Sunday, July 19, 2015

தாய்த்தமிழும் மலையாளமும் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

thamizh_and_malayalam_a

தாய்த்தமிழும் மலையாளமும் 3

  ஒருவேளை மலையாள மொழியின் தோற்றக் காலத்தில்தான் அவ்வாறு தமிழாக இருந்தது; இப்பொழுது அவ்வாறில்லை எனக் கருதினால் அதுவும் முற்றிலும் தவறாகும். சான்றிற்கு இன்றைய நிலைக்குச் சிலவற்றைப் பார்ப்போம். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் வகுப்பு மலையாளப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று வருமாறு:
பாவ பாவ பாவ நோக்கு
                புதிய புதிய பாவ நோக்கு
கய்ய வீசும் பாவ நோக்கு
                கண்ணிமய்க்கும் பாவ நோக்கு
தலயாட்டும் பாவ நோக்கு
                தாளமிடும் பாவ நோக்கு
எனிக்குக் கிட்டிய பாவ போல
                வேறெயில்ல பாவகள்
பாவை(பொம்மை) பாவ என்றும் எனக்கு என்பது எனிக்கு என்றும் வேறில்லை என்பது வேறெயில்ல என்றும் பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளன. முதலில் கூறியது போல், கையை, இமைக்கும் என்பன முறையே பழந்தமிழ் வழக்கின் அடிப்படையில் கய்ய, இமய்க்கும் என இடம் பெற்றுள்ளன.
ஒரு சிறுவர் கதையைப்பார்ப்போம்:
சங்காத்திமார் களிக்கான்போயி. தவள மாத்ரம் வெள்ளத்தில் சாடி. மற்றுள்ளவ ரேயும் விளிச்சு. ஒரோருத்தரும் ஒரோ வஃச்து வீதம் கொண்டு வண்ணுசெறிய தோணி உண்டாக்கி. தோணியில் சந்தோஃசத்தோடெ போயி.
இவற்றுள் (தமிழ் நாட்டிலும் வழக்கத்திற்கு வந்து விட்ட) வஃச்து, சந்தோஃசம் என்பன நீங்கலாகப் பிற அனைத்தும் தமிழ்ச் சொற்களே. உன் உறவோ நட்போ வேண்டா எனச் சொல்ல உன் சங்காத்தமே வேண்டா எனச் சொல்வது இன்றைக்கும் தமிழ்நாட்டில் உள்ள வழக்கே. அதனடிப்படையில் பிறந்ததே சங்காத்திமார்(நண்பர்கள்) என்பதாகும்.சங்கம் என்னும் சொல்லின் அடிப்படையில் இச்சொல் பிறந்துள்ளது.
முதல் வகுப்புப் பாடம் என்பதால் இவ்வாறு உள்ளது எனக் கருத வேண்டா. இலக்கியப் பாடல் ஒன்றைப் பார்ப்போம். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தாலாட்டுப் பாடல்வரிகள் சிலவற்றின் மொழி பெயர்ப்பு வருமாறு:
  1. பூங்காவின் மலரே ஃசுவர்ணத்தின் உருவமே
                   காலத்தெ சூரியன்டெ வெண்கல் பிம்பமே

  1. பூங்கொடி கண்டேன் மனம்குளிர்ந்து நிந்நேன்

  1. புதியதொரு லோகம் சமய்க்காம் நீசமாய்
                 போரிடும் லோகத்தெ வேரொடெ வீழ்த்தாம்

ஃசுவர்ணம், நீசம் என்னும் இரு சொற்கள் தவிர அனைத்தும் தனித் தமிழ்ச் சொற்களே. பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளன.
இலக்கியப் பாடல் என்றில்லாமல் மக்கள் வழக்கில் இடம் பெறும்திரைப்பாடல் வரிகளைச் சான்றுக்குப் பார்ப்போம்:
                காற்று வந்நு காற்று வந்நு கள்ளனெப் போலெ
                காட்டு முல்லக்கி ஒரு உம்ம கொடுத்து காமுகனெப் போலெ
‘உம்ம’ என்பது இன்றும் முத்தத்திற்கு மக்கள் பயன்படுத்தும் பேச்சு வழக்குதானே! சமற்கிருதக் கலப்பில்லாத இவ் வரிகள் தமிழாகத்தானே விளங்குகின்றன.
 ‘அகராதி  என்பது ஒரு மொழியின் சொல்வளத்தைக் காட்டும். அந்த வகையில் பள்ளி மாணாக்கருக்கான ஆங்கில-மலையாள அகராதி ஒன்றில் உள்ள சொற்களில் ஏ வரிசையில் தொடக்கத்திலுள்ள ஒரு பகுதிச் சொற்களை, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பதம் போல் பார்ப்போம்.
Aback      –   பிந்நோக்காம், புறக்கில்
Abase      –   தரம் தாழ்த்துக
Abate       –   குறய்க்க, சரிப்பிக்குக
Abbreviate   –   சுருக்குக
Abdomen    –   உதரம், வயிறு
Abeyance    –   சுவல்பக் காலம் நிறுத்தி வைக்கல்(சொற்பம், சொல்பம்
                                                        ஆகி, சுவல்பம் ஆனது.)
Aboard      –   கப்பலில்
Abode      –   இரிப்பிடம்
Abolish –   இல்லாதாக்குக
Aboriginal    –   ஆதிவாசி
Abound     –   நிறயுக
Above      –   மீதெ, உயரத்தில்
Abuse           –   நிந்திக்குக
Account       –       கணக்கு, கணக்காகுக
Ache       – வேதன
Add        –   கூட்டுக
Adjourn     –   மாற்றிவெக்குக
Affect       –       பாதிக்குக
Afraid       –   பயமுள்ள
Against     –       எதிராயி
Ago        –   பண்டு
Agree       –   சம்மதிக்குக
Agreement         –       உடம்படி
Aid        –   துண
Air         –   வாயு
இவை யாவும் தமிழ்ச் சொற்களாக அல்லது தமிழ்ச் சொற்களின் பேச்சு வடிவாக உள்ளன. எனவே, மலையாளம் என்பது நம் முன்னோர் சோம்பலினாலும் பிறவற்றாலும் திருத்தமற்றுப் பேசியதும் அவ்வாறு பேசியதை   அறியாமையாலும் மொழிப்பகைவர் வஞ்சகத்திற்கு இரையாகியும் எழுத்து வடிவில் கொணர்ந்ததும் பின்னர் அதற்கு எனத் தனி வரிவடிம் அமைத்துக் கொண்டதும் ஆகும். எனவே, மலையாள வரிவடிவம் வேறாக இருந்தாலும் ஆரியச் சொற்கள் நீங்கலான சொற்கள் யாவும் தமிழுக்குரியனவே.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan+5


Saturday, July 18, 2015

தாய்த்தமிழும் மலையாளமும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

thamizh_and_malayalam_a 

தாய்த்தமிழும் மலையாளமும் 2

கி.பி. 1860-இல் தான் முதல் மலையாள இலக்கணம் இயற்றப்பட்டதாம். பதினைந்தாம்    நூற்றாண்டில் நீலதிலகம் எனும் மலையாள மொழியைப்பற்றிய நூல் ஆரிய மொழியில் இயற்றப்பட்டுள்ளதாம். எடுத்துக்காட்டுகள் தமிழிலிருந்தும் கன்னடத்திலிருந்தும் தரப்பட்டுள்ளனவாம்.[1] இந் நூலால்அறியப்படுவது மலையாளம் எனும் மொழி பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழாகவே இருந்தது என்பதாம். மலையாள உயர் இலக்கிய காலம் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது என்று கூறலாம் என்பர் .[2]
              
மலையாள மொழிபற்றி அறிஞர் கால்டுவல் கூறும் கருத்துகள் மலையாளம் தமிழின் புதல்வியே என்பதை நிலைநாட்டும்.
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாருக்கு முன்னதாகவே அறிஞர் கால்டுவல் அவர்களும் மொழி ஞாயிறு பாவாணர் அவர்களும் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த புதல்விகளுள் ஒன்றே மலையாளம் என ஆய்ந்துரைத்துள்ளனர். இவர்கள் போல வேறு அறிஞர்கள் சிலரும் தமிழே மலையாளமாக உருவெடுத்துள்ளதை விளக்கியுள்ளனர். இவ்வாய்வுரைகளின் துணைக் கொண்டு இவர்களின் கருத்திற்குத் துணை நிற்கும் வகையில் வேறு சில நோக்கில் சில கருத்துகளை இங்கு நாம் ஆயலாம்.
மலையாள இலக்கிய வரலாறு என்னும் சாகித்ய அகாதமி வெளியீட்டு நூலில் அதன் ஆசிரியர்   பி.கே.பரமேசுவரன் நாயர் கன்னடத்தைக் கரிநாட்டுத் தமிழ், துளுவைத் துளு நாட்டுத் தமிழ், மலையாளத்தை மலைநாட்டுத் தமிழ் என அழைக்கப் பட்டுள்ளமையைக் குறிப்பிடுகிறார். இப்பொழுது பேச்சு வழக்கு அடிப்படையில் மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் என்றெல்லாம் அழைக்கப்படும் முறையிலேயே ஒரு காலத்தில் தமிழ் வழங்கிய பகுதிகளில் உள்ள தமிழ் அழைக்கப்பட்டுள்ளது என்பதிலிருந்தே தமிழ்தான் பேச்சு வழக்கிற்கு எழுத்து வடிவம் அமைக்கப்பட்டதன் காரணமாகவும் அதன்பின் தாய்த் தமிழுடனான தொடர்பை மெல்ல மெல்ல விலக்கிக் கொண்டமையாலும் தெலுங்காகவும் கன்னடமாகவும் மலையாளமாகவும் பிற மொழிகளாகவும் உருவெடுத்துள்ளது என்பதை உணரலாம்.
மேலும் அவர், மலையாளம் மூலத் திராவிட மொழியினின்று பிரிந்து தனக்கே உரித்தான உருவம் பெற்றுவிட்ட பிறகு முதலில் செந்தமிழின் ஆதிக்கத்திற்கும் பிறகு சமற்கிருதத்தின் ஆதிக்கத்துக்கும் உட்பட்டு வளர்ந்திருக்கிறது என இந்நூலில் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். மூலத் திராவிட மொழி என்னும் தவறான எடுகோளும் சமற்கிருதக் கலப்பு ஏற்பட்டது போன்று மலையாள மொழியில் நிலைத்த தமிழ்ச் சொற்களை ஆதிக்கம் என்று தவறாகக் கருதியமையும் மொழி வரலாற்றை நடுநிலையுடன் நோக்கும் வாய்ப்பைப் பறித்து விட்டது எனலாம்.
மேலும் அவர் இறைவழிபாட்டுப் பாடல்கள், பெரும் மாறுதல்களுக்கு உள்ளாகாத தொன்மையான வடிவத்தைக் காட்டுவன வென்றும் பல நூற்றாண்டுகட்கு முன்னர் நிலவியிருந்த நடைக்கு எடுத்துக் காட்டாக உள்ளவை என்றும் பழமொழிகளும் விடுகதைகளும் அன்றைய பேச்சு வழக்கைக் காட்டுவன என்றும் குறிப்பிட்டுப் பின்வரும் பாடலையும் பழமொழி, விடுகதைகளையும் எடுத்துக் காட்டுகிறார். (பக்கம் 12-13)
பாடல்:

                கத்தி பிடிச்சு கடுத்தில சூல முயர்த்தி
                கரத்தில் மழுப்பட யேந்தி
                நிண குடர் மால கழுத்திலணிஞ்ஞú
                கறுத்த நிறத்தில் உருட்டிய கண்ணும்

இப் பாடலில் பிடித்து-பிடிச்சு; கழுத்து-கடுத்து; மழுப்படை-மழுப்பட;குடல்-குடர்; மாலை-மால; அணிந்து-அணிஞ்ஞú எனச் சில சொற்கள் இலக்கணப் போலி அடிப்படையிலும் பேச்சு வழக்கிலும் அமைந்துள்ளன. எஞ்சிய யாவும் தனித் தமிழ்ச் சொற்களே!

பழமொழிகள்:
1.) கடய்க்கல் நனச்சாலே தலய்க்கல் பொடிக்கூ.
வேரை நனைத்தால்தான் நுனியில் முளைக்கும் என்னும் இப்பழமொழியில் நனைத்தாலே என்பது நனைச்சாலே எனவும் பொடிக்கும் என்பது பொடிக்கூ எனவும் வந்துள்ளன. (பொடித்தல் என்றால் முளைத்தல் எனப் பொருள்.) கடைக்கல், தலைக்கல் என்பனவற்றைக் கடய்க்கல், தலய்க்கல் என எழுதுவது பழந்தமிழ்ப் பழக்கமே.
2.) அக்கர நில்க்கும்போள் இக்கர பச்ச.
அக்கரை, இக்கரை என்பன அக்கர, இக்கர எனவும் நிற்கும்போழ்து என்பது நிற்கும் போள் எனவும் பச்சை என்பது பச்ச எனவும் வந்துள்ளன.
3.) உரிநெல் ஊரான் போயிட்டு பற நெல் பந்நி திந்நு.
போய்விட்டு, பறை, பன்றி, தின்று என்பன முறையே பேச்சு வழக்கில் போயிட்டு,பற, பந்நி, திந்நு என வந்துள்ளன. உருவப் போதல்-உருவான் போதல்-ஊரான்போதல் என்னும் பொருளில் கையாளுவதாக எண்ணுகின்றனர். ஊராளப் போதல் என்பது ஊரான் போதல் என மருவி வந்துள்ளது.
4.) அரி நாழிய்க்கும் அடுப்பு மூந்நு வேணம்
அரிசி, நாழிக்கும், மூன்று, வேண்டும் என்பன முறையே அரி,நாழிய்க்கு, மூந்நு, வேணம் எனக் கடைக்குறையாகவும் பேச்சு வழக்காகவும் இடம் பெற்றுள்ளன.
5.) அரசன் சத்தால் படயில்ல.
செத்தால், படை என்பன முறையே சத்தால், பட எனப் பேச்சு வழக்காக வந்துள்ளன.
விடுகதைகள்:

1.)ஆன கேறா மல ஆடு கேறா மல ஆயிரம் காந்தாரி பூத்திறங்ஙி.
ஆனை(யானை), மலை, இறங்கி என்பன முறையே ஆன, மல, இறங்ஙி எனப் பேச்சு வழக்கில் வந்துள்ளன. ஏறா(த) என்பது (÷உறறா என்றாகிப் பின்) கேறா என வந்துள்ளது.(விலங்கேறா மலை என்பதுதான் இவ்வாறு சுருங்கிப் பொதுப் பொருளில் வந்ததோ?) காந்தும்காய் (மிளகாய்) காந்தாரி எனப்பெற்றுள்ளது.
2.) பின்னாலெ வந்தவன் முன்னாலெ போயி
   பின்னாலே, முன்னாலே, போய்விட்டான் என்பன முறையே பின்னாலெ, முன்னாலெ, போயி எனப் பேச்சு வழக்கில் வந்துள்ளன.
3.) காட்டில் கிடந்நவன் கூட்டாயி வந்நு
கிடந்தவன், கூட்டாக, வந்தான் என்பவை முறையே கிடந்நவன், கூட்டாயி, வந்நு என வந்துள்ளன.
இப்பழமொழிகளும் விடுகதைகளும் தமிழ் நாட்டிலும் உள்ள தமிழ்ப் பழமொழிகளே.
இவை அனைத்தும் தமிழே மலையாளமாக வரி வடிவில் மாறியுள்ளது என்பதை மெய்ப்பிக்கப் போதுமான சான்றாகும். ஆனால், நூலாசிரியர் “சொற்களைப் பற்றிய வரையில் தமிழ்க்கலப்போ சமற்கிருதக் கலப்போ இல்லாதவை, அன்றாட வழக்கிலிருந்த பேச்சு நடையாது என்பதைப் புரிந்து கொள்ள அவை உதவுகின்றன, நடையில் தமிழ் சமற்கிருதம் ஆகியவற்றின் சொற்சேர்க்கையோ இலக்கண விதிகளின் சார்போ இல்லையென்பது கவனத்திற்குரியது, “ என்றெல்லாம் இவற்றைப் பற்றித் தவறாக மதிப்பிடுகிறார்.
சேர நாட்டின் செந்தமிழ்ப்படைப்புகளைக் குறிப்பிட்டு விட்டு,மேலே சுருக்கமாகத் தந்துள்ள தகவல்களிலிருந்து “கேரள நாட்டின் கவிதை ஒளி செந்தமிழ் வாயிலாகத்தான் ஒளிர்வதாயிற்று என்பது விளங்கும்; இது மட்டுமன்றி ஆட்சி தொடர்பான விவகாரங்களும் அரசர்களின் ஆணைகளும் எழுதப்படும் அளவிற்குச் செந்தமிழ் முக்கியத்துவம் பெற்றிருந்ததால் கேரள மொழிக்கு உரிய வளர்ச்சி யுண்டாகவில்லை” என மலையாளம் தோன்றாத காலத்தில் இருந்தே மலையாளம் இருந்தது போன்று எழுதுகிறார்.

லீலா திலகம் என்னும் மலையாள நூல், பாட்டு இலக்கணம் பற்றிக் கூறுகையில், தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துகளே கையாளப்பட வேண்டும்….சமற்கிருதப் பாவினங்களல்லாத பாவினங்களில் இயற்றப் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடுவதில் இருந்தே மலையாளம் எனத் தனி எழுத்து வடிவத்தை உருவாக்கிய பின்பும் தமிழாகத்தான் அந்த மொழிவிளங்கியுள்ளது என்பது நன்கு புரியும்.
ஆனால், சமற்கிருதம் நீக்கப்பட்ட மலையாளம் என்பது தமிழ்மொழியே என்பதைப் புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொண்டாலும் ஒத்துக் கொள்ள முன்வராமலும் தனி மலையாளம் எனக் கதைக்கின்றனர்.
(தொடரும்)
1 Literature in Indian Language, Page. 104. 2 Literature in Indian Languages, Page. 105
– இலக்குவனார் திருவள்ளுவன்


Thursday, July 9, 2015

பெருந்தொடரியில் (மெட்ரோ இரயிலில்) அரங்கேறும் நாடகங்கள்


metrojourney

பெருந்தொடரியில் (மெட்ரோ இரயில்) அரங்கேறும் நாடகங்கள்

   இருப்புப்பாதையில் செல்வதால் ஆகுபெயராக ‘இரயில்’ என்று அழைக்கப்படுவது முதலில் புகைவண்டி எனப்பட்டது. நிலக்கரி பயன்படுத்தி அதனால் புகை வெளியேறும் வண்டிகளை அவ்வாறு அழைப்பது பொருத்தமாகும். பிறவற்றையும் அவ்வாறு அழைப்பது எவ்வாறு பொருந்தும் என்ற எண்ணம் வந்தது.   மின்திறனால் இயங்குவதை மின் வண்டி என்றும் சொல்லத் தொடங்கினர். இருப்பினும் தொடர்ச்சியான பெட்டிகளை உடையதால் தொடர் வண்டி என்று அழைக்கப்பெற்று அதுவே பெரும்பாலும் கையாளப்படுகிறது. எனினும் பாவாணர் சுருக்கமாக அதனைத் தொடரி என்றார். தொடரி என்ற சுருக்கமான சொல்லையே நாம் பயன்படுத்த வேண்டும்.
  ‘மெட்ரோ/metro’ என்பது ‘மெட்ரோபாலிடன்/metropolitan’ என்பதன் சுருக்கமே. மிகுதியான மக்கள் தொகை உள்ள நகரம்   மாநகரம் / ‘மெட்ரோ’ சிட்டி/metro city எனப்பட்டது. இதற்கடுத்த நிலையில் பெருமளவு மக்கள் தொகை உள்ள நகரமே பெருநகரம் / மெகா சிட்டி / mega city என்பதாகும். பொதுவாக மாநகருக்குரிய உள்ளாட்சி அமைப்பு மாநகராட்சி எனப்பட்டது. ஆனால் மாநகருக்கு மேற்பட்ட சுற்றுப் பகுதியும் சேர்க்கபட்டமையால் ‘மெட்ரோ சிட்டி’ என்பதைப் பெருநகரம் என அழைக்கும் பழக்கம் வந்தது. அப்படியானால் இதைவிடப் பெரிய நகரம் மீப்பெருநகரம்(மெகாசிட்டி) எனப்பெறவேண்டும்.
பெருநகருக்குரிய தொடர்வண்டிகளே சுருக்கமாக ‘மெட்ரோ இரயில்’ என அழைக்கப் பெறுகிறது. ‘மெட்ரோ இரயில்’ என்பது அவ்விருப்புப்பாதையில் செல்லும் பெருந்தொடரியை / ‘மெட்ரோ டிரெயினை’யே குறிக்கிறது. இதனை நாம் தமிழில் பெருந்தொடரி எனலாம். இங்கே பெருந் தொடரி என்றால் பெரிய தொடரி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. பெரும்பரப்பளவிற்கான இருப்புப்பாதைப் பணிகள் எனவும் அவ்விருப்புப்பாதையில் செல்லும் தொடரிகள் எனவும் எடுத்துக்கொள்ள வேண்டும். நாளை இப்பாதை செங்கல்பட்டு வரைக்கும் கூட நீளலாம். அதுபோல் மறு முனையிலும் புறநகருக்கோ அடுத்த நகருக்கோ செல்வதாக அமையலாம். எவ்வாறிருந்தாலும் பெருந்தொடரி என்ற சொல்லை நாம் நிலையாக்கிக் கொண்டால் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும்.
  சென்னையில் பெருந்தொடரி அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி. சென்னைக்கும் தமிழ்நாட்டிற்கும் முன்னேற்றத்திற்கு உதவும் பெருமைக்குரிய செய்தி. 19 ஆம் நூற்றாண்டிலேயே இலண்டன் நகர மக்களுக்கு இவ்வாய்ப்பு கிட்டியுள்ளது. உலகின் பல நாடுகளில் பெருந்தொடரி அறிமுகப்படுத்தப்பட் பின்பு, கடந்த நூற்றாண்டிலேயே கல்கத்தா, புதுதில்லி முதலான நகரங்களுக்கு அறிமுகப்படுத்தபட்ட பின்பு, இந் நூற்றாண்டிலும் மும்பைக்குப் பின்னர்தான் சென்னைக்கு இவ்வாய்ப்பு கிட்டியுள்ளது. எனவே, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய தேவை எதுவும் இல்லை.
  சென்னையில் பெருந்தொடரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, அரசியல் தலைவர்கள் சுற்றுலா செல்வதுபோல் வெட்டிப்பயணமாக இத் தொடரியில் பயணம் செய்கிறார்கள். இவர்கள் இதற்கு முன்னர்ச் சென்ற வெளிநாடுகளிலும் தில்லி முதலான மாநகரங்களிலும் உள்ள பெருந்தொடரியில் பயணம் செய்யாமல் மகிழுந்தில் சென்றிருப்பார்கள். எனவே, இதுவே அவர்களுக்கு முதல் பெருந்தொடரிப் பயணமாகவும் இருந்திருக்கலாம். ஆனால், இவர்களின் நோக்கம் பெருந்தொடரிப் பணிகளை எந்த அளவிற்கு மக்களுக்கு மேலும் பயனுள்ள வகையில் அளிக்கலாம் என்பதல்ல. அவ்வாறாயின், பெருந்தொடரித் திட்டம் தொடங்கப்பட்ட பொழுதே பயன்பாட்டிலுள்ள பிறவற்றைப் பார்வையிட்டு, அங்கங்கே குறைகள் இருப்பின், அவை இங்கு வராமல் இருக்கவும் சிறப்பாக அமையவும் கருத்துரை வழங்கியிருக்கலாம். அவ்வாறில்லாமல் தொடங்கப்பட்ட பின்பு வெட்டிச் சுற்றலா சென்று பயணிகளுக்குத் தொல்லை தருவது ஏன் என்று தெரியவில்லை.
  தூய்மை இந்தியா விளம்பரத்திற்காகப் பல கோடிஉரூபாய் வீணாகச் செலவழிக்கும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வேளச்சேரி-கடற்காரைச்சாலையில் அமைந்துள்ள பறக்கும் தொடரிநிலையங்களில் ஒன்றில்கூடத் தூய்மையான கழிவறை இல்லை.
  பேருந்துகளில் படியில்லாதவை, ஏறும் இறங்குமிடங்களில் கைப்பிடியில்லாமை, மேலே பிடிப்பு இல்லாமை, இருக்கைகள் சரியாக இல்லாமை,   பலகணியோரங்களில் உடைகளைக் கிழிக்கும் வகையில் நீட்டப்பட்ட கம்பிகள் உள்ளமை, மழை பெய்தால் ஒழுகும் வகையில் ஓட்டைகள் உள்ளமை, பேருந்து செல்லும் தடங்களில் உடலுக்குக் கேடுவிளைவிக்கும் உணவு விற்பனையகங்கள், தரத்தில் குறைந்தும் விலையில் உயர்ந்தும் உள்ள உணவுப் பொருள்கள் என அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்குக் குறைகள் உள்ளன. இவற்றையெல்லாம் பார்வையிட்டு அரசிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கிக் குறைகளைப் போக்கலாம் அல்லவா? ஆனால், இதனை விட்டுவிட்டு, மாறிமாறிப் பெருந்தொடரிப்பயணம் மேற்கொள்வது எதற்கு? முதல்வர் தொடக்கவிழாவிற்கு நேரில் சென்று இருந்தார் எனில், ஆளாளுக்குத் தான்தான் பெரியவர் எனக் காட்டும்வகையில் சென்றிருக்கமாட்டார்கள். போகட்டும் இனியேனும் அரசியல்கட்சித் தலைவர்கள், பெருந்தொடரி வெற்றுச் சுற்றுலாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.
 இனி பொதுவிடங்களையும் பொதுத்துறை ஊர்திகள், தொடரிகள் முதலானவற்றையும் பார்வையிட்டு அங்கங்குள்ள குறைகளை உரிய துறையினருக்குச் சுட்டிக்காட்டும் நற்பணிகளை அனைத்துக் கட்சியினரும் ஆற்றுவார்களாக!
   அரசு ஆற்றும் நல்லனவற்றைப் பாராட்டி அல்லனவற்றைச் சுட்டிக்காட்டி மக்கள் நல்வாழ்வு பெற வழிவகுப்பார்களாக!
    இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
   கெடுப்பா ரிலானுங் கெடும் (திருவள்ளுவர், திருக்குறள் 448)
என்பதை உணர்ந்து ஆட்சியாளர்களும் பிற கட்சியினர் கூறும் குறைகளை அகற்ற முன்வருவார்களாக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 86, ஆனி 20, 2046 / சூலை 05, 2015
feat-default


Followers

Blog Archive