Saturday, April 13, 2013

போற்றுவோம் அண்ணல் அம்பேத்காரை! Language policy of Ambedkar



போற்றுவோம் அண்ணல் அம்பேத்காரை!
விலக்குவோம்  அவரின் இந்திமயக் கொள்கையை!

  ஒடுக்கப்பட்டவர்களின் உயர்விற்காகக் குரல் கொடுத்து உழைத்த உத்தமர் அண்ணல் அம்பேத்கார். இந்துச்சமயத்திலும் இந்தியாவிலும் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படாமல் சமஉரிமை நிலவப் பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கார்.

  அண்ணல் அம்பேத்கார் அவர்கள் தமிழின் சிறப்பை உணர்ந்து  போற்றியவர். மொழிச்சிறுபான்மையர் பற்றிப் பேசும்பொழுதுகூட அவர் எடுத்துக்காட்டிற்காகத் தமிழர்களைக் கூறுவதில் இருந்து தமிழ், தமிழர் மீது அவருக்கிருந்த பற்றினை நாம் உணரலாம். தங்களின் பணிநிமித்தம், பம்பாயில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ்க் கல்வி தருவது, பம்பாய் அரசினுடைய கடமை. இந்தக் கடமையை நான் சட்டப்பூர்வமான உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடுகின்றேன் (அம்பேத்கார்  ஆங்கில நூல் தொகுப்பு 13 - தரவு : கீற்று).  என அம்பேத்கார் அவர்கள் தமிழ்க்கல்வியை வலியுறுத்துகிறார்.

  ஆனால், தமிழ்நாட்டிலேயே தமிழ்க்கல்வி என்பது மறைந்து வருகின்றது. தமிழ்வழிக்கல்வி என்பது கானல் நீராக மாறும் பேரிடர் உள்ளது.  எங்கும்  தமிழ்! என்றும் தமிழ்! என ஆராவாரமாக முழங்குவதுடன் நில்லாது முழுமையான தமிழ்க்கல்விக்கும் தமிழ்வழிக்கல்விக்கும் அண்ணல் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்!

  மொழிவாரி மாநிலங்களின் பெயர்களைப்பற்றிக் கூறும் பொழுது மெட்ராசு மாநிலம் தமிழ்மாநிலம் என அழைக்கப்பெற வேண்டும் (Madras becalled Tamil City State - THOUGHTS-ON-LINGUISTIC-STATES-B-R-AMBEDKAR page 29)என வலியுறுத்துகிறார்.  இவ்வாறு தமிழ் உரிமை தொடர்பான அவரின் கருத்துகள் பலவும் போற்றிப் பின்பற்றத்தக்கன. ஆனால், இந்தியக் கூட்டமைப்பின் மொழிக் கொள்கை என வரும் பொழுது அவர் தடுமாறுகிறார். இந்தி ஒன்றுதான் தேசிய மொழி என்றும் இந்தியை ஏற்காதவர் இந்தியர் அல்லர் என்றும் கூறும் வடவரின்  சார்பாளர் போல் பேசுகிறார். இந்தியர்கள் ஒருமைப்பாட்டையும் பொதுவான பண்பாட்டையும் உடையவர்களாக இருக்க விழைவதால், இந்தியைத் தமக்குரிய மொழியாக ஆக்கிக் கொள்வது இந்தியர்கள் அனைவரின்  கடப்பாடாகும்; மொழிவாரி மாநிலத்தின் அடிப்படைக் கூறாக இக்கருத்துரையை ஏற்காத எந்த ஓர் இந்தியனும் இந்தியனாக இருக்க உரிமை யற்றவன்  என்கிறார்(Since Indians wish to unite and develop a common culture it is the bounden duty of all Indians to own up Hindi as their language. Any Indian who does not accept this proposal as part and parcel of a linguistic State has no right to be an Indian.-அதே நூலின் பக்கம் 11). இது குறித்துத் தோழர் பெ.மணியரசன் தம்முடைய சாதியும் தமிழ்த்தேசியமும் என்னும் நூலில் நன்கு விளக்கி உள்ளார்.

  மொழிவாரி மாநிலங்கள் தத்தம் மாநில மொழிகளை (அவரது கூற்றுப்படி வட்டார மொழிகளை) மாநில ஆட்சி மொழியாக்குவது என்பது ஒன்றுபட்ட இந்தியாவிற்குச் சாவு  மணி அடிப்பதாகும் என்கிறார் அண்ணல் அம்பேத்கார். மாநில மொழிகள் மாநிலங்களின் ஆட்சிமொழிகளாக மாறினால், இந்தியர்கள் முதலும் முடிவுமாக இந்தியர்களாகவே இருக்க வேண்டும் என்ற இந்திய ஒருமைப்பாட்டு உணர்வு  மறைந்தொழியும் என்பதும் அவரது நம்பிக்கை(Those who are advocating linguistic States have at heart the ideal of making the regional language their official language. This will be a death kneil to the idea of a United India.  With regional languages as official languages the ideal to make India one United country and to make Indians, Indians first and Indians last, will vanish. - அதே நூலின் பக்கம் 12). பா.ச.க.வினர்போல் இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கும் மேலாக  ஒரே நாடு, ஒரே மொழி என்ற தவறான கொள்கையில் ஆழமாகக் காலூன்றி இருப்பவராக அண்ணல் அம்பேத்கார் விளங்குகிறார்.

  அண்ணல் அம்பேத்காரின் கடும்உழைப்புடன் கூடிய நாட்டு நலன்சார்ந்த பணிகளைப்  பாராட்டும் நாம் அவரின் மொழிவழித் தேசிய உணர்வுகளுக்கு எதிரான - இந்தியப் புனைவுத் தேசியத்திற்கும்  இந்தித் திணிப்பிற்கும் சார்பான - கருத்துகளை அறிந்து விலகி நிற்றல் வேண்டும். நாம் கண்ணை மூடிக் கொண்டு நம் தலைவர்களின் கருத்துகளைக் கொத்தடிமை போல் ஏற்பதாலும் வடவர்களையே வழிகாட்டியாகக் கொள்ளும் போக்கு உள்ளமையாலும் அண்ணலுக்கான ஆதரவு என்பது தமிழ்த்தேசியத்திற்கு எதிரான போக்காக மாறக்கூடாது என்பதில் நாம் கருத்தாக இருக்க வேண்டும்.  
அண்ணல் வழியில் நாட்டு மக்கள் சம உரிமைக்கு வழி வகுப்போம்!
மொழிகளின் சம உரிமைக்கும் வழி காண்போம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்

00000

1 comment:

  1. வடநாடடுத் தலைவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் பழக்கத்தால் நாம் அம்பேத்காரின் மறுபக்கத்தைப் பார்க்கவில்லை. என்றாலும் இதனால் அவர் மதிப்பு குறையாது.

    ReplyDelete

Followers

Blog Archive