Saturday, November 17, 2018

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் 

பேரா.சி.இலக்குவனார் மாணவப்பருவத்தில் விடுமுறைக்காலங்களில் நண்பர்கள் மூவரை இணைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் தனித்தமிழ் பொழிவுகள் நடத்தினார்; தமிழின் பெருமை, தமிழ் இலக்கியச் சிறப்பு, அயற் சொற்கள் கலப்பின்றித் தமிழில் எழுதவும் பேசவும் வேண்டியதன் இன்றியமையாமை முதலானவற்றை வலியுறுத்தினார்.
முத்தமிழ்க்காவலர், செந்தமிழ் மாமணி எனப் போற்றப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப் பருவத்தில் இருந்தே தனித்தமிழ்ப் பாவலராகவும் தனித்தமிழ்ச் சொற்பொழிவாளராகவும்  திகழ்ந்து தனித்தமிழ்க் காப்பிற்குத் தொண்டாற்றித் தனித்தமிழ்க் காவலராகப் போற்றப்படுகிறார்.
 பள்ளியில் படிக்கும் பொழுது தன்மதிப்பு இயக்கப் பற்றாளரான ஆசிரியர் அறிஞர் சாமி சிதம்பரனார் ‘இலட்சுமணன்’ என்னும் இவரின் பெயரை ‘இலக்குவன்’ என மாற்றினார். இப்பெயர் மாற்றம் இலக்குவனாரைத் தனித்தமிழில் முழு ஈடுபாடுகாட்டச் செய்தது. தமிழ்ப்பற்று ஊட்டி வளர்க்கப்பட்ட இலக்குவனார், அயற்சொற்களை அகற்றித் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தும் நிலைப்பாட்டிற்கு வந்தார். எனவேதான் உடன் பயிலும் மாணாக்கர்களிடம் மட்டுமல்லாமல், ஊர் தோறும்  சென்று ஊர் மக்களிடமும் (தனித்)தமிழ் ஆர்வத்தைத் தூண்டினார்.  இவ்வாறு மாணவப்பருவத்திலேயே தனித்தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர் அக்காலத்தில் வேறு எவரும இலர்.
புலவர் வகுப்பு பயிலும் பொழுதே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும்  தனித்தமிழ்ப்பாவியத்தை இயற்றினார்; தனித்தமிழ்ப் பாடல்களையே எப்பொழுதும் இயற்றினார்.
பள்ளித் தமிழாசிரியராய்ச் சேர்ந்த பின்னும், கல்லூரிப்பேராசிரியராய்த் திகழ்ந்த பொழுதும் மாணாக்கர்கள் வருகை எடுப்பின் பொழுது ‘உள்ளேன் ஐயா’ எனத் தமிழில் கூறுமாறு செய்தார். இஃது ஓர் இயக்கமாகத் தமிழ்நாடு எங்கணும் பரவியது.
விளையாட்டு வகுப்புகளிலும் ‘அன்பே கடவுள்’ என (love all என்பதற்கு மாற்றாக)த் தொடங்குவது, ஒன்று, இரண்டு, மூன்று என்பனபோல் தமிழில் சொல்வது என்னும் வழக்கத்தை உண்டாக்கினார்.
நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் இவரிடம் தமிழ் பயின்றவர் சொல் விளங்கும் பெருமாள். தனித்தமிழில் பேசுவதும் தமிழ்ப்பற்றை ஊட்டுவதுமே பேரா.இலக்குவனாரின் அன்றாடச் செயல்பாடு என்னும் அவர், ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.
ஒரு நாள் யாப்பருங்கலக் காரிகை நடத்திக் கொண்டிருந்தார். “ஐயா, ஒரு சந்தேகம்” என்றேன் நான். பேராசிரியர் முகத்தில் கருமேகம் திரண்டது. புத்தகத்தை மேசை மீது போட்டார். நிலைமையை உணர்ந்த நான்  “ஐயா, தெரியாமல்”  என்றேன்.
