Monday, April 26, 2021

புதிய அரசு செய்ய வேண்டியன!- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




புதிய அரசு செய்ய வேண்டியன!

சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் இன்றைய சூழல் மாறாமலிருந்தால்  மே 2 இல் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆட்சி அமைக்கப் போகிறவர்கள் யார் எனத் தெரிந்து விடும். தொடர்ந்து தமிழ்நாட்டிலும் புதிய அரசு அமைந்து விடும். அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சி அமைத்தாலும் அது புதிய அரசுதான்.

எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் நோக்கர்கள், ஊடகத்தினர் கருத்துகளை எல்லாம் பொய்யாக்கித் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு ஆட்சிக்காலம் முழுவதும் பதவியில் உள்ள சிறந்த ஆளுமையாளர். பா.ச.க.வே பன்னீர் பக்கம் இருந்தாலும் அவரைச் சமாளித்துத் தன் ஆட்சிப்பாதையில் குறுக்கே வராமல் பார்த்துக் கொண்டவர். அரசியல் பண்பின் இலக்கணங்களில் ஒன்றாக ஊழலும் மாறிய பின்னர், அதன் அடிப்படையில் எடைபோடுவது சரியாகாது. பிற பண்புகளின் அடிப்படையில் பார்த்தால் அவரின் ஆட்சி வரவேற்பைப் பெற்றதாகவே அமைந்துள்ளது. அதிமுகவும் திமுகவும் ஏறத்தாழ இணையாக இருக்கும் பொழுது தன் துணையை வலிமை குன்றியதாக ஆக்கிக் கொண்டது அவருக்கு வலுவின்மையை அளித்தது.

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்

இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று

(திருவள்ளுவர், திருக்குறள் 875)

என்பதை மறந்தார். குறள்நெறிக்கிணங்கப் பகையை நட்பாகக் கொள்ள வேண்டியவர் தன்னை அண்டி வந்த தே.தி.மு.க.வை வேறோர் அரசியல் கணக்கால் புறக்கணித்து விட்டார். அதுபோல் பா.ச.க.தான் சசிகலாவையும் தினகரனையும் புறக்கணிக்கச் செய்தது. அதன் அதிகாரத் துணை இருந்தும் அதனால் வெற்றி காண முடியவில்லை. எனவே, அதுவே, தினகரனை இணைத்துக் கொள்ளச் சொல்லியும் இணைத்துக் கொள்ளவில்லை. தினகரன் தனிக் கட்சியில் இருப்பதைவிட, அதிமுகவில் இருந்தால் முதன்மைச் செல்வாக்கு பெறுவார் என்னும் உண்மையை உணர்ந்தமையால்-அதிகாரச் சுவையை அடிமைத்தளை பறித்து விடும் என்னும் அச்சத்தால்- விலக்கிவிட்டார். அவர் முதல்வரான சூழலை அனைவரும் அறிவர். அவர், தவழ்ந்து மண்டியிட்டுப் பதவி பெற்றதைத் தரணியே கண்டிருக்கும் பொழுது அது பொய்யென்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும் கூறியதை அவரது ஆதரவாளர்களே ஏற்கவில்லை. ”சாதி வேறுபாடு பார்க்காமல் தன்னை முதல்வராக ஆக்கிய சசிகலா அம்மையாருக்கு என்றும் கடமைப்பட்டவன் எனினும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் கருத்திற்குக் கட்டுப்பட்டவன்; பெரும்பான்மையர் கருத்திற்கு இணங்க அவருக்கு எதிர் நிலையில் இருக்கக் கடமைப்பட்டுள்ளேன்” என்பதுபோல் அவர்  கூறியிருந்தால் உயர்ந்திருப்பார். மாறாக எட்டப்பனாக மாறிவிட்டு, எட்டபன்களாக மாறிய அணியினரைக் கட்சியில் இணைத்துக் கொண்டு, அவரே, எட்டப்பன் என்றெல்லாம் தினகரன் அணியினரைத் தாக்குவதை யாரும் ஏற்கவில்லை. அவர் இவ்வாறு பேசும்பொழுதெல்லாம் தனக்கு / தன் கட்சிக்கு எதிரான வாக்குகளைத் தானே கேட்டுப் பெறும்  நிலையை எட்டிவிட்டார்.

தே.தி.மு.க., இந்தியக் குமுகாய மக்களாட்சிக் கட்சி(S.D.P.I.) அசதுத்தீன் ஒவைசியின் இசுலாமியர் ஒற்றுமைக்கான அனைத்து இந்திய மன்றம்(AIMIM) ஆகியவற்றுடன் இணைந்து அ.ம.மு.க. தேர்தலைச் சந்தித்துள்ளது. வெற்றிகரமான கூட்டணியை அமைத்ததன் மூலம் தினகரன் அதிமுகவிற்கு அச்சுறுத்தலை அளித்துள்ளார். தினகரன் மட்டுமல்லாமல் கூட்டணியில் ஏறத்தாழ பதின்மர் வெற்றியை அடையும் வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. வெற்றி தோல்வி எவ்வாறிருப்பினும் தேர்தல் கணிப்பில் தெரிவிக்கப்படுவதைவிட அவர் கூட்டணியினர் கூடுதல் வாக்குகளைப் பெறுவர் என்றும் எதிர்பார்க்கலாம். இதன் பின்னர்தான் தன் தவற்றினை எடப்பாடியார் உணர்வார். ஒருவேளை மாறாக அதிமுக ஆட்சியமைத்து விட்டால் அவரைச் சிறந்த அரசியல் வித்தகராகக் கருதலாம்.

சரிபாதித் தொகுதிகளில் பெண்களைப் போட்டியிடச் செய்தும் இலவச அறிவிப்புகளுக்கு இடம் தராமலும் மக்களிடம் எழுச்சி ஏற்படும் வகையில் பரப்புரை மேற்கொண்டாலும் நாம் தமிழர் கட்சியின் நிலை என்ன என்பதைச் சீமானே அறிவார். கமலின் மையத்திற்கும் ஆட்சியில் மையம் கொள்ளும் அளவிற்கு வெற்றி கிட்டாது என்பதை அவரே அறிவார். இருப்பினும் இவர்கள் பெறும் வாக்குகள் இவர்களைப் பொறுத்தவரை வெற்றிக் கனிகளே. அந்த அளவில் மகிழ்ச்சி கொண்டு அடுத்த ஆட்சிக் கனவைக் காணலாம்.

நேர்மையை இலக்காகக் கொண்டு சகாயம் அரசியல் பேரவை 15 விழுக்காட்டுத் தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. (சகாயம் அரசியல் பேரவை 20, தமிழ்நாடு இளைஞர் கட்சி 15, வளமான தமிழகம் கட்சி 01). ஊடக விளம்பரத்தில் மயங்கி, மக்கள்மனத்தைப் புரிந்து கொள்ளாமல் சகாயம் (இ.ஆ.ப.) தேர்தலில் தான் போட்டியிடாவிட்டாலும் கூட்டணி மூலம் பங்கேற்றுள்ளார். வாக்குகள் வந்த வரை ஆதாயம் என்றும் மக்கள் மனத்தைப் புரிந்து கொண்டு அடுத்த செயல் முறைகளை வகுக்கலாம் என்றும் எண்ணிப் போட்டியிட்டிருக்கலாம். எனினும் பா.ச.க.வை இறுதியில் இருந்து முன்னேற்றத்தான் இவர் உதவியிருப்பார்.

மு.க.தாலின் கூட்டணி அமைப்பதிலேயே வெற்றிக்கான பல படிகளைத் தாண்டி விட்டார். எனவேதான், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் என்கின்றன. கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி வாக்குகளைப் பிரித்திருக்காவிட்டால் தி.மு.க.தான் ஆட்சியில் அமர்ந்திருக்கும். இருப்பினும் இதனை அடிப்படையாகக் கொண்டு தி.மு.க.வை மிரட்டிக் கூடுதல் தொகுதிகள் கேட்கக் கூட்டணிக் கட்சிகளுக்கு இயலவில்லை. அவர்களுக்குத் தெரியும்; இதனால் தி.மு.க. தோற்கலாம். ஆனால், தாங்கள் ஓரிடம்கூடப் பெறமுடியாது என்பதை உணர்ந்திருந்தார்கள். எனவே, தி.மு.க.கூட்டணியில் கரைவதை விட அவர்களுக்கு வேறு வழியில்லை. இதனைத் தெளிவாக அறிந்து தொகுதிப் பேரங்களை நடத்தியதால் தி.மு.க. வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டது. தி.மு.க போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்து இந்த முறை (173+14=) 187 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ களமிறங்கியுள்ளது.

வெற்றியை எதிர்பார்க்கும் கட்சியின் தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் செய்ய வேண்டுவன குறித்துத் திட்டமிட்டுப் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். எனினும் நாமும் சிலவற்றை அவர்களுக்குக் கூறுவோம்.

  1. இராசீவு கொலை வழக்கில் சிக்கித் தண்டனைக்காலத்திற்கும் மிகுதியாகச் சிறையில் அல்லலுறும் எழுவரையும் உடனே விடுதலை செய்திட வேண்டும். காலத்தாழ்ச்சி ஏற்படும் எனக் கருதினால் அவர்களை உடனடியாகக் காப்பு விடுப்பில் விட வேண்டும். 14 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டகாலமாகச் சிறையில் இருக்கும் அனைவரையும், இசுலாமியரா அல்லரா என்று வேறபாடு பார்க்காமல் விடுதலை செய்ய வேண்டும். அல்லது காலத்தாழ்ச்சி ஏற்படுமெனில் பிணைக்காப்பில் விட வேண்டும். இதனால் நெடுங்காலம் சிறையில் இருக்கும் இசுலாமியர்களுக்கும் நீதி கிடைக்கும்.

 

  1. அனைவருக்கும் அனைத்து நிலையிலும் கட்டணமில்லாக் கல்வி வழங்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணமில்லாக் கல்வி வழங்குவதாக இருந்தால் மட்டுமே அவற்றை நடத்துவதற்கு இசைவு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசே எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவரை நன்கொடை பெற்ற தனியார் கல்வி நிறுவனங்கள் நன்கொடையாளர்களை இணைத்துக் கூட்டுறவு முறையில் அவற்றை நடத்த வேண்டும். இவை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி முதலான தொழிற் கல்விகளுக்கும் பொருந்தும்.

 

  1. மழலை நிலையிலிருந்து ஆய்வு நிலை வரையும், தொழிற் கல்விகளும் தமிழ் வழியே நடத்தப்பெற வேண்டும். இதுவரை ஆங்கில வழியில் பயின்றவர்கள் இனித் தமிழ் வழியில் பயிலும் வண்ணம் தனித்தனிப் பாடத்திட்டம் வகுக்க வேண்டும். ஆங்கில மொழிக்கல்வி ஆறாம் வகுப்பில் இருந்து கற்பிக்கப்பட்டால் போதும். 9,10 ஆம் வகுப்புகளில் பிற தென்னிந்திய மொழிகள் விரும்புவோர் படிக்க வாய்ப்பு தரப்படவேண்டும். மேனிலைக்கல்வியில் பிற அயல்மொழிகள் கற்பிக்க வாய்ப்பு தர வேண்டும். பிற மொழியினர் தங்கள் தாய்மொழிக்கான சான்று அளித்தால் மட்டும் அவர்கள் அந்தந்த மொழிகளைத் தொடக்கக்கல்வியில் கற்க வாய்ப்பு தரலாம்.

 

  1. அனைவருக்கும் சிறந்த மருத்துவ வசதி இலவயமாக வழங்கப்பெற வேண்டும். ஒவ்வொரு தொடக்க நல்வாழ்வு மையமும் அனைத்து ஆய்வு வசதிகளும் போதிய மருந்துகளும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் உள்ள சிறந்த மருத்துவ மையமாகச் செயல்பட வேண்டும். தனியார் மருத்துவ மனைகளில் கட்டணங்கள் மிகக் குறைந்த அளவில் இருக்க வேண்டும். மாவட்டங்கள்தோறும் தமிழ் மருத்துவ மனைகள் இணைந்த தமிழ் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும்.

 

  1. காய்கனிகளையும் மளிகைப் பொருள்களையும் தரமானதாகவும் குறைந்த விலையிலும் மக்களுக்கு வழங்க வேண்டும்..

 

  1. உணவு அட்டை, ஆதார அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். வாக்குரிமை உள்ள அனைவருக்கும் வாக்காளர் அட்டை வழங்கப்பெற வேண்டும். வாக்களர் வீடு மாறினால் பெயர் நீக்கப்படக் கூடாது. புதிய முகவரியை அறிந்து அப்பகுதிக்கு மாற்றப்பட வேண்டும். வேலை, தொழில் தொடர்பாகக் குடியேறியுள்ள பிற மாநிலத்தவர்க்குத் தனி அடையாள அட்டைகள் வழங்கப்பெற வேண்டும்.

 

  1. ஆளும் பொறுப்பேற்கும் கட்சி, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை 3 மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.

 

  1. பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசக்கல்வியுடன் புத்தகங்கள், சீருடைகள், தேவைக்கேற்பக் கணிப்பொறி முதலானவை கட்டணமின்றி வழங்கப் பெற வேண்டும். கல்லூரி மாணாக்கர்களுக்கான விடுதிகள் தரமானதாகவும் கட்டணமின்றியும் இருக்க வேண்டும்.

 

  1. தொழிலாளிகள், சிறு வணிகர்கள் முதலான வருவாய் குறைந்த நிலை உள்ளவர்களுக்கு விலையில்லா வீடுகள் வழங்கப்பெற வேண்டும். பிறருக்கு அவர்களின் வருவாய் வசதிக்கேற்ற வீடுகள் குறைந்த விலையில் வழங்கப்பெற வேண்டும்.

 

  1. இலங்கைத் தமிழர்கள் திபேத்தியர்கள்போல் உரிய வசதி வாய்ப்புகள் உரிமைகளுடன் வாழ வகை செய்ய வேண்டும்.

 

  1. அரசுத் தளங்களின் இணையப் பயன்பாடு சரியாகச் செயல்படுமாறு இருக்க வேண்டும். ஏறத்தாழ எல்லா இணையத் தளங்களிலும் மக்கள் சரியான விவரங்களைப் பெற இயலாது. ஊழலைக் குறைக்கத்தான் இணையப் பயன்பாடு உதவும். ஆனால், வருவாய்த்துறையில் சான்றிதழ்கள் பெற வேண்டுமானால் தொடக்க நிலையில் சிற்றூர் ஆட்சி அலுவலர் இணையத்தில் விவரங்களை ஏற்றுகிறார். அதன் பின்னர் நாம் தரும் விண்ணப்பங்களை எடுத்துக் கொண்டு வருவாய் ஆய்வர், வட்டாட்சியகம் என்று அலைந்து அங்கங்கே கப்பம் கட்ட வேண்டும். இறுதியில் பெருங்கப்பம் கட்டிய பின்னரே சான்றிதழ் கிடைக்கும். இணையம் இருக்கும் பொழுது மக்கள் ஏன் அலைய வேண்டும். கைகளில் ஏன் விண்ணப்பம் தேவை? அடுத்தடுத்த நிலைகளில் இணைய வழியாகவே சரிபார்த்து உரிய சான்றிதழ்களை இணையம் வழியாகவே பெறச் செய்யலாமே!

 

  1. கையூட்டிற்கு எதிரான அறிவிப்பு இல்லாத அரசு அலுவலகம் கிடையாது. அதே போல் கையூட்டு இல்லாத அலுவலகமும் கிடையாது. இந்த நிலையைப் போக்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளுக்கு இடையூறு தரும் போக்கும் ஊழல் அதிகாரிகள் உயர்த்தப்படும் போக்கும் நிறுத்தப்பட வேண்டும்.

 

  1. அறிவியல் தமிழ் மன்றம்’ தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்டது – கலைஞர் மு.கருணாநிதியால் உருவாக்கப்பட்டது – என்பதாலேயே அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டது. உடனடியாக அதற்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். தமிழ் அமைப்பு எதுவாயினும் உண்மைத் தமிழ்ப்பற்று மிக்க தமிழறிஞர்களையே பொறுப்பில் அமர்த்த வேண்டும். வேண்டியவர் என்தற்காகவோ வேறு ஒன்றில் சிறந்தவர் என்பதற்காகவோ பொறுப்பு வழங்கிச் செயல்பாட்டைக் குலைக்கக் கூடாது.

 

  1. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் பதவி வழியில் முதல்வர். ஆனால், முத்தமிழறிஞர் மு.கருணாநிதியின் பெரு முயற்சியால் நிறுவப்பட்டது என்பதால் அ.தி.மு.க. ஆட்சியில் இவ்வமைப்பு புறக்கணிக்கப்படுகிறது. “கருணாநிதி நட்ட செடிக்கு நான் தண்ணீர் ஊற்றுவதா?” என்பதுபோல் பேசப்பட்டு இவ்வமைப்பு புறக்கணிக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசின் மூலம் பெறவேண்டிய நிதிஉதவிகளைப் பெற்று ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றுவதில் தடை ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சி மாறினாலும் அரசு நிலையானது என்பதைக் கருத வேண்டும். எனவே, ஆட்சி மாறினாலும் தமிழ் நலத் திட்டங்களும் பிற நலத் திட்டங்களும் தங்கு தடையின்றித் தொடர வேண்டியது ஆள்வோரின் இன்றியமையாக் கடமை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும். புதிய முதல்வர் இதன் தலைவராகச்சிறப்பாகச் செயல்பட்டு இந்நிறுவனத்தை உயர்த்த வேண்டும்.

 

  1. தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்கம் தொய்வுற்ற நிலையில் உள்ளது. விருது விழாக்களைச் சிறப்பாக நடத்தும் தமிழ்வளர்ச்சித் துறை ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் பின்தங்கியே உள்ளது. எனவே, தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தைச் சிறப்புற மேற்கொள்ள வேண்டும். “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என வீர முழக்கம் முழங்குவதில் மன நிறைவு கொள்ளாது உண்மையிலேயே ‘எங்கும் தமிழ்! என்றும் தமிழ்!” என்னும் நிலையை உருவாக்க வேண்டும்.

 மக்கள் குறைகளை விரைந்து போக்கும் மக்களின் நலத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் மக்கள் நல அரசாகத் திகழ வேண்டும்! மேற்குறித்தவற்றுடன், அவ்வப்போது ஆன்றோர்களும் அறிஞர்களும் ஊடகத்தினரும் தரும் அறிவுரைகளைப் பின்பற்றிச் சிறப்பாகச் செயல்பட்டால் பொற்காலத்தை உருவாக்கலாமே!

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும். 

 (திருவள்ளுவர், திருக்குறள் ௩௱௮௰௮ – 388)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை அகரமுதல சித்திரை 14, 2052 / 27.04.2021

 




Friday, February 5, 2021

சமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்?- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




சமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்?

வரும் மாசி 02, 2052 / 14.02.2021 அன்று ‘சமற்கிருதம் செம்மொழி அல்ல’ என்னும் இணையவழி உரையரங்கம் நடக்க இருப்பதற்கான அழைப்பிதழைப் பார்த்ததும் எதிர்க்குரல் வரும் என எதிர்பார்த்தவர்களிடமிருந்து எதிர்ப்புக்குரல் வெறுப்பாக வந்துள்ளது. அதே நேரம் மிகுந்த வரவேற்பும் உள்ளது. ஒருவர், “சமற்கிருதம் மொழியே அல்ல, அதனைச் செம்மொழி அல்ல எனச் சொல்ல வேண்டிய தேவையே இல்லையே” என்றார். இரு தரப்பாருக்கும் நன்றி.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(திருவள்ளுவர், திருக்குறள் 423)

 என்பதையும்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

(திருவள்ளுவர், திருக்குறள் 355)

என்பதையும் அறிந்தவர்கள், உரையாளர்கள் கருத்துகளைக் கேட்கும் முன்னரே தலைப்பைக் கண்டு அலறுவானேன்!

உரையரங்கத்தில் வினா விடை அரங்கம் உள்ளபொழுது அதில் தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். அதற்கான வாய்ப்பு இருக்கும் பொழுது சமற்கிருதம் பற்றிய உண்மை வெளியே வரும் என உள்ளம் குமைவது ஏன்? என்றுதான் புரியவில்லை.

உரையங்கத்தில் பங்கேற்போர் சமற்கிருத நூல்களைப் படித்தவர்களே! ஆனால், எதிர்ப்பவர்கள், சமற்கிருத நூல்கள்பற்றிய தவறான பொய்யான உயர்வுச் செய்திகளைப் படித்து விட்டு அதனடிப்படையில் எழுதுகிறார்கள். சிலர் சமற்கிருத வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுகிறது என்பதாலும் பேசுகிறார்கள். “கிணற்றுத் தவளைகளுக்கு வடமொழியின் மேம்பாடு தெரியாது” எனக் கூறுபவர்கள்தாம் சமற்கிருதத்தின் இயல்பு அறியாக் கிணற்றுத் தவளைகளாக உள்ளனர்.

இந்நிகழ்ச்சியின் காரணம் “வடமொழி வெறுப்பு என்பதும் அறிவீன உரை” என்பதும் தவறு.

பிராமணர் உட்பட எச்சாதியினரையும் அந்தணர் என அழைப்பது தவறு.  எச்சாதியாய் இருந்தாலும் அறவோரே அந்தணர் ஆவார். எனவே மடலாடல் ஒன்றில் ஒருவர் அவ்வாறு குறிப்பது தவறு. ஆதலின் அந்தணர் வெறுப்பு இது என அவர் குறிப்பிட்டுள்ளதும் தவறு. பிராமணரைத்தான் அவ்வாறு அவர் குறிப்பிடுகிறார். இது பிராமண வெறுப்பல்ல. நாங்கள் வாழ்ந்த திருநகரில்(மதுரையில்) பக்கத்து வீடுகளில் எதிர் வீடுகளில் பின் வீடுகளில் எனச் சுற்றிலும் பிராமண நண்பர்களே இருந்தார்கள். யாருடனும் வெறுப்பு காட்டியதில்லை. நான் தலைவராக இருந்து நடத்திய இறைநெறி மன்றத்தில் பெரும்பாலும் பிராமண நண்பர்களே செயலர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் முதலான பொறுப்பார்களாக இருந்தார்கள். எனவே, கருத்து கூற வழியின்றித் திசை திருப்ப முயல்வதுதான் அறிவீனம்.

வடமொழிக் கருத்துகள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும் என்கிறார் ஒருவர். சமற்கிருத நூல்கள் இழிகாமம்(ஆபாசம்), ஒழுக்கக்கேடு, அறக்கேடு நிறைந்தன என ஆய்வறிஞர்கள் தெரிவிக்கின்றனர்  அத்தகைய கருத்துகள் தமிழில் எழுதப்பட வேண்டிய தேவை இல்லை. “இயற்கை நெறிப்பட்ட ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே நிகழும் உறவை மட்டுமே தமிழர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் குதிரையுடன் உடலுறவு கொள்வதும் அவ்வாறு அரசிகள் உறவு கொண்டு பிள்ளைகள் பெற்றதுமான செய்திகளை ஆரிய வேதங்கள் கூறுகின்றன. இராமன் முதலானோரும் இவ்வாறு பிறந்ததாகத்தான் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. ஆடுகளுடனும், காளை மாடுகளுடனும் உடல் உறவு கொள்வதை இரிக்கு வேதம் கூறுகிறது. உடன் பிறந்தவர்களுக்குள் – அண்ணன் & தங்கை அல்லது அக்கா & தம்பியர்களுக்குள் – உடல் உறவு கொள்ளும் ஒழுக்கக் கேட்டை இரிக்கு வேதம் பரிந்துரைக்கிறது. தந்தை தன் மகளுடன் உறவு கொண்டதை அதர்வ வேதம் கூறுகிறது.”

“கிருட்டிணன் அர்ச்சுனனின் மனைவியாகிய தன் தங்கை சுபத்திராவுடன் உறவு கொண்டதையும், அவளின் மருமகள் -அபிமன்யுவின் மனைவி – இராதையுடன் குடும்பம் நடத்தியதையும் ஆரியப் புராணங்கள் கூறுகின்றன. மற்றோர் கதைப்படி கருணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதன் மனைவியே இராதா. கிருட்டிணனுக்கு அத்தை முறை. இப்படிப் பார்த்தாலும் கிருட்டிணன், தன் அத்தை இராதாவுடன் உடலுறவு கொண்டு வாழ்ந்துள்ளான்.” இவையெல்லாம் தமிழில் எதற்குத் தேவை?

அப்படி என்றால் வேதங்களையும் நான்மறைகளையும் தமிழ் இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறுகின்றனவே என எண்ணுகிறீர்களா? சிறப்பிற்குரியனயாவும் தமிழ் நூல்களே! 

 தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடும் நான்மறைகள் ஆரிய மறைகள் அல்ல. தமிழ் மறைகளே! உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர், நான் மறை என்பதற்கு “இருக்கும் யசுரும் சமமும் அதர்வணமும் என்பாரு முளர், இது – பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாகச் செய்தார் ஆகலின்” என்று எழுதும் உரை மிகவும் தெளிவாக இதனை உணர்த்துகிறது.

மேலும் அவரே, “அதர்வம், வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின்” என நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை யியல், நூற்பா சு0, உரை) கூறியுள்ளமை ஆரிய வேதங்களைத் தமிழர்கள் ஏற்கவில்லை என்பதை உணர்த்தும்.

திருஞானசம்பந்தருக்குப் பூணூல் சடங்கு செய்த பொழுது பிராமணர்கள் ஆரிய வேதம் ஓதியதற்கு எதிராக நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர்” எண்ணிறந்த தமிழ்ப் புனித வேதம் ஓதியதாகச் சேக்கிழார் கூறுகிறார் (பெரியபுராணம் பாடல் சுபு67).

பிராகிருத நூற்கருத்துகளைத் திருடி அவற்றைச் சமற்கிருத நூல்களாக்கிச் சமற்கிருதத்தை உயர்த்தியும் பிராகிருதத்தைத் தாழ்த்தியும் கூறியதால், பிராகிருத மொழியினர் சமற்கிருதத்தை வெறுப்பு நோக்கில் பார்க்கின்றனர் என்ற ஆய்வில் எடுத்துக்காட்டான கவிதையே அழைப்பிதழில் குறிக்கப்பட்டுள்ளது.  இதைக் குறிப்பிட்டுள்ளதன் காரணம் பரிதிமாற் கலைஞர் முதலான அறிஞர்கள் தமிழ் நூற்கருத்துகளைக் களவாடி அழித்துச் சமற்கிருத நூல்கள் எழுதப்பட்டதாகக் கூறியுள்ளார்கள் அல்லவா?  அதுபோல் பிராகிருத மொழி நூற் கருத்துகளையும் களவாடி அழித்துள்ளர் என்பதை உணர்த்தத்தான். நாம் திருடியவர்களையும் திருட்டுப் படைப்புகளையும் உயர்வாகக் கருதும் அறியாமை போலின்றிப் பிராகிருத மொழியினர் திருட்டு நூலார் மீது சினம் கொண்டுள்ளனர் என்பதை அறியச்செய்யத்தான் அப்பாடலைக் குறிப்பிட்டிருந்தேன்.

“எல்லா மொழிக்கும் முந்தையது”, “சமற்கிருதம் படித்துத் தமிழ்க் காவியம் படைத்தனர்”, “சமற்கிருதம் பேரளவான சொல்வளமும, இலக்கிய இலக்கியவளமும கொண்ட  செம்மொழி” என்பன போன்று மடலாடலில் இடம் பெற்ற செய்திகள் தவறு என்பதை உணர்த்தத்தான் இவ்வுரையரங்கம்.

அதே நேரம், சமற்கிருத மொழியைப் படிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. விரும்புநரும், ஒப்பிலக்கிய ஆய்வாளர்களும் திறனாய்வாளர்களும் இலக்கிய அன்பர்களும் படிக்கட்டும். அதைத் தடுக்கவில்லை. பெரும்பாலான நூல்களில் செவ்வியல் தன்மை இல்லை என்பதை உணர்ந்து படிக்க வேண்டும். அவ்வளவுதான். அதே நேரம் பிற மொழியாளர்களின் செல்வத்தில் அவரவர் மொழியை வளர்க்காமல் சமற்கிருதத்திற்குச் செலவிடுவதும் அதனைத் திணிப்பதும் குற்றமாகும். என்றாலும் உரையரங்கத்தின் நோக்கம் அதனைக் கூறுவதல்ல. சமற்கிருமொழியில் உள்ள நூல்கள் செவ்வியல் தன்மையற்று உள்ளன என்பதையும் அம்மொழி செம்மொழியல்ல என்பதையும் பகிர்ந்து கொள்ளத்தான்.  

நான் 1996 இல் பேரளவிலான சமற்கிருத அகராதி ஒன்றை வாங்கி அவ்வப்பொழுது சொற்பொருள்களைப் பார்த்து வந்தேன். 2003(?) இல் சமற்கிருத உரையாடல் வகுப்பில் பயின்றேன். அவ்வப்பொழுது சமற்கிருத நூல்களின் மொழிபெயர்ப்புகளையும் சமற்கிருத நூல்கள் குறித்த கட்டுரைகளையும் படித்து வந்தேன். இவற்றால் சமற்கிருதம் பற்றிய மறைக்கப்படும் உண்மைகள் உணரத் தொடங்கின. செம்மொழி ஏற்பில்லாமலே செம்மொழி எனச் சமற்கிருதத்திற்கு உதவியது அறிந்த பின்னர், அம்மொழியின் செம்மொழித் தன்மைகளைப் படிக்கத் தொடங்கினேன். எல்லாமே பொய்யாயும் புனைந்துரையாயும் இருந்தன. எனவே, சமற்கிருதம் செம்மொழி அல்ல என எழுதுவதற்கான குறிப்புகளைத் திரட்டிக் கட்டுரை எழுதி வந்தேன். முகநூல் குறிப்பு ஒன்றில் சமற்கிரும் செம்மொழி அல்ல என்றும் இது குறித்து நான் எழுதி வருவதாகவும் குறிப்பிட்டேன. இதில் பேரா. ஒருவர், “எழுதுங்கள் படிக்கிறேன். எனினும் நான் அதற்கு உடன்படவில்லை” என்று குறிப்பிட்டார். உடன்படாவிட்டாலும் படிப்பதாகக் கூறிய அவரின் நடுவுநிலைமை உணர்வு பாராட்டும்படி இருந்தது .இன்று அவரே என்ன சொல்ல வருகிறோம் என்பதை அறியும் முன்னரே எதிர்க்கும் நடுவுநிலையற்ற போக்கைக் கடைப்பிடி ப்பது வியப்பாக உள்ளது.

நான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே மலையாளம் பயின்றவன். மலையாள மொழி வெறுப்பாளன் அல்லன். அதே நேரம் மலையாளத்திற்குச் செம்மொழித்தகுதி வழங்க இருந்த பொழுது “மலையாளம் செம்மொழியல்ல” என்று மாலைமுரசு நாளிதழில் செவ்வி அளித்திருந்தேன்.  இது குறித்துக் கட்டுரை எழுதிப் பலவகையிலும் பரப்பினேன்.

கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் மொழி என்பதால் ஒரு மொழியை வெறுக்கத் தேவையில்லை. கற்க வாய்ப்பிருந்தால் அதிலுள்ள நல்லனவற்றை அறியலாம். பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை அழித்து வரும் சிங்கள அரசு மீது கடுஞ்சினம் உள்ளது. அதனால் சிங்கள மொழியை வெறுக்கவில்லை. சிங்கள மொழியையும் படித்தேன். ‘தமிழும் சிங்களமும்’ என ஒரு கட்டுரையும் எழுதி உள்ளேன்.

இவைபோலச் ்சமற்கிருத மொழி மீது வெறுப்பு கிடையாது. அதேநேரம் நாம் படித்து அறிந்த உண்மைகளப் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது இதழாளன் என்ற முறையிலும் மொழி ஆர்வலன் என்ற முறையிலும் என் கடமையாகக் கருதி இந்த உரையரங்கத்தை நடத்துகின்றேன்.  எனவே மொழி வெறுப்பு வண்ணம் பூச வேண்டா.

சமற்கிருத வெறுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டதெனில், சமற்கிருத ஆரவலர்களைப் பங்கேற்க அழைத்திருக்க மாட்டோம். அறிந்த உண்மையைப் பிறர் அறியச் செய்யும் ஆய்வு நோக்கே இவ்வுரையரங்கத்தின் அடிப்படை நோக்கம்.

உரையரங்கத்தைக் கேட்காமலேயே இப்படித்தான் பேசுவார்கள் என ஊகித்து எதையும் எழுத வேண்டா.  பங்கு கொண்டு ஐயங்கள் இருப்பின் அங்கே கேளுங்கள். அல்லது அதற்கான கால வாய்ப்பு இல்லை யெனில், வினாக்களை எழுதி அனுப்புங்கள். தக்க மறுமொழியை அளிக்கிறோம். அல்லது இவ்வுரைகள் கட்டுரை வடிவில் அகரமுதல மின்னிதழில் வெளி வரும். அவற்றைப் படித்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். பின்னர் இவை காணுரையாகவும் வெளிவரும். அப்பொழுதும் கேட்டு ஐயம் தீராவிட்டால் வினாக்களைத் தொடுக்கலாம். எனவே, தமிழுக்கு எதிராகச் சொல்வனவற்றைக் கருத்துரிமையாகக் கருதுநர்கள், நடுநிலை ஆய்வுரைகளையும் கருத்துரிமைகளாக ஏற்க வேண்டுகிறேன்.

மடலாடல் குழுக்களில் கருத்து தெரிவித்தவர்கள் யாவரும் என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்களே எனவே, அவரவர் பெயரைக் குறிப்பிட்டுத்தனித்தனியே மறுமொழி விடுத்துக் குழாயடிச் சண்டையாக மாற்றாமல் பொதுவில் எழுதியுள்ளேன்.

இந்நிகழ்ச்சி நடைபெறுவது உலக மொழியார்வலர்களுக்குப் பெருமையே! பெருமையே! பெருமையே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரைஅகரமுதல

 





Saturday, January 30, 2021

முதல்வர் திறமையானவர் என்பதால் வந்த பாதையை மறுக்கலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




முதல்வர் திறமையானவர் என்பதால் வந்த பாதையை மறுக்கலாமா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிநிலைப்பாடு குறித்து ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர், ஊடகத்தினர், பொதுமக்கள், ஊகச் செய்தியாளர்கள் எனப் பல தரப்பாரும் எண்ணியதற்கும் சொல்லியதற்கும் மாறாக ஆட்சித் தேரைத் தொடர்ந்து செலுத்திக் கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகளைக் கடந்து விட்டுத் தேர்தல் காலத்தை நெருங்கிவிட்டார். மத்தியப்பிடியில் சிக்கியும் சிக்காமலும் நழுவியும் நழுவாமலும் வினைத்திறனுடன் செயல்பட்டு வருகிறார். பாராட்டிற்குரிய பல பணிகளை ஆற்றி வருகிறார்.

“எதிர்க்கட்சித் தலைவர் தாலின், தான் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று கூறி வருகிறார். நான் மக்களால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவன். என்னை முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் தேர்வு செய்தார்கள்” எனப் பொதுக்கூட்டங்களில் முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி கூறிவருகிறார். கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகள் வகித்தவர், இப்பொழுதும் முதல்வராகவும் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள ஒருவர் இவ்வாறு கூறுவது அறியாமையாகக் கருத முடியாது. அவ்வாறிருக்க இவ்வாறு கூறுகிறார் என்றால் என்னென்பது? சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரைத் தேர்வு செய்வது என்பது வெளியே காட்டப்படும் நடைமுறை. உண்மையில் கட்சித்தலைமை அடையாளம் காட்டப்படுபவரைத்தான் அங்ஙனம் தேர்ந்தெடுத்ததாக அரங்கேற்றுவதே உள்ளார்ந்த செயல்பாடு. முதல்வர் மட்டுமல்ல, தலைமையமைச்சர், குடியரசுத்தலைவர் முதலான ஆட்சிப்பொறுப்பில் உள்ள தெரிவுமுறையெல்லாம் கட்சித்தலைமையின் விருப்பத்திற்கிணங்க நடத்தப்படும் நாடகங்கள்தான் என்பதை அரசியலில் அரிச்சுவடி அறிந்தவர்களும் அறிவார்கள். உள்ளாட்சி உறுப்பினர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வரை அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கட்சித்தலைமை வாய்ப்பு அளிப்பதால்தான் இந்த வாய்ப்பை அவர்கள் பெறுகிறார்கள்.

கட்சிச்சார்பின்றிப் போட்டியிடுபவர்கள்தாம் தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பெருமை பேசலாம். பிறர் யாருமே கட்சியால் அடையாளங் காட்டப்படுவதால்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாக மாறுகிறார்கள். எனவேதான் அவர்கள் வெற்றி பெற்றதும் அதிகாரத் தலைமைக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். முன்பு குடியரசுத் தலைவாகத் தேரந்தெடுக்கப்பட்ட கியானிசெயில்(சிங்கு)வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும் கட்சித்தலைவியான இந்திராகாந்தி நடந்தபாதையை மகிழ்ச்சியுடன் துப்புரவு செய்வேன் என்றார்(1982). அவர் குடியரசுத்த்லைவரானதும் இந்திராகாந்தி சீருந்தில் இருந்து இறங்கியபொழுது கதவைத் திறந்துவிட்டார். அவர் சடடமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில் 72விழுக்காடு பெற்று வெற்றி பெற்றவர். ஆனால், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இறுமாப்புகொள்ளாமல் தன்னைத் தெரிவுசெய்த கட்சித்தலைவி இந்திராகாந்தியால்தான் குடியரசுத்தலைவர் ஆனதை உணர்ந்து அவருக்கு (அளவு கடந்த) நன்றியுடன் நடந்து கொண்டார்

இதேபோல் மத்தியப்பிரதேசத் தொழில் அமைச்சர் கைலாசு விசயவர்கியா(Kailash Vijayvargia) பாசக தலைமை தனக்கு வாய்ப்பு தந்தமைக்காக எனக்குக் கட்டளையிட்டால் கட்சி அலுவலகத்தைத் துப்புரவும் செய்வேன் என்றார்(2013). இவ்வாறு பற்பலரைச் சான்றாகக் கூறலாம். தமிழ்நாட்டிலும் அமைச்சர்களாகவும் பேரவைத் தலைவர்களாகவும் வாய்ப்பு பெற்றவர்களும் நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுவதும் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதும் அனைவரும் அறிந்ததே. இத்தகைய வாய்ப்பு பெறாதவர்களும் தங்கள் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். பாசகவின் சதி அரங்கேறாமல் சசிகலா சிறைக்குச் செல்லாமல் இருந்திருந்தால் அவரின் அடிமையாக் காட்டிக்கொள்வதில் போட்டி போட்டிருப்பார்கள். விடுதலை யான அவர் தமிழகம் திரும்பியதும்  இப்படிப்பட்டக காட்சிகள் அரங்கேறவும் வாய்ப்பு உள்ளது.

மக்கள் ஆட்சி என்ற பெயரில் கட்சி ஆட்சிதான் நடைபெறுகிறது. கட்சி ஆட்சி என்றால் ஒரு சிலரின் வல்லாண்மைக்கு உட்பட்டதுதான். கட்சித்தலைமையின் விருப்பத்திற்கு உரியவர்கள் வாய்ப்புகளைப் பெற்றுத் தேர்தல் முறையில் வெற்றி பெறுகிறார்கள்; ஆட்சிப் பொறுப்புகளில் அமர்த்தப்படுகிறார்கள். இவற்றை எல்லாம் கூறுவதன் காரணம் ச.ம.உ(எம்.எல்.ஏ)க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக உதடு சொன்னாலும் சொல்பவர் உள்ளத்திற்கு உண்மை தெரியும் என்பதால்தான். சசிகலா நினைத்திருந்தால் செங்கோட்டையனுக்கோ சட்ட மன்ற உறுப்பினராக இல்லாத தம்பிதுரைக்கோ வேறு யாருக்கோ முதல்வர் பதவி தந்திருக்கலாம்.  சாதி அடிப்படையிலும் யாருக்கேனும் முதல்வர் பதவி தந்திருக்கலாம். எனவே, சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டு அ.தி.மு.க.சட்டமன்றக் குழுவால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முறைப்படி முதல்வரானவர், சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் எனக் கூறுவது மனமறிந்த பொய்யே! சட்டமன்ற உறுப்பினர்களின் செல்வாக்கு அவருக்கு இருந்தது என்றால் கூவத்தூருக்கு ஏன் தேவை ஏற்பட்டது. அவர்களைக் கூட்டி நேரடியாக முதல்வராக ஆகியிருக்க வேண்டியதுதானே!

அதேநேரம் எடப்பாடியாருக்கு இந்த உண்மையின் அடிப்படையில் நன்றி உணர்வு இருப்பதால்தான் பிற அமைச்சர்கள் சசிகலாவிற்கு எதிராக வன்மையாகக் கருத்து தெரிவித்தாலும்  அவரைத் தாக்கி இவர் எதுவும் பேசவில்லை. அப்படிப்பட்டவர் உண்மையைச் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் பொய்யாக முதல்வரானதன் காரணம் ச.ம.உ.(எம்.எல்.ஏ)க்கள் என்பது சரியல்ல.

ஒருவேளை, “சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துகளைக் கேட்டபொழுது பெரும்பான்மையர் என்னை விரும்பினார்கள், எனவே என்னைப் பரிந்துரைத்தார்” என்றுகூடச் சொல்லலாம். அப்படியானாலும் பெரும்பான்மையர் விருப்பத்தை ஏற்று நடுவுநிலைமையுடன் செயல்பட்டார் அல்லவா? இதை அற்ப உதவியாகக் கருதலாம். ஆனால்,

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

(திருவள்ளுவர், திருக்குறள் 102) என்பதல்லவா அறநெறி.

நன்றி கொன்றமை தவிர ஆட்சித்திறனால், சசிகலா தக்கவரைத்தான் முதல்வராக அமர்த்தியள்ளார் என்னும் நற்பெயரை அவருக்கு வாங்கித் தந்துள்ளார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.(திருவள்ளுவர், திருக்குறள் 110)

 என்னும் நிலையைத் திறமையும் ஆளுமையும் மிக்கவர் அடையலாமா?

அஃதுமட்டுமல்ல. உதவியின் அளவைப்பொறுத்து உதவி மதிப்பிடப்படுவதில்லை. உதவிபெற்றவரின் பண்பின் அடிப்படையில்தான் உதவி மதிப்பிடப்படுகிறது என்கிறார் திருவள்ளுவர்.

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.(திருவள்ளுவர், திருக்குறள் 105)

என்னும் தமிழ்மறைக்கிணங்க பெற்ற உதவியை மறக்கும் பண்பற்றவராக மாறலாமா?

ஒருவேளை காட்சிகள் மாறினால், “நான் சின்னம்மாவால் அடையாளங்காட்டப்பட்டவன்” எனப் பெருமை பொங்கக் கூறும் நிலையும் வரலாம். எனவே, இனிமேல், முதல்வர், தான் சசிகலாவால் முதல்வராகவில்லை எனச் சொல்வதையாவது இனி நிறுத்த வேண்டும். தன்னம்பிக்கை உள்ள முதல்வர் அவ்வாறு பொய்யுரை புகல்வதை நிறுத்துவார் என்றே எதிர்பார்க்கிறோம்.

வளர்க அவர் நற்பணிகள்!

வெல்க அவர் நன்முயற்சிகள்!

அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

 







Friday, January 15, 2021

பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும்

கமலின் இயலாமையும்

 [பெருந்தலை(Bigg Boss) நிகழ்ச்சி என்பது நேர்நிகழ் காணாட்ட நிகழ்ச்சியாகும். இப்பொழுது இந்தியாவில் ஏழு மொழிகளில் நடைபெறுகிறது. தமிழும் அவற்றில் ஒன்று. பல்லாயிரக்கணக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உருவாக்கியும் வழங்கியும் வரும் எண்டமோல் நிறுவனத்தின் சார் நிறுவனமே எண்டெமோல் சைன் இந்தியா (Endemol Shine India) என்னும் நிறுவனம். இது வியாகாம் 18(Viacom 18), இசுடார் இந்தியா ஆகியவற்றின் மூலம், இதனை வெளியிடுகிறது. ஊட்டு(Voot), திசுனி + ஆட்டுசுடார் மூலமே காட்சிப்படுத்துகிறது.  கேட்பிற்கிணங்கக் கட்டணக் காணொளி மூலமே(Subscription video on-demand)  இவை நிகழ்ச்சியை ஒளி பரப்புகின்றன. நெதருலாந்து-பிரித்தானியப் பெரிய அண்ணா(Big Brother) நிகழ்ச்சியின் பதிப்பே இது. ]

பெருந்தலையின்(Bigg Boss) தமிழ் நிகழ்ச்சியின் நான்காம் தொடர் இப்பொழுது நடைபெற்று வருகிறது. நாளை (தை 4 / 17.01.2021 அன்று) நிறைவுபெற உள்ளது. இதன் முடிவாக வாகையாளரை அறிவிக்கும் பொழுது விசய் தொலைக்காட்சி நடுநிலை பிறழ்ந்து நடந்து கொள்ளும் என்பதே பலரின் வருத்தமான நம்பிக்கையாக உள்ளது. அந்த அளவிற்கு அந்நிறுவனத்தின் செயல்பாடு மக்கள் மனத்தில் பதிந்து உள்ளது. எனினும் இணையத் தளங்களில் இவ்வாறு முறைகேடு நடக்கக்கூடாது எனப் பலரும் எழுதி வருவதால் நடுவுநிலையுடன் நடந்து கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் நேர்கிறது. விசய் தொலைக்காட்சி நிறுவனம் நடுவுநிலையுடன் நடந்து கொண்டால்  ஆரிதான் வெற்றி நாயகராக அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், தன் நிறுவனக் கலைஞர் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கிறது.

ஆரி ஒவ்வொருவருக்குமே வெவ்வேறு சூழல்களில் தன்னம்பிக்கை உரை வழங்கியுள்ளார் என்பது அவ்வப்பொழுது  ஒவ்வொருவரும் கூறும் கருத்துகளில் இருந்து தெரிகிறது. அவற்றை ஒளிபரப்புவதில் பெரும்பான்மையை மறைத்துவிட்டார்கள். ஆரிக்கு நல்ல பெயர் வரக்கூடாது என மறைத்திருக்கிறார்கள். அவ்வாறு ஒளி பரப்புவது பார்க்கும் மக்களுக்குத்தான் நல்லது என உணர்ந்தாவது ஒளிபரப்பியிருக்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. போட்டியாளர்களை நடுவுநிலையுடன் நடத்தாமல் தன் விருப்பு வெறுப்பிற்கேற்பவே நடத்துகிறது. சான்றாகக், கடந்த முறை ஒலிவாங்கியை அணியாமல் இருந்ததற்காகப் போட்டியை விட்டு நீக்கிய பெருந்தலை இம்முறை ஒலிவாங்கியை எறிவது, தலையணையை எறிவது, செருப்பால் அடித்துக் கொள்வது, ஏச்சுச் சொற்களைச் சினத்துடன் சொல்வது எனப் பலமுறை விதி மீறிய பாலாமீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அவரே, அவரைத் துணைத் தலைவராக அறிவித்த பொழுது தான் விதிமுறைகளை மீறுபவன் என ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் செவ்வட்டை(Red Card) கொடுத்து வெளியேற்ற வேண்டியவரைச் சீராட்டி வைத்துக் கொள்கிறது.

அதே நேரம் மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள ஆரிக்கு வெற்றிப்பட்டத்தைத் தரக் கூடாது என்பதற்காக அவருக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. சிலர் குழுவாக அமைத்துக் கொண்டு ஒவ்வொரு வாரமும் அவரை வெளியேற்றப் பட்டியலில் சேர்க்கின்றனர். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளே வருபவர்கள், வெற்றி வாய்ப்புள்ளவரை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகக் கூட்டணி அமைத்துச் செயல்படுவதைத் தடுக்கவில்லை. அன்பு அணி என்பது விசய் தொலைக்காட்சியின் மீதான அன்பு அணியாகவே உள்ளது. ஆனால், உண்மையில் பெருந்தலை யாரை முன்னிறுத்துகிறதோ அவரைப் பொதுமக்கள் வெறுத்து ஒதுக்குகின்றனர். எடுத்துக்காட்டிற்கு இரண்டைப் பார்ப்போம். தொலைக்காட்சித் தொகுப்புத் திறமையால் மக்களிடம் வரவேற்பு பெற்றிருந்த அருச்சனா பெருந்தலைவர் சார்பாளர்போல் ஆரவாரமாக உள்ளே நுழைந்தார். அவரை அமைதியாக வெளியேற்றிவிட்டனர் பொது மக்கள். (இ)ரியோ மீது சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தமையால் எண்ணற்ற அன்பர்கள் இருந்தனர். தொடக்கத்தில் அவர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஆனால், வெருந்தலையால் முன்னிறுத்தப் படுகிறார் என்றதும் அவர் ஆதரவாளர்களே  அவரைப் புறக்கணித்து ஆரிக்கு வாக்களிக்கின்றனர்.

அனிதாவைத் தடுப்பறைக்கு(ஓய்வறைக்கு) அனுப்பியதைத் தவறென ஏற்றுக்கொண்டு திரும்பப்பெற்ற கமல், (இ)ரியோ, ஆரியைக் குறித்து வேண்டுமென்றே தவறாகக் குறித்துத் தடுப்பறைக்கு அனுப்ப முன்மொழிந்ததற்கு எதிராக ஆரி முறையிட்டதும் கண்டு கொள்ள வில்லை. (இ)ரியோவிற்கு எதிராகப் பேசுவதற்குப் பெருந்தலை ஒப்புதல் தரவில்லை போலும்! இல்லத் தோழர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது பாராட்டிற்குரியதுதான். ஆனால் அவர்கள், காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளும் பொழுது தலையிட்டு உண்மையான நீதியை வழங்க வேண்டும். பெருந்தலை இனியேனும் அதைப் பின்பற்றட்டும்!

அருச்சனாவின் நாடகங்களில் ஒன்று தன் தந்தையின் மரணம்பற்றிப் பேசப்பட்டது தொடர்பானது. குடும்பத்தவர்பற்றித் தவறாகப் பேசக்கூடாதுதான்.  ஆனால், துயரத்தை வெளிக்கொணர்வதற்காக அருச்சனாவின் தந்தை மரணத்தைக் குறித்துக் கூறுவது பெருங்குற்றமல்ல. அஃது ஒன்றும் குற்றச் சூழலில் நேர்ந்த மரணம் அல்ல. அவரது குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், ஊடகத்தினர் அறிந்த இயல்பான செய்திதான். எனவே, அதைச் சொல்வதை விரும்பவில்லை எனில், அப்படிச் சொல்லும் பொழுது அது குறித்துப் பேச வேண்டா என அமைதியாகத் தெரிவித்தாலே போதும். ஆனால், பெருங்கூச்சல்போட்டு நாடகமாடினார் அருச்சனா. இது குறித்துக் கமல்,

“தன்னைத் தோற்றபின் என்னைத் தோற்றாரா?

என்னைத் தோற்றபின் தன்னைத் தோற்றாரா?”

என்ற பாஞ்சாலியாக எண்ணிக் கொண்டு, நிசாவிடம் அருச்சனாவின் அப்பா மரணம் இங்கு வருவதற்கு முன்பேதெரியுமா? இங்கு வந்தபின் அருச்சனாசொல்லித் தெரியுமா எனக் கேட்டார்.

மாறாக, இவ்வாறு கூச்சல் போட்ட நாடகக்காட்சியைத் தவறு என்று சுட்டிக்காட்டியிருந்தால், அனிதா தன் கணவரைப்பற்றிச் சொல்வதாக மற்றொரு நாடகத்தை அரங்கேற்றியது நிகழ்ந்திருக்காது. தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் கண்டிப்பதும் செயல்களுக்கேற்ப இல்லாமல், ஆளுக் கேற்றவாறுதான் நிகழ்கிறது.

ஆரி ‘டா’ போட்டுப் பாலாவிடம் பேசியது குற்றமாகச் சொல்லப்பட்டது. எல்லாரும் ‘டா’, ‘டி’ என்றுதான் விளிக்கின்றனர். அஃதாவது பெண்களும் ஆ்ண்களை ‘டா’ என்று சேர்த்துத்தான் பேசுகின்றனர்.  ஆரியும் இதற்கு மு்ன்னர்ப் பாலாவை ‘டா’ என்று விளித்துப் பேசியுள்ளார். எனவே, அதனைக் குற்றமாகச் சொல்வது பொருத்தமில்லை.

துப்புரவுப்பணியைச் செய்யாத அல்லது செய்விக்காத தன்னிடம் ஆரி இனிமையாகக் கேட்கவில்லை என்று ஆசித்து கூறுவது ஏற்கும்படி இல்லை. அதுவும் ஆரியே அந்தப்பணியைச் செய்திருக்கலாமாம். தலைவன் என்ற முறையில் கேட்க வேண்டிய முறையில்தான் ஆரி கேட்டார். ஆசித்து, பெரியவர் சுரேசிடமே அவர் வேலை சொன்னதற்காகப் பொங்கி எழுந்த பொழுதே கண்டித்திருந்தால் தன்னைப் பண்படுத்திக் கொண்டிருப்பார். மாறாகச் சுட்டிக்காட்டும் தவற்றைத் திருத்திக் கொள்ளாமல் ஆரியிடம் இனிமையாகக் கூறி வேலைவாங்கச் சொல்வது தவறான ஆசித்தைத் திருத்தாது.

பிற போட்டியாளர்களின் குடும்பத்தினரே ஆரியை நம்பிக்கை நாயகனாகக் கருதுகின்றனர். முன்னரே மக்கள் பணிகளிலும் தொண்டுகளிலும் அருவினை (சாதனை)ச் செயல்களிலும் ஈடுபாடு கொண்டுள்ளவர் ஆரி; பெருந்தலை இல்லத்தில், நேர்மையாகவும் நடுவுநிலைமையுடனும் நடந்து கொள்வதாலும்  பிறரால் ஓரங்கட்டப்படுவதாலும் இவரின் வெற்றியை நேர்மையின் வெற்றியாகக் கருதி ஆதரிக்கின்றனர். பெருந்தலை நிகழ்ச்சியைப்பற்றிக் கருத்து தெரிவிக்கும் இணையத் தளங்கள் யாவற்றிலும் ஆரிக்கே பெரும் செல்வாக்கு இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பெருந்தலையின் எண்ணத்திற்கு மாறாக இப்போக்கு உள்ளதால் ஆரியை மட்டந்தட்டுவோரை ஊக்கப்படுத்தி வருகிறது.

தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் வாக்கெடு்ப்புகளில் பிற போட்டியாளர்கள் பெற்றுவரும் மொத்த வாக்குகளைவிட மிகுதியாக ஆரிக்குதான் வாக்குகள் குவிந்து வருகின்றன. இதுவே ஆரிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கைக் காட்டுகிறது. இதேதான் பெருந்தலையின் வாக்கெடுப்பிலும் நிகழ்ந்து வருகிறது. எனினும் இம் முடிவை விரும்பாத பெருந்தலை மாறாகச் செயல்படுவதாக மக்கள் அஞ்சுகின்றனர்.

அண்மையில் மறைந்த நடிகையை மிரட்டியதாகக் கூறப்படும் தொகுப்பாளரைக் கொண்டு ஆரிக்கு எதிராகப் பேச வைத்துள்ளார்கள். தனியார் தளங்கள் எல்லாவற்றிலும் வாக்களிப்பில் பிற போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் மொத்தத்தைவிட ஆரி பெறும் வாக்குகள் மிகுதியாக உள்ளன.  ஆரியைப் புறக்கணித்து விட்டுத் தாங்கள் கருதியவருக்கு வெற்றிப்பட்டம் வழங்கினால் மக்கள் எதிர்ப்பிற்கு ஆளாகலாம் என உணர்ந்து  அவையெல்லாம் ஆரியின் மக்கள் தொடர்பு அலுவலர் உருவாக்கும் வாக்குப்பதிவு எனப் பரப்புகிறார்கள். வலைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் போலி மறுப்பு ஒன்றையும் வெளியிடச் செய்துள்ளார்கள்.

தொடக்கத்தில் கூறியது போல், விதிகளை வகுத்துவிட்டு அவற்றைப் பின்பற்றாதவர்க் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிவிட்டுத் தங்கள் செல்லப்பிள்ளைகள் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாகப் பாராட்டு கிடைக்கும். நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து பலவற்றைக் கூற இயலும் என்றாலும் இறுதியை நெருங்கும் பொழுது நேர்ந்த விதி மீறலைப் பார்ப்போம். பணப்பெட்டியை வைத்துவிட்டு, இடையிலேயே போக விரும்புவர்கள், அதனை எடுத்துக் காெண்டுபோகலாம் எனவும் பிறர் யாரும் அவர்களுக்குத் தூண்டதலாகச் செயல்படவோ அறிவுரை கூறவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. கேபி ஐந்து நூறாயிரம் பணம் உள்ள பெட்டியை எடுத்து வெளியேறும் முடிவை வெளிப்படுத்தினார். அவர் ஆழ்ந்து சிந்தித்துத் தெளிவாக முடிவெடுத்துள்ளார் என்பது அவரது செயல்களிலேயே தெரிந்தது.  ஆனால்,(இ)ரியோ அவரைப் பணப்பெட்டியை வைக்குமாறும் மறுமுறை சிந்திக்குமாறும் மன்றாடினார்.  தான் போகவிரும்புவதால் விட்டுக்கொடுக்குமாறும் கெஞ்சினார். (இ)ரியோ இவ்வாறு மன்றாடுவதைப் பார்த்த பிற போட்டியாளர்கள் சிலரும் ஒவ்வொருவராக மறுமுறை சிந்தித்து முடிவெடுக்குமாறு கேபியை வலியுறுத்தினர்.  (இ)ரியோ பேசத் தொடங்கியதுமே நிறுத்தியிருந்தால் அவரும் தொடர்ந்திருக்க மாட்டார். பிறரும் அவ்வாறு கேபியிடம் வலியுறுத்தியிருக்க மாட்டார்கள்.  எனினும் கேபி உறுதியான முடிவு மூலம் அவர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  பெருந்தலை ஒருங்கிணைப்பாளருக்குப் பெண் போட்டியாளர்களைச் செல்லப்பெயரில் அழைப்பதில் கவனம் இருந்ததால் தொடக்கம் முதலே எவ்விதிமீறல் குறித்தும் கவலைப்படவில்லை.  செல்லப்பிள்ளைகள் பிறர் மீது பொய்யான குற்றம் சுமத்தினாலும் அது குறித்தும் கவலைப்படுவதில்லை.

தவறவிடும் தொலைபேசி அழைப்புகள் மூலம், கடந்த வாரத்திலிருந்தே  ஆரிக்கு வாக்களிக்க இயலவில்லை.  பலமுறை முயன்றால் ஓரிரு முறையே வாக்கு, கணக்கில் சேருகிறது. இணையத் தளங்களில் இது குறித்துச் சொன்னாலும் தக்க நடவடிக்கை எடுக்க வில்லை. இதுவும் ஆரிக்கு எதிரான திட்டமிட்ட சதியாகப் பொதுமக்கள் கருதுகின்றனர்.

கமல் பெருந்தலையின் ஊழியர்தான். பெருந்தலை நிறுவன முதலாளியிடம் வேலைபார்க்கும் தொழிலாளி.  எனவே, தன் மனச்சான்றுக்காகத் தவறுகளுக்கு எதிராகப் பொங்குவதுபோல் நடிக்கிறாரே தவிர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதற்கான உரிமை இருந்தால்தானே நடவடிக்கை எடுக்க இயலும்! எனவே, மேடையில் தவறு கண்டு பொங்குவதாக நடிக்கிறார். அவ்வளவுதான்!

ஆரியின் செம்மையான பங்கேற்பையும் எதிரியாக எண்ணிச்செயல்படுவோரின் தவறுகளையும் பொதுமக்களே அறிந்திருப்பதாலும் பல தளங்களிலும் சுட்டிக் காட்டியிருப்பதாலும் இங்கே விவரிக்கவில்லை. மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள ஆரிக்கு வெற்றிப் பட்டம் சூட்டாவிட்டால் நடுநிலை அன்பர்களும் ஆரி நேயர்களும் வழக்கு மன்றத்தை நாட வேண்டும். இதுபோன்ற பிற நிகழ்ச்சிகளை விசய் தொலைக்காட்சி ஒளிபரப்பவோ நடத்தவோ தடை பெற வேண்டும்.

வாகை சூடும் ஆரிக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

தனித்திறமையால் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றவர்களுக்கும பாராட்டுகள்!

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.    (திருவள்ளுவர், திருக்குறள் 118)

– இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல 





Followers

Blog Archive