Sunday, July 21, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 521-530 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 511-520 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

521. Acquainted With Handwritingகையெழுத்தை நன்கறிந்திருத்தல்

கையெழுத்தைக் கண்டறியும் பழக்கமுள்ள.

வழக்குகளில் இடம் பெற்ற சில தொடர்கள்: குற்றஞ்சாட்டப்பட்டவரின் கையெழுத்தை நன்கறிந்த சான்றரால் போலி ஆவணங்களில் உள்ள கையெழுத்து அவருடையது எனக் கண்டறியப்பட்டது.
கையெழுத்து வல்லுநர் குற்றஞ்சாட்டப்பட்டவரின் கையெழுத்தை நன்கு அறிந்து ஆவணத்திலுள்ள போலி கையெழுத்து அவருடையது என மெய்ப்பித்தார்.
522. Acquainted With The Fact Of The Caseவழக்கு உண்மை அறிந்தவர் 

உண்மைகள் தெரிந்த யாரேனும் ஒருவரை மிரட்டி, அத்தகைய உண்மைகளைக் காவல்துறையிடம் தெரிவிப்பதைத் தடுத்தால், பிணை நீக்கப்படும். –  சிம்லா உயர்நீதிமன்றம்
523. Acquainted With The Rules, Thoroughlyவிதி நன்கறிந்தவர்.

   பேராணை மனு போன்ற எதையும் நீதி மன்றத்தில் அளிப்பவர் வழக்கு, வழக்கு விவரம் வழக்கு தொடர்பான விதி விவரம் நன்கறிந்தவராக இருப்பதை விண்ணப்பத்துடன்  குறிக்க வேண்டும்.
524.       Acquiesce  இணக்கம்

ஒத்துப்பாடு

எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்  

எதிர்ப்பு உணர்வுக்கு இணங்க இசை  

ஒப்புதல்  

ஒப்புக்கொள்ளுதல்  

தடைச்சொல்லின்றி உடன்படுதல்

குறிப்பிசைவு     ஏற்றுக்கொள்ளும் அல்லது மறைமுகமான ஒப்புதலை வழங்கும் செயல் அல்லது நிபந்தனை; அமைதி அல்லது தடை மறுப்பு இல்லாமல் உடன்படுதல் அல்லது இசைதல்.
பிரிவு 20.ஆ. உரிமைவழக்குத் தொகு சட்டம் (C.P.A.)    தனது முதலாளியின் கோரிக்கைகளுக்கு இணங்குதல்.  

சட்டம்: ஓர் உரிமையை கைவிடுவதைக் குறிக்கும் வகையில் நீண்ட காலத்திற்கு சட்ட நடவடிக்கைகளைப்  புறக்கணித்தல்.  

ஒப்பந்தம், உடன்படிக்கை, சாட்டுரை முதலியவற்றில் மாற்றாள் கருத்திற்குத் தடைச்சொல்லின்றி ஏற்றல்.   சில அகராதிகளில் ‘Acqiescence’ என இடம் பெற்றுள்ளது, எழுத்துப்பிழையாகும்.
525. Acquiescedஒத்துப் போதல்  

ஒன்றை ஏற்றுக் கொள்ளல், அல்லது அதனுடன் ஒத்துப்போதல் அல்லது அதனை ஒப்புக் கொள்ளல் அல்லது எதிர்ப்பின்றி ஏற்று கொள்ளல்.
526. Acquiescenceகுறிப்பிசைவு

ஒப்புதல்

ஒப்புக்கொள்பவர்  
தங்குதடையின்றி இணங்குபவர்
 
(வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய  

சட்டத்தில், யாரோ ஒருவர் அறியாமலும் காழ்ப்புணர்ச்சி யின்றியும் முன்னோக்கி அவர் உரிமைகளுக்கு மாறான பாங்கில் செயல் படுகையில், ஒருவர் அறிந்தே அவரின் உரிமை மீறலுக்கு எத்தடையும் எழுப்பாத பொழுது, தரும் ஒப்பிசைவைக் குறிக்கிறது.  

