Monday, November 24, 2014
Monday, November 17, 2014
‘இந்தியால் தமிழ் கெடும்’ என உணர்த்திய இலக்குவனார்
இலக்குவனார் திருவள்ளுவன்
திங்கள், 17 நவம்பர் 2014 (18:18 IST)
(கார்த்திகை 1 / நவம்பர் 17ஆம் நாள், தமிழறிஞர் இலக்குவனார் பிறந்த நாள்)

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்தை எளிய தமிழில்
மக்களிடையே பரப்பினார். சிலர் தவறான கண்கொண்டு தங்கள் விருப்பம் போல்
தொல்காப்பியருக்கு எதிரான கருத்துகளைத் தொல்காப்பியத்திற்கு உரையாக
அளித்தனர். தொல்காப்பியரைத் தொல்காப்பியர் கண்கொண்டு நோக்கி, உண்மையான எளிய
விளக்கம் அளித்தார். தொல்காப்பியர் கால ஆராய்ச்சி, அவர்காலச் சொற்கள்
குறித்த ஆராய்ச்சி, அவருக்கு முன்பிருந்த தமிழ் இலக்கியச் சிறப்பு என
அறிவியல் ஆய்வு முறையில் ஆராய்ந்து மக்களிடையே பரப்பினார். இந்திய வரலாறு
படிப்போர் தொல்காப்பியம் படிக்க வேண்டும்; அது வாழ்வியல் நூல் என்றார்.
தொல்காப்பியம் பற்றிய கட்டுரைகளையும் விளக்கவுரைகளையும் அளித்தார்.
தொல்காப்பிய ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டார். தொல்காப்பியருக்கு
முன்னரும் தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் இருந்தன என்பதை வெளிப்படுத்தினார்.
தொல்காப்பியத்தை உலகம் அறிய வேண்டும் என விரும்பினார். தாமே அனைவருக்கும்
புரியும் வகையில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கான
விளக்க உரைகளையும் ஆங்கிலத்தில் அளித்தார். எனவே, உலக அறிஞர்கள்
தொல்காப்பியத்தின் சிறப்பையும் தமிழின் பெருமையையும் உணரலாயினர். தமிழ்ப்
புலவர்களே அறியாதிருந்த தொல்காப்பியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றினார்.
இலக்கியம் என்றாலே புலவர்களுக்கு உரியது என்ற தவறான எண்ணம் இருந்தது. அந்த
எண்ணத்தை மாற்றிச் சங்க இலக்கியங்கள், மக்களுக்கு உரியன என்பதை
உணர்த்தினார். சொற்பொழிவுகள் மூலமும் படைப்புகள் மூலமும் சங்க
இலக்கியங்களின் சிறப்பை நாட்டினருக்கு எடுத்துரைத்தார். நாட்டில் முதல்
முறையாக அஞ்சல் வழிக் கல்வியை ஏற்படுத்தி அதன் மூலம் சங்க இலக்கியங்களைப்
பரப்பினார். சங்க இலக்கியங்களை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்கே ‘சங்க
இலக்கியம்’ என்றும் ‘இலக்கியம்’ என்றும் இதழ்கள் நடத்தினார்.
அறிஞர் வை.தாமோதரனாரும் அறிஞர் உ.வே.சா அவர்களும் இடர்ப்பட்டு ஏட்டில்
இருந்து அச்சிற்குக் கொண்டு வந்த சங்க இலக்கியங்களை மக்களிடம் கொண்டு
சேர்த்தார். அரும்பாடுபட்ட அறிஞர்களின் உழைப்பு, இதனால் மக்களை அடைந்து
உரிய பயனைப் பெற்றது. பாடத் திட்டங்களில் தொல்காப்பியத்தையும் சங்க
இலக்கியங்களையும் சேர்த்து, வளரும் மாணவத் தலைமுறையினர் அவற்றை அறியச்
செய்தார்.

மாணவப் பருவத்திலேயே திருக்குறள் முழுமையும் கற்றவர், இலக்குவனார்.
கற்றதுடன் இல்லாமல் 'குறள்நெறி ஓங்கின் குடியரசோங்கும்' எனப் பரப்பினார்.
'குறள்நெறி' எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் இதழ்கள் நடத்தினார்.
