Tuesday, May 13, 2014

வெற்றி மாலை சூடியவர்களுக்கும் சூடப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்!


வெற்றி மாலை சூடியவர்களுக்கும் சூடப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்!

crown02
  12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வந்துள்ளன. அடுத்து, 10 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வர உள்ளன. (இடையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் வர உள்ளன.) இவற்றில்  வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அடுத்து வெல்லலாம் என்ற நம்பிக்கை கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்!
வெற்றி கண்டு மயங்காதீர்!
 success01 பத்தாம் வகுப்பில் முதலிடம் பெறுபவர்கள் அனைவரும் அவ்வாறே பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பெறுகிறார்களா என்றால் இல்லை என்பதே நடைமுறை. இரண்டாண்டில் அவர்களின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் என்ன?  அதே போல், 12 ஆம் வகுப்பு வெற்றிக்குப் பின்னர் அப்படி ‘ஆவேன், இப்படி ஆவேன்’ என்றெல்லாம் கருத்துரைக்கும் அனைவருமே அவ்வாறு சிறந்து மக்கள்  தொண்டாற்றி வருகிறார்களா என்றால், அதற்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றி வாகை சூடுபவர்களே!  படிப்புத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பலர் வாழ்க்கைத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்து விடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் பெற்றுள்ள வெற்றி என்பது இறுதி நிலை அல்ல! இதுதான் பெற வேண்டிய வெற்றிக்கு முதல்படி! எனவே, வெற்றி கண்டு மயங்காதீர்!  வெற்றி மயக்கத்தில் ஆரவாரத்தில் கருத்து செலுத்தினால், வெற்றி தொடராது என்பதை உணருங்கள்! நீங்கள் கடக்க வேண்டிய படிகள் பல உள்ளன என்பதை நினைவில் நிறுத்துங்கள்!  வெற்றிப்பாதையில் செல்லும் பொழுது இடறி விழ நேரிடலாம். அதனால் அதிர்ச்சிக்குள்ளாகி வெற்றி முயற்சியைக் கைவிட்டு விடாதீர்கள்! கற்றதன் பயன் மற்றவர்க்கு உதவுதல் என்பதையும் மறவாதீர்கள்! வெற்றி மாலை என்றும் உங்களை அணி செய்யவும் மேலும் மேலும் உயர்வுகளைக் காணவும் வாழ்த்துகள்!
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்success02
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (குறள் 539)
 தோல்வி கண்டு துவளாதீர்!
  படிப்பில் கருத்து செலுத்தியும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம்!  கருத்து செலுத்தாமையாலும் வெற்றி sucide03வாய்ப்பை இழந்திருக்கலாம்! எவ்வாறிருப்பினும் இதுவே இறுதி என எண்ணாதீர்கள்! நீங்கள்  கடந்து செல்ல வேண்டிய பாதை இன்னும் உள்ளது! பாடத் தேர்வில் வெற்றி என்னும் அளவுகோல் கொண்டு வாழ்க்கைத் தேர்வின் வெற்றியை அளவிட இயலாது. ஆகவே, தற்கொலை, படிப்பைக் கைவிடுதல் போன்ற கோழைத்தனமாக முடிவுகளுக்குச்செல்லாதீர்கள்! சிலர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றுகூடத் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். சிக்கல்களுக்கான தீர்வைத்தான் காணவேண்டுமே தவிர, நம் உயிரை நாமே தீர்த்துக் கொள்ளும் நிலைக்குச் செல்லக் கூடாது. பிள்ளைகளின் தோல்வியால் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளும்  அவலமும் உள்ளது. இதுவும் தவறாகும். தோல்வியால் தலைகுனிந்து பிறரை எதிர்கொள்ள அஞ்சி வீட்டை விட்டு ஓடுவோரும்sucide01 உளர். இதுவும் தவறாகும். தோல்வியை வெற்றிக்கான படியாகக் கொண்டு முயன்றால் வெற்றியை எளிதில் எட்டலாம்! விடா முயற்சியும் ஊக்கமும் இருப்பின், எல்லாம் எளியனவே!
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. (குறள் 594)
  தாய்மொழி வாயிலான சிந்தனைக்கு ஊற்றாகக் கல்வி முறை அமையாததாலும் மனப்பாடத்தேர்வுமுறையில் அறிவை எடைபோடுவதே வெற்றி என்ற மனப்பான்மையை வளர்க்கும் பாடத்திட்டம் உள்ளமையாலும் தாழ்வு  மனப்பான்மையை வளர்க்கும் கல்வித் திட்டமே உள்ளது. தமிழ்வழியில் சிந்தனைப் பெருக்கத்தை  ஏற்படுத்தும் கல்விமுறையை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் இரு  பக்கங்கள் என்பதை மாணாக்கர்கள் உணர்வர்!
- இலக்குவனார் திருவள்ளுவன்




தமிழுக்கு இழைக்கப்படும் அறக்கேட்டைத் தடுக்க…. akaramuthala editorial - to prevent injustice to thamizh

தமிழுக்கு இழைக்கப்படும் அறக்கேட்டைத் தடுக்க….

thamizh-thiruvalluvar01
  அண்மையில் வெளிவந்த 12 ஆம் வகுப்புத் தேர்வில் முதல்நிலைகளில் மதிப்பெண் எடுத்திருந்தவர்கள் எடுத்துள்ள மொழிப்பாடம் சமற்கிருதம். இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவ்வாறுதான் உள்ளது. ஆனால், இவர்கள் பெற்ற சமற்கிருதக் கல்வி இதே வகுப்பில் உள்ள தமிழ்ப் பாடக் கல்விக்கு இணையானது அல்ல. தொடக்க நிலைபோன்ற பாடத்திட்டமும் அதற்கேற்ற எளிய வினாக்களும் கொண்டதே சமசுகிருதப்பாடம். இரு வேறுபட்ட நிலையில் உள்ள மொழிப்பாடங்களின் மதிப்பெண்களை இணையாகப் பார்ப்பதே தவறாகும். சமற்கிருத மொழியைச் செத்த  மொழி என்கிறோம். ஆனால், மத்திய அரசின் முயற்சியால் உலகெங்கும் அம்மொழி  கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் மிகுதியாகக் கற்பிக்கப்பட்டு வருவதுபோல் தமிழ்நாட்டிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் சமற்கிருதம் மட்டுமே சொல்லித் தரப்படுவதால் அப்பகுதி மக்கள் அதனைக் கட்டாயமாகப் படிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். நம்மைப் பொருத்தவரை  தமிழ் வாழ்க!’ என்று உதட்டிலிருந்து ஒலி எழுப்பினால் போதும்! தமிழ் வாழ்ந்து விடும் என எண்ணிக் கொண்டு உலகின் மூத்த மொழியான செந்தமிழை எல்லா இடங்களிலும் ஒழித்துக்  கொண்டு வருகிறோம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழை வாழ  வைக்காமல், தமிழே இல்லாமல் சமற்கிருதத்தைப் படிக்க எல்லா வசதிகளும் செய்து தருகிறோம். தமிழ்நாட்டில் சமற்கிருதம், இந்தி, உருது, அரபி, பிரஞ்சு, செருமனி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய  மொழிகளுள் ஒன்றையும் ஆங்கிலத்தையும் படித்தால் போதும். தமிழ்நாடு என்பது அயலவருக்கான நாடுதானே! அதனால் தமிழ் தேவையில்லை! ஒருவேளை, தமிழர் சிறுபான்மையர் ஆனபின்பு, சிறுபான்மையர் மொழி எனத் தமிழுக்கு முதன்மை அளித்துக்  கொள்ளலாம் என எண்ணுகிறார்களோ?
  தமிழ்நாட்டில் தமிழே தெரியாத ஒருவர் தமிழைச் சிறிதும் அறிந்து கொள்ளாமல் படித்து உயர் பட்டங்கள் வரை பெற முடியும்; எவ்வகைப் பணிகளிலும் சேர முடியும்; எவ்வகைத் தொழிலையும் நடத்தி மிகு செல்வங்கள் ஈட்ட முடியும் என்பது உலகறிந்த உண்மைதான். ஆனால், இந்த நிலை நீடித்தால், தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் பேரழிவு என்பதை நாம் உணர வேண்டும். உணர்ந்து இந்த இழிநிலை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுதேனும் நாம், தமிழுக்கு எதிரான அநீதியைத் தடுக்கத் தவறினால் இனி என்றும் முடியாது என்பதையும் நாம் அறிய வேண்டும்.
  தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி மட்டும் இருக்கவும் தமிழ், நாட்டவர் அனைவரும் படிக்கும்  மொழிப்பாடமாக இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நன்னிலை வரும்வரை, பின்வரும் மொழித்திட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
1. முதல் பகுதி என்பது தமிழ் மட்டுமே!
2. ஆங்கில வழிப் பயில்பவர்கள் தமிழைக் கட்டாயமாக ஒரு மொழிப்பாடமாகப் படிக்க வேண்டும். ஆங்கிலவழிக் கல்வி என்ற போர்வையில் தமிழைப் புதைக்கக்கூடாது என்பதற்காக இதைத் தனியாக வலியுறுத்த வேண்டி உள்ளது.
3. ஆங்கில வழிப் பயில்பவர்களுக்கு அவர்கள் படிக்கும்துறை சார்ந்த தமிழ்த்தாள் ஒன்று  புத்தகங்களைப் பார்த்து எழுதும் வகையில் இருக்க வேண்டும். இப்பொழுது ஆங்கிலவழிக் கல்வி பயில்பவர்கள் தமிழ் கற்க வேண்டும் என்பதற்காகத்தான் 2, 3 ஆம் குறிப்புகள் தேவை. எல்லாரும் தமிழைப் படித்தாக வேண்டும் என்ற சூழல் இருப்பின் இவற்றுக்குத் தேவை இரா.
4. திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாளிலும் ஆசிரியர்கள், மாணாக்கர்கள், பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே பேச வேண்டும்.
5. மத்திய அரசின் பள்ளிகளாக இருந்தாலும் உலக நிலைப் பள்ளிகளானாலும் இவற்றுக்கு ஒத்துக் கொண்டால் மட்டுமே பள்ளி நடத்துவதற்கான இசைவு வழங்க வேண்டும்.
6. தமிழ்நாட்டில் பணியாற்றுநர் – பிற அரசு நிறுவனமோ, மத்திய அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ அயலக நிறுவனமோ – எதில் பணியாற்றினாலும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.  எனவே, இப்பொழுது பணியாற்றுபவர்களுக்குத் தமிழ்மொழித் தேர்வு எழுதும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் பணியாற்றுபவர்கள் ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டி உள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் பணியாற்றுபவர்களுக்குத் தமிழ்மொழிக்கல்வி என்பது கட்டாயமாக வேண்டப்படுகின்றது. அயல்நாடுகளுக்குப்  பணிக்குச் செல்கையில் அந்நாட்டு மொழிகளில் தேர்ச்சி பெற்றுச் செல்வதைக் கட்டாயமாக்கவில்லையா? எனவே, தமிழ்நாட்டில் வாழ்வோரும் பணியாற்றுநரும் தமிழறிந்து இருக்க வேண்டும் என்பது இயற்கை அறமாகும்!
  தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை என்னும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். தமிழும் படித்தபின்பு, பிற மொழிகளைப் படிப்பதற்கு  வாய்ப்பு  ஏற்படுத்தித் தருவதற்கு யாரும் தடையாக இல்லை. இவற்றுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே சென்று விரும்பிய மொழியைக் கற்கலாம்! தமிழ்நாட்டிலாவது தமி்ழை வாழவிடலாம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை   http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png
28.04.2045 / 11.05.2014

Saturday, May 10, 2014

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி

thamizh04
நம் மொழிக்கு நம் முன்னோர் சூட்டிய பெயர் ‘தமிழ்’ என்பதுதான். ஆனால், சிலர் பிற்பட்ட வழக்கான ‘திராவிடம்’ என்பதிலிருந்து ‘தமிழ்’ வந்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூலான -  உலகின் முதல் நூலான – தமிழர்க்குத் தமிழில் கிடைத்துள்ள முதல் நூலான – தொல்காப்பியத்திலேயே ‘தமிழ்’  இடம் பெற்றுள்ளது. இதன் தொன்மையை மறைக்கும் வகையிலேயே ‘தமிழ்’ என்னும் சொல்லைப் பிற்கால வழக்காகக் குறிப்பிடுகின்றனர். சிலர் ‘தமிழ்’ என்னும் சொல் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதா என அறியாமையில் கேட்கின்றனர். அதன் மூலம் ‘தமிழ்’ என்னும் சொல் தோற்றத்தைப் பின்னுக்குத் தள்ளலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆயிரக்கணக்கில் உள்ள எடுத்துக்காட்டுகளை அள்ளிவீசினால் வாயடைத்துப் போய் அமைதி காக்கின்றனர்; அப்பொழுதும்கூட உண்மையை ஏற்கும் பண்பு அவர்களிடம் இல்லை. ‘தமிழ்’, தமிழ் இலக்கியங்களில் எத்தனை இடங்களில் இடம் பெற்றிருக்கின்றது என்பதை முனைவர் .கிருட்டிணன் தம்முடைய ‘தமிழ்நூல்களில் தமிழ்மொழி தமிழ் இனம் தமிழ்நாடு’ என்னும் நூலில் பின்வருமாறு(பக்கம் 222) குறித்துள்ளார்.


வ.எண்
காலம்             நூல்
எண்ணிக்கை
1. கி.மு.3500 தொல்காப்பியம்
5
2. கி.மு.2500 சங்க இலக்கியம்
21
3. கி.பி.200-500 சிலப்பதிகாரம்
24
4.   மணிமேகலை
5
5.   திருவள்ளுவமாலை
6
6.   திருமந்திரம்
10
7. கி.பி.500-900 அப்பர் தேவாரம்
7
8.   சம்பந்தர் தேவாரம்
260
9.   சுந்தரர் தேவாரம்
48
10.   நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்
93
11.   நந்திக்கலம்பகம்
4
12.   பாண்டிக்கோவை
30
13.   பெருங்கதை
2
14.   முத்தொள்ளாயிரம்
5
15.   திருவாசகம்
1
16.   திருக்கோவையார்
1
17. . கி.பி.1000-1200 கல்லாடம்
22
18.   பதினோராந் திருமுறை
43
19.  
சீவகசிந்தாமணி
6
20.   கம்பராமாயணம்
18
21.   பெரிய புராணம்
313
22.   அம்பிகாபதி கோவை
3
23. கி.பி.1200-1900 திருவாரூர்க் கோவை
8
24.   மதுரைக்கோவை
32
25.   தஞ்சைவாணன் கோவை
9
26.   குலோத்துங்கன் கோவை
7
27.   வில்லி பாரதம்
18
28.   திருவிளையாடற் புராணம்
65
29.   குமரகுருபரர் பாடல்கள்
105
30.   குற்றாலக் குறவஞ்சி
10
31.   தமிழ் விடு தூது
15
32.   திருவருட்பா
24
33.   திருவிலஞ்சி முருகன் பிள்ளைத் தமிழ்
35
34.   குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்
8
35.   கோமதியம்பிகை பிள்ளைத் தமிழ்
5
    மொத்தம்
1268


மேலும் பல நூல்களிலும் தமிழ் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு, தமிழகம் என்ற பெயர்களின் மூலமும் தமிழ் இடம் பெறுகின்றது. அமிழ்து, அமிழ்து, என்பதைச் சேர்த்துச் சொன்னால் அமிழ்தமிழ் எனத் தமிழ் வரும் என்பர். அதற்கேற்ப
“கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப்
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்”

என்னும் வரிகள் (சிறுபாணாற்றுப்படை 225-227) உள்ளன. இங்கே ‘தேம்பெ ய்து அமிழ்து பொதிந்து’ என்று வரும் இடத்தில் தமிழ் எனத் தோன்றுவதைப் பார்க்கலாம்.
இத் தொடரில் நாம் தமிழ் இடம் பெறும் பாடல் வரிகளைப் பார்க்கலாம். (தமிழ் இடம் பெற்ற வரிகளை மட்டும் குறிப்பிடாமல் பொருள் புரிவதற்கு அல்லது மேற்கோள் தேவை கருதி அவ்வரி இடம்பெற்ற பகுதியாகத் தரப்படுகின்றன.)


  1. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே.
(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 )

  1. செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
(தொல்காப்பியம், சொல்லதிகாரம்நூற்பா 398)

  1. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
(தொல்காப்பியம், சொல்லதிகாரம்நூற்பா 400)

  1. தமிழ்கூறு நல்லுலகத்து
(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)

  1. செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)


  1. தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின்
மகிழ் நனை, மறுகின் மதுரை
(இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்,
சிறுபாண் ஆற்றுப்படை 66-67)


  1. கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்து
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி
(கபிலர், பதிற்றுப்பத்து 63.9-10)

  1. தமிழ்வையைத் தண்ணம் புனல்
(ஆசிரியன் நல்லந்துவனார், பரிபாடல் 6.60)

  1. இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார், இக் குன்று பயன்.
(குன்றம்பூதனார், பரிபாடல் 9. 24-26)


  1. பரிமா நிரையின் பரந்தன்று வையை
 (பரிபாடல் திரட்டு 4.1-2)
  1. 11.   தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
(பரிபாடல் திரட்டு 8.5)

  1. தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது,
குன்றுதல் உண்டோ மதுரை
(பரிபாடல் திரட்டு 9.1-3)


  1. தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே
(மாமூலனார், அகநானூறு 31.14-15)

  1. தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்,
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை
(நக்கீரர், அகநானூறு 227.14-15)




  1. இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
(குடபுலவியனார், புறநானூறு 19.1-2)


  1. வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்
(வெள்ளைக் குடி நாகனார், புறநானூறு 35.2-4)

  1. அதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல்
(மோசிகீரனார், புறநானூறு 50.10)

  1. அவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன்
(ஐயூர் முடவனார், புறநானூறு 51.4-5)

  1. தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
(காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், புறநானூறு 58.13)


  1. வையக வரைப்பில் தமிழ்அகங் கேட்பப்
(கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார், புறநானூறு 168.18)

  1. தண்டமிழ் வரைப்பகங் கொண்டி யாகப்
(வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், புறநானூறு 198.12)

  1. தாம் வேண்டும் கூடல் தமிழ்
(மதுரைக்காஞ்சி தொடர்பான தனிப்பாடல்)

  1. தண் தாரான் கூடல் தமிழ்
(மதுரைக்காஞ்சி தொடர்பான தனிப்பாடல்)
ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது குறிஞ்சிப்பாட்டு (குறிஞ்சிப்பாட்டு பற்றிய குறிப்பில் இடம் பெற்றுள்ள ‘தமிழ்’)

  1. மதுரைத் தமிழ்க் கூத்தனார் (சங்கக்காலப்புலவர் பெயரில் இடம் பெற்றுள்ள ‘தமிழ்’)

  1. மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்(சங்கக்காலப்புலவர் பெயரில் இடம் பெற்றுள்ள ‘தமிழ்’)


  1. மதுரைத் தமிழ்க்கூத்தனார் நாகன் தேவனார்(சங்கக்காலப்புலவர் பெயரில் இடம் பெற்றுள்ள ‘தமிழ்’)

(தொடரும்)

தரவு :  தமிழ்ச்சிமிழ், இலக்குவனார் திருவள்ளுவன்
 

Monday, May 5, 2014

எழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்! - akaramuthala issue 25 : editorial

எழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்!

perarivalan_and_six01

  அப்பாவிகள் எழுவரும் அவர்கள் குடும்பத்தினரும் தமிழ்ச்சுற்றத்தினரும் மனிதநேயர்களும் மகிழ வேண்டிய வாய்ப்பு பறிபோய்விட்டது! பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு ஒன்று பொல்லாச் செய்தியாக மாறி விட்டது. ஏனிந்த அவலம்? யாரிதற்குப் பின்னணி? சதியாளர்கள் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இல்லை. என்றாலும் இதுபோன்ற இன எதிர்ப்புக் குரல்களும் அதனை இனப்பற்றுள்ளவர் என்ற நம்பிக்கைக்கு ஆளானவர்களே எதிரொலிப்பதும் தமிழினத்திற்கே உரியன போலும்!
  ஆட்சியில் இருந்தால் ‘இந்தியனா’கவும் இல்லாவிட்டால் ‘தமிழனா’கவும் நடந்து கொள்ளும் முதுபெரும் தலைவர், ஆட்சியில் இல்லாத பொழுதும் ‘இந்தியனா’க நடந்து கொள்வதன் காரணம் என்ன? பேராயக் கட்சியான காங்.கின் தொண்டர்அடிப் பொடியாழ்வாராகக் காட்டிக் கொண்டு தம் குடும்பத்தைக் காப்பாற்ற விரும்பும் காப்பு உணர்சி தவிர, வேறு என்னவாக இருக்க முடியும்? இன்றைய ஆளும் கட்சியான அதிமுக, காங்.ஐ வேரொடு சாய்க்க முனைப்பாகப் பரப்புரை மேற்கொள்வதால் காங்.ஐ அண்ட வேண்டிய சூழல் இவருக்கு நேர்ந்திருக்கலாம். எனினும் சிலவற்றை விளக்கக் கடமைப்பட்டுள்ளார்.
  இராசீவு  கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளின் மரணத் தண்டனையை மாற்றும் வாய்ப்பு வந்தபொழுது – மரணத்தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தாலும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழங்கி வந்தாலும் – நளினியைத் தவிர பிறரை மரணக் கொட்டிலில் தள்ளியது ஏன்?  ஈழத்தில்  அறமற்ற பன்முறைத் தாக்குதலால் தமிழர்கள் கொல்லப்பட்டது கண்டு உண்ணா நோன்பு இருந்தவர், அதனை இரண்டு மணி நேரத்திற்குள் முடித்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது ஏன்?
  http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/03/justice-sadasivam01-600x399.jpgஇப்பொழுதும் தலைமை நீதிபதி சதாசிவம்,நல்ல தீர்ப்பு வெளியாகும்  என்று சொன்னது  தமிழகத் தேர்தலுக்கு முன்பாக இருக்கலாம். ஆனால்,  அவர் தெரிவித்த நல்ல செய்தி சொல்ல  வேண்டிய நாள் தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு மறுநாள்தான்! அவ்வாறிருக்க  எழுவர் விடுதலையால் தமிழக அரசியல் வாக்கெடுப்பில் மாற்றம் நிகழ வாய்ப்பில்லை. அவ்வாறிருந்தும் – ஈழத்தமிழர்களுக்காகவே ஆட்சியை இழந்தவர் – மனித நேயமற்ற முறையில் அதைப் பற்றிய கருத்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன? இரத்தப் பசியாறும் ‘மேகலை’யின் குரலாக ஒலித்ததன் காரணம் என்ன? இவ்வாறு சுருதி தப்பிய ஓசைக்கு மாறாகத் தம் மீது தொடுத்த மிரட்டல்களை வெளிப்படையாகச் சொல்லி இருக்கலாமே! அடுத்தவருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றால் அதைவிட நல்ல பெயர் கிடைக்கத்தானே முயல வேண்டும். இருப்பினும் அவப்பெயர் தேடிக் கொண்டது ஏன்?
  எழுவருக்குரிய நல்ல தீர்ப்பு விடுதலையை  ஏற்பதைத் தவிர வேறு என்னவாக இருகக முடியும்? தாம் ஓய்வு பெறும் பொழுது மனித நேயத்துடன் பணி நிறைவுத் தீர்ப்பாக வழங்க இருந்த  தலைமை நீதிபதி அதனை வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், தீர்ப்பு என்ற பெயரில் இடி விழச் செய்தாரே! கண்டிப்பாக இதுதான் தீர்ப்பு எனில் அவர்,  அமைதி காத்திருப்பார். அல்லது பணிநிறைவுறுவதால் தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு தமக்கு இல்லாமல் போவதாகச் சொல்லி இருப்பார்.  எனவே, அவரது செய்தி நமக்குக் கூறியது தமிழக அரசின் முடிவை ஏற்று எழுவரின் விடுதலைக்குப் பச்சைக் கொடி காட்டுவதைத்தானே! ஆனால், அவர் கையில் ஆயத்தமாக வைத்திருந்த பச்சைக் கொடியைப் பிடுங்கிச் சிவப்புக் கொடியைத் திணிக்கும் இரத்தப்பசியாற்றும் மேகலையின் பணியைச் செய்தது ஏன்?
 இத்தீர்ப்பு தனி ஒரு நீதிபதியின் தீர்ப்பு அன்று. தலைமைநீதிபதி சதாசிவம், நீதிபதி இரஞ்சன்  கோகோய், நீதிபதி இரமணா ஆகியோர் அடங்கிய ஆயத்தால் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படும் தீர்ப்புதான்.
மூவரின் தீர்ப்பும் மாறுபட்ட நிலையில் இருந்திருக்குமெனில் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள், நல்ல தீர்ப்பு என்று கூறியிருக்க மாட்டார். மேலும், அரசியல் அமைப்பு ஆயத்தின் கேட்பிற்குரிய வழக்கு இல்லை என்று முன்பே மறுத்துள்ள பொழுது,   இப்பொழுது அவ்வாறு அனுப்பியது ஏன்?  மத்திய அரசின் செல்வாக்கால் விளைந்த முடிவாகத்தானே இருக்க முடியும்!
  உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு  வழங்கும் எழுவரின் விடுதலை ஆணை சரி எனச் சொல்ல வேண்டியவர்கள் அரசியல் யாப்பு ஆயத்திற்கு அனுப்பியது ஏன்?  அரசியல் யாப்பு ஆயம்தான் முடிவெடுக்க வேண்டும் எனில், அதனை முன்பே சொல்லியிருக்க மாட்டார்களா? வழக்கினைத் தள்ளிப் போட்டிருக்க வேண்டிய தேவை யில்லையே! அல்லது இதுதான் அவர்கள் முடிவெனில், அதனைத் தீர்ப்பு சொல்லும் இறுதி நாளில் எடுத்திருக்க வாய்ப்பில்லையே! எனவே, தமிழக அரசின் ஆணை செல்லும் எனச் சொல்ல வந்தவர்கள்,  மாறான கருத்தினை வெளிப்படுத்தியமைக்கு – அடாத தீர்ப்பை வழங்கியதற்கு – அறமற்ற பின்சூழல் ஏதோ உள்ளது! அதைத்தான் நயவஞ்சகக் காங். தன் ஊதுகுழல் மூலம் வெளிப்படுத்தி உள்ளது என்பதே உண்மை!
  புதிய தலைமை நீதிபதி இராசேந்திரா மால் லோதா  அவர்களின் பதவிக்காலம் 5 மாதங்களே!. புதிய அரசு, புதியதாக அரசு வழக்குரைஞர்களையும் வாதுரைஞர்களையும் அமர்த்தச் சற்றுக் காலம் பிடிக்கும். எனவே, ஐந்து திங்களுக்குள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் யாப்பு ஆயம் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தாலும்  காலம் மேலும்மேலும் நீளும். எனவே, அப்பாவிகள் சிறையிலேயே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதுதானே இரத்தப்பசியாறுவோரின் உள்ளக் கிடக்கை. அதற்கு இனமானம் பேசுவோர் துணை நிற்கலாமா?
  மு.க.தாலின் முயற்சியால் எடுக்கப்பட்ட காங். கின் புறக்கணிப்பு முடிவு, தி.மு.க.வின்இழந்த செல்வாக்கைSonia_Karunanidhi01 மீட்டு வரும் வேளையில், மீண்டும் இரத்தப்பசியாற்றும் மேகலையின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்தது ஏன்? காங்.கின் தமிழினப் படுகொலைச் செயல்களுக்கு இதுவரை  கண்டுங்காணாமல் துணை நின்றது போதும், இனியேனும் தமிழர் நலம் காப்போம் என எண்ணாமல் மீண்டும்  காங்கிரசுக் காரனாகவே மாறியது ஏன்? இரண்டகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அதே பாதையில் நடைபோட்டது ஏன்?
  நெஞ்சுக்கு நீதியில் ‘திமுகவிற்கு இறுதிப் பயணம்’ என அத்தியாயம் எழுதத் தொடங்கி விட்டாரா?  இன  உணர்வை இதற்கு முன்பு ஊட்டி வந்தவர், இன இரண்டகராக மாறுவது ஏன்?
  நாம் என்ன சொன்னாலும் நம்பும் – என்ன செய்தாலும் ஏற்கும் – அப்பாவிகள் தமிழர்கள் என்பதாலா?
  இனியேனும் மனந் திருந்தி, தம்மை அவ்வாறு சொல்லச் செய்த சூழல் என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அல்லது  தமிழினம், ஈழத்தமிழர் உரிமை, என்பன பற்றி எதுவும் பேசாமல், தமிழினத்தலைவர் என்று சொல்லிக் கொள்ளாமல் அமைதி காக்க வேண்டும்!
எதைச் செய்யப் போகிறார் முதுபெரும் தலைவர்?
- வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். (குறள்116)
கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல்தேயும் தேயாது சொல். (பழமொழி 39.)
இதழுரை http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png
21.04.2045  04.05.2014

Followers

Blog Archive