Friday, June 7, 2024

பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை ½; இலக்குவனார் திருவள்ளுவன்

 




முனைவர் மெய்.சித்திரா அறிவியலிலும் கணிப்பொறிப் பயன்பாட்டிலும் வரலாறு-தொல்லியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதுடன்  தகவல் முறைமைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்; கல்வெட்டியலில் பட்டயம் பெற்றுள்ளார்; இதழியலில் சான்றிதழ் பெற்றுள்ளார்; தொடர்ந்து கல்விப் பட்டங்கள் பெற்று வருகிறார்.

தமிழ்-கொரிய,  தமிழ்-சுமேரிய,   தமிழ்-சீன  பண்டைய தொடர்புகள், கோவில் குறியீடுகள், கோலங்கள்  பற்றிய ஆய்வாளராகத் திகழ்கிறார். ஆங்காங்கு தமிழ் மலர் ஆசிரியராக 4 ஆண்டுகள்(2014-2018) தொண்டாற்றி யுள்ளார். 2020 முதல் ‘இலக்கியச் சுடர்’ மின்னிதழ்  ஆசிரியர் குழுவில் செயலாற்றி வருகிறார். இவரது படைப்புகள் தினமலர், தினத்தந்தி, தினமணி, வீரகேசரி, கோகுலம், சுட்டி விகடன் முதலிய இதழ்களிலும்           திண்ணை, தமிழ்ச் சிகரம், முத்துக்கமலம் முதலிய இணையத்தளங்களிலும் வருகின்றன. 

வாழ்க்கை வரலாறுகள் (மொழிபெயர்ப்பு)(2), குறும்புதினங்கள்(1),  சிறுகதை நூல்கள் (மொழிபெயர்ப்பு)(4), பயண நூல்(2), ஆய்வு நூல்கள்(2), ஆங்கில நூல்கள்(6), சப்பானிய மொழி நூல்கள்(2), தமிழ் மொழி கற்றல் நூல்(1), மொழிபெயர்ப்பில் துணை அகராதி நூல்(1), தொகுப்பு நூல்(1), மொழிபெயர்ப்பு நூல்(3), ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு (1), மின் நூல்கள்(16), எனப் பல்வகைத்தலைப்புகளில் பல நூல்களை எழுதியுள்ளார். சீனம், கொரியம், சப்பானியம் முதலிய அய மொழிகளுடன் தொடர்புடைய கட்டுரைகளையும் சீனத்திடம் தொடர்புபடுததி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், குசராத்தி, இந்தி முதலிய மொழிகளின் பட அகராதிகளையும் உருவாக்கியுள்ளார்.  நாடகங்களை எழுதியும் நடித்தும் வருகிறார்.

கண்டோனீயம் அல்லது கண்டோனிசு (Cantonese) என்பது சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தின் ஒரு தென்சீன மொழியாகும். இம்மொழியிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளுக்கான  பட அகராதிகளை வெளியிட்டுள்ளார். இவரது மொழியறிவு மொழி கற்பித்தலுக்கும் அவ்வம்மொழிகளுடன் தமிழ்ப்பண்பாடு, நாகரிகம், மொழி முதலியவற்றுடனான ஒப்புமைச் சிறப்புகளை விளக்கவும் பயன்பட்டு வருகிறது.

இத்தகைய பன்முக ஆற்றலுடன் விளங்கும் இவரின் ஆளுமைகளைக் கூறி முடிப்பின் நூலாய்விற்கு நேரமிருக்காது. எனவே, சுருக்கமாக, இத்தகைய பன்முகத் திறனாளரின் நூற்பணியும் கலைப்பணியும் பிற பணிகளும் சிறந்துதானே இருக்கும் எனலாம்.

முனைவர் மெய்.சித்திரா,

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்”

என்னும் பாரதியார் வாக்கிற்கிணங்கத் தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்தும் பிற மொழி நூல்களுடன் ஒப்பாய்வு செய்தும் தமிழ்ப்பணி யாற்றி வருகிறார். ‘பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்’ என இப்பொழுது் திருக்குறள்  ஆய்வுகள், ஒப்பீடுகள் குறித்த கட்டுரைத் தொகுப்பை வெளியிடுகிறார். இந்நூலில் 15 கடடுரைகள் இடம் பெற்றுள்ளன.

