Sunday, January 27, 2013

இனிதே இலக்கியம் - 4 : முத்தொழில் ஆற்றுநரே தலைவர் - Inidhea Ilakkiyam 4

 இனிதே இலக்கியம்! 4

 
முத்தொழில் ஆற்றுநரே தலைவர்
உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
அலகி லா விளை யாட்டுடை யார், அவர்
தலைவர்!  அன்னவர்க் கேசரண்  நாங்களே!
கவிப்பேரரசர் கம்பர் தம்முடைய இராமகாவியத்தில் எழுதிய தற்சிறப்புப்பாயிரம்.
உலகங்கள் யாவற்றையும் தாம் உள்ளவாறு படைத்தலும் அவ்வுலகங்களில் உள்ள அனைத்து வகை உயிர்களையும் நிலைபெறச்செய்து காத்தலும் அவற்றை நீக்க வேண்டிய  நேரத்தில் நீக்கி அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் இடைவிடாமல்(நீங்கலா) அளவற்ற(அலகுஇலா) திருவிளை யாடல்களாகப் புரிபவர் யாரோ, அவரே எங்கள் தலைவர்! அவரிடமே நாங்கள் அடைக்கலமாகிறோம்! 
என்கிறார் கம்பர்.
குறிப்பிட்ட கடவுள் எனக் குறிக்காமையால் கடவுள் நம்பிக்கை உள்ளவர் யாவருமே தத்தம் கடவுளை வணங்கும் வகையில்  பொதுவாக அமைந்த பாடல்களுள் இதுவும் ஒன்று.
உலகம் முதலான பொதுவான சொற்களால் முதல் பாடலைத் தொடங்குதல் தமிழ் மரபு. அதற்கிணங்கக் கம்பர்  உலகம் என்னும் சொல்லுடன் தம் படைப்பைத்  தொடங்கி உள்ளார்.
உலகம் என்றோ உலகம் முழுமை என்றோ கூறாமல் அனைத்து உலகங்களையும் எனக் கம்பர் குறிப்பிட்டுள்ளது,  இப்புவி உலகம் தவிர வேறு பிற உலகங்கள் உள்ளன என்னும் இன்றைய அறிவியல் கருத்தைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதன் தொடர்ச்சியை உணர்த்துகிறது.
(8ஆம் வகுப்பு  மனப்பாடப்பகுதி)
- இலக்குவனார் திருவள்ளுவன்
 

No comments:

Post a Comment

Followers

Blog Archive