Friday, November 25, 2016

பிரபாகரன், பன்னூறு ஆண்டுகள் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்




பிரபாகரன், பன்னூறு ஆண்டுகள் வாழியவே!

தலைப்பு- பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்து, இலக்குவனார் திருவள்ளுவன் ; prapakaran_vaazhthu_ilakkuvanar-thiruvalluvan
கார்த்திகை 11,  தி.பி. 1985 / நவம்பர் 26, கி.பி. 1954
அன்று தமிழாய்ப்பிறந்த
தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு
பிரபாகரன்  பிறந்த நாள் பெருமங்கலம்!
தமிழ் என்றால் இனிமை.
தமிழ் என்றால் அழகு.
தமிழ் என்றால் வீரம்.
தமிழ் என்றால் அன்பு.

தமிழ்போல் இனிமையும் அழகும் வீரமும் அன்பும் கொண்டவரே தலைவர் பிரபாகரன்.
பிரபாகரன் பிறந்ததால்தான் உலகம்  தமிழரின் வீரத்தை உணர்ந்தது! தமிழரின் செம்மையை அறிந்தது!
தமிழ்ஈழம் இன்றைக்கு உரிமை இழந்து நிற்கலாம். ஆனால், நாளை மீண்டும் எழும்! மலரும்! தனியரசாய்த் தலைநிமிர்ந்து நிற்கும்!
மலரப் போகும் தமிழர் தாயகத்தின் மாபெரும் தலைவர்,
தமிழ்உரிமை காக்க வந்த தன்னிகரில்லாத் தலைவர்,
தமிழ் ஈழத்தின் ஆட்சியாளர்  மேதகு பிரபாகரன் 
மேன்மையும் புகழ்மையும் நலமும் மகிழ்வும் எய்திப்
பன்னூறு ஆண்டுகள் வாழியவே! வாழிய வாழியவே!

வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர்,
‘அகரமுதல’ பன்னாட்டு மின்னிதழ்
AkaramuthalaHeader

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙை] – இலக்குவனார் திருவள்ளுவன்

முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி

 இவ்வரிகள் இலக்குவனாரின் தொலைநோக்கைக் காட்டுவதாக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சி.இலக்குவனார் குறித்து எழுதியுள்ள நூலில்(பக்கம் 50) பேராசிரியர் முனைவர் இ.மறைமலை பின்வருமாறு கூறுகிறார்:
“வறியோர்க்கு உணவு, முதியோர்க்கு உணவு, கோயிலில் உணவு என்று பல்வேறு இலவச உணவுத் திட்டங்கள் இன்று நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இவை யனைத்தும் பெரும் நிதியையும் கரைக்கும் செலவினங்களாகவே அமைந்துள்ளன. ஆனால், இலக்குவனார் கனவு காணும் திட்டத்தின் மூலம் உணவைப் பெறுவோர் உடல் ஊனமுற்றோரே ஆயினும் தம்மால் இயன்ற அளவு உழைக்க வேண்டும். இங்ஙனம் உழைத்துப் பெற்ற விளைவினால் கிடைக்கும் வருவாய் மீண்டும் இத்திட்டத்திலேயே முதலீடு செய்யப்படும். இதன் விளைவாகச் செலவினம் ஒருவழிப் போக்குவரத்தாக அமையாமல், வருவாய் வழங்கித் தொடர்ந்து இத்திட்டம்நடைமுறைப்படுத்த வழிவகுக்கிறது. இன்றைய சூழ லில் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு வழிகாட்டும் வகையில் இலக்குவனாரின் தொலைநோக்கு அமைந்துள்ள தன்றோ?”
  மொழிபெயர்ப்பு நூல் நேரடி உருவாக்கம் போல் அமையாமல் புத்தாக்கமாக அமைய வேண்டும் என்பர் அறிஞர் பெருமக்கள். ஆங்கிலக் கவிஞர் கீட்சு என்பாரின் ‘இசபெல்லா’ என்னும் குறுங்காப்பியத்தைத் தமிழில் புத்தாக்கமாகப் படைத்துத் தந்துள்ளார் பேராசிரியர் சி.இலக்குவனார். இதன் மூலம் அவரின் ஆங்கிலப் புலமையும் மொழிபெயர்ப்புத் திறமையும் நன்கு பளிச்சிடுகின்றன. தமிழகச் சூழலுக்கேற்ற வகையிலும் தாம் பின்பற்றும் பகுத்தறிவு இயக்கக் கோட்பாடுகளுக்குப் பொருந்தும் வகையிலும் பெண்கல்வி, பெண்ணுரிமை, பெண் விடுதலை ஆகிய கருத்துகளைச் சங்க இலக்கிய நடையில் கண்ணகி, மணிமேகலை முதலான பெருமைமிகு பெண்டிரை நினைவுகூர்ந்து மகிழும் வகையில் இலக்கிய மேற்கோள்களை இனிதே இயம்பி எழிலரசி  மூலமாகப் போர்க்குணத்தைப் படிப்போருக்கு ஏற்றி விடுகிறார். மாணவப்பருவத்திலேயே பல புதுமைகள் நிறைந்த படைப்பை உருவாக்கித் தாம் படைப்புலகிலும் கால் பதித்த ஒரு போராளி என்பதை மெய்ப்பிக்கின்றார்.
 படிக்கும் பொழுதே சிறந்த புலமையாளர் எனப்(பெரும்புலவர்களைப் போட்டி மூலம் தேர்ந்தெடுத்துச் சிறப்பிக்கும்) புதுக்கோட்டை அரசரால் சிறப்பிக்கப் பெற்றார். ஒன்பான் இரவு (நவராத்திரி) விழாவில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற – பெரும் புலவர்கள் பலரும் பங்கேற்ற – புலமைப் போட்டிகளில் வென்றார்; விழா நிறைவில் அரசர் நாளோலக்கத்தில் பண்டிதர் என்ற விருதும் பொற்கிழியும் அளித்துச் சிறப்பு   செய்தார். பொதுவாகப் பிராமணர்களும் சமசுகிருதப் புலவர்களும் அகவையில்  மூத்தோரும் பாராட்டு பெற்ற நிலையில் தமிழ் ஆயும் தமிழ் உணர்வாளரான இளந்தமிழருக்கு இவை கிடைத்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்புதானே. படிக்கும் பொழுதே புலமை மிக்கவராக இருந்த சிறப்பு மன்னர் வரை அறிந்து போற்றப்பட, அவரை அங்கு அனுப்பிய கல்லூரியினரும் மகிழ்ந்தனர்.
 புறநிலைச் செயல்பாடுகளில் முதன்மை பெற்றதுபோல் புலவர் படிப்பிலும் முதன்மை பெற்றார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், தேர்ச்சி அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. மாநில முதல்மாணவராக மதிப்பெண் பெற்றிருந்தும் இதே மதிப்பெண்ணைப் பெற்றிருந்த மற்றொருவர் அகவை மூப்பின் அடிப்படையில் அத்தகுதியைப் பெற்றார்; அவர் முன்னரே பண்டிதர் பட்டம் பெற்றவர் என்பதால் அவர் வெற்றி பெற்றதில் வியப்பில்லை. ஆனால், பேராசிரியருக்குக் கிடைக்க வேண்டிய சிறப்பு அகவைக்கு முதலிடம் என்னும் கொள்கை அடிப்படையில் கிடைக்காமல் போனது பிற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆறாப் புண்ணாய் வாட்டியது. பேராசிரியருக்கும் பெரிதும் ஏமாற்றமாக இருந்தாலும் மீண்டும் இயல்பாகிப் பணி நாடலுக்கும் களப்பணிக்கும் ஆயத்தமாகி விட்டார்.
 புலவர் தேர்ச்சியைத் தொடர்ந்து, ஆசிரியப்பணித் தகுதிக்காக அண்ணா மலைப் பல்கலைக்கழகம் சென்று ஆசிரியப்பயிற்சி பெற்றார். பின்னர்ப் பணியில் இருந்தே படித்தும் ஆய்வேடுகள் அளித்தும் முதுகலை, கீழ்த்திசை இலக்கிய முதுகலை இயல் (எம்.ஓ.எல்/ M.O.L.), மெய்யியல் அறிஞர் (முனைவர்-பி.எச்.டி/Ph.d.) முதலான பட்டங்களைப் பெற்றார். கீழ்த்திசை இலக்கியத்தில் முதுகலை பெற்ற சிலருள் பேராசிரியரும் ஒருவர்.
 வசதி நிறைந்தவர்களுக்குக் கல்வி பொழுது போக்குபோல் அமைந்து விடுகிறது. அல்லது எச் சிக்கல் குறித்தும் கவலையின்றிப் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த முடிகின்றது. ஆனால், வசதி குறைந்தவர்களுக்குப் படிப்பது என்பதே ஒரு போராட்டம்தான். அப் போராட்ட வாழ்க்கையிலும் தமிழ் காக்கும் போர்க்களப் பணியில் கருத்து செலுத்தியவர் பேராசிரியர். தூய தமிழ்பற்றிய பரப்புரை என்பது நமக்கு இன்றைக்கு மிகவும் எளிதாகத் தோன்றும். ஆனால், மாணவ நிலையில் இருந்தே போராட்டங்கள் இடையேதான், தமிழின் தூய்மையைக் காக்கவும் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் சிறப்பைப் பற்றியும் கட்டுரைகள் எழுதியுடன் நில்லாது பரப்புரையும் மேற்கொள்ளவும் தம் வாணாளைச் செலவிட்டுள்ளார்.
  பேராசிரியரின் எதிர்காலப் போராட்ட வாழ்வின் அடிக்கல் பள்ளி வாழ்க்கையிலேயே நாட்டப்பட்டு விட்டது. பேராசிரியருக்கு அமைந்த ஒத்துழைப்பும் ஊக்கமும் நல்கிய அருமையான ஆசிரியர்கள், நீதிக்கட்சி ஆட்சியால் தன்மதிப்பினை வளர்க்கும் தஞ்சாவூர் மண் முதலானவை பேராசிரியரின் எண்ணங்களுக்கு அரண் செய்தன. எனவே வறுமைப் போரிலும் சாதிப்போரிலும் எதிர்நீச்சல் போட அவரால் முடிந்தது; எத்தனையோ இடையூறுகள் வந்தபோதும் இடைவெளி  விட்டேனும் கல்வியைத் தொடர அவரால் இயன்றது; வேறு துறைக்கோ பிற பணிக்கோ செல்லும் வாய்ப்பு இருப்பினும் தமிழின்பால் அவர் கொண்ட காதல் தமிழையே படிக்கச் செய்தது; தமிழ்ச்சிறப்புகளைப் பிற மொழியினர் அறியச் செய்ய வேண்டும் என்னும் பேராவல் பிற மொழிகளையும் நன்கு கற்கச் செய்தது;  மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டு மேலும் மேலும் தமிழின் மேன்மைகளை வெளிவரச் செய்யும் புலமையைத் தந்தது; எழுத்துப்பணி, சொற்பொழிவுப் பணி என்பனவற்றில் அமைதி கொள்ளாது மக்களிடையே மக்களாக இருந்து போராடி மக்களுக்கு வழிகாட்டி மக்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்தச் செய்தது. தமிழுக்காகத் தன்னை ஈந்த போராளியாகவே பேராசிரியர் பிறரால் மதிக்கப் பெறும் நிலை வந்தது.
(தொடரும்) 
இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, November 23, 2016

ஆள்வினைச் செல்வி சசிகலா நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-ஆள்வினைச்செல்வி சசிகலா - இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_aalvinaichelvi_sasikalanatarasan_ilakkuvanar_thiruvalluvan

ஆள்வினைச் செல்வி சசிகலா நடராசன்

 நட்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கூற வேண்டுமானால், கோப்பெருஞ்சோழ வேந்தரையும் புலவர் பிசிராந்தையாரையும்தான் கூறுவோம்.
உலக அளவில்,
    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 785)
என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இவர்கள்.
  தமிழுலகில் மன்னர் பாரி – புலவர் கபிலர்,  மன்னர் அதியமான் – புலவர் ஔவை எனப் பலரை நாம் நட்பிற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
  மார்க்சு – எஞ்சல்சு நட்பையும் உலகம் போற்றுகின்றது. இருப்பினும் தோழமைக்கு எடுத்துக்காட்டாகத் தமிழ் நாட்டில் கூறத்தக்க அளவில் பிற நாடுகளில்  மிகுதியானவர்கள் இல்லை என்றே கூறலாம்.
 உலக அளவில் இரு பெண்களிடையே உள்ள நட்பு இதற்கு முன்பு பாராட்டத்தக்கதாகக் கூறப்படவில்லை. ஆனால், இன்றைய முதல்வர் செயலலிதா – அவரது தோழி சசிகலா நட்பு உலக அளவில் எடுத்துக்காட்டாகக் கூறத்தக்கது; வரலாற்றில் இடம் பெற்ற நட்பு என்றே சொல்லலாம்.
  சூழ்வினைக்கேற்ற ஆள்வினைத்திறம் மிக்கவராகத் திருவாட்டி சசிகலா நடராசன் திகழ்கிறார். இயன்றன ஆற்றும் பண்பே அவரது நட்பின் பிணைப்பிற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
  நட்பு எங்கே நிலைத்திருக்கும்? மாறுபாடு கொள்ளாமல் தேவைப்படும் நேரங்களில் எல்லாம், முடிந்த பொழுதெல்லாம், உறுதுணையாய் உதவி நிற்பவர்களிடையேதான் நட்பு நிலைத்திருக்கும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.  (திருவள்ளுவர், திருக்குறள் 789)
என்கிறார் அவர். இதற்கு இலக்கணமாகத் திகழ்பவர்கள், செயலிலதாவும் சசிகலாவும் என்பதில்  ஐயமில்லை.
    தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
    தீரா இடும்பை தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 510)
என்று சொல்லி, நட்பு பூண்டபின் ஐயம் கொள்வது என்பது துன்பமே விளைவிக்கும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். கார்த்திகை 23, 2042 /  9.12.2011 இல் அப்படித் தேவையற்ற ஐயம் ஏற்பட்டு இவரை விலக்கிவைத்தார் அவர். ஆனால், இணைந்த நட்பில் பிரிவிற்கு இடமில்லை என்பதை உணர்ந்து. பங்குனி 18, 2043 / 31.03.2012 இல் மீண்டும் இணைந்து விட்டார்.
  வாழ்விலும் தாழ்விலும் ஏற்றத்திலும் இறக்கத்திலும்  சிறைமனையிலும் மருத்துவமனையிலும் என எல்லா இடங்களிலும் உடன் துணை நிற்கும் பண்புடைமையே நட்பின் இலக்கணம்தான்.
  மருந்து என்பது உட் கொள்ளும்  மருந்து மட்டுமல்ல. உடனிருந்து பேணுவதும்தான் மருந்து என்கிறார் திருவள்ளுவர். மருத்துவ அடிப்படையாக நான்கினைத் திருவள்ளுவர்,
    உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
    அப்பால் நாற்கூற்றே மருந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 950)
என விவரிக்கிறார். நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், நோய் தணிக்கும் மருந்து ஆகியவற்றுடன், நோயாளி அருகிருந்து மருத்துவர் கூறுமாறு உரிய நேரங்களில் மருந்தளித்தும் இன்சொல்  கூறி மருந்தை உட்கொள்ளச் செய்தும், நம்பிக்கையுரை நல்கியும் பிற வகைகளில் உதவியும் பணிவிடை செய்பவரையும் (உழைச்செல்வான்) திருவள்ளுவர் மருந்தில் அடக்கி யுள்ளார் எனில், அருகிருந்து கவனிப்பவரின் செயல்பாடுகள் நோயை விரைவில் போக்கும் என்பதை உணரலாம்.
  இவரைப்பற்றிக் குறைகூறும் வகையில் பல செய்திகள் வந்துள்ளன. அவற்றுள் ஒன்று இவர் மீதுள்ள பொறாமையால் இவர் சார்ந்த ‘சமுதாயத்தையும்’ குறை கூறுதல். இதனைத்தவறாமல் சிலர் செய்து வருகின்றனர். இவர் ஒன்றும் ‘சமுதாய’த் தலைவரல்லர். தன் ;சமுதாய;த்திற்குக் குறைந்த கட்டணத்தில் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் எனப் பலவற்றையும் அளித்து மக்கள் தொண்டாற்றியவரும் அல்லர். ‘சுற்றந்தழால்’ என்பது ஒவ்வொருவரின் கடமை. அதற்கேற்ப இவரது சுற்றத்தினர் அவர்களின் நண்பர்கள் எனச் சிறுவட்டம் பயன்பெற்றிருக்கிறது. எல்லாத் தலைவர்களைச் சுற்றியும் இத்தகைய பயன் வட்டம் இருக்கத்தான் செய்கின்றது.
  பொதுவாக அனைவரிடமும் இருக்கும் குறைபாட்டிற்காக இவரைமட்டும் பழிதூற்றுவது தவறல்லவா? தோழிக்குத் துணையிருப்பதற்காகப் பல்திறம் மிக்கத் தன் துணைவரின் துணையையே உதறிய ஈகியல்லவா இவர்!
  முதல்வர் செயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் இவர் குறித்து எதிர்நிலையான செய்திகள் பல உலா வருகின்றன. தோழிக்குத் திடீர் உடல்நலக்குறைவு  ஏற்பட்டதும் உடுக்கை இழந்தவன் கை போல் விரைந்து  செயலாற்றி, மருத்துவமனையில் சேர்த்து உடல் நலத்தை மீட்டு வருகிறார். ஆட்சியிலும் கட்சியிலும் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தன் ஆளுமைத்திறனால் நிரப்பியுள்ளார். இல்லையேல் அவை நிலை குலைந்துபோயிருக்கும்.
         தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
    அரும்பொருள் யாதொன்றும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 462) என்பதற்கிணங்க முதல்வர் கலந்துரையாடும் குழுவினருடன் கலந்து பேசி ஆவன செய்து வருகிறார்.
  தமிழ்நாட்டில் கட்சிகள் என்றால் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்தான் என்ற நி்லை உள்ளது. தி.மு.க.வின் முதுபெரும் தலைவராக விளங்கும், எண்ணியவாறு வினையாற்றும் கலைஞர் கருணாநிதி எதிர்முகாமில் வேறு  யாரும் இருந்திருந்தால், இந்நேரம் ஆட்சியில் அமர்ந்திருப்பார். ஆனால், அவரையே விஞ்சும் அளவிற்கு அதனை எதிர் கொண்டு கட்சியைக் காப்பாற்றி அதன் மூலம் ஆட்சியையும் நிலைப்படுத்தியுள்ளார். மிகச்சிறந்த ஆளுமைத்திறன் உடையவர்களால்தானே இவ்வாறு பணியாற்ற இயலும்!
  பா.ச.க. மறையவேண்டிய கட்சிதான். எனினும் இப்பொழுது அக்கட்சியுடன் இணக்கமுறையில் போவதாகக் குறைகூறுகின்றனர். இல்லாவிடில்  குடியரசுத்தலைவர் என்ற  பெயரில் பா.ச.க.வின் பொம்மை ஆட்சி வரவும் அல்லது கட்சி மாறிகளை உருவாக்கி ஆட்சியைச் சீர்குலைக்கவும் வாய்ப்புகள் நேரும். எனவே, தவிர்க்க  இயலா அணுகுமுறையாகும். எனவே, குறை கூறத் தேவையில்லை.
  இப்பொழுது குறை கூறுபவர்கள், வேறு யார் தலைமைக்கு நெருக்கமாக இருந்தாலும் இவ்வாறுதான் குறை கூறி யிருப்பர். அல்லது ஆட்சி பறிபோயிருந்தால் அதற்கும் காரணம் இவர்தான் என்று  சொல்லியிருப்பர்.  இவர் நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும்  வம்புக்கு இழுப்பதுபோல் செய்திகள் வெளியிட்டாலும்  அமைதி காத்து வருகிறார். பிறரைப்போல், தான்தான் அதைச்செய்தேன் அல்லது இதைச்செய்தேன் என்றோ, தான்தான் வழிகாட்டினேன் என்றோ தான் இல்லாவிட்டால் இது நடந்திருக்காது என்றோ வீண்பெருமை பேசும் செருக்கு இவரிடம் இல்லை என்பதே வியப்பாக உள்ளது. பெண்ணின் அருகே பெண் இருப்பதே இயற்கை என்பதை உணராமல் பெண்ணியத்திற்கு எதிரானவர்கள் இவர்மீது வசைபாடுவதையும் பொறுத்துக் கொள்கிறார். மருத்துவமனையில் உடனிருக்கும் நேரத்தில்கூடச் செய்தியாளர்களைக் கூட்டி அறிவிக்கும் செயல்களில்  ஈடுபடாமல் ஊடக வெளிச்சத்திலிருந்து விலகியே இருக்கின்றார்.
  இவரது பின்னணிப்பணிகள் குறித்துக் கூறப்படும் குறைகளின் அடிப்படையில் பார்க்காமல்,  செயல் திறன் அடிப்படையில் பார்த்தால் இவரது செயலாண்மை புரியும்.  இத்தகைய ஆளுமைச்சிறப்புமிக்க ஆள்வினைச் செல்வி திருவாட்டி சசிகலா நடராசன், நேரடி அரசியலுக்கும் வரவேண்டும். தோழியின் உடல்நிலை மிகவும் சீரான பின்னர், அவருக்கு அரசியலிலும்  நேரடித் துணையாக இருக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்.
ஆள்வி்னைச் செல்வியைப் பாராட்டுவதுடன் ஒரு வேண்டுகோள்!
 முதல்வரின் உடல் நலன் மருத்துவர்களே வியக்கும் வகையில முன்னேறுவதற்கு அன்பர்களின் வாழ்த்தும் வேண்டுதலும்  குறிப்பிடத்தக்கப் பங்கு வகிப்பதை அறிவார். தமிழ் ஈழ ஆதரவு நிலையால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அவர் நலன் சீராக விழைகின்றனர். ஆனால், அவரது உறவினர்கள் இங்கே, ஈழத்தமிழர்கள்/ இலங்கைத்தமிழர்கள் முகாம் என்ற பெயரிலான கொட்டடியில் துன்புற்று வருகின்றனர். அவர்களை இந்தியாவில்  திபேத்து முதலான நாட்டினர் உரிமையுடன் வாழ்வதுபோல் உரிமையுடன் வாழ வகை செய்ய வேண்டும்.
  இராசீவு கொலைவழக்கில் சிக்கவைக்கப்பட்டுத்துன்பத்தில் மடிந்து நாளும் நலியும் பேரறிவாளன் முதலானவர்களை விடுதலை செய்வதாகக்  கூறியும் இயலாச் சூழலைச் சிலர் உருவாக்கியுள்ளனர்.அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.  அதற்கு நிலுவையில் உள்ள வழக்கு  தடையாக இருக்கும் எனக்கருதினால் அனைவரையும்  கட்டுப்பாட்டு விடுப்பில்(parole)  விடுதலை செய்ய வேண்டும்.
  இவர்கள்போல், 14 ஆண்டுகளுக்குமேல் சிறையில் அல்லலுறும்  இசுலாமியர்கள் முதலான அனைவரையும்  உடனே விடுதலை செய்ய வேண்டும்.
  முதல்வரின் கவனத்திற்குக் கொணர்ந்து இத்தகையோரை விடுதலை செய்வதன் மூலம் இவர்கள்  குடும்பத்தினர் மட்டுமல்ல, உலகமே முதல்வரை வாழ்த்தும்!  தூய மனநிலையில் பிறக்கும் வாழ்த்து முதல்வரை வெகு விரைவில் இயல்பான நிலைக்குக்  கொண்டு வரும்.
  முதல்வர் புரட்சித்தலைவி செயலலிதாவின் நலனுக்காகவும் மனித நேயத்திற்காகவும் இதற்கு வழி வகுப்பார் என நம்புகிறோம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்

பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்



தலைப்பு-பணம்செல்லாமை 02 : thalaippu_panamsellaamai_02_ilakkuvanar-thiruvalluvan

பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே

பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 2/2

  சுவிசு நாட்டு வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து  72,80,000 கோடிஉரூபாய்  மதிப்பிலான தாலர் பணம்  அந்நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதது.
  இந்தியாவிலிருந்து மொரிசியசு முதலான நாடுகளுக்குக்கருப்புப்பணம் சென்று வெள்ளைப்பணமாக  மீண்டும் இந்திய  முதலீடாக மாறுகிறது என்றும் பொருளியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்
  நைசீரியா, கானா, பாக்கித்தான், சிம்பாவே, வடகொரியா, சோவியத்து ஒன்றியம், ஆத்திரேலியா, மியான்மர் முதலான பல நாடுகளும் வெவ்வேறு காலக்கட்டத்தில் தத்தம் நாட்டுப் பணத்தாள்களைச்செல்லாதனவாக ஆக்கியுள்ளன. ஆனால், எல்லா நாடுகளிலும் அதன்பின்னர் விலைவாசி உயர்ந்தது;  எதிர்பார்த்த பயன் கிட்டவில்லை.
 இந்திய விடுதலைக்கு முன்னர், 1946-ம் ஆண்டு,  பிரித்தானிய அரசு உரூ1,000, உரூ 10,000  பணத்தாள்களைத் தடைசெய்தது.  இந்தியா 1954- இல் 5,000  உரூபாய்  பணத்தாள்களை  அறிமுகப்படுத்திப் புழக்கத்தில் விடப்பட்டது. சனதா ஆட்சியில்,  தை 03, 2009 / சனவரி 16, 1978 இல்   அப்போதைய தலைமையர் மொரார்சி(தேசாய்)  அனைத்து வானொலி நிலையங்கள் வழியாக ‘அரசு சார்பில் புழக்கத்தில் விடப்பட்ட 1000, 5000 மற்றும் 10000  உரூபாய்  பணத்தாள்கள் செல்லா ‘ என அறிவித்தார்.   1970 இல் அளித்த வாஞ்சு(Wanchoo)  குழுவின் அறிக்கைக்கிணங்கவும் அப்போதைய  குடியரசுத்தலைவர் நீலம் சஞ்சீவ(ரெட்டி) ஒப்புதலுடனும் இவ்வாறு அறிவித்தார்.
 இதன் பின்னர்க் கருப்புப்பணம் பயன்பாட்டு வடிவம் மாறி பெருகியதே தவிர, குறையவில்லை.
  கருப்புப்பணம் குறித்து  மத்திய அரசு ஏறத்தாழ 40 குழுக்களை 1947 இலிலிருந்து இதுவரை அமைத்துள்ளது. எனினும் பொதுவாக எக்குழுவின் பரிந்துரையையும் முழுமையாக ஏற்றதில்லை. இக்குழுக்களிலேயே, பலர்  பணத்தாள்களைச் செல்லாது ஆக்குவதால் பயன் இல்லை என்று தெரிவித்தனர்.
  பெரு நிறுவனங்களும் நிறுவன முதலாளிகளும் முறையாக வரி கட்டினால், கூடுதலாக ஆண்டிற்கு 7.5  நூறாயிரம் கோடி உரூபாய் திரளும் என்கிறார் பொருளியல் பேராசிரியர் அருண்குமார். இத்தொகை வழக்கமாக அரசு ஆண்டிற்குப் பெறும் வரித்தொகை(உரூபாய் 6.4 நூறாயிரம் கோடி) யைவிடஅதிகம் என்கிறார்.
  இந்தியாவில் உள்ள  முதல் 100 பணக்காரர்களின் மொத்தச் சொத்து மதிப்பு 1,28,79,022 கோடி இந்திய  உரூபாய்கள். இவர்களிடம் முறையாக வரி பெற்றால் வேறு யாரிடமும் வரி பெற வேண்டா.
  ஏழைகளின் வேளாண்கடன், கல்விக்கடன், சிறுதொழில் கடன் முதலான கடன்தொகைகளைத் திரும்பப்பெறுவதற்காக வங்கிகள் மேற்கொள்ளும் அடாவடி முயற்சிகளால் பலர் இறந்துள்ளனர். அதற்கெல்லாம் அரசு மனமிரங்கவில்லை. ஆனால்,  பாரதிய அரசு வங்கி (SBI ) கருப்புப்பண முதலை  விசய் மல்லையா முதலான 63 கோடீசுவரர்களின் உரூ.7,016 கோடி கடன் தொகையைத் தள்ளுபடி செய்யும் வகையில் திரும்பிவராப் பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும் 31 கோடீசுவரர்களின் கடன்தொகையில் பாதியைத் தள்ளுபடி செய்துள்ளது. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் எத்தனைக் கோடீசுவரர்களுக்கு வாழ்வளிக்கப் போகின்றனவோ!
  வருமான வரி செலுத்திய பின்னர் வேறு வரி இல்லை என்றால் வரவேற்கலாம். ஆனால், விற்பனை வரி என்ற ஏதேனும் பெயரில் நாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசிற்கு வரி செலுத்தி வருகின்றோம்.   வருமானவரியும் மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகா அளவிலும், வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டிற்கு 12 நூறாயிரம் என்ற அளவிலும் இருந்தால், வரி ஏய்ப்பு இருக்காது. அரசிற்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
 வருமான வரி மூலம்அரசு பெறும் தொகையைவிட, அத்துறைக்கென ஊதியம், அலுவலக வாடகை, அறைகலன்கள், பணியாளருக்கான படிகள்போன்றவற்றிற்காக் செலவிடுவது மிகுதி என்கின்றனர். எனவே, வருமான வரித்துறையை மூடி விட்டுப், பணம்வழங்கும் அல்லது பெறும்  இடத்தில் குறிப்பிட்ட விகிதத்தில்  வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை அனைவர்க்கும் பின்பற்றினால் அரசிற்குக் கூடுதல் ஆதாயம் கிட்டும். வரி ஏய்ப்பும் நடைபெறாது.
  வரிவிதிப்பு முறையை வழிப்பறிக்கொள்ளைபோல் வைத்துக்கொண்டு வரி ஏய்ப்பிற்கு வாசலைத் திறக்கும் முறையை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும். அப்பொழுது கருப்புப்பணம் தானாகவே ஒழிந்துவிடும்.
 கருப்புப்பணம் உருவாகும் வாயிலை அடைக்காமல் அள்ளித்தெளித்த அவசரக் கோலமாக 500 உருபாய்த்தாள்களும் 1000 உரூபாய்த்தாள்களும் செல்லா என அறிவித்து, வங்கிகளிலும் பணப்பொறியகங்களிலும் போதிய பண இருப்பு வழங்காமல்,  மக்களை வரிசைகளில் கால்கடுக்க நிற்க வைத்தும் வங்கிகளுக்கு அலைய வைத்தும், நலியச்செய்தும்,  ஏறத்தாழ ஐம்பதின்மர் உயிர்இழந்து அவர்கள் குடும்பத்தினரை நட்டாற்றில் விடச்செய்தும்,  புகழ்பாடிகளால் மயங்கி, அருளற்று நடந்து கொள்ளும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பொறுப்புகளிலிருந்து அகற்றப்படும்  நாள் வருவதாக!
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். (திருவள்ளுவர், திருக்குறள் 640)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி:

Followers

Blog Archive