ஒப்பந்தம், உடன்படிக்கை, சாட்டுரை முதலிய மாற்றாள் கருத்திற்கு எதிருரை எதுவும் கூறாமல் அப்படியே ஏற்றுக் கொள்பவர்.   இதனால் பரிகாரம் பெறும் உரிமை இல்லாமற் போகலாம்.   சில அகராதிகளில் ‘Acqiescence’ என இடம் பெற்றுள்ளது, எழுத்துப்பிழையாகும்.   காண்க: Acquiesce
527. Acquire       பெற்றடை

கைப்பற்று  

ஈட்டு, தேடு, கையகப் படுத்து; முயன்றீட்டு; பெற்றிடு  

குறிக்கப்பெறாத வழிகளில், உரிமை அல்லது கட்டுப்பாட்டிற்குள் உடைமையைக் கொண்டு வருவதைக் குறிக்கிறது.

  கைப்பற்று என்பதில் வலிந்து பெறும் பொருள் தொக்கி நிற்கிறது. எனவே, அவ்வாறில்லாத நேர்வுகளில் பெற்றடை ஏற்றதாக உள்ளது.  

உடைமையாக ஒன்றைப் பெறுதல் (இராதாபாய் எதிர் மகாராட்டிர அரசு – அ.இ.அ.(AIR) 1939
528. Acquire; Hold And Disposeஅடைகை -பிடிப்பும் முடிப்பும்  

இந்தியாவில் சொத்து உடைமையைக் கொள்வதற்கும் வைத்திருப்பற்கும் தீர்ப்பதற்கும் இருந்த அடிப்படை உரிமை 1977 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 44/1978 மூலம் இது நீக்கப்பட்டு, அரசியல் யாப்பு, கூறு 300(அ) இன் மூலம் அரசியல் யாப்புரிமை யாக்கப்பட்டது.
529. Acquiredமுயன்றுபெற்ற  

ஈட்டிய  

கையகப்படுத்தப்பெற்ற   முயற்சியால் பெறப்படும் ஒன்று

தொழிலில் ஈட்டிய ஆதாயம்   ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் உடைமையை அரசு தன்வயமாக எடுத்துக் கொள்வது.
530. Acquired By Purchaseகொள்வனவில் அடைகை  

பணம் செலுத்தி வாங்கி அடைதல்  

ஒரு நிறுவனம், மற்றொரு நிறுவனத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அதன் பெரும்பான்மைப் பங்ககுளை அல்லது அனைத்துப் பங்குகளையும்  விலைக்கு வாங்குதல்.

Thursday, July 18, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 511-520 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 501-510 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

511. Acknowledgement of Signatureகையொப்ப ஒப்புகை  
தொகை பெறுபவர் ஒப்புகை  
நிறைவேற்றத்தை ஒப்புக் கொள்வதை உறுதிப்படுத்தும் கையொப்பம்.  

கொடுக்கப்பட்ட ஆவணத்தில், குறிப்பிடப்படுபவர் கையொப்பத்தைச் சான்றுறுதியர்(notary)  சரிபார்த்து உறுதிப்படுத்தல்.
512. Acknowledgment Of A Right  உரிமை ஒப்புகை  

மறு தரப்பாருக்குரிய உரிமையை ஒப்புக் கொள்ளுதல்.
  
513. Acmeமுகடு  
முடி
உச்சி
நிறைவெய்திய நிலை.

  கிரேக்க மொழியில் மலை முகடு எனப் பொருள். எனினும் ஆங்கிலத்தில் இப்பொருளில் கையாள்வதில்லை. மாறாக, ஒருவர் புதிய பணியில் சேரும் பொழுது அவரது பணிவாழ்வில் அஃது உச்சத்தைத் தொடுகிறது எனக் குறிக்கிறோம். நோய் நெருக்கடியையும் இது குறிக்கும்.
514. Aconiteமுயற்சியின்றிப் பெறல்

நச்சுச் செடிவகை, நஞ்சு.  

