Friday, April 3, 2015

கலைச்சொல் தெளிவோம்! 127: ஞமன்-pointer


scale-pointer
 பாயிண்ட்டர்/pointer என்பதற்குச் சுட்டுமுள், சுட்டிக்காட்டி, குறிமுள், காட்டி, சுட்டி, எனப் பலவாறாக ஆட்சியியல், வேதியியல், பொறிநுட்பவியல், மனையியல், தகவல் நுட்பவியல், கணக்கியல், இயற்பியல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
 தெரிகோன் ஞமன்போல (புறநானூறு 6. 9) எனத் துலாக் கோலின் முள்முனை கூறப்பட்டுள்ளது. மேலே குறித்தவற்றைவிடச் சங்கச்சொல் சிறப்பாகவே உள்ளது.

ஞமன்-pointer
- இலக்குவனார் திருவள்ளுவன்


கலைச்சொல் தெளிவோம்! 126 : கொழு-awl

awl
நாஞ்சில்ஆடிய கொழுவழிமருங்கின் (பதிற்றுப்பத்து 58.17)
என வருவது போன்று கொழு(65) என்னும் சொல் கொழுப்பு, செழிப்பு, கலப்பையில் பதிக்கும் இரும்புஆணி, துளையிடும் பெரியஊசி முதலான பொருள்களில் கையாளப்பட்டுள்ளது.
துளையிடும் பெரிய ஊசி என்னும் பொருளில்,
கொழுச்சென்ற வழித் துன்னூசி யினிது செல்லுமாறுபோல
(தொல். பாயி. உரை). எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இப்பொழுது ஆ(வ்)ல்/ awl-தமரூசி (தொல்.,பொறி.,கல்.) என்றும் கூரூசி(தொல்.) என்றும் சொல்லப்படுகின்றது. சங்கச் சொல்லாகிய கொழு என்பதே பொருத்தமான சொல்லாக அமைகின்றது.
 கொழு-awl
- இலக்குவனார் திருவள்ளுவன்


கலைச்சொல் தெளிவோம்! 125 : இவரி/இவருநர்-jockey


JOCKEY
சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் (நற்றிணை 67.1)
குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல், உந்தி (மதுரைக்காஞ்சி 245)
என்னும் இடங்களில் செல்லுதல், செலுத்துதல் என்னும் பொருள்களில் இவர்தல் கையாளப்பட்டுள்ளது. குதிரையேறிச் செலுத்துபவரை இவருநர் எனலாம். பொறியியல், இயற்பியல் முதலான அறிவியல் துறைகளில் இவரி எனச் சொல்லலாம்.
இவரி/இவருநர்-jockey
- இலக்குவனார் திருவள்ளுவன்


Followers

Blog Archive