திருக்குறளுக்கு எளிய பொழிப்புரை வழங்கினார். 'அமைச்சர் யார்', 'எல்லாரும்
இந்நாட்டு மன்னர்', 'வள்ளுவர் கண்ட இல்லறம்', 'வள்ளுவர் வகுத்த அரசியல்'
என்பன போன்று வெவ்வேறு தலைப்புகளில் திருக்குறள் அதிகாரங்களைப் பகுத்து
மக்களிடையே குறள் நெறியைப் பரப்பினார்.
'பழந்தமிழ்' நூல் மூலம் தமிழின் சிறப்பை நாம் உணரச் செய்தார். “தமிழே உலக
மொழிகளின் தாய்” என ஆராய்ந்து உரைத்தார். பரிதிமாற் கலைஞர் வழியில் “தமிழ்
உயர்தனிச் செம்மொழி” என்றார். மறைமலை அடிகள் வழியில் தனித் தமிழைப்
போற்றினார். தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் வழியில் எளிய தமிழில்
நூல்கள் எழுதினார். சமசுகிருதச் சொற்கள் எனப் பரப்பப்பட்ட சொற்களை எல்லாம்
தமிழ்ச்சொற்களே என நிறுவினார்.
திறமான புலமை எனில் வெளிநாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்
என்னும் பாரதியின் பாடலைக் கட்டளையாக ஏற்றார். பிற மொழியினரும்
செந்தமிழின் சிறப்பை உணர வேண்டும் என எண்ணினார். எனவே, தமிழ் மொழி குறித்து
ஆங்கிலத்திலும் தொல்காப்பிய மொழிபெயர்ப்புப் போல் வேறு பல நூல்கள் எழுதி
வெளியிட்டார்.
சேமம் உற வேண்டும் எனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
என்னும் பாரதியின் வாக்கை நடைமுறைப்படுத்த எண்ணினார்.
“தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை” என்ற பாரதிதாசன் கவலையைப் போக்க எண்ணினார்.
தான் வாழ்ந்த ஊர்கள்தோறும் தமிழ் அமைப்புகள் ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ்
வகுப்புகள் நடத்தினார். தமிழ்ப் பெயர்கள் சூட்டவும் கடைப்பெயர்கள் தமிழில்
இருக்கவும் ஊர்வலமாகச் சென்று வேண்டுகோள் விடுத்துச் செயற்படுத்தினார்.
‘தமிழர்க்குத் தேசிய மொழி தமிழே’ எனவும் ‘இந்தியால் தமிழ் கெடும்’ எனவும்
உணர்த்தினார். மொழி, இனச் சமஉரிமை உள்ள கூட்டரசு அமைப்பாக நம் நாடு இருக்க
வேண்டும் என்பதை வலியுறுத்தினார். எனவே மத்திய அரசு இந்தியைத் திணித்த
பொழுது தமிழ் மக்களையும் மாணவர்களையும் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபடச்
செய்தார். தான் கைது செய்யப்படுவோம் என அறிந்த பொழுது, “யாரேனும்
தமிழுக்காகப் பலியாக வேண்டும். நான் முதல் ஆளாக இருப்பேன்” எனக் கூறிப்
போராட்டத்தைத் தொடர்ந்தார். ‘இந்தி எதிர்ப்புப் போரின் தளபதி’ என அப்போதைய
அரசு குற்றம் சுமத்தி இவரைச் சிறையில் அடைத்தது.
தமிழ்நாட்டில் கல்வி, வேலை வாய்ப்பு, அலுவலகப் பயன்பாடு, வழிபாட்டு நிலை
என எல்லா இடத்திலும் தமிழே இருக்க வேண்டும் என்பதைப் பரப்பினார்.
தமிழ்நாட்டில் தமிழ், கல்வி மொழியாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் அறிஞர்
பெருமக்களும் அறிவியலாளர்களும் தோன்றுவர் என்றார். மக்களுக்கு இவற்றை
உணர்த்த, ‘தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம்’ மேற்கொள்ளத் திட்டமிட்டார். நாடு
முழுவதும் வரவேற்பு பெருகியது. இதனால் தம் ஆட்சி கவிழும் என எண்ணிய
காங்கிரசு அரசாங்கம் தமிழ்ப் போராளி இலக்குவனாரை இந்தியப் பாதுகாப்புச்
சட்டத்தின் கீழ்க் கைது செய்து, சிறையில் அடைத்தது.
பிற நாடுகளில் மொழி அறிஞர்களைப் போற்றுகின்றனர். நம் நாட்டில்
போற்றாவிட்டாலும் பரவாயில்லை. தண்டிக்கிறார்களே என மனம் வருந்தினார்.