நேர் பொருள் இவ்வாறிருப்பினும் வழக்கில் என்ன பொருளில் கையாள்கிறோம்?   பண்டைய காலத்தின் பிற்பகுதியில், இதன் மூலக் கிரேக்கச் சொல் akonit́ī  என்பதன் பொருள் ‘தூசியில்லாமல்’ என்பதாகும். இதனால், போராட்டமின்றி அல்லது முயற்சியின்றிப் பெறுவதைக் குறிக்கிறது.
515. Acousticஒலிக்குரிய  
கேள்வி கேட்டல்  
ஒலிசார்   அலைகளாக நகரும் காற்றழுத்தத்தின் சிறிய மாறுபாடுகளைக் குறிக்கிறது.

ஒலியியல் ஆயுதங்கள், அதிக அளவிலான ஒலியை வெளிப்படுத்துவதன் மூலம் ஒருவர் அல்லது பலரின் செவித்திறனை இடைக்காலமாகவோ நிலையாகவோ சீர்குலைக்கும் ஆயுதங்கள் ஆகும்.  

காண்க: Acoustics
516. Acousticalஒலியியல்

சார்தன்மை
ஓசைப் புலனைச் சார்ந்த  
காண்க: Acoustic
s
517. Acousticsஒலியியல்  
கேட்பொலியியல்  

ஒலியின் உற்பத்தி, கட்டுப்பாடு, பரிமாற்றம், வரவேற்பு. விளைவுகள் ஆகியவற்றைக் கையாளும் அறிவியலாக ஒலியியல் வரையறுக்கப்படுகிறது.

ஒலியியல் என்பது, திண்மம், நீர்மம், வளிமம் ஆகியவற்றினூடாகக் கடத்தப்படும் பொறிமுறை அலைகள் பற்றி ஆய்வுசெய்யும் பல்துறை அறிவியல் ஆகும். இது இயற்பியலின் ஒரு துணைப்பிரிவு.

ஒலியியலின் ஆய்வுகள் அதிர்வுகள், ஒலி, மீயொலி, அகவொலி என்பவற்றை உள்ளடக்குகின்றன.

ஒலியியல் துறைசார்ந்த அறிவியலாளர் ஒலியியலாளர் எனப்படுகிறார்.      ( விக்கிபீடியா)
518. acquaintஅறிமுகர்  
அறிமுகமானவர்
பழக்கமானவர்
பழக்கப்படுத்து
அறிமுகமாக்கு.  
புதியதாகப் பழக்கமான ஒருவர்.
519. acquaintanceஅறிமுகம்  
பரிச்சியம், அறிமுகமானவர்.

அறிமுகமாயிருத்தல்
பழக்கமானவர்
 
முதன்முதலில் பார்த்த ஒன்றை / ஒருவரை மறுமுறை பார்க்கும்போது, ஏற்கெனவே பார்த்த உருவத்துடன் அந்த உருவத்தை ஒப்பிட்டு இது / இவர், அது / அவர் தான் என்று அறிந்து கொள்வதே பரிச்சியம் ஆகும்.

பார் (=அறி) + இசை (=ஒப்பு, பொருத்தம்) + இயம் = பரிச்சியம் = ஒப்பு / பொருத்தம் அறிதல். பரிச்சியம் என்ற தமிழ்ச்சொல்லே பரிச்சயம் என்று திரிந்து வழங்குகின்றது எனச் சொல்லாய்வாளர்கள் சிலர் சொல்லுகின்றனர்.
520. Acquaintedதெரிந்தவை

ஒருவரை அல்லது ஒன்றைப்பற்றி அறிந்திருத்தல்.

பழக்கத்தின் காரணமாக அறியவோ தெரியவோ வருதல்.

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, July 16, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 501-510 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 491-500 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

501. acknowledge, doctrine of – ஒப்புகைக் கோட்பாடு

இசுலாமியர் சட்டத்தில் இது தந்தைமை ஒப்புகையைக் குறிக்கிறது.

மகவேற்புச்சட்டத்தில், ஏற்கப்பெற்ற குழந்தையின் பெற்றோரிடையே சட்டபூர்வச் சேர்க்கை இரு்நததாகக் கருதுவதன்அடிப்படையில் ஒப்புகைக் கோட்பாடு உள்ளது. இருப்பினும் உரிய குழந்தையின் பெற்றோரிடையே சட்டபூர்வச் சேர்க்கையின்றித் தகாப் புணர்ச்சியிலோ பரத்தமையிலோ பிறந்ததாயின் இது பொருந்தாது.

502. acknowledgement – ஏற்கை

ஒப்புகை

பெறுகை ஒப்பம்
ஒப்புகைசீட்டு
ஏற்றுக்கோடல்

ஒன்றின் முதன்மையை அல்லது சிறப்பை அல்லது ஒருவரின் நன்றிக்குரிய செயற்பாட்டை ஏற்பது.

ஒப்புகையையும் குறிக்கும்; பெற்றுக்கொண்டேன் என ஒப்புகையின் அடையாளமாகக் கையொப்பம்/கைநாட்டு இடுவதையும் குறிக்கும்; பெற்றதற்கான ஒப்புகையைத் தெரிவிக்கும் சீட்டையும் குறிக்கும்.

சட்டத்தில் ஒப்புகை என்பது தகுதிறமுள்ள அலுவலர் அல்லது நீதிமன்றத்தினர் முன்னிலையில் ஒப்பாவணத்தையோ முறையாவணத்தையோ நிறைவேற்றுவதாகத் தெரிவிக்கும் உறுதியுரை யாகும்.

எதையாவது இருப்பதை அல்லது உண்மையை ஏற்றுக்கொள்வது, அங்கீகரிப்பது, உறுதிப்படுத்துவது அல்லது ஒப்புக்கொள்வது.

வரம்புச் சட்டம் 1963, பிரிவு 18 வரம்புக் காலம் நீட்டிக்கப்படுவதற்கு மாற்றாக,ஏற்கெனவே உள்ள பொறுப்பை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.

ஒப்புதல் அளித்தல் எனக் கருதி ஒப்பளிப்பு எனக் குறிக்கின்றனர். அவ்வாறு சொல்வது Sanction என்று தவறாகக் கருத இடமளிக்கும்.

காண்க: Acknowledge

503. Acknowledgement Of allegiance or adherence to a foreign state – அயல் நாட்டுடன் பற்றுறுதி அல்லது பற்றுமை கொண்டிருத்தல்

அயல்நாட்டிற்குக் கடமைப்பட்டவர்கள் அல்லது பற்றுறுதியுடன் உள்ளவர்கள் இந்திய நாட்டின் நாடாளுமன்ற அவை எதிலும் உறுப்பினராக முடியாது. இந்திய அரசியல் யாப்பு 102 ஆம் பிரிவு 1.ஈ. அயல்நாட்டுடனான பற்றுறுதியை ஏற்பவர் நாடாளுமன்ற எந்த அவையிலும் உறுப்பினராக இருக்க முடியாது என்கிறது.

504. Acknowledgement Of Consent – உடன்பாட்டு ஒப்புகை

ஒப்புகையும் ஒப்புதலும் பிணைப்பத்திரத்திலும் இணை உடன்படிக்கையிலும் இணைக்கப்பட்ட படிவத்தில் கடன் ஆவணங்களில் உள்ள கூட்டுக் குறிப்பீடாகும்.

505. Acknowledgement Of Debt- கடன் ஒப்புகை

கடனொப்புகை
கடனை ஒப்புதல்

கொடுக்கப்பட வேண்டிய கடன் நிலுவையை அல்லது கடன் பொறுப்பு உண்டென்று எழுத்து மூலமாக ஒப்புக் கொள்ளுதல்.

அலுவல் முறை ஆவணம், அதில் யாரோ ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டியிருப்பது தெரிவிக்கப்படுகிறது. சான்றாக நுகரப்படும் எரிவாயுக்கான கடனை ஒப்புக்கொள்கையில் கையெழுத்திடும் போது, வாடிக்கையாளர் இறுதிப் பணம் செலுத்தும் வரை காலத்தாழ்ச்சிக்கான வட்டி பெறப்படும்.

506. Acknowledgement Of Legitimacy, Doctrine Of – முறைமைப் பிறப்பு ஒப்புகைக் கோட்பாடு

முறைமணப் பிறப்பு ஒப்புகைக் கோட்பாடு

முறைமைப் பிறப்பு என்பது சட்டமுறையான திருமண உறவில் நேரும் மகப்பேற்றினைக் குறிக்கிறது.

திருமணத்திற்கு நேரடி ஆதாரம் இருக்கும் பொழுது அத்திருமண உறவில் பிறக்கும் குழந்தைக்கு ஒப்புகை தேவையில்லை. நேரடி ஆதாரம் இல்லையென்றால் மறைமுக ஆதாரம் போதுமானது. இதுவே ஒப்புகை எனப்படுகிறது.

முறைமைப் பிறப்பில் ஐயப்பாடு எழும் நேர்வுகளில் மட்டுமே முறைமைப்பிறப்பு ஒப்புகைக் கோட்பாடு பயன்தேவையாகும்.

507. Acknowledgement Of Liability – கடப்பாட்டு ஒப்புகை
பொறுப்பு ஒப்புகை

பொறுப்படைவு, பொறுப்புப் பரிமாற்றம், கடப்பாடு, பொறுப்பு,
கடன் பொறுப்பு, கடன் திருப்புப் பொறுப்பு, சட்டக்கடப்பாடு,
கடன் தொகை செலுத்தும் கடப்பாடு, கொடுக்க வேண்டியவை, தொகை செலுத்தும் பொறுப்பு


கடன்பாடு, கடம்பாடு, கடப்பாடு, கடன் திருப்புப் பொறுப்பு என liability என்பதற்குப் பல பொருள்கள். இத்தகைய பொறுப்பை ஒப்புக்கொள்வதையே இது குறிக்கிறது.

இதன் உட்கிடை, ஒப்புக் கொள்பவர், உரிய உடைமையின் / சொத்தின் உரிமையாளராக இருக்கிறார் என்பதாகும்.

உடைமையின் உரிமையல்லாத அயலர், சொத்தின் பயனுரிமை குறித்து அறிக்கை வெளியிட்டால், சொத்திற்குச் சொந்தமானவராகவோ ஏற்பிற்குரியவராகவோ இல்லாத காரணத்தால், ஒப்புகை தர இயலாது. – நல்லதம்பி நாடார் செல்லக் கண்ணு எதிர் அம்மாள் நடச்சி செல்லத்தங்கம் வழக்கு 26.07.1963

508. Acknowledgement Of Paternity – தந்தைமை ஒப்புகை

ஒப்புகை என்பது ஒன்றின் இருப்பை ஏற்பது அல்லது ஒப்புக் கொள்வது;

தந்தைமை என்பது ஒருவரின் தந்தையாக இருக்கும் நிலையைக் குறிப்பது.

தந்தைமையின் ஏற்பு என்பது மணமாகாத் தாயாலும் தந்தையாலும் குழந்தையின் தந்தை நிலையை அடையாளம் காட்டும் சட்ட ஆவணமாகும்.
மணமான தந்தை தாயரிடையே இத்தகைய சிக்கல் எழாது. எனினும் தாயை ஒழுக்கக் கேடாகக் குறிப்பிடும் ஐய நேர்வுகளிலும் தந்தைமை அடையாளம் காட்டப்பட வேண்டியுள்ளது.

509.Acknowledgement Of Payee – பெறுநர் ஒப்புகை

தொகை பெறுபவர் ஒப்புகை

எதன் பொருட்டாவது வழங்கப்பெறும் தொகையை அதற்குரியவர் பெற்றுக் கொண்டதற்குத் தரும் ஒப்புகை.

ஊதியம், மிகை ஊதியம், விடுப்பு ஊதியம் போன்ற ஊதிய வகைகள் அல்லது தொடர்பான பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலாகவோ பொருளின் விலை அல்லது முன்பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலாகவோ வைப்புத்தொகை, வட்டி போன்ற ஏதேனும் ஒரு தொகை அல்லது கடன் பெறும் பொழுது அல்லது கடனைத் திருப்பித் தரும் பொழுது கடன்பத்திரத்தில் முழுத் தொகை அல்லது பகுதித் தொகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலாகவோ, அதனைப் பெறுபவர் பெற்றுக்கொண்டமையை ஒப்புக்கொள்ளும் ஒப்புகையாகவோ அல்லது எதன் பொருட்டேனும் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகத் தரப்படும் ஒப்புதலாகவோ இருக்கலாம்.

510.Acknowledgement of Service-
சேர்ப்பு ஒப்புகை

அழைப்பாணை அல்லது பிற வழக்காவணம் ஒருவரிடம் சேர்க்கப்பட்டதும் அதனைப் பெற்றதற்கான ஒப்புகை அளித்தல்.

இந்த இடத்தில் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை என்பதை விட நீதிமன்றம் உரிய ஆவணத்தைச் சேர்த்ததா இல்லையா என்பதே முதன்மையாகிறது. எனவே, பெறுகை ஒப்புகை எனக் குறிக்காமல் சேர்ப்பு ஒப்புகை எனப்படுகிறது.

மடல், ஆணை, அறிவிக்கை அல்லது பிற அலுவலாவணத்தை மற்றவருக்குச் சேர்ப்பதைச் சார்வு என்பர். எடுத்துக் காட்டாக,
service by post : அஞ்சல்வழிச் சார்வு, அஞ்சல்வழிச் சேவை
service of summons : அழைப்பாணை சார்வு செய்தல்
எனலாம். எனவே, சார்வு ஒப்புகை என்றும் சொல்லலாம். எனினும்
dependency : சார்வு எனப்படுவதால் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது.

(தொடரும்)

Sunday, July 14, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 491- 500 : இலக்குவனார் திருவள்ளுவன்

 



(சட்டச் சொற்கள் விளக்கம் 481-490 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

491. Achromatic (achromatically)எழுதப்பெறா  
வாய்மொழியான
எழுத்தில் வராததான
நிறமற்ற சாயல் மற்றும் செறிவு இல்லா  

இச்சொல் சட்டத்தில் எழுத்தாவணமற்ற வாய்மொழிக் கூற்றைக் குறிக்கிறது. எனவே, எழுதப்பெறா ஆவணம் எனலாம்.
492. Acidஎரி நீர்மம்
எரிமம்  
புளிமம்
காடிப் பொருள்  
அமிலம்    

இந்தியத் தண்டனைச் சட்டம், 1860 குற்றவியல் சட்டம் (திருத்தச்) சட்டம், 2013 இன் பிரிவு 326(ஆ) இன் விளக்கம் 1 இன் கீழ், எரிமம்  பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது: ” காடித்தன்மை அல்லது அரிக்கும் தன்மை அல்லது எரியும் தன்மை கொண்ட எந்தப் பொருளும், உடல் காயத்தை உண்டாக்கும் திறன் கொண்டது; வடுக்கள் அல்லது சிதைவு அல்லது தற்காலிக அல்லது நிரந்தர ஊனம் ஏற்படுத்துவது”.
493. Acid attack            எரிமத்தாக்குதல்  

எரிமத் தாக்குதல்கள் / எரிமம் என்ற சொற்கள் “(எரிமவழிக்) குற்றங்களைத் தடுக்கும்  சட்டம் 2008” (பெண்களுக்கான தேசிய ஆணையம் – முன் வரைவு)  மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது.

“எரிமத்தாக்குதல்” என்பது, ஒருவர் மற்றவருக்கு நிலையான அல்லது பகுதியளவு சேதம் அல்லது சிதைவு அல்லது சிதைவை ஏற்படுத்தக்கூடும் என்ற நோக்கத்துடன் அல்லது தெரிந்தே அவர் உடல் மீது எந்த வகையிலும் எரிமத்தை (அமிலத்தை) வீசுவது அல்லது எரிமத்தைப் பயன்படுத்துவது. பிரிவு 326 அ, நிலையான  அல்லது பகுதியளவு தீங்கு, சிதைவு, உருக்குலைவு, தீக்காயங்கள் அல்லது இயலாமை ஆகியவற்றை வேண்டுமென்றே ஏற்படுத்த  எரிமத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவதைக் குறிக்கிறது  

‘நிருபயா’ கூட்டு வன்புணர்ச்சி வழக்கு, 2013இல் நீதிபதி வருமா ஆணைய அறிக்கையைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்து, எரிம வீச்சுகளைத் தனி குற்றமாக அங்கீகரித்து குறைந்தது 10 ஆண்டுகள் தண்டனையும், அதிக அளவு ஆயுள் தண்டனையும் விதிக்க வகைசெய்யப்பட்டது.  

பாதிக்கப்பட்டவரின் மருத்துவச்செலவை ஈடுகட்டும் வகையில் இழப்பீட்டுத் தொகையை ஒறுப்புத் தொகையாக விதிததலும் ஆகும்.  

இந்தியத் தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 326 (ஆ) இன் கீழ்த் தானாக முன்வந்து எரிமத்தை  வீசுவது அல்லது வீச முயல்வது குற்றமாகும். குற்றவாளிக்கு குறைந்தது  ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும், அஃது ஏழு ஆண்டுகளாக அதிகரிக்கப்படலாம். ஒறுப்புத் தொகையும் விதிக்கலாம்.  

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 357- (ஆ) பின்வருமாறு கூறுகிறது:
“பிரிவு 357 (அ) இன் கீழ் மாநில அரசு செலுத்த வேண்டிய இழப்பீடு, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 326(இ) அல்லது பிரிவு 376(ஈ) இன் கீழ் விதிக்கப்படும் ஒறுப்புத் தொகையுடன் கூடுதலாக அரசும் இழப்பீடு செலுத்த வேண்டும். ”   குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 357-(இ) பின்வருமாறு கூறுகிறது: மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் அல்லது வேறு எந்த ஒருவராலும் நடத்தப்படும் அனைத்துப் பொது அல்லது தனியார் மருத்துவமனைகளும், இந்தியத் தண்டிப்புச் சட்டத்தின் பிரிவு 326(அ), 376, 376(அ), 376(ஆ), 376(இ), 376(ஈ) அல்லது பிரிவு 376(உ) ஆகியவற்றின் கீழ் வரும் எந்தவொரு குற்றத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி அல்லது மருத்துவப் பண்டுவத்தை(சிகிச்சையை) இலவசமாக வழங்க வேண்டும்.
494. Acid oilஎரிம எண்ணெய்  
காடி எண்ணெய்
எரிம நெய்
வழலை நெய்  
தூய்மைப்படுத்து நிலைய எண்ணெய்  

காடி எண்ணெய் தரங்குறித்து பல வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன,
495. Acid testகடுந்தேர்வு  

புளிம ஆய்வு, எரிமச்சோதனை என்பன நேர் பொருளாக இருந்தாலும் பயன்பாட்டில் கடுந்தேர்வு எனப் பொருள் படுகிறது.   தீத் தேர்வு(அக்கினிப் பரீட்சை) என்றும் சொல்லலாம்.  

ஒப்பந்தங்களில் கடுந்தேர்வு(எரிம ஆய்வு):  மேட்சு எதிர் தலைமை வழக்குரைஞர்(Meates v Attorney-General)வழக்கில்  நீதிபதி குக்கின்(Cooke) கூற்றுப்படி, சலுகை, ஏற்பு அடையாளம் காண முடியாத ஒரு வழக்கில் கடுந்தேர்வு(எரிம ஆய்வு) என்பது, “இரு தரப்பிலும் உள்ள நியாயமான ஆட்களின் கண்ணோட்டத்தில் ஒட்டுமொத்தமாகவும் புறநிலையாகவும் பார்க்கும்போது, கொடுக்கல் வாங்கல்கள் ஒரு முடிவுற்ற பேரத்தைக் காட்டுகின்றனவா என்பதாகும்.”  
496. Acidificationஎரிமமாக்கம்
காடியாக்கம்  

பெருங்கடல் காடிமயமாக்கல் – கடல், அதன் வனவிலங்குகள், அவை வழங்கும் பொருட்கள், அவை வழங்கும் ஊழியங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பன்னாட்டுக் குமுகம் நிலையான வளர்ச்சி இலக்குகளின் ஒரு பகுதியாக கடல் காடிமயமாக்கலை ‘குறைக்கவும் சரி செய்யவும் நிவர்த்தி செய்ய’ உறுதியளித்துள்ள நிலையில், இஃது எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தெளிவாக இல்லை. குறிப்பாக இந்தச் சிக்கலைச் சமாளிக்க வெளிப்படையாக வடிவமைக்கப்பட்ட பன்னாட்டு  ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை.  
497. Acido meter / acidimeterஎரிமமானி  
காடிமானி
புளிமமானி  

ஒரு காடிக்  கரைசலின் ஒப்பீட்டு அடர்த்தியை அளவிடுவதற்கான ஒரு வகை நீர்மமானி.  
498. Acifidifying agentஎரிம ஊக்கி  
காடி ஊக்கி  

காடியாக்கிகள் கனிம வேதிமங்கள் ஆகும். அவை ஒரு மனித (அல்லது பிற பாலூட்டி) உடலில் வைக்கப்படுகின்றன, அவை காடியை உருவாக்குகின்றன அல்லது காடியாக மாறுகின்றன.  இந்த வேதிமங்கள் உட்கொள்ளப்படும்போது வயிற்றில் இரைப்பைக் காடியின்  அளவை -திறன் நீரகம் அல்லது ஆற்றல் நீரகம் (pH=potential of hydrogen or power of hydrogen) அளவை அதிகரிக்கின்றன.  
499. Acknowledgeஒப்புகை  

ஒப்புக்கொள்
ஏற்றுக்கொள்  
உண்மையென்று ஏற்றுக்கொள்,
‘எனது’ என்று ஒப்புக்கொள்.
நன்றியோடு ஏற்றுக்கொள்,
பெற்றுக்கொண்டதைத் தெரிவி,

பிறர் உடைமையை அல்லது உரிமையை ஒப்புக்கொள், சட்ட முறைப்படி ஒப்புக்கொள் என இடத்திற்கேற்பப் பொருள் படும்.   சட்டத்தில் ஒப்புதல் என்பது சட்டம் செல்லுபடி ஆவதற்குரிய ஒருவரின் சொந்தச் செயலின் அறிவிப்பு அல்லது ஏற்பு ஆகும். இது, தவறான ஆவணங்கள் அல்லது மோசடியான தண்டனைகளைப் பதிவதைத் தடுக்கும். சட்டப்படி பிணைப்பு / செல்லுபடியாகும் என ஏற்றுக்கொள்ளுதல்.    (யாரொருவராலோ) உரிமை கோரப்படுவதை ஏற்றுக்கொள் அல்லது அவரது அதிகாரத்தையும் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்.

காண்க Acknowledgement  
500. acknowledge due, by registered postபதிவஞ்சல் ஒப்புகையுடன்  

ஒருவருக்கு மடலை அல்லது ஆவணத்தை அல்லது வழக்குக் கேட்பு விவரத்தை அல்லது குற்ற உரையை அல்லது வாதுரையை அல்லது எதிர் வாதுரையை அல்லது அழைப்பாணையை அல்லது  ஏதேனும் ஒன்றை அஞ்சல் பெட்டியில் இடாமல் அஞ்சலகத்தில் அஞ்சற் பணியாளரிடம் பதிந்து அனுப்பிய பின், முகவரியாளரிடம் அது சேரும் பொழுது அதனைப் பெறுபவர் பெற்றதற்கு அடையாளமாக ஒப்புகையைக் கையொப்பமிட்டு அல்லது கைநாட்டிட்டுத் தெரிவிக்கும் அட்டையை இணைத்து அனுப்புதல்.  

(தொடரும்)

Followers

Blog Archive