திருக்குறள் மாநாடுகள், கருத்தரங்கங்கள், தொடர்பான பொழிவுகள், உலகத்தமிழ், தமிழணங்கு முதலான இதழ்களிலும் இடம் பெற்ற கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

திருக்குறளில் காணப்படும்  இருமைக் கூறுகள்       (Duality in Thirukkural) என்பது முதல் கட்டுரை. இக்கட்டுரை யாழ்ப்பாணத்தில் பிப்பிரவரி, 2021 இல் நடைபெற்ற இரண்டாம் திருக்குறள் மாநாட்டுக் கருத்தரங்கத்தில் வாசிக்கப்பெற்றது.

“வள்ளுவர் குறளில் பல இடங்களில் இருமைக் கூறுகளைப் பயன்படுத்தியுள்ளார்.” எனக் குறிப்பிட்டு அது குறித்து ஆராய்ந்து கட்டுரையைத் தந்துள்ளார்.

இருமை/Duality  குறித்து ஆங்கில அகராதி விளக்குவதை எடுத்துரைக்கிறார். தாவோ மதத்தின் புனித நூலான தாவோ தே சிங்கின் இரண்டாவது அத்தியாயத்தில் இருமை சிறப்பாய் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளதையும் விளக்கியுள்ளார்.

திருக்குறளில் இருமை, இரு, இரண்டு என்ற சொற்கள் ஆகிய இருமைக் கூறுகளை விளக்கியுள்ளார். திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒத்த இருமைக் கூறுகள், மாறுபட்ட இருமைக் கூறுகள், வேறுபட்ட இருமைக் கூறுகள் என வகைப்படுத்தியும விளக்கியுள்ளார். பரவலாக எடுத்தாளப்படாத திருக்குறளில் காணப்பெறும் இருமைக்கூறுகளை நன்கு விளக்கியுள்ளார்.

திருக்குறளில் கருத்தறிவுறுத்தும் திறன்(Presentation Skills in Thirukkural) என்பது இரண்டாம் கட்டுரை. இது, செட்டம்பர், 2022 இ்ல் குறள் வழி ஆளுமைக் குழு  நிகழ்வில் வழங்கப்பட்ட உரையாகும்.

“கருத்தறிவுறுத்துல் கூறுகளை நாம்  திருக்குறளின் வழி,  இடம்,  காலம், அவை, பொருள், நடை, குறிப்பறிதல், மொழி, முறைப்படுத்தல் ஆகிய அதிகாரங்களின் வாயிலாய்த்” தெளிவுபடுத்துகிறார்.   இவற்றின் வழிக் கருத்தறிவுறுத்தல் திறனைச் சிறப்பாய் வளர்த்துக் கொள்ளலாம்  என்று வலியுறுத்துகிறார்.

கருத்தறிவுறுத்தலுக்கு நேரடியாகத் தொடர்புடைய அவையறிதல், அவைஅஞ்சாமை முதலிய அதிகாரக் கருத்துகளை மட்டுமல்லாமல், வலியறிதல், இடனறிதல், காலமறிதல் முதலான அதிகாரத் திருக்குறட் கருத்துகளையும் கருத்தறிவுறுத்தலுக்குப் பயன்படுத்திச் சிறப்பாக விளக்கியுள்ளார். திருக்குறட் பாக்கள் குறிப்பிட்ட அதிகாரத்துடன் நோக்காமல் பல வகையிலும் நோக்க வேண்டும் என்பதற்கு இவரின் விளக்கங்கள் எடுத்துக்காட்டுகளாய் அமைகின்றன.

மூன்றாம் கட்டுரை திருக்குறள் கூறும் சமத்துவத்திற்கான நெறிகள் (Thirukkural on Equality Norms)       என்பதாகும். இது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FETNA) 2024 மலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்நாடு இந்நாடு என்றன்றி எந்நாட்டிற்கும் அக்கால இக்காலங்களுக்கு மட்டுமேயன்றி  எக்காலத்திற்கும் அச்சமயம் இச்சமயம் என்றன்றி எச்சமயத்திற்கும் அக்குலம் இக்குலம் என்றன்றி எக்குலத்தினருக்கும் அத்துறை இத்துறை என்றன்றி எத்துறைக்கும் அச்சூழல் இச்சூழல் என்றன்றி எச்சூழலுக்கும் ஏற்ற” சமத்துவ நிலையைத் திருவள்ளுவர் வழங்குவதாக இதில் தெரிவித்துள்ளார்.

சமத்துவத்திற்கான தேவை, சமத்துவம் தோன்ற வழி, சமத்துவத்தை உருவாக்கும் வழி, சமத்துவம் நிலைக்கும் இடம் எனச் சமத்துவம் குறித்த வரையறை தேவை முதலியவற்றைத் திருக்குறள் கொண்டு ஆசிரியர் விளக்குகிறார்.

நான்காவது கட்டுரை தாவோ தே சிங்கு நூலின் பின்புலம் குறித்தது.

தாவோ தே சிங்கு கருத்துகள் நேரடியாய், சீன மொழியிலிருந்து தமிழுக்கு இந்நூலாசிரியரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த மொழிபெயர்ப்புடன் திருக்குறள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 பொதுவாகப் பிற மொழிகளில் உள்ள நூல்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு அடிப்படையில் அல்லது ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டவற்றின் அடிப்படையிலேயே  ஆய்வுகள் நடைபெறுகின்றன. அதுபோல்,  தாவோ தே சிங்கு நூலைப் பொறுத்தவரை சி. மணி (2002) என்பவரின் ‘தாவோ தே சிங்கு இலாவோட்சு’  என்னும் நூலும்  மலர்ச்சி  பிரபாகரன் என்பவரின் (2019) ‘இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள்’ என்னும் நூலும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. ஆனால், நூலாசிரியரான முனைவர் மெய். சித்திராவே சீனத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார். எனவே இதனடிப்படையிலேயே ஒப்பாய்வு செய்துள்ளார். எனவே, இவருக்கு எளிதில் கைவந்துள்ளது எனலாம்.

புறநானூற்று ஒப்பாய்வு குறித்த சே.தனபால், திருமூலரின் திருமந்திரத்துடனான ஒப்பாய்வு  குறித்த முனைவர் சிரீதேவி  ஆகியோரின் ஒப்பாய்வுகள்(ஆங்கிலக்  கட்டுரை)  பற்றியும் இவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் திருக்குறளுடன் தொடர்பு படுத்தும் ஒப்பாய்வுகள் அருகிக் கிடப்பதால அப்பணியை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏதோ தான் மட்டும்தான் சீன நூல்குறித்து ஒப்பாய்வு செய்வதுபோல் காட்டாமல் முந்தைய நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றையும் குறிப்பிடுவது நூலாசிரியரின் நடுநிலைப் பண்பிற்குச் சான்றாகும்.

இருவேறு நாடுகளின் சூழலுக்கு ஏற்ப, ஒத்த கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு தரப்பட்டுள்ளதாகவும்  ஒன்றுக்கொன்று முழுமையாய் ஒத்து இருப்பது சாத்தியமல்ல என்பதால் பெருமளவு ஒத்துள்ள கருத்துகளின் அதன் அடிப்படையில் ஒப்பாய்வுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இரு நூல்களிலும் ஒத்த கருத்துகள் பல இருப்பினும் சிலவற்றை மட்டுமே இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் இவரது திருக்குறள்-தாவோ தே சிங்கு ஒப்பாய்வைத் தமிழுக்கான புதுவரவாக வரவேற்கலாம்.

ஐந்தாவது கட்டுரை இருமைக் கூறுகள் – ஒப்பீட்டாய்வு     பற்றியது.

திருக்குறளில் காணப்படும்  இருமைக் கூறுகள் குறித்து முதல் கட்டுரையிலேயே ஆய்வுரை வழங்கியுள்ளார். இருப்பினும் இதில் சீன நூலகளுடன் ஒப்பிட்டு ஆய்வுரை அளித்துள்ளார். “இருமைக் கூறுகள் வாயிலாய்,  சீனத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள பண்டைய தொடர்பு புத்த மத அறிமுகத்திற்கும் சோழர்கள் காலத்திற்கும் முன்பே வலுவாய் இருந்திருக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.”

ஆறாவது கட்டுரை கருத்து ஒப்புமைகள்         (Concept Similarities) குறித்தது. அமெரிக்கா(சிகாக்கோ)வில் நடைபெற உள்ள உலகத் திருக்குறள் மாநாட்டில் வாசிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டது.

thiru2050@gmail.com


வெளியீடு

Thursday, June 6, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

Accepted and countersignedஏற்று மேலொப்பமிடப்பட்டது  

ஆவணத்திலுள்ள விதிகள்/வகையங்கள்/கூறுகள், செயன்மை(action) இரு தரப்பாராலும் ஏற்கப்பட்டதன் அடையாளமாக முதல் தரப்பார் கையொப்பமிட்டதும் அதனை ஏற்கும் வகையில் மறு தரப்பாரும் கையொப்பமிடுவது.  

ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், முதன்மையான ஆணைகள்,  என எவையாக இருந்தாலும் ஒப்புதலுக்கான இரண்டாம் கையொப்பமே மேலொப்பமாகும்.
Accepted in principleகொள்கையளவில் ஏற்றல்  

முழு விவரங்கள் அறியாச் சூழலில், சாத்தியமா இல்லையா என அறியா நிலையில் பொதுவாக ஒப்புக் கொள்ளல்.
Accepted under the provisionsவகைமுறைகளின்படி ஏற்கப்பெற்றது  

விதிகளின் கீழ் ஏற்கப்பட்டது.  

பணியாளரால் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது என்பது, அதிலுள்ள அனைத்து விதிமுறைகளையும் ஏற்றுக் கொள்வதும் உடன்படுவதும் ஆகும்.
Acceptor     ஏற்குநர்  
ஏற்பாளர்
ஏற்பி  

ஒப்பந்தப்புள்ளியை ஏற்றல்  

தரப்படும் ஒன்றை ஏற்கும் ஒருவர் அல்லது அறிவியலில் ஏற்கும் ஒரு பொருள்.  

மாற்று உண்டியலை ஏற்றுப் பணம் பெறுபவர்.

வரைவோலை அல்லது காசோலையை ஏற்றுக் கொண்டு அதில் குறிக்கப்பட்டவருக்குக் குறித்த தொகையை வழங்குவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளல்.
Acceptor for honourநற்பெயருக்காக ஏற்குநர்  /ஏற்பவர்  

ஒருவருக்குரிய தொகையை நாணயத்திற்காகத் தருவதாக ஏற்பவர், பின்வரும் அவரின் அனைத்துத் தரப்பாருடனும் பின்னர் இழப்பு அல்லது சேதம் வரின் அனைத்தையும் தருவதற்குப்பொறுப்பேற்கும் வகையில் தன்னைப் பிணைத்துக் கொள்கிறார்.
செலாவணி முறிச் சட்டம், 1881, பி. 7 (The Negotiable Instruments Act, 1881, s.7.)
acceptor of bill of exchangeமாற்றுச்சீட்டை ஏற்பவர்  

மாற்றுச்சீட்டு என்பது பணமாற்றுச் சீட்டு.

பெயர் எழுதப்பெற்றவர்,  தன் ஆணை பெற்றவருக்கு அல்லது இதனைக் கொணர்பவருக்கு மட்டுமே குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுக்கும் படி எழுதுநரால் ஆணையிடப்பட்டுக் கையொப்பமிடப்பட்ட முறையாவணம். (செலாவணி முறிச் சட்டம், 1881, பி.51)
Access        அணுகல்;

அணுகுவழி;

அணுகும்‌ வாய்ப்பு;

அணுகுதல்   சந்திக்கும் அல்லது தொடர்பு கொள்ளும் வாய்ப்பு;

பாலுறவு கொள்ளக்கூடிய வாய்ப்பு  

குடும்பச்  சட்ட வழக்குகளில் தொடர்ச்சியாகக் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதற்கான அவர்களது நலவாழ்வு, கல்வி, நலம் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை.  

