Friday, June 9, 2023

ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 







(தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்!: தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24 –தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 25 – ஆட்சி நிலைக்கத்

தமிழை நிலைக்கச் செய்வீர்!

எழுதவே வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! எத்தனை முறைதான் அரசின் ஆங்கிலத்திணிப்பைக் குறித்து எழுதுவது? இரு நாள் முன்னர்ப் பிறப்பித்த இ.ஆ.ப. அலுவலர்கள் மாறுதல் ஆணை கூட ஆங்கிலத்தில்தான். பொதுத்துறை உட்பட எல்லாத்துறைகளிலும் தமிழ் ஈடுபாடு மிக்கவர்களையே அரசு செயலர்களாக அமர்த்தினால்தான் தமிழைக் காண முடியும். ஆங்கிலத்தைத் திணிப்பதற்கு அவர்கள் வெட்கப்படாமல் இருக்கலாம். வேதனை உறாமல் இருக்கலாம். ஆனால், நமக்கு வெட்கம் வருகிறதே! வேதனை வருகிறதே!

சூன் 5 ஆம் நாள் உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டுத் தமிழ் நாட்டரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை வெளியிட்ட விளம்பரங்கள் அனைத்துமே ஆங்கிலம், ஆங்கிலம், ஆங்கிலம்தான்! இவற்றுள் குறிப்பிடத்தகுந்தது மேலே தலைப்பில் முதல்வரைச் சுற்றியும் ஆங்கிலத்தில் துறை அல்லது நிறுவனப்பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதுதான்.  இதன் தொடர்பில், “இந்த ஆண்டுக்கான #World Environment Day மையக்கருவாக #Beat Plastic Pollution அறிவிக்கப் பட்டிருக்கிறது.” என அறிவித்துள்ளது. ஒற்றை வரியில் எந்த நாள் என்பதைக் கூடத் தமிழில் குறிப்பிடத் தெரியவில்லையா? நெகிழி மாசினை வெல்வோம் என்பதைக் குறிக்கும் முழக்கத்தைக் கூடத் தமிழில் தெரிவிக்கத் தெரியவில்லையா? அரசின் முத்திரை கூடத் தமிழில் இல்லையே என்ன கொடுமை இது? இப்படிப்பட்டடவர்கள்தாம் நம்மை ஆள்கிறார்கள். தமிழ்ப்படைப்பாளி தலைமைச் செயலராக இருந்தும், நற்றமிழார்வலர் தமிழ் வளர்ச்சிச் செயலராக இருந்தும் எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம் என்னும் நிலையை மாற்ற இயலவில்லையா?  அப்படியானால், முதல்வர் மு.க.தாலின் உள்ளத்தில் தமிழ் எண்ணம் வேரூன்ற வேண்டும். அப்பொழுதுதான் அமைச்சர் பெருமக்கள், உயர்நிலை அதிகாரிகளும் தமிழ்த்தேரில் உலா வருவார்கள். தமிழன்னையை அகம் மகிழச் செய்வார்கள்.

தமிழ் நாட்டில் பொதுமக்களிடமும் ஊடகத்தினரிடமும் கலைத்துறையினரிடமும் தமிழ் வளர்ச்சித் துறையினரிடமும் அனைத்து நிலை அரசு அதிகாரிகளிடமும்  ஆங்கிலம் ஒட்டிக் கொண்டு தமிழ் மறைக்கப்படுவது அல்லது தொலைக்கப்படுவது கண்டு, தமிழன்னை அலறுகிறாள்;  அரற்றுகிறாள்;  அலமருகிறாள்; மனஞ்சுழல்கிறாள்; நடுங்குகிறாள்; வருந்துகிறாள்; வேதனை யுறுகிறாள்; துன்பத்தில் ஆழ்கிறாள்; துயரத்தில் மூழ்கிறாள். இத்துயர் போக்கும் கடப்பாடு ஆள்வோருக்கு அல்லவா உள்ளது?

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை(திருவள்ளுவர், திருக்குறள் 555)

ஆம். தமிழன்னை அழுகை, ஆட்சியை அசைத்துப் போடும் படையாக மாறும். அதற்கு இடம் தரலாமா?

முதல்வர் மு.க.தாலின் இந்திய முதல்வர்களுள் முதல்வராக உள்ளார். பிற மாநில முதல்வர்களும் இவரது வழிகாட்டுதலை வேண்டுகிறார்கள், விரும்புகிறார்கள், பாராட்டுகிறார்கள். தமிழ்நாட்டின் செயலைப் பின்பற்றி பிற மாநிலங்களும் சாதிமுறைப் பாகுபாடான வருணாசிரமத்தை ஒழிக்க விரும்புகின்றனர். இந்தி, சமற்கிருதத் திணிப்புகளை அகற்ற விழைகின்றனர். தத்தம் மாநிலம் தன்னுரிமையுடன் திகழப் பேரார்வம் கொண்டுள்ளனர். “ஒரே நாடு, ஒரே மொழி”, “ஒரே நாடு, ஒரே மதம்” “ஒரே நாடு, ஒரே தேர்தல்” போன்ற முழக்கங்கள் செயல் வடிவம் காணாமல் தொலைந்து போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதற்குத் தமிழ்நாடும் முதல்வர் மு.க.தாலினும் வழிகாட்டுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள்.  அப்படியானால் ஒன்றியத்தின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் தமிழக அரசு நீடிக்க வேண்டும். மு.க.தாலின் முதல்வராக என்றும் தொடர வேண்டும். இதுவே அனைவரின் எண்ணம்.

ஆனால், இந்த எண்ணம் ஆள்வோருக்கு இல்லை போலும்!

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, ‘வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம்’ 2011-ஆம் ஆண்டு மார்ச்சு 1-ஆம் நாள் முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசால் இயற்றப்பட்டது. புலம் பெயர் தமிழர்கள் நலன் துறையும் உருவாக்கப்பட்டது. ஆனால் அவர்,  “புலம்பெயர் தமிழர் நலவாரியம்” அமைப்பதாக அறிவித்தும் , ஆட்சி மாற்றத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை் அக்குறையைப் போக்க, முன்வரவில்லை. ஆனால், முதல்வர் மு.க.தாலின், வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்’ அமைத்துள்ளார். அவர்கள் நலன் குறித்த மாநாட்டையும்நடத்தியுள்ளார். இவ்வாறு தமிழர்கள் இங்கிருந்தாலும் வேறு எங்கிருந்தாலும் அவர்கள் நலனில் கருத்து செலுத்தும் முனைப்பில் உள்ளார்.

ஆனால், தமிழ் வாழ்ந்தால்தானே தமிழர் வாழ்வர். தமிழ் நாட்டிலேயே தமிழின் வாழ்வை முற்றாக்க முயலும் பொழுது அயலகங்களில் தமிழ் எங்ஙனம் வாழும்? உலகெங்கும் தமிழர் எப்படி வாழ்வர்? இதனை உணராமல் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதையே முழு மூச்சாகக் கொண்டு அரசு செயல்படுவது குறித்துக் கவலைப்படவில்லையே! மணிப்பிரவாளத்தால் தமிழ்நாடு தன் நிலப்பகுதிகளை இழந்தது; தமிழ் தன் செல்வாக்கைப் பறி கொடுத்தது. இதனை அறிந்தும்  மக்களைப்போல் அரசும் ஆங்கிலம் கலந்து புதுவகை மணிப்பிரவாளத்தைப் பரப்பி வந்தால் ஆட்சிக்கு எங்ஙனம் நற்பெயர் கிட்டும்?

இந்தியால் தமிழை அகற்ற முயன்ற பேராயக்(காங்.)கட்சி ஆட்சியைத் தொலைத்தது. ஆங்கிலத்தால் தமிழை அகற்ற உழைத்து மக்கள் தந்த ஆட்சியை தி.மு.க. இழக்க வேண்டுமா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.   (திருவள்ளுவர், திருக்குறள் 448)

“குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்”  என முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி விளக்குகிறார். உணர்த்துவோர் இருப்பினும் அதனை உணர்வோராக அரசினர் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு இருப்பின் எப்பொழுதும் அழிவில்லை.

எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பழி கூறினாலும் அவற்றிலுள்ள உண்மைகளையும் அரசு ஆராய்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். தோழமைக் கட்சியினரும் மக்கள் நல ஆர்லர்களும் நடுநிலை இதழ்களும் கூறுவனவற்றைச் செவி மடுக்க வேண்டும். தமிழாட்சி குறித்துப் பலரும் இடித்துரைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், கேளா அரசாக இருந்து என்ன பயன்?

ஆங்கிலத்திணிப்பிற்கு எதிராக மக்கள் போராடும் நிலை வரும் பொழுது தமிழ்ப்பகைவர்கள் தமிழ்ப்பற்றாளர்கள்போல் ஊடுருவி அரசை அசைக்கப் பார்ப்பார்கள்; ஆட்சியைக்கவிழ்க்கும் சதிவலையைப் பின்னுவார்கள். இவற்றிற்கெல்லாம் அரசு இடம் கொடுக்க வேண்டுமா?

எனவே, தாங்கள் விரும்புவதற்கிணங்கவும் தமிழார்வலர்களும் மனிதநேயர்களும் முற்போக்காளர்களும் தன்மதிப்பு உணர்வாளர்களும் வருணாசிரம எதிர்ப்பாளர்களும் விரும்புவதற்கேற்பவும் இந்த ஆட்சி நிலைக்க முதல்வர் மு.க.தாலின் உடனடியாக ஆங்கிலத்திணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். தமிழைப் பயன்படுத்தாதவர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலை இல்லை என்னும் நிலை வர வேண்டும். முதற் கட்டமாகத் தமிழைப் பயன்படுத்தாதவர்களுக்கு ஆட்சிப் பொறுப்பில் வேலை இல்லை என்றாக்க வேண்டும். சிறு பொறி நெருப்பாகும் என்பதை உணர்ந்து விழிப்புடன் செயற்பட வேண்டும். தமிழ் காக்கும் அரசாக மாறி மும்மொழித்திணிப்புகளையும் அகற்றி, வழிபாடு, கல்வி, வேலை, உயர்நிலை வரையிலான நீதி மன்றங்கள் என எங்கம் தமிழ் வீற்றிருக்கச் செய்து தம் ஆட்சியையும் வீற்றிருக்கச் செய்ய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, May 12, 2023

கலைச்சொல்லும் குறளும்: பாராட்டிற்குரிய தலைமைச் செயலரின் அறிவுறுத்தலும் மலரும் பணி நினைவும்- இலக்குவனார் திருவள்ளுவன்

 




கலைச்சொல்லும் குறளும்பாராட்டிற்குரிய தலைமைச் செயலரின் அறிவுறுத்தலும் மலரும் பணி நினைவும்

தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு, முந்நாள் முன்னர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தம் வழங்கியுள்ளார். பொதுவான பணி குறித்த அறிவுரையோ கட்டளையோ அல்ல இது. தமிழ் வளர்ச்சிக்கு உதவக் கூடிய, தமிழ் உணர்வைப் பரப்பக்கூடிய நல்லுரை.

அவர்,  

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அன்றாடம் பொருளுடன் கூடிய ஒரு திருக்குறளைக்  கட்டாயம் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சார்நிலை அலுவலகங்களில் மட்டுமல்ல,

மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத் துறைகள், துறைத் தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஊரியங்கள், கழகங்கள், இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் என எல்லா வகை அரசு, அரசு சார் அலுவலகங்களிலும் எழுதி வைக்குமாறு தெரிவித்துள்ளார். முந்தைய ஆணைகளுக்கிணங்கச் சில அலுவலகங்களில் இப்பணி தொடர்கிறது.

ஆனால், பாராட்டுவது இதற்காக அல்ல, ஏனெனில் இத்தகைய ஆணைகள் பிறப்பிக்கப்படும் பொழுது ஆணைகளைப் பிறப்பித்தவர்களும் உயர்நிலையில் உள்ளவர்களும் இவை தங்களுக்கானவை யல்ல எனக் கண்டும் காணாமல் இருப்பார்கள். எழுதி வைத்தால் ஊதிய உயர்வு என்றால் எழுதுவோர் பெரும்பான்மையர் இருக்கின்றனர். உணர்வில் எழுதுவோர் சிறுபான்மையரே! ஏனெனில் அவர்களை வழி நடத்துவோர் ஆணைகளைப் பின்பற்றினால்தானே இவர்களும் பின்பற்றுவர். உயரதிகாரிகள் பலர் ஆங்கிலேயராக அல்லவா இருக்கின்றனர். சில நாள் முன்னர் போக்குவரத்தில்லாத் தெருவைக் கொண்டாடுவதற்கு ஆங்கிலத்தில்தானே பெயர் சூட்டினர்.  மிட்சுபி தொடர்பான விழாவில் முழுமையும் ஆங்கிலப் பதாகைதானே காட்சியளித்தது. இத்தகை ஆங்கிலப் பித்தர்களுக்குத் தலைமைச் செயலர் அறிவுறுத்தியதுதான் பாராட்டிற்குரியது.

அனைத்துத் துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், துறைத் தலைமை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு கழகங்கள், வாரியங்களின் தலைவர்கள், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் என வழி நடத்த வேண்டியவர்களைக் குறிப்பிட்டு அவர் கட்டளை யிட்டுள்ளார். இவ்வாணை தங்களுக்கானதல்ல என அவர்கள் ஒதுங்காமல் முன்னெடுத்துக்காட்டாக இருந்து தத்தம் அலுவலகங்களில் கலைச்சொல் விளக்கமும்  திருக்குறள் விளக்கமும் இடம் பெறச் செய்ய வேண்டும்.

எனவே, பொதுவான ஆணையாக இட்டுக் கிடப்பில் போடச் செய்யாமல் அனைத்து நிலை அதிகாரிகளையும் குறிப்பிட்டு அறிவுறுத்தியதால் தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு ..அவர்களைப் பாராட்டுகிறோம். இதனைப் பின்பற்றும் அனைவருக்கும் நம் சிறப்பான பாராட்டுகள்.

இந்த நேரத்தில் இதன் தொடர்பான என் பணி நினைவைப் பகிர விரும்புகிறேன்.

நான் மதுரையில் (90-97) இல் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநராகப் பணியாற்றினேன்.  பொதுவாகத் தமிழ் வளர்ச்சி அலுவலகங்கள் என்றால் கழிப்பறை அருகே அல்லது மாடிப்படியின் கீழே ஒதுக்கப்பட்டிருக்கும். மொழி ஞாயிறு பாவாணருக்கும் அகரமுதலித்திடட இயக்குநர் என்ற முறையில் – அதுவும் தமிழ்த்துறைதானே – மாடிப்படியின் கீழ்தான் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்தச் சூழலைச் சுற்றுலா மையம் போல்  மாற்றும் முறையில் நான் செய்த பணி ஒன்று அமைந்தது. நான் ஆட்சிமொழி வகுப்பு நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.அத்துடன் அலுவலகத்திற்கு வருவோரும் பயனுற வேண்டும் என எண்ணி, அலுவலக முகப்பினைக் கரும் பலகையாக மாற்றினேன். அதில்,

திருக்குறள்

கலைச்சொல் விளக்கம்

அலுவலகப்பயன்பாட்டிற்கான பிழையின்றி எழுதுவதற்கான இலக்கணக் குறிப்பு

தமிழின் சிறப்பைக் கூறும் செய்தி

என்ற முறையில் எழுதி வைத்தேன். 

அரசுஊழியர்களில் ஒரு பகுதியினர் முதலில் படித்தனர். அன்றாடம் தமிழ்வளர்ச்சி அலுவலக அறையைக் கடந்து செல்லும் மாவட்ட வருவாய் அலுவலர் கரும்பலகைச்செய்தியை ஆட்சியரிடம் தெரிவித்தார். தமிழ் ஆர்வலரான மாவட்ட ஆட்சியர் திரு மணிமாறன் இ.ஆ.ப. இக்கரும்பலகை முன் நின்று எழுதியவற்றைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டார். இயற்கை யிடர் களைய அந்தப்பக்கம் வரும் ஆட்சியரின் நே்ர்முக அலுவலர்களும் படித்துச் செல்வதை வழக்கமாகவும் பின்பற்றுவதைக் கடமையாகவும் கொண்டனர்.

இதனைப் பார்த்த பிற அதிகாரிகளும் ஊழியர்களும் தவறாமல் படிக்கத் தொடங்கினர். மனு நீதி நாளுக்கு ஆட்சியகத்திற்கு வருகை தந்து காத்திருப்போரும் பிற நாளில் வருகை புரிந்து காத்திருப்போரும் எனப் பொது மக்களும் தமிழ் வளர்ச்சித்துறைக்கு வந்து கரும்பலகைத் தகவல்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டனர். சிலர் சில சொற்களைக் குறிப்பிட்டு அல்லது எழுதுவதில் நேரும் ஐயங்களைக் குறிப்பிட்டு அவற்றை எழுதுமாறும் வேண்டினர். அவற்றிற்கான விளக்கங்களை எழுதி வைத்ததும் இதில் தங்களின் பங்களிப்பும் இருப்பதாக மகிழ்ந்து வழக்கமான வாசகர் ஆயினர்.

 தமிழ் நாளிதழ் ஒன்றில் இதில் சித்திரையாண்டு பற்றி எழுதியதைக் குறிப்பிட்டு எதிராக எழுதியது. ஆனால், உணர்வாளர்கள் இவ்வாறு எழுதுவதை வரவேற்று  அந்தப்பக்கம் சென்றாலும் படித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர்.

தினமணிச் சுடர் அட்டைப்படக் கட்டுரையாக ‘இப்படியும் சில இளைஞர்கள்’ என என் தமிழ்ப்பணி குறித்தும் எழுதி வெளியிட்டது. இதில், “திருவள்ளுவன், தனது அலுவலகத்தின் முன்புள்ள கரும்பலகையில் வாரமொருமுறை தமிழ் இலக்கணக் குறிப்பு, பிற மொழிச்சொற்களை எப்படி எழுதலாம் என்கிற குறிப்பு, தமிழ் குறித்த சில தகவல்களை எழுதி வைக்கிறார்.” எனக் கட்டுரையாளர் மணா குறிப்பிட்டிருந்தார். குங்குமம் இதழும் ‘தமிழ்ச்சாதனை’ என்னும் தலைப்பில் என்னைப்பற்றி எழுதியிருந்தது.  இதன் பிறகு ஆட்சியகத்திற்குத் தொடர்பில்லாதவர்களும் வந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டனர்.

இவ்வாறு தமிழ்த்தகவல் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றது. மக்களிடையே தமிழார்வம் இருக்கத்தான் செய்கிறது. தக்க வழிகாட்டினால் அவர்கள் மேலும் ஆர்வத்தை வளர்த்துப் பயன்பெறுவர் என் பதே உண்மை.

இப்போதும் தலைமைச் செயலர் அறிவுறுத்தத்திற்கிணங்கக் கலைச்சொல்லையும் பொருள் விளக்கத்தையும் திருக்குறளை விளக்கத்துடனும் எழுதி வைத்தால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் அலுவலகங்கள் வரும் மக்களும் பயனடைவர். தமிழ்க் கலைச்சொற்களும் திருக்குறளும் எளிய மக்களையும் சென்று சேரும்.

எனவே, அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் தலைமைச் செயலர் அறிவுறுத்தலை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் வெளியேற்றி விடாமல், ஒரு நாள் எழுதி மறுநாள் மறந்து விடாமல் அன்றாடம் பின்பற்ற வேண்டுகிறோம்!

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.   (திருவள்ளுவர்,திருக்குறள் – 672)

 இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல இதழுரை -30.04.2054***13.05.2023




Monday, May 1, 2023

தமிழ்ப்பகை பா.ச.க.வை நுழைய விடாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 


தமிழ்ப்பகை பா.ச.க.வை நுழைய விடாதீர்!

பா.ச.க.விற்குத் தமிழ்ப்பற்று இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தவர்களிடம் தன் உண்மை முகத்தைப் பாசக காட்டியுள்ளது. இரு நாளுக்கு முன்னர் கருநாடகா மாநிலம் சிவமோகா நகரில்தான், துணிவாகத் தன் முகமூடியைக் கழற்றி எறிந்துள்ளது பா.ச.க.

தமிழர்களின் வாக்குகளை வேட்டையாட வந்த பாசக நிகழ்ச்சித் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கத் தொடங்கியதும் இடையிலேயே நிறுத்தச் செய்துள்ளது. அவ்வாறு நிறுத்தச் சொன்னது பாசகவின் மூத்த தலைவரும் அத்தொகுதிச் சட்ட மன்ற உறுப்பினருமான ஈசுவரப்பாதான். அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்தவகளில் ஒருவர் தமிழ்நாட்டுப் பாசக தலைவரும், கருநாடக பாசக விவகாரங்களின் இணைப் பொறுப்பாளருமான அண்ணாமலை என்பவர்.

சில தொகுதிகளில் தமிழ் வாக்காளர்கள் மிகுதியாக உள்ளனர். எடுத்துக்காட்டாகப் பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பேரவைத்தொகுதிகளில் 5.5.நூறாயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். சிவாசி நகர் சட்டப்பேரவைத்தொகுதியில் 1.67நூறாயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாறான தொகுதிகளில் ஒன்றுதான் சிமோகா என்றும் சிவமோகா என்றும் அழைக்கப்படும் தொகுதி.

வரும் மே 10 அன்று மாநிலச்சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இங்குத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் நிகழ்ந்த இடத்தில்  சங்க முயற்சியால் 1000 தமிழ் வாக்காளர்கள் கூடியுள்ளனர்.

தமிழர்கள் மட்டுமே கூடியுள்ள அங்குதான் தமிழ்த்தாயை அவமதித்துள்ளனர். தமிழ் மக்களின் வாக்கு மட்டும் தேவை. ஆனால் அவர்களின் மொழியை இழிவு படுத்துவோம் என்பவர்களைத் தமிழர்கள் எப்படி ஏற்க இயலும்? தமிழ்த்தாயைப் புறக்கணிப்பவர்களைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டாவா? கண்டிப்பாகப் புறக்கணிக்க வேண்டும்; புறக்கணிக்கிறார்கள்.

யார் இந்த அவமதிப்பாளர் கே.எசு.ஈசுவரப்பா? முன்னாள் கருநாடகத் துணை முதல்வர்(2012-2013) ஊரக வளர்ச்சி-ஊராட்சி அமைச்சர்(2019-2022), பா.ச.க.மூத்த தலைவர், சட்ட மன்ற உறுப்பினர் கே.எசு.ஈசுவரப்பா, கருநாடகா சட்டமன்றத் தேர்தலில் தமக்கு அல்லது மகன் கந்தேசுக்கு சிவமோகா தொகுதியைக் கேட்டு அடம்பிடித்தும் யாருக்கும் கிடைக்கவில்லை. எனவே, பா.ச.க.வை விட்டு விலகும் முடிவில் இருந்தார். எப்படியோ அவரைச் சரிக்கட்டிக் கட்சியில் இருக்க வைத்திருக்கிறார்கள்.

வலதுசாரி அமைப்பான இந்து வாஃகினி என்ற அமைப்பின் தேசியச் செயலாளரான சந்தோசுபாட்டீல், “தனக்கு அரசின் சார்பாக, உரூ.4 கோடிக்கு வேலை ஒதுக்கப்பட்டது; வேலையை முடித்த பின்னரும் அதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை; மாறாக அதில் 40 விழுக்காடு தரவேண்டும் என்று அமைச்சர் கே.எசு.ஈசுவரப்பா, உதவியாளர்கள் மூலம் கேட்டார்” எனக் குற்றம் சுமத்தினார். தான் இறந்தால் அதற்குக்காரணம் ஈசுவரப்பாதான் என்று நண்பர் ஒருவருக்குக் குறுந்தகவலும் அனுப்பினார். பின்னர் இவர் விடுதி அறை ஒன்றில் தன் தற்கொலைக்குக் காரணம் ஈசுவரப்பாதான் என எழுதி வைத்துத் தற்கொலை புரிந்தார். இதனால் மக்களிடையே எழுந்த எதிர்ப்பலையால் பதவியை விட்டு விலகினார். கன்னட மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்ட அத்தகைய ஊழல் பேர்வழிதான் கன்னட மக்களிடையே பெரிய ஆளாகக்காட்டிக் கொள்ள இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் எனக் கன்னட மக்கள் கூறுகின்றனர்.

பொய்மலையாய்த் திகழும் தமிழ்நாட்டுப் பாசக தலைவர் மேடையில் இருந்து அமைதி காத்ததால் அவரிடம் இது குறித்து ஊடகத்தினர் கேட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, அவிழ்த்து விட்டப் பொய்மூட்டைகளில் சிதறியவை வருமாறு:

1. “கே.எசு.ஈசுவரப்பா முதலில் கன்னட நாட்டுக் கீதத்தை ஒளிபரப்புமாறுதான் கூறினார். ஆனால், தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஒலிபரப்பிவிட்டனர்.”

விழாவிற்கு வருவதற்கு முன்னரோ வந்தபின் மேடை யேறியதுமோ அவ்வாறு ஈசுவரப்பா கூறவில்லை. மேடை நிகழ்ச்சியின் காணொளிக்காட்சியிலேயே மேடையில் அவர் எதிர்ப்பைக் காட்டுவதுதான் உள்ளது. அவர் சொன்னபடிக் கேட்காததால் நிறுத்தச் சொல்லியிருந்தால், இரண்டாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கச் சொல்லியிருக்கலாமே!

2. “அந்த பாடலில் மெட்டு சரியாக இல்லை. எனவே, நிறுத்தச் சொன்னார்.”

மெட்டு சரியாக இல்லை என்றால் யாரோ தவறான மெட்டில் பாடி விட்டதாகப் பொருள் வருகிறது. யாரும் அவ்வாறு பாடவில்லை. அண்டப்புளுகுஆகாசப் புளுகையெல்லாம் விஞ்சி பொய்மலைப்புளுகு என்னும் புது மரபைத் தோற்றுவித்துள்ளார். ஏனெனில் இது குறித்து விழா ஏற்பாட்டாளர்களிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள், “எங்களுக்குப் பாடத் தெரியாது. தமிழ்நாட்டில் இசைக்கப்படும் தமிழ்நாட்டு அரசால் ஏற்கப்பட்ட இசைப் பாடலைத்தான் இங்கும் இசைக்கிறோம்.  அவர் பொய்யில் புரளும் மன்னர். நிகழ்ச்சிக்கு வராதவர்களிடம் தவறான கருத்தை விதைக்கப் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்.”  என்கின்றனர்.

3.  “மெட்டு சரியாக இல்லை. உடனே அதை பற்றி ஈசுவரப்பாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். உடனே அவர், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நிறுத்தச் சொன்னார். அதன் பிறகு, கன்னட நாட்டு கீதம் ஒலிபரப்பப்பட்டது.”

மேடையில் நேர்நில்(attention) முறையில் அசையாமல் நின்று கொண்டுள்ளதும் பின்னர்க் கைகட்டி நின்று கொண்டிருப்பதும்தான் தெரிகிறது. அவர் இடத்தை விட்டுச்சிறிதும் அசையவில்லைஈசுரப்பாவிடம் எதுவும் சொல்ல வில்லை. பெரிய இடத்துப்பிள்ளையிடம் பெயர் வாங்குவதற்காக இவ்வாறு கூறுகிறார்.

4. “மெட்டு சரியில்லை. அதனால்தான் நிறுத்தச் சொன்னார்”

முந்தைய கூற்றுக்கு முரணானது. முதலில் தான் சொன்னதால்தான் நிறுத்தச் சொன்னதாகக் கூறியவர், இப்பொழுது தானே நிறுத்தச் சொன்னதாகக் கூறுகிறார். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். இங்கே எட்டு நிமிடம் கூடத் தாக்கு பிடிக்கவில்லை. அவ்வாறு மெட்டு சரியில்லை என்று கவலைப்படுபவர் சரியான முறையில் பாடலை இசைக்கச் செய்வதுதானே முறையாக இருந்திருக்கும்.

5. “மெட்டு சரியில்லாததால் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் போட வேண்டா என நான் கூறிவிட்டேன்.”

முதல் கூற்றுக்கு முரணாகக் கூறியுள்ளார். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். அவ்வாறு யாரிடமும் பொய்மலை கூறிய காட்சி எதுவும் காணொளியில் இல்லை.

6. “தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் முழுமையாக இசைக்கப்பட்டது.”

பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மீண்டும் பாடப்படவில்லை என்று முன் வரிசையில் இருந்த இதழாளர்  தண்டபாணி கூறியுள்ளார். நிகழ்ச்சிக் காணொளியும் இதனை மெய்ப்பிக்கிறது.

7. தமிழ்நாட்டில் தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்கிறவர் , அங்கே கன்னட நாடு என்று கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் பேசுகையில் தமிழ்த்தாய் அவமதிப்பிற்குக் கண்டனமோ வருத்தமோ தெரிவிக்காத பொய்மலை, அவமதித்த கே.எசு.சுவரப்பாவுக்கு உயர் பதவி காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனைக் கன்னடர்கள் இடையேயோ அவரது வகுப்பைச் சார்ந்தவர் மத்தியிலோ சொன்னால் அவர்களை மகிழ்விக்கச் சொன்னதாகக் கருதலாம். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தச் சொன்ன கூட்டத்தில் பொய்மலை கூறியுள்ளார். இது சுவரப் பாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்பற்காக மிரட்டியதாகக் கருதப் படுகிறது.

நிகழ்ச்சியை நடத்துவது தமிழ்மக்கள். அப்படியானால் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இசைப்பதுதானே முறை. அதைத்தான் அவர்கள் செய்தனர். ஆனால் தமிழர்கள் கன்னடர்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும் கன்னட வெறியைத் தூண்டும் வகையிலும் ஈசுவரப்பா நடந்து கொண்டுள்ளார்.  இது குறித்து எதிர்க்கருத்து எதுவும் கூறாவிட்டாலும் அவமதிப்பின்பொழுது அமைதியாக இருந்ததுபோல் பின்னரும் அமைதிகாத்திருக்கலாம் பொய்மலை.

கூட்டத்தைக் கூட்டியது தமிழர்களின் வாக்கை பெறுவதற்காக, ஏற்பாட்டாளர்கள் பா.ச.க.வினர். இந்நிலையில் தமிழர்களின் வாக்கை அறுவடை செய்ய முயலும் கட்சி தமிழ்த்தாய் வாழ்த்தை எதிர்ப்பது ஏன்? என அங்குள்ள மக்களும் செய்தியை அறிந்த பிற பகுதி மக்களும் கேட்கின்றனர்.

இதனால், “கருநாடகா சட்டமன்றத் தேர்தலில் பாசகவைக் கருநாடகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்” எனக் கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. கருநாடகத் தமிழர்கள் பா.ச.க.புறக்கணிப்பை மேற்கொள்ளட்டும்! தமிழ்நாட்டில் பாசகவில் உள்ள தமிழன்பர்கள் தமிழ்நாட்டிற்குள் பொய்மலையைப் புறக்கணிக்கட்டும்! எனவே, பொய்மலையை மன்னிப்பு கேட்கச் சொல்லி யாரும் வற்புறுத்த வேண்டா. அவரைத் திருத்தச் செய்வதற்கு வாய்ப்பாக அவரைப் புறக்கணிப்போம்!

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு.(திருவள்ளுவர், திருக்குறள் 821)

தமிழுடன் உள்ளத்தால் ஒன்றாதவர்களும் தூக்கி எறியப்பட வேண்டியவர்களே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

19.04.2054/02.05.2023

Saturday, April 29, 2023

மாநில உரிமைகள் கூட்டமைப்பை முதல்வர் உருவாக்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




மாநில உரிமைகள் கூட்டமைப்பை முதல்வர் உருவாக்க வேண்டும்!

மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் முன்னணியிலும் வழிகாட்டியாகவும் இருப்பது தமிழ்நாடே! “மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி” எனப் பேரறிஞர் அண்ணா முதலில் குரல் கொடுத்திருந்தாலும்  மாநில உரிமைகள் தொடர்பான முழக்கங்களுக்கும் எழுத்துரைகளுக்கும் வடிவம் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியே! அவரது வழியில் அவரது திருமகனார் மு.க.தாலின் இந்தியாவிற்கு வழிகாட்டியாக மாநில உரிமைகளுக்காகச் செயல்வடிவம் தருவதில் முனைந்துள்ளார்.

அன்றைய முதல்வர் கலைஞர், 19.08.1969 அன்று அறிவித்ததற்கிணங்க 22.09.1969 இல் பி. வி. இராசமன்னார் எனச் சுருக்கமாக அறியப்படும் பகாலா வெங்கடரமண(இராவு) இராசமன்னார் (Pakala Venkataramana Rao Rajamannar, 1901–1979) தலைமையில் அதற்கான குழுவை அமைத்தார். மருத்துவர் ஆற்காடு இலட்சுமணசுவாமி (முதலியார்)(A. Lakshmanaswami Mudaliar),  நீதிபதி  பலகணி சந்திர (ரெட்டி)(P. Chandra Reddy)  ஆகியோரை உறுப்பினராகவும் நியமித்தார். இக்குழு தங்களுடைய ஆய்வறிக்கையை 10.03.1971 அன்று தமிழ்நாட்டரசிடம் அளித்தது. அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீர்மானத்தை 16.04.1974  அன்று கலைஞர் முன்மொழிந்து சட்டப் பேரவையிலும் பின்னர் மேலவையிலும் நிறைவேற்றச் செய்தார்.

இதற்கு முன்னரே இது குறித்த விவாதம் ஒன்றிய அரசு அளவில் நடந்தது. 1966-இல் மொரார்சி தேசாய் தலைமையில் பணியாண்மைச் சீர்திருத்த ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்தது. பின்னர், மொரார்சி தேசாய் துணைத் தலைமையமைச்சரான பின், அனுமந்தையா அந்த ஆணையத்தின் தலைவரானார்.  அதிகாரப் பங்கீடு குறித்த அவரது தலைமயிலான ஆணையப் பரிந்துரைகளையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்குப் பின்னரும் சருக்காரியா ஆணையம் (1983-1988), நீதிபதி மதன்மோகன் பூஞ்சி தலைமையில் மாநில உரிமைகள் ஆணையம்(2004)முதலியவை ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டன. இருந்தாலும் அவற்றிற்கெல்லாம் மூல ஆதாரமாகப் பெருமளவு கருத்துப் பரவலுக்கு வழி வகுத்த இராசமன்னார் குழு அறிக்கையே உள்ளது. இத்தகைய குழு அல்லது ஆணையம் மாநில உரிமைகளுக்கான குரலை அடக்குவதற்காக ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டவை என்னும் வகையில் இவற்றால் குறிப்பிடத்தக்கப் பயன் எதுவும் விளையவில்லை.

பலவற்றில் ஆட்சிகளுக்கேற்பக் காட்சிகள் மாறினாலும் மாநில உரிமைகளைப் பொறுத்தவரை கட்சிகளுக்கு அப்பாற்பட்டுத் தமிழ்நாடு குரல் கொடுத்து வருகின்றது. எனவேதான் சருக்காரியா ஆணையத்தின் பரிந்துரைகளைப் பற்றி விவாதிப்பதற்காக 2001-இல் புது தில்லியில் கூட்டப்பட்ட மாநிலங்களிடை மன்றக் கூட்டத்தில் அப்போதைய முதல்வர் செயலலிதா அம்மையார், எஞ்சிய அதிகாரங்களைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றலாம் என்ற சருக்காரியா ஆணையத்தின் பரிந்துரையை மறுத்துப் பேசி, அவை மாநில அரசிடமே விடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கத் தேவையில்லை, ஆளுநர் பதவியின் தேவை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பன போன்று மாநில உரிமைகளைக் காக்கும் வகையில் பேசினார்.

மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குவது நாட்டுப்பிரிவினைக்கு வழி வகுக்கும் என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். உண்மையில் மாநில அதிகாரங்களை அடக்கி வைப்பதே பிரிவினைக்கு வழிகோலும் என அரசியலறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆளுநர் அதிகார அத்து மீறல் தொடர்பில் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொணர்ந்து நிறைவேற்றச் செய்த முதல்வர் மு.க.தாலின் பிற மாநில அரசுகளையும் கவர்ந்து விட்டார். எதிர்பார்த்தவாறு வேறு சில மாநிலங்கள் இதே போல் தீர்மானம் இயற்றியும் இயற்ற இருப்பதாயும் தெரிவித்துள்ளன. மேற்கு வங்க முதல்வர்  மமுதா அம்மையார் எதிர்க்கட்சி  முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நலத்திட்டங்களிலும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மு.க.தாலின் உரைகளைப் பிற மாநிலத்தவரும் கவனமுடன் கேட்டு வருகின்றனர். இவரது வழிகாட்டுதலை ஏற்கப் பிற மாநில முதல்வர்கள் ஆயத்தமாக உள்ளனர். எனவே இவர் கூட்ட முயற்சியில் இறங்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டம் என்றில்லாமல் அனைத்து மாநிலங்களின் கூட்டமைப்பாக நிறுவிக் கூட்டங்கள் நடத்திச் செயற்பட வேண்டும்.

மாநில முதல்வர்கள் மட்டுமல்லாமல் பேரவை, மேலவைத் தலைவர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள் அமைச்சர்கள் முதலிய பிறரும் அடங்கிய மாநில உரிமைகளுக்கான கூட்டமைப்பை மு.க.தாலின் உருவாக்க வேண்டும். மேம்போக்காக இந்த இந்தத் துறை மாநிலப்பட்டியலில் இருக்க வேண்டும், இன்னின்ன பொதுப்பட்டியிலில் இருக்க வேண்டும் என்று பேசாமல் தெளிவாக மாநில அரசிற்கு இருக்க வேண்டும் அதிகாரங்களை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு விவாதிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக இதழ்/பத்திரிகை இசைவு அதிகாரத்தைப் பார்ப்போம். ஓர் இதழை/பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்றாலும் ஒன்றிய அரசிடம்தான் செல்ல வேண்டும். அது மாநிலத் தேசிய மொழிப்பெயர்களைக் குறிப்பிட்டு அனுப்பினால் சமற்கிருமயமாக்கப்பட்டப்பெ யரைத் திணிப்பதையே கடமையாகக் கொண்டுள்ளது. இந்தியச் செய்தித்தாள் பதிவாளர்(Registrar of Newspapers for India/RNI) அதிகாரத்தை மாநில அரசுகளிடம் வழங்கச்செய்யக்கூட மாநில அரசுகளால் இயலவில்லை.

இது போன்ற ஒன்றிய அதிகாரப் பிடுங்கல்களை  மக்களிடையே பரப்பி மக்களின் பேராதரவைப் பெற வேண்டும். தொடர்பான தீர்மானங்களை அனைத்து மாநிலச் சட்ட அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும்.

மாநில உரிமைகளுக்கான கூட்டமைப்பு என்பதால் ஒன்றிய அரசை நடத்தும் ஆளும் கட்சி மாநில அரசு சார்பாகவும் இருக்கலாம். அவர்கள் தத்தம் மாநிலத்திற்கேற்ப அதிகார உரிமைகளைக் கோர வேண்டும். இப்போது பா.ச.க. ஆளும் மாநில முதல்வர்கள் முதலானோர் இக்கூட்டமைப்பில் சேர வில்லையெனில், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். மாநிலத்திற்காகக் குரல் கொடுக்கையில் விலகியிருப்பின் மக்களிடம் இருந்து விலக்கி வைக்கப்படுவோம் என அஞ்சி பா.ச.க. முதல்வர்களும் சேரும் நிலை வரவேண்டும். நல்லிணக்கமாகக் கூட்டமைப்புச் செயற்படும் வகையில் எக்கட்சியையும்  தாக்காமலும் தாங்காமலும் நடுநிலையுடன் உரையாடல்களும் உரைகளும் இருக்க வேண்டும்.

இக்கூட்டமைப்பு, ஒன்றிய ஆட்சியைப் பிடிக்கும் வகையில் செயற்படாமல் மாநில அதிகார மீட்பு நோக்கை இலக்காகக் கொண்டுதான் செயற்பட வேண்டும். கூட்டமைப்பிற்கு வெளியே எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு இதனைப் பயன்படுத்தலாம். ஆனால், கூட்டமைப்பு என்பது ஒன்றிய – மாநில உறவு,அதிகாரப் பரவல் குறித்து மட்டுமே இருக்க வேண்டும்.

இத்தகைய நடுநிலையான அமைப்பை ஏற்படுத்தி மாநில அதிகாரங்களை மீட்டெடுக்குமாறு முதல்வரை வேண்டுகிறோம்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்.

(திருவள்ளுவர், திருக்குறள் 462)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

16.04.2054/29.04.2023

Followers

Blog Archive