எனினும் தமிழ் காக்கும் கொள்கையில் இருந்து பின் வாங்கவில்லை. வாழ்க்கை
முழுவதையும் தமிழ்நலம் நாடிய போராட்டத்திலேயே செலவழித்தார்.
மொழிக்காகச் சிறை சென்ற மொழி அறிஞர், படிக்கும் பொழுதே மொழிபெயர்ப்புக்
காவியம் படைத்த படைப்பாளர், தம் தமிழ்த் தொண்டால் பல கல்லூரிகளில் வேலை
வாய்ப்பை இழந்தும் மனம் தளராதவர், தாம் பெற்ற ஊதியத்தையும் தம்
வாழ்நாளையும் தமிழுக்காகவே செலவிட்டவர், தமிழ்ப் போராளி பேராசிரியர்
சி.இலக்குவனார் (17.01.1909 - 03.09.1973).
செந்தமிழ் மாமணி இலக்குவனாரைப் போற்றுவோம்! இலக்குவனார் வழியில் இனிய தமிழைக் காப்போம்!
Friday, November 14, 2014
வாசனை இழந்தது காங்.; ‘வாசனை’ இல்லா வாசன் – இலக்குவனார் திருவள்ளுவன்
வாசனை இழந்தது காங்.;
‘வாசனை’ இல்லா வாசன்
ஊடகங்களில் உலா வந்த செய்தி
உண்மையாயிற்று. ஆம்! வாசன் பேராயக்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். புதிய
கட்சி தொடங்குகிறார். என்றாலும் புதிய ஊர்தியில் பழைய பாதையில் செல்ல
உள்ளாரே தவிர, புதிய பாதையில் நடைபோடப்போவதில்லை என்பதை அவரே
உறுதிப்படுத்தி விட்டார்.
தனக்குப் பல பொறுப்புகளையும் பதவிகளையும்
தந்த சோனியாவையும் கட்சியையும் தாக்க வேண்டா என எண்ணுவது நல்லது.
அவ்வாறில்லாவிட்டாலும் தனிமனிதத் தாக்குதலற்ற அரசியலே நன்று. என்றாலும்
கொள்கையில் மாற்றம் இல்லை என்ற பொழுது அவர் எக்கட்சியில் இருந்தால்
யாருக்கு என்ன?
பேராயக்கட்சியில் உள்ளவர்களில்
பெரும்பகுதியினர் வாசனின் அணியினரே! அந்த அளவில் அக்கட்சி கரைவது
மகிழ்ச்சியே! 1967 இல் துடைத்தெறியப்பட்ட அக்கட்சி தலை எடுக்கமுடியாமல்
போவது தமிழ்மக்களுக்கு நன்மைதானே! ஆனால், வாசன் பிரிவது கொள்கை
அடிப்படையில் அல்ல! அக்கட்சிக் கொள்கைதான் தனக்கும் என்று
தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளைப்பற்றிக் கேட்ட பொழுது தடைசெய்யப்பட்ட
இயக்கத்திற்கு என்றும் தான் எதிரி என்றுதான் சொல்லிஉள்ளார். பதவியில்
இருந்த பொழுதும் தமிழர் நலனுக்கென்று ஒன்றும் பாடுபட்டவர் அல்லர்.
தொடர்வண்டித்துறையில் மலையாளிகள் ஆதிக்கம் உள்ளது. இலாலு அத் துறையின்
பொறுப்பேற்ற பின்பு பீகாரிகள் பெருமளவில் தொடரித்துறையில் நுழைந்தனர். இவர்
கப்பல் போக்குவரத்தில் தமிழர்கள் வேலைவாய்ப்பு பெற ஒன்றும் செய்தவரல்லர்.
காவிரி, பெரியாறு நீர்ப்பங்கீடு முதலான சிக்கல்களில் தமிழ்நாட்டின் குரலை
எதிரொலித்தவர் அல்லர்! இராசீவு வழக்கில் அப்பாவிகள் சிக்க வைக்கப்பட்டதில்
இருந்து மீட்கவும் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்கவும் ஒரு துரும்புகூட
எடுத்துப் போட்டவர் அல்லர்! தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால்
கொல்லப்பட்ட பொழுதும் துன்புற்ற பொழுதும் அமைச்சரவை உறுப்பினர் என்ற
முறையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை. பதவி இல்லாதபொழுது ஒன்றும்
இருந்த பொழுது ஒன்றும் பேசும் அரசியல்வாதிகளைப் போல் இன்றைக்கு ஈழத்தமிழர்
நலனில் கருத்து உள்ளவர்போல் பேசுகின்றார். ஆனால், நூறாயிரக்கணக்கான
ஈழத்தமிழர்கள், வஞ்சகமாகக் கொலையுண்ட பொழுது – கொத்துக் குண்டுகளால்
அழிக்கப்பட்ட பொழுது – தமிழ் நிலம் மக்களுடனும் பிற உயிரினங்களுடனும்
சிதைக்கப்பட்ட பொழுது – அதற்குப் பின்னரும் சிங்கள வன்முறை தொடர்கின்ற
பொழுது – இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என உலக மனித நேயர்கள்
குரல் கொடுத்த பொழுது – தமிழகச் சட்டமன்றத்திலேயே கொலைக்குற்றவாளிகள்
தண்டிக்கப்படவும் தமிழ்ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படவும்
தீர்மானம் இயற்றிய பொழுது – தன் பதவிச் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒன்றும்
செய்யாத உத்தமர்தான் இவர்.
பதவி நலன்களில் மூழ்கித்
திளைத்தபொழுதுதான் அவ்வாறு இருந்தார் என்றால், இப்பொழுதாவது கழுவாயாக
எவ்வாறு ஈழத்தமிழர்கள் வஞ்சகத்தில் சிக்க வைக்கப்பட்டனர்? எப்படிக்
கொல்லப்பட்டனர்? இந்திய அரசின் பங்களிப்பு எவ்வாறு அமைந்துள்ளது?
குற்றவாளிகளும் உடந்தைக் குற்றவாளிகளும் தண்டனை பெற வேண்டிய முயற்சிகளில்
எவ்வாறு ஈடுபடவேண்டும்? தமிழ் ஈழம் மலர என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக்கெடுப்பிற்குப் பன்னாடடு மன்றத்தை எவ்வாறு வலியுறுத்தலாம்?
தமிழ்நாட்டில் தமிழே எங்கும் ஆட்சி செய்ய என்ன செய்ய வேண்டும்? மத்திய
அரசில் தமிழ் தலைமையிடத்தைப் பெற என்ன ஆற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள
எல்லா மாநிலக் கல்வித் திட்டத்திலும் வரலாறு முதலான பாடத்திட்டங்களில்
தமிழக வரலாறும் சேர்க்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ன? என்றெல்லாம் அவர்
சிந்திக்க மாட்டார். அவர் எண்ணமெல்லாம் தமிழ்நாட்டில் பேராயக்கட்சி –
காங்கிரசுக்கட்சி – என்றால்தான்தான் என மெய்ப்பித்து விட்டு மீண்டும்
அக்கட்சியில் இணைந்து பதவிகள் பெற வேண்டும் என்பதுதான். ஒட்டுப்பேராயமாக –
ஒட்டுக் காங்கிரசாக – இருக்கும் அக்கட்சியுடன் தமிழகக் கட்சிகள் கூட்டணி
வைக்க முன் வருவர்; அதன் மூலம் வரும் தேர்தலில் சில தொகுதிகளையாவது அறுவடை
செய்ய வேண்டும் என்பதே அதற்கான கனவாகக் கொண்டுள்ளார்.
எனவே, தமிழர் நலனில் ஈடுபாடு கொண்ட
கட்சிகள் வாசனின் புதிய கட்சியைப் புறக்கணிக்க வேண்டும். பேராயம் –
காங்கிரசு – எந்த வடிவில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இல்லாதொழிய வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களும் பேராயக்கட்சியையும் ஒட்டுப்பேராயமாக உலா
வரப்புறப்பட்டுள்ள வாசன் கட்சியையும் அடியோடு விரட்ட வேண்டும்.
தமிழறியான் தமிழர்நிலை தமிழர்நெறி
தமிழர்களின் தேவை, வாழ்வு
தமையறிதல் உண்டோ?எந் நாளுமில்லை!
(பாவேந்தர் பாரதிதாசன், தமிழியக்கம்)
என்பதை நாம் உணர வேண்டும். தமிழ்மணம் இல்லா யாராயினும் நம்மை ஆள இடங் கொடுக்கக்கூடாது. எனவே,
தமிழெங்கே! தமிழன்நிலை என்னஎனத்
தாமறியாத் தமிழர் என்பார்
தமிழர்நலம் காப்பவராய் அரசியலின்
சார்பாக வரமு யன்றால்
இமைப்போதும் தாழ்க்காமல் எவ்வகையும்
கிளர்ந்தெழுதல் வேண்டும்! நம்மில்
அமைவாக ஆயிரம்பேர் அறிஞர்உள்ளார்
எனமுரசம் ஆர்த்துச் சொல்வோம்.
(பாவேந்தர் பாரதிதாசன், தமிழியக்கம்)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
ஐப்பசி 23, 2045 / 09.11.2014
அகரமுதல52
Thursday, November 6, 2014
தமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு! காரணமானவர்களை அரசியலிலிருந்து தூக்கு!
தமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு! காரணமானவர்களை அரசியலிலிருந்து தூக்கு!
தமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு! காரணமானவர்களை அரசியலிலிருந்து தூக்கு!
இலங்கையில் பண்டாரநாயக்கா
தலைமையாளராக(தலைமைஅமைச்சராக) இருந்தபொழுது 1956 ஆம்ஆண்டில் தூக்குத் தண்டனை
ஒழிக்கப்பட்டது. இருப்பினும் அவர் படுகொலைசெய்யப்பட்ட பின்பு,1959இல்
மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால்,1978 இல் ஐக்கியத் தேசியக்கட்சி
அரசாங்கத்தில் இதற்குப் பல வரையறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால்
தூக்குத்தண்டனை அல்லது மரணத்தண்டனை என்பது ஏட்டளவில்தான் உள்ளது. இதனால்
1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையில் மரணத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
நீதிமன்றத்தால் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களும் ஆயுள்தண்டனைபோல்
சிறைவாசியில் தங்கள்வாழ்வைக் கழிக்கின்றனர்.
சிங்களக் கொடுங்கோல் அரசு
சிங்களர்க்கான தூக்குத்தண்டனையைத்தான் ஒழித்ததே தவிர, நூறாயிரக்கணக்கான
ஈழத்தமிழர்களை ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்தது. முள்ளிவாய்ய்கால்
பேரவலத்திற்குப் பின்பும் அதன் படுகொலை தொடர்கதையாகத்தான் உள்ளது.
சிங்கள அரசின் தமிழின அழிப்பின் ஒரு
பகுதிதான் இதுவரை 578 தமிழக மீனவரைச் சிங்களக்கடற்படை சுட்டுக் கொன்றது.
இப்பொழுது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுபோல் ஒரு நாடகமாடியுள்ளது.
கார்த்திகை 12, 2042 / நவ.28, 2011
அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள்
எமர்சன், அகஃச்டசு, வில்சன், பிரசாத்து, இலாங்லெட்டு ஆகியோரை இலங்கைக்
கடற்படையினர், போதை பொருள் கடத்தியதாகத் தளையிட்டனர். அவர்களுக்கு இலங்கை
உயர்நீதிமன்றம் ஐப்பசி 13,2045 / 30.10.2014 அன்று தூக்குத் தண்டனை
விதித்துள்ளது.
தமிழினப்பேரழிப்பில் கொடுங்கோல்
சிங்களம் ஈடுபட்டுவருவதில் ஒரு பகுதிதான் இது. சுப்பிசாமி, பாசக அரசின்
கூட்டு முயற்சியால் அரங்கேறும் நாடகமாகவும் இருக்கலாம் என்பதே பலரின்
ஐயப்பாடு. கொடுங்கோல் சிங்கள அரசு தமிழர்கள் உயிர்களைப் பறிக்க இருந்த
பொழுது இவர்களின் தலையீட்டால் அவர்கள் உயிர் பிழைத்ததுபோல் நாடகமாடி நல்ல
பெயர் எடுக்க மேற்கொள்ளும் முயற்சியாக இருக்கும் என்பதே பெரும்பாலோர்
எண்ணம்.
ஐவர் உயிர் காப்பாற்றப்படவேண்டும்.
அவ்வாறு காப்பாற்றப்பட்டபின்பும்நயவஞ்சகர்களை இருக்க வேண்டிய இடத்தில்தான்
வைக்க வேண்டும். பொய்யான போதை வழக்கிலிருந்து இவர்களைக்காக்கத் தவறியதால்
காங்., பாசக அரசுகள் சிங்களச் செயற்பாட்டிற்கு உடந்தையாளரகாகக்
கருதப்படுவதில் தவறில்லை! இதுவரை சிங்களச்சிறையில் அல்லற்படும் தமிழக
மீனவர்களுக்குத் தொடர் வாழ்வுத் தொகை தராததும் தவறாகும்.இனியேனும்
சிங்களச்சிறையிலிருக்கும் தமிழக மீனவர் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும்
மாதம்தோறும் இருபதாயிரம் உரூபாய்க்குக் குறைவில்லாமல் பொருளுதவி அளிக்க
வேண்டும்.
தமிழர் நலன் தொடர்பில் மத்திய
அரசிற்குஎதிராகக் குரல் கொடுத்து வரும் அ.தி.மு.க. அரசு, முனைப்பான
நடவடிக்கை எடுக்க வேண்டும். மடல் அனுப்பிக் கொண்டிராமல் அமைச்சர்
குழுவொன்று நேரில் மத்திய அரசின் பொறுப்பில் உள்ளவர்களைச் சந்தித்து
அனைவரும் விரைவில் விடுதலை அடைய ஆவன செய்ய வேண்டும்.
இராமநாதபுர மாவட்ட மீனவர்கள்
நாள்தோறும் இவர்களின் விடுதலைக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். அதே
நேரம், அவர்கள், போக்குவரத்துச்சீர்குலைவு முதலான செயல்களில் ஈடுபடுவது
அவர்களின் பொதுநலனுக்கு எதிரானது என்பதை உணர வேண்டும். எனவே, அமைதியான
முறையில் அழுத்தமான எதிர்ப்பைக் காட்ட வேண்டும். பிற மாவட்ட மீனவர்களும்
தமிழ் அமைப்புகளும் தமிழ்நலம் நாடும் கட்சிகளும் இவர்கள்
விடுதலைக்காகப்போராடுவது வரவேற்கத்தக்கது.ஆனால், தங்கள் தலைவியின்
விடுதலைக்காகப் பல வகைகளிலும் போராடிய ஆளும் கட்சியினர், அமைதி காப்பது
வருத்தத்திற்குரியதே! மீனவர்களின் விடுதலைக்கான அவர்களின் அமைதியான
கிளர்ச்சியே அரசின் கவனத்தைப் பெரிதும் ஈர்ப்பதாக அமையும். கட்சித்தலைமை
சரியான முறையில் வழி நடத்த வேண்டும்.
- ஐவர் விடுதலை, இதுவரை கொல்லப்பட்ட ஒவ்வொருவர் குடும்பத்தினருக்கும் உரூபாய் ஐம்பது இலட்சம் உதவி,
- உறுப்புகள் இழந்த ஒவ்வொருவருக்கும் முழுமையான உடல் நலனுக்கான அனைத்துச் செலவையும் தருவதுடன் உரூபாய் 30 இலட்சம் உதவி,
- படகு, வலை முதலான உடைமைகளை இழந்தவர்களுக்கு அவற்றைப்புதியதாக வழங்குவதுடன் ஒவ்வொருவருக்கும் உரூபாய் 20 இலட்சம் உதவி
இந்திய அரசு வழங்க வேண்டும்.
இத்தகைய இழப்பீட்டைச் சிங்களஅரசிடமிருந்தும் பெற்றுத் தரவேண்டும்.
இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
மீனவர்கள் கண்ணீர்
கொடுங்கோல் சிங்களரை ஒழிக்கட்டும்!
காரணமான இந்தியர்களை உரிய பொறுப்புகளில் இருந்து அகற்றட்டும்!
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
(திருவள்ளுவர், திருக்குறள் 555)
இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை 

ஐப்பசி 16, 2045 / நவ.2, 2014
Subscribe to:
Comments (Atom)
Followers
Blog Archive
-
▼
2026
(43)
-
▼
April
(14)
- சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055: இலக்குவனார் திர...
- நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – இலக...
- 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் - நூலாய்வு 3 : இல...
- மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் ...
- சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: இலக்குவனார் திர...
- குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுண...
- இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் நிறைவுரை...
- சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046: இலக்குவனார் திர...
- நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – இலக...
- குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்...
- தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!...
- இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 5: கல்வி ...
- சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: இலக்குவனார் திர...
- தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 10: தமிழ்ம...
-
▼
April
(14)