“ஐயா, நமது வகுப்பில் மறந்தும் பிற சொல் பேசலாமாய்யா? அதற்காகவாய்யா நான் இத்தனை பாடுபடுகிறேன். ஐயம் என்னும் சொல் இருக்க ஐயர் சொல் ஏனய்யா” என்றார்.
 நான் கண்ணீர் விட்டு அழாக்குறையாக எத்துணை வேண்டியும் மனம் ஒப்பினாரில்லை. கேட்ட ஐயம் போன இடம் தெரியவில்லை.  அன்றிருந்து வகுப்பில் யாரேனும் மறந்தும் பிற சொல் கலப்பரோ?” (செந்தமிழ், திசம்பர் 1973)
இவ்வாறு மாணாக்கர்கைளத் தனித்தமிழில் பேசச் செய்தார். ஐயர் தமிழ் என்று சொன்னாரே தவிரப் பேரா.சி.இலக்குவனார் சாதி வேறுபாடு பார்ப்பவ ரல்லர். பிராமண மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை  இல்லை என்பதால், கல்வி உதவித் தொகை தரும் நிறுவனங்களைக் கண்டறிந்து தானே விண்ணப்பப் படிவத்தை வாங்கி வந்து  பூர்த்தி செய்யச் செய்து அனுப்பி உதவித் தொகை கிடைக்கச் செய்வார்.  பணமுடையால் கல்லூரிக்குப் பணம் கட்டாத ஏழை மாணவர்களுக்குத் தாமாகவே முன் வந்து உதவும் பொழுதும் சாதி வேறுபாடு பார்க்காமல் இயலாமையை மட்டும் கருதி உதவுவார்.
பேரா.சொல் விளங்கும் பெருமாள் தன் கல்லூரிக்காலத்தில் பேராசிரியரின் தமிழ்க்காப்புப்பணியை நினைவு கூர்ந்து மேலும் பின்வருமாறு கூறுகிறார்.
“மாணவர்கள் தங்கள் கைகளில் தார்ச்செட்டி தூக்கித் தெருக்களில் காணப்படும் தமிழ்க்கொலைப் பெயர்களை அழித்தல் வேண்டும் “என்பார். “சிறு வெற்றிலைப்பாக்குக் கடைகளிலும் பெரிய உணவு விடுதிகளிலும் வண்ணக் குடிகளுக்கும் உணவு வகைகளுக்கும் நற்றமிழ்ப்பெயர்களைச் சூட்டவேண்டும்” என்று ஊக்கமூட்டுவார். இவ்வாறு அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களிலும் தமிழ்ப்பெயர் இருக்க வழி காட்டினார்.
ஒரு சமயம் தெ.தி.இந்துக்கல்லூரி முதல்வராக இருந்தபொழுது “நித்தியவெள்ளி உண்கலன் ஒன்று கேட்பாரற்றுக் கிடைத்துள்ளது. உரியவர் அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ளலாம்” என அறிவிப்புப் பலகையில் அறிவிப்பை ஒட்டி யிருந்தார். இதனை அன்றைய ஆளுங்கட்சி சார்ந்த இதழ் ஒன்று கேலி செய்து எழுதியிருந்தது. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனாரிடம் கூறிய பொழுது, “அப்படியாவது உண்கலன் என்னும் நற்றமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் அல்லவா? மகிழ்ச்சி அடைவோம்” என்றார். இவ்வாறு நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவது கண்டு உவகை கொள்பவர் அவர்.
 தனித்தமிழ் எனப்படும் தூய தமிழ் என்பது எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல. “தமிழ்மொழி மேலும் தமிழர் பண்பாட்டு மேலும் பிறர் பிறரால் ஏற்றப்பட்டிருந்த மாசுகளின் வழியாகத் தொல்காப்பியத்திலும் மாசேற்றப்பட்டிருந்தது. தமிழ்நெறிக்கு மாறாகச் சொல்லப்பட்ட – உரை காணப்பட்ட, அவற்றின் அழுக்கை அறவே துடைத்து மேலைநாட்டு ஆய்வியல் அறிஞர்களின் எண்ணத்தில் படிந்திருந்த கறைகளையும் மாற்றினார்.”(புலவர் மணி முதுமுனைவர் இரா.இளங்குமரன்,செந்தமிழ்க்காவலர் இலக்குவனார், பக்.14). இவ்வாறு தமிழின் தூய்மை துலங்கவும் பேரா.சி.இலக்குவனார் பாடுபட்டார்.
பேரா.சி.இலக்குவனார் தாம் பணியாற்றிய ஊர்களிலெல்லாம் தமிழ் அமைப்புகளைத் தோற்றுவித்தார். அவை மூலமும் மாலை நேரங்களிலும் விடுமுறை நாள்களிலும் நடத்தும் தமிழ் வகுப்புகள் மூலமும் தனித் தமிழ்ப்பற்றினை ஊட்டினார்; தனித்தமிழை மாணவர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பரப்பினார். வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், செய்தி யிதழ்கள் ஆகியவற்றில் அயற்சொற்களைக் களைந்து நல்ல தமிழ் வழங்கப்பாடுபட்டார். தமிழ்க்காப்புக்கழகம் முதலான தம் அமைப்புகளைத் தனித்தமிழ் பரவச்செயற்படுத்தினார்.
தாம் நடத்திய சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி முதலான பல் வேறு இதழ்கள்  மூலம் தனித்தமிழ் வளரப் பாடுபட்டார்.
  தமிழின் தூய்மை காக்கப்பட வேண்டும் எனப் பாடுபட்டவர் பேரா.சி.இலக்குவனார். எனினும் ‘தூயதமிழ்’ என்றும் ‘நல்ல தமிழ்’ என்றும் சொல்வதை விரும்புவதில்லை. அவ்வாறு சொன்னால், ‘மாசுடைத் தமிழ்’ என்றும் ‘கெட்ட தமிழ்’ என்றும் இருப்பதாகப் பொருள் வரும் என்பார். பயன்பாட்டில் பிற மொழிச் சொற்களைக் கலப்பது  பயன்படுத்துவோர் தவறு. அதற்காகத் தமிழ் மொழியைக் குற்றம் சொல்லக் கூடாது என்பார். எனினும் கலப்பிலிருந்து அடையாளப்படுத்துவதற்காகத் ‘தனித்தமிழ்’ எனச் சொல்லப்படுகிறது. தனித்தமிழ் என்ற சொல்லாட்சி அடிப்படையில் தமிழின் தூய்மையைக் காத்த பேராசிரியர் சி.இலக்குவனார் தனித்தமிழ்க்காவலர் என்று அழைக்கப் பெறுகிறார்.
தமிழ்க்கடல் மறைமலையடிகள் தோற்றுவித்த  தனித்தமிழ் இயக்கப் பாதையில் நடைபோட்டு எண்ணம், சொல், செயல், படைப்பு, பணிகள்  களப்பணி மூலம் தமிழ்க்காப்பில் சிறந்திருந்த தனித்தமிழ்க் காவலர் பேரா.முனைவர் சி.இலக்குவனார் வழியில் நாமும் பிற சொற் கலப்பினை அகற்றித் தமிழ் வளர்ப்போம்!
வாழ்க தமிழ்! ஓங்குக இலக்குவனார் புகழ்!
இலக்குவனார் திருவள்ளுவன்
[கார்த்திகை 01, 2049/ நவம்பர் 17. 2018 தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் 109 ஆம் பிறந்த நாள்]
– தினசரி நாள் 17.11.2018

Thursday, November 8, 2018

தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழ்நாட்டில் எல்லாக் கட்சியின் ஆட்சிகளிலும் தமிழ் வளர்ந்தும் உள்ளது; தளர்ந்தும் உள்ளது. எனினும் எந்த ஆட்சியிலும் தமிழ் எல்லா நிலைகளிலும் பயன்பாட்டு மொழியாக மாற்ற எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய அரசு, இருக்கின்ற பயன்பாட்டு நிலைகளிலும் தமிழைத் தொலைத்து வருகின்றது.
பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி தொலைக்கப்பட்டு வருகிறது. மாணாக்கர் எண்ணிக்கை குறைகிறது என்றால் அதை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் தமிழ்வழிப்பள்ளிகளை அரசு ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றுகிறது.  அரசு மழலைப்பள்ளிகள் தொடங்க இருக்கிறது. ஆனால் அங்கு தமிழைத் தொலைத்துத்தான் அப்பள்ளிகளைத் தொடங்குகிறது.
பத்து அகவை வரை குழந்தைகளுக்கு அயல்மொழியறிவே திணிக்கப்படக்கூடாது என்பது கல்வி உளவியல். அதற்கு மாறாகப்பிஞ்சு உள்ளங்களில் ஆங்கிலத்தைத் திணித்துத் தமிழைத் தொலைக்கிறது தமிழக அரசு.
 பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 90 விழுக்காட்டிற்கு மேல் தமிழ் ஆட்சிமொழிச் செயல்பாடு இருந்தது. அத்தகைய துறைகளில்கூட இன்று தமிழ்ச்செயல்பாடு குறைந்துள்ளது. பதிவேடுகள், மடல்போக்குவரத்து, அறிவிப்புகள், மாறுதல் ஆணைகள், எனப் பல இடங்களிலும் தமிழ் இல்லை.
தேர்வாணையப் பாடத்திட்டங்களில் தமிழ் வரலாற்றிற்கு முதன்மை இல்லை. முதன்மை மட்டுமல்ல உரிய பங்கும் இல்லை.
தமிழ் மொழிச்சிறப்பு, தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்பு, தமிழ் நாகரிகச் சிறப்பு, தமிழ் வரலாற்றுச் சிறப்பு முதலானவற்றை வெளிப்படுத்தும் வகையில் தேர்வாணையத் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் இல்லை.
அதைவிடக் கொடுமை, தேர்வு வினாக்களைத் தமிழில் குறித்துத் தருவதற்குத் தக்கவர் இல்லை என்று கூறிச் சில தாள்களின் வினாத்தாள்களைத் தமிழில் தரப்போவதில்லை என அதன் செயலர் அறிவித்தார். அவரது கருத்துக்குப் பரவலாக எதிர்ப்பு ஏற்பட்ட பின்னர், அவர் தனது கருத்தை மறுத்திருக்கிறார்.
அப்படித்தான் தமிழ்வழிப்பள்ளிகைள மூடப்போவதில்லை என்று முதலில் அறிவித்தார்கள். பின்னர் எந்தெந்தப் பள்ளிகளை மூடப்போவதில்லை என்று அறிவித்தார்களோ அவற்றை எல்லாம் ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றி வருகின்றனர். ஒரு பள்ளியில் ஆங்கிலம் வருகின்றது என்றால் தமிழ் அங்கே தொலைக்கப்படுகிறது என்றுதானே பொருள்.
அரசு கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்புகளை அறிமுகப்படுத்திய பொழுது அரசியலறிவியல், சமூகவியல் துறைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தனர். அந்தப் பாடங்களுக்குத்தான் தமிழில் வினா எடுக்க யாரும் இல்லையாம்!
 தமிழ்நாட்டுப்பாடநூல் கழகமே 50 ஆண்டுகளுக்கு முன்னரே கலையியல் தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளது. நிலைமை இவ்வாறிருக்க அத்தாள்களுக்கான வினாக்களைத தமிழில் எடுக்க யாருமில்லை என்பது முரணில்லையா?.
மேனிலைக் கல்விக்கான பாடத்திட்டத்தில் அரசியல் அறிவியல் இருக்கும் பொழுது அதை நடத்தும்ஆசிரியர்களால் வினாத்தாளா அளிக்க முடியாது? அப்படியானால், ஆளில்லாமல் அல்ல, மனமறிந்தே தமிழைத் தொலைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிதான் இப்படி உள்ளது என்றால் முதன்மை எதிர்க்கட்சியும் அப்படித்தான் உள்ளது. தி,முக. சட்ட மன்ற உறுப்பினர்கள்தான் ஆங்கிலவழிப் பள்ளிகளைத் தொடங்க வலியுறுத்துகின்றனர். எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் மழலையர் கல்வி நிலையிலேயே ஆங்கிலம் வேண்டும் என்று வழக்கு  தொடுக்கின்றார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், “தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்துகிறார்.
இவையெல்லாம் அவர்களின் தனிப்பட்டகருத்து என்று இவற்றை ஒதுக்க முடியாது. எதிர்க்கட்சியின் தலைமை அதற்கு உடன்படுவது ஏன்?
அவர்களும் ஆங்கிலவழிப் பள்ளிக்காவலர்களாக விளங்குபவர்கள்தானே! தங்கள் ஆட்சியில் அவர்களும் தமிழைத் தொலைத்தவர்கள்தானே! எனவேதான் இன்றைய ஆட்சியின் தமிழ்த்தொலைப்பிற்கும் அமைதி காத்து அதற்கு உடந்தையாக உள்ளனர்.
பொதுமக்களும் தமிழ் அமைப்புகளும்தான் குழந்தைகளின் எதிர்காலம் கருதிக் குரல் கொடுத்துத் தமிழ்நாட்டில் தமிழ் வாழச் செயலாற்ற வேண்டும் தமிழ்நாட்டில்  தமிழ் நிலைக்குமா அல்லது அரசு தமிழைத் தொலைக்குமாஎன்பது மக்கள் கைகளில்தான் உள்ளது.
இலக்குவனார் திருவள்ளுவன்
தினமணி 09.11.2018

Wednesday, November 7, 2018

தமிழ்நெறிக்காவலர் அறவாணர் நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தமிழ்நெறிக்காவலர் அறவாணர்

நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்!

தமிழ்ப்பகைவர்களே! வெளியேறுங்கள்!

 

தாய்மொழியில் இறைவனை வணங்குபவர்களுக்குத்தான் இறையருள் முழுமையாகக் கிட்டும்.  தமிழர்கள் பிற மொழியில் தம் சார்பாக யாரோ கடவுளை வாழ்த்த, அதைப்புரியாமல் செவிகொடுத்துக் கேட்டுத் தீவினை புரிந்து வருகின்றனர். எனவேதான், இறையருள் இல்லாமல் இன்னலுற்று வருகின்றனர்.
இறைவனைத் தமிழில் வணங்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்ப்பாடல்களைப் பாடி இறைநெறி பரப்பியவர்களுள் ஒருவர் நம்பியாரூரன்; சுந்தரமூர்த்தி நாயனார் என்று அழைக்கப் பெறுகிறார். திருமுனைப்பாடியில் திருநாவலூர் எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாரூரன் சிவபெருமானைப்பற்றி 38,000 பாடல்கள் தமிழில் பாடியவர்.
 சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில் தமிழ் என்றும் தமிழால், தமிழோடு, தமிழான், தமிழை என்பன போன்றும் ‘தமிழ்’ என ஐம்பது இடங்களுக்கு மேல்  குறித்துப் பாடியுள்ளார். சுந்தரர் தமிழால்தான் பாடினார். அது மட்டுமல்ல
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய்  (தேவா-சுந்:701/4)
எனப் “பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள் செய்வாய்” என்றும் இறைவனை வேண்டுகிறார். பல நலச் சிறப்புகளை உடைய தமிழால் பாடினால் அருள் கிடைக்கும் என்று பாடிய சுந்தரரின் கோயிலுக்குத் தமிழில் குடமுழுக்கு செய்வதே முறை. (அங்கு மட்டுமல்ல. தமிழர்கள் கோயிலகள் எங்கும் தமிழ் வழிபாடும் பிற விழாக்களும் நடைபெறுவதே அறம்.) அதனைப் பின்பற்றி இறையன்பர்கள் தமிழில் குட முழுக்கு செய்வதற்கு வரவேற்புப் பா பாடி வாழ்த்த வேண்டியவர்கள் எதிர்க்கிறார்கள். மானமற்று வழக்கு தொடுக்கின்றார்கள்.
தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம்   நல்கினீர்(தேவாரம்,சுந்தரர், 899/3)
எனச் சுந்தரர் இறைவன் தமிழ்ப்பாடல் பாடுநருக்கு நாளும் பொற்காசு நல்கியதாகக் கூறுகிறார். நாளும் பணம் தந்தால் நாள்தோறும் பாடுவார்கள் அல்லவா? அப்படியானால் இறைவன் விரும்புவது தமிழ்ப்பாடல்தானே. அதனால்தானே சுந்தரர், திருஞானசம்பந்தரைக் குறிப்பிடும் பொழுது,
 நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் (தேவாரம்,சுந்தரர், 642/1)
அதுமட்டுமல்ல!
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா வல்வினைதானே (தேவாரம்,சுந்தரர், 912/4)
என்று தம் தமிழ்ப்பாடல்களைப் பாடும் திறமையாளரைத் தீ வினைகள் வந்து சேரா என்கிறார்.
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ்
காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினை கட்டு அறுமே(தேவாரம்,சுந்தரர், 177/3,4)
என்று தம் தமிழ்ப்பாடல்களை விரும்பிக் கற்றுக் கேட்பவர் தீவினைகள் நீங்கும் என்கிறார்.
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே (தேவாரம்,சுந்தரர், 434/4)
தம் தமிழ்ப்பாடல் தொகுப்பைப் பாடுவோர், தம் தலைமேல் எப்பொழுதும் இருப்பதற்கு உரியராவர் என்கிறார்.
 விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாவலூரில் இவர் நினைவில் நம்பி ஆரூரான் கோயில் கட்டியுள்ளனர். அதற்கான குடமுழுக்கு, தமிழ்முறையில் நடைபெற ஏற்பாடு செய்த பொழுது பிராமணியத்தில் ஊறிய சிவாச்சாரியார்கள் சமற்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்தப்பெற வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.
வழக்கை  உசாவிய அறவாணர் நீதிபதி மகாதேவன் நீதிமன்றத்திலேயே,
“பித்தா பிறைசூடி பெருமானே” எனத்தொடங்கும் சுந்தரர் எழுதிய தேவாரப் பாடலைப் பாடிக்காட்டி யுள்ளார். அத்துடன்,  “தமிழில் தேவாரம் பாடிய சுந்தரர் நினைவாக அமைக்கப்படும் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தாமல் வேறு எந்த மொழியில் குடமுழுக்கு நடத்த முடியும்” என்று கேட்டுள்ளார். இறுதியில் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து,  அந்தக் கோயில் குடமுழுக்கு தமிழிலேயே நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
  வழக்கில் வெற்றி பெற திருநாவலூர் இறைவனைத்தான் வழிபடுவர்.  சமற்கிருத்த்தில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று வழக்கு தொடுததவர்கள் வழக்கில் தோற்றுள்ளனர். ஆக திருநாவலூரில் குடி கொண்டுள்ள இறைவனே சமற்கிருத குடமுழுக்கை விரும்பவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
 தமிழ்க் குடமுழுக்காளர்களின் இறைநெறித்தொண்டு போற்றற்குரியது.அவர்கள் பணி சிறக்கட்டும்! அவர்கள் நீடூழி வாழ்க!
நீதிபதி தீர்ப்பாணைக்கிணங்க இன்று காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு அழைப்பிதழுக்கிணங்க அமைச்சர் பெருமக்கள் பங்கேற்க குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
 எனினும் இதற்கிடையில், பிராமணியத்தை நிலைநிறுத்த விரும்பும் பிாமணர்கள் வழக்கு போட்டும் வெற்றி பெற முடியாமல் போனதால் பிராமணியக் காவலர்களான திருவாவடுதுறை, திருப்பனந்தாள்,  தருமபுரம் ஆகிய ஆதினங்கள் தமிழ்க்குடமுழுக்கிற்கு எதிராக அறிக்கை விட்டனர். எப்பொழுது அவர்கள் தமிழ்நெறியை ஏற்றனர். இப்பொழுது ஏற்பதற்கு எப்படி அவர்களால் இயலும்? பிராமணிய  அடிவருடிகள். தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழ் வழிபாடுகளுக்கே வழி விட மாட்டார்களே! வேறு என்ன கூறுவர்?
ஆரிய அடிமைகளான மூன்று மடாதிபதிகளையும் கண்டிக்க வேண்டும் எனக் கரூர் தமிழ் சங்கத்தின் தலைவர் கரூர் கன்னல், செயலாளர் வழக்குரைஞர் தமிழ் இராசேந்திரன் அறிக்கை விட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, தமிழ்க் குடமுழுக்கிற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள், அதற்கு உதவியாக இருந்தவர்கள் அனைவருமே கண்டிக்கத்தக்கவர்கள். தாம் சார்ந்த சமூகம், அமைப்பு, இனம் முதலியவற்றிற்கும் அவப்பெயர் உண்டாக்கும் இத்தமிழ்ப்பகைவர்கள்  தமிழ் வேண்டா என்றால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறித் தமிழ்நாட்டில் வஞ்சகர்கள் இல்லா நிலையை உருவாக்கட்டும்!
  இத்தகையோர்களுடன் இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் உடையவர்கள் யாரும் தொடர்பு கொள்ளாமல் அடியோடு புறக்கணிக்க வேண்டும்!
  இத்தகையோரால் ஒற்றுமையாக வாழும் இனத்தவரிடையே கசப்பும் வெறுப்பும் விதைக்கப்பட்டு வளர்க்கப்படுவதால் இவர்கள்மீது அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 அதே நேரம் தமிழ்நெறிக்காவலராகத் திகழ்ந்து உண்மையின் பக்கம் நின்று அறம் வழங்கிய நீதிபதி மகாதேவன் பெரிதும் பாராட்டிற்குரியவர். குற்றங்களைக் குறைக்கத் திருக்குறளைப் படிப்பிக்கச் சொன்ன தீந்தமிழன்பர் அவர். அவரது தீர்ப்புகளாலும் தமிழ்ப்பேச்சுகள், தமிழ்க்கட்டுரைகளாலும் தமிழன்பர்களால் மதிக்கப்படுபவர்.  இப்பொழுது நடுநிலைமையுடன் ஆராய்ந்து தமிழ்க் குடமுழுக்கிற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கி இறையன்பர்கள் உள்ளத்திலும் உயர்ந்து விட்டார்.
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.         (திருவள்ளுவர், திருக்குறள் 112)
நடுவுநிலமையாளரின் ஆக்கம் அவர் வழிமுறையினருக்கும் நன்மை தரும்.
வாழ்க அறவாணர் நீதிபதி மகாதேவன்/
வெல்க அவர்தம் முயற்சிகள்/
அவரும் சுற்றத்தினரும் நலமும் வளமும் தமிழும் நிறைந்து நீடு வாழ்க!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Tuesday, November 6, 2018

தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு – இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு

  தமிழ்வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிப்பன இதழ்கள். இன்று அச்சு இதழ்கள் குறைந்து விட்டன. ஆனால், மின்னிதழ்கள் பெருகி விட்டன. அச்சிதழ்கள் அதே வடிவத்திலும் கூடுதல் பக்கங்களுடனும் அச்சிதழ் இன்றி மின்னிதழாக மட்டும் என்றும் மூவகை மின்னிதழ்கள் உள்ளன. இவை உடனுக்குடன் படிப்பவர்களைச் சென்றடைகின்றன.
 செய்திகளையும் படைப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் இதழ்களில் பெரும்பான்மையன தமிழைக் கொண்டு சேர்ப்பதில்லை. காட்சி ஊடகங்களால் தமிழ் அழிந்து கொண்டிருக்கும் இக்காலக்காட்டத்தில் இதழ்களாவது தமிழைக் காக்க வேண்டும். இப் பணிகளால் காட்சி ஊடகங்களையும் தமிழின்பால் திருப்ப வேண்டும்.
  முன்பெல்லாம் இதழ்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்த அறிவுரை கூற முடிந்தது. ஆனால், இப்பொழுது பிழைகள் மலிந்து “இவை தவிர பிற யாவும் பிழைகளே!” என்று சொல்லும் வகையில்தான் பிழை மண்டிய நடைகள் உள்ளன.
  செய்தியை முந்தித் தரும் ஆர்வத்தில் தமிழ்ச்சொல் அறிய முற்படாமல் பிற சொல் பயன்படுத்துவோரும் உள்ளனர். வாழும் மொழி என்னும் அறியாமையில் பிற மொழிச்சொற்களும் பிற மொழி எழுத்துகளும் நிறைந்த போலித் தமிழில் எழுதுநரும் உள்ளனர்.
  சொற்சேர்க்கையின் பொழுது எழுத்துகள் மிகுதல், மிகாமை குறித்த இன்றியமையாமையை உணராமல், அத்தகைய இலக்கணம் தேவையில்லை என்று தவறாக எழுதுவதைப் பெருமையாகக் கருதுவோரும் உள்ளனர்.
  மரபுக்கவிதை எழுதத் தெரிந்தாலும் பிற சொல் கலந்தால்தான் புதுக்கவிதை எனத் தமிழைச் சிதைக்கும் கவிஞர்கள் படைப்புகளும் இதழ்களில் வருகின்றன.
  இயேசு(Jesus), பேதுரு(Peter), யோவான்(Jhon),  என்பன போன்று கிறித்துவர் இங்கே வந்த பொழுது பெயர்களைத் தமிழ் ஒலிப்பிற்கேற்பவே பயன்படுத்தினர். கடந்த நூற்றாண்டு வரை வந்த அயலவர்களும் எல்லீசன் என்பதுபோன்று தமிழ் மரபிற்கேற்பவே தங்கள் பெயர்களைப் பயன்படுத்தினர். இப்பொழுது நாம், நம் மொழிப்பெயர்களைச் சிதைத்துவிட்டுப் பிற மொழிப்பெயர்களை அவ்வாறே எழுத வேண்டும் என்று துடிக்கின்றோம். பெயர்ச்சொற்களைத் அயல் எழுத்துகளை நீக்கித் தமிழ் ஒலிப்பிற்கேற்பவே எழுத வேண்டும்.
தமிழ்ப்போராளி இலக்குவனார், படைப்புகள் தொல்காப்பியர் வழியில்
அயற்சொல் கிளவி அயலெழுத்து ஒரீஇ
(அயற்சொற்கள் அயல் எழுத்து நீக்கப்பட்டு)
இருக்க வேண்டும் என்கிறார்.
  இவ்வாறு இதழ்கள் தமிழ் ஒலிப்பிற்கேற்ப் பெயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த நல்லுணர்வை மக்களிடையே பரப்ப இயலும்.
 எனவே, இதழ்கள் பிற மொழிச்சொற்களுக்கும் அயலெழுத்துகளுக்கும் இடம் தராமல் (நல்ல) தமிழை மட்டுமே பயன்படுத்தி மக்களுக்கு வழி காட்ட வேண்டும். நல்ல தமிழைக் கற்க விரும்பும் அயல் நாட்டவர்களுக்கு இது பெரும் பயன் நல்குவதாக அமையும்.
  இதழ்கள் செய்திகளைத் தருவது மட்டும் தம் பணி எனக் கருதாமல், செய்திகளின் ஊடாக அன்னைத் தமிழையும் அறியச் செய்வதைக் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் வளரும்! வெல்லும்! வாழும்!
அயல்நாட்டிலிருந்து அருந்தமிழ்ப்பணி ஆற்றும் மின்மினி இதழ் பொன்விழா, நூற்றாண்டு முதலான பிற விழாக்களையும் காண வாழ்த்துகிறேன்.
தமிழ் வாழ்தலில்தான் தன் வாழ்க்கையும் உள்ளது என உணர்ந்து பிற இதழ்களுக்கு எடுத்துக்காட்டாக நல்ல தமிழை மக்களிடம் சேர்த்து நானிலம் புகழ நிலைத்து இயங்க வாழ்த்துகிறேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive