Thursday, May 17, 2018

பொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை! – இலக்குவனார் திருவள்ளுவன்



பொய்களையே முதலீடு செய்யும்

பாசகவின் வெற்றி மாயை!

 பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்களை  நாம் பார்த்திருக்கிறோம்.  அந்த நிலையையும் தாண்டி எப்பொழுதும் பொய்களையே முதலீடுகளாகக் கொண்டு பொய்வணிகம் புரிந்து மக்களை ஏமாற்றிப் பயனைடந்து வரும் கட்சி ஒன்று உண்டென்றால் அது பாசக ஒன்றுதான்.
  அண்மையில் (மே 2018) நடந்துமுடிந்த கருநாடகாவின் சட்டமன்றத் தேர்தலிலும்நாம் இதனைக் கண்கூடாகக் காண முடிகிறது. பாசக பல தோல்விகளைச் சந்தித்தும் மாபெரும் வெற்றியாகப் பொய்ப் பரப்புரை மேற்கொள்கிறது.அதன் ஆதரவுக் கட்சிகளும் நடுநிலையாகத்   தெரிவிப்பதுபோல் நடித்து  நரேந்திர(மோடி)யின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகக் கதை அளக்கின்றன.
  அதன் காலடியை முதலில்  தழுவிக் குளிர் காய எண்ணும் ஒருவர், தென்மாநிலத்தில் நுழைவுவாயிலான  மாபெரும்  வெற்றி என்கிறார். தலைமைப் பதவியில் தொடர வேண்டும் அல்லது மாற்று உயர் பதவி வேண்டும் என விரும்பும் தமிழிசை கூறியிருந்தால் அஃது அவரது பிழைப்பு என விட்டு விடலாம்.  ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த –  ஆட்சிப்பொறுப்பில் முதன்மை இடத்தில் உள்ள ஒருவர்  கூறுகிறார் என்றால்  அவரும் மாயையில் மூழ்கிக்  கிடக்கிறார் அல்லது மாயையைப் பரப்பிப் பயனடைய விரும்புகிறார் என்றுதானே பொருள்.
 பாசகவின் ஆதரவிற்காகக் கருநாடகத் தேர்தலில் யாருக்கு ஆதரவு எனத்  தெரிவிக்காமல் பம்மிய, ஆளத் துடிக்கும் மற்றொரு தலைவரோ எண்ணிக்கை முடியும் முன்னரே  வாழ்த்தினைக் கொட்டுகிறார். தலைவர்களே மாயையில் சிக்கும் பொழுது எளிய மக்கள் இதில் வீழ்வதில் இயற்கைதானே!  இதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் தன்னை வலுப்படுத்த பாசக முயல்கிறது. ஆனால் இம்மாயை நிலைக்காது.
 பொய்யை முதலில் பரப்புவதில் நரேந்திரரும் அமீத்தும் வல்லவர்கள்.  ஆந்திராவில் உள்ள தமிழ்நாட்டுப் பெண்மணியான நிருமலா சீதாராமனைக் கருநாடாகா மகள் என்றார் நரேந்திரர்(மேடி).
 படைத்தளபதிகள் கரியப்பா, திம்மையா  ஆகியவர்களைப்பற்றிய தவறான தகவல்களை அவரே வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னராக  இந்திராகாந்தி, பெனசீர் பூட்டோ, இராசீவுகாந்திபற்றி நாடாளுமன்றத்திலேயே தவறான தகவல் தெரிவித்தும் கவலைப்படாதவர்கள் எதற்குத்தான் கவலைப்படுவார்கள்? பொய் என்றால் சருக்கரைப் பொங்கலாயிற்றே அவர்களுக்கு!
  இப்படியெல்லாம் சொன்னவை பொய்கள் என மெய்ப்பிக்கப்பட்டதும் சிறு வருத்தமாவது தெரிவித்த வரலாறு உண்டா? அறியாமல்  சொல்லியிருந்தால் அல்லவா மன்னிப்பு கேட்கவோ வருத்தம்  தெரிவிக்கவோ முன்வருவர்.  தெரிந்தே சொன்ன பொய்களுக்கு வருத்தம் எதற்கு? திரியைக்கொளுத்திப் போடுவதுடன் வேலை முடிந்து விட்டது என அடுத்த பொய்யை அரங்கேற்ற வேண்டியதுதான்.
  நாடெங்கும் மக்கள் பணமதிப்பிறக்கத்தால் நடுத்  தெருக்களில் நின்று கொண்டு அல்லாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது  பாசக தலைவர் ஒருவரின் மகள் புதிய பணத்தாள்களால் ஆன பணமாலையைக் கழுத்தில போட்டுக்  கொண்டு படம் எடுத்துக் கொண்டார். இவரைப் போல வேறுசில பாசகவினரும் புதிய பணமாலையை அணிந்த செய்தி வந்தது. பணக்கட்டுப்பாடு  ஏழை மக்களுக்கு விதிக்கப்பட்ட போதும் பாசக தலைவர்கள்  கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வீட்டுத்திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை மிகவும் ஆடம்பரமாக நடத்தினர். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் கருநாடகாவில் சனார்த்தனன்(இரெட்டி) மகள் திருமணம் 650 கோடி உரூபாயில் நடைபெற்றது.
 முந்தைய  பாசக அரசின் வருவாய்த்துறைஅமைச்சர் கருணாகரன்(இரெட்டி), சுற்றுலாத்துறை அமைச்சர் சனார்த்தனன்(இரெட்டி), கருநாடகப் பால் கூட்டமைப்பின் தலைவர் சோமசேகரன்(இரெட்டி)  ஆகிய பண முதலைகளே இரெட்டி உடன்பிறப்புகள் என  அழைக்கப்பெறுகின்றனர்(தமக்கை இராசேசுவரி). பெல்லாரி  இரும்புச் சுரங்க 35,000 கோடி உரூ. ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சனார்த்தனன்(இரெட்டி),  பிணையில் வந்து, குடும்பச் சொத்து 70 கோடி உரூபாய்  முடக்கி வைக்கப்பட்ட பொழுதும் உரூ.650 கோடி செலவழித்துத் தன் மகள் திருமணத்தை நடத்தியுள்ளார்.
  இரட்டி உடன்பிறப்புகளைப் பிணையில் கொண்டுவர பாசக நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்த வேட்பாளர் சிரீராமுலு நீதிபதிக்கு 500 கோடி உரூபாய் கொடுத்ததான காணொளி தேர்தலுக்கு முதல்நாள் வெளியாகியது.
 ஊழல் முதலைகளைத் தங்கள் பக்கம்  சேர்க்கவில்லை என்று கூறிக்கொண்டே இவர்கள் குடும்பத்தினர் 7 பேருக்குச் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுத்தது. கருணாகரன், சோமசேகர் ஆகிய உடன்பிறந்தார் மட்டும் குறைந்த வாக்கு வேறுபாட்டில் வெற்றி கண்டுள்ளனர். ஒருவர் (சிரீராமுலு) ஒரு தொகுதியில் தோல்வியையும் மற்றொரு தொகுதியில் வெற்றியையும் தழுவியுள்ளார்.
சன்னா ஃபகிரப்பா என்னும் பாசக நாடாளுமன்ற உறுப்பினர் மகன் முத்து சன்னா ஃபகிரப்பா,  ஐவருடன் சேர்ந்து இளம்பெண்ணைத் தாக்கியதாகக் கைது செய்யப்பட்டவர்.
பாசக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றத்திலேயே  காணக்கூடாத காணொளியை அலைபேசியில் பார்த்தவர்கள். இவ்வாறு பல முறைகேடுகளுக்கும் ஒழுக்கக்கேடுகளுக்கும் ஆளான பாசக உத்தமர் வேடம் போட்டும் மக்களின் வெறுப்பிற்குள்ளாகிய நிலைதான் உள்ளது.
காவல் துறையில் சாதாரணக் காவலராக இருந்த செங்கா(இரெட்டி)யின் மக்கள்தான் இவர்கள். ஆனால், இன்றைக்கோ பல்லாயிரம்  கோடிக்கு உரிமையானவர்கள். பெல்லாரியின் ஆட்சியாளர்களே இவர்கள்தாம் என்னும்படிச்  செல்வச்செருக்கில் திளைக்கின்றனர்.
பாசக தமிழ்நாட்டில் கணிசமான தொகுதிகள் வெற்றி பெற்றால் மாபெரும் வெற்றி எனலாம். ஆனால் ஊழல் முதலைகளைப் போட்டியிடச்  செய்து, அதனால் அவர்கள் குடும்பத்தினர் சார்ந்த 15 இடங்களில் வெற்றி பெற முடியும் எனத் திட்டமிட்டு மாபெரும் தோல்விகளைத்தான் இத்  தொகுதிகளில் சந்தித்துள்ளது. இஃது எப்படி மாபெரும் வெற்றியாகும்?
 29 இடங்களில் 1595, 1915, 1961 என்பனபோன்று குறைந்த வாக்குகளைப் பெற்றுப் பாசகவினர் காப்புத்தொகை இழந்து மண்ணைக்  கெளவியுள்ளனர். அறிவுடன் சிந்திப்பவர்கள் இதனை மாபெரும் வெற்றி என்பார்களா?
  பாசகவின் முதல்முறை வெற்றி அல்ல இது. 2013 சட்டமன்றத் தேர்தலில் 114 இடங்களில் வென்ற பாசக, அவர்களின் பிதாமகர்கள் பல வாரங்கள் பரப்புரை மேற்கொண்டும் 104 இடங்களைத்தான் பிடித்துள்ளது என்னும் பொழுது தென்னிந்திய நுழைவிற்கான வெற்றி என்றால் பொருந்துமா?
 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் 17 தொகுதிகளில் வென்று 60 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற பாசக இப்போதைய ச.ம.தேர்தலில் 222 தொகுதிகளில் 104 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று 46 விழுக்காடு வாக்குகள் மட்டும் பெற்றுள்ளது எப்படி மாபெரும் வெற்றியாகும்?
 வாக்குகள் எண்ணிக்கையில் இந்தியத் தேசியப் பேராயக்(காங்,)கட்சி 38 விழுக்காடு பெற்று முதலிடம் வகிக்கும் பொழுது 36.2 விழுக்காடு வாக்குகள் பெற்ற பாசக எப்படி மாபெரும் வெற்றி என்று வெட்கமின்றிக் கூறுகிறது என்றுதான் தெரியவில்லை
  கோவா முதலான பிற மாநிலங்கள் பலவற்றிலும்  தனிப் பெரும்பான்மை பெற்ற பிற கட்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டுக் குறுக்குவழியில் ஆட்சிக்கு வந்த பாசக இப்பொழுது சட்டமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாத பொழுதும் தனிப் பெரும்பான்மை என்ற முழக்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆட்சிப்பீடத்தில அமர நாணம் கொள்ள வில்லையே!  முன்முறைகளைப் பின்பற்றிச் சட்டமன்ற பெரும்பான்மை இல்லாத பாசக ஆட்சிஅமைக்க உரிமையில்லை என  உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பை வழங்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு நேராதபடி, பேர வணிகத்தைச் சிறப்பாக முடித்துக்கொண்டு ஆட்சியில் ஒட்டிக் கொள்ள பாசக முயன்று வருகிறது.
  பாசக மாநிலங்களில் – காசுமீராக இருக்கட்டும், உ.பி.யாக இருக்கட்டும் – எல்லா மாநிலங்களிலும் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் உழவர் பெருமக்களுக்கும் மண்ணின் மைந்தர்களுக்கும் எதிரான அவலங்களே  நிகழ்கின்றன. ஆனால், பாசக, ஒரே சமயம் – இந்து;  ஒரே மொழி – சமற்கிருதமயமாக்கப்பட்ட இந்தி;  ஒரே கட்சி – பாசக என்னும் நிலைக்காக முயன்று வருகிறது. தோல்வியை வெற்றியாகக் காட்டும் பாசக தமிழ்நாட்டிலும் நச்சு விதை பரப்ப  மேலும் முனைப்பாகப் பணியாற்றும். நாம் விழிப்படைவோமா?
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 951)
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல: சித்திரை 30- வைகாசி 05, 2049 –  ஏப்பிரல் 16-22, 2018

Tuesday, May 8, 2018

கனிவில்லாத இந்திய அரசும் துணிவில்லாத தமிழக அரசும் – இலக்குவனார் திருவள்ளுவன்

கனிவில்லாத இந்திய அரசும்

துணிவில்லாத தமிழக அரசும்

  மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருப்பது இயற்கைதான். ஆனால், தமிழக அரசினருக்கு இந்த அளவு பயம் இருப்பது நாட்டு மக்களுக்கு அல்லவா தீமையாய் முடிகிறது? தீமையின் உச்சக்கட்டம்தான் தேசியத்தகுதி நுழைவுத் தேர்வு -NEET – மூலம் மாணவர் சேர்க்க நடை  பெற இசைந்தது.
 கல்வித்துறை என்பது மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பொழுதே தீமைகள் உலா வரத்  தொடங்கின. இப்பொழுது கல்வித்துறை முழுமையும் மத்தியப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் துயரங்களும் அவலங்களும் நம்மை விட்டு நீங்கா. பொதுத் தேர்வுத் துயரங்களில் இருந்து நாம் பாடம் படிக்காவிட்டால் அடிமையாகக் கிடக்க வேண்டியதுதான்!
 பொதுத் தேர்வு மூலம் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற என்ன தேவை வந்தது?  இதுவரை தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முடித்துவிட்டு மருத்துவரானவர்கள் வல்லுநர்களாக இருக்க வில்லையா? அந்தந்த மாநில மக்களின் கல்விக்காக அந்தந்த  மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் சேர்க்க  இந்தியா முழுமைக்கான பொதுத் தேர்வு ஏன் தேவை? மேனிலைக்கல்வியின் தரம் உயர்கல்விக்குச் செல்லும் தரத்தில் இல்லையா? அப்படியானால் மேனிலைக்கல்வி முறையை மாற்று!  இல்லை, தரமான கல்விதான் அளிக்கப்படுகிறது என்கிறீர்களா? அப்படியானால் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நிறுத்து! 
  “ஒரே நாடு! ஒரே மதம்!  ஒரே மொழி! ஒரே கல்வி!” என்பது நாட்டு மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கின்றது. இருந்தும் ஆட்சியாளர்கள் திருந்தவில்லையே! பாசக ஆட்சி என்றாலே ஆரிய விரும்பிகள் துள்ளல்களுக்கும் எள்ளல்களுக்கும் சென்று விடுகின்றனர். இதனால் நிலைமை மேலும் மோசமாகின்றது. பாசகவினரின் அன்றாட உளறல்கள் தங்குதடையின்றி ஊடகங்கள்மூலம் உடனுக்குடன் மக்களை அடைகின்றன. அச்சத்தினால் பின்னர்ப் போலியாக மறுப்பு தெரிவித்தாலும் மக்கள் அதை ஏற்பதில்லை.
  இவ்வாறுதான் ‘நீட்டுத்’ தேர்வு என அழைக்கப்பெறும் தேசியத் தகுதி நுழைவுத் தேர்வின்  தீமைகளை உணர்ந்த பின்னரும்   பொதுவான கல்வி வளர்ச்சிக்கு எதிராக இதைப் பாசக கெட்டியாகப்பிடித்துக் கொண்டு மக்களை ஆட்டுவிக்கின்றது. அக்கட்சியினரும் அதன் தாளத்திற்கேற்ப ஆட்டம் போடுகின்றனரே யன்றி மக்களின் இன்னல்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதில்லை.
 தேர்வர்கள் மீது காட்டப்படும் கெடுபிடிகளுக்குக் கடந்த ஆண்டே எதிர்ப்பு வந்த போதும் இவ்வாண்டும் தேவையற்ற கெடுபிடிகள்.  சட்டைக் கைகளைக் கிழித்தல், கூந்தல்களை அவிழ்த்துத் தலைவிரிகோலமாகத் தேர்வு எழுதச் செய்தல்,  பெண்களின் மாராப்புகளை அகற்றல் போன்றவை பண்பாடுள்ள செயல்கள்தாமா? மூட நம்பிக்கைகளை விளைவிக்கும் கைகளில் கட்டப்படும் கயிறுகளும் சாதிப்பாகுபாட்டை உணர்த்தும் பூணூல்களும் தேவையில்லைதான். ஆனால், அவற்றைத் தேவை என உணர்வோர்களுக்கும் நம்பிக்கை வைத்திருப்போர்களுக்கும் நாம் மதிப்பு அளிக்க வேண்டுமல்லவா? அவற்றை அறுத்தெறிவது கொடுமையல்லவா? இனிமேல், மொட்டையடித்துக் கொண்டும் உடம்பில் ஒட்டுத்துணிக்கூட இல்லாமலும் தேர்வு  அறைக்குள் செல்ல வேண்டும் என்று சொல்வார்கள் போலும்!
  தமிழ்நாட்டில் 1,07,288 தேர்வர்களுக்கு  170 தேர்வு மையங்கள் மட்டும் அமைத்தது மத்தியஅரசின் கல்வி வாரியம்.  ஆனால், 75,167 தேர்வர்கள் உள்ள குசராத்தில் 138 தேர்வு மையத்தை அமைத்துள்ளது, அதே மத்திய அரசு. கருநாடகாவில் 96,377 தேர்வர்களுக்கு 187 மையங்களும்  கேரளாவில் 1,20,792  தேர்வர்களுக்கு 226 தேர்வு மையங்களும் மகாராட்டிரத்தில் 1,83,961  தேர்வர்களுக்கு 345 மையங்களும் என இவ்வாறு பிற மாநிலங்களில் அமைக்கப்பட்ட தேர்வர்-மையம் விகிதங்களைப் பார்க்கும் பொழுது தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது  எளிதில் புரியும். தமிழன் என்றால் இளித்தவாயன் என்பதால் தமிழகத்  தேர்வர்களுக்குக் கேரளா, கருநாடகா, இராசசுதான் மாநிலங்களில் தேர்வு மையங்கள் வைத்துள்ளனர்.
  உள்ளூரில் தேர்வு என்றாலே நடுக்கம், கிலி, உளைச்சல் ஏற்படுவது இயற்கை. இதில் வழக்கத்திற்கு  மாறாக அயல் மாநிலங்களுக்கான அலைச்சல் என்பது  வாழ்வில் உயரக் கனவு காணும் மாணவர்களுக்குப் பெருந்தொல்லை அல்லவா?  என்னதான் அரசும் தனியாரும் பண உதவி அளித்தாலும் அதற்கு முன்னதாகப் பணம் புரட்டல், வழக்கமான வேலைகளை விட்டுவிட்டு உடன் செல்லுதல் போன்றவற்றால்  நம்பிக்கையூட்ட வேண்டிய பெற்றோர்  நிலைகுலைந்து  அல்லவா போனார்கள்? தேர்வைப்பற்றிமட்டுமே சிந்திக்க  வேண்டிய மாணவத் தேர்வர்களை எண்ணத்தைச் சிதறவிடும் சூழலுக்குத் தள்ளிவிட்டமையால்,   படிப்பிலும் தேர்விலும் நாட்டம் எங்ஙனம் செல்லும்? தகுதியிருந்தும் இது போன்ற சூழல்களால் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுக்கிறார்களே! இதனால் அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றனவே!
  இவற்றால் பாதிக்கப்பட்டு உயிர்ப்பலிக்கு ஆளானவர்கள்தான் மகாலிங்கத்தின் தந்தை கிருட்டிணசாமி என்னும் இரமேசும்  ஐசுவர்யாவின் தந்தை கண்ணனும்! கிருட்டிணசாமி என்னும் இரமேசு பகுதி மக்களுக்குச் சதுரங்கத்திலும் கால்பந்தாட்டத்திலும் பயிற்சி அளித்து வந்த நூலகர். தன் மகனைச் சதுரங்க நாயகனாகவும் மருத்துவராகவும் ஆக்க வேண்டும் என்று கனவு கண்டவர். நூலகராக உள்ளமையால் தகுதித் தேர்வுகளுக்கு மகனை உருவாக்கும் நம்பிக்கை மிகுந்தவர். கண்ணன் பற்றிய விவரம் இன்னும் வரவில்லை.  இருப்பினும் என்ன? மகளை மருத்துவமணியாக ஆக்கும் கனவில்தானே முயற்சிகள் மேற்கொண்டிருப்பார். இவர்கள் இறப்பிற்குப்பின் அரசு எவ்வளவு உதவி புரிந்தாலும் இழந்த தந்தையை – அவர்களின் குடும்பத்தலைவரை – மீள அளிக்க இயலுமா? உயிர்ப்பலிக்கு ஆளாகாவிட்டாலும் வெவ்வேறு வகையில் பாதிப்புற்ற பெற்றோரும் மாணவ இளைஞர்களும்  மிகுதி யல்லவா?
  இவர்களின் துயரத்தைப்  போக்கத் தமிழ்நாட்டரசு ஒன்றே ஒன்று செய்தால் போதும்! போனது போகட்டும்! இனியேனும் துணிவுடன் செயல்பட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று செயல்பட வேண்டும். மத்திய அரசும் கருநாடக அரசும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் செயல்படும்  பொழுது தமிழ்நாட்டரசு மட்டும் மத்திய அரசின் ஆணையை அல்லது  தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறாமல்  இருந்து மக்களுக்கு ஏன் அநீதி இழைக்க வேண்டும்?
  +2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு முறையில் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கை முடிவை அறிவிக்க வேண்டும். தகுதித் தேர்விற்கான ஆயத்தம், தேர்வு எழுதப்பட்ட இன்னல்கள்பற்றிக் கவலைப்பட  வேண்டா! இனியேனும் நல்லன நடக்கட்டும் என்ற உறுதியுடன் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டரசே மக்களின் விருப்பத்திற்கிணங்கச் செயல்படுவதாக அறிவித்து இதனை நிறைவேற்றட்டும். இதனால் மத்திய அரசால் தொல்லை விளைந்தால் தமிழக மக்கள் இவர்கள் பக்கம் இருப்பார்கள்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. (திருவள்ளுவர், திருக்குறள் 661)
ஆம்! துணிவு தரும் மன உறுதியே சிறந்த செயல் என உணர்க!
  திறமையால் ஆட்சியை நிலைக்க வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணிவாரா? துணிந்து துன்பம் தரும் தேசியத் தகுதி நுழைவுத் தேர்வைத் தூக்கி எறிவாரா?
– இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, May 1, 2018

வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்


வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும்

  கருத்தரங்கங்கள் கருத்துப் பரவலுக்கும் புத்தறிவிற்கும் மனமகிழ்ச்சிக்கும் படைப்புப் பெருக்கத்திற்கும் வழி வகுப்பன. ஆனால், இப்பொழுதெல்லாம் கருத்தரங்கம் என்றாலே அச்சம்தான் வருகின்றது.
  சிலர் தங்களுக்கு வேண்டிய பேச்சாளர்களை முடிவெடுத்துக் கொண்டு கருத்தரங்கம் என அறிவிப்பார்கள். அக்கூட்டத்தில் யாரும் கேள்வியும் கேட்கக்கூடாது என்பார்கள். சொற்பொழிவாக இருந்தாலும்  1 மணி நேரம்  பேசினால் 10 மணிக்கூறாவது கலந்துரையாடல் இடம் பெற வேண்டும் என்பார் நாவரசர் அறிஞர் ஒளவை நடராசன். ஆனால், இவர்கள் தாங்கள் மட்டும் பேசிக்கொண்டு கருத்தரங்கம் என்பர்.  குறிப்பிட்ட மையத் தலைப்பில் பேச்சாளர்களை முடிவெடுத்துக் கொண்டு பேசும் நிகழ்ச்சிகளைக் கருத்தரங்கம் என்று சொல்லாமல் உரையரங்கம் என்று சொல்ல வேண்டும்.  தனித்தனித் தலைப்பில் ஒருவரோ இருவரோ பேசும் நிகழ்ச்சியை(ச் சொற்)பொழிவரங்கம் என்று சொல்ல வேண்டும்.
  கட்டுரைகளை அளிக்குமாறு வேண்டி அதன் அடிப்படையில் கருத்தமர்வுகள் நடை பெறும் நிகழ்வை மட்டுமே கருத்தரங்கம் என்று சொல்ல  வேண்டும். இக்கருத்தரங்கங்களில் கட்டுரையாளர்களுக்குச் சம வாய்ப்பு அளிக்கப்பெற வேண்டும்.
  கருத்தரங்க அமைப்பாளர்கள் தங்களுக்கும் தாங்கள் சிறப்பானவர்களாகக் கருதுபவர்களுக்கும் கூடுதல் நேரம் ஒதுக்கிவிட்டுப் பிறரை ஐந்துமணித்துளிகளில்  பேசி முடிக்க வேண்டும் என்று சொல்பவர்களும் உள்ளனர். பன்னாட்டுக் கருத்தரங்கம் என்று சொல்லிக் கொண்டு இரு  நிமையத்திற்குள் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு.
 போதுமான சம வாய்ப்பு கொடுத்துக் கருத்தரங்கம் நடத்துபவர்களும் உள்ளனர். ஆனால், அவர்கள், தாங்கள் பங்கேற்கும் அமர்வுகளில் மட்டும்  ஒளிப்படம், காட்சிப்படம் எடுத்துக் கொண்டு பிற அமர்வுப்பக்கம் படக்கலைஞர்கள் தப்பித்தவறிக்கூட வருவதற்கு விட மாட்டார்கள். பங்கேற்பவர்கள் தத்தம் அலைபேசிகளில் படம் எடுத்துக் கொள்ளட்டும் என்பார்கள்.
  சிலர் இலக்கியச் சுற்றுலா போல் கருத்தரங்கங்களைத்    தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பணமும் உயர் பதவியும் உடையவர்களுக்கான கருத்தரங்கங்கள் இவை. கட்டுரையாளர் ஒவ்வொருவருக்கும் நற்றிணைச் செல்வர், குறுந்தொகைச் செம்மல் என்பன  போன்ற  பட்டங்களை அளிப்பார்கள். தரமற்ற கட்டுரையளிப்பவர்களும் சிறப்பிக்கப் பெறுகிறார்கள் என்று குறைபாடு இருந்தாலும் இவர்களால் பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சிதான் அடைகிறார்கள். காலத்தாழ்ச்சியின்றிக் கட்டுரைத் தொகுப்புகளைக் கருத்தரங்கத்தின்பொழுதே வெளியிடும் சிறப்பான பணிகளையும் இவர்கள் ஆற்றுகிறார்கள்.
  இன்னும் சிலர் மாறுபட்டக் கருத்துகளைக் கலந்துரையாடல் மூலம் முடிவெடுக்க வேண்டும் என்று எண்ணாமல் கட்டுரைகளையே ஏற்பதில்லை. கணிணி சார்பான தமிழ்க் கருத்தரங்கங்கள் எனில், கணிப்பொறியில் வல்லமையும் தமிழில் ஆர்வமும் இருப்பதால் தங்களைத் தமிழ் மேதைகளாக எண்ணிக் கொண்டு தமிழில் கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள் பெருகுவதற்குத் தடையாக இருப்பார்கள்.
  தமிழின் பெயரால் நன்கொடையும் புகழும் வாங்கிக் கொண்டு தமிழுக்கு எதிராகச் செயல்படுபவர்களால்  அறிவியல் துறைகள் தமிழில் எப்படி  வளரும் என்பதைப் புரிந்து கொள்ளாத இவர்கள் மனம் மாறினால் நன்று.
  இன்னும் சிலர்  பிற அமைப்புகளுடன் இணைந்து “பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்துகிறோம், நாங்கள் உமி கொண்டு வருகிறோம் நீங்கள்  அரிசி கொண்டு வாருங்கள்” என்பது  போல் நடந்து கொள்கிறார்கள்.
  இணைந்தவர்கள், தங்களுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாதே எனக் கைப்பணத்தையும் செலவிட்டுச் சமாளிப்பார்கள்.  இப்படித்தான் மலேசிய அமைப்புடன் மதுரை காமரசார் பல்கலைக்கழகம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் தமிழகப் பொறுப்பாளர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள். இக் கருத்தரங்க வணிகர்கள், ஒரே செலவினத்திற்கு இரண்டுக்கு மேற்பட்டவர்களிடம் நன்கொடை வாங்கி ஏமாற்றுபவர்களாகவும் உள்ளனர்.ஒருவரை ஒருமுறை ஏமாற்றினால் போதும் என நல்ல மனம் கொண்டு ஒவ்வொருமுறையும் ஏமாற்றுவதற்கு வெவ்வேறு ஆள்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அயல் நாட்டு மயக்கத்தால் இங்குள்ளவர்கள் ஏமாறுவது வழக்கம்தான்.
  பலரும் தங்களுக்கு முதன்மையும் விளம்பரமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கருத்தரங்கங்கள் நடத்தி  ஆதாயம் அடைகின்றனர். சிலர் பொறுப்புகளில் இருந்து கொண்டு கருத்தரங்கச் செலவினத்தில் அயல்நாடுகள் சென்று வரலாம் எனக் கருத்தரங்க ஆர்வலர்களாக உள்ளனர். வேறு சிலர் தங்கள் வணிக வளர்ச்சி அடிப்படையில் கருத்தரங்கப் பற்றாளர்களாகக் காட்டிக் கொண்டு பயனடைகின்றனர். இவர்களை  யெல்லாம் மன்னிக்கலாம். ஆனால் திருச்செந்தூரார் பெயருடைய ஒருவர் பணத்தைக் கையாள வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுக் கருத்தரங்கம் நடத்தி மோசடி செய்துள்ளார் என்னும் பொழுது இதில் வஞ்சிக்கப்பட்டவர்கள் இனிக் கருத்தரங்கம்  என்றாலே காதத் தொலைவு ஓட மாட்டார்களா?
  உத்தமம் என்னும் அமைப்புத் தமிழ் ஆர்வலர்களைப் புறக்கணித்ததால் இரண்டாம் உத்தமம் ஒன்று தொடங்கப்பட்டதை முன்பே குறிப்பிட்டிருந்தோம்.  போட்டி அமைப்பாக இருக்கக்கூடாது அவரவர் செயல்பாட்டிற்கேற்ப இணையத் தமிழை வளர்க்கட்டும் எனச் சொல்லியதற்கும் மாறாக கருத்தரங்க நாள், இடம்  போன்றவற்றில் ஒரே மாதிரிச் செயல்பட்டது இந்த அமைப்பு.  சரி, தொலையட்டும் என்றால் பங்கேற்பாளர்கள் குழுவாக வருவதற்குக் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்வதாகவும் நுழைமம்(விசா) பெற்றுத் தருவதாகவும்  ஒவ்வொருவரிடமும் உரூபாய் 65,000  பெற்றார் கனடாவிலுள்ள பொறுப்பாளர்.
  எதற்கெடுத்தாலும் கடன் அட்டை மூலமே பணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை வந்து விட்டதால்  கடன் அட்டை இல்லாத பெரும்பான்மையர் பணம் செலுதத இயலவில்லை. எனவே அந்தந்த ஊர்களில் தன் நண்பர் என ஒவ்வொருவரைச் சுட்டிக்காட்டி அவரிடம் பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். அவர்களும் பணம் செலுத்த அந்த நண்பர்கள் எனப் பட்டோரும் மறுநொடியே கனடாவிற்குப் பணத்தை அனுப்பி விட்டனர்.  கூறியபடி அனைவருக்கும நுழைமம் கிடைத்துக் கருத்தரங்கத்தில் பங்கேற்றிருந்தால் சிக்கல் எதுவும் எழுந்திருக்காது. ஆனால், பணம் பெற்றது கனடாவிற்கு வந்து கருத்தரங்கத்தில் பங்கேற்கச் செய்வதற்காக அல்லவே  எனவே நுழைமத்திற்கு  ஏற்பாடு செய்யவில்லை. யாருக்கும் நுழைமம் டைக்காததால் கனடா செல்ல இயலவில்லை. சரி, பயணச்சீட்டு எடுக்காததால் முழுப் பணத்தையாவது பெறலாம் என்றால்  முதலில் கருத்தரங்கம் முடிந்த பின் அனுப்புவதாகச் சொல்லி அடுத்தடுத்து வெவ்வேறு  காரணம் சொல்லிப் பணத்தைத் திருப்பித் தரவில்லை.
  பல்வேறு வலியுறுத்தலுக்குப் பின்னர், அவ்வப்பொழுது தவணை முறையில் சிறு தொகைகளை அனுப்பிக் கொண்டுள்ளார். ஏமாற்றுபவரை யாருக்கும்  தெரியாது;  இங்குள்ள பொறுப்பாளர்கள்தான் மாட்டுவார்கள்; ‘குருவி’யிடம் கொடுத்ததால் காவல் துறையில் முறையீடு செய்ய மாட்டார்கள்;  பணம் கொடுத்ததற்கான எச்சான்றும் இல்லை என்பதால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க இயலாது; எனப் பலவாறாக எண்ணி அவர்   தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். நண்பர்களாகக் கருதிப் பணம் கொடுக்கப்பட்டவர்கள் ‘குருவி’கள் என்றால் இத்தனைக் குருவிகளைத்  தெரிந்து வைத்துள்ள திரு.வஞ்சகர்  எத்தகைய மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார் எனக் காவல்துறையும் தொடர்புடைய பிற துறைகளும் எண்ண மாட்டார்களா?
 குருவிகளுக்கு அலுவலகம் கிடையாது. மிதியூர்திகளில் வலம் வந்து பணத்தைப் பெறுகிறார்கள், கொடுக்கிறார்கள். நாணயமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால், பணம் கொடுக்க வேண்டியவர் தராவிட்டால் என்ன செய்வார்கள்? ஆனால்அவர்களின் தொலைபேசி எண்கள் மூலம் அவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டுக் கொணடுள்ளன. அவர்கள் மூலம் கனடாவிலுள்ளவர்கள் விவரங்கள் கிடைக்கும். நடவடிக்கை எடுக்க முடியாது என்பவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். அடுத்த வாரத்தில் தமிழகக்காவல் துறைக்கும் மத்திய அரசின் துறைகளுக்கும் தொரண்டோ காவல் துறைக்கும் கனடாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் முறையீடுகள் தரப்பட உள்ளன. இனத்திற்கும் நாட்டிற்கும் அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காகக் கமுக்க நடவடிக்கையை வெளிப்படுத்துகின்றோம். இனியேனும் காலந் தாழ்த்தாமல், தமிழகப் பொறுப்பாளர்கள் தத்தம் சொத்துகளை விற்றேனும்  தொகைகளைத் திருப்பித் தரட்டும் என்று எண்ணாமல் உடன் அவற்றைத் திருப்பித் தர வேண்டும். பணம் தந்த பலரும் பணத்தைச் செலவழிக்க வழி  தெரியாமல் தந்தவர்கள் அல்லர். கடன் முதலான மாற்று ஏற்பாடுகள் மூலம் பணம் பெற்று அளித்தவர்களே! இப்பொழுது பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். பாவ நம்பிக்கை இருப்பினும் இலலாவிட்டாலும் தம் குடும்பநலன் கருதியாவது பாதிப்புற்றோரின் சாவஉரைகளிலிருந்து தப்பிக்க இனியேனும் நேர்மையாக நடந்து கொண்டு அரையாண்டு கடந்த பின்னரும் தரப்படாத தொகைகளை அனுப்பி   வைக்க நச்சினார்க்கும் இன்னாதாரை வேண்டுகிறோம்.
தமிழ்க்கடவுள் திருச்செந்தூரார் பெயர் சூட்டியவரே! உங்களின் நற்பணிகளுக்குக் களங்கம் ஏற்படும் வகையில் தமிழர்க்கு வஞ்சகம் -இரண்டகம் – செய்யாதீர்!
  கருத்தரங்கங்களில் பங்கேற்பவர்களும் திடீரென்று வந்து உடனே வாசித்துவிட்டுச் செல்ல  வேண்டும் என்பது பார்வையாளர் என்ற முறையில் சுருக்கமாக வினா எழுப்பல், ஐயம் கேட்டல், தெளிவுபடுத்தல் போன்றவற்றில ஈடுபடாமல் பேச்சாளராக மாறுவது போன்ற தவறுகளைச் செய்கிறார்கள். இவற்றைப் பின்னர்த் தனியாகக் காண்போம்,
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇயற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 660)
இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive