்ய வேண்டும்!

  “அவர் காந்தியவாதி; அதனால் போற்றுகிறோம் என்று சொன்னார்கள் என்றால் அது கடைந்தெடுத்த பொய்யாகத்தான் இருக்கும். இன்னாசெய்யாமை(அகிம்சை)வடிவம் என்பது மண்டேலாவைப் பொறுத்தவரை ஒரு நடைமுறை உத்தியாக மட்டுமே இருந்தது. ஆனால் இது பலராலும் காந்திய வழி என்று தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது”  எனப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளதையும் சான்றாகக் கொள்ளலாம்(தமிழில் தீக்கதிர் இதழில் வந்ததை ஆயுதஎழுத்து வலைத்தளத்தில் காணலாம்).
   “அனைத்து இன மக்களும் சம உரிமையுடனும், நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழும் விடுதலை வாழ்வை, மக்கள் நாயகத்தை நான் கனவு காண்கிறேன்.  இந்தக் கனவை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தேவைப்பட்டால் இதற்காகச் சாகவும் ஆயத்தமாக இருக்கிறேன்” என்பதுதான் நெல்சன் மண்டேலாவின் வாக்குமூலம்.  எனவே, மண்டேலாவைத் தொழுபவர்கள், தம் மக்களின் உரிமைக்காகப் போராடுபவர்களையும் தொழ வேண்டுமல்லவா?
  தம் மக்கள் சம உரிமையுடன் வாழ இவர் நடத்திய போராட்டம் எப்படி யிருந்தது? ஆயுதம் தாங்காமலா இருந்தது?

  ஆப்பிரிக்கத்  தேசியப்  பேராயத்தின் படையைத் தலைமை தாங்கி மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்திய ஆயுதப் போராளிதான் மண்டேலா.   அப்போது, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, அமெரிக்காவும் மண்டேலாவை எதிர்த்துப் பயங்கரவாத முத்திரை குத்தியதும் வரலாறுதான். அமெரிக்காவுக்குள் நுழைவதற்குள் சூலை 2008 வரை மண்டேலாவுக்கு தடை நீடித்திருந்ததும் வரலாறுதான். ஆனால், வரலாற்றின் உந்துதலால்காலம் திரும்பியுள்ளது. அன்றைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் வேறு வகை முத்திரை குத்தியவர்களும்  பாராட்டுகிறார்கள். ஆனால், இந்தப் பாராட்டு உண்மையாக அமைய என்ன செய்ய வேண்டும்?    இன நலப் போராளி மண்டேலா பற்றிய மதிப்பீட்டை மாற்றிக் கொண்டதுபோல்  இனநலனுக்காகப்  போராடும் ஈழ மக்களைப் போற்ற வேண்டும்!  நாட்டு மக்களுக்காக  இன்னுயிர்  நீத்த   ஈழப்  போராளிகளை வணங்க வேண்டும்! நாட்டு மக்கள் நலனுக்காகவே நாளும் வாழும் தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரனை மதிக்க வேண்டும்! ஆதலின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்! எனவே, இதுவரை செய்த தவறுகளும் குற்றங்களும் அதனால் நேர்ந்த இனப்படுகொலைகளும் போதும்!

  நிறவெறி ஆட்சி முடிவிற்கு வந்தபோதும் என்ன சொன்னார் மண்டேலா? “ஆயுதப்போராட்டத்தை நாம் நிறுத்தி வைக்கிறோம்; ஆனால் அதே நேரத்தில் ஆயுதப்போராட்டத்தை நாம் கைவிட்டுவிடவில்லை” என்றுதானே நாட்டுமக்களிடையே வீர உரையாற்றினார்! (முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பொழுது ஆயுதங்களை மெளித்தது நினைவிற்கு வருகிறதா?) மேற்கு வங்கத்திற்கு வந்தபொழுதும் தன்னைப் புரட்சியாளனாகத்தானே குறிப்பிட்டார்! மறப்போராளி சுபாசு சந்திர போசு அவர்களைத்தானே, தான் பின்பற்றும் நாயகனாகக்  குறிப்பிட்டார். ஆனால், அதே மறப்போராளி சுபாசு சந்திரபோசு அவர்களின் வழியில் செயல்படும் ஆயுதப் போராளிகளைப் பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவது ஏன்?
  எனவே இனநலத்திற்காக அறவழி போராடி, அதனால் பயனின்றி, ஆயுதவழிப் போராளியாக மாறிய மண்டேலாவை மதிப்பவர்கள் இன நலனுக்காக, நாட்டு நலனுக்காக, நாட்டு மக்கள் நலனுக்காக, வேறு வழியின்றிப் போராட்டப் பாதையில் செல்ல வேண்டி வந்தவர்களை மதிக்க வேண்டும்; அதற்கான காரணங்களைப் புரிந்து  கொண்டு, அவற்றை உடனே களைய முயல வேண்டும். உரிமைக்காகப் போராடுபவர்கள்மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்து விடக்கூடாது. பன்னாட்டு அவை என்பது அதிகாரம் மிக்க சில நாடுகளின் கைப்பாவையாக இல்லாமல், அனைத்து நாடுகளின் உரிமைகளையும் பேணுவதாகவும் உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளை மீட்டுத் தருவதாகவும் இருக்க வேண்டும்.

எனவே, மண்டேலாவை  நிறவெறிக்கு எதிரான போராளியாகப் பார்க்காமல், இனஉரிமை மீட்புப் போராளியாகப் பார்க்க வேண்டும். ஆதலின்
மண்டேலாவைப்  போற்றுபவர்களே!
இன உரிமைப் போராளிகளை மதியுங்கள்!
ஈழத்திற்கு ஏற்பு அளியுங்கள்!
தமிழீழத்தைப்போற்றுங்கள்!
ஓங்குக மண்டேலாவின் புகழ்! வெல்க தமிழீழம்!

இதழ் 4
கார்த்திகை 15, தி.பி.2044Akaramuthala-Logo
திசம்பர் 01, கி.பி.2013

Followers

Blog Archive