Tuesday, April 26, 2011

andre' sonnaargal 52 - buildings 14 :அன்றே சொன்னார்கள் 52 - கட்டடங்கள் 14

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -14

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 26, 2011

பழந்தமிழ் நாட்டில் இன்றைய கட்டடங்களைப் போலவும் சில நேர்வுகளில் அவற்றை விடச் சிறப்பாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டமையைத் தொடர்ந்து பார்த்தோம். ஊர்களும் நகர்களும் நகரமைப்பு இலக்கணத்திற்கு இணங்க அமைக்கப்பட்டிருந்தமையும் கட்டட அமைப்பின் சிறப்புகளை உணர்த்துவதாகக் கருதலாம். இன்றைய மாதிரி நகர் அமைப்புபோல் அன்றைய ஊர்கள் அமைந்திருந்தன. பரிபாடல் இணைப்பு (8:1-6) நமக்கு ஊர் அமைப்பையும் அதன் மூலம் கட்டட அமைப்பையும் விளக்குகின்றது. புலவர் பின்வருமாறு அவற்றை விளக்குகிறார் : -
தாமரைப் பூவைப் போன்றது சீர் மிகுந்த ஊர்; தாமரைப் பூவின் இதழ்களைப் போல் தெருக்கள் அமைந்துள்ளன. பூவின் நடுவே உள்ள மொட்டைப் போன்றது அரண்மனை; அம் மொட்டில் உள்ள தாதுக்களைப் போன்றவர்கள் தமிழ்க்குடி மக்கள்; அத்தாதினை உண்ண வரும் பறவைகளைப் போன்றவர்கள்  பரிசுகள் பெற வருவோர்.
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீர்ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்;
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்;
தாதுண் பறவை அனையர் பரிசில் வினைஞர்
எனவே, நகரம் தாமரைப்பூவின் இதழ்களின் அமைப்பைப் போன்று  சீரிய நிலையில் சிறப்பாக இருந்துள்ளமை நன்கு புலனாகும்.
பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மரபுக் கட்டடக்கலையில் பட்டம் பெற்றவர்களும் கட்டடக்கலையில் பட்டம் பெற்றவர்களும்  இன்றைக்குக் கட்டடப்பணிகளை மேற்கொள்கின்றனர். அதற்கான துறை நூல்களும் உள்ளன. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டடஅறிவியல், வானறிவியல் நூல்களைப் படித்தவர்கள்தாம் கட்டடப் பணிகளில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். அத்தகைய நூல்கள்  இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்தாலும் அவ்வாறான நூல்கள்  இருந்தமைக்கான குறிப்புகள் உள்ளன.
அரண்மனை அமைப்பு குறித்து ஆசிரியர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், நெடுநல்வாடையில் தெரிவித்துள்ளமை இன்றைக்கும் என்றைக்கும் சிறப்பான கட்டட  அமைப்பிற்கு எடுத்துக்காட்டாகும்.
அரண்மனையை எழுப்ப வேண்டும் எனில் அதற்கு அடிக்கல் நாட்டுவதற்குரிய நாளைத் தேர்ந்தெடுத்தே அப்பணியைத் தொடங்குவர். நல்ல நாள் என்பது மூட நம்பிக்கையின்படி இல்லாமல், மழை போன்ற தொந்தரவு இல்லாக் காலத்தில் தொடங்க வேண்டும் என்பதற்காகச் சித்திரைத் திங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கட்டட நூலில் நன்கு புலமை பெற்றவர்கள், சித்திரைத் திங்களில் 10 ஆம் நாளில் இருந்து 25 ஆம் நாள் வரை உள்ள ஏதேனும் ஒரு நாள் நண்பகல் பொழுதில் இருகோல்நட்டு அந்தக்கோலின் நிழல் வடக்கிலோ தெற்கிலோ சாயாமல் இருந்தால் அந்த நாளில் அரண்மனைக்குத் திருமுளைச் சாத்துச் செய்வர் (அடிக்கல் நாட்டுவர்). இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்த காரணம், அப்பொழுதுதான் சூரியன் பூமியின் நடுவாக இயங்கும்.
