Sunday, July 5, 2015

தாய்த்தமிழும் மலையாளமும் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்



thamizh_and_malayalam_a

தாய்த்தமிழும் மலையாளமும் 1

  தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்ந்தாலும் தமிழ் நாட்டு வரலாறு போன்று தமிழ் மொழியின் உண்மையான வரலாறும் அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தப்படவில்லை. போதிய சான்றுகள் இருப்பினும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவது போன்று தமிழின் தொன்மைபற்றியும் நாம் பேசி வருகிறோம்; பேசும் அளவைவிடக் குறைவாக எழுதி வருகிறோம். நடுநிலை ஆய்வறிஞர்களால் தமிழ்மொழி வரலாறும் தமிழ்க்குடும்ப மொழிகளின் வரலாறும் தமிழ்மொழியின் தாய்மை வரலாறும் எழுதப்பெற்று அனைத்து மொழிகளிலும் பெயர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் இங்கே முழுமையாக ஆராயாவிட்டாலும் தமிழுக்கும் தமிழ்க் குடும்ப மொழியான மலையாளத்திற்கும் உள்ள உறவு பற்றி நாம் காண்போம்.
  திராவிட மொழி, மூல முதன்மொழி, மூலத் திராவிடமொழி, போன்ற தவறான எடுகோள்கள் ஆய்வு உலகத்தில் இருந்து தொலைந்தால்தான் உண்மையான மொழி வரலாற்றை நாம் அறிய முடியும். மொழி வரலாற்றை அறிவதற்குரிய பெருங்கேடு என்னவெனில், தமிழ் மொழி வரலாற்றை எழுதுவோரில் பெரும்பான்மையர் நடுவுநிலை தவறி, ஆய்வு நெறிக்கு மாறாக உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் சிறப்புகளை மறைப்பவர்களாகவும் சிதைப்பவர்களாகவும் உள்ளனர். தமிழ்க் குடும்ப மொழிகளின் வரலாறுகளை எழுதுபவர்களோ நடுநிலை பிறழ்ந்து அவரவர் மொழியில் இருந்து தமிழ் தோன்றியது போன்று அல்லது வேறு மொழியில் இருந்து தமிழும் அவரவர் மொழியும் ஒரே நேரம் பிரிந்தது போன்றும் அதனால் தமிழின் தாய்மைநிலை பற்றிய கருத்துகள் தவறு என்ற அளவிலும் மொழிகளின் தோற்றத்தைத் திரிப்பது போன்று அல்லது அவ்வாறு பிரிந்தவற்றில் மூத்த மொழி தத்தம் மொழியே என்று உண்மையை மறைப்பது போன்று தவறான கருத்துகளை விதைத்து வருகின்றனர். இச் சூழலில் கிடைக்கக் கூடிய தவறான இவை போன்ற தகவல்கள் அடிப்படையில் ஆராய்ச்சி உணர்வு இன்றி எழுதுவோரும் உள்ளனர். எனவே, அறிஞர் கால்டுவல் போல் ஓரறிஞர் தோன்றி உண்மை வரலாற்றை உலகிற்கு உணர்த்த வேண்டும்.
    தமிழே உலக மொழிகளின் தாய் என்பதைப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான பல அறிஞர்கள் நிறுவியிருந்தாலும் அனைத்து மொழிகளையும் நாம் தமிழ்க் குடும்ப மொழிகள் என்ற தலைப்பில் கொணரவில்லை. தமிழ்க் கண்டம் என்று அழைக்கப்பட வேண்டிய இந்திய நிலப்பரப்பில் உள்ள தாய்த்தமிழின் வேர்களை மிகுதியாகக் கொண்டிருக்கக் கூடிய திராவிட மொழிகள் என்ற தவறான அளவீட்டில் மதிப்பிடப் படுகின்ற தமிழ் இன மொழிகள் அல்லது தமிழ்ச் சேய் மொழிகள் என்று சொல்லப்பட்டு வருகின்ற மொழிகளையே தமிழ்க் குடும்ப மொழிகள் என்று இங்கே குறிப்பிடுகிறோம். எனவே, உலக மொழிகள் யாவுமே தமிழ்ச் சேய் மொழிகளாக இருப்பினும் பிறந்த பின் தொடர்பற்றுப் போனவற்றை விட்டு விட்டு எஞ்சியவற்றையே நாம் தமிழ்க் குடும்ப மொழிகள் என்ற வரையறையில் ஆராய்கிறோம்.
  “சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும். தமிழ்க் குடும்ப மொழிகளைத் தனிக் குடும்பமாகக் கொண்டு மதிப்பிடுதல்தான் சாலப் பொருந்தும்” எனப் பேராசிரியச் செம்மல் சி.இலக்குவனார் அவர்கள் கூறியதற்கிணங்க – பிறரால் திராவிட மொழிகள் எனத் தவறாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்ற மொழிகளைத் – தமிழ்க் குடும்ப மொழிகள் என்ற பெயரிலேயே அழைக்க வேண்டும். அதற்கேற்ப இங்கும் அவ்வாறே குறிப்பிடப்படுகிறது.
  தமிழ்க் குடும்ப மொழிகள் யாவை? தமிழ்க்குடும்ப உறுப்புகளான கன்னடம், குருக், கூயி, கூவி, குடகு, கோயா, கோலாமி, கதபி, நாயக்கி, கொண்டா அல்லது கூபி, கதபா, கோத்தா,கொரகா, தோடா, மண்டா, மலையாளம், தெலுங்கு, கோண்டி, துளு, பிராகூய், மால்தோ, பர்சி, நாயக்கி, பெங்கோ முதலான தென்தமிழ்க் குடும்ப மொழிகள், மத்திய தமிழ்க் குடும்ப மொழிகள், வட தமிழ்க் குடும்ப மொழிகள் என்னும் முப்பிரிவிற்குட் பட்டனவேயாம். எனினும் இங்கு மலையாள மொழியைப்பற்றி மட்டும் ஆய்விற்கு எடுக்கப்பட்டுள்ளது. அறிஞர் கால்டுவல் அவர்களின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’, மொழி ஞாயிறு பாவாணர் அவர்களின் ‘திராவிடத்தாய்’, செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் ‘பழந்தமிழ்’ முதலான நூல்களில் தமிழும் தமிழ்க் குடும்ப மொழிகளுள் ஒன்றான மலையாளமும்பற்றிய ஆய்வுரைகள் உள்ளன. இலக்கண அடிப்படையிலான ஆய்வுகளை இவர்கள் மேற்கொண்டுள்ளமையால் நடைமுறை வழக்கு அடிப்படையில் சில கருத்துகளை மட்டும் நாம் இங்கு பார்க்கலாம்.
  செந்தமிழ்மாமணி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள், தம்முடைய பழந்தமிழ் என்னும் நூலில் பழந்தமிழ்ப் புதல்விகள் என்னும் தலைப்பில் தமிழின் புதல்விகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளைப்பற்றி ஆராய்ந்துள்ளார். உடலுறுப்புகள், உணவு வகைகள், எண்ணுப்பெயர்கள் முதலான அடிப்படைச் சொற்களின் அடிப்படையிலும் இலக்கண அமைப்பு அடிப்படையிலும் இவை யாவும் தமிழ்ப் புதல்விகளே என நிறுவியுள்ளார். அவ்வகையில் மலையாளம் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
 மலையாளம் : மலையாளம் என்ற சொல் தமிழ்ச் சொல்லேயாகும். மலையிடத்தை ஆட்சியாகக் கொண்டது என்னும் பொருளதாகும். மலையாளம் என்ற சொல் மொழியைக் குறிக்கும். கேரளம் என்ற சொல் நாட்டைக் குறிக்கும். இச்சொல் சேரலன் என்ற தமிழ்ச் சொல்லின் வேறு வடிவமேயாகும். போலியாகக் வருவது இயல்பு. சீர்த்தியே கீர்த்தியாகவும், செம்பே கெம்பாகவும் (கன்னடத்தில்) உருமாறியுள்ளமையைக் காண்க. மலையாள நாடு தமிழிலக்கியங்களில் சேரநாடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை யாண்ட அரசர்கள் சேரர் என்றும் சேரலர் என்றும் அழைக்கப்பட்டனர். சேரன் செங்குட்டுவன், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், தகடூர் எறிந்த பெருஞ்சேரல், குடக்கோ இளஞ்சேரல் என்னும் பெயர்களை நோக்குக. சேரல் சேரலன் ஆயது. தென்னவன் சேரலன் சோழன் 1, செருமா வுகைக்கும் சேரலன் காண்க 2 என்னும் இலக்கிய வழக்குகளை நோக்குக. சேரலன் கேரலன் ஆகிப் பின்னர்க் கேரளன் ஆகியது. ஆதலின் கேரளன் என்ற சொல்லின் தோற்றத்திற்கு வேறு மூலம் தேடி உரைப்பது உண்மை நிலைக்கு மாறுபட்டதாகும்.
   மலையாள மொழி வழங்கும் நாடாக இன்று கருதப்படும் பகுதி கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை செந்தமிழ் நாடாகவே இருந்துள்ளது. செந்தமிழ் இலக்கியங்களாம் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, ஆதியுலா, பெருமாள் திருமொழி முதலியன இப் பகுதியில் தோன்றியனவே.
  பதினாறாம் நூற்றாண்டில் இந்நாட்டுக்கு வந்த வெளிநாட்டவர் தமிழுக்கும் மலையாளத்திற்கும் வேறுபாடு அறியாது தாம் அச்சிட்ட புத்தக மொழியை மலவார் அல்லது தமிழ் என்றே அழைத்தனர். ஆதலின் பதினாறாம் நூற்றாண்டு வரையில் இப்பகுதியில் வழங்கிய மொழி தமிழாகவே இருந்துள்ளது என்று அறியலாம். மலைப் பகுதியில் வழங்கிய மொழியை (தமிழை) மலையாளம் என்று அழைத்தனர் போலும். பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரையில் கொடுந்தமிழாகவும் வடசொற் கலப்புடையதாகவும் இருந்து வந்துள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் (கி.பி. 1650) துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் மலையாள (தமிழ்) மொழிக்கு ஆரிய மொழியை ஒட்டி எழுத்து முறைகளையும் இலக்கண விதிகளையும் அமைத்துவிட்டார். பின்னர்த் தமிழின் தொடர்பு குறைந்து ஆரியமொழித் தொடர்பு மிகுந்து தமிழுக்கு அயல்மொழியாக வளரத் தலைப்பட்டு விட்டது. மொழிக்குரியோரும் தம்மை ஆரியர்களோடு தொடர்பு படுத்திக்கொள்ள விரும்பினரே யன்றித் தமிழருடன் உறவு முறைமை பாராட்ட விரும்பினாரிலர். தம் மொழியை ஆரியத்தின் புதல்வி என்று கூறிக்கொள்வதில் பெருமையும் அடைந்தனர்.
   பதினான்கு பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஆரிய மொழிச் செல்வாக்கு உச்சநிலையை அடைந்திருந்தது. கொடுந்தமிழும் ஆரியமும் கலந்த மணிப்பிரவாள நடை ஆட்சியில் இருந்தது. பதினான்காம் நூற்றாண்டில் (கி.பி.1320) வீரராகவ மன்னரால் வெட்டுவிக்கப்பட்ட கோட்டயம் செப்பேட்டில் வாயில் வாதில் ஆகவும், உண்டாக்கில் ஒண்டாயில் ஆகவும், எழுந்தருளி எழுந்நள்ளி ஆகவும் வழங்கப்பட்டு உள்ளன. இந் நூற்றாண்டில் (கி.பி.1350) கண்ணிசப் பணிக்கரால் இயற்றப்பட்ட இராமாயணம் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக இந்நூலில் உள்ள பாடலை நோக்குவோம்.

கொண்டலிந் நேரிருண்டு சுருண்டு நீண்டொளி வார்ந்துதிங்ஙும்
குந்தள பாரமொடு முகில் குலத்திட மிந்நல் போலே,
புண்டரீகேக்ஷ ணந்நரிகப் பொலிந்தவள ஸீதசொந்நாள்

இப்பாடலில் குந்தளபாரம், புண்டரிகேக்ஷணன் எனும் இரண்டு வட சொற்களே பயின்றுள்ளன. இவற்றுள்ளும் குந்தளபாரம் கூந்தல் பாரம் எனும் தமிழ்ச் சொல்லின் ஆரிய மொழித் திரிபாகும். ஏனைய தமிழ்ச்சொற்களே திரிந்து வழங்கப்பட்டுள்ளன.       
  
ஆரியமொழி முறைக்கு ஏற்பத் தமிழ் எழுத்தாம் வை விடுத்து தமிழிலும் ஆரியத்திலும்    வரும் ஆளப்பட்டுள்ளது.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
 

Thursday, July 2, 2015

இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர் காக்க அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்! – இலக்குவனார் திருவள்ளுவன்


kumari_koil Murugan Koil_namesas-subramanyar-temple

அறநிலையத்துறையில் தமிழறம் தழைக்கட்டும்!

  எந்த நாட்டிலும் இல்லாக் கொடுமைகள் தமிழ்நாட்டில் நிலவுகின்றன. அவற்றில் ஒன்றுதான், தமிழ் மக்களால், தமிழ்மக்களின் செல்வத்தில், தமிழ் மக்கள் உழைப்பில், தமிழ் மக்களுக்காகக் கட்டப்பட்ட தமிழ்க்கோயில்களில் தமிழ் வழிபாடும் துரததப்பட்டு விட்டது; இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர்களும் மறைக்கப்பட்டுவிட்டன. தமிழ்வழிபாடு குறித்துத் தனியே பின்னர் எழுதுவோம். இப்பொழுது தமிழ்ப்பெயர்கள் குறித்துக் கூற விரும்புகிறோம்.
 மலைவளர் காதலி, மங்களேசுவரர் – மங்களேசுவரி, மங்களநாதர், காட்சி கொடுத்த நாயகர் -, மங்களாம்பிகை, திருமேனி நாதர் – துணைமாலை அம்மை, நெல்வேலிநாதர் – வடிவுடையம்மை, குற்றாலநாதர், குறும்பலா ஈசர் – குழல்வாய் மொழியம்மை, ஆவுடைநாயகி, ஏடகநாத ஈசுவரர் – ஏலவார்குழலி, ஆப்புடையார் – குரவங்கமழ் குழலி, ஆலவாய் அண்ணல் – அங்கயற்கண்ணி, பூவணநாதர் – மின்னனையாள் என்பன போன்று வழங்கப்பெற்ற தமிழ்ப்பெயர்கள் அழிக்கப்பட்டன; ஒழிக்கப்பட்டன. சில கோயில்களில் வேறு பெயர்கள் வழங்கினாலும் இப்பெயர்கள் எழுதப்பெற்று உள்ளமையைக் காணலாம்.
  சமயக்குரவர்கள், கடவுளர்களைத் தமிழ்ப்பெயர்களால் அழைத்தே பாடியுள்ளனர். ஆனால், தமிழ்ப்பெயர்கள் ஒரு கூட்டத்தால் அழிக்கப்பட்டன. இவற்றை மீளவும் பயன்பாடடில் கொண்டு வரவேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. அதே நேரம், அண்மைக்காலங்களில் அறுபடைவீடுகளில் முருகன் சுப்பிரமணியனாகவும் குமரியில் குமரி அம்மன், பகவதி அம்மனாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. கடவுளை நேரடியாக வணங்க வேண்டிய நாம், இடைத்தரகர் போன்று வேற்றுமொழியினரை அமர்த்துவதால் வரும் தீவினையே இதற்குக் காரணம். எனவேதான் நேற்றுவரை தமிழ் இருந்த கோயில் பெயர்களும் இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளன.
  சமய இலக்கியங்களில் குறிக்கப்பெறும் தமிழ்ப்பெயர்களையே எல்லாக் கோயில்களிலும் வழங்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அழகன், முதலான பல்வேறு பொருள்களைத் தரும் முருகன் பெயரை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொணர வேண்டும். குமரியாறு, குமரிக்கடல், குமரிக்கண்டம் எனக் குறிக்கப் பெறுவனவற்றைப்போல், குமரிஅம்மனும் தொன்மைப் பெயராகும். மலையாளக் கோயில் என்று தோன்றும் வகையில் குமரியம்மனைப் பகவதியம்மன் என்பது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும்? எனவே, உடனே அறநிலையத்துறை, கோயில் செயல் அலுவலர்கள் மூலம்முருகன் என்றும் குமரியம்மன் என்றுமே எல்லா நேர்வுகளிலும் குறிக்கவும் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பிற கோயில்களின் பெயர்களையும் இறைவன்-இறைவியர் பெயர்களையும் தமிழில் வழங்க ஒரு தனிக்குழு அமைத்து இலக்கியங்கள், ஆவணங்களின் அடிப்படையிலான பரிந்துரைக்கிணங்க தமிழ்ப்பெயர்களை மீளப் பயன்பாட்டிற்குக் கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  தமிழ் மக்கள் தங்கள் துயரங்கள் தொலையவேண்டுமெனில், கடவுளரைத் தமிழ்ப்பெயர்களில் அழைத்துத் தமிழில் வழிபாடு நடத்தினால் மட்டுமே இயலும் என்பதை உணரவேண்டும். தத்தம் பகுதிக் கோயில்களில் தமிழ்வழிபாடு மட்டுமே நடக்கவும் கோயில்கள், கடவுளர்கள் பெயர்கள் தமிழில் வழங்கப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 அறநிலையத்துறை ஆணையர் முனைவர் வீரசண்முகமணி இ.ஆ.ப., தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் பெரிதும் ஆர்வமுள்ளவர். தன் தொடக்கப்பணிக்காலத்திலேயே இதற்கான பாராட்டிதழும் பெற்றவர். தான் பணியாற்றும் துறைகளில் தமிழ் ஆட்சிமொழித்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருபவர். எனவே, அறநிலையத்துறையிலும் தமிழ்மணம் கமழ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்கள், கடவுளர் பெயர்கள் மட்டுமல்லாமல், விழாக்கள், சிறப்பு நிகழ்வுகள், பதவிப்பெயர்கள் முதலானவற்றிலும் தமிழைக் காண இயலவில்லை. எனவே, எங்கும் என்றும் தமிழ் நிலைக்க உழைப்பதே அறச் செயல் என்பதை உணர்ந்து அறநிலையத்துறையில் தமிழ் ஆட்சிக்கு வழிவகுக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைfeat-default
அகரமுதல 85, ஆனி 13,2046 / சூன் 28, 2015

காண்க:

தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது



Wednesday, July 1, 2015

தமிழும் சிங்களமும் – இலக்குவனார் திருவள்ளுவன்



thamizh a and singhala a

தமிழும் சிங்களமும்


“உலக மொழிகளின் தாய், தமிழே” என்னும் செந்தமிழ் மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், “இந்திய மொழிகளின் வரி வடிவ எழுத்துக்களின் தாய் , தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவமே” என்கிறார். “எழுத்துகள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்தைய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள், தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை” என்கிறார் முனைவர் சுப்பிரமணிய(ஐய)ர். “தமிழ் எழுத்து முறையே ஆரிய எழுத்தின் முன்னோடி” என்கிறார் அறிஞர் இரைசு டேவிட்சு. அனைத்து மொழிகளையும் ஈன்ற அன்னையாய் அருந்தமிழ் விளங்குகையில் தமிழ் நிலத்தில் கலந்து தோன்றிய சிங்களவர்களின் மொழியாகிய சிங்களமும் தமிழில் இருந்துதான் தோன்றியது என்பதிலும் ஆதலின் அதன் வரி வடிவம் தமிழ் வரிவடிவத்தில் இருந்து தோன்றியது என்பதிலும் வியப்பு ஏதும் இல்லை.
  மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற பொழுது (1981) இலங்கையில் இருந்து வந்த பேராளர் ஒருவர் தமிழ் வரிவடிவங்களில் இருந்தே சிங்கள வரி வடிவங்கள் தோன்றின என்பதைப் படங்கள் மூலம் அருமையாய் விளக்கினார். (அவர் ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலர் என்பது மட்டும் நினைவில் உள்ளதே தவிர அவர் பெயர் நினைவில் இல்லை.) அவரிடம் இத்தகைய ஆராய்ச்சி எண்ணம் எவ்வாறு வந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் தற்செயலாகச் சில ஒற்றுமை அமைப்பைக் கண்டறிந்ததாகவும் சிங்களர் தமிழர் நாட்டில் குடியேறிய பின்பே தம் மொழியை வளர்த்து வரிவடிவத்தை உருவாக்கியிருக்க வேண்டும் என்றும் உணர்ந்து முழுமையாக ஆராயத் தொடங்கியதாகவும் அதன் பயனே இக்கட்டுரை என்றும் கூறினார். அவ்வாறாயின் சொற்பிறப்பு அடிப்படையில் தமிழில் இருந்து சிங்களம் தோன்றியது என்பதை நிறுவ முயலலாமே என்று கேட்டேன். இனி அவ்வாறு முயல்வதாகவும் ஆனால் இலங்கையில் தமிழுக்கு எதிரான வெறியைக் கிளப்பும் அரசியல்வாதிகளும் அரசும் உள்ளதால் தன்னால் இதை வெளிப்படையாகச் செய்ய இயலாது என்றும் கூறினார். மேலும் மூத்த தலைமுறையினரில் ஒரு சாராரேனும் சிங்கள வெறிக்கு எதிரான நடுநிலை மனப் போக்கில் இருந்தாலும் இளைய தலைமுறையினர் அனைவரும் நடுநிலை உணர்வு அற்றவர்களாக இருப்பதாகவும் வேதனைப்பட்டார். இருப்பினும் அவரைச் சந்தித்ததன் விளைவாக நான், தமிழ் – சிங்களம் குறித்துச் சிறிதேனும் அறிய முற்பட்டேன். அடிப்படைச் சொற்கள் பலவும் தமிழில் இருந்தே சிங்களத்திற்குச் சென்றுள்ளன எனவும் இலக்கண அமைப்பு முறை தமிழைச் சார்ந்தே உள்ளது எனவும் மேலோட்டமாகப் பார்தாலே நன்கு தெரிய வருகிறது. இரு மொழி அறிஞர்கள் ஆராய்ந்து தமிழில் இருந்து சிங்களம் தோன்றியது என்பதைத் தெளிவு படுத்தல் நன்று. எனினும் நான் அறிந்த வரையில் சுருக்கமாகச் சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.
  தமிழ்ச் சொற்கள் எவ்வகை வடிவ மாற்றமுமின்றி இடம் பெறுதல், முதற்குறை இடைக்குறை கடைக்குறை போன்று அமைதல், தமிழ்ப் பேச்சு வழக்கு திருந்தியசொல் வடிவாக இடம் பெறுதல், ‘யா’ என்னும் எழுத்தொலி சேர்ந்து சிங்களத்தில் இடம் பெறுதல், சிதைந்து மாறுதல் , யகரம் சகரமாக மாறுவது போன்று போலியாய் இடம் பெறுதல் எனத் தமிழ் இலக்கணத்திற்கு ஏற்றாற் போல் தமிழ்ச் சொற்கள் பல்வகை மாற்றமடைந்து சிங்கள மொழியில் இடம் பெற்றுள்ளன.
1.வடிவம் மாறாமல் இடம் பெற்றுள்ள சொற்கள்:
தமிழ்  – சிங்களம்
பொடி (சிறிய) – பொடி
பாலம் – பாலம்
அக்கா – அக்கா
குமாரன் – குமாரன்
சுதை (வெண்மை) – சுதை

  1. கடைக்குறையான சொற்கள்
கணிகை – கணி
மலர் – மல
பாத்து ( உணவு) – பாத்
தூம(ம்) (புகை) – தூம
கரம் – கர (தோள்)
(பொருள் சுருங்கிக் கையின் ஒரு பகுதியைக் குறிக்கிறது)
விசாலம் – விசால
மனிதன் – மனி
உயரம் – உசரம் உச

3. கடைசியல் யா என்னும் ஒலி சேர்த்து மாற்றமடைந்த சொற்கள்
நாதம் – நாதய
வீரன் – வீரயா
நீதி – நீதியா
பூமி – பூமிய
தூது – தூதயா
சூரன் – சூரயா
பூதம் – பூதயா
இதயம் – இருதயம் இருதயா
நரி – நரியா
பெட்டி – பெட்டிய
ஆகாயம் – ஆகாசம் ஆகாசய
கோப்பை – கோப்ப (கோப்பைகள்) /கோப்பய (கோப்பை)

  1. திருந்தாச் சொல்வழக்கால் ஏற்பட்ட மாற்றங்கள்
மேசை – மேசே
கரு(ப்பு) – களு
இரத்தம் (சிவப்பு) – ரத்து
(சிவப்பு என்னும பொருளும் உண்டு)
பாதை – பாற
கத்தி – கத்த
திசை – திசாவ
உருவம் – ரூபம்
மயில் – மயூர
பூசை – பூசாவ
கோ (எருது ) – கொனா
பொத்தகம் -பொத /பொதக் (ஒரு பொத்தகம்)
(தமிழில் பொத்தகம் என்பதுதான் புத்தகம் என மாறிற்று)
தேநீர் – தே
கன்னம் – கண
(தொளையுடையது என்னும் பொருளில் முதலில் காது என்றே பொருள் வழங்கியது)
அங்குலி – அங்கிலி
(அங்குல் என்றால் வளைதல் என்று பொருள் வளைத்து மடக்கக் கூடிய உறுப்பான விரல் அங்குலி எனப்பட்டது. அங்குலியால் அளக்கப்படும் அளவு அங்குலம் எனப்பட்டது)
இரவு / இரா – ரா / றா
நீலம் – நீல் > நில்
தமிழில் சுட்டெழுத்து அ, இ, உ என மூன்று ஆகும். எனவே, அது, இது, உது; அவை, இவை, உவை; அவன், இவன், உவன்; அவள், இவள், உவள்; அவர், இவர், உவர் என்று சொல்லும் மரபு பழந்தமிழில் இருந்துள்ளது. கேட்பவனுக்கு அருகே இருப்பின் ‘அ’, சொல்லுபவன் அருகே இருப்பின் ‘இ’, இருவருக்கும் பொதுவான தொலைவில் இருப்பின் ‘உ’ பயன்படுத்தப்பட்டது. தமிழில் இருந்து தோன்றிய சப்பான், சிங்களம் முதலான பழ மொழிகளிலும் இவ்வழக்கு இன்றும் உள்ளது. சிங்களத்தில்
அர – அவர் / அது
மே – இவர் / இது
ஒய – உவர் / உது
என முவ்வகைச் சுட்டும் இன்றும் பழக்கத்தில் உள்ளன.
சிங்களத்தில் சுட்டுப் பெயர்கள் மூலம் உயர்திணை, அஃறிணை குறிக்கப்படாமல் பயன்பாட்டு அடிப்படையில் புரிந்து கொள்ளப்படுகிறது.
தமிழில் உள்ள இலக்கண அமைப்பைச் சிங்களமும் பின்பற்றுகிறது.
 ‘நான் கடைக்குச்சென்றேன்’ என்னும் தொடர் ஆங்கிலம் முதலான பிற மொழிகள் சிலவற்றில் நான் சென்றேன் கடைக்கு என்பது போல் வரும். சிங்களத்தில் தமிழில் உள்ள அதே அமைப்புதான் உள்ளது.
அர கவுத? – அவர்கள் யார்?
மே கவுத? – இவர்கள் யார்?
ஒய கவுத? – உவர்கள் யார்?
மே ஒபே பொதத? – இது உன்னுடைய புத்தகமா?
மம தொர அரிவனா. – நான் கதவைத் திறக்கிறேன்.
(திறப்பதற்குரிய கதவு திற > தொர எனப்பட்டது)
  இரு மொழியும் நன்கறிந்த அறிஞர்கள் இது குறித்து நன்கு முழுமையாக ஆராய்வது நன்று. தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆண்டிற்கு ஒரு மொழி என்ற முறையில் வெவ்வேறு மொழிகளுடன் தமிழுக்குள்ள ஒப்புமையை ஆராய்வது உலக மொழிகளின் தாய் என இதுவரை அறிஞர்கள் பலரும் சொல்லி வரும் கருத்திற்கு வலு சேர்ப்பதாக அமையும். இவ்வாறு பிற நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அந்தந்த நாட்டு மொழிகளுடன் தமிழுக்குள்ள ஒப்புமையை ஆராய நடுவணரசு செம்மொழிஉயராய்வு மையம் மூலம் போதிய பொருளுதவியை அளிக்க முன் வரவேண்டும். தமிழக அரசும் தமிழக மக்களும் அதற்குத் தூண்டுதலாய் இருக்க வேண்டும். சிங்களர்கள் தம் இனமும் மொழியும் தமிழர் கூட்டுறவால் ஏற்பட்டதே என்பதைஉணர்ந்து நல்லுறவோடு பழக வேண்டும். தனித்தனி உரிமையுடைய (இலங்கை நாடு, ஈழ நாடு என்னும்) இரண்டு நாடுகளின் கூட்டமைப்பாக இலங்கை – ஈழக் கூட்டமைப்பு தோன்றி இத்தீவு யாருக்கும் அடிமையாக இராமல் யாரையும் அடிமைப்படுத்தாமல் வளம்பெற வேண்டும்!
(கட்டுரையாளர்: தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்)



Followers

Blog Archive