அணுகுதல் என்னும் பொருள் கொண்ட accessus என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானது.
Access to informationதகவலணுகல்  

தகவலணுகல் என்பது பொது அமைப்புகளிடம் உள்ள தகவல்களைத் தேட, பெற, வழங்குவதற்கான உரிமை என வரையறுக்கப்படுகிறது.
Access to recordபதிவேடு அணுகல்  

ஆவண அணுகல்  

பதிவேடுகளை அணுகும்வழி.

ஆவணங்களை அணுகுதல்.  

மறுகாப்பீட்டு நிறுவனம், எந்த ஒரு நேரிய நேரத்திலும்(reasonable time),  உரிய வணிகச் செயற்பாட்டின் கீழ் வரும்  ஆவணங்கள், புத்தகங்கள், கணக்குகள், பிற பதிவுகள் முதலியவற்றை நேரிடையாகவோ நிறுவனம் சார்பில்  முகவர்  மூலமோ தன் செலவில் பார்வையிடவோ ஆவணங்கள், கணக்குகள், பதிவேடுகள், புத்தகங்கள் முதலியவற்றைப் படிஎடுக்கவோ உரிமை உண்டு.
Access to shopsகடைகளை அணுகல்  

கடைகளுக்குச்  சென்று வருதல்‌    

கடைகளை அணுகுவதில் யாருக்கும் தடையின்றிச் சமநிலை அணுகல் வேண்டும்.  

இந்திய அரசியல் யாப்புச் சட்டம், உறுப்பு 15(2): கடை, பொது ஒய்வு விடுதிகள், உணவு விடுதிகள், பொது பொழுது போக்கு இடங்களைக் குடிமக்கள் அணுகும் பொழுது மதம் சாதி, பால், பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் தடைவிதிப்பதோ, வரைக்கட்டு(நிபந்தனை) விதிப்பதோ கூடாது. அது போலவே அரசு நிதியால் ஏற்படுத்தப்பட்ட பொதுப் பயன்பாடுகள் கிணறுகள் சாலைகள் போன்றவற்றின் பயன்பாட்டிலும் சாதி, மதம், பால், பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் எவ்விதமானப் பாகுபாடும் காட்டக் கூடாது.

(தொடரும்)

Tuesday, June 4, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

321. acceptance of final billஇறுதிப் பட்டி  ஏற்பு  

இறுதிப் பட்டியை ஏற்றல்  

கணக்கை முடித்து வைக்கும் பட்டி அல்லது நிதிப்பட்டியல் ஏற்றல்.
322. acceptance of less sumகுறை தொகை ஏற்பு  

குறைந்த தொகை ஏற்றல்  

ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் குறித்த தொகையைவிடக் குறைவான தொகையை ஏற்றல்.
323. acceptance of offerதருகை ஏற்பு  

offer- முனைவு எனக் குறிப்பிடுகின்றனர்.
முனைவு என்றால்,  1. வெறுப்பு (தொல்.சொல்.386),    2. அவாவின்மை (சூடா.),  3. வெறுப்போடு கூடிய சினம் எனப் பொருள்கள். எனவே பொருந்தாது.

காண்க: Acceptance – ஏற்பு
324. acceptance of officeபதவி ஏற்பிசைவு  

தரப்படும் பதவிப் பொறுப்பை ஒப்புக்கொள்வதற்கான இசைவைத் தெரிவித்தல்.

office என்பது பதவி அல்லது அலுவலையும் குறிக்கும், அலுவலகத்தையும் குறிக்கும். இங்கே பதவிப்பொறுப்பைக் குறிக்கிறது. ஏற்பு என்றால் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல் என்றும் கருதலாம். எனவே ஏற்பதற்கான இசைவைக் குறித்துள்ளோம்.
325. Acceptance of promiseவாக்குறுதியேற்பு
வாக்குறுதி ஏற்பு  

தருகை வரையறைகளுக்கிணங்கச் (conditions of the offer) செலுத்துவது குறித்த உறுதியுரையை ஏற்றல்.  

இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 பிரிவு 2 (அ): மொழிவுரை அல்லது தருகை (Proposal or Offer). 

ஒரு செயலைச் செய்வதாகவோ செய்யாமலிருப்பதாகவோ ஒருவர் வேறொருவரிடம் கூறி அவரின் இசைவைப் பெற விரும்பினால் அது மொழிவுரை(Proposal) ஆகும்.

பிரிவு 2. (ஆ) ஏற்பு (Acceptance): அவ்வாறு மொழிவுரை செய்யப்பட்ட பின் வேறொருவர் அதனை ஏற்றுக்கொள்ளும் செயல் தான் ஏற்பு எனப்படும்.
326. Acceptance of proposalகருத்துரு ஏற்பு  

முன்மொழிவேற்பு, முன்மொழிவு ஏற்பு,
செயற்குறிப்பேற்பு, செயற்குறிப்பு ஏற்பு  

Proposal என்பதைத் தமிழில் கருத்துரு, செயற்குறிப்பு, முன்மொழிவு, புரிவுரை, முன்வரைவு, எடுத்துரை, மணவேட்டல், புதுக்கருத்துரைத்தல், புதிது கொணர்தல், தருமொழி, திருமணக்கோரிக்கை, புதுக்கருத்து, புத்தாய்வுத்திட்டம், புதுச்செயல்முறை எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். இவற்றுள் புரிவுரை என்பதைப் புரிவு + உரை என்னும் பொருளில் கையாண்டுள்ளனர். புரிவு என்பதற்கு அன்பு, விருப்பம், தொழில் எனப் பொருள்கள்.

திருமணத்திற்கோ காதலுக்கோ ஒருவர் முன் மொழிவதை அன்பு, விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையிலானது எனக் கருதலாம். பிறவற்றிற்குப் பொருந்தாது. இதனைப் புதுச்சொல்லாகக் கருதிச் சட்டத்துறையில் கையாள்கிறார்களா எனத் தெரியவில்லை. தொழில் சாரா திட்டத்தையும் எடுத்துரைத்து முன்மொழியலாம். எனவே, புரிவுரை என்பது சட்டநோக்கில் பொருந்தாது.
மணவேட்டல், திருமணக்கோரிக்கை ஆகிய சொற்களும் காதல் அல்லது திருமண விழைவுகளுக்குப் பொருந்தும். பிற யாவும் ஒத்த பொருளுடையனவே.  

நிறைவேற்ற வேண்டிய செயலுக்கு அளிக்கப்படும் குறிக்கப்படும் என்ற வகையில் திட்டம் சார்ந்தவற்றில் செயற்குறிப்பு என்பதைக் கையாளலாம். எனினும் பொதுவாக எல்லாவற்றிற்கும் ஒரு முடிவை எடுப்பதற்குரிய கருத்திற்கு உரு கொடுக்கும் வகையில் அமைவதைக் கருத்துரு என்பது ஏற்றதாக இருக்கும். எனவே, அவரவர் பொருள் பயன்படும் இடத்திற்கேற்ப உரிய சொல்லைப் பயன்படுததலாம். இங்கே பொதுவாகக் கருத்துரு பயன்படுத்தப்பட்டுள்ளது.  
இந்திய ஒப்பந்தச்சட்டம், பிரிவு 3.
327. acceptance of tenderஒப்பந்தப்புள்ளி ஏற்பு  

விற்பனையாளருக்கு அவர் தரும் ஒப்பந்தப்புள்ளியை ஏற்பதாக மடல்/தொலையச்சு/தொலைவரி/தொலைநிகரி அல்லது வேறு வகையில் தெரிவிப்பது.  

தொலை நகலி வாயிலாகத் தெரிவித்தல் என்பர்.  சிரிப்பு என்னும் பொருளிலான நகல் என்பது தமிழ்ச்சொல். துளுவிலும் கன்னடத்திலும் இச்சொல் நகலி என மாறியுள்ளது. ஆனால் படி(copy) என்னும் பொருளிலான நகல் என்பது உருதுச்சொல்லான நகல்(naql ) என்பதிலிருந்து வந்தது.
328. acceptance of the feesகட்டண ஏற்பு  

பதிவுக்கட்டணம், சேர்க்க்கைக் கட்டணம், படிப்புக் கட்டணம், முத்திரைக் கட்டணம், நுழைவுக்கட்டணம் எனப் பலவகைக் கட்டணங்கள் உள்ளன. சூழலுக்கேற்ப நமக்குத் தேவையானதற்கான கட்டணத்திற்கு உடன்பட்டு ஏற்றல்
329. acceptance with condition subsequentபின்வரைக்கட்டுடன்(நிபந்தனையுடன்) ஏற்றல்  

பின்னர் வரக்கூடிய உறுதியற்ற தன்மை அல்லது நிகழ்வு காரணமாக ஒப்பந்தக்கூறு ஒன்று உருவாக்கப்படலாம் அல்லது முடிக்கப்படலாம். இதனைப் பொறுத்துக் கொண்டு ஒப்பந்தத் தரப்பு நிறைவேற்றக்கூடிய அல்லது மன நிறைவடையக்கூடிய  நிலைப்பாட்டை ஏற்றல். அஃதாவது பின்னர் எழக்கூடிய வரைக்கட்டினை(நிபந்தனையை) எதுவாக இருந்தாலும் முன்னரே ஏற்பதாக உறுதி கூறல்.
330. Acceptedஏற்கப்பட்டது.   ஒருவர் தர முன்வரும் ஒன்றை ஏற்றுக்கொ ண்டமை; ஒன்றை ஒப்புக்கொ ண்டமை;   ஒன்றனுக்கு இசைவு தெரிவிக்கப்பட்டமை.   ஒரு முடிவிற்கு அல்லது ஒப்பந்தத்திற்குச் சார்வாய் இருந்து ஏற்றுக் கொள்ளல்.   தீர்ப்புரையை அல்லது அரசாணையை ஒப்புக் கொண்டு மேல் முறையீடு செய்யாமலிருத்தல்.

(தொடரும்)

Sunday, June 2, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

311. Acceptableஏற்கத்தக்கது  

ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியோ திறனோ உடையது.

ஏற்கத்தக்க ஒலி அளவு.

மன்பதையில் ஏற்கத் தக்க நடத்தை.  

இரு தரப்பும் ஏற்கத் தக்க இணக்கத் தீர்வு.

நடைமுறை, செயல்முறை, அல்லது கொள்கையை மதிப்பாய்வு செய்து ஏற்றல்.
312. Acceptable reliability levelஏற்பு நம்பக அளவு  
ஒரு பொருளின் நம்பகத் தன்மை குறித்த அளவு.
313. Acceptabilityஏற்புத்திறன்  

ஒப்புக்கொள்ளத்தக்க அல்லது ஏற்கத்தக்க மனநிறைவான தரம்.
314. Acceptanceஏற்பு  

ஒருவர் ஒன்றைக் கொடுக்க முற்படும்போது அதனை இசைந்து ஏற்றுக்கொள்ளுதலாகிய செயல் அல்லது உண்மை விவரம் ;

வாக்குறுதி ஏற்பு (பி.9, இ.ஒ.ச.)

  தருகைகளின்(offer)வரம்பு முறைகளை ஏற்றுக்கொள்ளுதல்.  

ஒப்பந்தச் சட்டத்தில் ஏற்பு என்பது, மற்றவரால் வழங்கப்படும் தருகைகளை ஏற்றுக் கொள்ளுதல்.

offer – விருப்பறிவிப்பு, இசைவு தெரிவி, வாய்ப்பு என வழங்கக் காணலாம். இதனை வாய்ப்பு நலன் என முதலில் குறித்தேன். இரு சொல்லாக உள்ளது. ஒற்றைச்சொல்லே ஏற்றது. கொடுக்கப்படுவது கொடுவை தரப்படுவது தருவை எனலாமா என எண்ணினேன். ஆனால் தருவை என்பது உவர்மண் விளையுமிடத்தைக் குறிப்பது. எனவே, பணியில் சேருவதற்கோ ஒப்பந்தத்தை நிறைவேற்றுதற்கோ  தரப்படும்  நலப்பாடுகளைக் குறிப்பதால் தருகை எனக் குறித்துள்ளேன்.
315. Acceptance by conductசெயற்பாங்கு மூலம் ஏற்றல்  

ஒப்பந்தச் சட்டத்திற்கிணங்க,

ஒப்பந்தம் கையொப்பமிடாச் சூழலில் அவன் அல்லது அவளின் செயல்பாடுகள் மூலம் தரப்பினைக் கண்டறிய இயலும்.  

Conduct என்றால் நடத்தை என்னும் பொருளில் பிறர் குறித்துள்ளனர். இஃது ஒழுக்கம் சார்ந்த செயலைக் குறிப்பதாகத் தவறாகப் பொருள்கொள்ளப்படுகிறது. இங்கே இச்சொல் செயல்படும் முறையைத்தான் குறிக்கிறது. எனவே, செயற்பாங்கு எனலாம்.
316. Acceptance certificateஏற்புச் சான்றிதழ்  
ஏற்புத் தேர்வு முடிந்ததும் இரு தரப்பாராலும் ஒப்பமிடப்படும் ஆவணம்.

இது முதனிலை ஏற்புச் சான்றிதழ் (Preliminary Acceptance Certificate /PAC) என்றும் இறுதி ஏற்புச் சான்றிதழ் (Final Acceptance Certificate /FAC) என்றும் இருவகைப்படும்.
317. acceptance of a billவரைவத்தை ஏற்றல்  

உண்டியலை ஏற்றல்  

சட்ட மன்றம், நாடாளுமன்றம் முதலான மக்கள் மன்றங்களில் அறிமுகப்படுத்தும் வரைவத்தை வாதங்கள் இன்றியோ வாதங்களுக்குப் பின்னரோ ஏற்றல்.  

வரைவம் என்பது சட்ட முன் வடிவு.  
உண்டியல் ஏற்பு: அளிக்கப்படும் மாற்றுச் சீட்டை வாங்கி ஏற்றுக் கொள்ளுதல்.

பெயரவர், எடுநருக்கு அளிக்கும் பொறுப்புறுதியே உண்டியல் ஏற்பு ஆகும்.  

எவர்மீது பணமாற்றுச்சீட்டு அல்லது பணம் வழங்கு ஆணை எழுதப்பெறுகிறதோ அவர் பெயரவர் (drawee) எனப் பெறுகிறார்.  

காசோலை அல்லது உண்டியலைத் தர வேண்டியவருக்குத் தரும் வகையில் எழுதும் தருநர்/  வரையுநர், பெயரவர் ஆவார். பணம் எடுப்பவரையும் இச்சொல் குறிக்கும். அவரே எடுநர்(drawer).
318. acceptance of bailபிணை ஏற்பு  

குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரைச் சிறையிலிருந்து வெளிக்கொணர நீதிமன்றம்  ஆணை பிறப்பிப்பதற்குப் பொறுப்புறுதியாக அளிக்கப்படும் சொத்து அல்லது வைப்புத்தொகையைப் பிணையாக ஏற்றல்.  

பிணை அளிப்பிற்கானவற்றைக் குறிப்பிடும் பிணைப்பத்திரத்தை நீதி மன்றம் ஏற்காவிடில் தனியர் பிணைப்பொறுப்பையும் கோரலாம். எவ்வாறிருப்பினும் பிணையை ஏற்பது நீதிமன்றத்தின்  முடிவுரிமை. எனவே ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.
319. acceptance of complete specificationமுழு வரைமானம் ஏற்பு  

முழுமை விவரக்குறிப்பை ஏற்றல்  

ஒரு திட்டத்தையோ ஒப்பந்தத்தையோ கட்டுமானத்தையோ ஏற்கும் முன்னர் அதன் வழிமுறை குறித்த நுணுக்க விவரங்களுடன் கூடிய தகவலை முழுமையாக ஏற்றல்.  

ஒன்றின் விவரங்களை வரையறுத்துக் கூறுவதால் குறிப்பீடு என்று சொல்வதை விட வரைமானம் எனலாம்.
320. acceptance of counter proposalஎதிர் முன்மொழிவை ஏற்றல்  

மூல முன்மொழிவை ஏற்காமல் அதற்கு எதிராக அளிக்கப்படும் கருத்துரு அல்லது முன்மொழிவு அல்லது செயற்குறிப்பு.

(தொடரும்)

Followers

Blog Archive