புலவர் நக்கீரனார் பின்வருமாறு இதனைத் தெரிவிக்கிறார் : -
மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதில் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பின் (நெடுநல்வாடை : 72-79)
மாதிரம் என்றால் திசை என்றும் வானம் என்றும் பொருளுண்டு. விரிகதிர் என்பது விரிந்து செல்லும் சூரியனின் கதிரைக் குறிக்கின்றது. வியல்வாய் மண்டிலம் என்பது அகன்ற பரப்பினை உடைய கதிரவனின் மண்டிலத்தைக் குறிக்கிறது. நிலத்தில் இரண்டு இடங்களில் கோலை நடுவதாலும் அவற்றால் நிழல்கள் விழுகின்றனவா என்பதன் அடிப்படையில் சூரியனின் இயக்கத்தைக் குறித்து அறிவதாலும் இருகோல் குறிநிலை என்கிறார். வழுக்காது என்பது கீழே சாயாத நிழலைக் குறிக்கின்றது. ஒரு திறம் சாரா என்பது வடக்கிலோ தெற்கிலோ நிழல் சாயாமல் இருப்பதைக் குறிக்கின்றது. அரைநாள் அமயம் என்பது பகலில் பாதியாகிய உச்சிப் பொழுதினைக் குறிக்கின்றது. புலவர் என்போர் இலக்கியப் புலவர் மட்டுமல்லர்; ஏதேனும் ஒரு துறையறிவில் புலமை உடையவர் யாவரும் புலவரே. அந்த வகையில் கட்டட அறிவியலில் புலமை பெற்றவர்களைக் குறிக்கின்றது. கட்டடம் கட்டுபவர்கள் கட்டுமானத்திலும் சிற்பத்திலும் வல்லவராக இருத்தல் வேண்டும். வானறிவியலும் அறிந்தால்தான்   கட்டுமானப்பணியைத் தொடங்குவதற்குரிய காலத்தைத் தேர்ந்தெடுக்க இயலும். இன்றைக்கும் கொத்தனார்கள் நூலிட்டுக் கட்டுமானப் பணியை ஆற்றுவதை நாம் காணலாம். அதுபோல் கணக்கிடுதலில் எவ்வகைத் தவறும் நேராமல் மனைக்கு நூலிட வேண்டி உள்ளதால், நுண்ணிதின் கயிறிட்டு எனக் குறித்துள்ளார். தேஎங்கொண்டு  தெய்வம் நோக்கி என்றால் எந்த எந்தத் திசைகளில் எவை எவை அமைய வேண்டும் எனக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை வணங்கி என்றும் அரண்மனையில் எந்தத் திசையில் தெய்வ உருவங்களை அமைக்கலாம் எனக் குறித்துக் கொண்டு என்றும் பொருள் கொள்வர். பெரும்பெயர் மன்னன் என்பது அரசர்க்கு அரசரான வேந்தரைக் குறிக்கிறது. (இந்த இடத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கின்றது.) வேந்தருக்கேற்றவாறான அரண்மனையை வாழ்விடமனை, அந்தப்புரம், மன்றம், நாள்ஓலக்க மண்டபம், படை வீடு, கருவூலம், ஓவியக்கூடம், பூங்கா, வாயில்கள், கோபுரங்கள், அகழி, மதில், கோட்டை என்பன போல் பலவாறாக வகுத்துத் திட்டமிட்டு உரியவாறான வரைபடங்களை இட்டு, அதற்கிணங்கப் பணிகளைத் தொடங்குதலாகும். ஒருங்குடன் வளை, ஓங்குநிலை வரைப்பில் என்பது இவை யெல்லாம் ஒருங்கே அமைந்த உயர்வான மதிலை உடைய வளாகத்தைக் குறிக்கிறது.
இவ்வாறு அரண்மனை அமைப்பதன் தொடக்கப்பணி நக்கீரரால் குறிக்கப்படுகின்றது. எனவே, மிகச்சிறந்த கட்டட வல்லுநர்கள் அக்காலத்தில் இருந்துள்ளனர் என்பதை நாம் உணரலாம். இதற்கடுத்து அவர்கள் மேற்கொள்ளும் பணிகளைத் தொடர்ந்து  காணலாம்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive